திங்கள், 30 மார்ச், 2020

அந்தமானின் அழகு – நீர் விளையாட்டுகள் – ஸ்னார்க்ளிங் - நார்த் பே தீவு

அந்தமானின் அழகு – பகுதி 13அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

கடல் பயணம் ஒரு சாகச பயணம். நீல வானம். நிசப்தமான இரவு. கடல் அலையின் நடுவினிலே – கற்பனை குதிரை. தரை தட்டும் வரை தொடரும் பயணம்.

நார்த் Bபே தீவில் கண்ணாடி படகில் பயணம் செய்து திரும்பிய பிறகு எங்களில் சிலர் மட்டும் ஸ்னார்க்ளிங்க் செய்ய முடிவு செய்தோம்.  ஸ்கூபா டைவிங் செய்ய அனுமதி எங்களுக்குக் கிடைக்காததில் கொஞ்சமல்ல நிறையவே வருத்தம் – தொப்பையும் தொந்தியும் பார்த்து ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும் எனக்கு என நினைத்துவிட்டார்கள்.  சிலர் ஐம்பதுக்கு மேலே என்றாலும் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னாலும் அனுமதிக்கவில்லை.  அதில் கொஞ்சம் அப்செட் ஆனார்கள் என்றாலும் கிடைக்காததை நினைத்து வருந்துவதை விட கிடைப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்வோம் என ஸ்னார்க்ளிங் செய்ய முடிவு செய்தோம்.  ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மாட்டிக் கொண்டு கடலுக்கு அடியில் செல்ல முடியவில்லை என்றாலும், முகத்தில் பூதக்கண்ணாடி மாட்டிக் கொண்டு தண்ணீருக்குள் முகத்தை வைத்துக் கொண்டு கடலுக்கு மேல் தலைகுப்புற படுத்துக் கொண்டு மிதந்தபடியே (இடுப்பில் ரப்பர் வளையங்கள் உண்டு என்பதால் சுலபமாக மிதக்கலாம்) கடலுக்குள் இருக்கும் பல விஷயங்களை பார்த்து ரசிக்க ஏதுவாக இருக்கும் ஒரு Activity இந்த Snorkeling.படகுத்துறையில் இந்த Activity-க்காக பணம் கட்டவில்லை என்றால் இங்கேயும் பணம் கட்டி நீங்கள் பங்கு பெறலாம். கட்டணம் கட்டிய பின்னர், உங்கள் பெயர், தொடர்பு எண், அடையாள அட்டை எண் போன்றவற்றை அதற்கான பட்டியலில் சேர்த்து கடலுக்குள் சென்று காத்திருக்க வேண்டும்.  ஸ்னார்க்ளிங்க் செய்பவர்களை கடலுக்குள் அழைத்துச் செல்ல பத்து பதினைந்து பேர் இங்கே இருக்கிறார்கள்.  அவர்களில் ஒருவர் உங்களை கடலுக்குள் அழைத்துச் செல்வார்.  கடலுக்குள் இறங்கி கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருக்கும் – ஏனெனில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகம்! சிலர் பாதியிலேயே திரும்பி வந்து விடுவார்கள். பயம் தான் காரணம்.  உங்களை வழிநடத்திச் செல்லும் நபர் வந்தவுடன் உங்கள் தலைவழியே காற்றடைத்த ரப்பர் வளையத்தினை மாட்டி இடுப்புப் பகுதியில் வைத்துக் கொள்ள வேண்டும் – அந்த அளவுக்கு நாம் நீரில் இருப்போம். முகத்தில் பூதக் கண்ணாடி கொண்டு மூடி அதனை தலையோடு சேர்த்து Strap மூலம் கட்டி விடுவார்கள் – சாதாரணமாக மூச்சு விடலாம் – ஸ்வாசிப்பதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது – முகமூடி மாதிரி இருக்கும் இந்த கவசத்துடன் ஒரு குழாய் இணைக்கப்பட்டிருக்க, அது தண்ணீரின் மேற்பரப்பில் இருக்கும்! அதனால் ஸ்வாசிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.ரப்பர் வளையம், முகக் கவசம் ஆகியவற்றை அணிந்து கொண்ட பிறகு கால்களை மேலே தூக்கி தண்ணீரின் அளவிற்கு வைத்துக் கொண்டு கைகளையும் முன்னே நீட்டிக் கொண்டு – அப்படியே தலைகுப்புற படுத்துக் கொள்ள வேண்டியது தான் உங்கள் வேலை – மிதக்கும் உங்களை – உடலை லேசாக வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு – உங்கள் கைகளில் ஒன்றை பிடித்துக் கொண்ட படியே உங்கள் வழிகாட்டி தண்ணீருக்குள் அழைத்துச் செல்வார்.  எங்கே அழைத்துச் செல்வார் என்றால், பவளப் பாறைகள் அதிகம் இருக்கும் பகுதிக்கு! கடல் அலைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்க, அதை எதிர்கொண்டு ஒற்றைக் கையால் நீந்தி, மற்ற கையால் உங்களையும் அழைத்துக் கொண்டு அவர் செல்வது எவ்வளவு கடினம் என்று உங்களுக்குப் புரியும்.  அது தான் அவர்களுக்கு அன்றாடப் பிழைப்பு.  ஒவ்வொரு முறையும் இப்படிச் சென்று வர வேண்டும் – கடல் அன்னையின் அருளை வேண்டியபடியே சென்று வர வேண்டும் – நடுநடுவே தாகம் எடுத்தால், ஒருவருக்கொருவர் தண்ணீர் பாட்டில்களிலிருந்து கொஞ்சமாக தண்ணீர் குடித்துக் கொள்கிறார்கள்.  இப்படியே உங்களை அழைத்துச் செல்கிறார் அந்த வழிகாட்டி. இத்தனை கஷ்டப்பட்டு அவரும் நம்மை மனநிறைவோடு அழைத்துச் செல்லும் இடம் பவளப் பாறைகள் இருக்கும் இடம்.  ஆஹா… ஒவ்வொரு இடமாக அவர் அழைத்துச் சென்று தண்ணீர் பரப்பிற்கு மேல் தலையைத் தூக்கி, அந்த இடத்தில் இருக்கும் பவளப் பாறையினைப் பற்றி நமக்கு சொல்வார் – அந்தப் பவளப் பாறையின் பெயர் என்ன, அங்கே இருக்கும் மீன்களின் பெயர் என்ன, சில பவளப் பாறைகள் விஷம் கொண்டவை, சில பவளப்பாறைகளின் மறையும் தன்மை – நன்கு விரிந்து இருக்கும் அவை நாம் விரலால் தொட அப்படியே மூடிக்கொள்கிறது! – இப்படி பல விஷயங்களை – அவ்வப்போது தலையைத் தூக்கி நமக்குச் சொல்லிக் கொண்டே இருப்பார். நாம் தலையைத் தூக்காமல் கீழே பார்த்துக் கொண்டே வரலாம். அப்படி உங்களுக்கு ஸ்வாசிப்பதில் சிரமம் இருந்தால் தலையைத் தூக்கி வெளியே பார்த்து, மீண்டும் தலையை நீர்பரப்பின் மேல் வைத்து உள்ளே கவனிக்கலாம்.  எனக்கு வந்த வழிகாட்டி நல்ல திடகாத்திரமானவர் – இல்லையென்றால் 85 கிலோ எடை கொண்ட என்னையும் தண்ணீருக்குள் சுலபமாக இழுத்துச் செல்ல முடியுமா என்ன? நடுநடுவே நீந்த வேண்டும், ஆங்காங்கே இருக்கும் பாறைகளின் மீது கால்வைத்து நடக்கவும் செய்கிறார் அந்த வழிகாட்டி.எத்தனை விதமான மீன்கள், பல வித வண்ணங்களில், பல வித வடிவங்களில் பார்க்க முடிந்தது – அதுவும் வெகு அருகில்.  ஒரு கையை அவர் பிடித்திருக்க, மறு கையால் அவற்றை தொடவும் முடிகிறது – நாம் தொடுவதற்குள் அவை விலகி ஓடிவிடுகின்றன என்றாலும் சிலவற்றை தொடமுடிந்தது.  நிறைய பவளப் பாறைகள் – பூ வடிவம், நக்ஷத்திர வடிவம், தூண் வடிவம், மூளை வடிவம், முட்கள் வடிவம் என பல வடிவங்களில் இந்த பவளப் பாறைகள் இருக்கின்றன.  பட்டாம்பூச்சி மீன், தேவதை மீன், கடல் பேனா என அழைக்கப்படும் உயிரினம், என பலவும் நமக்குக் காண்பித்துத் தருகிறார் அந்த வழிகாட்டி.  தொட்டவுடன் தன்னை மறைத்துக் கொள்ளும் ஒரு பவளப் பாறையைக் காண்பித்து, அதனைத் தொடச் சொல்ல, நானும் தொட்டேன் – தொட்ட மாத்திரத்தில் தன்னை மூடிக்கொண்டு அப்படியே ஒரு பாறை போல கிடந்தது அந்த பவளப்பாறை. அது ஒரு அற்புத அனுபவம்.  அந்த மாதிரி நிறைய விஷயங்கள் இந்த ஸ்னார்க்ளிங் செய்யும் போது கிடைத்தது. ஒரு இடத்தில் கூர்மையான ஒரு பவளப் பாறையைக் காண்பித்து அதன் விஷத் தன்மை பற்றி சொன்னதோடு அதனிடமிருந்து தள்ளியே அழைத்துச் சென்றார் என்னுடன் வந்த வழிகாட்டி.மிகவும் அற்புதமான இருபது நிமிடங்கள் அவை – வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவங்களைத் தந்தது இந்த ஸ்னார்க்ளிங்.  வழிகாட்டி நின்று நிதானித்து பல விஷயங்களை சொன்ன பிறகு நம்மை கைபிடித்து மீண்டும் கரைக்கு அழைத்து வருகிறார்.  அவருக்கு நன்றி சொல்லி, ரப்பர் வளையம், முகக் கவசம் ஆகியவற்றை கழற்றிக் கொடுத்து விட்டு கடலிலிருந்து வெளியே வருகிறோம்.  பக்கத்திலேயே சில அறைகள் உண்டு – பத்து ரூபாய் கொடுத்தால் ஒரு பக்கெட் நல்ல தண்ணீர் தருகிறார்கள். இன்னுமொரு பத்து ரூபாய் கொடுத்தால் அங்கே இருக்கும் மறைவிடத்தினை பயன்படுத்தலாம்! இருபது ரூபாயில் நல்ல தண்ணீரில் காக்காய் குளியல் குளித்து, உடைகளை மாற்றிக் கொண்டு வெளியே வரலாம்! கடற்கரையோரத்திலேயே நிறைய கடைகளும் உண்டு – உள்ளாடைகள் முதற்கொண்டு, ஷார்ட்ஸ், டி-ஷர்ட்ஸ் என அனைத்தும் விற்கிறார்கள் – நீங்கள் எடுத்துக் கொண்டு செல்லவில்லை என்றால் அங்கேயே வாங்கிக் கொள்ளலாம் – விலையும் அத்தனை அதிகமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.  அங்கேயே குளியல் முடித்து மாற்றுடை அணிந்து குழுவினர் கொண்டு வந்திருந்த நொறுக்குத் தீனிகளை ஒரு கை பார்த்தோம் – அந்த நேரத்திற்கு அது அத்தியாவசியத் தேவையாக இருந்தது. 


கடல் பேனா எனும் உயிரினம்...

பதிவினை முடிப்பதற்கு முன்னர் ஒரு கூடுதல் தகவல் - ஸ்னார்க்ளிங் செய்ய வேண்டுமென்றால் உங்களுக்கு நீச்சல் தெரிந்து இருக்க வேண்டியது அவசியமா என்று கேட்டால் - இல்லை என்பதே பதில். உங்களுக்கு நீச்சல் தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  தெரிந்திருந்தால் நல்லதே.  ஆனால் கடலில் நீச்சல் அடிக்க நிறைய பயிற்சி வேண்டும். நீச்சல் தெரிந்தாலும் வழிகாட்டி சொல்படி கேட்பதே நல்லது. சரி ஸ்னார்க்ளிங் பற்றி சொல்லியாயிற்று – அடுத்து என்ன?  வேறு விஷயங்கள் இங்கே உண்டா? போன்றவற்றை உங்களுக்குச் சொல்ல வேண்டும். அந்த விஷயங்கள் அடுத்த பகுதியாக! நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

பின்குறிப்பு: இந்தப் பகுதியில் இருக்கும் படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.  கேமரா/அலைபேசியை தண்ணீருக்குள் எடுத்துச் செல்ல முடியாதே! :)

36 கருத்துகள்:

 1. மிகவும் சுவாரஸ்யமான அனுபவமாக இருந்திருக்கும்.  த்ரில்லாகவும் இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லதொரு அனுபவம் தான் இந்த ஸ்னார்க்ளிங் ஸ்ரீராம். மறக்கமுடியாததும் கூட.

   நீக்கு
 2. பதில்கள்
  1. உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யாழ்பாவணன்.

   நீக்கு
 3. ஸ்னார்க்ளிங்க் அனுபவம் அருமை.
  த்ரில்லிங்காக இருந்திருக்கும்.
  ஸ்குபா டைவிங்க் என்றால் கையில் காமிராவுடன் போயிருக்கலாம்.
  ஆனால் அங்கே அனுமதி இல்லை என்று சொன்னீர்களோ.
  கடல் பேனா மிக அழகு. முற்காலத்திய
  இறகு பேனா மாதிரி இருக்கிறது.
  படம் எடுக்க முடியாத பட்சத்தில்
  கூகிள் படம் போடுவதில் தப்பில்லை.
  இனிய காலை வணக்கம் வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா.

   ஸ்கூபா டைவிங் செல்லும்போது Gகோப்ரோ போன்ற கேமரா எடுத்துச் செல்லலாம் - அதுவும் கொஞ்சம் கடினமே வல்லிம்மா...

   பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 4. ஏற்காடு இளங்கோ அவர்களின் புத்தகத்தையும் உ்களின் இப்பதிவுகளோடு சேர்த்து படித்துக்கொண்டிருக்கிரேன். மிகவும் சுவாரசியம். மேலும் திரில் கொடுக்க முதலைகள் இவ்விளையாட்டுகளஇன்போது வராதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அரவிந்த்.... உங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி அளித்தது.

   ஏற்காடு இளங்கோ அவர்களின் புத்தகத்தின் கூடவே எனது பதிவும் வாசிப்பது அறிந்து மகிழ்ச்சி. முதலைகள் அந்தமானில் உண்டு என்றாலும் அவற்றின் நடமாட்டம் இருந்த இடங்களுக்கு பொதுவாக வழிகாட்டிகள் அழைத்துச் செல்வதில்லை. ஓரிரு இடங்களில் இங்கே முதலைகள் நடமாட்டம் உண்டு என தகவல் சொன்னதோடு சரி.

   தொடர்ந்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அரவிந்த்.

   நீக்கு
 5. ஒவ்வொரு வரியும் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

  பதிலளிநீக்கு
 6. பதில்கள்
  1. கடல் பேனா பார்க்கும்போதே பரவசமாக இருக்கிறதல்லவா கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 7. வெங்கட் - நான் கேள்விப்பட்டவரையில், ஸ்னார்க்ளிங்கிற்கு நீச்சல் பயிற்சி அவசியம். அதுக்கு சர்டிஃபிகேட் உண்டு. என் நினைவு சரியாக இருந்தால், 200 மீட்டர் தொலைவிற்கு தொடர்ந்து நீச்சல் அடித்து இருமுறை வரவேண்டும். (அல்லது 100 மீட்டர் லேப்பில் 4 தடவை..ரொம்ப சரியா நினைவு இல்லை). அதைச் செய்தபிறகு, இவர் ஸ்னார்கிளிங் செய்யத் தகுதியானவர் என்ற சர்டிஃபிகேட் கிடைக்கும். இதை எங்குவேண்டுமானாலும் காண்பித்து ஸ்னார்கிளிங்கிற்குச் செல்லலாம். நீச்சல் முறை தெரிந்திருந்தால்தான் தண்ணீருக்கடியில் காலை உதைத்து மெதுவான நீச்சலில் பவளப்பாறைகள் காண முடியும்.

  இந்தப் பவளப்பாறைகள், அது சார்ந்த கூட்டத்தில் விஷத் தன்மையுள்ளவை உண்டு. அங்கு ஸ்டோன் ஃபிஷ் எனப்படும் கல் மீன் உண்டு. அது மிக மிக ஆபத்தானது.

  இதனால்தான் நான் பவளப்பாறைகள் எதையும் தொடுவதற்கு அஞ்சினேன் (கடலுக்குள் நடந்துசென்றபோது).

  பதிவைத் தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்னார்க்ளிங்-ஸ்கூபா டைவிங் என்று வாசிக்கவும். கடல் மேல் மிதந்துகொண்டு, கடலுக்குள் பார்ப்பதற்கு நீச்சல் அவசியமில்லை. இருந்தாலும் பேசிக் நீச்சல் தெரிந்திருப்பது நமக்கு தைரியத்தைக் கொடுக்கும்.

   நீக்கு
  2. அந்தமான் பகுதிகளில் ஸ்கூபா டைவிங் செய்ய நீச்சல் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை நெல்லைத் தமிழன் - நம்மைத் தனியாக விடுவதில்லை! ஒரு வழிகாட்டி/பயிற்சியாளர் நம் அருகிலேயே இருக்கிறார் என்பதால் தைரியமாகச் செல்லலாம். நீச்சல் தெரிந்திருப்பது ஒரு ப்ளஸ்!

   ஆமாம் சில பவளப் பாறைகள் விஷத் தன்மையுடைவை. போலவே சில ரொம்பவும் கூர்மையானவையும் கூட! கொஞ்சம் ஏமாந்தால் நம் பாதங்களை பதம் பார்த்து விடக்கூடும்!

   நீக்கு
  3. உண்மை தான். படிக்கும்போதே நீங்கள் ஸ்கூபா பற்றி சொல்ல வருகிறீர்கள் என்பது புரிந்தது நெல்லைத் தமிழன்.

   நீச்சல் தெரிந்திருப்பது added advantage தான் நிச்சயமாக!

   நீக்கு
 8. //பவளப் பாறையைக் காண்பித்து, அதனைத் தொடச் சொல்ல, நானும் தொட்டேன் – தொட்ட மாத்திரத்தில் தன்னை மூடிக்கொண்டு அப்படியே ஒரு பாறை போல கிடந்தது அந்த பவளப்பாறை. அது ஒரு அற்புத அனுபவம்.//

  கடல் பயணம் இனிமை. கடலுக்கு அடியில் பவளபாறைகளை திட்டு உணர்ந்தது நல்ல அனுபவம்.
  பதிவு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கோமதிம்மா... அப்படி தொட்டுப் பார்த்தது ஒரு நல்ல அனுபவம் தான். பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  வாசகம் சிந்தனை அருமை. பதிவு மிகவும் திரில்லாக இருந்தது. விபரங்களை அறிந்து ரசித்துப் படித்தேன். நீருக்கடியில் சென்று பவளப் பாறைகளையும், கடல் வாழ் ஜந்துக்களையும் காண்பது மிகவும் அற்புதமான விஷயந்தான்.உங்களுக்கும் அந்த அனுபவம் கிடைத்தது மிகவும் மகிழ்வான விஷயம். உங்களுக்கு கிடைத்த அனுபவத்தால் அதை எங்களுக்கும் பகிர முடிந்தது. நாங்களும் ரசித்துப் படிக்க முடிந்தது. அதனால் உங்களுக்கு எங்களின் நன்றியை தெரிவிக்கிறேன்.கூகுளில் தேர்ந்தெடுத்த படங்களும் நன்றாக உள்ளது. கடல் பேனா என்னும் உயிரினம் பார்க்க நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜி.

   கடல் பேனா பார்க்கவே அழகு தான். பதிவின் மூலம் உங்களுக்கும் சில விஷயங்களைச் சொல்ல முடிந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

   நீக்கு
 10. இணையத்திலிருந்து எடுக்கப்பட்டாலும்
  இதயத்தைத் தொடுகின்றன படங்கள்...

  அருமை...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

   நலமே விளையட்டும்.

   நீக்கு
 11. மறக்க முடியாத அற்புதமான அனுபவமே. தகவல்களுக்கும் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 12. வெங்கட்ஜி வாவ்!!! வாசிக்கும் போதே எனக்கு ஏற்பட்ட திரில் ஹையோ...நீங்க செமையா எஞ்சாய் செஞ்சுருப்பீங்க. என்ன ஒரு அனுபவம் இல்லையா..பொக்கிஷமான தருணங்கள்..உங்கள் விவரணம் அருமை.

  ஸோ இனி என்னைப் போன்றவர்கள் போனால் ஸ்னார்க்ளிங்க் எல்லாம் செய்ய முடியாது போல தோனுது. ஸோ மிகவும் ஏதோ நானே செல்வது போல ரசித்து வாசித்தேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் கீதாஜி.

  ஆமாம் ஸ்னார்க்ளிங் நிறையவே மகிழ்ச்சி தந்த அனுபவம் அது கீதா ஜி. ஸ்னார்க்ளிங் அனுமதிக்கலாம்! டைவிங் நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள்.

  பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

  பதிலளிநீக்கு
 14. மிக பரவச அனுபவங்கள் .....சுவாரஸ்யம்

  பதிலளிநீக்கு
 15. பதில்கள்
  1. ஹாஹா.... பயப்பட வேண்டிய அவசியமில்லை சொக்கன் சுப்ரமணியன். பாதுகாப்பாகவே இந்த விளையாட்டுகளில் ஈடுபடலாம்!

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 17. பதில்கள்
  1. ஆமாம் டீச்சர். சிறப்பான அனுபவமாக இருந்தது ஸ்னார்க்ளிங்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....