அந்தமானின் அழகு – பகுதி 17
முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3
பகுதி 4
பகுதி 5 பகுதி 6 பகுதி 7
பகுதி 8
பகுதி 9 பகுதி 10
பகுதி 11
பகுதி 12
பகுதி 13
பகுதி 14
பகுதி 15
பகுதி 16
அனைத்து பதிவுலக
நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளை, நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.
மீனாக
பிறந்து சாவது என்று முடிவெடுத்துவிட்டால், பொழுதுபோக்கிற்காக மீன் பிடிப்பவனின் தூண்டிலில்
சிக்காதே; பிழைப்பிற்காக மீன் பிடிப்பவனின் வலையில் சிக்கிடு – உன் மரணமும் ஒருவனை
வாழவைக்கட்டும்…
நினைத்தபடி சிக்குவது மீனின் கையில் இல்லை என்று சொன்னாலும்,
சொல்ல வரும் விஷயம் நன்றாக இருக்கிறது அல்லவா… அது தான் முக்கியம்! சரி இன்றைய பதிவுக்கு
வருவோம். சென்ற பகுதியில், அந்தமானின் போர்ட் Bப்ளேயர் தீவிலிருந்து ஸ்வராஜ் dhதீப்
என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஹேவ்லாக் தீவிற்கு எப்படி பயணம் செல்வது என்ற விவரங்களைப்
பார்த்தோம். நல்ல உறக்கத்திற்குப் பிறகு விழித்து காலை நேர வேலைகளை
முடித்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் வீர ஹனுமான் கோவிலுக்கு ஒரு விசிட். அனுமனைத்
தரிசித்து, சிங்காரம் அவர்களின் கடையில் தேநீரும் குடித்து தங்குமிடம் திரும்ப, குழுவில்
உள்ள மற்றவர்களும் தயாராக இருந்தார்கள். காலை உணவை தங்குமிடத்தில் முடித்துக் கொண்டு
நாங்கள் அனைவரும் காத்திருந்தோம். சொன்ன நேரத்தில் வாகனம் வந்து சேர்ந்தது. அந்த வாகனத்தில் எங்கள் தங்குமிடத்திலிருந்து சுமார்
மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது துறைமுகம். துறைமுகத்திலிருந்து தான் நாங்கள்
பயணம் செய்ய வேண்டிய படகு புறப்படும் என்பதால் இந்த வாகனப் பயணம்.
துறைமுகத்தினுடைய வாயிலில் எங்களை இறக்கி விட்டு, எங்கள்
உடமைகளை எடுத்துக் கொண்டு உள்ளே செல்லும் வரை வாகன ஓட்டியும் உடன் வந்த வழிகாட்டியும்
காத்திருந்தார்கள். எங்கள் குழுவினரின் பயணச்
சீட்டையும், அடையாள அட்டைகளையும் சரி பார்த்து முதல் கட்ட சோதனைகளை முடித்துக் கொண்டு
உள்ளே நுழைந்தோம். விமான நிலையம் போலவே இங்கேயும் சோதனைகள். எங்களுக்கான சொகுசுக் கப்பல்
புறப்பட இன்னும் நேரம் இருக்கிறது. அதற்கு முந்தைய கப்பலில் செல்ல வேண்டிய பயணிகள்
அப்போது தான் கப்பலில் ஏறிக் கொண்டிருந்தார்கள். அதனால் நாங்கள் அனைவரும் சிறிது நேரம்
காத்திருக்கும் இடத்தில் காத்திருந்தோம். சிறிது
நேரத்திற்குப் பிறகு எங்களை உள்ளே அனுப்பினார்கள். அங்கேயும் சிறிது நேரக் காத்திருப்பு.
சில கடைகள் உள்ளே இருக்க, அங்கே ஏதும் தேவை எனில் வாங்கிக் கொள்ளலாம். பிறகு நீண்ட வரிசையில் சென்று எங்கள் கப்பல் நிற்கும்
இடத்திற்குச் சென்று சேர்ந்தோம்.
எங்கள் உடைமைகளை அனைத்தையும் ஊழியர்கள் வாங்கிக் கொண்டு
அவற்றை கப்பலின் அடிப்பகுதிக்குக் கொண்டு சென்று வைத்து விடுகிறார்கள். பயணிகள் மட்டும் முன்னே சென்று கப்பலில் ஏறிக் கொள்ளலாம். இந்த சொகுசுக் கப்பல் சுமார் 200 இருக்கைகளைக் கொண்ட
கப்பல். உள்ளேயே மூன்று பிரிவுகள் – கப்பலின்
உள்ளேயே ஒரு சிற்றுண்டி சாலையும் உண்டு. தேநீர்,
காஃபி, சிற்றுண்டி தவிர அந்தமான் படம்/சொகுசுக் கப்பலின் போட்ட டி-ஷர்ட்டுகள், தொப்பிகள்
போன்றவையும் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.
அவரவர் இருக்கைக்குச் சென்று அமர்ந்த பிறகு விமானத்தில் சொல்வது போலவே பாதுகாப்பு
அம்சங்களைச் சொல்கிறார்கள். கப்பலின் முன்
புறம் இருக்கும் பெரிய திரையிலும் இந்த பாதுகாப்பு அம்சங்களை நீங்கள் காணொளியாக காண
முடியும் என்பது கூடுதல் வசதி. ஒவ்வொரு இருக்கையின் கீழும் பாதுகாப்பு உடைகள் இருக்கின்றன.
சொகுசுக் கப்பல் பற்றிய தகவல்கள் அடங்கிய கையடக்கப் புத்தகமும் இருக்கிறது.
எந்த வழியாக பயணிக்கிறோம் என்பதைக் காண்பிக்கும் வரைபடங்கள்,
கப்பலில் என்ன கிடைக்கும் என்ற விவரங்கள், அந்தமான் பயணத்தில் பார்க்க வேண்டிய இடங்கள்,
அவற்றின் வரலாற்றுக் குறிப்புகள் என பலவும் அந்தப் புத்தகத்தில் உண்டு. கப்பலின் வெளியே இருக்கும் காட்சிகளைப் பார்க்க
விருப்பம் இல்லையெனில் இதை படித்துக் கொண்டு வரலாம். கப்பல் புறப்பட்டு சிறிது நேரம் வரை யாரையும் எழுந்து
நிற்க அனுமதிப்பதில்லை. அவரவர் இருக்கையில் அமர்ந்து கொண்டிருக்க வேண்டும் – விமானம்
போல இங்கே சீட் பெல்ட் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், இருக்கையில் அமர்ந்து
கொண்டிருப்பது அவசியம். கப்பல் புறப்பட்ட உடன்
நிறைய ஆட்டம் தெரிகிறது. அப்படி ஆடும்போது நாம் எழுந்து நின்றால் நமக்குக் கொஞ்சம்
புரட்டும், இரண்டாவது கீழே விழுந்து விடும் அபாயமும் உண்டு என்பதால் இந்தக் கட்டுப்பாடு. கடலில் பயணித்துக் கொண்டிருக்கும்போது பல சமயங்களில்
கப்பல் தத்தளிப்பது போன்ற உணர்வு அவ்வப்போது ஏற்படுகிறது – கடலில் தண்ணீரை இரண்டு பக்கமும்
சிதறடித்துக் கொண்டு கப்பல் பயணப்படும்போது இப்படி தத்தளிக்கிறது.
சிறிது நேரம் வரை சும்மாயிருந்த பயணிகள் ஒவ்வொருவராக எழுந்து
நிற்கிறார்கள். ஜன்னல் ஓரத்தில் இருப்பவர்கள்
எழுந்து நிற்பதில்லை என்றாலும் மற்றவர்கள் எழுந்து ஏதாவது ஒரு இடம் கிடைக்காதா, அதன்
வழியே கடலைப் பார்க்க முடியாதா என நடக்க ஆரம்பித்து விடுகிறார்கள். கூடவே அலைபேசியுடன் அலைந்து விதம் விதமாக செல்ஃபி
எடுத்துக் கொள்ளும் காரிகைகளும் இளைஞர்களும்! செல்ஃபி மோகம் அப்படி பிடித்து ஆட்டுகிறது
அவர்களை! பலருக்கு இந்த செல்ஃபி எடுக்கவே தெரிவதில்லை என்றாலும் முயற்சிக்கிறார்கள். அவர்களை எடுத்துக் கொள்வதாக நினைத்து கப்பலில் பயணம்
செய்யும் மற்றவர்களையும் படம் எடுக்கும் சிலர், காணொளிகளாக எடுக்கும் சிலர் என ஒரே
க்ளிக் க்ளிக் சப்தம்! நடுநடுவே கப்பலின் பணியாளர்கள் வந்து ரொம்பவே அதிகமாக அங்கேயும்
இங்கேயும் அலைபவர்களை இருக்கைக்குச் சென்று அமர்ந்து கொள்ளும்படி பணிவோடு கேட்கிறார்கள். இவர்கள் தான் இப்படி என்றால் சிலர் குழந்தைகளை கண்டுகொள்ளாமல்
விட, குழந்தைகள் அங்கேயும் இங்கேயும் அலறிக்கொண்டு ஓடுகிறார்கள். அவர்களையும் கண்காணித்தபடியே
இருக்க வேண்டிய வேலையும் கப்பல் பணியாளர்களைச் சேர்ந்து விடுகிறது!
சிலருக்கு கப்பல் பயணம் தலைசுற்றலையும், வாந்தி வருவது
போன்ற உணர்வைனையும் ஏற்படுத்துகிறது. கப்பலில் ஏறிய உடனே எங்கள் குழுவில் இருந்த பெண்மணி
எங்கள் அனைவருக்கும் உப்பில் போட்ட நார்த்தங்காய் வாயில் அடக்கிக் கொள்ள கொடுத்தார்!
பயணத்திற்காகவே எடுத்து வந்தார் அவர்! இப்படியாக ஒன்றரை மணி நேரம் சுகமான பயணத்திற்குப்
பிறகு கப்பல் ஸ்வராஜ் dhதீப் தீவினை வந்தடைந்தது.
கப்பலிலிருந்து தடிமனனான கயிறுகள் வீசப்பட, அவற்றை பிடித்து அங்கே இருக்கும்
இரும்புத் தூண்களில் பிணைக்கிறார்கள். ரொம்பவே ஜாக்கிரதையாக செயல்பட வேண்டிய தருணம்
இது. கொஞ்சம் பிசகினாலும் கப்பல் துறைமுகத்தில் இருக்கும் Concrete மேடைகளில் இடித்துக்
கொண்டு விடும் என்பதால் பொறுமையாகவே சூழலை கையாள்கிறார்கள். அதற்குள் பயணிகளுக்கு அவசரம் – விட்டால் கடலுக்குள்
குதித்து நீந்திச் சென்று விடுவார்கள் என்பது போல அவசரம். ஒரு வழியாக கப்பல் நிலைக்கு
வர, பயணிகள் வரிசையாக நின்று கப்பலிலிருந்து இறங்கி நிற்கிறார்கள். கப்பலின் பின்புறம் வைத்திருந்த உடைமைகளை எடுத்துக்
கொண்டு சிறிது தூரம் நடக்க வேண்டும். வாகனங்கள்
நிறுத்துமிடம் சற்று தள்ளியே இருக்கிறது!
உடைமைகளை பெற்றுக் கொண்டு நாங்கள் அனைவரும் பாதை வழியே
நடக்க, இரண்டு பக்கங்களிலும் கடல் நீர்… நிறைய
வகை நண்டுகள், படகுகள் என அழகான காட்சிகள்.
பத்து நிமிட நடையில் துறைமுகத்தின் வாயிலை அடைந்திருந்தோம். அங்கே எங்களை அழைத்துச் செல்ல ஒரு வழிகாட்டி – திரு
சுமந்த் ஏற்பாடு செய்த வழிகாட்டி காத்திருந்தார்.
போர்ட் Bப்ளேயரில் ஒரே வண்டி – டெம்போ ட்ராவலர்! இங்கே மூன்று வாகனங்கள் – குளிரூட்டப்பட்ட
வாகனங்கள் தான்! 18 பேர் என்பதால் ஆறு பேருக்கு ஒரு வாகனம் எனும் வீதமாக மூன்று வாகனங்கள்.
உடைமைகளையும் எடுத்துக் கொண்டு வாகனத்தில்
அனைவரும் அமர்ந்து கொள்ள, வாகனங்கள் நேராக எங்கள் தங்குமிடம் நோக்கி எங்களை அழைத்துச்
சென்றன. ஸ்வராஜ் தீப் என்கிற ஹேவ்லாக் தீவில்
நாங்கள் எங்கே தங்கினோம், அதன் சிறப்பு என்ன, தீவில் என்னென்ன விஷயங்கள் பார்க்கவும்,
ரசிக்கவும் இருக்கின்றன போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
நண்பர்களே, இந்த
நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும்
ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
பின்குறிப்பு: நண்பரின் மகன் அலைபேசியில் எடுத்த படங்கள்.
வாசகம் பற்றி நான் சொல்ல வந்ததை நீங்களே சொல்லி விட்டீர்கள். கப்பலிலும் சென்ற வகையில் அனைத்து வகைப் பயணங்களும் மேற்கொண்டிருக்கிறீர்கள்! ஆமாம், ஒட்டகச் சவாரி செய்திருக்கிறீர்களோ?!!
பதிலளிநீக்குவாசகம் - :) அதைப் படித்த உடனே இந்த எண்ணம் தோன்றியது - சிக்குவது அதன் கையில் இல்லையே என!
நீக்குஒட்டக சவாரி - நிறைய முறை செய்து இருக்கிறேன் ஸ்ரீராம். அது ஒரு தனி அனுபவம். குஜராத் - தியு தொடரில் கூட இது பற்றி எழுதி இருக்கிறேன்.
சிலர் வேண்டுமென்றே செல்ஃபி எடுப்பதுபோல மற்றவர்களை எடுப்பார்கள்!
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம். இப்படியும் சிலர் உண்டு.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவாசகம் அருமை. தன் மரணத்திலும் மற்றவரை வாழ வைப்பது என்ற சிந்தனை வரிகள் நன்று.
பதிவு அருமை. கப்பல் பயணங்களில் இருக்கும் சுகங்களை/சிரமங்களை அழகாக விளக்கியிருக்கிறீர்கள். அந்தமான் பிரயாணம் மேலும் மிக அருமையான பயணங்களை உங்களுக்கு தந்திருக்கிறது. அவற்றை நீங்கள் வர்ணிக்கும் அழகில் நாங்களும் உடன் பயணித்த திருப்தி கிடைக்கிறது. தொடருங்கள். நாங்களும் உங்களுடன் தொடர்ந்து வருகிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
பயணத்தில் தொடர்ந்து நீங்களும் வருவதற்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.
வர்ணனை கப்பலில் பயணித்த உணர்வைத் தந்தது ஜி
பதிலளிநீக்குமீன்மொழி ஸூப்பர்
வர்ணனை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குமீன்மொழி - :)
சொல்ல வரும் விஷயம் நன்றாக இருக்கிறது அல்லவா… //
பதிலளிநீக்குஇதைத்தான் சொல்ல நினைத்தேன் ஜி. இறக்கும் தருவாயில் இருப்பவர்கள் சிலர் தங்கள் உறுப்புகளைத் தானம் செய்வதும். அர்த்தம் கொள்ளலாம் இல்லையா..
ஹையோ வெங்கட்ஜி சிலர் செல்ஃபி எடுப்பது போல் வேண்டுமென்றே மற்றவர்களை எடுப்பார்கள்...
கப்பலில் இருந்து இறங்கியதும் நடக்கும் பாதையின் இரு புறமும் கடல்...ஆஹா என்ன அழகான இடம்...அனுபவம்....போகும் ஆசையைத் தூண்டிக் கொண்டே இருக்கிறது. மகனின் காதில் போட்டு வைத்துவிட்டேன்...ஹா ஹா ஹா ஹா
கீதா
காலை வணக்கம் கீதாஜி.
நீக்குஉறுப்பு தானம் போல - அப்படியும் அர்த்தம் கொள்ளலாம்.
உண்மை தான் செல்ஃபி எடுப்பதாக பாவ்லா செய்து மற்றவர்களை படம் எடுப்பவர்கள் அதிகமே.
கப்பல் பயணம் முடிந்து பாதையின் இருபுறமும் கடலும் கடற்கரையும் - அழகான காட்சிகள் தான். உங்களுக்கும் அந்தமான் பயணம் விரைவில் அமையட்டும்.
200 இருக்கைகளைக் கொண்ட சொகுசுக் கப்பல்... இதுவே பிரமாண்டம்...
பதிலளிநீக்குஇதுவரை வந்த பதிவுகளே, ஒருமுறையாவது சென்றே ஆக வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகிறது...
பயணத்தின் முடிவு பகிர்வில், மொத்த செலவையும் (ஒருவருக்கு) சொல்லுவீர்கள் தானே ஜி...
ஒரு முறையேனும் சென்று வரலாம் தனபாலன். உங்களுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு அமைந்திட வாழ்த்துகள்.
நீக்குபயணத்தின் முடிவில் மொத்த செலவையும் நிச்சயம் சொல்கிறேன் தனபாலன்.
கப்பலில் பயணித்த உணர்வு ஏற்பட்டது ஐயா
பதிலளிநீக்குநன்றி
பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதொடர்ந்து பயணிப்போம்.
வாசகம் மிக அருமை.
பதிலளிநீக்கு//ஹேவ்லாக் தீவில் நாங்கள் எங்கே தங்கினோம், அதன் சிறப்பு என்ன, தீவில் என்னென்ன விஷயங்கள் பார்க்கவும், ரசிக்கவும் இருக்கின்றன போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.//
மோகினி தீவு கதை படித்த நினைவு வருது.
தீவை பார்க்க கப்பலிலில் இருந்து இறங்கி போகும்காட்சி சுவையாக இருக்கும்.
அது போல் இருக்கிறது நீங்கள் படங்களுடன் சொன்ன விவரம் .
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...
நீக்குமோகினித் தீவு கதை போல இப்பதிவு - நன்றிம்மா...
படங்களும் விவரங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
கப்பல் பயணம் நார்மலாகத்தான் இருக்கும். புறப்படும்போது மட்டும்தான் வித்தியாசமான உணர்வு இருக்கும். அப்புறம் எப்படா போகுமிடம் வரப்போகுதுன்னு தோன்றும்.
பதிலளிநீக்குநண்டு படங்கள் இனி வருமா?
ஆரம்பத்திலும், நடுவில் சில இடங்களிலும் (ரொம்பவே ஆட்டம் கண்டால்!) வித்தியாசன உணர்வு வரலாம் - அதுவும் எல்லோருக்கும் அல்ல!
நீக்குநண்டு படங்கள் - வரலாம்!
கட்டுரை, போகும் ஆர்வத்தைத் தூண்டுது.
பதிலளிநீக்குபடங்கள் வழமைபோல அழகு, ஆனால் கொஞ்சம் வெளிச்சம் குறைவாக இருக்கே.. வெயில் இல்லா நேரத்தில் எடுத்ததோ?..
தத்துவ வாக்கியம்..ஓகே மனம் ஏற்றுக் கொள்ளுது.
உங்களுக்கும் அந்தமான் பயணம் விரைவில் அமைந்திட வாழ்த்துகள் அதிரா.
நீக்குபடங்கள் கப்பலின் உள்ளே இருந்து கண்ணாடிகள் வழியே எடுக்கப்பட்டவை.
தத்துவ வாக்கியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
மிக அழகாக வர்ணனை செய்துள்ளீர்கள். கப்பலில் நாம் பயணம் செய்வது போன்ற உணர்வே உண்டானது.
பதிலளிநீக்குமீன் மொழி அற்புதம்
தங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி குமார் ராஜசேகர் ஜி.
நீக்குமீன் மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
புகைப்படங்களும், வர்ணனையும் போட்டி போடுகின்றன. பயணிகளின் அலப்பறை! ஒரு முறை மஸ்கட்டில் டால்ஃபின் ஷோ பார்க்க கடலுக்குள் சென்றோம். நடு கடலில் நிறுத்தினார்கள். டால்ஃபின்களைக் கண்டதும் பெர்ரியில் இருந்த அத்தனைப் பேரும் முன் பகுதிக்கு ஓடினார்கள். அவர்களை இழுத்து உட்கார வைக்கப் பட்ட பாடு..!
பதிலளிநீக்குபடங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா...
நீக்குபயணிகளின் அலப்பறை - :) தாங்க முடிவதில்லை. முன்பகுதிக்கு ஓடிய பயணிகள் - பலருக்கு அதில் இருக்கும் ஆபத்து புரிவதில்லை! “ஒண்ணும் ஆகாது” ந்னு ஒரு மூட நம்பிக்கை! ஆனால் பார்த்துக்கலாம்-ன்னு ஒரு அசட்டு தைரியம் தான்!
அந்தமானில் பயணித்த படகு அனுபவம் மறக்க முடியாத ஒன்று.
பதிலளிநீக்குஉண்மை தான் இராமசாமி ஜி. மறக்க முடியாத அனுபவம் அது.
நீக்குஅருமையான சிந்தனை.
பதிலளிநீக்குசிந்தனை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சொக்கன் சுப்ரமணியன்.
நீக்கு