ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

தி கோட் - குறும்படம்அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்தப் பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை – நம் துன்பங்களும் அப்படியே தான் – சார்லி சாப்ளின்.

இந்த ஞாயிறில் மீண்டும் ஒரு ஹிந்தி மொழி குறும்படம் பற்றிய தகவலுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  ஒரு அனாதை இல்லம்.  அங்கே வசிக்கும் குழந்தைகளில் இரு சிறுவர்கள் –  ராஜு மற்றும் ஜும்ரூ தான் பிரதான கதாபாத்திரங்கள். இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அவ்வப்போது யாரேனும் வந்து கொடுக்கும் துணிகளை, அளவு பார்த்து பிரித்துக் கொடுக்கிறார்கள்.  இல்லத்தின் அருகே இருக்கும் பள்ளிக்கு  வரும் குழந்தைகள் அனைவருமே போட்டுக் கொண்டு வரும் Coat மீது ராஜூவிற்கு அளவு கடந்த ஆசை – தனக்கு யாரேனும் ஒரு கோட் கொடுக்க மாட்டார்களா என. ஒவ்வொரு முறை துணி மூட்டை வரும்போதும் கோட் இருக்கிறதா எனப் பார்த்து ஏமாற்றத்துடன் இல்லத்தின் வாயில்கதவிற்கு அருகே நின்று கோட் அணிந்து பள்ளி செல்லும் சிறுவர்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதே அவனுக்கு வேலையாக இருக்கிறது.  அந்த சமயத்தில் கோட் அணிந்த ஒருவர் இல்லத்திற்கு வருகிறார்.  அவர் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளில் ஒருவரை தத்து எடுத்துக் கொள்ள வந்திருப்பவர். 

பார்த்த மாத்திரத்திலேயே அவருக்கு ராஜூவை பிடித்து விடுகிறது.  தத்து எடுத்துக் கொள்ள வேண்டிய சம்பிரதாயங்களை ஆரம்பிக்கிறார்கள்.  இல்லத்திலிருந்து புறப்படும் முன்னர் ராஜூவை இல்லத்தில் இருக்கும் பூங்காவில் சந்திக்கிறார் அந்த மனிதர்.  விரைவில் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்கிறார் ராஜூவிடம்.  வீட்டுக்கு வந்தா வேலை செய்யணுமா? எனக் கேட்கும் சிறுவன் ராஜூ மனதைத் தொடுகிறார். பல இடங்களில் இப்படித்தான் நடக்கிறதே. ஆமாம் – ”நீ படிக்கணும், ஹோம் ஒர்க் பண்ணனும், சாயங்கால வேளைகளில்  என்னுடன் விளையாடணும்” இது தான் உனக்கு வேலை என்று சொல்கிறார். சிறிது நேரம் இருந்து விட்டு புறப்பட, ராஜூ அந்த மனிதரை அணைத்துக் கொண்டு விடுகிறார்.  அங்கிருந்து விலகிச் செல்கிறார். அந்த மனிதரும் அங்கே இருந்து செல்கிறார்.  செல்லும் முன்னர் பூங்காவில் கழற்றி வைத்த கோட்-ஐ மறந்து விடுகிறார்.  பூங்காவிலேயே கிடக்கிறது அந்தக் கோட்.  அதன் பின்னர் அந்த மனிதர் வந்தாரா? ராஜூவிற்கு ஒரு வீடு கிடைத்ததா? அவன் ஆசைப்பட்ட படி கோட் கிடைத்ததா? என்பதையெல்லாம் சொல்லி இருக்கிறார்கள் இந்தக் குறும்படத்தில்.

சுமார் 15 நிமிடங்கள் ஓடக் கூடிய குறும்படம்.  மனதைத் தொட்ட குறும்படம்.  உங்களுக்கும் இந்தக் குறும்படம் பிடிக்கலாம்! பார்த்து விட்டு பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என வரலாம். அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!


நண்பர்களே, இந்தக் குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? இந்தக் குறும்படம் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

30 கருத்துகள்:

 1. சார்லி சாப்ளின் கூறிய பொன்மொழி அற்புதம்...

  இந்தப் பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை தான்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 2. சார்லி சாப்ளின் மொழி ஆறுதல் அளிக்கிறது. குறும்படக் கதை மனதைத் தொடுவதாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சார்லி சாப்ளின் மொழி இன்றைய சூழலுக்குப் பொருத்தமானதே.

   குறும்படம் மனதைத் தொடும் ஸ்ரீராம்.

   நீக்கு
 3. குறும்படம் அவசியம் பிறகு காண்கிறேன் ஜி

  பதிலளிநீக்கு
 4. குறும்படம் கண்டேன் ஜி மனதை வருத்தியது பாவம் சின்ன சின்ன ஆசைகள்.

  ஒரு மனிதர் 14 லட்ச ரூபாயில் கோட் அணிந்த விசயமும் பாழாப்போன மனதில் வந்து போனது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் - மனதைத் தொட்ட படம் தான் கில்லர்ஜி. சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேறியிருக்கலாம்.

   நீக்கு
 5. /// Video unavailable
  Watch this video on YouTube.
  Playback on other websites has been disabled by the video owner. ///

  நல்லவேளை... தனியாக இணைப்பு கொடுத்தீர்கள்... YouTube சென்று பார்க்கச் செல்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் யூ ட்யூப் சில சமயங்களில் மற்ற தளத்தில் காணொளிகளை பதிவிட விடுவதில்லை. முதலில் சேர்த்தாலும் பின்பு நீக்கி விடுவார்கள். அதனால் தான் தனியாக இணைப்பும் தருகிறேன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. இன்றைய பொன்மொழி அருமை.

  குறும்படம் மிக அழகாக எடுக்கப்பட்டதுடன் மனதைத் தொட்டது. அந்தச் சிறுவன் மிக நன்றாக நடித்திருக்கிறான்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய பொன்மொழியும், குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

   நீக்கு
 7. வாசகம் அருமை.

  குறுபடம் மனதை தொட்டது.
  கண்ணீரை வரவழைத்து விட்டது. குழந்தை அழைத்து சென்றவரின் சிறு குழந்தை எதிர்ப்பார்ப்புகள், தான் அழைத்து செல்லும் சிறுவனிடம் மாலை தான் தன் அப்பாவுடன் விளையாட ஆசைபட்டதை நிறைவேற்றிக் கொள்ள நினைத்தது எல்லாம் அருமை. மனிதர்களிடம் தான் எத்தனை எதிர்ப்பார்ப்புக்கள்?

  குழந்தையின் உலகம் தனி உலகம் அவர்களுக்கு கிடைத்த நட்பு மிக அருமை. தன் நண்பனின் ஆசை அந்த கோட் அதை வாங்கி அவனுக்கு கொடுக்க ஓடும் நட்பு மிக அருமை.கோட் போட்டு கொண்டு குதுகலிக்கும் குழந்தை எல்லாம் அற்புதம்.
  தன்னை அழைத்து செல்வார் என்று காத்து இருக்கும் போது கோட் பையில் அவன் படம் கிடைத்த குதுகலிப்பு எல்லாம் அருமை.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

   நீக்கு
 8. சார்லிசாப்ளினின் வாசகம் அருமை ஆமாம் ஜி எதுவுமே நிரந்தரம் இல்லை...இப்போதையதும் கடந்து போகும். அதுவரை நாம் நல்லதை நினைத்திருப்போம்.

  குறும்படம் மனதை என்னவோ செய்துவிட்டது. அவர் இன்னும் சில நாட்களில் வருவேன் என்று சொல்லிவிட்ட்டுச் செல்லும் போது கொஞ்சம் யூகித்தேன் அவருக்கு ஏதேனும் ஆகுமோ என்று....

  பாவம் அப்பையன். அவரது கோட்டை அவருடையது என்று தெரியாமலேயே போட்டுக் கொண்டு ...அவன் அவரிடம் கேட்பது எல்லாமே மனதை தொட்டது. பாவம் இப்படியான குழந்தைகள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் மற்றும் குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

   நீக்கு
 10. அன்பு வெங்கட்,
  கோட் கிடைத்து விட்டது. ராஜுவுக்கு. அந்தப் பருவத்தில்
  பெற்றோர் இல்லாத அவனுக்கு
  அதுவே ஆதாரம். மனத்தை உருக்கிவிட்டது இந்தக் குறும்படம்..
  ஏன் இந்த சோகம்.
  அப்பாவாகவந்தவரின் நடிப்பு மிகப் பிரமாதம். குழந்தையின்
  முக பாவங்கள் எத்தனை எத்தனை.
  மிக அருமையான குறும்படம். நன்றி மா. வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லிம்மா...

   குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 11. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 12. சப்ளின் மொழி சறுக்காது
  குறும்பட அறிமுகம் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு/குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி யாழ்பாவாணன்.

   நீக்கு
 13. பதில்கள்
  1. ஆங்கிலத்தில் சப் டைட்டில் உண்டு கார்த்திக். தைரியமாக பார்க்கலாம்!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....