சனி, 25 ஏப்ரல், 2020

காஃபி வித் கிட்டு – புதுமைப் பித்தன் – டேட் – குப்பை – கவிதை – தேரடி வீதியில்


காஃபி வித் கிட்டு – பகுதி 64


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

நடந்து முடிந்த எதையும் நான் ஒரு போதும் கவனிப்பதில்லை. எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறேன் – புத்தர்.

இந்த வாரத்தின் பிறந்த நாள்:

செல்வம் என்ற கதையிலிருந்து ஒரு சிறு பகுதியைப் படிக்கலாம் வாருங்கள். இந்தக் கதையை எழுதியது யார், முழுக்கதையும் எங்கே படிக்கலாம் போன்ற விவரங்களை பிறகு தருகிறேன்.  கதையிலிருந்து ஒரு பகுதியைப் படிக்கலாமே!

சென்ட்ரலில் ஒரு கூட்டம் வந்து ஏறியது. இடம் வசதி பார்த்தாகி விட்டது. வந்தவரில் ஒருவர், வைதிகச் சின்னங்கள்; மெலிந்த தேகம் சுகமாகக் காலை நீட்டிக் கொண்டு சொல்லுகிறார்:  “செல்வம் இருக்கிறதே, அது வெகு பொல்லாதது. இன்று ஒரு இடத்தில் இருக்கும், நாளை ஒரு இடத்தில் இருக்கும்; அதோ அந்த வண்டிச் சக்கரம் போல. அதைத் துறந்தால்தான் மோட்சம்…”இப்படி அடுக்கிக்கொண்டே போகிறார்.  என் மனம் இருக்கிறதே, அது எப்பொழுதுமே இப்படித்தான். ஒன்றைக் கேட்டால் எதிர்த்தோ, பேசவோ செய்யாது. அப்படியே நீண்ட யோசனைகளை இரகஸியமாக என்னிடம் வந்து கொட்டும்.  இந்தச்செல்வம்என்ற சொல்செல்வோம் செல்வோம்என்ற பொருள்பட நின்றதாம். அதிலே தமிழுக்கு வேறே பெருமை. அதன்மீது, செல்வத்தின் மீது ஒரு வெறுப்பு உணர்ச்சிமுக்கால்வாசிப் பெயரிடம், ‘சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்என்ற தத்துவந்தான்.

செல்வம் சென்றுவிடுமாம்! அதனால் அதை வெறுக்க வேண்டுமாம். நீ வெறுக்காவிட்டாலும் தானே அது சென்றுவிடுமே! அது செல்லாவிட்டால், அந்தச் சகடக்கால் மாதிரி உருண்டு செல்லாவிட்டால், அதற்கும் இந்த மண்ணாங்கட்டிக்கும் என்ன வித்தியாசம்? ரூ..பை. வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? அது பண்டம் மாற்றுவதற்கு இடையிலே சங்கேதமாக வைத்துக்கொண்ட ஒரு பொருள். வெறும் பணத்தை உண்ண முடியுமா? உடுக்க முடியுமா? இது தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு வஸ்து. அது சென்று கொண்டிருப்பதினாலேதான் அதற்கு மதிப்பு.

இந்தக் கதையை எழுதியவர் புதுமைப் பித்தன் – முழுக்கதையும் வாசிக்க நினைத்தால் இங்கே வாசிக்கலாம்.  எதற்காக அவரின் கதை இங்கே இன்று என்று யோசிக்கலாம்! இன்றைக்கு புதுமைப் பித்தன் அவர்களின் பிறந்த நாள். 25 ஏப்ரல் 1906-ஆம் ஆண்டு பிறந்தவர் புதுமைப் பித்தன்.  அவரது சில சிறுகதைகள் மேலே உள்ள சிறுகதைகள் தளத்தில் இருக்கின்றன.  படிக்க விருப்பம் இருப்பவர்கள் படிக்கலாம்! நானும் அவருடைய சில கதைகள் படித்ததுண்டு. 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்:

இந்த வாரத்தின் விளம்பரமாக ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் ஒரு விளம்பரம் – ரொம்பவே மனதைத் தொட்ட ஒரு விளம்பரம்.  பாருங்களேன்.  
கிட்டுமணி:  ஒரு ரூம் வாடகைக்குக் கிடைக்குமா?

கிட்டுமணி சமீபத்தில் எங்கிருந்தோ நடந்து வந்து கொண்டிருந்தாராம். அப்போது எதிரில் ஒரு நபரைச் சந்தித்து இருக்கிறார்! பார்த்தபோது அவர் கிட்டுமணியிடம் கேட்ட விஷயம் பற்றி நீங்கள் கேட்டால் நீங்களும் கிட்டுமணியின் நிலையை எண்ணி சிரிப்பீர்கள்!  எதிரே வந்த நபருக்கு, எழுதும் வசதிக்காக சோமு என பெயர் சூட்டுவோமே! 

சோமு:  நான் ரிட்டையர் ஆயிட்டேன். அரசாங்க வீடு காலி செய்யணும்.  ஆறு மாசம் டைம் கொடுத்து இருக்காங்க.  ஒரு சிங்கிள் பெட் ரூம் வீடு வாடகைக்கு எடுத்து இருக்கேன். ஆனா எனக்கு அந்த வீடு பத்தாது. எங்கிட்ட நிறைய குப்பை இருக்கு. அதையெல்லாம் போட்டு வைக்க ஒரு ரூம் வேணும்! உங்க வீட்டில் போட்டுக்கலாமா? ஒரு மாசத்துக்கு 500 ரூபா வாடகை தந்துடறேன். அப்பப்ப வந்து குப்பையைக் கிளறி வேண்டாததை தூக்கிப் போட்டுடுவேன்.  ஒரு ஆறு மாசத்துக்கு தேவையா இருக்கும். உங்க வீட்டில் இடம் இல்லைன்னா, ஏதாவது வாடகைக்கு பார்த்து கொடுக்க முடியுமா?”

கிட்டுமணி: மனதுக்குள் – டேய் குப்பையைப் போட ஒரு ரூம் – அதுவும் என் வீட்டில் வேணுமாடா உனக்கு!  இது ரொம்பவே அநியாயமா இருக்கே! அது எப்படிடா என்னைப் பார்த்து இந்த மாதிரி கேட்கணும்னு தோணுது உங்களுக்கு!  

இந்த வாரத்தின் ரசித்த கவிதை:

ஒரு பாறையில்
ஒரு கூழாங்கல்லில்
ஒரு மணல் பரப்பில்
நுழைய விரும்பினேன்.
கதவை திறக்கச் சொல்லிக்
கெஞ்சினேன்.
‘எல்லாப் பக்கங்களிலும் நாங்கள்
திறந்தே இருக்கிறோம்’
மூன்றுமே சொல்லின.
எல்லாப் பக்கமும்
திறந்த வீட்டுக்குள்
நுழையத் தெரியாத திகைப்பில்
வெளியே நிற்கிறேன்
இத்தனை காலமும்.

-         கல்யாண்ஜி.


பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

2017-ஆம் வருடம் இதே நாளில் என் வலைப்பூவில் எழுதிய பதிவிலிருந்து…

திருவரங்கம் நகரில் இன்று திருத்தேர்! சித்திரைத் தேர்.  வருடத்திற்கு இங்கே மூன்று முறை தேர் இழுக்கும் வைபவம். சித்திரைத் தேர் கொஞ்சம் ஸ்பெஷல்! சுற்றுப்பக்க கிராமத்தினர் அனைவரும் முதல் நாளே வண்டி கட்டிக்கொண்டு வந்து திருவரங்கத்து வீதிகளில் தங்கி, காவிரி/கொள்ளிடத்தில் குளித்து [அவ்வளவு தண்ணீர் இருக்கா என்ன?] தேரோட்டத்தில் பங்குபெற்று, மகிழ்ச்சியோடு இருக்கும் நாள். தேரோட்டம் என்றாலே அனைவருக்குமே சந்தோஷம் தானே.  வேட்டு, குதிரை, யானை, மாட்டின் மேல் வைத்து கட்டப்பட்ட மேளம், குழந்தைகளை மகிழ்விக்க பல்வேறு பொம்மைகளின் விற்பனை, கடவுளர்களின் வேடங்கள் தரித்து வரும் ஆட்கள், தின்பண்டங்கள் விற்பவர், ”கழுத்துச் செயினை தலைப்பால மூடும்மாஎன்று அறிவிக்கும் காவல்துறையினர் என தேரடி வீதியே கலகலவென்று இருக்கும்! சித்திரை மாதத்துத் தேர், திருவரங்கத்தின் சித்திரை வீதிகளில் தான்! தைத் தேர் என அழைக்கப்படும் சிறிய தேர் தை மாதத்தில் கோவிலின் உத்திர வீதிகளில் ஓடும். இந்தச் சித்திரைத் தேர் தைத் தேரை விட பெரியது. ஆகவே, கொண்டாட்டங்களும் அதிகம்! முழுப்பதிவும் படிக்க ஏதுவாய் சுட்டி கீழே...


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

46 கருத்துகள்:

 1. பொன்மொழி அருமை ஜி
  செல்வம் பற்றி சொன்னது கொரோனாவால் உண்மையாகி விட்டது இத்தாலியில் பணத்தை தெருவில் வீசி விட்டார்களே...

  குப்பையை போட மாதவாடகை ஐநூறா ? நம்ம வீட்டுக்கு வரச்சொல்லுங்களேன் காகிதக் குப்பைகள் மட்டும்தானே ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   செல்வம் - கொரோனா சமயத்தில் சரியாகி இருக்கிறது.

   ஆஹா - குப்பை போட உங்க வீட்டுக்கு அனுப்பிடலாம்! காகிதக் குப்பைகள் மட்டுமா என்பதை அவரே அறிவார் கில்லர்ஜி!

   நீக்கு
 2. குப்பை என்று அவர் பழைய புத்தகங்களைச் சொல்லி இருப்பாரோ...

  ஸ்ரீரங்கத் திருவிழா வர்ணனை எனக்கு மதுரை சித்திரைத் திருவிழாவை நினைவூட்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழைய புத்தகங்கள் இருக்க வாய்ப்பில்லை - காகிதங்கள், எலெக்ட்ரானிக் சமாச்சாரங்கள், துணிகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஸ்ரீராம்.

   திருவரங்கத் திருவிழா நிறைய பார்த்திருந்தாலும் மதுரை சித்திரத் திருவிழா இது வரை பார்த்ததில்லை. எல்லாம் சரியாக அமைந்தால் ஒரு முறையாவது பார்க்க வேண்டும்!

   நீக்கு
 3. கல்யாண்ஜி கவிதையை ரசித்தேன். புதுமைப்பித்தன் சிறுகதைகள் புத்தகம் எடுத்தேன். இன்னும் தொடங்கவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்யாண்ஜி கவிதைகள் - ரசிக்கக் கூடியவையே.

   என்னிடமும் ஒரு புதுமைப் பித்தன் சிறுகதைத் தொகுப்பு இருக்கிறாது. இன்னும் முடிக்கவில்லை ஸ்ரீராம்.

   நீக்கு
 4. செல்வம் அதுவாக உருண்டு ஓடா விட்டாலும்
  நாம் தான் நமது செயல்களால் அதனை அடுத்தவரிடத்தில் உருட்டி விடுகிறோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செல்வம் அதுவாக உருண்டு ஓடாவிட்டாலும், நம் செயல்களால் அடுத்தவரிடத்தில் உருட்டி விடுகிறோம் - இதுவும் சரியாகத் தான் சொல்லி இருக்கிறீர்கள் துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 5. காலை வணக்கம் சகோதரரே

  காஃபி வித் கிட்டு அருமை. வாசகம் அருமை. நீங்கள் ரசித்த புத்தரின் வாசகத்தை நானும் ரசித்தேன்.

  புதுமைப்பித்தன் அவர்களின் பிறந்தநாள் செய்தியை அறிந்து கொண்டேன். கதை நன்றாக உள்ளது. முழுக்கதையை மதியம் நீங்கள் கொடுத்த சுட்டிக்குச் சென்று படிக்கிறேன்.

  பாவந்தான்..! கிட்டுமணியின் நிலைமை. குப்பைகளை போட்டு வைக்க அவர் வீடுதானா கிடைத்தது.. அந்த சோமுவிற்கு.

  கவிதையும் அருமை. விளம்பரம். தேரடி வீதியில் அனைத்தும் கேட்டு, படித்து விட்டு பின் மீண்டும் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   புதுமைப் பித்தன் பிறந்த நாள் பற்றிய தகவல் இந்தப் பதிவுக்காக விஷயங்களைத் தொகுத்த போது கிடைத்த தகவல்.

   கிட்டுமணி ரொம்பவே பாவம் தான். :)

   முடிந்த போது விளம்பரம், பின்னோக்கி பதிவும் படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

   தொடர் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

   நீக்கு
 6. பல ஆண்டுகள் கழித்துக் கல்யாண்ஜியின் கவிதை! கிட்டுமணிக்கும் அவர் நண்பருக்கும் நடந்த உரையாடலைச் சரியாகப் படிக்க முடியலை. பச்சையைக் கொஞ்சம் அழுத்தமாகப் போட்டிருக்கலாமோ?சித்திரைத் தேர் ஸ்ரீரங்கத்தில் இந்த வருடம் ஓடவில்லை என்பதால் மக்கள் தேருக்கு அருகே வந்து நமஸ்கரித்து பிரார்த்தனைகள் செய்து போனதாக தினசரிகள் சொல்லி இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பச்சை - அடடா... இது ஏற்கனவே ஷெட்யூல் செய்திருந்ததால் இதற்கு முந்தைய பதிவில் சொன்னதை மாற்ற மறந்து விட்டேன். இப்போது பச்சையை மாற்றி விட்டேன்.

   இந்த வருடம் திருவரங்கம் தேர் இல்லாதது வருத்தமே. விரைவில் சூழல் சரியாக வேண்டும் என்பதே அனைவருடைய பிரார்த்தனைகளும்.

   நீக்கு
 7. கொஞ்ச நாட்களாகவே கண் பிரச்னை! மருத்துவர் சோதித்து ஒண்ணும் இல்லைனு சொல்லிட்டார். ஆனாலும் கண்ணெதிரே தோன்றும் விதம் விதமான கொசுப்போன்ற கரும் திட்டுகள் அவ்வப்போது வந்து வந்து மறைகின்றன. இதோடு தான் வாழணும்னு சொல்லிட்டாங்க! :) ஆனாலும் படிக்கும் வேகம் குறைந்து விட்டது வருத்தமாக உள்ளது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா... உங்கள் கண் பிரச்சனை சரியாக வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

   கண்களுக்கு அதிகம் ஸ்ட்ரெஸ் தருவதைத் தவிர்த்து விடுங்கள் கீதாம்மா...

   நீக்கு
 8. புதுமைப்பித்தன் படிச்சிருக்கேன் என்றாலும் அவர் பிறந்த நாளைத் தெரிந்து வைத்துக் கொண்டு கொண்டாடும் அளவுக்கு ரசிகை இல்லை. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தளம் அடிக்கடி போயிருக்கேன். காணொளி மத்தியானம் தான் பார்க்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதுமைப் பித்தன் பிறந்த நாள் என்பது எனக்கும் தெரியாது. இந்தப் பதிவினை தொகுப்பதற்காக தேடிய போது தெரிந்த விஷயம் கீதாம்மா...

   காணொளி முடிந்த போது பாருங்கள் - அவசரம் இல்லை.

   நீக்கு
 9. கவிதை, விளம்பர காணொளி என அனைத்து காஃபி வித் கிட்டு அருமை ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   நீக்கு
 10. செல்வம் :

  வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
  தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது...

  பதிலளிநீக்கு
 11. சுவையான தொகுப்பு. நெகிழ வைக்கும் விளம்பரப் ப்டம் -கல்யாண்ஜி கவிதை அசத்தல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகை மகிழ்ச்சி அளித்தது முரளிதரன்.

   பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 12. புத்தரின் பொன்மொழி மனதில்கொள்ள வேண்டியது. வழக்கம்போல அனைத்தும் அருமை.
  (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புத்தரின் பொன்மொழியும் பதிவின் பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   உங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர் - சிறப்பாக வெளிவரவும், விழா சிறக்கவும் வாழ்த்துகள் ஐயா.

   நீக்கு
 13. அனைத்தும் அருமை.
  சாரின் தம்பி (சித்தப்பா மகன் நாறும்பூநாதன்) அவர்கள் முகநூலில் கதைகள் சொல்லி வருகிறார்.
  அவர் நேற்று புதுமைபித்தன் கதையும், ஜெயகாந்தன் கதையும் நேற்று சொன்னார்கள்.

  படிக்கிறேன் ஓய்வு நேரங்களில் முன்பு படித்து இருக்கிறேன் நினைவில் இல்லை , மீண்டும் படிக்கிறேன்.

  கிட்டுமணியிடம் சோமு சொன்னது அவர் வீட்டு பொருட்களை வைத்துக் கொள்ள இடம் என்றால் கிட்டுமணி வருத்தபட்டு இருக்கமாட்டார், குப்பைகளை போட்டு வைத்துக் கொள்ள என்றதும் தான்.
  கல்யாணிஜி கவிதை நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

   முகநூலில் கதை பற்றி சொல்லி வரும் தகவலுக்கு நன்றி. இணையத்தில் பார்க்க முயல்கிறேன்.

   குப்பைகள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வது வருத்தமாகவே இருந்திருக்கும்.

   கல்யாண் ஜி கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 14. ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் ஒரு விளம்பரம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஃபிலிப்பைன்ஸ் நாட்டு விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

   நீக்கு
 15. தொகுப்பு ஓகேதான். கிட்டுமணி ரூம் தேடியது, நாங்கள் கல்ஃபில் ஒவ்வொரு தேசத்திலும் எங்கள் கணிணி உபகரணங்கள் போன்றவற்றை வைக்க, ஒரு அறை கிடைக்குமா என்று தேடியது நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிட்டுமணி ரூம் தேடவில்லை நெல்லைத் தமிழன். அவரிடம் வேறு ஒருவர் தான் ரூம் கேட்டு வந்தார்! அதுவும் குப்பை போட :) உங்கள் நினைவுகளை பதிவு மீட்டு எடுத்திருக்கிறது.

   நீக்கு
 16. புதுமைப்  பித்தனை நினைவு கூர்ந்ததற்கு நன்றி. என்ன ஒரு நடை! புதுமைப் பித்தன் கெட்டான்.." என்று வசந்த் கூறுவதாக சுஜாதா ஒரு கதியில் வர்ணித்திருப்பார். அவருடைய பிறந்த நாளா இன்று? அந்தக் கதையை முழுவதுமாக படித்தேன். தன் வீட்டுக் குப்பையை வைக்க நண்பன் வீட்டில் இடம் கேட்பவருக்கு நல்ல துணிச்சல். சித்திரை தேர் உற்சவ படங்களை முன்பு ஒரு முறை பகிர்ந்து கொண்டிருந்தீர்கள் என்று நினைவு.கல்யாண்ஜியின் கவிதை அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு பற்றிய உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி பானும்மா...

   நீக்கு
 17. புதுமைப் பித்தன் கதைகளை மீண்டும் வாசிக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 18. வாசகம் நன்றாக இருக்கிறது. பழையதில் நல்லதை மட்டுமெ நினைப்பது நல்லது..

  புதுமைப்பித்தன் அவர்களின் கதைச்சுட்டிக்குச் சென்று வாசிக்கிறேன். எதுவுமே நிரந்தரம் இல்லைதானே.

  காணொளி நெகிழ்ச்சி. கிட்டுமணி-சோமு. குப்பையை வைக்க ஒரு ரூமா? அல்லது அது ஏதேனும் முக்கியமாக இருக்குமோ?

  எல்லாமே ரசித்தேன் வெங்கட்ஜி

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

   நீக்கு
 19. வாசகம் நல்ல வாசகம். நடந்ததை நினைத்திருந்தால் இன்றைய கவனம் சிதறிவிடும்தானே..

  புதுமைப்பித்தன் கதைகள் நெட்டில் பார்த்து வைத்துள்ளேன் ஜி. எழுதியதைப் பார்த்ததுமே வாசிக்கத் தூண்டுகிறது. போய் வாசிக்கிறேன்..சுட்டியை க்ளிக்கினால் வேறு டேபில் ஓப்பனாகவில்லை. அந்த வலைத்தளம் நான் அடிக்கடி செல்வதுதான். அங்கும் கதைகள் வாசிப்பதுண்டு. எனவே குறித்துவைத்துக் கொண்டுவிட்டேன்.

  காணொளி மனதைத் தொட்டது. அருமையா எடுத்திருக்காங்க

  சோமு குறிப்பிட்டது புத்தகங்களாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

  தேரடி சுட்டி சென்று முதல் படம் பார்த்ததுமெ அட இது பார்த்து கமென்ட் போட்டிருப்போமே என்று தோன்றிட பார்த்தால் என் கமென்டும் இருக்கு...தலைப்பே நினைவுபடுத்தியது...நீங்கள் பேட்டரி பற்றி சொன்னதும் நினைவு இருந்தது...

  கல்யாண்ஜி யின் கவிதை செம...

  அனைத்தும் ரசித்தேன் ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சோமு குறிப்பிட்டது புத்தகங்கள் அல்ல! குப்பைகள் மட்டுமே! அதில் பலதும் உண்டு.

   பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

   நீக்கு
 20. பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

   நீக்கு
 21. அன்பு வெங்கட்,
  கொஞ்சம் தாமதமாக வருகிறேன்.
  எல்லோரையும் தளர்வாக நிதானமாக வைத்திருக்கிறது இந்தக் காலம்.
  கல்யாண் ஜி யின் கவிதை லேசாக்குகிறது.
  வாலண்டைன் டே படத்தொகுப்பு இனிமை சோகம்.

  மனிதத்தனமை வாய்ச்க் சொற்களில் வேண்டும் என்பதற்கு இந்த சோமு ஒரு எடுத்துக்காட்டு.
  அவரே ஒரு குப்பையாகத் தென் படுகிறார்:(

  புதுமைப் பித்தனுக்கு முந்தின நாள் எழுத்தாளர் ஜெயகாந்தனின்
  பிறந்த நாள் 24 ஆம் தேதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாமதமாக வருகிறேன் - பரவாயில்லை வல்லிம்மா...

   பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 22. புத்தரின் பொன்மொழி அருமை !!! ... அப்படியே அந்த விளம்பரமும் .... நம்மிடம் செல்வம் இயங்கிக்கொண்டிருக்கும் வரைக்கும்தான் சிறப்பு ... தங்கிவிட்டால் அது குட்டை ... அதனால் இந்த கட்டைக்கு எந்த பயனும் இல்லை ... சோமுவின் குப்பைகளுக்கு கிட்டுமணி குட்பை சொல்லிருப்பார் என்றே நினைக்கிறன்... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிவா.

   குட்பை சொல்லி விட்டார். குப்பையை வைத்துக் கொள்ள கிட்டுமணி தயாராக இல்லை!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....