வியாழன், 30 ஏப்ரல், 2020

கதம்பம் – யானையின் ஓட்டம் – பலாப்பழ அப்பம் – பலாக்கொட்டை கட்லட் – உப்பு உருண்டை - காய்கறி


நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

உடல் சுகாதாரம் ஒருவன் உடல் செம்மையாக செயல்பட உதவுகிறது. மனச் சுகாதாரமே அவன் வாழ்க்கை செம்மையாக நடைபெற உதவுகிறது. 

யானையின் ஓட்டம்: 16 ஏப்ரல் 2020:அன்றாடம் இங்கு ஒரு யானை இப்படியும் அப்படியுமாக செல்கிறது. கீழே சென்று பார்க்காவிட்டாலும்  மணி ஓசை அசைந்து வருகிறதே. நேற்று காய் வாங்கிக் கொண்டிருந்த போது, எதிர்ப்புறத்திலிருந்து தூரத்தில்  யானையின் மேல் பாகன் அமர்ந்த படி வர யானை பொறுமையாக வந்து கொண்டிருந்தது.

இங்கு எங்கள் பகுதியில் மூன்று குதிரைகள் ஒன்றாக சுற்றிக் கொண்டிருக்கும். அதில் ஒரு குதிரை எங்கள் பக்கத்திலிருந்து சென்று கொண்டிருக்க.

தூரத்தில் குதிரையைப் பார்த்த யானை மிரண்டு பிளிறியது. அடுத்து வந்த வழியே திரும்பி ஓடத் துவங்கி விட்டது. இந்தக் குதிரை எதுவும் அறியாமல் வழக்கமான மேய்ச்சலை தொடர்கிறது. சற்று நேரம் கழித்து குதிரை மறைந்த பின்னால் யானையை சமாதானம் செய்து தான் கொண்டு சென்றனர்.

ஆச்சரியமாக இருந்தது. பலம் கொண்ட யானை இந்தக் குதிரையைப் பார்த்து ஏன் ஓட்டம் பிடித்தது என்று தெரியலை! யானை ஓடியதை சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன். நேரில் பார்த்தது இதுவே முதல் முறை!

இதை மகளிடமும், என்னவரிடமும் சொல்ல, அந்த யானை உன் ஃப்ரெண்ட் போல! என்று கலாய்க்கிறார் என்னவர் :)கதை கேட்டாச்சு! அடுத்து வயிற்றுக்கு... மாலை நேர நொறுக்குத் தீனியாக செய்த கேழ்வரகு புட்டு!! வாங்க! சுவைக்கலாம்!!

ஆதியின் அடுக்களையிலிருந்து – 17 ஏப்ரல் 2020:நட்புவட்டத்தில் பலாச்சுளைகள் தந்தார்கள். சில நாட்களுக்கு முன்னரும் தந்தார்கள். அதை அப்படியே சாப்பிட்டு விட்டோம். பலாக்கொட்டைகளை தேங்காய் போட்ட கறியாக (பொரியல்) செய்து சாப்பிட்டோம். ஒருநாள் சமையலுக்கு உதவியது. மகள் தான் " யாராவது பலாக்கொட்டைல கறி பண்ணுவாளா!! " என்று கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு பிடிக்கலை.

இம்முறை ஐந்து சுளைகள் கிடைத்தது. அதை மாலைநேரத்தில் ஏதாவது செய்து சுவைப்போமே என்று இணையத்தில் தேடியதில் கிடைத்தது இந்த ரெசிபி. பலாக்கொட்டைகளையும் எடுத்து வைத்திருக்கிறேன். ரெசிபியும் தேடி வைத்திருக்கிறேன். செய்தும் விட்டேன் – அந்த ரெசிப்பி – இதே பதிவில்!

ஒரிஜினல் ரெசிபிக்கு இங்கு க்ளிக்கவும். என்னுடையது கண்ணளவு.


முடிந்தால் செய்து சாப்பிடலாம். சுவை அபாரம். மகளுக்குப் பிடித்திருந்தது.

ஊரடங்கு – 1:  பை நிறைய காய்கறி - 18 ஏப்ரல் 2020இன்று காலையிலேயே எங்கள் குடியிருப்பின் வாசலில் கூட்டுறவு பண்டக சாலையின் காய்கறி வியாபார வண்டி! ஒலிபெருக்கியில் தெரிவிக்கிறார்கள்.

ஒரு டெம்ப்போவில் காய்கறிகளை பைகளில் போட்டு வைத்திருக்கிறார்கள். பை 100 ரூ...முன்பே போட்டு வைத்திருப்பதால் கூட்டம் கூடவில்லை. ஒவ்வொருவரும் பணத்தைக் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள். காய்கறிகளும் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கிறது. சிலருக்கு துணிப்பை சிலருக்கு யூரியாப் பை.

100ரூ பையில் இருக்கும் காய்கறிகள் - வெங்காயம், தக்காளி, உருளை, சேனை, வெண்டை, புடலை, மாங்காய், கோஸ், கத்திரி, பாகல், வாழைக்காய், கேரட், முருங்கை, எலுமிச்சை, .மிளகாய்.

நிச்சயம் மலிவு தான். தேங்காய் தனியாக வைத்துள்ளனர். 4 காய் 100ரூ. இவைத் தவிர இன்னும் சிலரும் காய்கறி மற்றும் பழங்கள் கொண்டு வந்து விற்கின்றனர். பூ வியாபாரமும் தான். இப்போ மல்லி சீசன். நேற்று மரிக்கொழுந்தும் விற்றனர்.

அத்தியாவசியப் பொருட்களும் வீட்டைத் தேடி வருகின்றன. பின்பு எதற்காக வெளியே செல்ல வேண்டும்! வீட்டிலேயே இருப்போம். அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுப்போம். கொரோனாவை விரட்டுவோம்.

ரோஷ்ணி’ஸ் கார்னர் – 18 ஏப்ரல் 2020:

மகள் வரைந்த ஓவியம் ஒன்று…ஆதியின் அடுக்களையிலிருந்து – பலாக்கொட்டை கட்லட்: – 18 ஏப்ரல் 2020நேற்று எனக்குக் கிடைத்த பலாச்சுளைகளில் அப்பம் செய்து பகிர்ந்திருந்தேன். இன்று பலாக்கொட்டையில் ஒரு காரசாரமான ஸ்நாக்.

காலையில் சாதம் வைக்கும் குக்கரிலேயே பலாக்கொட்டையும் வேகவைத்து விட்டேன். இப்போது அதை மிக்சியில் அரைத்துக் கொண்டு, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, .மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து, அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாவும் சேர்த்து பிசைந்து கட்லட் வடிவில் தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வாட்டி எடுக்க வேண்டியது தான்.

இதனுடன் துருவிய கேரட், கோஸ், பட்டாணி போன்றவையும் சேர்க்கலாம். ரஸ்க் தூளில் புரட்டியும் போட்டு எடுக்கலாம். இவை எல்லாவற்றையும் வதக்கியும் சேர்க்கலாம். துருவிய பனீரும் சேர்க்கலாம். எண்ணெயில் போட்டு பொரித்தும் எடுக்கலாம். நம் விருப்பம் தான்.

நான் எளிமையான முறையில் செய்துள்ளேன். சுவை அபாரம். மாலை நேரத்தில் செய்து சாப்பிட ஏற்றதொரு ஸ்நாக்.

ஊரடங்கு – 2 – உப்பு உருண்டை: – 19 ஏப்ரல் 2020

இப்போதைய சூழலில் எல்லா நாளும் ஞாயிறு போலவே தோன்றுகிறது. பரபரப்பு இல்லாத நாட்கள். நேற்று மாலை மொட்டைமாடிக்குச் சென்று சில மணி பொழுதை கழித்து விட்டு வந்தோம். அங்கு குடியிருப்புத் தோழிகள் சிலர் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். என்னைப் பார்த்ததும், "அண்ணா நல்லா இருக்காங்களா!! டெல்லியில எப்படி இருக்கு சூழல்!! எல்லாம் கிடைக்குதா!! "கொரோனாவால வீட்டுக்குள்ளேயே இருந்து இன்னும் கலர் ஆயிட்டீங்க!! எப்படி பொழுது போகுது? புதுசா என்ன ட்ரை பண்ணினீங்க?? என்று தோழிகளிடமிருந்து விசாரிப்புகள். நாங்களும் சிறிதுநேரம் அவர்களின் அரட்டையில் கலந்து கொண்டு வீட்டுக்கு வந்தோம்.

செக்கச் சிவந்த வானமும், இதமான காற்றும் மனதை வருடிச் சென்றன. மகள் எடுத்த புகைப்படம் தான் நீங்கள் பார்ப்பது. இரவு உணவாக உப்பு உருண்டையும், தேங்காய் சட்னியும் செய்து சுவைத்தோம். ஏறக்குறைய பிடி கொழுக்கட்டை போல் தான். வயிற்றுக்கு கெடுதல் செய்யாத பண்டம். அவ்வப்போது செய்யலாம் என்று மனதில் முடிச்சுப் போட்டுக் கொண்டேன். உப்பு உருண்டை ரெசிபிக்கான சுட்டி கீழே!
அப்பாவுக்கு செல்ல மகளாக இருந்த போது இடியே விழப் போகிறது என்றாலும் இரவு 8:30 மணிக்கு மேல் நான் முழித்திருந்ததில்லை. நாங்கள் சாப்பிட்டவுடன் ஒரு ஓரமாக படுத்து உறங்கி விடுவேன். அம்மா சாப்பிட்டு, அந்த இடத்தை எச்சலிட்டு துடைத்து காய்ந்தவுடன் படுக்கை விரிப்புகளை போட்டு, அப்பா என்னை எழுப்பி தன் மேல் சாய்த்துக் கொண்டு என் இடத்தில் படுக்க வைப்பார். ஆச்சரியமாக இருக்கு பின்பு ஒவ்வொரு காலகட்டத்திலும் என் தூங்கும் நேரங்கள் மாறிப் போனது. இப்போது 10:30 மணி. இன்றைய நாள் எல்லோருக்கும் இனிமையான நாளாக அமையட்டும்.

என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்.


48 கருத்துகள்:

 1. குறளை நினைவு படுத்மும் வாசகம் நன்று.

  கதம்பத்தின் சில பகுதிகளை ஃபேஸ்புக்கில் பனித்தேன். சில இங்கே...

  ரோஷ்ணி ஓவியத்துக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

   வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   முகநூலிலும் இங்கேயும் படித்து ரசித்தமைக்கு நன்றி.

   நீக்கு
  2. படுத்மும் - படுத்தும்; பனித்தேன் - படித்தேன்! என்றே படித்தேன் ஸ்ரீராம்.

   தட்டச்சுப் பிழைகள் :) அலைபேசி வழி தட்டச்சு செய்யும்போது ரொம்பவே கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.

   நீக்கு
  3. பணிக்குக் கிளம்பும் அவசரம் வேறு!

   நீக்கு
  4. பரவாயில்லை ஸ்ரீராம். அவசரத்தில் இருந்து இருப்பீர்கள் எனத் தெரியும்.

   நீக்கு
 2. பலாப்பழ அப்பத்தைவிட, அதாவது ஸ்வீட்டை விட, கார கட்லெட் கவர்கிறது. செய்து விடலாம். உப்பு உருண்டை சுட்டி சென்று பின்னர் பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிப்பை விட காரம் கவர்கிறது - எங்கள் வீட்டில் இனிப்பு தான் அதிகம் பிடித்திருக்கிறது என்கிறார்கள்!

   உப்பு உருண்டை - பாருங்கள் ஸ்ரீராம்.

   நீக்கு
  2. //பலாப்பழ அப்பத்தைவிட, அதாவது ஸ்வீட்டை விட, கார கட்லெட் கவர்கிறது// - என்ன ஸ்ரீராம் இது. எனக்கு பலாப்பழ அப்பம் படத்தைப் பார்த்து செய்துபார்க்கவும் சுவைக்கவும் மிகவும் ஆசை வந்துவிட்டது. வெகு விரைவில் செய்யணும் (ஆனால் பாருங்க..இந்தப் பிரச்சனைனால நான் முழு பலாப்பழம் 150-200 ரூபாய்க்கு வாங்கி, உரித்து சுளை எடுத்து..ஏகப்பட்ட வேலை. பார்க்கலாம். பணியாரச் சட்டியும் வாங்கணும்)

   நீக்கு
  3. பலாப்பழம் கிடைக்கிறதா உங்கள் பெங்களூரில்... கிடைத்தால் வாங்கி செய்து பாருங்கள் நெல்லைத் தமிழன். தில்லியில் நான் பலாப்பழம் சுவைக்க வாய்ப்பே இல்லை! இங்கே காய் தான் கிடைக்கும்.

   நீக்கு
  4. உங்களுக்கு ஸ்வீட் பிடிக்கும், எனக்குக் காரம் பிடிக்கும் நெல்லை. இன்று வீடு திரும்பும்போது A2B யிலிருந்து தேங்காய் போளி, லட்டு, குலோப்ஜாமூன், பட்டர் முறுக்கு, ஸால்ட் பிரெட் வாங்கி வந்தேன்!

   நீக்கு
  5. A2B பட்டியல் - ஆஹா... போளி எனக்கு இப்பவே வேணுமே ஸ்ரீராம்! இங்கே பெரும்பாலான உணவகங்கள் மூடியே இருக்கின்றன. சிறு கடைகளில் நம்கீன் பாக்கெட்டுகள் தீர்ந்து போய்விட்டது - எல்லாம் பத்து இருபது பாக்கெட்டுகள் அள்ளிச் சென்று விட்டதால்! மாலை நேரத்தில் தேநீருடன் கொறிக்க ஒன்றும் கிடைப்பதில்லை இப்போது.

   நீக்கு
 3. பலகாரங்களின் படங்களே ஆசையை தூண்டுகிறது ஓவியம் அருமை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   மகளை வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 4. செக்கச் சிவந்த வானம் ஆகா...!

  ஒவியம் அருமை...

  100 ரூபாய்க்கு காய்கறிகள் பரவாயில்லை...

  பலாச்சுளை அப்பம் + கட்லட் + உப்பு உருண்டை : பசியை தூண்டுகின்றன...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செக்கச் சிவந்த வானம் - படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   பதிவின் பகுதிகளை நீங்களும் ரசித்ததற்கு நன்றி.

   நீக்கு
 5. ரோஷ்ணி அழகோவியம்

  தின்பண்டங்கள் பார்வை விருந்து

  ஸ்ரீரங்கத்தில் நல்ல வேளை எல்லாம் கிடைக்கின்றன. தப்பித்தோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரிஷபன் ஜி.

   நீக்கு
 6. இங்கு மாநகராட்சி மூலம் வாங்கிய காய்கறிகள் சரியாக இல்லை. அணைத்து பகுதிகளுக்கும் அவர்கள் வண்டி செல்வதில்லை. அதேபோல் வருவதும் தெரிவதில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பகுதியில் நன்றாக இல்லையா... திருச்சியில்/திருவரங்கத்தில் நன்றாகவே இருந்தது என்று சொன்னார்கள். வரும்போது ஒலிபெருக்கி வழியாக தகவல் சொல்லிக் கொண்டே வருவதால் தெரிந்து கொள்வது சுலபமாக இருக்கிறதாம் எல்.கே.

   நீக்கு
 7. பலாச்சுளை கிடைத்தால் கட்லெட் பண்ண சொல்றேன் ஆனாலும் காரம் இருந்தால்தான் இங்கு செலவாகும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலாச்சுளை கட்லெட் அல்ல - பலாச்சுளையில் அப்பம்; பலாக் கொட்டையில் தான் கட்லெட்!

   பலாக்கொட்டையில் கட்லெட் காரசாரமாக இருந்தது என எழுதி இருக்கிறார் கார்த்திக்.

   நீக்கு
 8. இன்று மாலை எங்க வீட்டில் ராகி புட்டுதான் செய்யலாம்ன்னு இருக்கேன்..

  பலாப்பழ கொட்டையில் குருமா, பொரியல் செய்ததுண்டு. கட்லட்?! கிடைக்கும்போது செய்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. சுவை..
  பதிவும் பதிவின் விஷயங்களும்...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 10. வாசகம் அருமை.

  அனைத்தும் அருமை. ரோஷ்ணியின் ஓவியம் அழகு.

  ஆதியின் அனைத்து சமையல் படங்களும் செய்திகளும் முகநூலில் பார்த்தேன்.
  அருமையாக செய்து இருக்கிறார். படங்களும் அழகு.

  யானை ஏன் ஓடியது தெரியவில்லையே !

  இங்கும் எங்கள் வளாகத்திற்கு 100 ரூபாய் காய் வந்தது, நன்றாக இருந்தது.
  வருடப்பிறப்புக்கு 100ரூபாய்க்கு பழங்கள் கொடுத்தார்கள்.
  இப்போது ஏனோ வருவது இல்லை.

  இயற்கை முறையில் விளைவித்த காய் கொண்டு வருகிறார் ஒருவர். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வருகிறார். அவரிடம் வாங்கி கொள்கிறோம், பலசரக்கு பொருட்களும் கொண்டு வருகிறார். நமக்கு வேண்டுவதை சொன்னால் வாங்கி வந்து தருகிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

   பலசரக்குப் பொருட்கள், காய்கறிகள் வீடு தேடி கொண்டு வந்து தரும் அந்த நபருக்கு ஒரு சல்யூட்.

   நீக்கு
 11. மகள் வரைந்த குழந்தை ஓவியம் அழகு. கண் பார்வை, தாடை, உதடுகள் வரைய மட்டும் லேசாக பயிற்சி பெற்றால் போதும்.
  அந்த மொறுமொறுவைப் பார்த்ததும் அதிர்சமாக்கும் என்று நினைத்தேன். பலாப்பழக் கொட்டை போட்டு குழம்பு வைத்தால் அமிர்த்தமாக இருக்குமே. கொட்டை முந்திரி பருப்பு போலவே சுவையாக இருக்கும்.

  இது குரோனா காலம். அதான் குதிரையைப் பார்த்து யானை மிரண்டு ஓடியது போலும்.

  எதையும் அமைதியாக, நிதானமாக, விவரமக எழுதும் முறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓவியம் குறித்த உங்கள் பார்வையை மகளிடம் சொல்கிறேன் ஜீவி ஐயா. இன்னும் சிறப்பாக வரைய பயிற்சி உதவும்.

   அதிரசம் - :)

   பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 12. கதம்பம் நன்றாக இருந்தது.

  காய்கறிகள் கிடைக்கவில்லை என்று சொல்லியிருந்த நினைவு. இப்போது காய்கறி கிடைப்பதில் மகிழ்ச்சி. இந்த மாதிரி 100 ரூ பாக்கெட், வாங்குபவருக்கும் விற்பவருக்கும் சுலபம்.

  சென்னையிலிருந்து பெங்களூர் வந்தபோது கடைசி நேரத்தில் கிச்சனில் பெரும்பாலான பாத்திரங்களை எடுத்துக்கொண்டு வரவில்லை. அப்படியே விட்டுவிட்டோம். அதில் ஒன்று நான் ஸ்டிக் பணியாரம் pan. விரைவில் வாங்கணும். பலாப்பழ அப்பம் மிகவும் கவர்ந்தது. விரைவில் வாங்கி, செய்து, எபிக்கு அனுப்பணும் (காப்பிரைட்டுலாம் கிடையாது ஹா ஹா)

  எனக்கு கட்லெட் எப்போதுமே விருப்பமாக இருந்ததில்லை.

  எனக்குமே.... இரவு 9 மணிக்குப் படுப்பது பலப்பல வருடப் பழக்கம். இங்க வந்து அது கெட்டுப்போய்விட்டது. விரைவில் சரி செய்யணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   காய்கறிகள் - நேற்று கூட இந்த பை காய்கறிகள் வந்தன என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

   பணியாரம் Pan இருப்பது ஒரு விதத்தில் வசதி தான் நெல்லைத் தமிழன்.

   இரவு தூங்குவது எனக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக ஆகிவிட்டது. சரி செய்ய வேண்டும்.

   நீக்கு
 13. "எரும மாடு ஜெயிச்சிருச்சு! நாம ஊருக்கு போரோம்~" இந்த கும்கி பட தம்பி ராமையா டயலாக் ஞாபகம் வந்தது குதிரைய பார்த்து யானை ஓடிய சம்பவம் படிக்கும்போது. சென்ற வாரம் தான் "கோவை முதல் டில்லி வரை" நூல் படித்ததால் பயம் குரித்து ஐய்யா அடித்த கிண்டல் புரிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கும்கி பட டயலாக் - ஹாஹா...

   மின்னூல் படித்துக் கொண்டிருப்பது அறிந்து மகிழ்ச்சி அரவிந்த். உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள்.

   நீக்கு
 14. ரோஷ்ணி ஓவியமும், ஆதியின்ன் சுவை மிகு
  பலகாரங்களும் சிறப்பு.
  அன்பு மகளும் தாயும் சிறக்க வாழ்க. யானை ஓடியத்தை நினைத்து இன்னும் சிரித்து கொண்டிருக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

   நீக்கு
 15. குறிப்புகள் எல்லாமே அருமை!
  மகளின் ஓவியம் மிகவும் அழகு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 16. பலகாரங்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. பலாப்பழம் சீசனில் வீட்டில் சில பதார்த்தங்கள் செய்வதுண்டு.

  ரோஷ்னியின் ஓவியம் சிறப்பாக உள்ளது. யானை குதிரையைப் பார்த்து ஓடியதா? ஆச்சரியமாக உள்ளது.

  அனைத்தும் அருமை

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யானை குதிரைக்கு பயந்து ஓடியது சிரிப்பு தான்.

   மகளின் ஓவியத்தினை பாராட்டியதற்கு நன்றி துளசிதரன் ஜி.

   பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 17. ஆதி முதல்ல கண்ணில் பட்டது அந்த பலாப்பழப் பணியாரம் தான். சூப்பரா இருக்கு நல்லா வந்திருக்கு...

  நம்ம வீட்டில குழிப்பணியாரமா, அப்புறம் வட்டலப்பமா (முட்டை இல்லாம) இலைப்பணியாரமா/இலை அப்பம் என்றும் சக்க வரட்டி என்றும் இலைப்பணியாரத்துக்கு சக்கை வரட்டி செஞ்சு வைச்சுட்டா வருஷம் முழுவதும் இருக்கும் கெடாம அதுலருந்து எடுத்து எப்ப வேணா இலைஅப்பம், பணியாரம் எல்லாம் செஞ்சுருவாங்க எங்க வீட்டுல.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இலையப்பம், சக்கவரட்டி - கேட்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது. இங்கே மலையாள நண்பர்களின் வீட்டு திருமணங்களில் சுவைப்பதோடு சரி கீதாஜி.

   நீக்கு
 18. யானை ஓடியதா? அதுவும் குதிரையைப் பார்த்து? வியப்பாக இருக்கே. ஒரு வேளை இது நாட்டிற்குள் வளர்க்கப்படும் யானை இல்லையா? காட்டு யானையின் குணம் - மனிதனால் வளர்க்கப்படும் யானையின் குணம் கொஞ்சம் வித்தியாசப்படும் என்றே தோன்றுகிறது.

  கேழ்வரகு புட்டு சூப்பர். உப்புப் புட்டுதானே? இல்லை திதிப்புப் புட்டா?

  காய்கள் விலை குறைவுதான். இங்கும் எங்களுக்கு வேனில் வீட்டு வாசலில் காய் வரும். அரசு வகையறா இல்லை. நார்மல் சந்தையில் விற்பவர்கள் இப்போது வேனில் கொண்டு வந்து விக்கிறாங்க. அதுவும் விலை ரொம்ப ரீசனபிள்தான். கோஸ் அரைகிலோ 10 ரூ. மற்றவை கூட எல்லாம் கிலோ 40க்குள்தான்.

  சித்திரைச் செவ்வானம் சிவக்கக் கண்டேன் (சிரிக்கவுக்குப் பதில்!!!) சூப்பரா இருக்கு!!

  ராக்ஃபோர்ட் ரோஷ்னிக் குட்டி ராக்ஸ்! ! நல்லாருக்கு ஓவியம். வாழ்த்துகள் ரோஷினி!

  உப்புக் கொழுக்கட்டை நல்லா வந்திருக்கு...உப்புமா கொழுக்கட்டை/பிடி கொடுக்கட்டை...நல்லா வந்திருக்கு.

  நானும் சீக்கிரம் தூங்கும் டைப். 9 க்கு கண் சொக்கத் தொடங்கிடும்...இப்ப லாக்டவுன் .கணினி கிடைக்கும் நேரம் பார்த்து என்பதால் இப்ப 9.30 10 ஆகிடுது. சில நாட்கள் மட்டும் அமெரிக்காவில் ஊள்ள நெருங்கிய உறவினர் அழைப்பு என்றால் மெசேஜ் என்றால் லேட்டாகும். அது ரேர் தான். மத்தபடி நல்லா தூங்கிடுவேன்.

  அனைத்தும் ரசித்தேன் ஆதி..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

   நீக்கு
 19. குதிரையை கண்டு யானை ஓடியதற்கு காரணம் ... யாராவது "குதிரை" என்று சத்தமாக கூவி இருக்கலாம். அது யானையின் காதில் "கொரானா" என்று விழுந்து தொலைத்தோ என்னவோ .... மேலும் அந்த மூன்று குதிரைகளும் நம்முடைய மோடி அய்யா தொடர்ந்து வலியுறுத்திவரும் "சமூக இடைவெளி" யை கடைபிடிக்காமல் இருந்திருக்கலாம் ... இது கூட யானைக்கு பயத்தை ஏற்படுத்தி இருக்கலாம் !!! .... மேலும் குழந்தையின் ஓவியம் அருமை !!!... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யானை ஓடியதற்கான காரணங்கள் - :)

   ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிவா.

   நீக்கு
 20. செக்கச் சிவந்த வானம் மிக அழகு. மகளுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....