வெள்ளி, 24 ஏப்ரல், 2020

அந்தமானின் அழகு – ஷகீத் த்வீப் – டேங்கோ பீச் ரிசார்ட்…


தங்குமிடத்தின் பின்னே
கடற்கரையில்...

அந்தமானின் அழகு – பகுதி 24


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

வாழ்க்கையில் வந்துட்டு போற ஒவ்வொரு உறவும் மறக்க முடியாத ஏதோ ஒரு நினைவுகளை பொக்கிஷமாக தந்துவிட்டு தான் செல்கிறார்கள்.


தங்குமிடத்தின் பின்னே உள் வாங்கிய கடற்கரையில்...


உள்வாங்கிய கடலில் தெரியும் பாறை வகைகள்...


ஸ்வராஜ் த்வீப் தீவிலிருந்து ஷகீத் த்வீப் தீவிற்கு ITT Majestic சொகுசுக் கப்பலில் பயணித்து துறைமுகத்தில் இறங்கிய பின்னர் எங்களுக்காகக் காத்திருந்த மூன்று வண்டிகளில் புறப்பட்டு நாங்கள் சென்று சேர்ந்த இடம் Tango Beach Resort! பெயரிலிருந்தே உங்களுக்கும் தெரிந்திருக்கும் – இது கடற்கரை அருகே இருக்கும் ஒரு ரிசார்ட் என்பது – மிகவும் அழகான இடம் – ஸ்வராஜ் த்வீப் தீவில் தங்கியிருந்த ராதாகிருஷ்ணா ரிசார்ட்டை விட பெரிய இடம் – பூங்கா, நீச்சல் குளம், அழகிய மரங்கள் என ரொம்பவே சிறப்பாக இருந்தது – இதிலே கூடுதலான ஒரு விஷயம் என்று சொன்னால், தங்குமிடத்தின் பின் வாயில் வழியே சென்றால் நேரே கடற்கரை தான் – அங்கே தங்குபவர்கள் மட்டுமே அந்தப் பக்கம் வருகிறார்கள் என்பதால் உங்களுக்கே உங்களுக்கான கடற்கரை அது என்றும் சொல்லலாம்! வாகனங்களில் அங்கே சென்று சேர்ந்த உடன் Welcome Drink – பழரசம் தான் – வேறு ஏதோ பானம் என நினைத்து விடாதீர்கள் – கொடுத்து உபசரித்தார்கள்.  இங்கேயும் எங்களுக்கு ஏழு அறைகள் – முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. 


இயற்கை வடித்த சிற்பங்கள்...


இதுவும் ஏதோ ஒரு உயிரினமோ... கொஞ்சம் கிட்டக்க பார்க்கலாமா...

அடையாள அட்டைகள் தருவது, பதிவேட்டில் பதிவு செய்வது போன்ற விஷயங்களை நாங்கள் முடிப்பதற்குள் குழுவினர் அவரவருக்கான அறைகளுக்குச் சென்றார்கள். அவர்களது உடமைகள் தங்குமிடத்தின் சிப்பந்திகள் கொண்டு கொடுத்து விட்டார்கள்.  நானும் நண்பரும் பதிவு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, எங்கள் உடமைகளும் எங்கள் அறைக்கு சென்று விட்டன.  Tango Beach Resort – உங்கள் அறையிலிருந்து அதிகபட்சமாக 70 மீட்டர் நடந்தால் கடற்கரை – லக்ஷ்மண்பூர் கடற்கரை எண் 1 என்று சொல்லக் கூடிய கடற்கரை அருகே இருக்கும் இந்தத் தங்குமிடத்தில் மொத்தம் 56 அறைகள் உண்டு.  குறைந்த பட்சமாக 4500/- முதல் அதிக பட்சமாக 7500/- ரூபாய் வரை இங்கே ஒரு நாள் வாடகையாக வசூலிக்கிறார்கள்.  சில அறைகள் கடற்கரை நோக்கி இருக்கிறது என்பதாலும் கூடுதல் வசதிகள் கொண்டது என்பதால் வாடகை அதிகம் வசூலிக்கிறார்கள்.  இந்த நாள் வாடகையில் பெரும்பாலும் காலை உணவும் அடக்கம் – நாங்கள் எடுத்தது காலை உணவு மட்டுமல்லாது இரவு உணவும் சேர்ந்தது.


வெளில வரலாமா வேணாமான்னு யோசிக்குது!...கார்ட்டூன் கேரக்டர் மாதிரி கண்ணை மட்டும் காண்பிக்கிறதோ?...யாராவது எதிரிங்க இருக்காங்களா? வெளியே வரதுக்கு முன்னாடி பார்த்துடலாம்!...


Where Nature Meets Comfort என்பதை Tag Line ஆகக் கொண்டு செயல்படும் Tango Beach Resort-இல் எங்களுக்குக் கொடுத்த அறைக்குச் சென்று சில நிமிடங்கள் ஓய்வு எடுத்தோம்.  மதிய நேரம் ஆகிவிட்டதால் மதிய உணவினை முடித்துக் கொண்டே புறப்படலாம் என முடிவு எடுத்து தங்குமிடத்தில் இருந்த பெங்காலி நிர்வாகியிடம் மதிய உணவு – சைவ உணவு தயார் செய்யச் சொன்னோம். வழக்கம் போல, இந்த இடங்களில் நாம் சொன்ன பிறகே உணவு தயாரிக்கிறார்கள் என்பதால் கொஞ்சம் நேரம் எடுக்கும். அதுவரை அவரவர்கள் அறையில் இருக்கலாம் அல்லது தங்குமிடத்தின் பின்னே கடற்கரைக்குச் செல்லலாம்! நானும் இன்னும் சிலரும் கடற்கரைக்குச் சென்றோம். பகல் நேரம் என்பதால் கடல் உள்வாங்கியிருந்தது. கடற்கரை மணல் பகுதிக்குப் பிறகு நிறைய கற்கள் நிறைந்த பகுதி கண்ணுக்குத் தெரிய அதில் நடந்து அப்படியே கடலுக்குள் சென்று கொண்டிருக்கிறோம் – மாலை நேரம் ஆகிவிட்டால் நாங்கள் நடந்த இடம் வரை இடுப்பளவு தண்ணீர் இருக்கும் இடங்கள் என்பதை மாலை தெரிந்து கொள்ள முடிந்தது.  கடல் உள் வாங்கும்போது வெளியே தங்கிவிட்ட கடல் வாழ் உயிரினங்கள் சிலவற்றையும் ஆங்காங்கே இருந்த தண்ணீரில் பார்க்க முடிந்தது.


யாரோ இருக்காங்கடே... கரங்களை உள்ளே இழுத்துப்போம்!...


சத்தம் காணோம்... போய்ட்டாங்களோ - கொஞ்சம் கரங்களை நீட்டி ரிலாக்ஸ் பண்ணலாம்...


அப்படிப் பார்த்த கடல் வாழ் உயிரினங்களில் ஒன்று தான் Octopus – உடலைச் சுற்றிலும் எட்டு உறிஞ்சும் கரங்களைக் கொண்ட ஆழ்கடல் விலங்கு – என்று தமிழாக்கம் செய்கிறது கூகிள்! சப்தம் வந்தால் தனது கரங்களை உள்ளே இழுத்துக் கொண்டும், அமைதியாக இருந்தால் கரங்களை நீட்டி அப்படியே உலவுவதுமாக இருந்த அந்த அக்டோபஸை நிறைய படம் எடுத்துக் கொண்டோம்.  உள்ளே நடந்து நடந்து விதம் விதமான சங்குகள், உயிரினங்கள் பார்த்ததோடு நிறைய படங்களும் எடுத்துக் கொண்டோம்.  அங்கே பார்த்த சில விஷயங்கள் வேறு எந்தக் கடற்கரையிலும் இதுவரை பார்த்ததில்லை என்பதால் இந்தக் கடற்கரை அனுபவம் மறக்க முடியாத ஒன்று.  நீண்ட நேரம் அங்கே இருந்த எங்களை மற்ற நண்பர்கள் அழைத்து மதிய உணவு தயாரான விஷயத்தினைத் தெரிவித்தார்கள்.  ஆகவே மனமே இல்லாமல் தங்குமிடத்தின் பின்னர் இருந்த கடற்கரைப் பகுதியிலிருந்து உள்ளே நடந்தோம்.  நேரடியாக உணவகத்திற்கே சென்று விட அங்கே எடுத்தூண் முறையில் எங்களுக்கான உணவு தயாராக இருந்தது. ஹலோ யாருய்யா என்னை திருப்பிப் போட்டது?...அப்படியே கொஞ்சம் வாக் போகலாம்னு வந்தேன்...இது என்னவோ யார் கண்டா? பார்க்க அழகா இருக்கே!...குழுவில் இருந்த மற்ற நண்பர்களும் அங்கே வந்து சேர்ந்திருக்க, ஒவ்வொருவராய் தேவையானதை எடுத்துக் கொண்டு அங்கே இருந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம்.  மசாலா அப்பளம், காய்கறிக் கலவை (சலாட்), சாதம், தால், இரண்டு வித சப்ஜி, ராய்தா, ஊறுகாய் என அனைத்தும் உண்டு. கூடவே எதோ ஒரு இனிப்பு வகையும். பொதுவாக பெங்காலிகள் இனிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் – இந்த உணவகத்தில் சாப்பிட்ட மூன்று வேளைகளிலும் இனிப்பு ரொம்பவே சுமார் ரகம் தான்! மதிய உணவு அங்கே சாப்பிட்டது தான் எங்கள் பயணத்திலேயே அதிக விலை கொடுத்து சாப்பிட்டோம் என்று சொல்லலாம்!  மற்ற இடங்களில் சாப்பிட்டதை விட அதிகம் இங்கே கொடுக்க வேண்டியிருந்தது!  கிட்டத்தட்ட 5000 ரூபாய்க்கு மேல் ஆனது – 18 பேர் சாப்பிட மற்ற இடங்களில் 3000 ரூபாய் வரை செலவானது என்றால் இங்கே கிட்டத்தட்ட 2000 ரூபாய் அதிகம்.  ஆனால் சுவை என்னவோ அப்படி ஒன்றும் அலாதியாக இல்லை என்பதையும் சொல்ல வேண்டும்.  தலைநகர் தில்லியில் உள்ள சில உணவகங்களில் கொடுக்கும் காசை விட குறைவாகவே கொடுத்தோம் என்றாலும் அந்த சிறிய ஊருக்கு இது அதிகம் என குழுவினரில் சிலரும் தங்களது குறிப்பாகச் சொல்லி இருந்தார்கள். 


தங்குமிடத்தில் தீவின் வரைபடம்...கடிக்குமா கடிக்காதா?  எதுக்கும் தள்ளியே இருந்து படம் பிடிக்கலாம்!...


தங்குமிடத்தின் அறைகளைப் பற்றியும் இங்கே சொல்லி விடுகிறேன். அழகான அறைகள் – எல்லா வித வசதிகளும் இங்கே இருக்கின்றது.  நிறைய நேரங்களில் மின்சாரப் பற்றாக் குறை இருக்கிறது என்பதால் Solar Water Heater – மொத்த ரிசார்ட்டுக்கும் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.  அதன் வழி சூடான தண்ணீர் கிடைக்கிறது – என்ன ஐந்து நிமிடம் திறந்து வைத்த பிறகே சூடான நீர் வரும்! அது வரை குளிர்ந்த நீர் தான்!  வாங்கும் கட்டணத்திற்கேற்ற வசதிகள் – அறைகளில் சோப்பு, ஷாம்பு, தேங்காய் எண்ணெய் என பலதும் வைத்திருக்கிறார்கள். அறைக்குள் இருக்கும் துண்டுகள் அழகான வடிவங்களில் வைத்திருப்பதும் ஒரு வித ஈர்ப்பு தானே!  இவை எல்லாமே ஒரு வித ஈர்ப்பு என்றாலும் சிலருக்கு தங்குமிடத்தின் கட்டணம் அதிகம் என்று தோன்றலாம்.  சுற்றுலாத் தலம் என்பதால் இங்கே இப்படி தான் கட்டணம் வசூலிக்கிறார்கள்.  இதை விட குறைவான கட்டணம் வசூலிக்கும் தங்குமிடங்களும் உண்டு.  Budget Hotels என இணையத்தில் தேடினால் 1000 முதல் 2000 ரூபாய் வரை நாள் வாடகை வசூலிக்கும் தங்குமிடங்கள் கிடைக்கின்றன.  நாங்கள் பயண ஏற்பாடு செய்பவர் வழி செய்ததால் எல்லாமே அதில் அடக்கம்! செல்லத்தின் செல்லங்கள்...அம்மா செல்லம் பார்த்துக் கொண்டிருந்தது...


தங்குமிடத்தில் எங்களுக்குப் பிடித்த இன்னுமொரு விஷயம் இயற்கையான சூழல்.  நிறைய மரங்கள், பூச்செடிகள், நீச்சல் குளம் – நீச்சல் குளத்தில் மருந்து சேர்த்ததால் அன்றைக்கு பயன்படுத்த முடியாது என்று சொல்லிவிட்டதில் எங்களுக்கு வருத்தம் தான். ஆனாலும் இப்படி சில சமயங்களில் நடந்து விடுவது இயல்பு தானே.  அங்கே பார்த்த இன்னுமொரு விஷயம் செல்லங்கள் – நிறைய நாய்கள் இருக்கின்றன.  எங்கள் அறை இருந்த பகுதியில் ஒரு நாய் குட்டிகளை ஈன்றிருக்க அவற்றுக்கு சிப்பந்திகள் சாக்குகள் மூலம் கதகதப்பினை ஏற்பாடு செய்து வைத்திருந்தார்கள்.  தாய் பார்த்துக் கொண்டே இருக்க, சற்று தொலைவில் இருந்து குட்டிகளை படம் எடுத்துக் கொண்டோம் – எங்களிடம் இருந்த பிஸ்கெட்டுகளையும் அவற்றுக்குக் கொடுத்தோம். சில நிமிடங்கள் அவற்றைக் கொஞ்சுவதில் சென்றது.  தங்குமிடத்தில் மதிய உணவினை உண்ட பிறகு நாங்கள் புறப்பட்டுச் சென்ற இடம் எது? அங்கே என்ன ஸ்பெஷல் போன்ற விவரங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன் – அதுவும் அழகான இடம் தான்.  நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

50 கருத்துகள்:

 1. நல்ல வாசகம். தடம் பதித்துச் செல்லாத சில உறவுகளும் உண்டு!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தடம் பதித்துச் செல்லாத சில உறவுகள் உண்டு - உண்மை.

   நீக்கு
 2. தங்கும் கட்டணம் அதிகம் என்று தோன்றியது - பின் எழுதி இருக்கும் வரிகளில் நீங்கள் சொல்லி இருப்பது போலவே... உணவுக் கட்டணமும் அதிகமாக!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கும் கட்டணமும் உணவுக் கட்டணமும் கொஞ்சம் அதிகமே. ஆனால் இது போன்ற இடங்களுக்கு பொதுவாகவே அதிக கட்டணம் தான் வசூலிக்கிறார்கள் ஸ்ரீராம்.

   நீக்கு
 3. இன்று என்னவோ மைபைலில் எனக்கு ஒரு படம் கூடத் திறக்கவில்லை. இன்று நிறைய படங்கள், அதுவும் அழகான, சுவாரஸ்யமான படங்கள் இருக்கும் என்று தெரிகிறது. பின்னர் மறுபடி வந்து பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் இப்போது தெரிகிறதா என பாருங்கள் ஸ்ரீராம் - சரி செய்திருக்கிறேன்.

   Schedule செய்தபோது இருந்தது. இன்று வெளியிட்ட போது வரவில்லை போலும். இப்பொழுது சரி செய்து இருக்கிறேன். தெரிகிறதா என பார்த்து சொல்லுங்கள்.

   நீக்கு
 4. வழக்கம்போல விவரித்த விதம் அருமை.
  எந்த படமும் திறக்கவில்லையே ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   படங்கள் ஏனோ தெரியாமல் இருந்தது. இப்போது சரி செய்து இருக்கிறேன். தெரிகிறதா என பார்த்து சொல்லுங்கள்.

   நீக்கு
  2. படங்கள் கண்டு இரசித்தேன் ஜி

   நீக்கு
 5. இன்றைய படங்கள் இணைய காப்பிரைட் படங்களா? ஒன்றுகூடத் தெரியலையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் தெரியவில்லையா?  அப்பாடா...   இப்போதுதான் திருப்தியாய் இருக்கிறது!!!

   நீக்கு
  2. காப்பி ரைட் படங்கள் அல்ல! நான்/குழுவினர் எடுத்த படங்கள் தான் நெல்லைத் தமிழன். சரி செய்து விட்டேன்.

   நீக்கு
  3. //இப்போது தான் திருப்தியாய் இருக்கிறது// ஹாஹா... :) படங்களை அன்று இணைத்தபோது ஏதோ பிரச்சனை போலும் ஸ்ரீராம்.

   நீக்கு
  4. ஸ்ரீராம்ஜி பக்கத்து வீட்டுக்கும் கரண்ட் போனால்தானே மனதுக்கு திருப்தி.

   நீக்கு
  5. கில்லர்ஜ்.... நான் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கிறேன். இங்கு அவ்வப்போது பவர் ட்ரிப் ஆகும். எனக்கு மட்டுமல்ல, மற்ற ஃப்ளாட்டுகளுக்கும் அப்படித்தான் என்று தெரிந்துகொள்ளும்போது ஒரு திருப்தி வரத்தான் செய்யும். நமக்கு மட்டும்தான் என்றால் எந்த அப்ளையன்ஸ்னால பவர் டிரிப் ஆகிறது, இல்லை மூணு geiserஐயும் ஆன் பண்ணிட்டாங்களா என்றெல்லாம் சந்தேகம் வரும்.

   நீக்கு
  6. பக்கத்து வீட்டுக்கும் கரண்ட் போனால் தானே மனதுக்கு திருப்தி - ஹாஹா...

   கில்லர்ஜி உங்களுக்கு நெல்லைத் தமிழன் பதில் சொல்லி இருக்கார் பாருங்க!

   நீக்கு
  7. அடுக்கு மாடி குடியிருப்பில் இப்படி சந்தேகம் வருவது உண்மை தான் நெல்லைத் தமிழன். சில நாட்கள் முன்னர் நானும் மேல் வீட்டில் பவர் சப்ளை இருக்கிறதா எனக் கேட்டு அங்கே இருந்தது தெரிய, என் வீட்டில் மட்டும் இல்லை எனத் தெரிந்து கொண்டேன்.

   நீக்கு
  8. // ஸ்ரீராம்ஜி பக்கத்து வீட்டுக்கும் கரண்ட் போனால்தானே மனதுக்கு திருப்தி.//

   பின்னே இல்லையா?!!!

   நீக்கு
 6. இப்போது படங்கள் தெரிகின்றன. அழகாக இருக்கு.

  ஆனால், எதையும் ரொம்ப க்ளோஸப்ல பார்த்தா அழகு குறைந்துவிடுகிறதோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களை மீண்டும் இணைத்தேன் - தெரியவில்லை என்று தெரிந்த பிறகு.

   க்ளோஸ் அப் - சில ப்டங்கள் நன்றாக இருக்காது - சில படங்கள் க்ளோஸ் அப்-பில் மட்டுமே அழகு நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 7. ஆர்வமூட்டும் படங்களும் விளக்கங்களும் ஐய்யா. ஒரு சந்தேகம். நான் உங்களுடைய நாலாவது புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிரேன். நீங்கள் குடும்பத்துடன் சென்ற சுற்றுளா இருக்கிறதா? அங்கே நீங்கள் எப்படி இவ்வளவு ஃப்ரியாக இருப்பீர்கள் என்று காண ஆசை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடும்பத்துடன் சில சுற்றுலாக்கள் சென்றதுண்டு. வலைப்பக்கத்தில் எழுதி இருக்கிறேன் - வீட்டிலும் எழுதி இருக்கிறார்கள். புத்தகமாக வெளியிட இன்னும் வாய்ப்பு வரவில்லை. விரைவில் வெளியிடுவேன் அரவிந்த்.

   நீக்கு
 8. கடலுக்குள் இருக்கும் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்தேன்... ஆகா...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடலின் அழகு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   நீக்கு
 9. தளம் திறப்பது (http://venkatnagaraj.blogspot.com/2020/04/blog-post_24.html) என்று உள்ளது...

  https:// என்று திறப்பது பாதுகாப்பு என்று அனைத்து நாடுகளிலும் கருதுவார்கள்... அங்குள்ள சிலரிடம் பாதுகாப்பு குறித்த chrome extension இருந்தால், நமது தளத்தை திறக்கும் போது எச்சரிக்கை (Back to safety) காட்டும்... நம் தளத்தை திறக்காமலே விட்டு விடுவார்கள்...

  அதை மாற்றுவதற்கு Dashboard --> Settings --> Basic --> HTTPS redirect --> (select) Yes

  இது ஒருபுறம் இருந்தாலும், (உங்கள் தளம் 'Yes' என்றே இருந்தாலும்) இணைக்கும் படங்களின் url எவ்வாறு இருக்கும்...?

  https:// என்று ஆரம்பித்து jpg / png / gif (இவ்வாறு பல) என்று முடியும்...

  இதில் (1) வலைப்பூ (2) இணைக்கும் படங்களும் ஒரே url இருந்தால் பிரச்சனை இல்லை...

  இரண்டும் https:// என்று இருப்பதே சிறந்தது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் https:// என்றே இருக்கிறது தனபாலன். தளம் முன்பு https தான் இருந்தது. நடுவில் மாறி இருக்கிறது - எப்போது மாற்றினேன் என நினைவில்லை. சரி செய்து விட்டேன்.

   படங்கள் வராததற்கு காரணம் அது இல்லை. படங்களை வேறு ஃபோல்டரில் சேமித்து இணைத்தேன். அதில் பிரச்சனை!

   நீக்கு
 10. போன பதிவில் நான் சொன்ன மாதிரி கடலுக்கடியில் இருப்பதுதானா?!

  கடல்வாழ் உயிரினம் அழகும் ஆபத்தும் நிறைந்தது. கவனமாதான் கையாளனும். ஏன்னா, அதன் குணம் நமக்கு தெரியாதுல்ல!!

  5000க்கு 18 பேர் அப்படி என்னதான் சாப்பிட்டீங்க?! அதுமில்லாம, இதுமாதிரியான இடங்களில் ருசியை எதிர்பார்க்க முடியாது. ஏன்னா ரெகுலர் கஸ்டமர் வரப்போறதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடல் வாழ் உயிரினம் அழகான ஆபத்து தான் ராஜி.

   நார்மலான உணவு தான் - எழுதி இருக்கேனே பார்க்கலையா?

   நீக்கு
 11. எல்லா சன்யாசி நண்டு (hermit crab) மற்றும் எட்டுக்காலி (octopus) படமும் நன்றாக இருக்கின்ற்ன. பொறுமையுடன் படம் பிடித்துள்ளீர்கள்.இந்த உலா LTC உலாவா?
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   பயணத் தொடரின் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறேன் - எல்.டி.சி. என!

   நீக்கு
 12. இப்போது (https://) என்றே திறக்கிறது...

  மற்ற படங்கள், "தங்குமிடத்தின் பின்னே" என்று பதிவின் ஆரம்பத்தில் உள்ள படத்தைப் பற்றி சொல்ல நினைத்து மறந்து விட்டேன்...

  தண்ணீரில் இருந்து எட்டிப்பார்க்கும் வாத்து அல்லது கொக்கைப் போல தெரிகிறது... சிலசமயம் டைனோசர் எட்டிப்பார்ப்பது போல...! ஹா... ஹா... அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டைனசோர் எட்டிப் பார்ப்பது போல! ஹாஹா...

   மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 13. கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் அருமை .. அந்த நாய் மற்றும் நாய்குட்டி உட்பட .... நீங்களாக இருந்ததால் அவைகள் அனைத்தும் உயிர் தப்பின ... இதுவே சைனாகாரனா இருந்திருந்தா அத்தனையையும் புடிச்சி பச்சையாகவே சாப்பிட்டிருப்பானுக ... கொரனாவுக்கு போறந்தவனுக .... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிவா.

   கொரானாவுக்கு பொறந்தவனுங்க! ஹாஹா...

   நீக்கு
 14. அன்பு வெங்கட் , அற்புதமான படங்கள்.
  அதுவும் ஆக்டோபஸ், நத்தை, சாட்டை போன்ற ஏதோ ஒண்ணும் எல்லாம் மிக அழகு. வண்ணமும் சேர்ந்திருந்தால் இன்னும் அழகு.

  வெளினாடு எல்லாம் பார்க்கும் போது நம்மூர்
  வாடகை எவ்வளவோ தேவலை.
  இத்தனை அழகு பொருந்திய இடத்துக்கு
  நாம் கொடுத்துதான் ஆகணும்.
  அவர்களும் வசதியையும் , உணவையும் மேம்படுத்தினால்
  நன்றாக இருக்கும்.
  முந்தைய பதிவுகளைப் பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

   வெளிநாட்டுடன் ஒப்பிடும் போது இங்கே குறைவு தான். துளசி டீச்சர் பதிவில் அருங்காட்சியகத்திற்கான நுழைவுக் கட்டணம் 200 ஈகிப்து பவுண்ட் என படித்தபோது இந்திய மதிப்பு எவ்வளவு என பார்த்தேன்! எண்ணூறு ரூபாய்க்கு மேல்!

   வசதிகளை இன்னும் மேம்படுத்தினால் நன்றாக இருக்கும் என்பது தான் எனது எண்ணமும்.

   நீக்கு
 15. //கார்ட்டூன் கேரக்டர் மாதிரி கண்ணை மட்டும் காண்பிக்கிறதோ?..//

  சூப்பர் வெங்கட்.

  கடல்வாழ் உயிரினங்களை பார்க்கும் போது பக்கத்தில் போய்ப் பார்க்க பயம், தூரத்திலிருந்து பார்க்க ஆசை. உங்கள் தளத்தில் பார்த்து விட்டேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.
  படங்கள் எல்லாம் அருமை.


  குட்டிச்செல்லங்களும் அழகு. அம்மா ஏன் சோகமாய் பார்க்கிறது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடல் வாழ் உயிரினங்கள் - கொஞ்சம் பயமும் வந்தது - தீடிரென பாய்ந்து விட்டால்! :)

   படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

   குட்டிச் செல்லத்தின் அம்மா - கொஞ்சம் சோகமாகவே இருந்தது. நாங்கள் பிஸ்கெட்டுகள் கொடுத்தோம் - எல்லா செல்லங்களுக்கும். குழுவினர் வைத்திருந்த பிஸ்கெட்டுகள் தவிர கடைகளில் வாங்கியும் கொடுத்தோம்.

   நீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. இந்த கடற்கரையும், தங்குமிடமும் பற்றிய விபரமான செய்திகள் படிக்க விறுவிறுப்பாக இருக்கின்றன.

  தங்குமிடத்திற்கு பின்புறம் கடல். அந்த வசதியில், அறைகளின் ஜன்னல்கள் வழியே கடலை எப்போதும் ரசிக்கலாம். உள்வாங்கிய கடல் அழகாக உள்ளது. பகலில் மட்டும் உள்வாங்கி மாலை மறுபடியும் அலைகளுடன் ஆர்ப்பரித்து வந்து விடுமா? சுவாரஸ்யமாக இருக்கிறது. கடலுக்குள்தான் எத்தனை அழகு...! ஆனால் மாலை இடுப்பளவு தண்ணீர் வந்து விடும் என்பதை அறிந்ததும் எனக்கும் சற்று படபடப்பாக இருந்தது. அந்த இடத்திற்குள் தைரியமாக நடந்து சென்ற உங்களுக்கு பாராட்டுகள்.

  கடல் வாழ் உயிரினங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக உள்ளன. போட்டோவில் பார்க்கும் போது அசையாமலிருப்பது எங்களுக்கு பயத்தை உண்டு பண்ணவில்லை. ஆனால் நீங்கள் நேரடியாக பார்த்து படங்கள் எடுக்கும் போது அதன் அசைவுகளில், விதவிதமான போஸ்களில் சற்று பயமாகத்தான் இருந்திருக்கும். அனுபவ பதிவு படங்களுடன் நன்றாக உள்ளது. நானும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

  வாசகம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

  ஆமாம் கடல் உள்வாங்குவதும், வெளிவருவதும் தினம் தினம் நடந்து கொண்டிருக்கும் விஷயம். அசையும் கடல் வாழ் உயிரினங்களை படம் எடுக்க கொஞ்சம் பயமும் இருந்தது தான். படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

  தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

  பதிலளிநீக்கு
 18. கடல்வாழ் உயிரினங்கள் அழகிய படங்கள்.

  தனித்த பீச் உடன் இருக்கும் ரிசார்ட் உணவு கட்டணங்கள் பொதுவாக அதிகமாகவே இருக்கும் நம்நாட்டிலும் அதுபோல்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

   நீக்கு
 19. என்றும் பார்க்க அலுக்காத காட்சிகள்... அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் வழி சொன்ன விஷயங்களும் காட்சிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.

   நீக்கு
 20. இந்த தொடர் எப்போது மின் நூலாக கிடைக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தற்போது வேறு சில தொடர்களை மின்னூலாக்கம் செய்து கொண்டிருக்கிறேன் கஸ்தூரி ரெங்கன். அது முடிந்ததும் இந்தத் தொடரும் மின்னூலாகக் கிடைக்கும். தகவல் தருவேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....