புதன், 4 மார்ச், 2020

அந்தமானின் அழகு – அந்தமான் அழைக்கிறது…


அந்தமானின் அழகு - பகுதி 2

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, பயணம் பற்றி படித்ததில் பிடித்த ரசனையான விஷயத்துடன் ஆரம்பிக்கலாமா?

பயணங்கள் எத்தனை அழகானது என்பதை தீர்மானிப்பது பயணப்படும் சூழ்நிலைதான். நெரிசல் இல்லா பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் இருக்கை அமைந்துவிட்டால் பயணம் கசக்கவா செய்யும்? இனிமையான தென்றல்… கருமை சூழ்ந்த வானத்தில் ஒற்றை விளக்காய் நிலவு… மெல்லிசை ஒலியின் ஊஞ்சலாய் மிதந்து போகும் பேருந்து… தூக்கம் தழுவாத விழிகள்… இரைச்சல் இல்லாத அக்கம் பக்கம்… இருளிலும் நிழலாய் எதிர்புறத்தில் ஓடிக்கொண்டிருக்கும் மரங்கள்… காற்றோடு கலந்த சிறுதூறல்… கைகளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு தலை பதித்து, நினைத்துப் பார்த்து சிரிக்கும்படியான சில இனிய நினைவுகள்… இவை அனைத்தையும் ரசித்துக் கிறங்கும் கவித்துவமான மனது…

 
பயணத்தை எப்படி ரசித்து எழுதியிருக்கிறார் இதை எழுதியவர். எங்களின் அந்தமான் பயணம் ரசிக்கும்படியாக இருக்கப் போகிறதா இல்லை கஷ்டப் பட வைக்கப் போகிறதா என்பதை பார்க்கலாம் வாங்க. தொடரின் இரண்டாம் பகுதியை படிக்க ஆரம்பிக்கும் முன்னர் முதல் பகுதியை படிக்காதவர்கள் கீழே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!


அந்தமான் பயணத்தினை திட்டமிட்ட நாளிலிருந்தே குழுவிலிருந்த அத்தனை பேருமே பயணம் துவங்கப் போகும் நாளுக்காக – 7 நவம்பர் 2019 – காத்திருந்தோம்! காலை 05.30 மணிக்கு தலைநகர் தில்லியின் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு போர்ட் Bப்ளேயரின் வீர் சாவார்கர் விமான நிலையத்தினை 09.05 மணிக்கு சென்று சேரும் ஏர் இந்தியா AI 485 விமானத்தில் தான் எங்களுக்கான முன்பதிவு செய்திருந்தோம். காலை 03.30 மணிக்குள் விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்பதால் சிலர் முதல் நாளே கடைசி ஏர்போர்ட் மெட்ரோ வழி பயணிக்க, சிலர் காலையில் வாகனம் ஏற்பாடு செய்து கொண்டு புறப்பட்டார்கள்.  நானும் இரண்டு நண்பர்களின் குடும்பமும் ஒன்றாக ஒரு வாகனத்தினை ஏற்பாடு செய்து கொண்டு காலை 02.45 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டோம். பயணப் பதிவு செய்யும்போதே இருக்கை எண்களையும் தேர்ந்தெடுத்து இருந்தோம் – கட்டணம் ஏதுமின்றி. விமான நிலையத்தில் ஏர் இந்தியாவின் ஊழியர்கள் ரொம்பவே சாவதானமாக பணிபுரிந்து கொண்டிருந்தார்கள்.  Check-in செய்யவும், எங்களுக்கான Boarding Pass வாங்கவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.    


விமானத்திலிருந்து... 

ஏற்கனவே இருக்கைகளை தேர்ந்தெடுத்து இருந்தாலும், Check-in செய்யும் போது வேறு இருக்கை எண்களைக் கொடுத்தார்கள் – கேட்டால் – அதெல்லாம் அப்படித்தான் – என்ற பதில்! அதிலும் எனக்கு இரண்டு இருக்கைகள் – தில்லியிலிருந்து விசாகப்பட்டினம் வரை 5E, விசாகப்பட்டினத்திலிருந்து போர்ட் Bப்ளேயர் வரை 12D! ஒருவழியாக நீண்ட நேர காத்திருப்பிற்குப் பிறகு Boarding Pass பெற்றுக் கொண்டு Security Checks முடித்து உள்ளே சென்றேன்.  நேரம் ஆக ஆக, கொஞ்சம் பதட்டமானது – எங்கள் குழுவிலேயே நான் தான் கடைசி! மற்றவர்கள் அனைவரையும், என்னைப் பற்றி கவலை வேண்டாம் – என்னால் வர இயலவில்லை என்றால் நீங்களாவது உள்ளே சென்று பயணியுங்கள் என்று சொல்லி உள்ளே அனுப்பி வைத்தேன். ரொம்பவே மெதுவாக வேலை செய்த பணியாளர்களை மனதுக்குள் திட்டியபடி உள்ளே சென்ற பிறகு தான் தெரிந்தது 05.30 மணிக்கு பதிலாக விமானம் 06.30 மணிக்கு புறப்படும் என்பது! நல்ல வேளை தாமதமாக புறப்பட்டதும் ஒரு விதத்தில் நல்லதற்கே! விமான நிலையத்தில் காத்திருந்த போதும் சில பல நிழற்படங்கள் எடுத்துக் கொண்டும், கிண்டலும் கேலியுமாக பயணம் துவங்கியது.

விமானத்திற்குள் சென்று எனது இருக்கைக்குச் சென்றால் பக்கத்து இருக்கை இளைஞர் கையை உயர்த்தி “Excuse me… Are you alone? Can you please take 7D?” என்று கேட்க, வழக்கம் போல இருக்கை மாற்றும் விளையாட்டு துவங்கியதில் கடுப்பானேன். ஆனால் உயர்த்திய கை நபரிடமிருந்து முடைநாற்றம் வர, குளித்து எத்தனை நாள் ஆனதோ? வியர்வை மழையில் குளித்து அப்படியே வந்து விட்டாரோ என்னமோ? இந்த மாதிரி நாற்றத்துடன் பயணிப்பதற்கு இருக்கை மாற்றி அமர்வது மேல் என 7D-க்கு மாறி அமர்ந்தேன்.  இரவு ஒழுங்கான உறக்கம் இல்லாததால் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என கண்களை மூடி அமர்ந்திருந்த போது விமான ஊழியர் வந்து எழுப்பினார் – உணவு தருவதற்காகத் தான் – ஏர் இந்தியா விமானத்தில் தரும் உணவு அப்படி ஒன்றும் பிரமாதமாக இருப்பதில்லை – ஆனாலும் காலை உணவை முடித்துக் கொண்டாக வேண்டுமே!

நண்டு மாதிரி வடிவத்தில் ஒரு Bபன், வெண்ணை, மா (அதாங்க உப்புமா – உப்பு இல்லாததால் வெறும் ”மா”), சாம்பார் வடை, சூடும் இல்லாமல் பாலும் ஒழுங்கான அளவில் இல்லாமல் தண்ணீராக ஒரு காபி, இனிப்பு வகையில் ஆம் தஹி – Mango Flavoured Curd)! கொடுத்த உணவில் தயிர் மட்டுமே நல்ல சுவையாக இருந்தது – அதிலேயே இரண்டு கொடுத்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்கும் – இன்னுமொன்று கேட்டு வாங்கிச் சாப்பிட தயக்கம்! நம்ம என்னிக்கு கேட்டு இருக்கோம்? ஒரு வழியாக உணவுக் கடை முடிந்த பிறகு சற்றே உறக்கம். விமானம் விசாகப்பட்டினத்தில் தரையிறங்கியது. தில்லியிலிருந்து விசாகப்பட்டினம் வரை பயணித்தவர்கள் இறங்கிக் கொள்ள, விசாகப்பட்டினத்திலிருந்து போர்ட் Bப்ளேயர் வரை வருபவர்கள் ஏறிக் கொண்டார்கள்.  ஒரே இருக்கைக்கு இரண்டு பேருக்கு Boarding Pass கொடுத்திருந்தார்கள் – இப்படி ஒன்றிரண்டு இருக்கை அல்ல ஐந்தாறு இருக்கைகளுக்கு தந்திருந்தார்கள்! ஒரே குழப்பம். விமானப் பணியாளர்களை யாரைக் கேட்டாலும் ஒழுங்காக பதில் சொல்லவில்லை – “எங்க இடம் இருக்கோ அங்கே குந்துமே!” என்று சொல்லாத குறை!

இருக்கை எண் 7D-யிலிருந்து விசாகப்பட்டினத்திலிருந்து போர்ட் Bப்ளேயர் வரை எனக்காக ஒதுக்கப்பட்டிருந்த  இருக்கை எண் 12D-இல் அமர்ந்திருந்தேன். விமானம் இன்னும் புறப்படவில்லை.  பக்கத்து இருக்கைக்கு ஒரு இளைஞர் வந்து அமர்ந்தார்.  சில நொடிகளில் நான் எதிர்பார்த்த கேள்வி வந்தது! அதே தான் – ”Excuse me… Are you alone? Can you please take 28D?”  My wife is sitting there. We would like to be seated together!”  சரி கணவன் மனைவியை பிரித்து வைப்பானேன், மாற்றிக் கொள்வோம் என அங்கே சென்று பார்த்தால் – அந்த இருக்கைக்கு இரண்டு பேருக்கு Boarding Pass தந்திருக்க, “என் சீட், உன் சீட்” சண்டை நடந்து கொண்டிருந்தது. சண்டை எல்லாம் முடிந்த பிறகு நான் அங்கே வருகிறேன் எனச் சொல்லி 12D-இல் அமர்ந்து கொண்டேன் – நண்பர்கள் வேறு – ”உங்களுக்கென்ன ஜாலி தான் எத்தனை சீட் மாறி மாறி உட்கார முடிகிறது” என்று கிண்டல் செய்ய, “போங்கய்யா, நான் சீட் எல்லாம் மாற மாட்டேன் என நானும் அடம் பிடிக்க வேண்டியிருந்தது. ஒரு வழியாக 12F-ல் இருந்தவர் மாறி அமர்ந்து கொண்டார். அவரும் அந்த இளைஞரின் உறவினர் என்பது பிறகு தான் தெரிந்தது! அவரை மாற்றி உட்காரச் சொல்லாமல் என்னை மாறி உட்காரச் சொன்னது ஏனோ? நம்மள பார்த்தாலே சீட் மாறி உட்காரச் சொல்லத் தோணும் போல! முகத்திலேயே எழுதி ஒட்டி இருக்கோ என்னமோ?

ஒரு வழியாக பயணிகள் குழப்பம் தீர்ந்து அவரவர் இருக்கையில் அமர, விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கடமையே என மீண்டும் அனைவருக்கும் சிற்றுண்டி – ப்ரெட் சாண்ட்விச், போராடித் திறக்க வேண்டிய சாஸ் பௌச் மற்றும் ராம்தேவ் பாபாவின் பதஞ்சலி மாம்பழச்சாறு! நடுநடுவே விமானப் பாதையில் அதிக அளவில் Turbulance! சரளைக்கல் பாதையில் மாட்டுவண்டியில் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது – விமானத்தில்! அந்தக் குலுக்கல் குழுவில் பயணித்த நண்பரின் மகனை ஏதோ செய்து விட இருக்கையிலிருந்து எழுந்தவர் தடுமாறி கீழே விழுந்து விட்டார் – கீழே உட்கார்ந்தவர் சமாளித்து இருக்கையில் அமர்ந்து கொண்டார் – அவரே மருத்துவர் என்றாலும் அவருக்கு அனைவரும் சரமாரியாக மருந்துகளைச் சொன்னார்கள்! சிறிது நேரம் உறங்கினால் சரியாகும் என அவர் உறங்க, வேறு பிரச்சனைகள் ஏதுமின்றி போர் Bப்ளேயரின் வீர் சாவர்கர் விமான நிலையத்தில் ஏர் இந்தியாவின் AI 485 தரையிறங்கியபோது காலை 10.50 மணி!  ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமான தாமதம்!


அதோ அந்தமான் தீவுகளில் ஒன்று...
விமானம் தரையிறங்குமுன்...

Better Late than Never! என்று எங்களுக்கு நாங்களே சமாதானம் சொல்லிக் கொண்டு விமானத்திலிருந்து வெளியே வந்தோம். எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு பயண ஏற்பாடு செய்த சுமந்த் அவர்களை அழைத்தோம். எங்களுக்கான வண்டிகள் காத்திருப்பதைச் சொல்லி, காத்திருந்தவரின் பெயரையும் அலைபேசி எண்ணையும் தந்தார்.  காத்திருந்தது யார்? எங்கே சென்றோம், அடுத்தது என்ன செய்தோம் என்பதையெல்லாம் வரும் பதிவில் சொல்கிறேன் – சரியா?  நண்பர்களே, இந்த நாளின் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

18 கருத்துகள்:

  1. இதுபோன்ற நிர்வாகச் சீர்கேடுகள் நம் பயண மகிழ்வினை மட்டுப்படுத்தி விடுவதுண்டு..எழுதிய விதத்தில் நாங்களும் சிரமத்தை உணரமுடிந்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிர்வாகச் சீர்கேடுகள் - அதே தான் ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. மறக்க முடியாத பயணம் தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பயண அனுபவம் கொஞ்சம் கஷ்டமாக இருந்து இருக்கு போலவே!
    தனியாக பயணம் செய்தால் சீட் மாற்றும் கஷ்டங்களும் உண்டு பயணத்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் இப்படியாகிவிடுவதுண்டு கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வடிவேலு வாய்ஸில்! மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நல்ல ஆரம்பம்.தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து படிக்க இருப்பதில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. சீட் மாற்றித் தரக் கோருபவர்கள் மிக அத்தியாவசியம் என்றால் மட்டுமே கேட்க வேண்டுமென நினைப்பதில்லை.

    பயண அனுபவங்கள் தொடரட்டும். தொடருகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்தியாவசியம் என்றால் பரவாயில்லை. ஆனால் People take things for granted! அது தான் பிரச்சனையே ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. சில சமயங்களில் ஆரம்பம் சிரமமாக இருந்தாலும் போகப் போக சுகமே!

      இப்படியும் சில அனுபவங்கள் கிடைப்பது நல்லதே மாதேவி.

      நீக்கு
  8. முடை நாற்றம் பற்றி வாசித்த தருணத்தில் என்னையறியாமல் முகம் சுளித்தேன். ஏர் இந்தியா ஊழியர்களின் அலட்சியம் வாசிக்கும் பொழுதே வெகுண்டெழச் செய்கிறது. அந்த அளவுக்கு எழுத்தோடு ஒன்றிப் போகிற மாதிரி சுவாரஸ்யமாக எழுதியிருந்தீர்கள்.

    //நம்மள பார்த்தாலே சீட் மாறி உட்காரச் சொல்லத் தோணும் போல! முகத்திலேயே எழுதி ஒட்டி இருக்கோ என்னமோ?,,//

    ஹஹ்ஹஹஹா.. இந்த மாதிரி நகை உணர்வை மட்டும் தூவவில்லை என்றால் ஒருவித எரிச்சலோடையே இந்தப் பகுதியை வாசித்து முடித்திருப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடை நாற்றம் - ரொம்பவே கொடுமை ஜீவி ஐயா.

      ஏர் இந்தியா ஊழியர்கள் - அவர்களுக்குப் பிரச்சனைகள் - சம்பள நிலுவை, கேள்விக்குறியாக இருக்கும் எதிர்காலம் என பல பிரச்சனைகள் - இருந்தாலும் வேலையில் கவனம் செலுத்தாமல் இருப்பது எரிச்சலையே தருகிறது. இந்தப் பயணத்திற்குப் பிறகும் சில ஏர் இந்தியா பயணங்கள் உண்டு - அப்போதும் இதே மந்தம் தான் அங்கே.

      எழுதி ஒட்டி இருக்கோ என்னமோ? - ஹாஹா... நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு போக வேண்டியிருக்கிறது! எரிச்சல் வந்தாலும் பெரும்பாலும் எவரிடமும் சண்டை போடுவதில்லை.

      பதிவில் ஆங்காங்கே இருக்கும் சில வரிகள் உங்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தாமல் இருந்ததில் மகிழ்ச்சி ஜீவி ஐயா.

      நீக்கு
  9. பதில்கள்
    1. ஆனால் பேரிடர் காலங்களில் உதவுவது ஏர் இந்தியா மட்டுமே.

      நலமே விளையட்டும். நல்லதே நடக்கட்டும் மலையப்பன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....