புதன், 25 மார்ச், 2020

அந்தமானின் அழகு – போஸ் தீவான ராஸ்தீவுபோஸ் தீவான ராஸ் தீவில் கடற்கரை...

அந்தமானின் அழகு – பகுதி 11


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

நாம், நமது வாழ்க்கைப் பயணத்தில் மொழிகள் பல கற்றாலும் இறுதி வரை சிந்திப்பது என்னவோ நம் தாய் மொழியில் மட்டுமே…
கலங்கரை விளக்கம்...


நான் உன்னை பார்க்க மாட்டேன் போ...... இந்தப் போஸ் எப்படி இருக்கு? 

படகின் வழி பயணம் செய்து நாங்கள் முதலில் சென்ற தீவின் பெயர் ராஸ் தீவு. கடந்த 2018-ஆம் வருடத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் நினைவில் இந்த ராஸ் தீவினுடைய பெயர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு என, இந்திய அரசாங்கத்தினால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  இந்தத் தீவு ஆங்கிலேயர்கள் மற்றும் சில வருடங்கள் ஜப்பானியர்கள் வசம் இருந்த தீவு. ஜப்பானியர்கள் வசம் இந்தத் தீவு இருந்த போது சில நாட்கள் இங்கே சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் தங்கியிருந்தார்கள் என்பதால் இப்போது இந்தத் தீவு போஸ் தீவு என அழைக்கபடுகிறது.  இந்தத் தீவின் பரப்பளவு மிகக் குறைவானதே – இப்போது இங்கே யாரும் வசிப்பதில்லை என்றாலும் ஆங்கிலேயர்கள் இந்தத் தீவில் வசித்ததோடு, தங்களுடைய வசதிக்காக, தங்குமிடங்கள், வழிபாடு செய்ய தேவாலயம், அடுமனை (பேக்கரி), அச்சகம் போன்ற பலவும் இங்கே அமைத்து இருக்கிறார்கள். இந்த ராஸ்/போஸ் தீவிற்கே நாம் முதலில் பயணம் செய்கிறோம். தலைநகர் அந்தமானிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவு கடல் வழி பயணம் செய்து இந்தத் தீவுகளை அடைந்து விட முடியும்.


பாறைகளில் மோதும் கடலலை... வேர்கள் மூடிய கட்டிடங்களில் ஒன்று...

படகில் பத்து முதல் பதினைந்து நிமிடங்களில் நீங்கள் இந்தத் தீவினை அடைந்து விட முடியும்.  தீவுக்குள் காலாற நடந்து வந்தால் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் முழு தீவையும் நீங்கள் சுற்றி வந்து விட முடியும் – ஆனால் தீவு கொஞ்சம் மேடான பகுதிகளையும் பள்ளமான பகுதிகளையும் கொண்டது.  நடப்பதற்கு முடியாதவர்கள், நேரம் குறைவாக இருப்பவர்கள் இங்கே கிடைக்கும் பேட்டரி வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். படகிலிருந்து இறங்கி வெளியே வர தீவுகளில் இருக்கும் மான்களும், மயில்களும் நம்மை வரவேற்கின்றன – அவை சுதந்திரமாகச் சுற்றித் திரிந்து கொண்டிருக்க, நம்மைப் போல சுற்றுலாப் பயணிகள் அவற்றுக்கு இளநீர் குடித்த பிறகு கிடைக்கும் தேங்காய் வழுக்கைகளை (இளசான தேங்காய்) தருகிறார்கள் – அப்படித் தருவது தண்டனைக்குரிய விஷயம் என்றாலும்! நிறைய மான்களும் மயில்களும் தன்னிச்சையாகச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.


மரங்கள் அடர்ந்த தீவில்...


 மருட்சி என்பது இது தானோ?...

பேட்டரி வண்டிகளில் செல்ல ஆளொருவருக்கு ரூபாய் எண்பது மட்டும் – நீண்ட வரிசையில் காத்திருந்து தான் செல்ல வேண்டியிருந்தது – சிலர் அங்கேயும் இந்தியர்கள் என்பதை வரிசையில் நிற்காமல் முன்னே சென்று நிரூபித்தார்கள் – அவர்களிடம் சண்டை போட்டு பின்னே அனுப்பி, மற்றவர்களும் தாங்களும் இந்தியர்கள் என்பதை நிரூபித்தார்கள் – பேட்டரி வண்டியில் பாழடைந்து கிடைக்கும் ஆங்கிலேயர் காலத்து கட்டிடங்களையும், ஜப்பானியர் இங்கே இருந்த காலத்தில் அமைத்த பதுங்கு குழி (Bunker)-களையும் பார்த்தபடியே மேட்டுப்பாங்கான பகுதிக்குச் சென்று விட்டு விடுவார்கள். அங்கே உங்களுக்கு பதினைந்து முதல் இருபது நிமிட கால அவகாசம் உண்டு. சுமார் முன்னூறு மீட்டர் உயரத்தில் இருக்கும் மலைப்பாங்கான பகுதி – எண்ணிலடங்கா பெரிய பெரிய மரங்களும், தென்னை மரங்களும் வனம் போன்ற உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தும்.  பெரிய பெரிய கட்டிடங்களும், தேவாலயமும் இன்றைக்கு எந்தப் பயன்பாடும் இல்லாமல் நினைவுச் சின்னங்கள் போல நிற்கின்றன. இந்தத் தீவு தான் அந்தமான் தீவுகளின் நிர்வாகத் தலைநகராக இருந்தது. மரங்கள் விழுங்கிய கட்டிடங்கள்...


வேர்களால் பின்னப்பட்ட கட்டிடத் தூண்கள்...

கடைவீதி, அடுமனை, தேவாலயம், அதிகாரிகளுக்கான தங்குமிடம், சிப்பாய்களுக்கான தங்குமிடம் என அனைத்தும் பார்த்துப் பார்த்து அமைத்தார்கள். இங்கே மின்சாரத்திற்கான பவர் ஹவுஸ் வசதி, தண்ணீர் சுத்திகரிப்பு வசதி, மருத்துவமனை போன்ற பல வசதிகள் இருந்தன.  நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கிலேயர்கள் இங்கேயிருந்து தான் அந்தமான் தீவுகளின் அனைத்து விஷயங்களையும் செய்து வந்தார்கள்.  செல்லுலர் சிறைக்கான வேலைகள் நடப்பதற்கு முன்னர் கைதிகளாக அழைத்து வரப்பட்டவர்கள் இந்த ராஸ் தீவில் தான் வேலை செய்தார்கள்.  தீவுக்கு ராஸ் தீவு என்ற பெயர் வரக் காரணமாக இருந்தவர்  டேனியல் ராஸ் என்பவர் – இவர் ஒரு Marine Surveyor! இவர் பெயரில் தான் இந்த தீவு அழைக்கப்பட்டு வந்தது.  1941-ஆம் ஆண்டு இந்தப் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கூட ஆங்கிலேயர்கள் இங்கேயே தான் இருந்தார்கள்.  இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இந்தப் பகுதி ஜப்பானியர்கள் வசம் வந்தது – அந்த சமயத்தில் தான் இத்தீவினை விட்டு விலகினார்களாம்.  நம் நாட்டின் விடுதலைக்கு முன்னரே தீவு மீண்டும் ஆங்கிலேயர்கள் வசம் வந்தாலும் அங்கே தங்குவதில் அவர்கள் பெரிய ஈடுபாடு காண்பிக்கவில்லை.


இந்தப் பாப்பா குடிக்கிற ஜூஸ் எனக்கும் வேணும்...


நான் ஒரு குட்டிப் பாப்பா... என்னை படம் எடுக்க மாட்டியா?...உடம்ப ஒருத்தன் தொடறான்... ஒருத்தன் படம் பிடிக்கிறான்... நான் எதை கவனிக்க!

அவர்களால் கைவிடப்பட்ட இந்தத் தீவு கொஞ்சம் கொஞ்சமாக அழிவினைச் சந்தித்தது.  அங்கே இருந்த மரங்களின் வேர்கள் கட்டிடங்களை முழுவதுமாக அணைத்துக் கொண்டு பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்க, இன்றைக்கு அக்கட்டிடங்கள் அழிவின் சின்னங்களாக, இயற்கையின் பிடியில் இருப்பதைப் பார்க்க முடியும்.  பல கட்டிடங்கள் மீது மரம் வளர்ந்திருப்பது போலத் தோன்றும்.  பல வருடங்கள் இந்தியாவினை ஆண்டுவந்த ஆங்கிலேய சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ந்தது போலவே இக்கட்டிடங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மரங்களிடையே அழிந்து கொண்டிருக்கிறது.  இந்த இடத்தில் கட்டிடங்களைப் பார்க்கும்போது எப்படியெல்லாம் இருந்த இடங்கள் இன்றைக்கு இப்படி காட்சிப் பொருளாக இருக்கிறது என்பதை நினைக்காமல் இருக்க முடிவதில்லை.  நிறைய இடங்களை பார்த்தபடியே செல்லும்போது பேட்டரி வண்டியை ஓட்டும் வாகன ஓட்டி அந்த இடங்கள் பற்றிய வர்ணனனையும் செய்து கொண்டே போகிறார்.  அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டும், பயணித்தபடியே சில படங்களை எடுத்துக் கொண்டும் உச்சிக்குச் சென்று சேர்கிறோம். 


படகுகளில் விரையும் மக்கள்...


தீவுக்குள் ஒரு நடை போகலாம் வாங்க...


கட்டிடடத்தின் உள்ளேயா அல்லது வெளியேயா..

வண்டி எண் சொல்லி அழைப்போம், அதற்குள் நீங்கள் படிகள் வழி கீழே இறங்கிச் சென்றால் கடற்கரையும், அங்கே அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கமும் பார்த்து விட்டு வரலாம் என்று சொல்லி வண்டி ஓட்டி அடுத்த பயணிகளை அழைத்து வர கீழ் நோக்கி செல்ல, நாம் படிகள் வழி இறங்கி, ஒரு நீண்ட நடைபாதையில் கலங்கரை விளக்கம் நோக்கி நடக்கலாம்.  கடற்கரையும், கலங்கரை விளக்கமும் பார்த்து ரசிப்பதோடு, அந்தப் பகுதிகளில் இருக்கும் வெவ்வேறு மரங்கள், இயற்கைக் காட்சிகள் என பலவும் ரசித்துக் கொண்டு, ஆங்காங்கே படங்களும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து மீண்டும் படிகள் வழி மேலே ஏறி வர நமக்கான பேட்டரி வண்டி வந்து சேர்கிறது.  மீண்டும் சரிவான பாதையில் பயணம்.  படகுகள் வரும்வரை காத்திருந்த நேரத்தில் அங்கே விற்கப்படும் இளநீரை வாங்கி அருந்தலாம். முன்பே சொன்னது போல 30 முதல் 40 ரூபாய் வரை இளநீர் விலை – பெரிய அளவிலும், இளநீர் நிறைய இருக்கும்படியான இளநீர் இங்கே கிடைக்கிறது! ரொம்பவே சுவை.  ஒவ்வொரு இடத்திலும் இப்படியான இளநீர் வாங்கிக் குடித்துக் கொண்டே இருக்கலாம். எங்கெங்கும் வேர்கள்...


ஒரு வித்தியாசக் கோணத்தில்...

மான்கள், மயில்கள் ஆகியவையும், மனிதர்களோடு சகஜமாக அங்கே உலவிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி – அவையும் சுதந்திரமாக திரிய முடிகிறதே என்பதால் – மனிதர்கள் தான் அவற்றுக்குத் தேவையோ இல்லையோ இளநீர் குடித்தபிறகு தேங்காய்களை அவற்றுக்குக் கொடுக்கிறார்கள் – பசி இருந்தால் சாப்பிடும் இல்லையென்றால் வேண்டாம் போ என முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றுவிடும்.  உண்பதற்குக் கொடுப்பது போலவே இந்த மான்களோடு படம் எடுத்துக் கொள்ளவும் நிறைய போட்டி உண்டு – நிறைய மான்கள் இருப்பதால், பலரும் மான்களோடு படமும் காணொளியும் எடுத்து உடனுக்கு உடன் வலையேற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள் – ஆனால் பாவம் வலை ஏற்ற அந்தத் தீவில் சாத்தியமில்லை – அந்தமான் முழுவதுமே இணையம் வேலை செய்வது அரிது! படங்களையும் காணொளிகளையும் எடுத்துக் கொண்டு எங்களுக்கான படகு வர, நாங்கள் அங்கிருந்து அடுத்த தீவுகளை நோக்கி பயணித்தோம். அடுத்த தீவு என்ன, அங்கே என்ன செய்தோம் போன்ற தகவல்களை இந்தத் தொடரின் அடுத்த பகுதியில் சொல்கிறேன். 


அந்தப் பக்கம் என்ன இருக்கு?...நானும் நண்பரும் படகில்...

நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

43 கருத்துகள்:

 1. இன்றைய சிந்தனை  :  அது என்னவோ உண்மைதான்!

  அழகிய தீவு.  இயற்கை தனது திறமையைக் காட்டி இருக்கிறது.  சற்றே பயமும் வரும் போல...   நிறைய பேய்ப்படங்கள், சாகசப்படங்கள் எடுக்கலாம்.  எந்தக்கவலையும் இன்றி அங்கு வாழும் மான் மயிலுக்கு போர் அடிக்குமா, கொடுத்து வைத்தவையா?!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய சிந்தனை - உண்மை தான் ஸ்ரீராம்.

   திறமையைக் காட்டிய இயற்கை - ஆமாம் இயற்கை தன் திறமையைக் காண்பிக்க ஆரம்பித்தால் பயம் வரவே செய்யும். பேய்ப்படங்கள் - ஹாஹா...

   தினம் தினம் அங்கே சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் அதனால் அவை மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டும்.

   நீக்கு
 2. அந்தமானின் ராஸ் தீவு ,கொஞ்சம் வேறு மாதிரி இருக்கிறது. இப்படியா மரங்கள்
  இருக்கும். ராட்சச அளவாக இருக்கிறதே.
  கொஞ்சம் நின்றால் நம்மையே வளைத்துப் போடும்
  போல இருக்கிறது.
  ஒரு பயங்கர அழகு.
  மான்கள் மிக அழகு. இளனீர் படம் எடுக்கவில்லையா:)
  அந்தமானில் மானைப் பார்த்தாயிற்று.
  அடுத்த தீவுக்குப்
  போய்ப் பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் மா - அளவில் பெரிய மரங்கள். வேர்களே மரங்கள் போல தோன்றியது சில இடங்களில்.

   பயங்கர அழகு - இயற்கை...

   இளநீர் தனியாக படம் எடுக்கவில்லை மா...

   அந்தமானில் மானை பார்த்தாயிற்று - ஹாஹா... நல்ல ரைமிங்!

   அடுத்த தீவுக்கு விரைவில் - அடுத்த பதிவிலேயே போய்விடலாம் வல்லிம்மா...

   நீக்கு
 3. படங்கள் அழகாக வந்திருக்கின்றன. அதிலும் மான்கள் உங்களுக்கு என்று ஸ்பெஷல் போஸ் கொடுத்தது போல் உள்ளது. சப்புக்கொட்டிக் கொண்டு பாப்பாவிடம் ஜூஸ் கேட்கும் படம் அருமை. வேர்கள் முடிய இடிபாடுகள் பல சரித்திரம் சொல்கின்றன. Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரித்திரம் சொல்லும் இடிபாடுகள் - உண்மை ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  இன்று அந்தமானின் படங்கள் மிக அழகு. அந்த "மான்களின்" படங்களும் மிக அழகாக இருக்கின்றன. அனைத்து இடங்களையும் சுற்றும் மரத்தின் வேர்கள் கொஞ்சம் பயமுறுத்துகின்றன. பதிவை இன்னமும் முழுமையாக படித்து விட்டு பின் வருகிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

   பயமுறுத்தும் மரத்தின் வேர்கள் - உண்மை தான். குறிப்பாக வேர்களால் பிணைக்கப்பட்ட தூண்கள்.

   நீக்கு
 5. வேர்களின் படங்கள் அருமை ஜி
  விபரங்கள் பயனுள்ள தகவல்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   நீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விழுதுகள் தழுவியக் கட்டடங்களும் தூண்களும் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன

   நீக்கு
  2. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 7. படங்களும் வர்ணனைகளும் அருமை.

  மான்கள் அருகிலேயே படம் எடுத்துக்கொள்வது.... ஹா ஹா... எவனாவது முன் ஜென்ம எதிரி வந்தால் அந்த மான் என்ன செய்யும் என்று யோசிக்கிறேன்.

  வேர்களோடு கூடிய கட்டிடங்கள், மரங்கள் சூழ்ந்த ரம்யமான பாதை (ஹனிமூனுக்கு ஏற்ற இடமோ?) மிக அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களும் வர்ணனைகளும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   மான்கள் முன் ஜன்ம எதிரி வந்தால் - சில சமயம் முட்டுகின்றன - ஒரு வேளை அதற்குத் தெரிந்து விட்டது போலும்! :)

   ஹனிமூன் - அந்தமான் முழுவதுமே ஹனிமூன் சூழல் தான் நெல்லை - நிறைய புது மண ஜோடிகள்! அதை இப்போது கேட்டு ஒன்றும் பயன் இல்லை! ஹாஹா....

   நீக்கு
 8. மானோடு படங்கள். மிகவும் கவர்ந்துவிட்டன. உங்களின் புகைப்படக்கலை ரசனைக்கேற்ற படங்கள் எங்களுக்கு மன நிறைவைத் தருகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மான் படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நிறைய அருமையான இடங்கள் இங்கே உண்டு. பார்க்க வேண்டிய இடம்.

   நீக்கு
 9. //அடுமனை (பேக்கரி), //

  வாசித்ததும் நண்பர் நடன சபாபதி அவர்கள் டக்கென்று நினைவுக்கு வந்தார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுமனை - வார்த்தை எனக்கும் திரு நடனசபாபதி அவர்களை நினைவுபடுத்தியது ஜீவி ஐயா. முடிந்த வரை தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்துவதில் அவர் உறுதியாக இருக்கிறார். நல்ல விஷயம். என்னால் முடிவதில்லை.

   நீக்கு
 10. படங்கள் அனைத்தும் அருமை ஜி... 'முன்பு எப்படி இருந்திருக்கும்' என்கிற உங்களின் நினைப்பு கூட மனதில் சட்டென வந்தது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் தனபாலன். இது போன்ற இடங்கள் அந்த நாட்களில் எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்து பார்க்காமல் இருக்க முடிவதில்லை.

   நீக்கு
 11. //இந்த ராஸ்/போஸ் தீவிற்கே..//

  ராஸை மறந்து விடலாம். நம்ம சுபாஷ் இங்கு தங்கியிருந்தார் என்பதினால் அவர் பெயர் மாற்றம் கொண்ட இந்த தீவை இனி போஸ் தீவு என்றே அழைப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராஸை மறந்து விடலாம் - லாம் ஜீவி ஐயா. இங்கே இன்னும் சிலர் பழைய பெயரில் அழைத்தாலும் பல இடங்களில் பெயர் மாற்றியே சொல்கிறார்கள்.

   நீக்கு
 12. //மருட்சி என்பது இது தானோ?.//

  எனக்கு மருட்சி தெரியவில்லை. அந்த நிதானப் பார்வை மனசில் பதிந்து போயிற்று. கொஞ்சம் நெருங்கி வந்தால் நாலு கால் பாய்ச்சலில் துள்ளல் ஓட்டம் தான் போலிருக்கு.. :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்சம் தயங்கி தயங்கி நின்று பார்க்கும் - ரொம்பவே கிட்டே நெருங்கினால் ஓட்டம் தான் ஜீவி ஐயா. நல்ல பொழுது போக்கு - இந்த மான்களைப் பார்த்துக் கொண்டு இருப்பது.

   நீக்கு
 13. வாவ்வ்வ் மான்குட்டியும், மரவேர்களும் பார்க்கப் பார்க்க அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் வழி உங்களுக்கும் சில இடங்களை சுற்றுக் காண்பிக்க முடிந்ததில் மகிழ்ச்சி அதிரா.

   நீக்கு
 14. கட்டடங்களும் அவற்றை சுற்றிக் கொண்ட மர வேற்கள், விழுதுகள் என்று... மனதை விட்டு அகலா காட்சிகள்..

  இந்த மாதிரியான தீவுகள் இப்படியே இருந்து விடுவது தான் அவற்றிற்கு அழகு போலத் தோன்றினாலும் -- அமெரிக்கர்கள் மாதிரி சுற்றுலாத் தல மேம்பாடுகளை கருத்தில் கொண்டு பேணி பாதுகாத்தால்
  எந்த வளம் இல்லை இத்திருநாட்டில் என்று தான் தோன்றுகிறது.

  //நானும் நண்பரும் படகில்...//

  அட! இது என்ன கூத்து?.. தொப்பி அணிந்தால் இப்படியா அடையாளமே தெரியாமல் போய் விடும்?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனதை விட்டு அகலாத காட்சிகள் - உண்மை தான் ஜீவி ஐயா. நேரில் பார்த்தபோது ஏற்பட்ட சலனங்கள் இன்னும் அதிகம்.

   சுற்றுலாத் தல மேம்பாடுகள் - இன்னும் சிறப்பாக இருக்கலாம் என்றாலும் முடிந்த வரை பாதுக்காத்து வருகிறார்கள் அந்தமான் நிர்வாகத்தினர்.

   தொப்பி அணிந்தால் அடையாளமே தெரியாமல் போய் விடுமா? ஹாஹா... இன்னும் சில படங்கள் இப்படி உண்டு ஜீவி ஐயா! இந்தப் படம் எனக்கும் பிடித்தது!

   நீக்கு
 15. வேர்கள் மூடிய கட்டிடங்கள், வாசல், ஜன்னல் மட்டும் மூடாமல் விட்டு வைத்து இருப்பது அழகு.
  பழைய மாயாஜால கதையில் மரங்களின் வேர்கள் மனிதனை சுற்றிக் கொள்ளும் நாமும் அங்கு சிறிது நேரம் இருந்தால் நம்மையும் சுற்றி இறுக்கி கொள்ளும் போல என்று அச்சம் தருகிறது.

  பழைய கட்டிடம் விழுந்து விடாமல் பாதுகாப்பது போலும் உள்ளது.

  படங்கள் எல்லாம் அழகு. "அந்தமானைப்பாருங்கள் அழகு "பாட்டு மீண்டும் நினைவுக்கு வருது அழகிய மான்களைப் பார்க்கும் போது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாயாஜால கதைகளில் வரும் மனிதனைச் சுற்றிக் கொள்ளும் வேர்கள் - வாவ்... அந்தக் கால கதைகள் நினைவுக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி கோமதிம்மா...

   படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 16. //மருட்சி என்பது இது தானோ?...//

  மருட்சியில் மானின் ரோமங்கள் சிலிர்த்து இருப்பது தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரோமங்கள் சிலிர்த்து இருப்பது போல! - இன்னும் கொஞ்சம் பக்கப் பார்வையில் எடுத்திருந்தால் தெரியலாம் கோமதிம்மா... இவ்வளவு பக்கத்தில் எடுக்கவே கொஞ்சம் பாடுபட வேண்டியிருந்தது.

   நீக்கு
 17. பாழ்பட்டு இருந்தாலும் அழகிய இடம்.

  பதிலளிநீக்கு
 18. மிக அழகான தீவு. அந்தக் கட்டிடங்கள் வேர் மூடி கொள்ளை அழகாய்க் காட்சி அளிக்கின்றன. அதிலும் மானின் கொஞ்சல் சான்ஸே இல்லை. அருமை வெங்கட் சகோ. என்ஜாய்.

  பதிலளிநீக்கு
 19. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை - மகிழ்ச்சி தேனம்மை சகோ.

  படங்களும் பதிவும் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் வருகை!

  பதிலளிநீக்கு
 20. புகைப்படங்கள் அருமை
  வழக்கம்போலவே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கஸ்தூரி ரெங்கன்.

   நீக்கு
 21. ராஸ் தீவு பற்றிய தகவல்கள் அனைத்தும் சிறப்பு ஜி. அந்த கலங்கரை விளக்கம் படம் அட்டகாசம். என்ன அழகுக் கடற்கரை. அந்த இடத்தில் கடல் அலை வந்து அந்தப் பாறைகளில் மோதிச் செல்லும் அழகு மிகவும் அழகாக இருந்திருக்குமே ரசித்துக் கொண்டே இருக்கலாம்...

  மரங்கள் வளர்ந்து அடைத்திருக்கும் அந்தக் கட்டிடம் செம அழகு. வித்தியாசமான கோணத்தில் நீங்கள் எடுத்திருக்கும் படங்கள் அந்த இரு இடைவெளிகள் அழகோ அழகு.

  மான்கள் வாவ் ...அந்தமானில் அந்த மானைப் பாருங்கள்!!! என்ன அழகு!!! மயில்கள் படம் இல்லையே...நம்முடம் சுற்றுவது சந்தோஷமாக இருக்கும்...

  இடம் உங்கள் வர்ணனையே சொல்கிறது மிக மிக அழகான இடம் என்று....எப்போது சான்ஸ் கிடைக்குமோ தெரியவில்லை பார்ப்போம்..

  வாசகம் அருமை ஜி...படங்கம் மிகவும் ரசித்தேன் ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் வழி சொல்லி இருக்கும் விஷயங்களும், பகிர்ந்த படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

   நீக்கு
 22. மான்கள் அருமை! மரவேர்கள் பின்னியிருக்கும் கட்டடங்களை நம்ம கம்போடியா பயணத்தில் பார்த்திருக்கோம். நீங்க சொல்லிப்போகும் விதம் அருமை..... ஒருக்கா போகத்தான் வேணும் போல....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கம்போடியா பயணம் - ஆமாம் - அந்த இடங்களை சமீபத்தில் மனோ சாமிநாதன் மேடம் கூட சமீபத்தில் எழுதி இருந்தார்.

   சொல்லிப் போகும் விதம் பிடித்ததில் மகிழ்ச்சி. முடிந்த போது ஒரு முறை சென்று வாருங்கள் துளசி டீச்சர்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....