செவ்வாய், 28 ஏப்ரல், 2020

பார்த்ததும் கேட்டதும் – தில்லி நண்பர்களின் கவனிப்பு…


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஓஷோ அவர்களின் ஒரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

கூர்ந்து கவனிக்கும் ஒரு சாதாரணக் கலையை தெரிந்து கொண்ட மனிதனிடம் ஒரு பொன் சாவி உள்ளது. பிறகு அது கோபமோ, ஆசையோ, நளின உணர்வோ அல்லது காதலோ, அல்லது காம உணர்வோ, எதுவானாலும் பரவாயில்லை. அது எந்த வகை வியாதியாய் இருந்தாலும் இருக்கலாம். அது பரவாயில்லை. ஒரே மருந்து வேலை செய்யும். நன்கு கவனி! அதிலிருந்து நீ விடுதலை பெறுவாய்!

சமீபத்தில் எங்கள் பிளாக் கேஜிஜி அவர்கள் எங்கள் ப்ளாக் வாசகர்கள் & ஆசிரியர்கள்' வாட்ஸ் அப் குழுவில் எழுத்தார்வம் கொண்ட எல்லோருக்கும் ஒரு சிறிய பயிற்சி என்று “சுற்றிலும் உங்கள் கண்களில் படும் காட்சிகள், காதில் விழுகின்ற ஒலிகள் இவற்றை மட்டும் (உங்கள் கற்பனைகள் அல்லது எண்ணங்களைக் கலக்காமல்) எழுதுங்கள். நீங்கள் எழுதியவை ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் இருக்கலாம். அது பற்றி கவலை வேண்டாம்.” என்று தகவல் அனுப்பி இருந்தார்.  அதனை எழுத்தார்வம் மிக்க நண்பர்களுக்கும் அனுப்புங்கள் என்று சொல்லி இருந்தார்.  நானும் தில்லி நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன்.  மூன்று நண்பர்கள் எழுதி அனுப்பி இருந்தார்கள். அதில் நண்பர் சுப்ரமணியன் அவர்களுடையது மட்டுமே கேஜிஜி அவர்களுக்கு அனுப்பி வைத்தேன் – அதனை அவரும் அவரது நம்ம ஏரியா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.  எனக்கு வந்த மூன்றுமே இன்றைக்கு இங்கே பதிவாக. ஓவர் டு தில்லி நண்பர்கள்…


ஞாயிற்றுக் கிழமை ஞாயிறு தோன்றி ஒரு மணி நேரத்தில் எழுதல்! உப்பரிகையில் பறவைகளின் உதய ராகம். தேனீரை ருசித்தபடி தினசரியை நோக்க எங்கும் கொரானாவின் கோர தாண்டவம். அன்பு மகளின் பிறந்த நாள் இன்று – வாழ்த்தக் காத்திருப்பு.  தினசரி பிஸ்கட்டிற்காக அழைக்கும் காகம் கரையத் தொடங்கியது. தொலைக்காட்சி தொல்லைக்காட்சி ஆகியதால் பார்க்க மனமில்லை. ஆரஞ்சு விற்பவர் “சந்த்ரே” என கூவிக் கொண்டிருந்தார். என்ன அப்புவில் (WhatsApp) அனைவரையும் காலை வணக்கத் தொல்லை படுத்தியாயிற்று. ஞாயிற்றுக் கிழமை ஆனதால்  வாராந்திர “சஹஸ்ரநாமம்” சொல்ல ஆயத்தம். அருகாமையில் உள்ள ஒருவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டதில் பல மருத்துவமனைகள் மறுத்திட வேறு ஒருவர் தொலைபேசி மூலம் ஏற்பாடு செய்தார் – ஆர். சுப்ரமணியன், புது தில்லி.

***

அருகில் இருக்கும் மரத்தில் பழம் சாப்பிட்டு கொண்டு இருந்த பறவைகளின் காட்சி மற்றும் அந்த பறவைகளின் சப்தம்.  இடையிடையே காக்கை கரையும் சப்தம் மற்றும் அணில் எழுப்பும் ஒலி. தூரத்தில் எங்கோ குக்கூ சப்தம். சாலையில் செல்லும் ஒரு வாகனத்தின் சப்தம் தொடர்ந்து பக்கத்தில் உட்கார்ந்து கணவர் தேனீர் அருந்தும் சப்தம் கூடவே கைப்பேசியில் காணொலியின் சப்தம் தொடர்வது மகளின் பேச்சு சப்தம்!  இடையிடையே மீன் தொட்டியில் மீன்கள் அந்த தொட்டியில் இருக்கும் கற்களில் விளையாடும் போது எழும்பும் சப்தம்.  ரெங்காஜீ கொஞ்சம் சத்தமாகவே இராசி பலன் படிக்கிறார் கூடவே பக்கத்து வீட்டில் நாற்காலியை இழுக்கும் சப்தம்!   தூரத்தில் எங்கோ பெயர் தெரியாத ஒரு பறவையின் டொர்... டொர்,. என்றொரு வித்தியாசமான சப்தம் . இந்த எல்லா சப்தங்களும் மின் விசிறியின்  சப்தத்தின் கூடவே ...!  ஓ! குழாயில் தண்ணீர் கொட்டும் சப்தம்!  தண்ணீர் வந்து விட்டது! ஐந்து நிமிடங்கள் முடிந்தது.  – நிர்மலா ரெங்கராஜன், புது தில்லி.

***

வீடே அமைதியாக இருந்தது. ஃபோன் அழைப்பு பகலில் எப்போதாவதுதான் வரும்! நண்பர் சொன்னதுபோல் முயற்சிப்போமே என்று நானும் அமைதியாக இருந்து நடந்தவற்றை பதிவு செய்துள்ளேன்.  அவ்வப்போது  என்னை சுற்றி திடீரென்று பறவைகளின் இனிமையான ஓசைகளுக்கிடையிடையே காக்கைகள் கரைவது, காற்றின் சலசலப்பு என்று ரம்யமாகவே இருந்தது! இடையிடையே வீட்டு கிச்சனில் சமையல் வேலையில் ஈடுபடுத்தி கொண்டிருந்த மனைவியின் கை பட்டு பாத்திரங்களின் ஓசையும் கேட்டுகொண்டு எனது சிந்தனையை கலைப்பதாகவே இருந்தது. போகட்டும் என்று பொறுத்துக் கொண்டு இருந்தால், அவ்வப்போது, ஏங்க எப்ப பார்த்தாலும் போனும் கையுமாக இருக்கீங்க, வீட்டு வேலை ஏதாவது செய்யலாமே என்று சொல்லும் மனைவி!  எரிச்சல், காதில் விழாத மாதிரி அமைதியாக இருந்தேன். கடந்த 3 வாரமா இப்படியே ஒரு வேலையும் செய்யாமல் ஃபோனை தேய்த்துவிட்டு இருக்கும் என்னை,  டிபன் பாஸ்தா தயார்  செய்து சாப்பிடச் சொல்லியாச்சு, அப்பாடா இப்போதைக்கு இது போதும் என்ற நினைவோடு ஆர்பாட்டம் இல்லாமல் சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஃபோன் தடவல் தொடர்கின்றது. – ரெங்கராஜன், புது தில்லி.

***

என்ன நண்பர்களே, பார்த்ததும் கேட்டதும் என நண்பர்கள் எழுதி அனுப்பியது உங்களுக்குப் பிடித்ததா? அவர்களது எண்ணங்களைப் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். 

கூடவே ஒரு தகவல்:  சென்ற செவ்வாய் அன்று ஷிம்லா ஸ்பெஷல் என்ற தலைப்பில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான ஷிம்லா மற்றும் அதன் அருகே இருக்கும் குஃப்ரி, நார்க்கண்டா பகுதிகளுக்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து மின் புத்தகமாக வெளியிட்ட தகவலை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம் இந்தப் பதிவு படிக்காதவர்கள் சுட்டி வழி சென்று அங்கே படித்து மேலும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த கிண்டில் மின் புத்தகத்தினை இன்று மதியம் 12.30 மணியிலிருந்து மே 2-ஆம் தேதி வரை அமேசான் தளத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஐந்து நாட்களுக்கு மட்டும் இந்த இலவச தரவிறக்கம் செய்யும் வாய்ப்பு.  அமேசான் கணக்கு இருந்தால் கிண்டிலிலோ அலைபேசி/கணினி ஆகியவற்றில் வாசிக்கலாம்.  இலவசமாக தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே…


இன்றைய பதிவு பற்றியும் மின்புத்தகம் பற்றிய உங்கள் கருத்துகளையும் பின்னூட்டம் வழி சொல்லுங்கள்.

நாளை வேறு ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

32 கருத்துகள்:

 1. பெரும்பாலும் மனதில் விரையும் எண்ணங்களை கவனத்தில் கொள்ள மாட்டோம். கவனத்தில் எடுத்தால் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம்.

   மனதில் விரையும் எண்ணங்களை கவனத்தில் கொள்வதில்லை என்பது உண்மை தான் ஸ்ரீராம்.

   நீக்கு
 2. கவனிக்க ஆரம்பித்தலே தியானத்தின் முதல் படி.

  ஐந்து நிமிடங்கள் கவனித்தால், நம் மனத்தின் எண்ணச் சிதறல்கள் தவிர பெரும்பாலும் எங்கும் அமைதி இருப்பது தெரியும். இயற்கை வழங்கும் குரல்களை நாம் இழப்பதும் புரியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவனிக்க ஆரம்பித்தலே தியானத்தின் முதல் படி - உண்மை நெல்லைத் தமிழன்.

   அந்த முதல் படியே பலருக்கும் சாத்தியமாவதே இல்லை.

   நீக்கு
 3. எல்லோரும் அந்த அந்த கணத்தை பதிவு செய்தவிதம் பாசாங்கற்று இயல்பாக இருந்ததால் இரசிக்க முடிந்தது..ஒருவரின் பதிவில் கணவர் காஃபி அருந்தும் சப்தம் சப்தம் என்பது மட்டும் ஏனோ படித்து முடித்தும் கவனத்தில்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர்களின் எழுத்து உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

   நீக்கு
 4. இதுவும் ஒருவகையான தியானம் போல தோன்றுகிறது. நம்மை, நம் சூழலை நம் கட்டுப்பாட்டுக்குள் கொணர, அதுபற்றி சிந்திக்க முயல்வது என்பதானது சரியான மதிப்பீடு. போற்றத்தக்க முயற்சி.
  நூலை வாசித்துவிட்டு எழுதுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுவும் ஒரு வகை தியானம் - ஆமாம் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   ஷிம்லா ஸ்பெஷல் பற்றி உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்/எழுதுங்கள்.

   நீக்கு
 5. Random thoughts - கலைந்த சிந்தனைகள் என்பது சரியா? -- என்ற தலைப்பில் ஓஷோ முதல் இறையன்பு வரை பலர் எழுதியிருக்கிறார்கள். நீங்கள் அந்த முயற்சியை பாமரரிடம் கொண்டு சென்றிருக்கிறீர்கள். அவர்கள் கொடுத்த சிந்தனைகள் நன்றாக உள்ளன என்றாலும் எங்கோ ஒரு செயற்கைத் தனம் காண்பதாக உணர்கிறேன். ஒரு வேளை எனது காது கேளாமை காரணம் ஆக இருக்கலாம். 
  ஓசோ தத்துவம் எனக்கு புரியவில்லை. அது ஆங்கிலத்தில் உள்ளபடியும்  தந்திருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். சில சொலவடைகள் அந்த மொழியில் தான் மறைப் பொருளை ரசிக்கச் செய்யும். what is that gold key? what does it open? 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   இது தமிழில் தான் நான் படித்தேன் - ஆங்கிலத்தில் அல்ல. கூர்ந்து கவனியுங்கள். விடை கிடைக்கலாம்! :)

   நீக்கு
 6. நண்பர்கள் வாழ்வு முறையும் சில நாட்களாக போகிறது...

  எனக்கு திருக்குறளும் பாடலும் என்று நேரம் போதவில்லை...

  மின்னூல் தொடரட்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //திருக்குறளும் பாடலும் என்று நேரம் போதவில்லை// அதானே...

   இங்கே அலுவலகப் பணிகள், வீட்டு வேலைகள் இடையிடையே வலைப்பூ என நேரம் சரியாக இருக்கிறது தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. மனசு சொல்றதை என்னிக்கு கேட்டிருக்கோம்..

  நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனசு சொல்றதை என்னிக்கு கேட்டிருக்கிறோம் - கேட்பதே இல்லையே ராஜி. :)

   நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

   நீக்கு
 8. தங்களின் மின்னூலாக்க முயற்சிகள் தொடரட்டும் ஐயா
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 9. நண்பர்களது எண்ணங்கள் ரசிக்க வைத்தது ஜி

  மின்நூல் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   மின்னூல்கள் தொடரவே எண்ணம் - பார்க்கலாம் எவ்வளவு தூரம் இந்த முயற்சிகள் தொடரும் என.

   நீக்கு
 10. மனிதன் தன்னிடம் இருக்கும் பொன்சாவியை உணர்வதே இல்லையே!
  திறக்க முடியாத பூட்டே கிடையாது சரியான சாவி வேண்டும் என்பார்கள், கவனித்தால் கிடைக்கும்.

  கவனித்தல் ஒரு கலை.

  நண்பர்கள் கவனித்தவை அருமை. மூவர் அனுப்பிய செய்திகளில் நான் கவனித்தவை எனக்கு பிடித்தவை,1. பறவைகளின் உதய ராகம்,2. பறவைகளின் சத்தம் 3. பறவைகளின் இனிமையான ஓசை.
  மின்னூல்கள் தொடர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

   தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. அன்பு வெங்கட்,
  அனைவரின் பதிவும் அவரவர் எண்ண ஓட்டத்தை விளக்குகிறது.
  திருமதி நிர்மலா ரங்கராஜன், திரு ரங்கராஜன், திரு சுப்ரமணியன்
  பதிவுகள் ஒரு மதியத்தின் ஓசைகளைத் தெளிவாகச் சொல்லி இருக்கின்றன.
  பாத்திரங்களின் ஒலி,மனதின் ஒலி, எண்ணங்களைப் பிரதி பலிக்க
  எல்லாமே சுவை.
  சாவி மட்டும் கிடைத்தால் பேச்சு நின்றுவிடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

   நீக்கு
 12. மின்னூல்கள் வெளியீடு தொடரட்டும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்னூல்கள் - உங்கள் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி வல்லிம்மா...

   நீக்கு
 13. உங்கள் நண்பர்களின் கவனித்தல் நன்றாக இருக்கிறது.

  எண்ணங்கள் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கும் ஆனால் சுற்றிப் பார்த்து அனுமானிக்கத் தோன்றியதில்லை என்பதை விட அனுமானித்ததை மனதில் பதிய வைத்ததில்லை என்றே தோன்றுகிறது. இனி செய்ய வேண்டும். நல்ல ப்ராக்டிஸ்.

  கேஜி அவர்கள் நம்ம ஏரியா தளத்தில் கொடுத்திருந்தது என்று நினைக்கிறேன். அங்கு இன்னும் முழுமையாகச் செல்லவில்லை. செல்ல வேண்டும்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு
 14. முதல் நண்பரது கவனித்தல் குறிப்புகள் அங்கு வாசித்து எடுத்தும் வைத்துக் கொண்டு இருக்கிறேன்.

  மற்ற நண்பர்களின் நோட்ஸ் நல்லாருக்கு. நிர்மலா அவர்களின் கணவர் தானே ரெங்கராஜன் அவர்கள்? இருவரது கவனித்தலிலும் வித்தியாசங்கள் இல்லையா இதுதான் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் இருக்கும் பலரது கவனித்தலிலும் வித்தியாசங்கள் இருக்கும்.

  அதே போன்று நம்மிடம் சொல்லிக் கவனிக்கச் சொல்லுவதற்கும் சொல்லாமல் நம்மிடம் வந்து என்ன நீங்கள் இன்று காலையில் வாக்கிங்க் போகும் போது அல்லது காலையில் எழுந்ததும் என்னவெல்லாம் கவனித்தீர்கள் என்று கேட்பதற்குமே பெரிய வித்தியாசம் இருக்கும். திடீரென்று கேட்டால் கண்டிப்பாகப் பலருக்கும் நினைவு இருக்காது. கதை எழுதுபவர்கள் அல்லது ராஜாகாது கழுதை காது என்று வலையில் எழுதுவதானால் (ஹா ஹா ஹா) அல்லது படம் எடுக்க கையில் கேமராவுடன் (நான் மொட்டை மாடி சென்றாலுமே கையில் கேமராவுடன் ஹா ஹா ஹா) கண்டிப்பாகச் சுற்றிக் கவனிக்கத் தோன்றும். அப்படிச் சுற்றிக் கவனிக்கும் போது எழுதுவதற்கும் நிறைய மேட்டர் கிடைக்கும்.

  கௌ அண்ணா கொடுத்தது மிக மிக நல்ல பயிற்சி. நிறைய ஸ்வாரஸ்யங்கள் இருக்கும் இதில்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். நிர்மலா அவர்களின் கணவர் தான் ரெங்கராஜன்! ஒரே இடத்தில் இருக்கும் பலரது கவனித்தலிலும் வித்தியாசங்கள் இருக்கும். உண்மை.

   ராஜா காது - ஹாஹா.... அதானே பார்க்கறது/கேட்பது ஏதாவது விதத்தில் பயன் தருவது தானே.

   பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

   நீக்கு
 15. வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. எந்தவொரு விஷயத்திலும் ஆழமான கவனிப்பு என்பது அவ்விஷயத்திற்கு தீர்வு தரக்கூடிய பலனாக அமையுமென்பது தெரிந்து கொண்டேன்.

  அதை ஒட்டிய வித்தியாசமான பதிவு. எங்கள் ப்ளாக் ஆசிரியர் திரு கெளதமன் அவர்களின் அழைப்பிற்கிணங்கி, தங்களைச் சுற்றி நடக்கும் செயல்களின் கவனித்தலில் முழுமையாக ஈடுப்பட்ட தங்கள் நண்பர்களின் உணர்வுகள் சுவாரஸ்யமாக இருந்தது. ரசித்துப் படித்தேன்.

  ஒரு வாரமாக இரு கால்களின் வலி அதிகமாகி உள்ளது. இத்தனைக்கும் வீட்டு வேலைகளை எப்போதையும் விட அதிகமாக செய்து வருகிறேன். வேலைகளுடன் வலிகளையும் அதிகமாக கவனிப்பதில், பதிவுகளுக்கு உடனே வந்து கருத்திட இயலவில்லை. இதற்கும் ஒரு நல்ல தீர்வு கிடைத்தால், நலமாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகம் மற்றும் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   அடடா கால்வலி அதிகமாகி விட்டதா? கவனித்துக் கொள்ளுங்கள். விரைவில் உங்கள் கால் வலி குணமாக எனது பிரார்த்தனைகள்.

   நீக்கு
 16. நண்பர்கள் பகிர்வு ரசனை.

  இயற்கையையும் சூழலையும் ரசிப்பது மனதுக்கு இதமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயற்கையையும் சூழலையும் ரசிப்பது மனதுக்கு இதமே - நூற்றுக்கு நூறு உண்மை மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....