வெள்ளி, 20 மார்ச், 2020

அந்தமானின் அழகு – கடல்வாழ் உயிரினங்கள் - காட்சியகம்


சிங்க மீன்....

அந்தமானின் அழகு – பகுதி 9
திமிங்கிலத்தின் எலும்புக்கூடு....

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, பயணம் பற்றிய நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

சாலைகளில் இருக்கும் பள்ளங்களைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அச்சாலையில் பயணிப்பதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள் – உங்கள் பயணம் இனிமையாகும்.

 

பவளப் பாறைகள் அருகே வசிக்கும் மீன் வகைகள்....

தீவுகளுக்குச் செல்லும் திட்டம் எங்களிடம் இருந்தாலும், இயற்கையிடம் வேறு திட்டம் இருந்ததால், தீவுக்கு படகுகள் இயங்குமா இயங்காதா என்பதில் குழப்பம். சிறிது நேர காத்திருப்பிற்குப் பின் வேறு இடத்திற்குச் செல்ல முடிவு எடுத்தார் எங்கள் பயண வழிகாட்டி – என்பதை சென்ற பகுதியின் இறுதியில் சொல்லி இருந்தேன்.  அப்படி வழிகாட்டி எங்களை அழைத்துச் சென்ற இடம், படகுத்துறையிலிருந்து வெகு அருகில் இருக்கும் ஒரு நீர் வாழ் காட்சியகம் (Acquarium) – மீன் வளத்துறை அமைத்திருக்கும் இந்த காட்சியகத்திற்கு தான் நாங்கள் சென்றோம்.  உள்ளே செல்லும் முன்னர் உங்களுக்கு ஒரு விஷயத்தினை தெளிவுபடுத்தி விடுகிறேன் – உள்ளே நிழற்படங்கள் எடுக்க அனுமதி இல்லை! ஆனால் அனுமதித்திருந்தால் பல கடல்வாழ் உயிரினங்களை படமாக எடுத்து உங்களுக்குக் காண்பித்திருப்பேன் – அந்த விதத்தில் காமிரா அனுமதிக்காதது ஒரு பெரிய இழப்பு தான்.  கூடவே இந்த காட்சியகத்திற்கு நுழைவுக் கட்டணம் உண்டு என்பதையும் சொல்லி விடுகிறேன் – அதிகமில்லை பத்து ரூபாய் மட்டுமே! கேமராவிற்கும் கட்டணம் வாங்கிக் கொண்டு அனுமதி தந்திருக்கலாம் – அத்தனை அழகான, விதம் விதமான கடல்வாழ் உயிரினங்களை பார்வைக்கு வைத்திருக்கிறார்கள் அங்கே.


Saw Fish....

ஆமைகள், Saw Fish, Shark, நண்டுகள், விதம் விதமான மீன்கள் உள்ளிட்ட 350-க்கும் அதிகமான கடல்வாழ் உயிரினங்கள், பவளப் பாறைகள், நத்தை ஓடுகள், உயிருள்ள சங்குகள் என பலவும் இங்கே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.  அதற்கான விளக்கங்களும் அங்கே எழுதி வைத்திருப்பதால் குழந்தைகளுடன் செல்பவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம் இந்த காட்சியகம்.  பெரியவர்களும் கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய பல தகவல்களை இந்த காட்சியகத்தில் தெரிந்து கொள்ள முடியும்.  நாங்களும் அங்கே பல விஷயங்களை படித்தும், பார்த்தும் தெரிந்து கொண்டோம்.  எத்தனை விதமான மீன்கள் – ஆங்கிலத்தில் எழுதியிருந்த பெயர்களில் சிலவற்றை உங்களுக்கும் பகிர்ந்து கொள்கிறேன் – Leatherbacks என அழைக்கப்படும் பெரிய ஆமைகள், Hawksbill என அழைக்கப்படும் கடல் ஆமைகள், Rabbitfish என அழைக்கப்படும் மீன்கள், பவளப் பாறைகள் அருகே வாழும் Reef fish, Mangrove Crabs என அழைக்கப்படும் சதுப்பு நில நண்டுகள் என பல உயிரினங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். 


பவளப் பாறைகளும் மீன்களும்...

ஒவ்வொரு உயிரினமும் உயிருடன் பார்க்கக் கிடைக்கின்ற இந்த காட்சியகத்தில் நின்று நிதானித்துப் பார்த்தால் சுமார் இரண்டு மணி நேரம் கூட இங்கே நீங்கள் பொழுது போக்கலாம்.  உயிரினங்கள் தவிர விதம் விதமான, சிறிய மற்றும் பெரிய பவளப் பாறைகள், சங்குகள் என பார்க்க வேண்டிய விஷயங்கள் நிறையவே இங்கே உண்டு.  கடலுக்கடியில் சென்று பார்க்க முடியாத விஷயங்களைக் கூட இந்தக் காட்சியகத்தில் சுலபமாக பார்த்து விடும் வகையில் அந்தமானின் மீன்வளத் துறையினர் அமைத்திருக்கிறார்கள்.  எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே வந்தோம்.  படம் எடுக்க முடியவில்லை என்பதில் குழுவினர் அனைவருக்குமே வருத்தம் உண்டு – அதிலும் குறிப்பாக நண்பர் ஒருவர் வீட்டிலேயே மீன் தொட்டி வைத்து வளர்க்கிறார் – அவருக்கு அந்த மீன்களை படம் எடுக்க முடியவில்லை என்பதோடு – அப்படியே சில மீன்களை வாங்கி எடுத்துக் கொண்டு வர முடியவில்லையே என்ற வருத்தமும் உண்டு! இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 1200 வகை கடல் வாழ் உயிரினங்கள் உண்டு என்கிறது அங்கே உள்ள ஒரு தகவல் பலகை. 


சங்கு - வாங்கினால் ரசீது வாங்குவது அவசியம்....

திங்கள், மாதத்தின்  இரண்டாம் சனிக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் இந்தக் காட்சியகம் திறந்திருக்காது.  மற்ற நாட்கள் அனைத்திலும் காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரையும், மதியம் 02.00 மணி முதல் மாலை 04.45 மணி வரையும் திறந்திருக்கிறது இந்தக் காட்சியகம்.  நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது இந்தக் காட்சியகம்.  நாங்களும் அங்கே பல விஷயங்களைத் தெரிந்து கொண்டு வெளியே வந்தோம். குழுவினரில் சிலர் உள்ளே பார்த்துக் கொண்டிருக்க, நாங்கள் வெளியே காத்திருந்தோம்.  காட்சியகத்தின் வெளியே ஒரு முழு நீள திமிங்கிலத்தின் எலும்புக் கூடும் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.  உள்ளேயும் வெளியேயும் நல்லதொரு சூழல்.  சிங்க மீன் என்று கூட ஒரு மீன் இருக்கிறது என்பதை அங்கே சென்ற போது தெரிந்து கொண்டேன்!  இன்னும் சில உயிரினங்களின் உருவங்களை, குறிப்பாக கடல் சிங்கம் என அழைக்கப்படும் உயிரினத்தின் உருவத்தினை கண்ணாடி குப்பிகளில் பதப்படுத்தி வைத்திருக்கிறார்கள். 


பவளத்தில் ஜப மாலை....

காட்சியகத்தின் வெளியிலேயே ஒரு கடையும் உண்டு. அங்கே சிப்பிகள், சங்குகள் மற்றும் கடலில் கிடைக்கும் பொருட்களிலிருந்து தயாரித்த கைவினைப் பொருட்கள், மாலைகள், காதணிகள் என பலதும் விற்கிறார்கள்.  அங்கே விற்பனை செய்து கொண்டிருந்த பெண்மணியும் தமிழர் தான்.  எங்கள் குழுவில் உள்ள சிலர் அங்கே பொருட்களை வாங்கிக் கொண்டார்கள்.  மாலைகள், காதணிகள் போன்றவற்றை சிப்பி, பவளம் என அனைத்திலும் செய்கிறார்கள்.  இங்கே ஒரு விஷயத்தினைச் சொல்ல வேண்டும் – அந்தமான் தீவுகளில் எந்தப் பொருட்களை வாங்கினாலும் – குறிப்பாக கடலிலிருந்து எடுக்கப்பட்டவை மூலம் செய்யப்பட்ட பொருட்கள், சங்குகள், சிப்பிகள் என எதை வாங்கினாலும் அதற்கான ரசீது வாங்கிக் கொள்வது மிக மிக அவசியம்.  ரசீது இல்லாமல் உங்களால் அப்பொருட்களை அந்தமானிலிருந்து வெளியே கொண்டு வர முடியாது – விமான நிலையத்தில் தீவிரமாக சோதனை செய்கிறார்கள் – ரசீது இல்லாத பொருட்களை அங்கேயே எடுத்துக் கொண்டு விடுவார்கள் என்பதால் கண்டிப்பாக ரசீது வாங்கிக் கொள்ள வேண்டியது அவசியம்.அந்தமான் பழங்குடியினரின் உருவச் சிலைகள் - பொம்மைகள்....

குழுவினர் அனைவரும் ஒன்று சேர, அடுத்தது என்ன என யோசித்தபோது, எங்கள் பயண வழிகாட்டி எங்கிருந்தோ ஓடி வந்து படகு ஓட்டம் ஆரம்பித்து விட்டது என்பதைச் சொல்லி எங்கள் குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.  மீன்வளத்துறையினரின் மீன் காட்சியகத்திலிருந்து பொடிநடையாக தீவுகளுக்கு அழைத்துச் செல்லும் படகுத் துறைக்கு வந்து சேர்ந்தோம்.  படகுகளுக்கான நுழைவுச் சீட்டு,  தீவுகளுக்குள் சென்ற பிறகு இருக்கும் பல வித நீர்நிலை விளையாட்டுக்களுக்கான சீட்டுகள் என அனைத்தையும் முதலிலேயே வாங்கிக் கொள்ள வேண்டும்.  குழுவினரில் யார் யார் எந்தெந்த விஷயங்களை – Scuba Diving, Snorkeling, Glass Boat Ride, Sea Walk போன்ற பல விஷயங்கள் தீவுகளில் உண்டு – அனைத்திற்கும் தனித்தனி கட்டணம் – இந்தக் கட்டணங்கள் பயண ஏற்பாட்டில் இல்லை என்பதையும் இங்கே நினைவு படுத்துகிறேன் – செய்யப் போகிறார்கள் என்பதைக் கேட்டுக் கொண்டோம்.


படகின் மாதிரி ஒன்று....சில்லென்று குல்ஃபி ரெடி... சாப்பிடலாமா?....

அதற்குத் தகுந்த மாதிரி முன்கட்டணம் செலுத்தி சீட்டுகளை வாங்கிக் கொண்டு படகுத் துறைக்கு நடந்தோம்.  எங்கள் குழுவினர்கள் அதிகம் என்பதால் இரண்டு படகுகளில் செல்ல வேண்டியிருந்தது – அனைவரும் ஒரே படகில் செல்ல முடியவில்லை -  முன்னரே சொல்லி இருந்த படி, படகுகள் அனைத்திற்கும் பெயர் உண்டு – எங்கள் குழுவினருக்கு இரண்டு படகுகள் – ஒன்றின் பெயர் மெரினா! முசாஃபிர் என்று கூட ஒரு படகு இருந்தது.  படகுத் துறை வரை சென்று அவரவர் குழுவினரோடு அவர்களுக்கான படகில் ஏறிக் கொள்ள வேண்டும்.  படகில் ஏறிக் கொண்டு செல்லப் போகும் இடம் என்ன, அந்தத் தீவின் பெயர் என்ன, அங்கே என்ன இருக்கிறது, அங்கே இருக்கும் Activities-க்கான கட்டணம் எவ்வளவு என்பது போன்ற விவரங்களை அடுத்த பதிவில் சொல்கிறேன். நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

32 கருத்துகள்:

 1. கடல்வாழ் உயிரினங்களின் அருங்காட்சிகம் அந்தமானின் தனித்தன்மை கொண்ட அருங்காட்சியகமாக உள்ளது. இதனைப் பார்த்தபோது தரங்கம்பாடி அருங்காட்சியகத்திற்கு நாங்கள் சென்ற நினைவு வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தரங்கம்பாடியின் அருங்காட்சியகம் மட்டுமல்ல, கடற்கரையும் பார்க்க வேண்டும் என எண்ணம் உண்டு. தமிழகத்தில் இருந்திருந்தாலும் பல இடங்களை என்னால் இன்னும் பார்க்க இயலவில்லை முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 2. பிரமிப்பான தகவல்கள் ஜி
  வாழ்வில் ஒருமுறையேனும் செல்லவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரமிப்பான தகவல்கள் தான் கில்லர்ஜி. முடிந்த போது நிச்சயம் சென்று வாருங்கள் கில்லர்ஜி.

   நீக்கு
 3. அனைத்தும் அசத்தல்... கில்லர்ஜி நினைத்தே நானும் நினைத்தேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன். உங்களால் முடிந்த போது நிச்சயம் சென்று வாருங்கள் தனபாலன்.

   நீக்கு
 4. படங்கள் எப்போதும்போல் நல்லா இருக்கு (பல கூகிளிட்டது என்றாலும்).

  குல்ஃபி - இதில் உபயோகப்படுத்தும் தண்ணீர் கெட்டுப்போயிருக்க வாய்ப்பு இருக்குமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் 2, 8, 9, 10 மற்றும் 11 நான் எடுத்தவை. மற்றவை இணையத்திலிருந்து...

   குல்ஃபி - சுத்தமாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை தான்! :) பலரும் சாப்பிட்டார்கள் - எங்கள் குழுவில் யாரும் சாப்பிடவில்லை நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 5. அருமையான தகவல்கள்
  அசத்தும் படங்கள்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் வழி சில விஷயங்களை உங்களுக்கும் சொல்ல முடிந்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 6. தகவல்கள் உபயோகமானவை..

  கடல்வாழ் உயிரின அருங்காட்சியத்திற்குள் கேமராவை ஏன் அனுமதிப்பதில்லை?!

  படங்கள் அருமை..

  எம்மாம்பெரிய சங்கு?!

  எனக்கொரு குல்ஃபி ஐஸ் கொடுத்தீங்கன்னா போய்க்கிட்டே இருப்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல இடங்களில் கேமரா அனுமதிப்பதில்லை ராஜி.

   படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   குல்ஃபி ஐஸ் தானே - வட மாநிலங்களில் சுவையான குல்ஃபி ஐஸ் கிடைக்கும் ராஜி. இங்கே வந்தால் நிறைய சாப்பிடலாம்!

   நீக்கு
 7. நீர் வாழ் காட்சியகம் (Acquarium) – எப்பொழுதும் கண்ணுக்கு விருந்தளிக்கும் இடங்கள் இவை..

  சங்கின் படம் வெகு அழகு ..

  Scuba Diving,..வைத்து வாசித்த நாவல் கண் தீண்டி உறைகிறேன் ..எனது all time favorite ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்ணுக்கு விருந்தளிக்கும் இடங்கள் - உண்மை தான் அனுப்ரேம் - எனக்கும் இவ்விடங்கள் சென்று பார்க்க விருப்பம் அதிகம்.

   சங்கின் படம் - இணையத்திலிருந்து.

   கண் தீண்டி உறைகிறேன் - சம்யுக்தா எழுதியது என இப்போது தான் பார்த்தேன். இணையத்தில் கிடைக்கிறதா என பார்க்கிறேன்.

   நீக்கு
 8. நேரில் பார்ததுபோல இருந்தது வர்ணனை.
  டுபாய்,சிங்கப்பூரில் அக்கோரியம் பார்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேரில் பார்த்தது போல - மகிழ்ச்சி மாதேவி.

   நானும் இன்னும் சில இடங்களில் பார்த்திருக்கிறேன்.

   நீக்கு
 9. யு.எஸ்.ஸில் இருக்கும் பொழுதெல்லாம் தடுக்கி விழுந்தால் Acquarium தான்.. பார்த்ததில் பரிதாபம் தான் மிஞ்சிப்போனது.

  நீர் வாழ் இனங்களுக்கு
  நீர் மேல் எழுத்து போலவான
  வாழ்க்கை தான்.
  எந்தப் பாவியின் வலையில்
  எந்தப் பொழுதில் மாட்டுவோமென்று
  பதைபதைப்பே பரிதாபமாயிற்று
  நடுக் கடலுக்குப் போனாலும்
  நிம்மதியில்லை; அங்கேயும்
  வலையே யமனின் பாசக்கயிறாய்
  யார் தந்த உரிமை இதுவென்று
  அவர் பேர் சொன்னால் தேவலை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்ததில் பரிதாபம் தான் - உண்மை! விலங்குகளை கூண்டில் அடைத்து வைப்பது பார்த்தாலும் இப்படியே பரிதாப உணர்வு தான் ஜீவி ஐயா. இயற்கையான சூழலில் இருந்தவற்றை இப்படி கூண்டுகளிலும், கண்ணாடிக் குடுவைகளுக்கும் அடைத்து வைப்பது பரிதாபம் தான்.

   ”யார் தந்த உரிமை இதுவென்று
   அவர் பேர் சொன்னால் தேவலை!”

   நல்ல கேள்வி - பதில் சொல்வதற்குதான் யாருமே இல்லை ஜீவி ஐயா.

   நீக்கு
 10. //1200 வகை கடல் வாழ் உயிரினங்கள் உண்டு என்கிறது அங்கே உள்ள ஒரு தகவல் பலகை. //

  அருய வகை கடல் வாழ் உயிரினங்களை பார்க்க முடியாமல் ஆக்கி விட்டார்களே படம் எடுக்க அனுமதிக்காமல்.

  பகிர்ந்த படங்கள், விவரங்கள் எல்லாம் அரும்.
  பவள ஜப மாலை அழகு. மாதிரி படகு அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம் எடுக்க அனுமதி தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் கோமதிம்மா... ஆனால் அனுமதிக்கவில்லையே!:(

   படங்கள், தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
  2. அந்தச் சிட்டுக்குருவிகள் போல நீங்களும் குடும்பத்துடன் சேரும் காலம் வரும்.
   நல்லது நடக்கட்டும்.
   உங்களைப் போன்ற அன்பு மனிதர்களை நம்பியே இந்த உலகம் சிட்டுக்குருவிகளின் சந்தோஷத்தோடு வாழ்கிறது.

   நீக்கு
  3. அன்பு மனிதர்களை நம்பியே இந்த உலகம்... உண்மை தான் வல்லிம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. விசிட் செய்ய வேண்டும் என்ற லிஸ்டில் இருக்கும் இடங்களில் அந்தமானுக்கு ஒன்று. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் மிகவும் உபயோகமானவை. படங்கள் அழகு. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் லிஸ்டில் அந்தமான் - மகிழ்ச்சி பானும்மா... முடிந்த போது நிச்சயம் சென்று வாருங்கள்.

   படங்களும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 12. ஃபிஸ் அக்குவாரியம் எனில் கண்கொள்ளாக் காட்சிதான், நாங்களும் கனடா ஃபிரான்ஸ் இல் எல்லாம் பார்த்தோம், இங்கும் பல பார்த்திட்டோம் அழகோ அழகு...

  அது உண்மைப்பவளமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல ஊர்களில் இந்த மாதிரி காட்சியகங்களைப் பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது அறிந்து மகிழ்ச்சி அதிரா... இந்தியாவின் சில ஊர்களில் நானும் பார்த்திருக்கிறேன். எத்தனை அழகு இல்லையா இவை. ஆண்டவனின் படைப்பில் எத்தனை எத்தனை அழகோவியங்கள்...

   பவளம் - அரசு காட்சியங்களில் உண்மையான பவளங்கள் கிடைக்கின்றன. இந்த படம் இணையத்தில் எடுத்தது.

   நீக்கு
 13. திமிங்கிலத்தின் எலும்புக்கூடு என்ற ஒன்றை நான் மதுரை மருத்துவக்கல்லூரி ஆண்டுவிழா கண்காட்சியில் பார்த்திருக்கிறேன்!
  அக்வேரியம் பற்றிய தகவல்கள் மிகவும் கவர்கின்றன.  நம் ஊர்களிலும் அவ்வளவு தகவல்களுடன் கூடிய காட்சியகங்களை அரசு அமைக்கலாம்.  ரசீதின் முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதுரை மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா கண்காட்சிகள் - இப்படியான கண்காட்சிகள் பல விஷயங்களை நமக்குச் சொல்லித் தருபவை தான் ஸ்ரீராம்.

   நம் ஊரிலும் இப்படியான காட்சியகங்கள் அமைக்கலாம் - லாம். கூடவே தற்போது இருக்கும் காட்சியகங்களையும் சரிவர பராமரிக்கவும் வேண்டும்.

   ரசீது ரொம்பவே முக்கியம் - சிலர் ரசீது இல்லாமல் வாங்கிக் கொண்டு வந்து, வாங்கிய பொருட்களை, கடலிலிருந்து சேகரித்த பொருட்களை இழந்ததை நேரில் பார்த்தேன்!

   நீக்கு
 14. கேமராவுக்கு அனுமதி இல்லை என்பது வருத்ததிற்குரியது. சிங்கப்பூரிலுள்ள இதுபோன்ற கடல்வாழ் உயிரன அருங்காட்சியத்திற்கு சென்றிருக்கிறேன். வியக்க வைக்கும் வேறொரு உலகம் அது. தகவல்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அனுமதி இல்லை என்ற உடனேயே நமக்கு சுரத்து இறங்கி விடுகிறது! வியக்க வைக்கும் வேறொரு உலகம் தான் - நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 15. Rabbit Fish, Lion Fish இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. பவளப்பாறைகளை கண்ணாடி பாட்டம் இருக்கும் படகில் போய்ப் பார்த்திருக்கோம், நம் ஃபிஜி வாழ்க்கையில்!

  பவளமாலைகள் எல்லாம் ஒரிஜினல்தானே ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பவளப் பாறைகள் - ரொம்பவே அழகு தான். இன்னும் சில நாடுகளில் கூட இந்தமாதிரி படகுகள் மூலம் பவளப் பாறைகள் பார்க்கும் வசதி இருக்கிறது.

   பவள மாலைகள் - அரசு நடத்த்தும் சாகரிகா கடைகளில் நல்ல பவளங்கள் கிடைக்கின்றன. மற்றவை எப்படி இருக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை துளசி டீச்சர்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....