செவ்வாய், 7 ஏப்ரல், 2020

கதம்பம் – ஓவியம் – பிறந்த நாள் – தவம் – தடைபடாத பயணம்

நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இதயபூர்வமாய் வெற்றி பெறவே பிறந்தவர்கள் என நம்புகிறவர்கள் மிக எளிதாக உச்சிக்கு சென்று விடுகிறார்கள். அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என்று இதயபூர்வமாக நம்புகிறவர்கள் அப்படியே தோற்றுப் போய்விடுகிறார்கள்.

ரோஷ்ணி கார்னர் -  25 மார்ச் 2020:மகள் சிவகார்த்திகேயனின் விசிறி என்று நட்புகளுக்கு தெரிந்திருக்கும். இன்று அவள் முயற்சி செய்து வரைந்தது.

பிறந்த நாள் – 26 மார்ச் 2020:

நேற்றைய என் பிறந்தநாளில் வாழ்த்துகளால் என்னை மகிழச் செய்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். வரிசையாக வந்து கொண்டேயிருந்த வாழ்த்துகளால் கொரோனா பற்றிய சிந்தனையிலிருந்து சற்றே விடுபட்டேன் என்று தான் சொல்லணும் :)

சிறுவயது முதலே என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டு எனக்குப் பிடித்த விஷயங்களை செய்து கொண்டிருப்பேன். என்னால் யாருக்கும் தொல்லை இருக்காது. புத்தகம் வாசிப்பது, அம்மாவின் புடவையை ரிப்பனில் கட்டிப் பார்ப்பது, மீனாட்சி அம்மாள் புத்தகம் பார்த்து சமைப்பது, பல்லாங்குழி, ஓவியம், அம்மாவுக்கு வீட்டு வேலைகளில் உதவுவது என்று என் பொழுதுகள் இப்படித் தான் செல்லும் :)

அதனால் என்னைப் பொறுத்தவரையில் இந்த 21 நாள் என்பது பெரிய விஷயமாக தோன்றவில்லை. பரபரப்பு இல்லாமல் நிதானமாக வேலை செய்யலாம் என்பதைத் தவிர வித்தியாசம் ஒன்றுமில்லை :)

ஐந்து வயது குட்டி புவனா/ குட்டி ஆதிக்கு அம்மா, அப்பா, தம்பி தான் உலகம். பயம், கவலை, பொறுப்பு என்று எதுவும் இருந்திருக்காது :) அப்பா சொல்லியிருக்கார், நாள்முழுதும் கூட ஜன்னல் அருகேயிருக்கும் ஒரு நாற்காலியில் ஏறி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருப்பாளாம் :)) அவ்வளவே அவள் உலகம்!!

21 நாள் தவம் – 29 மார்ச் 2020


வீட்டிலேயே தான் பத்திரமாக இருக்கிறோம். எதற்காகவும் வெளியே செல்லவில்லை. ஆவின் பால் தான் வழக்கமாக வாங்குவது என்பதால் அது வருவதில் தடையேதும் இல்லை. மளிகைப் பொருட்களும் வாங்கி வைத்தது இருக்கிறது. திருச்சி மாநகராட்சியின் சார்பில் இரண்டு, மூன்று இடங்களில் ஹோம் டெலிவரி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீர்ந்தால் ஃபோன் மூலம் சொல்லி வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

காய்கறி இருப்பில் உள்ளதை வைத்து சிக்கனமாக பயன்படுத்தி வருகிறேன். வரும் நாளில் 'காய்கறி இல்லா சமையல்' தான் :)

வீட்டை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக சுத்தம் செய்வதும், அவ்வப்போது கைகளை சுத்தம் செய்து கொள்வதும், தினமும் லைசால் கொண்டு தரையை துடைப்பதும், டெட்டால் கொண்டு கதவு கைப்பிடிகள், டீவி ரிமோட், செல்ஃபோன், ஸ்விட்ச் போர்டுகள், சோஃபா, நாற்காலி கைப்பிடிகள் என அனைத்தும் துடைப்பதுமாக செல்கிறது.

சிலநேரம் மனதில் ஒரு அழுத்தம் வருவதை தடுக்க முடியவில்லை. ஆளுக்கொரு புறமாக இருக்கிறோமே என்று. என்னை நானே சமாதானம் செய்து கொள்கிறேன் - இதுவும் கடந்து போகும்!

இன்று ஒரு மாறுதலுக்காக ஆல் டைம் ஃபேவரிட் 'அபியும் நானும்' பார்த்து ரசித்தோம். இறுக்கமான சூழலை மறந்து சிரித்துக் கொண்டிருந்தோம். மகளிடம் 'உன் விஷயத்தில் பிரகாஷ்ராஜ் கேரக்டர் தான் நான் இல்லையா?' என்று சொன்னதும். அப்படிச் சொல்ல முடியாது! என்றாள். ஏன்?? எனக் கேட்டேன்.

அப்பாக்கு கூடத் தெரியாம அசால்ட்டா என்னை ஸ்கூலில் கொண்டு சேர்த்தியேம்மா நீ என்றாள் :)

தடைபடாத பயணம் – 30 மார்ச் 2020:எந்த ஊரடங்கு போட்டாலும் இவளின் பயணத்தை மட்டும் நிறுத்த முடியாது :)

எங்க நம்ம போறோம்??

ஸ்ட்ராபெரி மலைக்கு, சாக்லேட் ஏரிக்கு :))

டோராவின் சத்தத்தை கேட்டாலே தூங்கிக் கொண்டிருக்கும் மகள் சிறுவயதில் துள்ளி குதித்து எழுந்து ஓடி பார்ப்பாள் :))

சில வருடங்களுக்குப் பிறகு, இன்று நானும் மகளும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் :)

நடுவில் கால் செய்த அப்பாவிடம், "நாங்க டோரா பார்க்கிறோமே" என்று மகள் சொன்னதும்...வாவ்!! ”நான் தான் மேப்! நான் தான் மேப்! நண்பனுக்கு கைநீட்டி, வழியைக் காட்டும் வழிகாட்டி!!” என்று பாட, இருவரும் சிரித்துக் கொண்டிருந்தோம்.ரோஷ்ணி கார்னர் -  2 ஏப்ரல் 2020:


எங்கள் மகள் வரைந்த ஓவியம்!

செல்ஃபி மோகம் கணேஷாவையும் விட்டு வைக்கவில்லை.

லாக் டவுன் நாட்கள் – 3 ஏப்ரல் 2020ஒவ்வொரு நாளும் நிதானமாக எழுந்து வேலைகளைச் செய்து என்று நாட்கள் நகர்கின்றன. எப்போதுமே விடுமுறை நாட்கள் என்றால் இருவேளை உணவு தான். அதனால் இப்போதும் அதே :) சாப்பிட்டு விட்டு யூட்யூபில் ஏதேனும் பார்ப்பது இல்லையென்றால் சினிமா பார்ப்பது என்று நேரத்தை கடத்துகிறோம் :)

அப்படி நேற்று பார்த்த படம் கோமாளி. முன்பே பார்த்திருந்தாலும் மீண்டும் பார்க்கலாம் ரகம் :) நானும் 90's kids என்பதால் மகளிடம் அப்போதிருந்த பொழுது போக்குகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஆட்டுக்கல், அம்மிக்கல்லில் அரைப்பது, அதை அவ்வப்போது கொத்தி விட "ஆட்டாங்கல்லு கொத்தலையோ! அம்மிக்கல்லு கொத்தலையோ!” என்று வரும் நபர்கள். பிளாஸ்டிக் பக்கெட் போன்றவை ஓட்டையானாலும் அதை பத்த வைக்க வருபவர்கள். காலியான ponds, gokul santol போன்ற தகர டப்பாக்களிலிருந்து குப்பை அள்ளும் முறம் போன்றவற்றை செய்து தருவார்கள். அதே போல் நம்மிடம் உள்ள தேவையில்லாத அலுமினிய, பித்தளை பாத்திரங்களை உருக்கி வார்ப்பில் சிலைகளாக மாற்றித் தருவார்கள். குட்டீஸான எங்களுக்கு ஓடிச் சென்று இவை எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்ப்பதே அப்போதைய பெரிய பொழுதுபோக்கல்லவா :)

சரி! வாங்க! பசிக்கிறதே மாலை கொறிக்க ஏதேனும் செய்யலாம் என்றால் அத்தியாவசிய பொருட்களை அவசரமாக வாங்கிய போது கடலைமாவு சுத்தமாக மறந்துவிட்டது :) வேற என்ன செய்யலாம்? அரைத்த வைத்த இட்லி மாவு தான் இருக்கிறது. அதில் இரண்டு கரண்டி எடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி என்று எல்லாவற்றையும் சேர்த்து எண்ணெயில் போட்டாச்சு :) சுடச்சுட போண்டா தயார் :)

இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்வது என்பது இது தான்.

என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்.

28 கருத்துகள்:

 1. வாசகம் உட்பட அனைத்தையும் ரசித்தேன். ரோஷ்ணியின் ஓவியங்கள் டாப். சிலவற்றை முகநூலிலும் வாசித்தேன். அனைவரும் நலமாய் இருக்க பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம்.

   வாசகம், பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம்.

   நீக்கு
 2. இனிய காலை வணக்கம் வெங்கட்.

  முக நூலில் படித்து விட்டேன். மீண்டும்
  படிப்பதில் அலுப்பு இல்லை.
  எல்லோரும் வளமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா...

   முகநூலில் வருவதே இங்கே ஒரு தொகுப்பாக...

   அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே இப்போது ஒவ்வொருவரின் பிரார்த்தனையும்.

   நீக்கு
 3. இன்று கதம்பம் மிக ரசிக்கும்படி இயல்பாக இருந்தது. உங்கள் எழுத்து நடையும் மிகவும் மெருகேறி இருக்கிறது.

  கடினமான பீரியடை இயல்பாக கடந்து செல்கிறீர்கள். இயல்பாக இதுவும் கடந்து போகும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன். எழுத்தினை பாராட்டியதில் மகிழ்ச்சி.

   இதுவும் கடந்து போகும்! நிச்சயமாக...

   நீக்கு
 4. ரோஷ்ணியின் ஓவியங்கள் நன்றாக வந்திருக்கிறது பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகளின் ஓவியங்களை பாராட்டியதற்கு நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 5. செல்ஃபி மோகம் கணேசரையும் விடவில்லை ஹா.. ஹா.. ஸூப்பர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் செல்ஃபி மோகம் கணேஷாவினையும் விடவில்லை! ஹாஹா அதே தான் கில்லர்ஜி.

   நீக்கு
 6. ரோஷினியின் ஓவியங்கள் மிகவும் அழகு! அதுவும் மொபைல் ஃபோனுடன் பிள்ளையார்! கற்பனை அற்புதம்! என் வாழ்த்தைச் சொல்லுங்கள்!!
  இட்லி மாவு போண்டா அருமை ஆதி! எல்லோரும் செய்வது தான் என்றாலும் செய்திருக்கும் விதம் புகைப்படத்தில் அழகாய் இருக்கிறது!
  அப்புறம் தாமதமாகச் சொன்னாலும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்! என்றும் மகிழ்வுடன் நலமுடன் இருக்க என் வாழ்த்துக்கள் ஆதி!! தேதியைப்பொறுத்தவரை நானும் 26 தான்! மாதம் மட்டும் டிசம்பர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓவியங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. மகளிடம் சொல்லி விட்டேன்.

   ஓ உங்கள் பிறந்த நாள் 26 டிசம்பர் - ஆ. மனைவி 25-மார்ச். அது பற்றி முக நூலில் எழுதிய நாளே 26! தங்களது வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி மனோம்மா...

   நீக்கு
 7. மகளின் ஓவியங்கள் அழகு. வாழ்த்துகளைக் கூறவேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகளின் ஓவியங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. உங்களது வாழ்த்துகளை மகளிடம் சொல்லி விடுகிறேன் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 8. ஆக,
  பிள்ளையாரையும் செல்பிக்குள் கொண்டு வந்து விட்டாயிற்று...

  தனிமைப் பொழுதுகள் பயனுள்ளதாகக் கழியட்டும்...

  அனைவரும் நலமாக இருக்க வேண்டுகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிள்ளையாரும் செல்ஃபி! :)

   தனிமைப் பொழுதுகள் - பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வோம்.

   நலமே விளையட்டும் துரை செல்வராஜூ ஜி.

   நீக்கு
 9. ஒவ்வொரு பகுதியும் அருமை ஜி... அன்பு மக்களுக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பகிர்வின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   உங்கள் வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 10. //சிலநேரம் மனதில் ஒரு அழுத்தம் வருவதை தடுக்க முடியவில்லை. ஆளுக்கொரு புறமாக இருக்கிறோமே என்று. என்னை நானே சமாதானம் செய்து கொள்கிறேன் - இதுவும் கடந்து போகும்!//


  கஷ்ட காலங்களில் நெருக்கமான உறவுகள் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு.
  அதை அழகாய் சொல்லி இருக்கிறார் ஆதி.

  ரோஷ்ணி அருமையாக வரைந்து இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  கதம்பம் அருமை. தங்கள் மகள் ரோஷ்ணியின் ஓவியங்கள் நன்கு மெருகேறி வருகின்றன. சிவகார்த்திகேயன் படமும், கைப்பேசி வைத்திருக்கும் பிள்ளையார் படமும் அழகாக இருக்கின்றன. தங்கள் மகள் ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்.

  மாலை நேர இட்லி மாவு வெள்ளையப்பம் நன்றாக உள்ளது. எங்கள் அம்மா அப்போது அடிக்கடி செய்து தரும் இப்பண்டம் அதுவும் ஒரு மழை பெய்யும் காலத்தில் சாப்பிடும் போது தேவாமிருதமாக இருக்கும். அந்த நினைவு வந்தது.

  இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆளுக்கொரு பக்கம் இருப்பது சிரமம்தான். இயல்பாக எடுத்துக் கொண்டு தைரியமாக சமாளித்து வரும் சகோதரிக்கு வாழ்த்துகள். எல்லாம் கொஞ்ச நாட்களில் சரியாகி விடும். இப்போது எல்லோரின் பிராத்தனைகளும் அதுவே..
  பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓவியங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி. உங்கள் வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

   நலமே விளையட்டும்.

   நீக்கு
 12. 'இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்வது " இதுவே எனது கொள்கையும்.

  பதிலளிநீக்கு
 13. கதம்பம் அருமையாக இருந்தது. ரோஷ்ணியின் செல்பி பிள்ளையார் சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

   நீக்கு
 14. கதம்பம் அருமை. அதிலும் தங்கள் மகளின் கைவண்ணம் மிகவும் அருமை. மகளுக்கு வாழ்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சொக்கன் சுப்ரமணியன்.

   உங்கள் வாழ்த்துகளை மகளிடம் சொல்கிறேன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....