வெள்ளி, 13 மார்ச், 2020

அந்தமானின் அழகு – சிறைச்சாலை – ஒலியும் ஒளியும்

அந்தமானின் அழகு – பகுதி 6அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, பயணம் பற்றிய சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

விடுதலை பெற்று சிறைச்சாலையின் திறக்கப்பட்ட கதவுகள் வழி நடந்து, வெளியே வரும்போது, சிறைச்சாலை எனக்குத் தந்த கசப்பையும் வெறுப்பையும் அங்கேயே விட்டுவிட்டுச் செல்லவில்லை என்றால் எனக்குக் கிடைத்த விடுதலை விடுதலை அல்ல – சிறைச்சாலையில் இருப்பதற்குச் சமமே – நெல்சன் மண்டேலா.
சென்ற பகுதியில் போர்ட் Bப்ளேயர் நகரின் கார்பின்’ஸ் கோவ் கடற்கரைக்குச் சென்று வந்தது பற்றி பார்த்தோம்.  இந்தப் பகுதியில் நாம் மீண்டும் காலாபானி என அழைக்கப்படும் சிறைச்சாலைக்குச் செல்லப் போகிறோம்.  மாலை நேரத்தில் இந்த சிறைச்சாலையில் Light and Sound Show என அழைக்கப்படும் ஒலி ஒளி காட்சி உண்டு – ஆங்கிலம், ஹிந்தி என இரண்டு மொழியில் காட்சிகள் உண்டு.  சிறைச்சாலை பற்றியும் அங்கே இந்திய விடுதலைக்காக, நம் சுதந்திரத் தியாகிகள் பட்ட அவதிகள் பற்றி பார்வையாளர்களுக்கு ஒலி ஒளி காட்சிகள் மூலம் காண்பிக்கிறார்கள்.  மாலை 05.15 மணிக்கு ஆரம்பித்து மொத்தம் ஐந்து காட்சிகள் – ஒரு மணி நேரம் ஒரு காட்சிக்கு!  பெரும்பாலும் ஹிந்தி மொழியில் தான் காட்சிகள்.  வாரத்தின் மூன்று நாட்கள் – திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 07.25 காட்சி மட்டும் ஆங்கிலத்தில்! மற்ற அனைத்து காட்சிகளும் ஹிந்தியில் தான்.   காட்சி ஒன்றிற்கு ஐம்பது ரூபாய் முதல் 150/- வரை கட்டணம் உண்டு – காட்சி நேரத்தினைப் பொறுத்து கட்டணம். காட்சி ஆரம்பிக்கும் முன்னர் வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்று சொன்னாலும் பலர் இங்கே வீடியோ எடுக்கிறார்கள்! நம் மக்கள் என்றைக்கு சொன்னதைக் கேட்டிருக்கிறோம்.  இணையத்தில் கூட, ஒலி ஒளி காட்சியின் போது இங்கே எடுக்கப்பட்ட காணொளி நிறைய இருக்கிறது. ஹிந்தி மொழி தெரிந்தவர்கள் யூவில் இப்படியான காணொளிகளைக் காணலாம்.  அந்தமான் செல்லும் போது பார்த்துக் கொள்கிறேன் எனச் சொல்பவர்கள், அந்த ஒலி ஒளி காட்சிக்கான முன்பதிவினை இணையம் வழி செய்து கொள்ளலாம் – அதற்கான இணைப்பு - முன்பதிவு செய்ய!. நாங்கள் ஹிந்தி மொழி காட்சி தான் பார்த்தோம். எங்களுக்கான நுழைவுச் சீட்டுகள் முன்னரே திரு சுமந்த் இணைய வழி வாங்கி வைத்திருந்ததால் அங்கே நீண்ட வரிசையில் நின்று நுழைவுச் சீட்டு வாங்க வேண்டியிருக்கவில்லை. ஒலி ஒளி காட்சிக்காக காத்திருந்தவர்களில் நாங்களும் இருந்தோம். மாலை 05.15 மணி காட்சிக்கு தான் எங்கள் முன்பதிவு. சற்று தாமதமாகவே உள்ளே அனுமதித்தார்கள்.அவரவருக்கான இருக்கைகளில் அமர்ந்து கொள்ள காட்சி ஆரம்பித்தது.  நடிகர் ஓம் புரி அவர்களின் சிம்மக்குரலில் சிறைச்சாலையின் கதை சொல்லிச் செல்கிறார்கள். என்ன விதமான சூழல், கைதிகளுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகள் என்ன, சிறைச்சாலையின் கொடுங்கோல் அதிகாரியான Dடேவிட்d Bபேரி கைதிகளை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினார் – அதற்கு ஒத்துழைத்த அவரது சிப்பாய்கள் என பல விஷயங்கள் ஒலியாகவும் குரலாகவும் கேட்கும் போது நமக்கு அப்படியே அந்தச் சூழலில் இருப்பது போன்ற உணர்வு. ஒவ்வொரு நாளும் கைதிகளுக்குக் கொடுக்கப்படும் வேலைகளைக் கேட்கும்போதே மனது பதறுகிறது.   தேங்காய்களைக் கொடுத்து அதிலிருந்து 30 பவுண்ட் தேங்காய் எண்ணை எடுக்க வேண்டும் - அதுவும் ஒரே நாளில்! அல்லது எள்ளிலிருந்து 10 பவுண்ட் எண்ணை.  எள்/தேங்காயிலிருந்து எண்ணை எடுப்பது அப்படி ஒன்றும் சுலபம் அல்ல – அதுவும் மனிதரால் இயக்கப்படும் செக்கில் அவ்வளவு எண்ணை எடுப்பது முடியக் கூடிய காரியம் அல்ல! அப்படிச் செய்யாவிடில் Dடேவிட்d Bபேரி கொடுக்கும் தண்டனை அதைவிடக் கொடுமையானது. கைகளையும் கால்களையும் கட்டி விட்டு பின்புறத்தில் கசையடி! ஒவ்வொரு நாளும் மிச்சம் இருந்த வேலை அடுத்த நாளின் வேலையோடு சேர்ந்து விடும் – ஒவ்வொரு நாளும் இப்படிச் சேர்ந்து கொண்டே இருக்க – எப்படி வேலையை முடிப்பது? மீதமான வேலை அதிகரிக்க அதிகரிக்க வேலையும் அதிகரிக்கும்! தண்டனை கொடுப்பதற்கு நேரம் என்று எதுவுமே இல்லை – வேலை செய்யும்போதும், உணவு உண்ணும் போதும் என எப்போது வேண்டுமானாலும் தண்டனை தருவான் Dடேவிட்d Bபேரி.  தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு உணவும், தண்ணீரும் மறுக்கப்படும். அப்படிக் கொடுக்கப்படும் உணவும் அவ்வளவு ஒன்றும் சுவையான உணவு அல்ல! நாற்றமடிக்கும் தண்ணீர், உப்பில்லாத கஞ்சி என வாயில் வைக்கமுடியாத உணவு தான் அங்கே தரப்படும். அப்படிக் கொடுக்கும் கஞ்சியைக் கூட ஜமாதார் என அழைக்கப்படும் சிறு அதிகாரிகள் பாதி கேட்டு வாங்கிக் கொள்வார்கள் – தரவில்லையெனில் Dடேவிட்d Bபேரியிடம் வேலை செய்ய மறுக்கிறார்கள் எனச் சொல்லி போட்டுக் கொடுக்க – தண்டனை இன்னும் அதிகரிக்கும்.முந்தைய சிறைச்சாலை பற்றிய பதிவில் சொன்னது போல இங்கே மடிந்தவர்கள் எண்ணிக்கை பல நூறு! அவர்களில் சிலரது வரலாற்றை ஒலி ஒளி காட்சிகள் வழி பார்க்கும்போது நாமும் அந்த நாட்களுக்கே சென்று விடுவோம் என்பது உறுதி.  சுதந்திர இந்தியாவினைப் பெற நம் முன்னோர்கள் எத்தனை எத்தனை கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார்கள். ஒவ்வொன்றும் வலி நிறைந்த கதைகள் தான்.  இன்றைக்கு நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்கான விலை அவர்கள் கொடுத்தது.  அந்த வரலாற்றினை ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது அவசியம்.  செக்கிழுக்க மறுக்கும் கைதிகளை செக்கினை இழுக்கப் பயன்படும் நீண்ட குச்சியில் கைதிகளைப் பிணைத்து பின்னாலிருந்து அடித்து அடித்து – ஒரு காளைமாட்டினைப் போலவே மனிதர்களை செக்கில் இணைப்பது மட்டுமல்லாது, மாட்டினை அடிப்பது போலவே மனிதர்களை அடித்துத் துன்புறுத்தி செக்கிழுக்க வைத்த கொடுமை! நினைத்துப் பார்க்கும்போதே மனம் பதறுகிறது அல்லவா?வேலை செய்ய மறுக்கும் சில கைதிகளை தனிமைச் சிறையில் அடைத்து வைப்பதோடு – அவர்களை இடம் விட்டு அகலமுடியாத அளவிற்கு கட்டி வைத்திருப்பார்கள்.  அதுவும் தொடர்ந்து ஏழு நாட்கள், எட்டு நாட்கள் என நின்ற படியே இருப்பதை நம்மால் நினைத்துக் கூட பார்க்கமுடியாது.  சுவற்றில் இருக்கும் ஒரு ஆணியிலிருந்து கட்டியிருக்கும் கம்பி கைதியின் கழுத்துக் கம்பியில் பிணைக்கப்பட, இரண்டு கைகளும் விரித்து வைக்கப்பட்டு அவையும் கம்பி மூலம் சுவற்றில் இணைக்கப்படும். கால்களும் அசைக்கமுடியா நிலையில் இரண்டு கால்களுக்கு இடையே அரை அடி நீள கம்பி கொண்டு இணைக்கப்பட்டு அவையும் சுவற்றுடன் இணைக்கப்பட்டு விடும் – இந்த நிலையில் சில நிமிடங்கள் கூட நம்மால் இருக்கமுடியாது – இப்படி இருக்கையில் கைதிகள் ஒரு வாரத்திற்கு மேலாகக் கூட இப்படியே இருக்க விடுவார்களாம்! எத்தனை கொடுமை – நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது அல்லவா? இந்தக் கொடுமையின் உச்சமாக அந்த நாட்கள் அனைத்தும் உண்ண உணவோ, குடிக்க நீரோ கொடுக்க மாட்டார்களாம்! எத்தனை எத்தனை கொடுமைகள் – கேட்கும்போதெ மனதில் வலி – அப்படியானால் அக்கொடுமையை அனுபவித்தவர்களின் வலியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.ஒலி ஒளி காட்சிகளைப் பார்த்து நாம் வெளியே வரும்போது நிச்சயம் நமக்குக் கிடைத்த சுதந்திரம் எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கியது என்பது புரியும். எத்தனை எத்தனை கடினங்களைக் கடந்து நம் தேசம் சுதந்திரம் பெற்றது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.  இந்தச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர்களின் பெயர்களை இங்கே மாநில வாரியாக கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டத் தியாகிகள் என ஒரு சிலரின் பெயரை மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். பலரின் பெயர் கூட நமக்குத் தெரியாமல் இருப்பது வெட்கக் கேடான விஷயம்.  பல தியாகிகள் ரத்தம் சிந்தி வாங்கிய சுதந்திரம் பற்றித் தெரியாமல் இன்று பலரும் கிடைத்த சுதந்திரத்தினை தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டால் நலம். 

நாங்கள் காட்சி முடிந்து தங்குமிடம் திரும்பியபோது இரவு ஏழு மணி. அன்றைய நாளின் சுற்றுலா ஒலி ஒளி காட்சியுடன் முடிந்தது. இனிமேல் அடுத்த நாள் தான். அது வரை நம் இஷ்டப்படி இருக்கலாம்! அடுத்த நாள் காலை சொன்ன நேரத்திற்குத் தயாராக இருந்தால் போதுமானது.  தங்குமிடம் திரும்பிய பிறகு என்ன செய்தோம், சாப்பாடு எங்கே போன்ற விஷயங்களை அடுத்த பதிவில் சொல்கிறேன். நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கலை என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி 

40 கருத்துகள்:

 1. அந்தமான் சிறையின் அந்த அதிகாரிகள் எவ்வளவு ஈவு இரக்கமற்ற அரக்கர்களாக இருந்திருக்கிறார்கள்?  படிக்கும்போதே மனம் பதறும் கொடுமைகள். எவ்வளவு பாடுபட்டு வாங்கிய சுதந்திரத்தை எவ்வளவு சுலபமாக அனுபவித்துக் கொண்டு கெடுத்துக் கொண்டிருக்கிறோம்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரக்கம் என்பது என்னவென்றே தெரியாதவர்களாக இருந்திருக்க வேண்டும் அந்த அதிகாரிகள். பாடுபட்டு வாங்கிய சுதந்திரத்தினை எவ்வளவு சுலபமாக அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம் - நூற்றுக்கு நூறு உண்மை ஸ்ரீராம். ஒளி ஒலி காட்சி பார்க்கும்போது நெஞ்சம் பதறிவிடுவது உறுதி.

   நீக்கு
  2. பாடுபட்டு வாங்கிய சுதந்திரத்தினை எவ்வளவு சுலபமாக அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம் உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கும் போது எனக்கு இது தான் தோன்றுகின்றது.

   நீக்கு
  3. பாடுபட்டு வாங்கிய சுதந்திரம் - சுலபமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் நாம். சுடும் உண்மை ஜோதிஜி.

   நீக்கு
 2. உண்மையான இந்தியன் ஒவ்வொருவரும் தரிசிக்க வேண்டிய இடம் அந்தமான் சிறை...

  இந்திய மண்ணுக்காக உயிர் துறந்த தியாகிகளைப் பற்றி ஓரளவுக்குப் படித்திருந்தாலே தேசத் துரோக எண்ணங்கள் கடுகளவும் வராது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு இந்தியனும் சென்று பார்க்க வேண்டிய இடம் அந்தமான் சிறை - ஆமாம் துரை செல்வராஜூ ஐயா. பல விஷயங்கள் மக்களுக்குப் புரிவதே இல்லை.

   நீக்கு
 3. காலாபானி திரைப்படம் பார்த்தபோதே
  மனம் உடைந்து அழுதிருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலா பானி படம் - நிறைய விஷயங்களைச் சொன்ன படம் துரை செல்வராஜூ ஐயா. மனம் கனக்க வைத்த படம்.

   நீக்கு
 4. வேதனை தரும் நிகழ்வுகள்.

  / நமக்குக் கிடைத்த சுதந்திரம் எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கியது என்பது புரியும். எத்தனை எத்தனை கடினங்களைக் கடந்து நம் தேசம் சுதந்திரம் பெற்றது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்./ ஆம். முற்றிலும் உண்மை.

  படங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் வழி உங்களுக்கும் சில தகவல்கள் தர முடிந்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

   சுதந்திரத்தின் பின் இருக்கும் துயரங்களை பலரும் உணர்வதில்லை.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 6. படிக்கப் படிக்க மனம் கனத்துப் போனது ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 7. இந்தப்பதிவை படிக்காமல் இருந்திருக்கலாமோ...
  என்று எனது மனம் நினைக்கிறது.

  சுதந்திரம் பெற முன்னோர் பெற்ற துயர் கண்டு வேதனையாக இருக்கிறது.

  சுதந்திரம் பெற்றதை நாம் முறையற்ற தனமாக பாவிக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி...

   சுதந்திரம் வாங்கியது வரைக்கும் சரிதான்..

   நம்மவர்கள் நமக்குக் கொடுத்ததை அதிகமாகக் கொடுத்து விட்டார்கள்..
   அது தான் வயிற்றைக் கலக்கிக் கொண்டிருக்கிறது...

   நீக்கு
  2. சுதந்திரம் பெற நம் முன்னோர் அடைந்த துயரங்கள் கொடுமையானவை தான் கில்லர்ஜி. அதை எல்லோரும் உணர வேண்டியது அவசியம்.

   நீக்கு
  3. நம்மவர்கள் நமக்குக் கொடுத்ததை அதிகமாகக் கொடுத்து விட்டார்கள் - உண்மை துரை செல்வராஜூ ஐயா.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. மனம் கனக்கும் பதிவு ....

  எத்தனை எத்தனை வேதனைகளும் வலிகளும் தாண்டி இந்த சுதந்திரம் என்னும் காற்று நம்மை வந்தடைந்துள்ளது...


  அதற்கான பெருமையையும், கீர்த்தியையும் இன்னும் நாம் சரியாக புரிந்து கொள்ளவும் இல்லை, உபயோகப்படுத்தவும் இல்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எத்தனை எத்தனை வேதனைகள், வலிகள்.... உண்மை தான் அனுப்ரேம் ஜி.

   சுதந்திரத்தின் பெருமையும் கீர்த்தியும் நம்மில் பலருக்கும் புரிவதில்லை.

   நீக்கு
 9. அருமை. காட்சிகளில் கூட சொல்ல முடியாததை தங்கள் எழுத்து சொல்லி விடுகிறது.

  பதிலளிநீக்கு
 10. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

  தற்போது, தங்களது அந்தமானின் அழகு – பகுதி 6 பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

  உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  பதிலளிநீக்கு
 11. தண்டனைகளை படிக்க படிக்க மனம் கனத்து போனது.

  //சுதந்திர இந்தியாவினைப் பெற நம் முன்னோர்கள் எத்தனை எத்தனை கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார்கள். ஒவ்வொன்றும் வலி நிறைந்த கதைகள் தான்.//

  ஆமாம்.
  பாரதியாரின் கவிதைதான் நினைவுக்கு வருது.
  //மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
  நூலோர்கள்செக்கடியில் நோவதுவுங்க காண்கிலையோ?//

  படங்களும் மனதை வருத்தப்பட வைக்கிறது. அன்று தன் உடல் நலம், தன் குடும்பநலம் மறந்து நாட்டுக்கு பாடு பட்டார்கள்.
  அவர்கள் எல்லோருக்கும் வீர வணக்கம் செய்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அவர்கள் எல்லோருக்கும் வீர வணக்கம் செய்வோம்// வணங்குவதோடு மட்டுமல்லாது அவர்கள் சொன்ன நல்ல விஷயங்களையும் கடைபிடிக்கலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 12. எத்தனைவிதமான கொடுமைகள்... மனம் பதறுகிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒலி ஒளி காட்சியாக பார்க்கும்போது இன்னும் அதிகம் வலி இருந்தது தனபாலன். எத்தனை கஷ்டப் பட்டு இருக்கிறார்கள் நம் முன்னோர்.

   நீக்கு
 13. அன்பு வெங்கட்,'
  இந்தக் கொடுமைகளைப் படிக்கும் போது,
  இறைவன் இருக்கின்றானா என்றே கேட்கத் தோன்றுகிறது.
  ஆங்கிலேயர்கள், நம் தியாகிகளை
  மனிதர்களாக வே மதிக்கவில்லை.

  மிக அரிய தகவல்களை அறியக் கொடுத்திருக்கிறீர்கள்.
  பாரதியின் என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற அவலப் பாடல் நினைவில்.
  கிடைத்தும் தான் என்ன செய்தோம்.
  அரசியல் வாதிகளுக்குத் தாரை வார்த்து விட்டோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனிதர்களாகவே மதிக்கப்படாத நம் தியாகிகள்... இப்போதும் சிலர் இப்படித்தான் இருக்கிறார்கள் வல்லிம்மா...

   அரசியல்வாதிகளுக்கு தாரை வார்த்து விட்டோம் - உண்மை மா...

   நீக்கு
 14. கண் கலங்குவதைத் தவிர்க்க இயலவில்லை.நிகழ்வுகளும் அப்படி அதைச் சொல்லிப் போனவிதமும் அப்படி...தொடர வாழ்த்துகளுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களை கலங்க வைத்து விட்டதே... :(

   தொடர்ந்து பயணிப்போம் ரமணி ஜி.

   நீக்கு
 15. //ஒலி ஒளி காட்சிகளைப் பார்த்து நாம் வெளியே வரும்போது நிச்சயம் நமக்குக் கிடைத்த சுதந்திரம் எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கியது என்பது புரியும்...//

  வீர சாவர்கர் -- 1911--லிருந்து 1921 வரை பத்து ஆண்டுகள் அந்தமான் சிறையில் வாடி வதங்கியிருக்கிறார். இவரைப் பற்றிய புரிதல் தமிழ்நாட்டில் ஏன் சரிவர இல்லை என்பது நினைத்து வேதனையாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடுபட்டு வாங்கிய சுதந்திரம் - இங்கே பலவிதங்களில் பயன்படுத்திக் கொள்ளப் படுகிறது - தங்களது சுய முன்னேற்றத்திற்காக.

   அரசியல் அசிங்கங்கள் நிறையவே நடந்து கொண்டிருக்கின்றன ஜீவி ஐயா - எல்லா தரப்புகளிலும்! ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல!

   நீக்கு
 16. மனம் கனக்கின்றது சுதந்திரத்திற்க்காக தியாகிகள் பட்ட சித்திரவதைகளை நினைத்து. வேதனை இன்றைய மதிப்பை நினைத்து.

  மிக அருமையாக தொகுத்து எழுதியிருந்தீர்கள் - நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தியாகிகள் பட்ட அவதிகள் அதிகம் தான் ரமேஷ்.

   பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 17. சுதந்திரம் பெறுவதற்கு எவ்வளவு போராட்டம் செய்த தியாகங்கள் நினைக்கவே மனதுக்கு கனக்கிறது .இதை புரிந்து கொண்டால் நலமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எத்தனை எத்தனை போராட்டங்கள் - புரிந்து கொண்டால் நலமே - உண்மை மாதேவி.

   நீக்கு
 18. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அரவிந்த்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....