இயற்கை வடித்த பாலம்...
அந்தமானின் அழகு – பகுதி
25
முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி19 பகுதி 20 பகுதி 21
பகுதி 22 பகுதி 23 பகுதி 24
அனைத்து நண்பர்களுக்கும்
இனிய காலை வணக்கம். இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
விட்டுக்
கொடுப்பதும் மன்னிப்பதும் தான் வாழ்க்கை. ஆனால் வாழ்க்கையின் போராட்டமே, யார் விட்டுக்கொடுப்பது,
யார் மன்னிப்பது என்பது தான்…
இது என்ன என்று சொல்லுங்கள் பார்க்கலாம்...
இயற்கைப் பாலம் பகுதியில்..
தங்குமிடத்தில் மதிய உணவினை முடித்துக் கொண்ட பிறகு மூன்று
வாகனங்களில் நாங்கள் சென்று சேர்ந்த இடம் இயற்கைப் பாலம் என்று அழைக்கப்படும் ஒரு கடற்கரைப்
பகுதிக்கு. ஷாகீத் த்வீப் தீவில் பார்க்க வேண்டிய
முக்கியமான இடங்களில் இந்த இயற்கைப் பாலம் அமைந்திருக்கும் கடற்கரையும் ஒன்று. லக்ஷ்மண்பூர் கடற்கரை எண் 2 என்று இந்தப் பகுதியை
அழைக்கிறார்கள். நாங்கள் தங்கி இருந்த Tடாங்gகோ
Bபீச் ரிசார்ட் லக்ஷ்மண்பூர் கடற்கரை எண் 1-இல் அமைந்திருந்தது. சுமார் 3.5 கிலோமீட்டர் தொலைவு பயணித்து இயற்கைப்
பாலம் அமைந்திருக்கும் பகுதிக்கு வந்து சேர்ந்தோம். அழகான சூழலில் அமைந்திருக்கும் இந்தப் பகுதிக்கு,
நம் வாகனத்தில் செல்லும்போது சிறிது தூரம் முன்னரே நம்மை இறக்கி விட்டுவிடுகிறார்கள். மேட்டுப் பாங்கான பகுதியான அந்த இடத்திலிருந்து
சிறிது தூரம் நடந்தே செல்ல வேண்டியிருக்கும். எங்கள் குழுவினர் அனைவரையும் ஒரு சேர அந்தப் பகுதி
வரை மூன்று வண்டிகளில் அழைத்துச் சென்ற விட்ட பிறகு நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். கற்கள் பதித்த பாதைகளில் நடக்கும்போது சிறு சிறு
கடைகள் இரு புறத்திலும் நம்மை வரவேற்கின்றன.
கடல் நீர் அரித்து பாறைகளில் வித்தியாச உருவங்கள்...
இயற்கை வடித்த பாலம் - இன்னும் சில படங்கள்...
கடைகளில் அந்தமான் தீவு படங்கள் போட்ட டி-ஷர்ட்டுகள், பலவித
அணிகலன்கள் முதற்கொண்டு வித்தியாசமான உணவுப் பொருட்கள், பழங்கள், பழரசங்கள் என பல விஷயங்களையும்
அங்கே விற்கிறார்கள். நிறைய கடைகள் இருப்பதால்
அவர்களுக்குள் நிறைய போட்டியும் இருக்கிறது. நம் கையைப் பிடித்து இழுக்காத குறையாக
அத்தனை பேரும் நம்மை அழைக்கிறார்கள். மேட்டுப்
பாங்கான பகுதியிலிருந்து கற்கள் பதித்த பாதை வழி கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். திரும்ப வரும்போது எப்படியும் படிகளில் ஏறி வர வேண்டியிருக்கும்
என்பதால் அப்போது தாகம் தீர ஏதாவது பழரசம்/எலுமிச்சைச் சாறு அருந்தலாம் என நினைத்துக்
கொண்டு, அழைத்தவர்களிடமும் சொல்லி விட்டு கீழே இறங்கிக் கொண்டிருக்கிறோம். குழுவினரில்
சிலர் கீழே இறங்காமல் கடைகளில் பொருட்களைப் பார்த்துக் கொண்டும் விலை பேசிக் கொண்டும்
இருந்தார்கள். அனைவரையும் கீழே அழைத்துச் செல்வதில் நானும் நண்பரும் குறியாக இருந்தோம்!
இயற்கை வடித்த பாலம் செல்லும் வழியிலிருந்து...
.பாறைகளில் மோதிச் சிதறும் கடல் அலை..
இயற்கை பாலம் அமைந்த கடற்கரையில் ஒரு காட்சி...
இயற்கை வடித்த பாலம் பார்ப்பதற்கு கீழ் நோக்கிச் செல்லும்
கற்கள் பதித்த பாதை இருந்தாலும், அது முடிந்த பிறகு சற்று கவனமாகச் செல்ல வேண்டியிருக்கும். நிறைய பாறைகள் நிறைந்த பகுதி என்பதோடு அல்லாமல்
பார்க்க ஏதோ சேறும் சகதியும் இருப்பது போல தோற்றமளிக்கும் அந்த இடத்தில் கவனமாக நடந்து
செல்ல வேண்டியிருக்கும். என்னதான் காலணி அணிந்து இருந்தாலும் கொஞ்சம் தவறினாலும் கீழே
விழும் அபாயம் உண்டு. அதனால் சர்வசாதாரணமாக
நடந்து சென்று விடமுடியாது. பார்த்து கொஞ்சம் கவனமாகவே செல்ல வேண்டிய இடம் இது. கொஞ்சம் கடினமாக இருந்தாலும், இந்தப் பாதையைக் கடந்து
சென்ற பிறகு நீங்கள் கண்டுகளிக்கக் கூடிய விஷயம் ரொம்பவே அழகானது என்பதால் இந்தக் கஷ்டங்களை
நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டியிருக்கும். கடற்கரையில்
காணப் பாகும் கடல்வாழ் உயிரினங்கள், இயற்கை வடித்த பாலம் , பவளப் பாறைகளில் வந்து மோதிச்
செல்லும் கடல் அலைகள் என அனைத்துமே அழகானது. அதனால் கொஞ்சம் கஷ்டப்பட்டாவது இந்த பாதையில்
நடந்து சென்று விடுவோம். நாங்கள் கவனமாகவே
நடந்தோம் என்றாலும் ஒன்றிரண்டு பேருக்கு சிராய்ப்புகளும் உண்டானது.
என்னவோ வித்தியாசமா இருக்கே எனப் பார்க்கும் நண்பர்...
இயற்கை வடித்த பாலம்...
கடலிலும் கரப்பான்பூச்சியோ?..
கடினமான பாதைகளைக் கடந்து இதோ வந்து விட்டோம். ஆகா என்ன அழகு அந்த இயற்கை வடித்த பாலம். பெரிய பவளப் பாறைகள் சேர்ந்து இயற்கையாக உருவான
பாலம் இது. இந்த ஊரில் பெங்காலிகள் அதிகம்
என்பதால் இந்தப் பாலத்தினை கொல்கத்தா நகரில் இருக்கும் பிரபலமான பாலமான ஹௌரா பாலம்
என்றும் அழைக்கிறார்கள் அவர்கள். பார்க்கவே
பிரமிக்க வைக்கும் பாலம் – பெரிய அளவில் பவளப் பாறைகள் ஒன்று சேர்ந்து கடல் நீரில்
சில இடங்களில் மட்டும் அரிப்பு ஏற்பட்டு கீழே வழியும் உருவாகி இயற்கையாகவே ஒரு பாலம்
போல அமைவது எத்தனை அழகு. இயற்கை ஒவ்வொரு இடத்திலும்
பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது. இயற்கையின் அழகை மனிதர்களாகிய நம்மால் தான் புரிந்து
கொள்ள முடிவதில்லை. புரிந்து கொள்ளாவிட்டால் கூட பரவாயில்லை, சிதைக்காமல் ஆவது இருக்கலாம்!
பல இடங்களில் இயற்கையின் கொடையைச் சீரழித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான் வேதனையான
நிதர்சனம்.
கடலின் பின்புலத்தில் நண்பரின் மகன் - சில்ஹோட் படம் எடுக்க ஒரு முயற்சி..
செல்லும் வழியில் நான்...
இயற்கை வடித்த பாலம் அருகே நான்...
இயற்கை வடித்த பாலம் அருகே நிறைய படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள்
அங்கே வரும் சுற்றுலாப் பயணிகள். நாங்களும்
நிறைய படங்களை எடுத்துத் தள்ளினோம். படங்கள்
எடுத்து முடிந்த பிறகு அங்கிருந்து நகர்ந்து, மேலும் உள்ளே சென்றோம். இந்த இடத்தினை
கடற்கரை என்று சொல்ல முடியாது – மணல்பாங்கான பகுதி இல்லை என்பதால் – பாறைகள் தான் –
அவ்வப்போது கடல் நீர் உள்ளே வந்து செல்கிறது – நிறைய உயிருள்ள பவளப் பாறைகளும், அங்கே
இருக்கும் பள்ளங்களில் உயிர் வாழும் விதம் விதமான கடல்வாழ் உயிரினங்களும் பார்க்கும்
அனைவருடைய மனதையும் கொள்ளை கொள்கின்றன. இங்கேயும்
சில வழிகாட்டிகள் இருக்கிறார்கள் – அவர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த கடல் வாழ்
உயிரினங்களையும், அவை பற்றிய தகவல்களையும் தருவதோடு, பவளப் பாறைகள் பற்றியும் சொல்கிறார்கள். நாமாகவே கவனமாக நடந்து சென்று கடல் வாழ் உயிரினங்களை
பார்த்து ரசிக்கலாம். நிறைய அளவில் உயிரினங்களை
அங்கே பார்க்க முடிகிறது. முடிந்த அளவு படங்களும்
எடுத்தோம்.
வித்தியாச உயிரினங்கள்..
பாறைகளின் மீது கவனமாக நடந்து கடல் அலைகள் அவற்றின் மீது
மோதுவதைப் பார்த்துக் கொண்டும் அங்கேயே படங்கள் எடுத்துக் கொண்டும் நிறைய நேரம் அங்கே
செலவழித்தோம். ரொம்பவே உற்சாகமான, வித்தியாசமான
ஒரு அனுபவமாக அந்த அனுபவம் இருந்தது. குழுவினர்கள்
பலரும் கடல் அலைகள் பாறைகளில் மோதுவதைப் பின்னணியாகக் கொண்டு படங்கள் எடுத்துக் கொண்டார்கள். நானும் நிறைய படங்கள் எடுத்தேன். என்னையும் நண்பரின் மகன் அவரது One Plus அலைபேசியில்
எடுத்தார். படங்களை எடுத்துக் கொண்டு, கடற்கரை,
மரங்கள், இயற்கை வடித்த பாலம் என பலவும் காணக் கிடைத்த அந்த இயற்கை எழிலை விட்டுப்
புறப்பட மனதே இல்லை. என்றாலும் புறப்பட்டுத் தானே ஆக வேண்டும். மீண்டும் பாறைகள் வழி
கவனமாக நடந்து சென்று கொண்டிருந்தோம். நண்பர் ஒருவரை தாழ்வான மரக்கிளை ஒன்று முடியில்லாத
தலையைப் பதம் பார்க்க, வேறு ஒருவர் படிக்கட்டில் மேல் நோக்கி நடக்கும்போது கால் வழுக்கி,
பச்சக் என கீழே அமர்ந்தார். நாங்கள் அனைவரும்
பதறிப் போக, அவரோ வேகவேகமாக “ஒண்ணும் இல்லை” என்று நடந்து போய் ஒரு பழரசக் கடையில்
அமர்ந்து கொண்டார்.
இயற்கை வடித்த பாலம் - இன்னுமொரு படம்...
இந்தப் பதிவில் என் படங்கள் அதிகமோ?...
(இங்கே என்னை வைத்து நிறைய படங்கள் எடுத்தார் நண்பரின் மகன்...)
திரும்பி வரும்போதும் கடைகளிலிருந்து அழைப்பு – ஒரு கடையில்
எலுமிச்சை ரசம் அருந்தினோம். நன்றாகவே இருந்தது.
போகும்போது பழரசம் அருந்துமாறு அழைத்த பெண்மணியிடம் திரும்பி வரும்போது வருகிறேன்
என்று சொல்லி இருந்தேன். நினைவாக அக்கடையைக்
கடக்கும்போது அழைத்து “திரும்பி வரும்போது வருகிறேன்” என்று சொன்னீர்களே என்று சொன்னார்
அந்தப் பெண்மணி. அந்தக் கடையில் நானும் சிலரும்
எலுமிச்சை ரசம் அருந்த, மற்றவர்கள் வேறு ஒரு கடையில் அருந்தினார்கள். குழுவினர் அனைவரும் தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக்
கொண்டு பொறுமையாக பாதைகள் வழி நடந்து வெளியே வந்தோம். எங்களைக் கொண்டு வந்து விட்ட வாகனங்களின் ஓட்டுனர்களில்
ஒருவரை அழைத்து வந்து சேர்ந்து விட்ட விஷயத்தினைத் தெரியப்படுத்த அவர் இருக்கும் இடத்தினைச்
சொன்னார். அங்கே சென்று வாகனங்களில் புறப்பட்டு
நாங்கள் தங்கி இருந்த இடத்திற்குத் திரும்பினோம்.
அதன் பிறகு என்ன செய்தோம், எங்கே சென்றோம் போன்ற தகவல்களை அடுத்த பகுதியில்
சொல்கிறேன்.
அந்தப் பகுதியில் இருந்த பழங்கள்.....
தொட்டாச் சிணுங்கி - இலைகளும் பூவும்...
இந்த இயற்கைப் பாலம் பகுதியில் எடுத்த படங்கள் நிறையவே. ஆனாலும் அனைத்துப் படங்களையும் இங்கே தருவது இயலாது
என்பதால் குறைவான படங்களையே இங்கே தந்திருக்கிறேன். முடிந்தால் பிறிதொரு சமயத்தில் படங்களை இணைத்து
ஒரு காணொளியாக மாற்றி பகிர்ந்து கொள்கிறேன்.
நண்பர்களே, இந்த
நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும்
ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
வாசகம் புன்னகைக்க வைக்கிறது. உண்மைதான் அது!
பதிலளிநீக்குமறுக்க முடியாத உண்மை தான் ஸ்ரீராம்.
நீக்குபடங்கள் அழகு. கடலிலும் கரப்பான் பூச்சி?!!! தலையில் மோதிக்கொண்ட நண்பர் அப்புறம் அழகான இடங்களைப் பார்க்கத் தவறி விட்டாரா?
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குகடலிலும் கரப்பான்பூச்சி - எனக்கும் அதே சந்தேகம் தான்.
தலையில் சிராய்த்துக் கொண்ட நபருக்கு அதிகம் அடிபடவில்லை என்பதால் தொடர்ந்து பயணத்தினை ரசித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீராம்.
அது வாழைப்பழமா?
பதிலளிநீக்குகீரா என ஹிந்தியில் அழைக்கப்படும் வெள்ளரி, அடுத்து ஸ்டார் ஃப்ரூட் என அழைக்கப்படும் பழம் மற்றும் கொய்யா. வாழை இந்தப் படத்தில் இல்லை ஸ்ரீராம்.
நீக்குஉலகம் சுற்றும் வாலிபன் எம்ஜியார் மாதிரி இந்தியாவை சுற்றும் வாலிபனாக நின்று அசத்துறீங்க வெங்க்ட்ஜி எல்லா பதிவுலேயும் சாப்பாட்டி மேட்டர் அழகான இடங்கள் எல்லாத்தையும் படம் எடுத்து பதிவு போடும் நீங்கள் வாலிபனான உங்களை சுற்றி வரும் பெண்களை மட்டும் சென்சார் செய்து போடுறீங்களா
பதிலளிநீக்குஹாஹா.... நல்ல சந்தேகம் உங்களுக்கு மதுரைத் தமிழன்! :)
நீக்குஇந்தியாவைச் சுற்றி வரும் வாலிபன் - அது சரி! இன்னும் நிறைய இடங்கள் இந்தியாவில் உண்டு. நான் பார்த்தது சுண்டு விரல் அளவு மட்டுமே! :)
வாசகம் குறித்துக்கொண்டேன் ஜி
பதிலளிநீக்குபாதைகள் பயமுறுத்துகின்றன...
இயற்கையை பாதுகாக்காவிட்டாலும் பரவாயில்லை மேலும் அழித்துக் கொண்டு வருகிறோம் என்பது வேதனையே...
படங்கள் ஸூப்பர் ஜி
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குபாதைகள் பயமுறுத்தினாலும் பார்க்கக் கிடைக்கும் காட்சிகள் சிறப்பாகவே இருக்கும் கில்லர்ஜி.
இயற்கையை அழித்துக் கொண்டே இருக்கிறோம் - வேதனையான உண்மை.
படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
இயற்கை வடித்த பாலம் வெகுவாக கவர்ந்தது ஜி...
பதிலளிநீக்குஇதுபோன்ற காட்சிகளை ரசிக்க கால்கள் என்ன வலி எடுத்தாலும் செல்லலாம்...
அனைத்து படங்களையும்... ம்ஹீம்... பொக்கிசங்களை கண்டிப்பாக slide show-வாக போடுங்கள்... நன்றி...
இயற்கை வடித்த பாலம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குகால் வலி எடுத்தாலும் செல்லலாம் - உண்மை தான்.
ஸ்லைட் ஷோவாக போடலாம் - விரைவில் சேர்க்கிறேன் தனபாலன்.
வழக்கம் போல படங்கள் அழகு. அதிலும் பாலத்தின் அடியில் நின்று அதன் வலிப்பத்தைக் காட்டும் படம் (படம் 5) சிறப்பு. சில்ஹவுத்தி படம் சரியில்லை என்பது எனது கருத்து.
பதிலளிநீக்குFocus should not be on the subject of silhouthe. It should be on the background. Moreover the subject should not occupy the full frame.
என்னடா இவன் நமக்கு சொல்லிக்கொடுக்கிறானே என்று எண்ணாதீர்கள். குறைகளை சுட்டுவது எனது வீக்னஸ் என்பது உங்களுக்குத் தெரியும்.
தாழை செடி பார்த்திருக்கிறேன். பூ பார்த்திருக்கிறேன். ஆனால் காய் என்பதும் உண்டு என்று தோன்றுகிறது.
கடல் வாழ் உயிரினங்கள் படம் அருமை. எல்லாம் coral வகையாகத் தோன்றுகிறது.
சொல்லி சொல்லி புகைப்படங்களில் புன்னகைக்க ஆரம்பித்து விட்டீர்கள். நன்று. படங்கள் உதவிய பையருக்கும் பாராட்டுக்கள்.
Jayakumar
படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குசில்ஹவுத்தி படம் - உங்கள் கருத்துகளைச் சொன்னதில் மகிழ்ச்சி. அடுத்த முயற்சியில் நினைவு கொள்கிறேன் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.
ஆமாம் தாழம்பூ செடியுடைய காய் தான் - நானும் அங்கே தான் பார்த்தேன்.
படங்களில் புன்னகை - :)
அது தாழங்காய்... தேவாரத்தில் பேசப்படுவது...
பதிலளிநீக்குநாம் ஒழித்துக் கட்டிய நல்லவற்றுள் இதுவும் ஒன்று...
தாழம்பூ புதருக்குள் சென்று தாழங்காயுடன் வருவது தனியான சாமர்த்தியம்...
கோயில் திருவிழாக்களுள் தென்னந்தோரணங்களுடன் பனங்குலைகளையும் தாழங்காய்களையும் கட்டுவது மரபு...
தாழங்காய் எங்கள் ஊரில் நான் பார்த்ததில்லை துரை செல்வராஜூ ஐயா. தாழம்பூ புதருக்குள் சென்று தாழங்காயுடன் வருவது தனியான சாமர்த்தியம் - முட்கள் இருப்பதாலா?
நீக்குமுட்கள் மட்டுமல்ல...
நீக்குவிஷமுடைய பாம்புகளும் அங்கிருக்கும்...
அடைசலான புதர்களை நீக்கி விட்டு உள்ளே புழங்குவார்கள்...
தாழை நார்களை பதப்படுத்தி பைகள் சிறு கூடைகள் செய்வார்கள்...
வீட்டுக்கு வெள்ளையடிக்க தாழம் மட்டைகள் தான்...
எல்லாவற்றையும் விட தாழம் பூவை மறந்து விட முடியுமா!...
தாழையில் பாம்புகள் இருக்கும் என்பதை அறிந்திருக்கிறேன். தாழையின் மற்ற பலன்களையும் உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். தாழம்பூ மறக்கமுடியாத வாசம். நன்றி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குஅழகிய படங்களுடன் - கடற்கரை அருங்காட்சியங்கத்தைக் கண்ட மாதிரி - பதிவு..
பதிலளிநீக்குவாழ்க நலம்...
படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குபடங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன
பதிலளிநீக்குநன்றி
படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஅந்தமான் போகும் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை வெங்கட்ஜி. உங்கள் மூலம் சுற்றி வருகிறேன். படங்கள் அனைத்தும் மிக அழகு. விவரணங்களும். மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குதுளசிதரன்
உங்களுக்கும் அந்தமான் செல்லும் வாய்ப்பு கிடைக்கட்டும் துளசிதரன் ஜி.
நீக்குபடங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
வாசகம் செம..அதுவும் ரெண்டாவது லைன்...அதே அதே..ஈகோ!
பதிலளிநீக்குமுதல் படமே அசத்தல். என்ன அழகான இயறற்கைப் பாலம்..ஆர்ச் போன்று வெகு அழகு..இரண்டாவது படம் முதலில் பலா போல் வித்தியாசமாக இருந்தாலும் ஆனால் பலா இல்லை. இலைகற்றாழை வகை போல இருக்கு..
//இயற்கை ஒவ்வொரு இடத்திலும் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது. இயற்கையின் அழகை மனிதர்களாகிய நம்மால் தான் புரிந்து கொள்ள முடிவதில்லை. புரிந்து கொள்ளாவிட்டால் கூட பரவாயில்லை, சிதைக்காமல் ஆவது இருக்கலாம்!//
உண்மை ஜி இயற்கையை ரசிக்கத்தெரியாதவர்களை என்ன சொல்ல...ஹூம்
படங்கள் எல்லாம் அட்டகாசம். பாறையில் அலை தெரிக்கும் காட்சிவாவ்..நானும் வைசாகில் எடுத்திருந்தேன். எப்ப கணினி சரியாகி வருமோ? அதில்தான் எல்லாம் இருக்கிறது.
தண்ணீர் பாறையில் பட்டு தெரிக்கும் படத்திற்கு அடுத்த படமும் அழகோ அழகு.
கீதா
வாசகம் - ஈடோ மிகப் பெரிய எதிரி தான் கீதா ஜி.
நீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
இயற்கையை ரசிக்கத் தெரியாதவர்களை என்ன சொல்ல?
பாறையில் அலை தெரிக்கும் காட்சி - நன்றி. உங்கள் கணினி விரைவில் சரியாகட்டும்.
ஹையோ அந்த பலா போன்று இருப்பது உள்ளே கூட நல்ல ஆரஞ்சு கலரில் இருக்கும்...அதன் பெயர் டக்குனு வாயில் வரலை...
பதிலளிநீக்குகரப்பான் பூச்சி போலவே இருக்கு அங்கு வாழும் இனமாக இருக்கலாம்
கடல்வாழ் உயிரினங்கள் படங்கள் ஆஹா போட வைக்கின்றன. நடுவில் இருப்பது பயமுறுத்துதே பாம்பு போல!! பெரிய மலைப்பாம்பு போல...ஒருவேளை கடல்பாம்போ/பாறை பாம்போ?
//பாறைகளின் மீது கவனமாக நடந்து கடல் அலைகள் அவற்றின் மீது மோதுவதைப் பார்த்துக் கொண்டும் அங்கேயே படங்கள் எடுத்துக் கொண்டும் நிறைய நேரம் அங்கே செலவழித்தோம். ரொம்பவே உற்சாகமான, வித்தியாசமான ஒரு அனுபவமாக அந்த அனுபவம் இருந்தது. //
ஹையோ வெங்கட்ஜி அதே அதே...கண்டிப்பாக எஞ்சாய் செஞ்சுருப்பீங்க..
நானும் வைசாகில் அப்படித்தான் படங்களாக எடுத்து தள்ளிவிட்டேன். பாறையில் மோதும் அலைகள் ஹையோ நேரம் சென்றதே தெரியவில்லை...
உங்க நண்பர் விழுந்தாலும் ஓடும் உற்சாக நபர்!!!
ஸ்டார் ஃப்ரூட்...இதில் சட்னி செய்யலாம் வேறுவிதமாகவும் சமைக்கலாம். வெரைட்டி வெள்ளரி, கொய்யா..
அழகான படங்கள் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. நல்ல அனுபவம் ஜி உங்களுக்கு
கீதா
முதல் படத்தில் இருப்பது தாழங்காய் கீதா ஜி. அதற்கு பயன் ஏதும் இருக்கிறதா, உணவாகப் பயன்படுமா என்பது தெரியவில்லை. ஆனால் விழாக் காலங்களில் கட்டி வைப்பார்கள் என துரை செல்வராஜூ ஐயா பின்னூட்டத்தில் எழுதி இருக்கிறார்.
பதிலளிநீக்குகடல்வாழ் உயிரினங்கள் - அசத்தல் தான் - எத்தனை எத்தனை வகைகள் இறைவன் படைப்பில்.
மிகவும் ரசித்த இடம் இந்த இயற்கைப் பாலம் இருந்த இடம்.
பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நான் அன்னாசி பழ பிஞ்சுன்னு நினைச்சுட்டேன் .
நீக்குஅன்னாசி பழம் : - அப்படித்தான் இருக்கிறதோ?
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
வித்தியாசமான் உணர்வைத் தந்தன வித்தியாசமான உயிரினங்களின் படங்கள் ...
பதிலளிநீக்குதொடர்க
படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கஸ்தூரிரெங்கன்.
நீக்குகடலிலும் கரப்பான் பூச்சி?!
பதிலளிநீக்குநிலத்தில் வாழும் அனைத்து உயிரினங்களும் சில மாற்றங்களோடு கடலிலும் இருக்குன்னு படிச்சிருக்கேன். அது உண்மையான்னு தெரில
நிலத்தில் வாழும் அனைத்து உயிரினங்களும் கடலிலும் உண்டு - இருக்கலாம் ராஜி.
நீக்குபுகைப்படங்கள் அருமை. அனைத்தையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குபயணம் பற்றி எழுதும் உங்கள் இடுகைகள் மெருகேறுவதையும் காண்கிறேன் (உங்களுக்கே இது தெரியும். உங்கள் முதல் பயணக் கட்டுரைக்கும் இப்போது எழுதும் விதத்திற்கும்)
படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.
நீக்குஇடுகைகள் மெருகேறுவதையும் காண்கிறேன் - நன்றியும் மகிழ்ச்சியும்.
வாசகம் மிக அருமை.
பதிலளிநீக்குதாழம்பூ மாதிரி இருக்கு இலை என்று நினைத்தேன். தாழங்காயா?
இயற்கை அமைத்த பாலம் மிக அருமை.
கடல்வாழ் உயிரினங்கள் பார்க்க அழகு.
நண்பர் மகன் உங்களை நன்றாக படம் எடுத்து இருக்கிறார்.
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...
நீக்குதாழங்காய் தான் மா.
படங்களும், பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வாசகம் அருமை. விட்டுக் கொடுத்தலில் யார் என்ற எண்ணம்தான் எப்போதுமே பிரச்சனையை குறைய விடாமல் பெரிதாக்குகிறது. ரசித்தேன்.
படங்கள் ஒவ்வொன்றும் அழகாக இருக்கிறது. இயற்கை பாலம்
படங்கள் ஒவ்வொரு கோணத்திலும் மிக அழகாக வந்துள்ளது அதன் பெயரும் நன்றாக உள்ளது.
கடல் காட்சிகளாக இரண்டு படங்கள்.. வானத்தின் வனப்போடு கூடிய அந்த அழகான கடற்கரை காட்சி, கடல் அலைகள் வந்து பாறைகளில் மோதி தெறித்து விட்டு ஓடும் காட்சி, இவை இரண்டையும் வர்ணிக்க வார்த்தைகளில்லை. மிகவும் அழகாக உள்ளது.
கடல்வாழ் உயிரினங்கள் எத்தனை வகையாக இருக்கிறது. பாறைகளின் மேல் அவை படிந்து கொண்டிருந்ததா ? நீங்கள் எப்படி அதையும் ரசித்தபடி அந்தப் பாறைகளிலும் கவனமாக நடந்து சென்றீர்கள்.? பாறைகளின் விதவிதமான அழகுகளும் மனதை கவர்கிறது. மொத்தத்தில் அங்கிருக்கும் இயற்கை வனப்புகளை பார்த்த பின் அதை விட்டு வெளியே வர மனம் வரவே வராததுதான்.
அத்தனைப் படங்களும் நன்றாக உள்ளது. நீங்கள் இருக்கும் படங்களையும் தங்கள் நண்பரின் மகன் அழகாக எடுத்துள்ளார்.
தாழங்காய் இன்றுதான் நானும் தங்கள் மூலம் அறிந்து கொண்டேன். தாழம்பூவில், நடுவில் மடல் மாதிரி தொட்டால் உதிரும் பகுதி மிகுந்த வாசமுடன் இருக்கும். அந்தப் பகுதிதான் காயாக மாறுகிறதோ ? காய் இதுவரை அறிந்ததில்லை. கடைசியில் பழங்களும், தொட்டால் சிணுங்கி மரமும் பார்க்க ரசனையாக உள்ளது. நீங்கள் விபரமாக அத்தனை விஷயங்களையும் பதிவில் எழுதியிருப்பது உங்களுடன் நாங்களும் உடனிருந்து அத்தனையையும் பார்த்து ரசித்த மகிழ்வை தந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதிவின் வழி சொன்ன விஷயங்களும் படங்களும் உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குஆஹா ... ஆஹா ... தாழம்பூ பார்த்திருக்கிறேன் ... ஆனால் "தாழங்காய்" என்று ஒன்று உண்டு என்பதனை இப்போதுதான் அறிகிறேன் ... இதற்காகவே உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் ... அப்புறம் அந்த கடல் உயிரினங்களை பார்க்கும்போது அழகாகவும் இருக்கிறது ..அதேவேளை கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது ... எதாவது விஷ ஜந்துக்களாக இருந்துவிட போகிறது .. கவனம் ... நன்றி !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
பதிலளிநீக்குதாழங்காய் - பலரும் இந்த தாழங்காயை அறிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது சிவா.
நீக்குகடல் உயிரினங்கள் - கொஞ்சம் பயமாகவே இருந்தது. கவனமாக இருந்தோம். நன்றி சிவா.
தாளம்காய் நமது நாட்டில் ஏராளம் கடற்கரைகளில் அநேகம் பழுத்தால் நல்ல செவ் நிறத்தில் மிகவும் அழகாக இருக்கும்.
பதிலளிநீக்குதாழங்காய் உங்கள் ஊரில் ஏராளம் - பழமாக அந்தமானில் காணக் கிடைக்கவில்லை. அதைப் பார்க்கும் நாள் எந்நாளோ?
நீக்குவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.