வியாழன், 12 மார்ச், 2020

கதை மாந்தர்கள் – திவச சாப்பாடு…அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை இனியதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

வாழ்க்கை என்பது சூரியன் அல்ல என்றும் முழுமையாக பிரகாசிக்கஅது நிலவைப் போன்றதுஅதில் தேய்பிறை, வளர்பிறை என அனைத்தும் இருக்கும். ஒரு நாள் மறைந்தும் போகும்…!
 
***

”நாளைக்கு அப்பாவோட திதி. திவசமா செய்யலைன்னாலும் யாரையாவது கூப்பிட்டு திருப்தியா சாப்பாடு போட்டு கொஞ்சம் காசும் கொடுத்து அனுப்பணும்… திவசம் பண்ணலாம்னா முடியறதா எனக்கு? அப்பா தவறிப் போய் நாற்பது வருஷம் ஆச்சு. என்னிக்கு என்னை அழைச்சுப்பான் எமதர்மராஜான்னு நானும் காத்துண்டு இருக்கேன் – ஆச்சு… சித்திரை வந்தா எண்பத்தி எட்டு வயசு! எனக்கு முன்னாடியே அழைப்பு வந்துருந்தா, இப்ப என் பையன் திவசம் பண்ணிண்டுருப்பான்!” வாசல் திண்ணையில் அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார் சோமநாதன்.    சென்னை நகரின் புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பு அது. குடியிருப்பில் இருக்கும் பெரியவர்கள் மாலை நேரம் ஆனால் குடியிருப்பின் வாசலில் இருக்கும் திண்ணைக்கு வந்து விடுவார்கள்.  உலக விஷயம் முழுவதும் அங்கே பேசிக் கொண்டிருப்பது அந்த பெரியவர்களுக்கு வழக்கம். அங்கே தான் சோமநாதன் தன் கவலையைச் சொல்லிக் கொண்டிருந்தார். 

அங்கே இருந்த பெரியவர்களில் ஒருவரான மாத்ருபூதம் என்கிற மாது “அவ்வளவுதானே சோமநாதா, எதுக்குக் கவலைப் படணும், எனக்குத் தெரிந்த ஒருத்தன் இருக்கான். அவனும் ’யார் இன்னிக்கு சாப்பிடக் கூப்பிடுவான்?’னு காத்திண்டு இருக்கறவன் தான். நான் சொல்லிடறேன் – கவலையே படாத.   நாளைக்கு எத்தனை மணிக்கு தோதா இருக்கும்னு நீ சொன்னா, நான் அவனை வர சொல்லிடறேன். வீட்டுல கேட்டுட்டு சொல்லு, சொல்லிடலாம்.  அடுத்த தெருவில் தான் இருக்கான் – ஆள விட்டு வரச் சொல்லிடலாம்” எனச் சொல்லிவிட சோமநாதனுக்கு நிம்மதி.  இத்தனை வருஷம் சொந்த ஊர்ல இருந்ததில் இந்த மாதிரி நாட்களில் பிரச்சனை இல்லை.  யாராவது சுலபமா கிடைச்சுடுவாங்க. இந்த சென்னை மாநகரில் இப்படி யாரையாவது வரச் சொல்லணும்னா ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கே என்று மாத்ருபூதத்திடம் சொல்லிக் கொண்டிருந்தார் சோமநாதன்.  அந்தக் குடியிருப்பில் இருக்கும் பலருக்கும் மாத்ருபூதம் தான் பல பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் ஆபத்பாந்தவன். 

அடுத்த நாள் எல்லா ஏற்பாடுகளும் செய்து காத்திருந்தார்கள் சோமநாதனும் அவரது மனைவி கமலாவும்.  மகன்கள் இருவருமே வெளிநாட்டில் இருக்க, வயதான காலத்தில் சோமநாதனும், கமலாவும் தான் இந்த வீட்டில். வெளிநாட்டு வாழ்க்கை தங்களுக்கு ஒத்து வருவதில்லை, கிராமத்து வீட்டில் வசதிகள் போறாது என்று சென்னை நகரின் இந்தக் குடியிருப்பில் அம்மா-அப்பா இருவருக்கும் பெரிய வீட்டினை வாங்கி தங்க வைத்திருக்கிறார்கள் அவர்களது மகன்கள். வீட்டு வேலைகளுக்கு ஆள் வைத்துக் கொண்டாலும், இன்னமும் சமையல் கமலாவின் கைப்பக்குவம் தான் – பல வருடங்களாகச் சமைத்துக் கொண்டிருந்தாலும் சமையலில் இருக்கும் ஆர்வம் அவருக்குக் குறையவே இல்லை. இதோ மாமனாரின் திதியான இன்றைக்கும் திவசத்திற்கு சமைக்கும் அத்தனையும் சமைத்து வைத்திருந்தார் கமலா. பாசிப்பருப்பு பாயஸம், தயிர் பச்சடி, மாங்காய் பச்சடி, மூன்று வகை பொரியல் (கறி), பொரிச்ச கூட்டு, பிரண்டை துவையல், களத்திற்கு பருப்பு (நெய்யுடன்), மோர்குழம்பு, மிளகு-சீரக ரசம், தயிர், வடை, அதிரசம், எள்ளு உருண்டை, சொஜ்ஜியப்பம் என  எல்லாம் சமைத்து வைத்திருந்தார் கமலா.  சோமநாதனும் கூட மாட ஒத்தாசை – காய்கறி நறுக்கித் தருவது போன்றவற்றை செய்து விடுவார்.சரியாக பத்தரை மணிக்கு மாத்ருபூதம் சொன்ன மனிதர் வந்து சேர்ந்தார்.  ஆர்ப்பாட்டமே இல்லாமல் நிதானமாக இருந்தார். அவரது முகத்தில் ஒரு தெளிவு. சிறிது நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவருக்கு பசி முகத்தில் தெரிந்தது.  அரை மணி நேரத்திற்குள் கடைசி நிமிட தாளிதங்களை முடித்து சாப்பிட அழைத்தார் கமலா.  வாழையிலையில் சமைத்து வைத்த உணவை பரிமாறினார்.  நின்று நிதானித்து, ருசித்துச் சாப்பிட்டார் அந்த மனிதர்.  எது வேண்டுமோ அதைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டதில் சோமநாதன், கமலா இருவருக்குமே ரொம்பவும் திருப்தி.  சாப்பிடுவதிலும் ஒரு நேர்த்தி – மேலே கீழே சிந்தாமல், ஒழுங்கான முறையில் சாப்பிட்டதோடு, எதையும் மீதம் வைக்காமல் சாப்பிட்டு முடித்தவர், அந்த வேளை உணவளித்த சோமநாதன் தம்பதியினருக்கும், இறைவனுக்கும் நன்றி சொல்லி, சமையல் நன்றாக இருந்தது என்ற பாராட்டுகளையும் சொல்லி எழுந்தார்.  கைகளைச் சுத்தம் செய்து கொண்டவரை, சிறிது நேரம் அமர்ந்திருக்கச் சொல்லி தாம்பூலமும் கொடுத்து கொஞ்சம் பணமும் வைத்துக் கொடுத்தார்கள். 

சோமநாதனுக்கு யாரோடாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும் – சொந்த ஊரில் இருந்தவரை நாள் முழுவதும் வீட்டில் யாராவது வருவதும் போவதுமாக இருக்க, அவருக்கு பொழுது போவது தெரியவே தேரியாது. சென்னையில் அதற்கு நேர் எதிர் – எத்தனை நேரம் டிவி பார்க்க முடியும், இல்லை எத்தனை நேரம் படுத்துக் கொண்டே இருக்க முடியும்.  அதனால் இப்படி யாராவது வந்து விட்டால் லேசில் விட்டுவிட மாட்டார். உட்கார வைத்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பது அவரது வழக்கம்.  சாப்பிட வந்தவர் சாப்பிட்டு முடிந்ததும், ”கொஞ்சம் சிரமப் பரிகாரம் செய்துட்டு அப்புறம் போகலாம்”-ன்னு சொல்லி உட்கார வைத்துவிட்டு அவரும் கமலாவும் சாப்பிட்டு முடித்தார்கள்.  மூவரும் சாப்பிட்டு முடித்தபின்னர் பாத்திரங்களை ஒழித்துப் போட்டு கமலாவும் வந்து சேர, சாப்பிட வந்தவரின் கதையைக் கேட்க ஆரம்பித்தார் சோமநாதன்.   சிலரது வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை. அந்த மனிதரின் வாழ்க்கையிலும் அப்படியே. குடும்பத்தின் மூத்த மகன் அவர் - அதன் பிறகு நான்கு குழந்தைகள். ஐந்து குழந்தைகளுக்கு தந்தையான பிறகு, ஏதோ நோயில் தந்தை இறந்துபோக, குடும்பத்தின் மொத்த பாரமும் அந்தத் தாயின் தலையில்!

தன் தாயின் சம்பாத்தியத்தில் எல்லா குழந்தைகளையும் காப்பாற்ற முடியாத நிலையில்  மூத்த மகனான இவரும் படித்துக் கொண்டே கிடைத்த வேலைகளைச் செய்து வீட்டின் ஆறு வயிறுகள் நிறைய உதவி செய்து வந்திருக்கிறார். அஞ்சல் வழி டிகிரி படித்து முடித்தாலும் நிரந்தரமான வேலை எதுவும் கிடைக்கவில்லை.  அம்மாவுக்கும் இவருக்கும் கிடைத்த சம்பளத்தில் இரண்டு தங்கைகளையும் கரை சேர்த்து தம்பிகள் இருவரும் படிக்க வைத்து – அவரவர் வழி தங்கைகளும், தம்பிகளும் போய்விட, இவர் நிமிர்ந்த போது வயது 45! அதன் பிறகு திருமணம் ஏது? அவருடைய அம்மாவும் இறந்து போனபோது அந்த மனிதருக்கு வயது ஐம்பது! யாருமே இல்லாத தனிமை – சொத்து எனப் பெரிதாக ஏதுமில்லை – ஒரு வீட்டில் முதிய பணக்காரப் பெண்மணிக்கு எடுபிடி வேலைகள் செய்து கொண்டு அவரது வீட்டிலேயே, தட்டுமுட்டு சாமான்கள் போட்டு வைத்திருக்கும் ஒரு அறையில் முடங்கிக் கொள்வாராம்.  தங்கைகள் இருவரும் – இவர் பார்த்து திருமணம் செய்து வைத்தவர்கள் – இவரை ”வீட்டுப் பக்கமே வராத – நீ வந்தா, எங்க வீட்டுல யாருக்கும் பிடிக்கலை”ன்னு சொல்லி விட, தம்பிகளும் அதே மாதிரி இருக்க, எல்லோருடைய எதிர்காலத்திற்கும் வித்திட்டவர் இப்போது தனிமரமாக நிற்கிறாராம்.

தனக்கென்று சேர்த்து வைத்திருந்த சில ஆயிரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டே வருவதால் தனது அந்திமக் காலத்திற்கு என்ன செய்யப் போகிறேனோ என்ற அச்சத்திலேயே வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது என்பதைச் சொன்னவர், தனக்கு சமீப காலமாக, கண்களும் தெரிவதில்லை – ஏதோ குத்து மதிப்பாகத் தான் நடந்து செல்வதாகவும், அன்றைக்குக் கூட இலையில் என்னென்ன எங்கே இருக்கிறது, என்ன சமையல் எனக் கேட்டுக் கேட்டுச் சாப்பிட்டதற்குக் காரணம் கண் சரியாகத் தெரியாதது தன் என்று சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்ட சோமநாதன் மற்றும் கமலா இருவருக்குமே மனதில் சோகம். சிகிச்சை செய்து கொள்ளலாமே எனக் கேட்க, ”இருக்கும் கொஞ்சம் பணமும் கரைந்து, சொட்டு மருந்து போடக்கூட யாரும் இல்லாத நிலையில், எப்படி ஆபரேஷன் செய்து கொள்ள?”  சோமநாதனிடம் பதிலே இல்லை. பாவம் இந்த மனிதர் – இனிமேல் அவ்வப்போது அவரை அழைத்து உணவளிக்க வேண்டும் என்று தங்களுக்குள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.  ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அந்த மனிதர் திருப்தியுடன் புறப்பட, சோமநாதன் திடீரென நினைவு வந்தவராக, “உங்க பேரையே சொல்லலையே? உங்க பேர் என்ன?” என்று கேட்க, அந்த மனிதர் சொன்ன பெயர்….

ராஜா!

***

நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

32 கருத்துகள்:

 1. கடைசியில் அவர் பெயரைக் கேட்டதும் பிலஹரியின் கதை நினைவுக்கு வந்தது! 

  இந்த மாதிரி மனிதர்களும் இருக்கிறார்கள். சோமநாதன் அவர் கண் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த மாதிரி நிறைய மனிதர்கள் உண்டு ஸ்ரீராம்.

   சோமநாதன் அவர் கண் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யலாம் - செய்யலாம். அதை ராஜாவும் ஏற்றுக் கொள்ள வேண்டுமே! சொட்டு மருந்து போடக்கூட ஆளில்லை - அதனால் இப்படியே இருந்துடறேன்னு சொல்லிவிட்டாராம்!

   நீக்கு
 2. ராஜா என்ற பெயரில் என்ன இருக்கிறது?..

  ஆனாலும் கதை நெஞ்சை அழுத்துகிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெயரில் மட்டும் ராஜா என்பதைத் தான் சொல்ல வந்தேன் துரை செல்வராஜூ ஐயா.

   கதை பற்றிய உங்கள் கருத்திற்கு நன்றி.

   நீக்கு
 3. ராஜாவின் வாழ்க்கை கதையாக தெரியவில்லை எனக்கு தெரிந்த பெரியவரின் வாழ்க்கையாக இருக்கிறது.

  இப்படி நிறைய நபர்கள் வாழ்கின்றார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்குத் தெரிந்த பெரியவரின் கதை - இப்படி நிறைய பெரியவர்கள் உண்டு கில்லர்ஜி.

   நீக்கு
 4. மனதைத் தொட்ட கதை.... தங்கள் பிற்காலத்துக்குப் பணம் சேர்த்துவைத்துக்கொள்ளவில்லை என்றால் ஆபத்துத்தான்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் பிற்காலத்துக்குப் பணம் சேர்த்து வைத்துக் கொள்ளவில்லை என்றால் ஆபத்து தான் - உண்மை நெல்லைத் தமிழன்.

   கதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 5. நாம் இப்படி அந்திமக் காலத்தில் ஜீவனத்திற்கு கஷ்டப்படுகிறவர்களின் கதைகளை அக்கறையோடு கேட்டாலே போதும் நம்மை அன்றாடம் அலைக்கழிக்கும் ஈகோவை அடித்து நொறுக்குவிடும்.ராஜா ஒற்றைச் சொல் ஏற்படுத்திய தாக்கம் வெகு நேரம் என்னுள்ளும்...வாழ்த்துகளுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்திமக் காலத்தில் ஜீவனத்திற்கு கஷ்டப்படும் நபர்களின் கதைகளைக் கேட்கும் பொறுமையும் அக்கறையும் வேண்டும் - அப்படிக் கேட்டாலே அவர்களுக்கு நிம்மதி கொஞ்சமாவது கிடைக்கும்.

   உண்மை தான் ரமணி ஜி. பலரது கதை நமக்கு பாடம் தருபவை.

   நீக்கு
 6. எல்லா ராஜாக்களின் வாழ்க்கையும் சுகமாக அமைந்துவிடுகிறதா? மனதை அழுத்தும் கதை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லா ராஜாக்களின் வாழ்க்கையும் சுகமாக அமைந்துவிடுவதில்லை - அதே தான் Bபந்து ஜி.

   நீக்கு
 7. எ.பி.யின் கே.வா.போ.க.வுக்கு இதே கருவுடன் கூடிய கதை ஒன்றை நானும் அனுப்பி வெளியிடவும் செய்தார்கள். அதைப் படித்தும் எல்லோருக்கும் வருத்தம்! இம்மாதிரி மனிதர்கள் கஷ்டத்தில் இருப்பதைத் தெரிந்து கொண்டால் மனம் கனக்கத் தான் செய்கிறது. சோமநாதன் தனக்கு இருக்கும் வசதிக்கு அவருடைய கண்ணை அறுவை சிகிச்சை செய்யப் பண உதவி செய்யலாம். மற்றபடி நல்ல கதை. யதார்த்தம். நடப்பது தான் இதுவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யதார்த்தம்... அதே தான். இப்படி நிறைய ராஜாக்கள். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அடுத்தவர்களுக்கு பாடம் தருபவை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 8. நிறையப் பதிவுகள் பாக்கி இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் படிக்கிறேன். கருத்துத் தணிக்கை செய்யப்பட்டு வெளியிடுகிறீர்களா என்ன? என்னோட முந்தைய கருத்து வெளிவரவே இல்லையே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடுபட்ட பதிவுகளை முடிந்த போது படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் கீதாம்மா...

   கருத்துத் தணிக்கை - சென்ற வாரம் நிறைய ஸ்பேம் கருத்துகள் - அதனால் தான் தணிக்கை.

   நீக்கு
 9. இராமேஸ்வரத்தில் திவசம் செய்ய அங்கு நடக்கும் நிகழ்வுகளில் பார்த்த உணர்ந்த சம்பவங்கள் வைத்து இது போன்ற ஒரு கதை என்னிடம் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களிடமும் ஒரு கதை உண்டு - முடிந்த போது பகிர்ந்து கொள்ளுங்கள் ஜோதிஜி.

   நீக்கு
 10. ராஜா?!

  ஒருவேளை சோற்றுக்கும், மருத்துவ செலவுக்கும் திண்டாடுபவருக்கு ராஜான்னு பேரா?! இதுதான் அர்த்தமோ?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது தான் அர்த்தமோ... பெயரில் மட்டுமே ராஜா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 11. கதை மாந்தர் ராஜா மனதுக்கு சங்கடம் கொடுத்தார்.
  சோமசுந்தரம் பண உதவி செய்யலாம்.
  ராஜாவின் உறவுகள் வளர்த்து ஆளாக்கியதை , செய்த உதவிகளை நினைத்து இலவசமாக கண் அறுவை சிகிட்சை செய்யும் இடத்திற்காவது அழைத்து சென்று பார்வை கிடைக்க வழி செய்யலாம்.மருந்து போட ஆள் இல்லை என்று இவர் அறுவை சிகிட்சை செய்யவில்லை என்கிறார், எப்படி கண் தெரியாமல் அந்த முதிய பெண் வீட்டில் வேலை செய்வார்? நிறைய கேள்விகள் அவர் எதிர்காலத்தைப்பற்றி மனதில் எழுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமூக அவலங்களுக்குப் பல வடிவங்கள்.
   ராஜாவுக்கு வயது 50 தானே.
   நல்ல சாப்பாடும், கண் சிகித்சையும் செய்து கொண்டால்
   சரியாகிவிடும்.
   இவர்களது முதிய நிலையில்
   இவர்களே வேலை கொடுத்து,
   பெரிய வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.

   பேசத் துணையாச்சு.
   கடைக்குப் போக ஆளாச்சு.
   வாழ நினைத்தால் வாழலாம்.
   கதை மிக அருமை. வாழ்த்துகள் வெங்கட்.

   நீக்கு
  2. கொஞ்சம் மங்கலாகத் தெரியும் கண்களோடு அந்த முதிய பெண்மணி வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார் கோமதிம்மா.

   கேள்விக்குறியான எதிர்காலம் என்பது உண்மை தான். நலமே விளையட்டும்.

   நீக்கு
  3. வாழ நினைத்தால் வாழலாம் - உண்மை வல்லிம்மா...

   நலமே விளையட்டும்.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 13. நல்ல, அருமையான கதை. ஆனால் ராஜா என்ற பெயருக்கு விளக்கத்தை வழங்கியிருக்கலாம். பெரிதாக எதிர்பார்க்க வைத்துவிட்டது. ஆனால் கதை சூப்பர். இந்தக் கதையை தொடராக , அனைத்து கதா பாத்திரங்களையும் இணைத்து எழுதலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெயரில் மட்டும் ராஜா - மற்றபடி அவருக்கு ராஜாவுக்கான எந்த வசதிகளும் இல்லை!

   கதையை தொடராக அனைத்து கதாபாத்திரங்களையும் இணைத்து எழுதலாம் - லாம்! யாரேனும் எழுதுகிறார்களா எனப் பார்க்கலாம் சிகரம் பாரதி.

   நீக்கு
 14. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

  தற்போது, தங்களது கதை மாந்தர்கள் – திவச சாப்பாடு… பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

  உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலை ஓலை - வாழ்த்துகள். அறிமுகம் விரைவில் எழுத முயற்சிக்கிறேன் - பணிச்சுமைகளுக்கு நடுவே வலைப் பக்கம் வருவதே கடினமாக இருக்கிறது சிகரம் பாரதி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....