அந்தமானின் அழகு – பகுதி
14
முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3
பகுதி 4
பகுதி 5 பகுதி 6 பகுதி 7
பகுதி 8
பகுதி 9 பகுதி 10
பகுதி 11
பகுதி 12
பகுதி 13
அனைத்து பதிவுலக
நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளை, பயணம் பற்றி, கண்ணன் என்பவர் எழுதிய நல்லதொரு
கவிதையுடன் ஆரம்பிக்கலாம்.
எனக்கென்று
ஒரு பயணம்
இருக்கின்றது;
அதற்கென்று
ஒரு திசை
இருக்கின்றது;
வழித்தடங்கள்
அற்று
அடர்ந்து
கிடக்கின்றது
காலவெளி;
நொடி நொடியாய்
வெட்டிக்கொண்டு
கடக்கின்றேன்
நான்
தூரத்தில்
தெரிகின்ற
வெளிச்சத்தை
நோக்கி!
நாங்கள் கண்ணாடிப் படகில் பயணம் முடித்து, ஸ்னார்க்ளிங்
செய்து முடித்ததை பற்றி கடந்த இரண்டு பகுதிகளில் சொல்லி வந்தேன். இதற்கிடையே ஸ்கூபா டைவிங் சென்றவர்கள் பற்றி ஆரம்பித்தில்
சொல்லி இருந்தேன். அவர்களை அப்படியே விட்டு விட்டோமே! அவர்கள் என்ன செய்தார்கள், அவர்கள்
செய்த ஸ்கூபா டைவிங் பற்றிய தகவல்கள் என்ன என்பதை இந்தப் பகுதியில் பார்க்கலாம். கூடவே
ஸீ வாக் என்பதற்கான தகவல்களும் படங்களும் இந்தப் பதிவில் சொல்கிறேன். நார்த் Bபே தீவில் மட்டுமல்லாது அந்தமானின் பல தீவுகளில்/கடற்கரைகளில்
இந்த ஸ்கூபா டைவிங் வசதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு
இடத்திலும் ஒவ்வொரு வித கட்டணம் – பெரும்பாலும் 3000 ரூபாய்க்கு அதிகமாகவே வசூலிக்கிறார்கள். சுமார் பதினைந்து நிமிடங்கள் உங்களுக்கான பயிற்சி
மற்றும் தகவல்கள் தர பயன்படுத்துவார்கள்.
அதன் பிறகு பத்து பதினைந்து நிமிடங்கள் Acclimatization – தண்ணீருக்குள் செல்வதற்கு
முன்னர் உங்களை அதற்கு தயார் படுத்துவது. அதன்
பின்னர் சுமார் அரை மணி நேரம் Actual
Scuba Diving!
என்ன பெரிய ஸ்கூபா டைவிங்… நாங்க பார்க்காத தண்ணீரா? எங்களுக்குத்
தெரியாத நீச்சலா என நன்கு நீச்சல் தெரிந்தவர்கள் கூட சுலபமாக கேட்டு விடக்கூடாத விஷயம்
இந்த ஸ்கூபா டைவிங். கடலுக்கு அடியில், கடலின்
தரைப்பகுதி, கடற்கரையிலிருந்து சில அடி தூரத்திலேயே இருந்தாலும் சில இடங்களில் பத்து
பதினைந்து அடிக்கு மேலும் கூட இருக்கலாம்.
கொஞ்சம் தவறினாலும் தட்டுத் தடுமாறி மேற்புறம் வருவதற்குள் “ஸப்பா இப்பவே கண்ணக்
கட்டுதே”ன்னு வடிவேலு மாதிரி சொல்ல வேண்டி வரலாம். அதனால் பயிற்சியாளர் உங்களுக்கு முதல் பத்து பதினைந்து
நிமிடங்கள் பயிற்சி தரும்போது கவனமாகக் கவனித்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. அவர் சொல்லும் சைகைகளை கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்
– கடலின் உள்ளே இருக்கும் சமயத்தில் உங்களுக்கு ஆபத்பாந்தவனாக இருக்கப் போவது உங்களுடன்
வரும் பயிற்சியாளர்/வழிகாட்டி தான். உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவரிடம் நீங்கள்
சைகை காண்பித்தால் மட்டுமே அவருக்கு உங்கள் பிரச்சனைகள் தெரியும். அவரால் உதவ முடியும். இல்லையென்றால் அவர் பாட்டுக்கு உங்களை பவளப் பாறைகளைச்
சுட்டிக் காண்பிப்பதில் மும்முரமாக இருப்பார்.
கடலுக்குள், தண்ணீருக்குள் இருப்பதால் உங்களால் வாயைத் திறந்து பேச முடியாது – வாய்க்குள்
ஆக்ஸிஜன் குழாய் இருக்கும். வாயைத் திறந்தால் கடல் நீர் உங்கள் வாய் வழி புகுந்து விடக்
கூடும். அதனால் சைகை மொழி மிகவும் அவசியம்.
அங்கே பயிற்சியாளர் சைககளைப் பற்றிச் சொல்லும்போது பராக்கு பார்த்துக் கொண்டு,
எல்லாம் எனக்குத் தெரியும், ஏற்கனவே நான் இதெல்லாம் செய்திருக்கிறேன் என நினைத்தாலும்
– ஒவ்வொரு பகுதிக்கும் இந்த சைகள் மாறலாம் என்பதால் அங்கே பயிற்சியாளர் சொல்வதைக் கேட்பது
நல்லது. ஸ்கூபா டைவிங் செய்வதற்கு முன்னர் வேண்டுமென்றால் இந்தத் தளத்தில் பொதுவான சைகைகளையும் அவை கடத்தும்
செய்தியையும் பார்த்துக் கொள்ளலாம். மேலே இணையத்திலிருந்து
ஒரு படமும் சேர்த்திருக்கிறேன். அதனால் பயிற்சியாளர் சொல்வதை கவனமாகக் கேட்டுக் கொள்வது
உங்கள் பொறுப்பு! சரி நீங்கள் தயாரா – வாருங்கள் கடலுக்குள் சென்று, கடலன்னை தனக்குள்
பொத்திப் பொத்தி காப்பாற்றி வரும் பல வித உயிரினங்களையும், பவளப் பாறைகளையும் அதிசயங்களையும்
பார்த்து வரலாம்!
கடலுக்குள் சென்று பார்ப்பதற்கு முன்னர் இன்னுமொரு கூடுதல்
விஷயமும் சொல்கிறேன். இந்த நார்த் Bபே தீவின் படத்தினை நீங்கள் அடிக்கடி ஒரு தாளில்
பார்த்திருக்க முடியும் – அது நம் இந்தியாவின் இருபது ரூபாய் நோட்டு! இருபது ரூபாய்
நோட்டின் பின்பக்கத்தில் இந்த நார்த் Bபே தீவின் படம் தான் இருக்கிறது. சரி வாருங்கள் கடலுக்குள் செல்வோம். ஸ்னார்க்ளிங்
செய்தபோது பார்த்த விஷயங்கள் தான் இங்கேயும் பார்க்கப் போகிறோம் என்றாலும் இது இன்னும்
அதிக ஆழத்தில், ரொம்பவே அருகில் சென்று பார்க்கப் போவதால் இன்னும் சிறப்பாக பார்க்க
முடியும். பவளப் பாறைகள், வண்ண வண்ண மீன்கள்,
மற்ற உயிரினங்கள் என அனைத்தையும் வெகு அருகில் காண முடியும் என்பது இதன் சிறப்பு. பத்து வயதுக்கு அதிகமானவர்கள், ஐம்பது வயதுக்குக்
குறைவானவர்கள், நிச்சயம் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய விஷயம் இந்த ஸ்கூபா டைவிங். ஸ்கூபா டைவிங் செய்யும் போது அதன் கட்டணம் தவிர,
தனியாக கட்டணம் செலுத்தினால் நீங்கள் ஸ்கூபா டைவிங் செய்யும்போது அதை காணொளியாகவும்
படங்களாகவும் எடுத்து உங்களுடைய அலைபேசியில் தரவேற்றம் செய்து தருகிறார்கள். எப்படியும் உங்களால் இந்த ஸ்கூபா டைவிங் அனுபவத்தினை
படம்/காணொளி எடுக்க முடியாது என்பதால் இந்த வசதி.
அவர்கள் எடுத்துத் தரும் படம்/காணொளி ப்ரொஃபஷனலாக இருக்காது
என்றாலும் உங்களுக்கு நல்லதொரு நினைவூட்டலாக அமையும் என்பதால் அதற்கான கட்டணத்தினைக்
கொடுத்து படங்கள் எடுத்துக் கொள்வது நல்லது. எங்கள் குழுவினரும் காணொளிகள், படங்கள்
எடுத்துக் கொண்டார்கள். இணையத்திலேயே அப்படியான சில காணொளிகள் இருக்கின்றன என்பதால்
அவற்றிலிருந்து ஒன்றை இந்த பத்தியின் மேலே இணைத்திருக்கிறேன். ஸ்கூபா டைவிங் தவிர இங்கே இருக்கும் இன்னுமொரு வசதி
ஸீ வால்க்! கடலுக்குள் நடப்பது – ஸ்கூபா டைவிங் போல அல்லாது தலைக்கு மட்டும் பெரிய
கவசம் – கிட்டத்தட்ட ஒரு கண்ணாடிப் பானையை உங்கள் தலைக்கு மேல் மாட்டி வைத்த மாதிரி
ஒரு விஷயம்! ஹாஹா… பாண்டியராஜன் நடித்த ஆண்பாவம் படம் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.
ஸ்கூபா டைவிங் – ஐ விட இதற்கான கட்டணம் சிறிது அதிகம். பெரும்பாலும் அதே மாதிரி பயிற்சி, சைகைகள் ஆகியவை
தான் – போட்டுக் கொள்ளும் கவசங்கள் மட்டும் மாறும்! இந்த சீ வாக் பற்றிய காணொளியும்
உங்கள் வசதிக்காக இங்கே சேர்த்திருக்கிறேன்.
பாருங்களேன்.
மொத்தத்தில் இந்த ஸ்கூபா டைவிங் மற்றும் சீ வாக் ஒரு ஸ்வாரஸ்ய
அனுபவம். அந்தமான் செல்லும் வாய்ப்பு அமைந்தால்
நிச்சயம் தவற விடக்கூடாத விஷயம் இந்த இரண்டுமே.
நீங்களும் இந்த அனுபவங்களைப் பெற எனது வாழ்த்துகள்! நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள்
என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
கவிதை நன்று. இன்றைய சூழலுக்கு பொருத்தமான கவிதைதான்.
பதிலளிநீக்குஸ்கூபா டைவிங் எச்சரிக்கைக்கு குறிப்புகள் பயனுள்ளவை. அனுபவிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். இருபது ரூபாய் நோட்டின் பின்பக்கம் இருபிப்பது அந்தமான் அழகுதான் என்பது செய்தி!
கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குஇருபது ரூபாய் நோட்டின் பின் பக்கம் அந்தமானின் அழகு! நிறைய விஷயங்களை நாம் தினம் தினம் பார்த்தாலும் அந்த விஷயத்தின் பின்னணியை நாம் தெரிந்து கொள்ள முயற்சிப்பதே இல்லை ஸ்ரீராம். நானும் அங்கே சென்ற பிறகு தான் தெரிந்து கொண்டேன்.
உங்கள் காணொளி காணோமே.... அதைத்தான் தேடினேன்.
பதிலளிநீக்குநான் இந்தோனேஷியாவில் கடலுக்கடியில் நடந்திருக்கிறேன். அது தனி அனுபவம்.
என்னை அனுமதிக்கவில்லை நெல்லைத் தமிழன். குழுவில் சென்று வந்த இளைஞர்களின் அனுபவம் மட்டுமே இங்கே பகிர்ந்து கொண்டேன்.
நீக்குகடலுக்கடியில் நடந்து செல்வது செம அனுபவம் தான்.
ஸ்கூபா மேட்டர் பயமுறுத்துகிறதே...
பதிலளிநீக்குகாணொளி பிறகு காண்கிறேன் ஜி இணையம் பிரச்சனை.
அத்தனை பயமானது இல்லை என்று தான் சொல்ல வேண்டும் கில்லர்ஜி.
நீக்குமுடிந்த போது காணொளியைப் பாருங்கள்.
// வாயைத் திறந்தால் கடல் நீர் உங்கள் வாய் வழி புகுந்து விடக் கூடும் //
பதிலளிநீக்குஆத்தாடி இது நமக்கு சரிப்பட்டு வராது... இது போல் சாகசம் மேற்கொண்டு (!) கடல் அழகை ரசிக்கும் போது, பாட்டு பாடத் தோணுமே...! முதலில் சைகையில் பாட்டு பாடக் கற்றுக் கொள்ள வேண்டும்...
ஹாஹா.... சைகையில் பாட்டு பாடக் கற்றுக் கொள்ளுங்கள்! அல்லது ஸ்கூபா டைவிங் சென்று வந்த பிறகு பாடுங்கள் தனபாலன்!
நீக்குஇரு காணொளியும் அருமை... அழகு...
பதிலளிநீக்குஇருமுறை 'OK' என்று முத்திரை காண்பிப்பதும் அருமை...
பாம்பு கூட அழகு...!
காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன். ஆமாம் சைகைகளையும் இதில் காண்பிக்கிறார்கள் என்பதால் தான் இதனை இணைத்தேன்.
நீக்குபாம்பு கூட அழகு ! :)))
Superb. Lot of information. Video nice.
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி ஜி.
நீக்குஅந்தமான் சென்று திரும்பியபோது வருத்தபட்ட ஒரே விசயம் சி வாக் தான். உங்கள் காணொளி அந்த வருத்தத்தை மறக்க வைத்துவிட்டத்து.
பதிலளிநீக்குஆமாம். சி வாக், ஸ்கூபா டைவிங் செல்ல முடியாதது வருத்தமான விஷயம் தான் இராமசாமி ஜி.
நீக்குஇருபது ரூபாய் நோட்டின் பின்பக்கத்தில் இந்த நார்த் Bபே தீவின் படம் தான் இருக்கிறது.//
பதிலளிநீக்குஇது இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன் வெங்கட்ஜி!!
ஸ்கூபா டைவ், சீ வாக் பற்றி நல்ல தகவல்கள் விவரணம் அறிய முடிந்தது ஜி. ஆனால் என்ன இனி அதற்கான சான்ஸ் இல்லை...கிடைக்கப்பெற்றவர்கள் லக்கி!. காணொளிகள் காண்கிறேன் ஜி. நெட் வருவதும் சிரமம் வந்தாலும் ஸ்லோவாக இருக்கு.
மகனிடம் சொல்ல வேண்டும். வயதைக் கடக்கும் முன் அவன் இது போல சென்று அனுபவம் பெற. அவனுக்கும் மிகவும் பிடிக்கும்.
கவிதை அருமை பதிவிற்குப் பொருந்திப் போகிறது.
கீதா
இருபது ரூபாய் நோட்டின் பின்புறம் இருப்பது நார்த் Bபே தீவு என்பதை அங்கே சென்ற பிறகு தான் நானும் தெரிந்து கொண்டேன் கீதா ஜி.
நீக்குநெட் பிரச்சனை - விரைவில் சரியாகட்டும்.
வயதைக் கடக்கும் முன்னர் சில அனுபவங்கள் பெற்றே ஆக வேண்டும் - அனைவருக்கும் இந்த வாய்ப்பு அமைந்து விடுவதில்லை கீதாஜி.
கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
கவிதை காணொளி எல்லாம் மிக அருமை.
பதிலளிநீக்குஎன் மகனும் மருமகளும் மொரிசியஸ் தீவுக்கு தேனிலவுக்கு சென்று வந்தார்கள்.
//ஸ்கூபா டைவிங் தவிர இங்கே இருக்கும் இன்னுமொரு வசதி ஸீ வால்க்! கடலுக்குள் நடப்பது – ஸ்கூபா டைவிங் போல அல்லாது தலைக்கு மட்டும் பெரிய கவசம் – கிட்டத்தட்ட ஒரு கண்ணாடிப் பானையை உங்கள் தலைக்கு மேல் மாட்டி வைத்த மாதிரி ஒரு விஷயம்! ஹாஹா…//
ஆமாம், அந்த படங்கள் அப்படித்தான் இருக்கிறது காணொளிகளும் இருக்கிறது.
அருமையாக இருக்கிறது பதி. இனி போகிறவர்களுக்கு உங்கள் பதிவு உதவும்.
மொரிசியஸ் - நல்ல இடம். வெளிநாடு செல்வது எனக்கு வாய்க்க வாய்ப்பில்லை! :) இந்தியாவிலேயே இன்னும் நிறைய இடங்கள் உண்டென்பதால் இப்போதைக்கு உள்நாட்டு பயணம் மட்டுமே கோமதிம்மா...
நீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
ஸ்கூபா டைவிங்க்?! படிக்கும்போதே பயமா இருக்கு.
பதிலளிநீக்குகோடி ரூபா கொடுத்தாலும் நான் செய்ய மாட்டேன்னு சொல்லும் வேலைகள் ரெண்டு இருக்கு. ஒன்னு நீருக்கடியில் மூழ்குறது,. இன்னொன்னு ஸ்டூல், ஏணில ஏறுவது.
கோடி ரூபாய் கொடுத்தாலும் - ஹாஹா... அந்த அளவுக்கு பயப்படத் தேவையில்லை ராஜி. பத்திரமாக அழைத்துச் சென்று மீண்டும் கரையேற்றுவார்கள் அங்கே இருக்கும் வழிகாட்டிகள்.
நீக்குமிக அருமையான அழகான பதிவு.
பதிலளிநீக்குஉங்கள் கவிதையும் யதார்த்தம்.
பாராட்டுகள் வெங்கட். மகனும் மருமகளும் மௌரிஷியஸ் தீவில்
சப்மரின் ,சீ வாக்கிங்க் செய்தார்கள். படங்களும் வந்தது.
மேற் தகவல்கள் நீங்கள் கொடுத்த அழகு நலம்.
காணொளி. இனிமை.
கூட யாராபது வந்தால் கண்டிப்பாகப்
பார்க்க வேண்டிய விஷயங்கள். கடல் தான் எத்தனை ரகசியங்களை வைத்திருக்கிறது.
மிக நன்றி மா.
கடல் தனக்குள் பல விஷயங்களை பொத்திப் பொத்தி வைத்திருக்கிறது என்பது உண்மை தான் வல்லிம்மா...
நீக்குமிகவும் அரிதான விஷயங்கள் கடலுக்குள் உண்டு. முடிந்தபோதே இவற்றை பார்த்து விடுவது நலம்.
பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
இரண்டு வீடியோவும் பார்த்தேன் ஜி. இரண்டுமே அருமை. சீ வாக் ரொம்பப் பிடித்திருந்தது. நடக்கும் போது தரை எப்படி இருக்கும். கால் தரையில் படுமா? மணற்பாங்காக இருக்குமோ? தரையில் எங்கேனும் புதையும் இடம் இருக்குமோ? ப்ரெஷர் இருக்குமே எப்படி நடப்போம் என்றெல்லாம் யோசிக்க வைத்தது...ரசித்தேன் ஜி கடல் தான் எத்தனை எத்தனை பொக்கிஷங்களையும் ரகசியங்களையும் புதைத்து வைத்திருக்கிறது!!!!!!!!
பதிலளிநீக்குகீதா
இணைத்த இரண்டு காணொளிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குகடல் அன்னை தனக்குள் எத்தனை எத்தனை ரகசியங்களையும் பொக்கிஷங்களையும் வைத்திருக்கிறாள்.... உண்மை தான்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகவிதை மிகவும் அருமையாக உள்ளது.
கடலின் ஆழத்தில் நடப்பது நீந்துவது என்பது பெரிய விஷயந்தான்..எதற்கும் அநாசயமான நீச்சல் பயிற்சி தெரிந்திருக்க வேண்டும்.
இரு காணொளிகளும் கண்டேன். மிகவும் நன்றாக உள்ளது. பெரிய பாம்புகளும் பயமின்றி போகிறவர்களுமாக முதல் காணொளி கொஞ்சம் பயமுறுத்தியது. இரண்டாவது கடல் மண்ணில் மீன்களுக்கு இடையே நடப்பதை பார்க்கும் போது நானே அந்த அனுபவத்தை பெற்ற மாதிரி உணர்ந்தேன்.
நீங்கள் சொல்லிய விபரங்கள் அனைவருக்கும் பயனுள்ளவை.
இருபது ரூபாய் நோட்டின் பின்புறம் இந்த தீவின் பகுதி இருப்பதை உங்கள் மூலமாக அறிந்து கொண்டேன் தகவலுக்கு மிக்க நன்றி.
கடல் பதிவு அருமையாக இருந்தது பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிய காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குகவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
காணொளி மூலம் நீங்களும் இந்த அனுபவங்களை பெற முடிந்தது என்று கூறியது மகிழ்ச்சி அளித்தது.
விவரங்கள் சிலருக்காவது பயன்படும் என்பதால் தான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
சுவாரசியம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குசுவாரஸ்யம் ! ரசித்தேன் !
பதிலளிநீக்குபதிவினை ரசித்ததற்கு நன்றி டீச்சர்.
நீக்கு