புதன், 11 மார்ச், 2020

அந்தமானின் அழகு – கார்பின்’ஸ் கோவ் கடற்கரை – போர்ட் ப்ளேயர்

அந்தமானின் அழகு – பகுதி 5


முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4


கார்பின்’ஸ் கோவ் கடற்கரை...

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, பயணம் பற்றிய சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

பயணம் எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது. நண்பர்களுடனான பயணம் உற்சாக சிரிப்பினுடனோ, கிண்டல், கேலி நிகழ்வுகளோடோ கழிகிறது.  உறவினர்கள் உடனான பயணம் பாதுகாப்புடனோ அல்லது பதட்டத்துடனோ கழிகிறது. மனைவியுடனான பயணம் மத்திமம்! தனிமைப் பயணம் கொஞ்சம் கடினம் – பல சமயங்களில்! – புத்தகமும் அலைபேசியுமாகக் கடந்து செல்ல வேண்டியிருக்கும்! பயணம் வெறும் பயணமாக மட்டுமே இருப்பதில்லை.
கார்பின்’ஸ் கோவ் கடற்கரைக்குச் செல்லும் பாதை...கார்பின்’ஸ் கோவ் கடற்கரை...  
விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள்...


கார்பின்’ஸ் கோவ் கடற்கரை...   

இத்தொடரின் சென்ற பகுதியான நான்காம் பகுதியில் அந்தமான் தீவின் போர்ட் Bப்ளேயர் நகரில் இருக்கும் செல்லுலர் சிறைச்சாலை பற்றி பார்த்தோம்.  அங்கிருந்து அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் போர்ட் Bப்ளேயர் நகரின் மையத்திலிருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு கடற்கரைக்கு.  அந்தமான் தீவுகள் என்பதால் எங்கே பார்த்தாலும் கடற்கரை தானே! ஆனாலும் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து அங்கங்கே சில விஷயங்களை சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் அமைத்திருக்கிறார்கள் சுற்றுலாத் துறையினரும் தனியார் நிறுவனங்களும்.   சிறைச்சாலை பார்த்த பிறகு நாங்கள் சென்ற கடற்கரையின் பெயர் கார்பின்’ஸ் கோவ் கடற்கரை.  நகரத்திலிருந்து சற்று வெளியே இருப்பதால் இந்த இடத்திற்கு பெரிதாக போக்குவரத்து வசதிகள் இல்லை – ஆட்டோக்கள் உண்டு.  இரு சக்கர வாகனங்கள் வாடகைக்குக் கிடைப்பதுண்டு – உங்களிடம் ஓட்டுனர் உரிமம் இருந்தால் இப்படி ஒரு வண்டியை எடுத்துக் கொண்டும் இங்கே செல்லலாம். கடலன்னையின் கைவண்ணம்...
கார்பின்’ஸ் கோவ் கடற்கரை...தென்னை மரங்கள் சூழ ரம்மியமான கடற்கரை...
கார்பின்’ஸ் கோவ் கடற்கரை...


கார்பின்’ஸ் கோவ் கடற்கரை...  

கார்பின்ஸ் கோவ் கடற்கரையில் அப்படி என்ன இருக்கிறது? பொதுவாக அந்தமான் தீவுகளின் கடற்கரையில் இருக்கும் பொழுது போக்கு சமாச்சாரங்கள் இங்கே சற்றே குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.  ஆனால் இங்கே தென்னை மரங்களும் இயற்கை எழிலும் உண்டு.  ஜெட் ஸ்கீ, போட்டிங் போன்ற வசதிகள் உண்டு.  நாங்கள் சென்ற நேரத்தில் கடலில் கொந்தளிப்பு. இரண்டாம் எண் கொடியேற்றி கடற்கரைக்கு வருபவர்களை, கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துக் கொண்டிருந்தார்கள்! நாங்கள் சென்ற சமயத்தில் தான் Bபுல்Bபுல் என பெயரிடப்பட்ட புயல் கரை கடக்கும் என பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள் – அந்தமான் தீவுகளில் அந்தப் புயலின் தாக்கம் இல்லை என்றாலும் கடற்கரையில் இரண்டாம் எண் கொடியேற்றி இருந்தார்கள். Bபுல்Bபுல் அந்தமானில் இருந்த எங்களுக்கு பயந்து மேற்கு வங்கத்திற்கும் பங்க்ளாதேஷுக்கும் ஓடிவிட்டது. அங்கே இருந்த மக்கள், இந்தப் புயலால் அவதிப் பட்டனர் என்பதில் துயரம் இருந்தாலும் எங்கள் சுற்றுலாவில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதில் குழுவினர் அனைவருக்குமே கொஞ்சம் நிம்மதி தான்!


கடற்கரையில் மிதப்பான்கள்...
கார்பின்’ஸ் கோவ் கடற்கரை...கடற்கரையிலிருந்து பாதை...
கார்பின்’ஸ் கோவ் கடற்கரை...
 
நகரிலிருந்து வரும் பாதையே மிகவும் அழகாகவும் ரம்மியமாகவும் இருந்தது.  கடற்கரை அருகே எங்களை இறக்கிவிட்டு ஓட்டுனர் காத்திருக்க, குழுவினர் அனைவருமே கடலை நோக்கி நடந்தோம். கடல் பகுதியில் மிதப்பான்கள் இருந்தாலும், அங்கே இருந்த இரண்டு பெண்கள் – காவலுக்காக நின்று கொண்டிருந்தவர்கள் – கைகளில் குச்சிகளை வைத்துக் கொண்டு அதில் நடக்கக் கூடாது என தடுத்துக் கொண்டிருந்தார்கள் – சற்றே பெரிய அலைகள் வர மிதப்பான்கள் மேலும் கீழும் ஆடிக்கொண்டிருந்ததால் அதில் நடப்பது கொஞ்சம் கடினம் என்றும் கடலுக்குள் விழுந்தால் ஆபத்து என்றும் சொல்லி யாரையும் சில அடிகளுக்கு மேல் அனுப்ப வில்லை.  சரி பரவாயில்லை என கடற்கரையில் கொஞ்சம் கால்கள் நனைத்து இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தோம்.  தூரத்தே தெரியும் தென்னை மரங்கள், மாலை நேரத்துச் சூரியன், அங்கே விளையாடிக் கொண்டிருக்கும் மக்கள், குழந்தைகள் என அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தோம்.  கடற்கரையில் இருக்கும் கற்கள் – இயற்கை அவற்றின் மீது வடித்திருந்த சிற்பங்கள் – என ஒவ்வொன்றும் அழகு தான். 


அரித்தாலும் நின்று கொண்டிருக்கும் தென்னை...
கார்பின்’ஸ் கோவ் கடற்கரை...வீழ்ந்து போன மரத்தின் துண்டு ஒன்று...
கார்பின்’ஸ் கோவ் கடற்கரை...
 
சின்னச் சின்ன சிப்பிகள் முதல் சற்றே பெரிய பவளப் பாறைகள், என பலவிதமான விஷயங்கள் கடற்கரையில் இருந்தன.  ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து அதனைப் பற்றிப் பேசி, குழுவினர் அனைவருமே கடலுள் இறங்கி அலைகளில் விளையாடி என நேரம் மிகவும் குதூகலமாகவே கழிந்தது.  இந்தக் கடற்கரை அத்தனை சுத்தமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும் – என்னதான் இயற்கை அன்னை தன்னை சுத்தமாக வைத்துக் கொண்டாலும் சுற்றுலாப் பயணிகள் இங்கேயே பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் என அனைத்தையும் வீசி விட்டுச் செல்வதால் நிறைய குப்பைகள் – குப்பைக் கூடைகள் வைத்தாலும் நாங்கள் அங்கே சென்று போடுவதா? என்ற எண்ணத்துடன் இருக்கும் பலர் இங்கே இருக்க, கடல் அன்னை என்ன செய்வாள் பாவம்.  குப்பைகளை உள்ளே இழுத்துச் செல்வதும், வெளியே தள்ளுவதுமாக போராடிக் கொண்டே இருக்கிறாள் – எந்தவித ஓய்வும் இன்றி.  கடலன்னைக்கு ஓய்வே தேவையில்லை என்பது போல அலைகளை அனுப்பிக் கொண்டிருக்க, அனைவரும் அந்த ஓயாத உழைப்பை நினைத்தபடி பொழுதைக் கழித்தோம். 


இயற்கை வடித்த சிற்பம்....
கார்பின்’ஸ் கோவ் கடற்கரை...இந்தப் படம் முன்னரும் பகிர்ந்திருக்கிறேன்...
கார்பின்’ஸ் கோவ் கடற்கரை...
 
வழக்கம்போல இயற்கையை ரசித்த வண்ணமே, அனைவரும் நிறைய நிழற்படங்களை எடுத்துக் கொண்டிருந்தோம்.  இந்தப் பயணத்தில் மூன்று DSLR கேமராக்கள் – அது தவிர அத்தனை பேரிடமும் அலைபேசி – பதினெட்டு பேரில் பத்து பேருக்கு மேல் நிழற்படங்களை எடுத்துக் கொண்டே இருந்தார்கள் என்பதால் பயணத்தில் எடுத்த படங்கள் ரொம்பவே அதிகம்! அதுவும் விதம் விதமாக போஸ் கொடுத்து, செல்ஃபிகள், படங்கள் என எடுத்துக் கொண்டே இருக்க – சில அலைபேசிகளுக்கு கண்ணிருந்தால் அழுதிருக்கும் – அத்தனை படங்கள்! என்னுடைய கேமராவில் மட்டுமே ஆயிரத்திற்கும் மேலான புகைப்படங்கள் – இயற்கையையும், குழுவினரையும் எடுத்துக் கொண்டே இருந்தேன் – மற்ற நண்பர்கள் என்னையும் சில பல படங்கள் எடுத்தார்கள்.  கார்பின்ஸ் கோவ் கடற்கரையிலும் படங்கள் எடுத்துக் கொண்டு இருந்தபோது தேநீர் விற்றுக் கொண்டு வந்தவரிடம் தேநீர் வாங்கி பருகினோம் – ஒரு சிறு கப் பத்து ரூபாய் – சுவையும் நன்றாகவே இருந்தது.  அந்தமான் நகரில் ஒரு விஷயம் – அனைவருமே கவனித்தது – கடற்கரை பகுதிகள் அனைத்திலுமே இளநீர் நிறையவே கிடைக்கிறது – முப்பது-நாற்பது ரூபாய்க்கு இளநீர் – அதிலும் சுவையான இளநீர்! அந்தமான் தீவுகளில் இருந்த எல்லா நாட்களிலும் நாங்கள் இளநீர் அருந்திய இளநீருக்குக் கணக்கே இல்லை!


ஓயாது உழைக்கும் கடலன்னை...
கார்பின்’ஸ் கோவ் கடற்கரை...இயற்கை எழில்...
கார்பின்’ஸ் கோவ் கடற்கரை...
 
கடற்கரையில் நிறைய கடைகளும் உண்டு – மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி என விதம் விதமாக பஜ்ஜிகள், கடல் சிப்பிகள் கொண்டு செய்த அழகியல் சாதனங்கள், உண்பதற்கு பஜ்ஜி தவிர குல்ஃபி, சுண்டல் என பல வகைகள் என எல்லாம் உண்டு.  சுற்றுலா என்றால் ஷாப்பிங்க் இல்லாமலா? குழுவினரில் பலரும் கடைகளில் என்ன வாங்கலாம் என பார்த்துக் கொண்டிருக்க, நானும் சில நண்பர்களும் பஜ்ஜிக் கடைகளை நோட்டமிட்டோம்.  கூடையில் வைத்திருந்த மிளகாய்கள் “வா, வா” என எங்களை அழைக்க ஒரு கடைக்குச் சென்றோம் – கணவன் மனைவி இருவருமாக பொறுப்பாக கடை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களிடம் மிளகாய் பஜ்ஜிக்கு சொல்லி பேசிக் கொண்டிருந்தோம். பெரும்பாலும் காய்கறிகள் கடல்வழி தான் வந்து சேர வேண்டும் – சில காய்கறிகள் மட்டும் தீவுகளிலேயே பயரிட்டுக் கொண்டாலும், நிறைய காய்கறிகள் மெயின் லேண்ட் எனப்படும் வெளிநகரங்களிலிருந்து தான் வர வேண்டும் – உருளைக் கிழங்கு கூட சமயத்தில் 150 ரூபாய் வரை விற்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. 


எண்ணையில் குளிக்கத் தயாராக...
கார்பின்’ஸ் கோவ் கடற்கரை...


சிப்பியில் அலங்காரப் பொருட்கள்...
கார்பின்’ஸ் கோவ் கடற்கரை...
 
மிளகாய் பஜ்ஜி, இளநீர் என பல விஷயங்கள் உள்ளே சென்று கொண்டிருந்தது. ஷாப்பிங் மோகத்தில் இருந்தவர்களை கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து அழைத்துக் கொண்டு எங்கள் வாகனம் நின்றிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். மாலை நேரத்தில் இந்தத் தீவுகளில் வேகமாகவே இருட்டி விடுகிறது.  பொதுவாகவே காலை 04.30 மணி சுமாருக்கே சூரிய உதயம் – அஸ்தமனமும் விரைவிலேயே இருப்பதால் சீக்கிரமாகவே இருட்டி விடுகிறது. இன்னும் நிறைய நேரம் கடற்கரையில் இருக்கலாம் என மனது சொன்னாலும், அடுத்து பார்க்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றிருக்கிறது என்பதால் அனைவரையும் அழைத்துக் கொண்டு எங்கள் அடுத்த இலக்கினை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம்.  கடற்கரை அருகே இருந்த பாதையில் இதய வடிவ மின்விளக்குகள் இருக்க, பலரும் அங்கே படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.   


கடற்கரை – ஓயாது கரைக்கு வந்து திரும்பும் அலைகளுக்கு அலுப்பே இல்லை – அது போலவே, கடற்கரைக்குச் சென்று விட்டால் நம்மில் பலருக்கும் அந்தச் சூழல் அலுப்பதே இல்லை. அங்கேயே இருந்துவிடலாம் என்று தோன்றிவிடுகிறது. அதுவும் தில்லி போன்ற நகரத்தில் இருப்பவர்களுக்கு கடலும், கடற்கரையும் நல்லதொரு பொழுதுபோக்கு. இந்த கார்பின்ஸ் கோவ் கடற்கரையும் எங்களுக்கு சிறப்பான அனுபவங்களை அளித்தது – அங்கிருந்து புறப்பட்ட எங்கள் குழுவினரின் அந்த இலக்கு என்ன? அங்கே பார்த்த விஷயங்கள் என்ன என்பதை எல்லாம் அடுத்த பகுதியில் சொல்கிறேன். அதுவரை இந்தப் பதிவில் சொன்ன விஷயங்களையும், பகிர்ந்து கொண்டிருக்கும் படங்களையும் ரசிக்கலாமே!  நண்பர்களே, இந்த நாளின் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

34 கருத்துகள்:

 1. பயணம் பற்றிய வாசகம் அருமை.

  புகைப்படங்கள் சூப்பர்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணம் பற்றிய வாசகமும் புகைப்படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. //இப்படி ஒரு வண்டியை எடுத்துக்கொண்டும் //

  எப்படி?!! ஒருபுகைப்படம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரு சக்கர வாகனங்கள் வாடகைக்குக் கிடைக்கின்றன ஸ்ரீராம். அப்படி இல்லையெனில் ஆட்டோக்கள் உண்டு - அவற்றிலும் பயணிக்கலாம்.

   நீக்கு
 3. கடற்கரையிலிருந்து பார்க்கும்போது தெரியும் சரிவுப்பாதை...    அருமை.

  சுவாரஸ்யமான பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிவுப் பாதை - ஸ்ரீராம், எனக்கும் மிகவும் பிடித்திருந்தது அப்பாதை.

   பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 4. படங்கள் அனைத்தும் ஸூப்பர் ஜி

  புல்புல் உங்களுக்கு பயந்து வங்கதேஷம் ஓடியது ஆச்சர்யமான விடயம் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   பயந்து ஓடிய புல்புல் - ஹாஹா... சும்மா சொல்லிக்கலாம் அப்படி!

   நீக்கு
 5. // ஆயிரத்திற்கும் மேலான புகைப்படங்கள் // இது ஒன்று போதும், கார்பின்ஸ் கோவ் கடற்கரை பற்றிய சிறப்பை அறிய முடிகிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த இடமும் சிறப்பு தான் என்றாலும் இதை விட இன்னும் அழகான கடற்கரைகள் அந்தமானில் உண்டு தனபாலன்.

   நீக்கு
 6. படங்களுடன் பகிர்ந்தவிதம் இரசித்துப் படிக்கவைத்தது..தொடர வாழ்த்துகளுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

   நீக்கு
 7. கடற்கரைப் படங்கள் அருமை.

  அலைகடலை எத்தனை நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டிருக்கலாம்.

  பஜ்ஜி படங்களும் விலையும் மிஸ்ஸிங்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடற்கரை - அலுக்காத விஷயம் தான் நெல்லைத் தமிழன்.

   பஜ்ஜி - படங்கள் எடுக்கவில்லை! விலை - ஒரு ப்ளேட் பஜ்ஜி ரூபாய் 40/- மட்டும் - இரண்டு மிளகாய் பஜ்ஜி!

   நீக்கு
 8. //குப்பைகளை உள்ளே இழுத்துச் செல்வதும், வெளியே தள்ளுவதுமாக போராடிக் கொண்டே இருக்கிறாள்//

  எப்போது இந்த போராட்டம் குறையுமோ! மக்கள் குப்பைகளை குப்பைகூடைகளில் போட பழக வேண்டும். அதுவும் சுற்றுலாதலங்களில் குப்பை போடுபவர்களுக்கு தண்டனை என்றால் பயம் இருக்கும்.

  புகைப்படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடலன்னையின் போராட்டம் என்றைக்குக் குறையுமோ? மக்கள் திருந்தும் வரை இந்தப் போராட்டம் குறையப் போவதில்லை கோமதிம்மா...

   தண்டனை - இங்கே தண்டனை சரியான விதத்தில் இல்லை என்பது பெரும் சோகம் தான்.

   புகைப்படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

   நீக்கு
 9. தங்களின் படங்களும் பகிர்வும் ஒருமுறையேனும் இவ்விடத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகின்றன ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயம் பார்க்க வேண்டிய இடம் கரந்தை ஜெயக்குமார் ஐயா. முடிந்த போது சென்று வாருங்கள்.

   நீக்கு
 10. நேரம் கிடைக்கும்போது முந்தைய பதிவுகளை படிச்சிக்குறேன்.

  அந்தமானுக்கு போகனும்ன்னு ஒரு ஆவல் உண்டு. அதை இந்த பதிவு எனக்கு நினைவூட்டுது. படங்கள் அனைத்தும் அழகு.

  மண் அரித்த தென்னை என்னமோ நமக்கு பாடம் உணர்த்துற மாதிரி இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேரம் கிடைக்கும்போது முந்தைய பதிவுகளும் படியுங்கள் ராஜி.

   உங்கள் அந்தமான் ஆவல் விரைவில் நிறைவேறட்டும். படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   மண் அரித்த தென்னை - உண்மை - சில விஷயங்கள் நமக்கு பாடம் கற்றுத் தருபவை.

   நீக்கு
 11. கடலில் இருந்து பாதை மிகுந்த அழகு.
  இயற்கையை சீரழிப்போரால் கவலை.
  இங்கும் இதே நிலைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயற்கையை சீரழிப்போரால் கவலை - எங்கேயும் இதே நிலை தான் மாதேவி.

   கடலிலிருந்து பாதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
  2. அன்பு வெங்கட்,
   கடலும் காட்சிகளும் மிகவும் அருமை. அலுக்காத
   அலைகள். நாமும் போராடிக் கொண்டிருக்கிறொம்.
   நமக்கு நம் வாழ்க்கையில் கிடைக்கும்
   தடைகளுக்கும் இந்தக் கடலுக்கு கிடைக்கும் குப்பைகளுக்கும்
   எத்தனை வித்யாசம்.
   அது கர்ம்யோகி.
   கடவுள் விதித்த வழி இயங்கிக் கொண்டிருக்கிறது.
   நாம் தான் முட்டி மோதி வழி தெரியாமல்
   திகைக்கிறோம்.

   நீக்கு
  3. கடலோரக் கவிதைகளாக மலர்ந்திருக்கும் படங்கள் அத்தனையும் மனத்தை
   அள்ளுகின்றன.
   பயணங்களில் மனைவியுடன் செல்வது எங்க வீட்டுக்காரருக்கும்
   கொஞ்சம் கஷ்டம் தான். குழந்தைகள் தேவைக்காக
   நிறைய இடங்களில் நிற்க வேண்டி இருக்கும்.

   ஆனால் அதிசயம் என்ன என்றால்,
   குழந்தைகள் வேறிடங்களுக்குச் சென்ற பிறகு,
   நாங்கள் பெரும்பாலும் மௌனமாகவே பயணித்தோம்.:)

   நீக்கு
  4. கடல் ஒரு கர்மயோகி - உண்மை வல்லிம்மா... எதற்கும் கவலையில்லாமல் உழைத்துக் கொண்டே இருக்கிறாள் கடலன்னை.

   நீக்கு
  5. கடலோரக் கவிதைகளாக மலர்ந்திருக்கும் படங்கள் - மகிழ்ச்சி வல்லிம்மா...

   நீக்கு
 12. அந்தமானுக்கு இன்னொரு முகம் இருப்பதும் நல்லதுக்காகத் தான். நீங்களும் செமையான க்ளிக்கிட்டீங்களா, கடற்கரைக்குச் செல்லும் அந்த வளைந்த சாலை கண்ணிலேயே நிக்கறது.

  கார்பின்'ஸ் கோவ் என்பது எவரது பெயரா, என்ன?

  நம் நெய்தல் நிலம் மாதிரி கடலும் கடல் சார்ந்த இடமுமாகத் தான் அந்தமான் இருக்கும் போலிருக்கு.

  தமிழ் மொழி புழக்கத்தில் இருப்பதால் சுற்றுலா செல்வதற்கும் செள்கரியமாகத் தான் இருக்கும்.
  ஒரு தடவை அந்தமானைப்போய்ப் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆசையைக் கிளப்பியிருக்கிறாது உங்கள் பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வளைந்த சாலை கண்ணிலேயே நிற்கிறது - உண்மை ஜீவி ஐயா.

   கடலும் கடல் சார்ந்த இடம் - உண்மை தான் ஐயா. தீவுகள் தானே அதனால் எங்கெங்கும் கடல்.

   பெயர்க்காரணம் - அங்கே இருந்த ஆங்கிலேயர் ஆட்சியாளர்களின் பெயராக இருக்கலாம் ஜீவி ஐயா.

   தமிழ் பேசுபவர்கள் அதிகம். நிச்சயம் அங்கே சென்று வருவதில் மொழிப் பிரச்சனை இருக்காது.

   முடிந்த போது அங்கே சுற்றுலாவாகச் சென்று வாருங்கள்.

   நீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  அந்தமானின் அழகான படங்கள்.. குறிப்பாக கடலன்னையின் படங்கள் அழகாக இருக்கின்றன கடலின் அழகில் எனக்கும் எப்போதும் அதை விட்டு அகலவே மனம் வராது. சென்னையில் இருந்த போது கடலை தரிசிக்கும் பாக்கியம் அடிக்கடி கிடைத்தது. இப்போது அறவே அது கிடைப்பதில்லை.

  அன்னை வடித்த சிற்பங்களை காண இயற்கையின் சக்தி எவ்வளவு சிறந்தது என்று வியக்கத் தோன்றுகிறது.

  அந்த மரத்துண்டு முதலை வடிவத்தில் உள்ளதை ரசித்தேன். இயற்கை வனப்பும், தென்னையின் அழகிய படங்களும் மனதை கவர்கிறது.

  அனைத்துப் படங்களும், உங்களின் அழகிய வர்ணனையும் எங்களையும் அந்தமானின் அழகை கண் குளிர காண வைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடலன்னையின் படங்கள் உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் மேடம்.

   மரத்துண்டு முதலை வடிவத்தில் - கற்பனைச் சிறகடிக்க ஏது தடை.

   படங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 14. கார்பின்’ஸ் கோவ் கடற்கரை... ஆஹா மிக அழகு ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இக்கடற்கரை அழகு தான் அனுப்ரேம் ஜி. உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....