செவ்வாய், 17 மார்ச், 2020

கங்கா மேளா – கான்பூரின் ஹோலி கொண்டாட்டங்கள்அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

அர்த்தமில்லாத சில சண்டைகளால், அர்த்தமுள்ள ஆயிரம் சந்தோஷங்கள் வாழ்வில் தொலைந்து போகின்றன.

 
****

கங்கா மேளாதற்போதைய அலுவலகத்தில் இருக்கும் ஒரு சக அலுவலர் கான்பூர் நகரை அடுத்த கிராமத்தினைச் சேர்ந்தவர். அவ்வப்போது தங்களது ஊர் பற்றிய விஷயங்களை பெருமையுடன் சொல்லிக் கொண்டு இருப்பார்.  தங்களது ஊரில் நடக்கும் விஷயங்கள், கொண்டாடப்படும் பண்டிகைகள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்வது அவரது வழக்கம். ஹோலி பண்டிகைக்கு ஊர் சென்று திரும்பியவர் கொஞ்சம் சோகமாகவே இருந்தார் – இன்னும் அவருக்குத் திருமணம் ஆகவில்லை. ஹோலி கொண்டாட்டங்கள் தலைநகர் பகுதிகளில் முடிந்து விட்டாலும் இன்னமும் கான்பூர் மற்றும் அருகே இருக்கும் கிராமங்களில் முடியவில்லை.  ஹோலி கொண்டாட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்குள் அலுவலகத்திற்கு வர வேண்டியிருக்கிறதே என்பதில் அவருக்கு சோகம்.  அதிலும் குறிப்பாக கங்கா மேளா எனும் ஹோலி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லையே என்பதில் அவருக்கு வருத்தம்.  “கங்கா மேளா” ஏதோ கங்கை நதி சம்பந்தப்பட்ட விஷயம் போலும் என அவரிடம் விவரங்கள் கேட்டபோது கிடைத்த தகவல்களே இந்தப் பதிவின் வழி உங்களுக்கும் சொல்லப் போகிறேன்.கங்கா மேளா – ஹோலி பண்டிகையை அடுத்து வருகின்ற நாட்களில் என்றைக்கு அனுராதா நக்ஷத்திரம் வருகிறதோ அந்த நாளில் கொண்டாடப்படும் பண்டிகை தான் இந்த கங்கா மேளா – இந்த வருடம் மார்ச் 15-ஆம் தேதி – ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் ஒரு வாரத்திற்கும் மேலாகவே கான்பூர் பகுதிகளில் கொண்டாடுவார்களாம்.  இந்தப் பண்டிகை ஹோலியைத் தொடர்ந்து கொண்டாடப்பட்டாலும் இதற்குக் காரணம் வேறு – புராணங்களோ மதம் சார்ந்த விஷயமோ காரணம் இல்லை.  இந்த கங்கா மேளா கொண்டாட்டங்கள் சுதந்திரப் போராட்டம் தொடர்புடையது.  கொண்டாடப்படும் விதம் பற்றிய விஷயங்களைக் கேட்ட போது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது என்றாலும் கொண்டாடப்படும் நோக்கம், ஆரம்பித்தது எப்போது போன்ற தகவல்களை முதலில் சொல்லி விடுகிறேன்.கான்பூர் நகரம் – ஆட்சி அன்னியர் பிடியிலிருந்தாலும் ஹோலி கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியுடன் நடந்து கொண்டிருந்தது.  ஹாத்தியா சௌக் என அழைக்கப்படும் சாலை சந்திப்பில் அன்னியர் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்று விட்டது என்று பறை சாற்றி, சில சுதந்திரப் போராட்டத் தியாகிகள் – குலாப் சந்த் சேட், ஹமீத் கான், ஷ்யாம் லால் குப்தா, அம்ரீக் சிங், ரகுபர் தயால் பட், பால் கிஷன் ஷர்மா, பீதாம்பர் லால் மற்றும் சிலர் இந்திய தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடினார்கள்.  ஆட்சியில் இருந்த அன்னியர் இவர்கள் அத்தனை பேரையும் கூண்டோடு பிடித்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்தார்கள்.  சிறையில் அடைக்கப்பட்ட விவரம் தெரிந்தவுடன் ஹோலி கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன.  நகரிலுள்ள அனைவரும் போராட ஆரம்பித்தார்கள். போராட்டம் அதிகரித்துக் கொண்டே போக, அன்னிய ஆட்சியாளர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அனைவரையும் விடுதலை செய்து விட்டார்கள். அப்படி விடுதலை பெற்ற நாள் அனுராதா நக்ஷத்திரம் கூடிய நாள். தியாகிகள் விடுதலை பெற்ற நாளில் நகர் எங்கும் கொண்டாட்டங்கள்.  அப்படி ஆரம்பித்த கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் கங்கா மேளாவாக தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களாம். எப்படிக் கொண்டாடுவார்கள்: ஹோலி பண்டிகை தொடர்ந்து வரும் நாட்களில் அனுராதா நக்ஷத்திரம் என்றைக்கு வருகிறதோ அன்று இந்த கங்கா மேளா கொண்டாட்டம்.  அந்தக் காலத்தில் எருது பூட்டிய வண்டியில் பெரிய பெரிய உருளைகளில் வண்ண வண்ணப் பொடிகள் கொண்டு வந்து எல்லோர் மீதும் தூவி நாள் முழுவதும் கொண்டாடி கங்கைக் கரையில் வண்ணப் பொடிகள் தண்ணீரோடு கலந்து அனைவருடைய மீதும் கொட்டப்பட்டு கொண்டாடுவார்கள் – ஆனால் இன்றைக்கு வண்ணப் பொடிகள் மட்டுமல்லாது பல விஷயங்களும் பயன்படுத்துகிறார்கள்.  ஒரு பெரிய லாரியில் மண் கொண்டு வரப்பட்டு தொட்டியில் கொட்டி அதில் தண்ணீர் கலந்து சேறு உருவாக்கப்படுகிறது.  சில தொட்டிகளில் மாட்டுச் சாணமும் கூட கலந்து வைக்கப்படும்.  அப்பகுதியில் இருப்பவர்கள் அனைவருமே கொண்டாட்டத்தின் போது சேற்று நீரில் முக்கி எடுக்கப்படுகிறார்கள். மாட்டுச் சாண நீரிலும் முக்கப்படுவது உண்டு. பெரும்பாலும் தெரிந்தவர்களை மட்டுமே அப்படிச் செய்வார்கள் என்றாலும் கேட்கும்போதே திகிலாகத் தான் இருக்கிறது. சென்ற வருட கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு காணொளி பார்த்து கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. நன்கு வளர்ந்த ஒரு இளைஞர் – இருபதுகளில் இருக்கலாம் – அவரை சேற்று நீரில் முக்கி, சாணியிலும் முக்கியதோடு உடைகளைக் களைந்து கலர் பொடிகளை பூசுவதைப் பார்க்கும்போது ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது.  மண் குளியல் – சில இடங்களில் இப்போதெல்லாம் மண் குளியல் ஒரு மருத்துவமாகவே இருக்கிறது என்றாலும் இப்படியான கொண்டாட்டங்கள் நிச்சயம், கேட்கும்போதே அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது. என்ன செய்தாலும் ஒன்றும் செய்து விட முடியாது, அத்தனையும் கொண்டாட்டம் என்றும் சக அலுவலர் சொன்ன போது, இப்படியான கொண்டாட்டம் தேவையா என்றே தோன்றியது.நாள் முழுவதும் கொண்டாட்டம் தொடரும் என்றும் அவை ஊரிலுள்ள அனைவருக்குமே பிடித்த விஷயம் எனவும், இந்த முறை கொண்டாட்டங்களில் பங்குபெற முடியவில்லை என்றும் சோகத்துடன் சொல்ல, நானோ, “இதில் என்ன சோகம் வேண்டியிருக்கிறது – சேற்றிலும், சாணியிலும் முக்கி எடுக்கப் போகிறார்கள்,    அது நடக்கவில்லை என்று சந்தோஷப் படுவதை விட்டு சோகம் என்ன? என்று கேட்க, அப்படி இல்லை – எங்கள் ஊரில் அனைவருக்கும் பிடித்த கொண்டாட்டம் இது என்று சொல்கிறார் அவர்.  அடப் போங்கய்யா நீங்களும் உங்கள் கொண்டாட்டமும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.  சுதந்திரப் போராட்ட வீரர்களின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஆரம்பித்த கங்கா மேளா கொண்டாட்டங்கள் இப்படி உருமாறிப் போனதை நினைத்தால் வருத்தம் தான் மிஞ்சும்.  அதிலும் உடைகளைக் களைந்து கலர் பூசுவது – என்னதான் நண்பனாக இருந்தாலும் இப்படியா கொண்டாடுவார்கள் – அதையும் காணொளியாக எடுத்து வைத்திருப்பவர்களை என்ன சொல்ல?  ஒரு சில நொடிகள் பார்த்த போதே போதும்பா நிறுத்தி விடு என்று சொல்லி விட்டேன்!அப்பகுதியில் இருக்கும் கடைகள் ஹோலிக்காக வாரம் முழுவதும் மூடியிருந்தாலும், கங்கா மேளா நாளில் கடை திறந்து வியாபாரத்தினை ஆரம்பிப்பார்களாம் – அந்த நாள் நல்ல நாள் என்பதால்.  கங்கா மேளா பற்றிய தகவல்களும் கொண்டாட்டமும் நல்ல விதத்தில் ஆரம்பித்திருந்தாலும், இப்போதைய கொண்டாட்டங்கள் அத்தனை நல்லதாகத் தோன்றவில்லை.  இந்த மண் குளியல், சாணிக் குளியல் போன்றவை பத்து, இருபது வருடங்களாகத் தான் ஆரம்பித்திருக்க வேண்டும் என அந்த நபர் சொல்லிக் கொண்டிருந்தார். எத்தனை எத்தனை பண்டிகைகள் முன்னோர்கள் கொண்டாடிய வழிவகையிலிருந்து விலகி மாற்றம் கண்டிருக்கின்றன என நினைக்கும்போது மனதில் வலி! எத்தனை விஷயங்களை மாற்றிக் கொண்டே போகிறோம்?  எங்கே போய் நிற்கப் போகிறதோ இந்தக் கொண்டாட்டங்கள்.  இன்னமும் சில ஊர்களில் நல்ல விதமாகவே கொண்டாடுகிறார்கள் என்றாலும், சேறும், சாணியும் ஊற்றிக் கொண்டாடுவது தேவையில்லை என்றே தோன்றியது. 

நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

40 கருத்துகள்:

 1. சமயங்களில் அர்த்தமில்லாத சண்டைகளை நாம் ஆரம்பிக்கா விட்டாலும் மற்றவர்கள் ஆரம்பிக்கும்போது விளக்கவும் முடிவதில்லை, தொடரவும் முடிவதில்லை!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அர்த்தமில்லாத சண்டைகள் மற்றவர்கள் ஆரம்பிக்கும்போது - ஒன்றும் செய்வதற்கில்லை ஸ்ரீராம்!

   நீக்கு
 2. கங்கா மேளாவில் அந்த ஒரு விஷயம் தவிர மற்ற விஷயங்கள் நன்றாகவே இருக்கின்றன.  சங்கடமான விஷயம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சங்கடமான விஷயம் தான் ஸ்ரீராம். தவிர்க்க வேண்டியதும் கூட. ஆரம்பித்த காலத்தில் நல்லதாகவே ஆரம்பித்திருக்கிறது கொண்டாட்டம்.

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  வாசகம் நன்றாக உள்ளது.

  உண்மைதான்.. அர்த்தமற்ற சண்டைகளாக இருந்தாலும், உடன் பழகிய சக மனிதர்களே அதை பெரிதாக்கி, வாழ்நாள் வரை பிளவு ஏற்படுத்தி போகிறார்கள். அவர்களுக்கு அதிலொரு சந்தோஷம்.

  கங்கா மேளா.. விபரங்கள் அறிந்து கொண்டேன். அனுராதா நட்சத்திரம் என்றால், அனுஷ நட்சத்திரமா? ஹோலி பொடிகளே கெடுதல் என்னும் போது, சகதியும், சாணிக்குளியலும் நினைக்கும் போதே கஸ்டமாகத்தான் உள்ளது.

  நீங்கள் சொல்வது போல் பராமபரியங்கள் ஆரம்பிக்கும் போது நல்ல விதமாக இருந்தாலும், போகப்போக அதை வேறுவிதமாக கெடுத்துக் கொள்ளும் மனித சுபாவங்கள் வேதனையை தருகிறது. உடன் நலனை வீணடித்துக் கொள்ளும் இத்தகைய கொண்டாட்டங்கள் தேவைதானா என்ற கேள்வியும் வருகிறது. என்ன செய்ய? சில விஷயங்களை எப்போதும் திருத்த முடியாது போலும்..! பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனுராதா நக்ஷத்திரம் - அனுஷம் இரண்டும் ஒன்று தான் கமலா ஹரிஹரன் ஜி. ஒன்று சமஸ்கிருதம் மற்றது தமிழ்!

   நல்ல விதமாக ஆரம்பித்து அதை மடை மாற்றி விடுவது மனித சுவாவம் - உண்மை தான்.

   நீக்கு
 4. அனைவரையும் விடுதலை செய்து விட்டார்கள். அப்படி விடுதலை பெற்ற நாள் அனுராதா நக்ஷத்திரம் கூடிய நாள். தியாகிகள் விடுதலை பெற்ற நாளில் நகர் எங்கும் கொண்டாட்டங்கள். /.....

  அருமையாக ஆரம்பித்த கொண்டாட்டங்கள் இன்று வழி மாறி செல்கின்றனவோ ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். வழி மாறியே செல்கின்றன இந்த கொண்டாட்டங்கள் அனுப்ரேம் ஜி.

   நீக்கு
 5. வேதனையான கொண்டாட்டங்கள் . விபரங்களுக்கு நன்றி .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு சில விவரங்களை பதிவு மூலம் தர முடிந்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

   நீக்கு
 6. பொன்மொழி அருமை ஜி
  விழாக்களில் இப்பொழுது ஆபத்துகளே பெறுகி வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விழாக்கள் நல்லதாகவே இருந்தாலும் அதனை திசை திருப்புவதற்கு நிறைய வழிகள் இங்கே கில்லர்ஜி.

   நீக்கு
 7. //
  தியாகிகள் விடுதலை பெற்ற நாளில் நகர் எங்கும் கொண்டாட்டங்கள். அப்படி ஆரம்பித்த கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் கங்கா மேளாவாக தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களாம்.//

  தியாகிகள் தினம் என்றால் மகிழ்ச்சி.

  பசும் சாணம் வைத்து முன்பு சொறி சிரங்கு வருபவர்களுக்கு பூசி குளிக்க வைப்பார்கள். அதுவும் பசு மாடு சாணம் போட்டவுடன் பிடித்து வந்து சூடு ஆறும் முன் தேய்பார்கள் கிராமத்தில் கேள்வி பட்டு இருக்கிறேன். சிறை கைதிகள் குளிக்காமல் அவர்களுக்கு தோல் நோய் வந்து இருக்கும் அப்போது அவர்களுக்கு செய்த வைத்தியத்தை இப்போது நினைவு படுத்திக் கொள்கிறார்களோ!
  மண் குளியல் இப்போது தோல் சம்பந்தமான நோய்க்கு நல்லது. அதை தனியான இடத்தில் செய்ய வேண்டிய குளியலை பொதுவிழாவில் வைக்க வேண்டாம்.

  தொலைக்காட்சியில் ஒரு கிராம விழா வைத்தார்கள் "குருதி விழா" எல்லோர் ரத்தமும் கொஞ்சம் எடுத்து உணவில் கலந்து வானை நோக்கி தூக்கி ஏறிகிறார்கள்.
  நோய் நொடி அண்டாதாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தியாகிகள் தினம் என்றால் மகிழ்ச்சி தான்.

   பசும் சாணம் குளியல், மண் குளியல் போன்றவை இப்போது வைத்தியமாகவும் சில இடத்தில் இருக்கிறது தான் கோமதிம்மா...

   குருதி விழா - எப்படி எல்லாம் விழாக்கள்...

   நீக்கு
 8. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 14 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

  தற்போது, தங்களது கங்கா மேளா – கான்பூரின் ஹோலி கொண்டாட்டங்கள் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

  உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  பதிலளிநீக்கு
 9. அனைத்துக் கொண்டாட்டங்களும் வழி மாறி ஜாலி என்ற பெயரால் மற்றவர்களுக்குத் தொந்தரவாக ஆகிக்கொண்டிருக்கிறது வெங்கட்.

  ஹோலி என்ற வண்ணப்பொடி தூவிக் கொண்டாடுவது தமிழகத்துக்கு அந்நியம். 1986ல் எங்கள் கல்லூரியில் மாணவர்கள் ஹோலி கொண்டாடுகிறோம் என்ற பெயரில் பேராசிரியர்களின் மேல் கலர்ப்பொடி அப்பி, அதிலும் ஒருவன் இயற்பியல் பேராசிரியர் தலையில் கரும் பவுடரைக் கொட்டி (கூட்டமாக வந்து)... அப்போது சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாலும், இன்டர்னலில் அவனுக்கு மார்க்கே போடாமல் பல வருடங்கள் அவனை அரியர்சிலேயே இருக்கும்படிச் செய்தார் அந்த பேராசிரியர்

  சமீபத்தைய ஶ்ரீநாத் துவாரகை கோவிலில், பலர் கலர்ப்பொடிகளை உடலில் அப்பிக்கொண்டு தரிசனக் கூட்டத்தில் முண்டியடித்தனர். எங்கே கலர்ப்பொடிகள் என் உடையை நாசமாக்கிடுமோ, உடம்பில் கலர்த்தூள்கள் பட்டுடுமோன்னு பயமாவே இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான் நெல்லைத் தமிழன். சிலரது கொண்டாட்டங்கள் அடுத்தவர்களுக்கு தொந்தரவாக மாறிக் கொண்டிருக்கிறது.

   துவாரகா, விருந்தாவன் போன்ற இடங்களில் இந்த ஹோலி கொண்டாட்டங்கள் அதிகம் தான். ஹோலி சமயத்தில் நான் Bபர்சானா சென்றதுண்டு - அங்கே தான் லட் மார் ஹோலி எனப்படும் கொண்டாட்டம் உண்டு. முன்னர் என் பக்கத்தில் அது பற்றி எழுதி இருக்கிறேன்.

   நீக்கு
 10. சிறிய வயதில் கிராமத்தில் கோவில் திருவிழாவில் ஒரு நாள் மாலை, வீதியில் வாகனப் புறப்பாட்டின்போது, பெண்கள் மஞ்சள் கலந்த நீரை அகப்படும் ஆண்கள் வேஷ்டியில் தெளிப்பார்கள். அது நினைவுக்கு வந்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் திருப்பராய்த்துறையில் அப்படி மஞ்சள் கலந்த நீரில் விளையாடியதுண்டு. அது அதிக அளவில் இருக்காது நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 11. இவ்வளவு சாயப்பவுடரை உடலில் தேய்ச்சால், சரும பிரச்சனை, சுவாச பிரச்சனை உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்படாதா?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிலருக்கு அரிப்பு பிரச்சனைகள் உண்டாவதுண்டு ராஜி. ஆனால் அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை!

   நீக்கு
 12. இந்த மண் குளியல், சாணிக் குளியல் போன்றவை பத்து, இருபது வருடங்களாகத் தான் ஆரம்பித்திருக்க வேண்டும்

  விழா நிகழ்வுகள் உருமாறி இருப்பது வேதனைதான் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பத்து இருபது வருடங்களாக - இருக்கலாம் கரந்தை ஜெயக்குமார் ஐயா. எனது அலுவலக நண்பரும் இளைஞர் தான் - அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே இப்படித்தான் என்று சொல்கிறார்.

   நீக்கு
 13. தலைப்பு வாசகம் அருமை.
  அனாவசிய தர்க்கங்கள் வாழ்க்கையைப் பிரட்டிப் போடுகின்றன.
  வாய்க்கு வந்த படி பேசி, மணவாழ்வை இழந்த பெண்ணையும் தெரியும்.
  அசட்டுத்தனம் தான். மனித வாழ்வுக்கே உத்திரவாதம் இல்லாத போது,
  நிதானம் தேவை. இல்லாவிடில் வருத்தமே மிஞ்சும்.

  தியாகிகள் தினம் இந்த அளவுக்கு மாறி இருப்பது காலத்தின் துர்கதியைக் காண்பிக்கிறது.
  பழைய படங்களில் சேற்றில் புரளுவதைக் காண்பிப்பார்கள்.
  கூடவே போதைப் பொருளின் உபயோகமும் இருக்கும்.
  மனிதமனங்களின் கோர வடிவம் இப்படி எல்லாம்

  வடிவெடுக்கிறது.
  மதுவின் போதையில் யாதவ குலமே அழிந்தது நினைவுக்கு
  வருகிறது.
  நன்றி வெங்கட். நலமுடன் இருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைப்பு வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

   தியாகிகள் தினம் இப்படி உருமாறியிருப்பது காலத்தின் துர்கதி - உண்மை தான்மா...

   மது போதையில் யாதவ குலமே அழிந்தது - உண்மை. இன்றைக்கும் பலர் இப்படித்தான்.

   நலமே விளையட்டும் வல்லிம்மா.

   நீக்கு
 14. /எத்தனை எத்தனை பண்டிகைகள் முன்னோர்கள் கொண்டாடிய வழிவகையிலிருந்து விலகி மாற்றம் கண்டிருக்கின்றன என நினைக்கும்போது மனதில் வலி! எத்தனை விஷயங்களை மாற்றிக் கொண்டே போகிறோம்?  எங்கே போய் நிற்கப் போகிறதோ இந்தக் கொண்டாட்டங்கள்.// நியாயமான ஆதங்கம். பொருள் பொதிந்த வாசகத்தோடு தொடங்கி நேர்மையான கவலையோடு முடித்திருக்கிறீர்கள். நல்ல பதிவு.   

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவில் எடுத்துக் காட்டிய வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா...

   நியாமான ஆதங்கம் - நன்றிம்மா...

   நீக்கு
 15. பண்டிகைகள் மாறிக்கொண்டு செல்கிறது காலத்தின் கோலம்தான். சாணிக்குளியல் உடலில் சிறு காயம் இருந்தால் கூட ஆபத்து ழஆகலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறு காயம் இருந்தால் கூட ஆபத்து ஆகலாம் என்பது உண்மை தான் மாதேவி. ஆனால் சரியான புரிதல் இல்லை அவர்களிடம்.

   நீக்கு
 16. //கங்கா மேளா” ஏதோ கங்கை நதி சம்பந்தப்பட்ட விஷயம் போலும் என.. //

  நானும் அப்படித் தான் நினைத்தேன் வெங்கட். வித்தியாசமான அந்தப் படம் (எருமை மாடு பூட்டிய டயர் வண்டி) விநோதமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எருமை மாடு பூட்டிய டயர் வண்டி - இப்படியான வண்டிகள் இன்றும் இங்கே உண்டு ஜீவி ஐயா. தலைநகர் தில்லியில் கூட இப்படியான வண்டிகள் உண்டு.

   நீக்கு
 17. உன்னதமான காரணத்திற்காக உருவெடுத்த பண்டிகை இப்படி உருமாறிப்ப திகைப்பு தான்.
  இப்படி நம்மில் கூட சில கொண்டாட்டங்கள் இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி நம்மில் கூட சில கொண்டாட்டங்கள் இருக்கின்றன - உண்மை தான் ஜீவி ஐயா.

   உருமாறிய பண்டிகை - வருத்தமே!

   நீக்கு
 18. ஹோலிப் பண்டிகைக்கு அங்கு விடுமுறை விடுவார்களேல்லோ.. பார்க்கவே பயமாக இருக்கு, ஆனா அவர்கள் பயப்பிடாமல் விருப்பத்தோடு கொண்டாடுகின்றனர், விளக்கம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அதிரா. ஒரு நாள் விடுமுறை உண்டு.

   பார்க்கவே பயமாக இருக்கிறது - உண்மை தான். நேரடியாக பார்க்கும்போது இன்னும் அருவருப்பாக இருக்கும்!

   நீக்கு
 19. சண்டிகர் வாழ்க்கையில் ஒருமுறை இந்த கங்காமேளா ஊர்வலம் பார்த்திருக்கிறேன். வெறும் அலங்கார வண்டியுடன் மேளதாளமாக பாண்ட் வாத்திய கோஷ்டிதான் ! சேறு சகதியெல்லாம் இல்லை. கொஞ்சம் வெறும் தண்ணீரை அப்பப்ப ஜனங்கள் மேல் வீசினாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கான்பூர் நகரில் தான் இந்த மாதிரி கொண்டாட்டங்கள். மற்ற நகர்களில் கொண்டாடினாலும் இப்படி இருக்காது துளசி டீச்சர்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....