சனி, 7 மார்ச், 2020

காஃபி வித் கிட்டு – கனிமொழி – பை நிறைய பட்டாணி – ப்ரேமம் - ஹோலி - சந்திப்பு



காஃபி வித் கிட்டு – பகுதி 57

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

முடிவுகளைத் தயங்காமல் எடுக்கும் திறன் நம்மிடம் இருந்தால் முன்னேற்றத்திற்கான வாயிற்கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

இந்த வாரத்தின் செய்தி –  கனிமொழி:

கனிமொழி என்றவுடன் அரசியல் என நினைத்து விடவேண்டாம்! இந்தக் கனிமொழி வேறு ஒருவர் – இறந்தும் வாழ்பவர் இந்த கனிமொழி! வாருங்கள் தினமலரில் வெளியான இந்தச் செய்தியைப் பார்க்கலாம்! கனிமொழி அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த வாரத்தின் பூங்கொத்து!

கனிமொழி

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த ஒய்வு பெற்ற அரசு ஊழியர் இளங்கோ என்பவரின் மகள். சிறந்த படிப்பாளி தொல்பொருள் துறையில் ஆர்வம் கொண்டவர் நேர்மையாக இருப்பதும் எளிமையாக வாழ்வதும் இவருக்கு பிடித்த விஷயம்.லஞ்சம் என்ற வார்த்தையைக் கூட வெறுப்பவர். தான் பிறந்த வீட்டிற்கும் ஊருக்கும் கவுரவத்தை தேடிக்கொடுத்தவர்.தஞ்சை தமிழ்ப் பல்கழகத்தில் கவுரவ பேராசிரியையாக வேலை பார்தது வந்தார்.கடந்த 27 ந்தேதி பணி முடித்து பேருந்தில் ஏறுவதற்காக ரோட்டை கடந்து வந்தவர் கார் மோதி படுகாயமடைந்தார்.

உடனடியாக தஞ்சையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் தீவிர சிகிச்சையும் வழங்கப்பட்டது ஆனால் உடல் நிலை தேறவில்லை மூளைச்சாவு நிலையை அடைந்தார். சோகம் கப்பிய மனதோடு விஷயத்தை உறவினர்களிடம் டாக்டர்கள் தெரியப்படுத்தினர் அந்த வேதனையிலும் கனிமொழியின் அண்ணன் சதிஷ்குமார் உள்ளீட்டோர் ஒரு முடிவு எடுத்தனர்.அந்த முடிவு கனிமொழியின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என்று. அதன்படி அவரது ஒரு சீறுநீரகம் தஞ்சைக்கும் இன்னோரு சீறுநீரகம் திருச்சிக்கும் இதயமும் நுரையீரலும் சென்னைக்கும் கல்லீரல் மதுரைக்கும் கண்கள் தஞ்சை பொது மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எப்போதும் தியாக சிந்தனையுடனேயே வளர்ந்த கனிமொழி தன் படிப்பால் பதவியால் ஆற்றலால் நாலு பேருக்கு இருந்து உதவி செய்வார் என்று எண்ணினோம் ஆனால் இறந்து ஏழு பேருக்கு உதவி செய்துள்ளார் என்ற அவரது உறவினர்கள் அனைவரது கண்களிலும் கண்ணீர்.

இந்த வாரத்தின் இசை – கேரளத்திலிருந்து:

ப்ரேமம் – இந்தப் படம் பற்றி நீங்கள் அனைவருமே அறிந்திருக்கக் கூடும்.  அப்படத்திலிருந்து ”ஆலுவா புழையுட தீரத்து” எனும் பாடல் இந்த வாரத்தின் ரசித்த பாடலாக… நீங்களும் கேட்டு ரசிக்க இதோ இங்கே!



சாலைக் காட்சி – பை நிறைய பட்டாணி…

தலைநகரின் பேருந்து நிறுத்தம் ஒன்று. அதன் அருகே சாலையின் ஓரத்திலே கீழே அமர்ந்திருக்கிறார் ஒருவர் – அவர் அருகே சில பல மூட்டை முடிச்சுகள். அழுக்கு படிந்த தலை – தண்ணீர் பார்த்தே பல மாதங்கள் ஆகியிருக்கும் உடல்! கிழிந்த உடைகள். தனியே சிரித்தபடி பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு என்ன பிரச்சனையோ? எதிரே ஒரு பெரிய பை நிறைய பச்சைப் பட்டாணி – தோலுடன். கூடவே வேரோடு எடுக்கப்பட்ட செடிகள் ஒரு கொத்தாக. அதில் இருக்கும் காய்களை எடுத்து ஒவ்வொன்றாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் அந்த மனிதர்.  நடுநடுவே பட்டாணியும் உள்ளே போய்க் கொண்டிருக்கிறது. பக்கத்தில் யாரும் வந்து விட்டால், அந்தச் செடிகளால் அடித்து விடுவேன் என்று காண்பித்து விரட்டுகிறார் – கூடவே – “எனக்கு மட்டும் தான்! உனக்கு தர மாட்டேன் போ!” என்று கத்துகிறார். பேருந்துக்காக காத்திருந்த சில நிமிடங்களில் ஒருவர் கூட அந்த மனிதர் பற்றி கவலைப்படவில்லை!

தனிமையும் யாருமில்லாத கொடுமையும் மனிதர்களை ரொம்பவே பாதித்து விடுகிறது – எந்தத் தாய் பெற்றெடுத்த மகனோ? தன் மகன் இப்படி கிடந்து அல்லாடுகிறான் என்பது அந்தத் தாய்க்கு தெரிந்தால் எத்தனை வேதனை?   விரைவில் அவருக்கு விடிவுகாலம் பிறக்கட்டும்…

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் – Fresh Cement, Bangladesh

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக பங்க்ளாதேஷிலிருந்து ஒரு விளம்பரம்.  வங்க மொழியில் இருந்தாலும் காட்சி வழி புரிந்து கொள்ள முடியும். தன் வீட்டில் வேலை செய்பவருக்கு வீட்டு உரிமையாளர் தரும் மரியாதை – மனதைத் தொட்டது - பாருங்களேன்.



சந்திப்பு – நெல்லைத் தமிழன்:

குஜராத், ஆக்ரா-மதுரா வழி தலைநகர் தில்லிக்கு வந்திருந்த நெல்லைத் தமிழன் அவர்களை இந்த வியாழன் சந்திக்க முடிந்தது. புதன் இரவு தில்லி வந்து சேர்ந்தவர் வியாழன் காலை லக்ஷ்மி நாராயண் மந்திர் என அழைக்கப்படும் பிர்லா மந்திர் வந்த போது தகவல் தர, வீட்டிலிருந்து புறப்பட்டு அவரைச் சந்தித்து சில நிமிடங்கள் உரையாடிக் கொண்டிருந்தோம்.  தலைநகர் வரும் பதிவுலக நண்பர்களை இப்படிச் சந்திப்பது மகிழ்ச்சியான விஷயம் – இப்படி நிறைய பேரை சந்தித்து விட்டேன் – சில பதிவர்களை சந்திக்க முடிவதில்லை – வாய்ப்பு வரும் போது நிச்சயம் சந்திக்கலாம்!  படம் எதுவும் நான் எடுக்கவில்லை! அவர் தனது அலைபேசியில் எடுத்திருக்கிறார் – என்றாலும் பொதுவாக அவரது படங்களை வெளியிடுவதில்லை என்பதால் எனக்கு அனுப்பி வைத்தாலும் இங்கே பகிர்ந்து இருக்க மாட்டேன்! :) இன் ஃபாக்ட் நானே இன்னும் அந்தப் படங்களை (பதிவு எழுதும் வரை!) பார்க்கவில்லை! தொடரட்டும் பதிவுலக நட்பும் சந்திப்புகளும்!

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

இதோ வரும் வெள்ளி ஹோலி பண்டிகை. இதே ஹோலி சமயத்தில் 2012-ஆம் வருடம் இதே நாளில் எழுதிய ஒரு பதிவு – ஹோலி சமயத்தில் Bபர்சானாவில் நடக்கும் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் பற்றி எழுதி இருக்கிறேன்! அந்தப் பதிவின் தலைப்பு “அடி வாங்கும் கணவர்கள்”  - ஹாஹா…

படிக்காதவர்கள் வசதிக்காக, அப்பதிவின்  சுட்டி கீழே…


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

30 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்.

    காப்பி வித் கிட்டு சுவையாக இருந்தது.
    நெல்லைத் தமிழனுடன் சந்திப்பு நிகழ்ந்தது மிக மிக மகிழ்ச்சி.
    காணொளி எனக்குப் புரியவில்லை.
    மீண்டும் எங்களுடைய காலை நேரம் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு சுவையாக இருந்தது என்றறிந்து மகிழ்ச்சி வல்லிம்மா..

      சந்திப்பு - சந்திக்க முடிந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சியே...

      காணொளி - பெரிய வீட்டினைக் கட்டிய உழைப்பாளி ஹசன் அந்த வீட்டுக்கு பெயர் பலகை வைக்க வேண்டும் என்று சொல்கிறார். பெயர் பலகை தயார் ஆன பிறகு ஹசனை அழைக்க, திறந்து பார்த்தால் வீட்டின் பெயர் “ஹசன் இல்லம்!” என்று இருக்கிறது. வீடு கட்ட உழைத்த உழைப்பாளியான ஹசனின் பெயரையே வீட்டிற்கு வைத்து விட்டார் வீட்டின் உரிமையாளர் - உழைப்பாளிக்கு மரியாதை தரும் விதமாக! இது தான் காணொளியின் சுருக்கம் வல்லிம்மா...

      நீக்கு
    2. அன்பு துரை ,மிக அவசியமான பதிவு.
      நம் உடல் ,உள்ள சுத்தத்தை மேன் படுத்தி,
      இறைவனை நம்பி இருப்போம்.
      இங்கே 60 வயதுக்கு மேற்பட்டோர், கூட்டம் நிறைந்த இடங்களுக்கு
      அதிகம் செல்ல வேண்டாம் என்று
      அறிவுறுத்தி வருகிறார்கள்.
      நம் பழைய வழக்கங்களை விடாமல்,வீட்டையும் மனதையும் சுத்தமாக வைத்து,
      சளி,இருமல் தொந்தரவுக்கு சரியான நேரத்தில் கவனிப்பு கொடுத்து
      இந்த நோய்த் தாக்குதலில் இருந்து வெளி வர
      வைத்தீஸ்வரனும், தன்வந்திரியும் நல் வழி காட்டட்டும்.
      மிக நன்றி மா.

      நீக்கு
    3. துரை செல்வராஜூ ஐயாவின் பதிவில் வந்திருக்கவேண்டிய கருத்துரை இங்கேயும் வந்திருக்கிறது போலும்.

      சில சமயங்களில் இப்படித்தான் ஆகிவிடுகிறது வல்லிம்மா!

      வைத்தீஸ்வரன் அனைவருக்கும் நல்லதே தரட்டும்.

      நீக்கு
  2. கனிமொழியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

    பொன்மொழியும் பொருத்தமானது.

    நெல்லையாரின் சந்திப்பு அறிந்து மகிழ்ச்சி அல்வா கொடுத்தாரா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனிமொழி - நல்லதே நடக்கட்டும்.

      பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நெல்லையாரின் சந்திப்பு - அல்வா தரவில்லை! ஹாஹா... சந்தித்ததோடு சரி! என்னாலும் நினைவுப் பரிசாக அவருக்கு எதையும் தர இயலவில்லை.

      நீக்கு
  3. தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் தங்கள் வலைத்தளம் உட்பட 12 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது காஃபி வித் கிட்டு – கனிமொழி – பை நிறைய பட்டாணி – ப்ரேமம் – ஹோலி – சந்திப்பு பதிவும் எமது தளத்தில் தன்னியக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களும் இணைக்கப்பட்டுள்ளன. உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    முக்கிய குறிப்பு: வாசகர்களின் ஆதரவின்றி எந்த இணையத் தளத்தையும் நடத்த முடியாது. அது போல அனைவரும் தங்கள் ஆதரவை எமது வலைத்தளத்துக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இல்லாவிட்டால் எமது திரட்டியும் மூடப்பட வேண்டிய நிலையையே எதிர்நோக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்மணத்திற்கு மாற்றாக வலை ஓலை - வாழ்த்துகளும். எனக்கான அறிமுகம் பெரிதாக ஒன்றும் இல்லை சிகரம் பாரதி. இருந்தாலும் எழுத முயற்சிக்கிறேன்.

      வலைத்தளத்திற்கான ஆதரவு என்றும் உண்டு. உங்கள் முயற்சி வெற்றி அடையட்டும்.

      நீக்கு
  4. கனிமொழி பற்றி :-

    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு...

    ஆதரவற்ற தனிமை, மிகவும் கொடுமை...

    சந்திப்பு மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனிமொழி - பொருத்தமான குறள் தனபாலன்.

      ஆதரவற்ற தனிமை - மிகவும் கொடுமை தான். யாருக்கும் வரக்கூடாத நிலை அது.

      சந்திப்பு - மகிழ்ச்சி தொடரட்டும்.

      நீக்கு
  5. உங்கள் பதிவு தனி ரகம் தான். அது தனி சுவையை - தனி ஈர்ப்பை தருகிறது. கனிமொழிகள் அதிகம் உருவாகட்டும் (தி.மு.க.வில் அல்ல).

    கவுரவம் - கௌரவம் - எது சரி???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கௌரவம் என்பதே சரி - வடமொழிச் சொல்லான ”கௌரவ்” என்பதை கௌரவம் ஆக்கி விட்டார்கள். ஆனால் தமிழில் எழுதும் போது கவுரவம் எனவும் எழுதுகிறார்கள். இதற்கான தமிழ் வார்த்தை “மதிப்பு” என்று சொல்லலாம் சிகரம் பாரதி.

      எனது பதிவுகள் தனி ஈர்ப்பு தருபவை என நீங்கள் பகிர்ந்ததில் மகிழ்ச்சி நண்பரே.

      கனிமொழிகள் உருவாகட்டும் - விபத்துகளே நடக்காமல் இருந்தால் இன்னும் மகிழ்ச்சி நண்பரே.

      நீக்கு
    2. உலக அதிசயமான கருத்து வெங்கட்டிடமிருந்து. இந்த வரியைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவார் என நினைத்தேன். ஹா ஹா ஹா

      நீக்கு
    3. கண்டுகொள்ளாமல் சென்று விடுவேன் என எதிர்பார்ப்பு - எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது நல்லது நெல்லைத் தமிழன்! எதிர்பார்ப்பு இருந்து அது நடக்காமல் போனால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்! ஹாஹா...

      நீக்கு
  6. கனிமொழி பற்றி படித்திருந்தேன். தருமி ஸாரின் மாணவி அவர். அவர் முதலில் பகிர்ந்திருந்துதான் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனிமொழி - தருமி சாரின் மாணவி. அவரது பதிவு நான் படிக்கவில்லை ஸ்ரீராம்.

      நீக்கு
  7. ப்ரேமம் பாடல் ஓகே. அதில் வரும் நாட்டியப்பாடலை மகன்கள் அடிக்கடி கேட்பார்கள்.

    நெல்லைத்தமிழன் உடனான சந்திப்பு சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரேமம் நாட்டியப் பாடல் - படத்தின் பாடல்கள் நானும் கேட்டு ரசித்ததுண்டு.

      நெல்லைத்தமிழன் உடனான சந்திப்பு - சந்திக்க முடிந்ததில் இருவருக்கும் மகிழ்ச்சியே ஸ்ரீராம்.

      நீக்கு
  8. கனிமொழி இறந்தும் வாழ்கிறார். அவரின் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்.
    தனிமையில் வாடும் அன்பருக்கு அன்பு செலுத்த யாராவது முன் வர வாழ்த்துக்கள்.
    காணொளிகள் அருமை.
    நெல்லைத்தமிழன் அவர்களை சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி.
    பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறந்தும் வாழும் கனிமொழி - உண்மை கோமதிம்மா...

      தனிமை - கொடுமையான விஷயம் - அதுவும் ஆதரவில்லா தனிமை கொடியது.

      காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      சந்திப்பில் எங்களுக்கும் மகிழ்ச்சி கோமதிம்மா...

      நீக்கு
  9. பதிவர்களின் சந்திப்பு மகிழ்வு அளிக்கிறது
    தொடரட்டும் இதுபோன்ற சந்திப்புகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவர் சந்திப்புகள் தொடரட்டும் - அதே தான் எனது விருப்பமும் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. பட்டாணி...மனதை நெகிழ வைத்துவிட்டது. நெல்லைத்தமிழனுடனான சந்திப்பு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டாணி - அவரைப் பார்த்த பிறகு அன்றைக்கு முழுவதும் நினைவில் வந்து கொண்டே இருந்தார் அந்த மனிதர்.

      சந்திப்பில் எங்களுக்கும் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. வாசகத்தையும் ரசித்த வாசகத்தையும் நானும் ரசித்தேன். கனிமொழி பற்றி செய்தித்தாள்களில் படித்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது. நீங்களும் எழுதியிருக்கிறீர்கள்.
    சாலையில் அமர்ந்திருந்தவரைப்பற்றி படித்தபோது மனதை பிசைந்தது. யாரோ, எவரோ, ஆனால் யாருமில்லாத இப்படிப்பட்ட நிலைமை எத்தனை கொடியது!

    பதிலளிநீக்கு
  12. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோ சாமிநாதன் மேடம்.

    ஆதரவில்லாத தனிமை ரொம்பவே கொடுமை தான். அவர் நினைவினை அகற்ற முடியவில்லை. அவர் சாலையில் அமர்ந்து பேசியபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தது மனதில் அப்படியே பதிந்து விட்டது மா....

    பதிலளிநீக்கு
  13. கனிமொழிபோன்றோர்கள என்றும் வாழ்கிறார்கள்.
    நெல்லை தமிழன் சந்திப்பு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் இல்லாவிட்டாலும் அவர் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும் என்பது உண்மை மாதேவி.

      சந்திப்பு - எங்கள் இருவருக்குமே மகிழ்ச்சி தான்.

      நீக்கு
  14. கதம்பம் ரசித்தேன். இப்போதுதான் வீடு வந்து சேர்ந்தேன்.

    கனிமொழி- தலைப்பைப் பார்த்ததும் வெங்கட் அரசியல் பக்கமே போக மாட்டாரேன்னு நினைத்தேன். என் எண்ணம் சரிதான்.

    சிலரைச் சந்திக்கும்போது மகிழ்ச்சி பெருகும். வெல்கட் அவர்களும் அதில் ஒருவர். பதிவரைச் சந்திக்கும்போது அவர் புதியவர் என்ற எண்ணமே தோன்றுவதில்லை. நெடுநாள் பழகிய நண்பர் என்றே மனதில் தோன்றும். சிரம்ம் பார்க்காமல் வந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பத்தினை ரசித்ததில் மகிழ்ச்சி.

      பெங்களூர் சென்று சேர்ந்தாச்சா? மகிழ்ச்சி.

      அரசியல் - நமக்கும் அதற்கும் அதிக தூரம் தான் நெல்லைத் தமிழன்.

      சிரமம் பார்க்காமல் - ஒரு சிரமமும் இல்லை நெல்லைத் தமிழன். வீட்டின் அருகே நீங்கள் வந்திருந்த போது பார்க்க ஒரு சிரமமும் இல்லை. உங்களுக்கும் நேரம் இல்லை - இருந்திருந்தால் இன்னும் சில இடங்களுக்கு உங்களுக்கு வழிகாட்டி இருப்பேன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....