திங்கள், 6 ஏப்ரல், 2020

அந்தமானின் அழகு – சொகுசுப் படகில் பயணம் – ஏற்பாடுகள்


அந்தமானின் அழகு – பகுதி 16அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, பயணம் பற்றிய நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

Travel makes one modest. You see what a tiny place you occupy in the world – Gustauve Flaubert.
அந்தமான் பயணத்தில் முதல் இரண்டு நாட்கள் நாங்கள் செய்த விஷயங்களை எல்லாம் இந்தத் தொடரின் பதினைந்து பதிவுகளில் சொல்லி இருக்கிறேன்.  இரண்டாம் நாள் நார்த் Bபே தீவிலிருந்து போர்ட் Bப்ளேயர் வந்த எங்கள் குழுவினர் அனைவரும் எங்கள் தங்குமிடத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்தோம்.  அதன் பிறகு, எங்கள் குழுவினரில் சிலர் மட்டும் அப்படியே வெளியே வந்து நகர்வலம் சென்றோம்.  முன்னர் ஒரு பகுதியில் சொன்னது போல போர்ட் Bப்ளேயர் நகரின் அபர்தீன் மார்க்கெட் பகுதிகளில் வலம் வந்தோம். சிறிது நேர உலாவிற்குப் பிறகு எங்கள் தங்குமிடம் திரும்பி அவரவர் அறைக்குச் சென்றோம்.  எங்கள் பயணத்தின் முதல் இரண்டு நாட்கள் அந்தமானின் தலைநகரான போர்ட் Bப்ளேயர் நகரில் தங்கினோம் என்றாலும் எங்களது அடுத்த மூன்று நாட்கள் (மூன்று பகல், இரண்டு இரவு) வேறு தீவுகளுக்குச் செல்லப் போகிறோம் என்பதால் எங்கள் உடமைகளை சரிபார்த்து அடுத்த மூன்று நாட்களுக்குத் தேவையான உடைகளை மட்டும் வேறு ஒரு பையில் எடுத்து வைத்துக் கொண்டு, மீதி இருக்கும் உடைமைகளை மற்றொரு பையில் எடுத்து வைத்துக் கொண்டோம்.நாங்கள் போர்ட் Bப்ளேயரில் தங்காத நாட்களில் அங்கே விட்டுச் செல்லும் உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்வார்கள் எங்கள் தங்குமிட உரிமையாளர்கள்.  அதற்கு ஏதும் தனிக் கட்டணம் இல்லை.  எல்லா உடைமைகளையும் எடுத்துக் கொண்டு செல்வது தேவையில்லை என்பது ஒரு வித வசதி.  மூன்று நாட்களுக்குத் தேவையான உடைகளை எடுத்துச் சென்றால் போதுமானது. உடைகள் தவிர அதிக விலையுள்ள எதையும் அங்கே வைத்துச் செல்வது அவசியமற்றது.  பத்திரமாக இருக்கும் என்றாலும் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கத் தேவையில்லை. இல்லை வடிவேலு மாதிரி “ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி” என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் இஷ்டம்.  இந்த ஏற்பாடுகளை எல்லாம் செய்து விட்டு இரவு உணவுக்காக தங்குமிடத்தில் இருக்கும் சாப்பாட்டு அறைக்குச் சென்று அனைவரும் சாப்பிட்டு வந்தோம்.  அதற்குப் பின்னர் இரவு முழுவதும் நல்ல ஓய்வு. அடுத்த நாள் காலையில் எழுந்து புறப்பட வேண்டும். அடுத்த நாள் செல்லப் போகும் இடமும் ஒரு தீவு தான். ஆனால் செல்லப்போகும் முறை நாங்கள் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று.நாங்கள் போர்ட் Bப்ளேயரிலிருந்து கடல் வழியாக சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தீவிற்குப் பயணம் செய்ய இருந்தோம். அந்தத் தீவிற்குப் பயணம் செய்ய இரண்டு வழிகள் – ஒன்று பவன் ஹன்ஸ் நிறுவனம் வழிநடத்தும் ஹெலிகாப்டர் சர்வீஸ் – 20 நிமிடங்களில் உங்களை அங்கே கொண்டு சேர்த்து விடுவார்கள். ஆனால் இது வாரத்தின் மூன்று நாட்களில் மட்டுமே இயங்கும். அது மட்டுமல்லாது கட்டணமும் அதிகம்.  பெரும்பாலான நாட்களில் கடைசி நேரத்தில் பயணம் ரத்து செய்யப்படும் அபாயமும் உண்டு என்பதால் இதனை பலரும் விரும்புவதில்லை.  இரண்டாவது வழி கடல் மார்க்கமாகப் பயணிப்பது. இந்த கடல் மார்க்கத்திலும் உங்களுக்கு இரண்டு வித வசதிகள் உண்டு – ஒன்று அரசாங்கம் இயக்கும் கப்பல்கள்… இரண்டாவது தனியாரின் சொகுசுக் கப்பல்கள்!  தனியார் அரசு இயக்கும் கப்பல்களில் கட்டணம் குறைவு என்றாலும் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் எடுத்துக் கொள்ளும் பயணம் அது.  தனியார் சொகுசுப் படகுகளுக்கான கட்டணம் சற்றே அதிகம் – ஆனால் ஒன்றரை மணி நேரம் மட்டுமே போர்ட் Bப்ளேயரிலிருந்து அடுத்த திவுக்குச் செல்ல ஆகும் நேரம். நீங்கள் உங்களுக்கு இருக்கும் நேரம், வசதிகள் பொறுத்து உங்கள் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம்.  இந்த சொகுசுக் கப்பல் பயணத்திற்கும் முன்பதிவு வசதிகள் உண்டு.  இணையம் மூலமாகவே இந்த முன்பதிவுகளைச் செய்து கொள்ள முடியும் என்பது ஒரு நல்ல வசதி.  எங்கள் திட்டத்தில் இந்த சொகுசுக் கப்பல் பயணமும் அதன் கட்டணமும் Inclusive என்பதால் எங்களுக்கு எந்தவித தடுமாற்றமும், பிரச்சனையும் இல்லை.  எல்லாவற்றையும் பயண ஏற்பாட்டாளரான திரு சுமந்த் அவர்களே பார்த்துக் கொள்வார்.  அதனால் காலையில் எழுந்திருந்து, எங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு அவர் சொன்ன நேரத்தில் தயாராக இருந்தால் வண்டியில் அழைத்துக் கொண்டு போய் சொகுசுக் கப்பல் புறப்படும் இடத்திற்கு எங்களைக் கொண்டு சேர்த்து விடுவார்.  சரியான நேரத்தில் கப்பல் புறப்பட்டுச் செல்லும் வரை வெளியே காத்திருப்பார்கள்.  துறைமுகத்தில் கொண்டு சேர்ப்பது வரை அவர்கள் பொறுப்பு.  அது போலவே அடுத்த தீவில் இறங்கிய பின்னர் அவரது ஆட்கள் நம்மை அழைத்துச் சென்று எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து விடுவார்கள்.  கடலில் பயணிக்கும் சமயம் மட்டுமே அவர்கள் நம்மோடு இருப்பதில்லை!ஒவ்வொரு நாளும் தனியார் துறையினர் வழிநடத்தும் பத்து சொகுசுக் கப்பல்கள் போர்ட் Bப்ளேயரிலிருந்து புறப்படுகின்றன.  காலை ஆறு மணியிலிருந்தே இந்த சொகுசுப் படகுகள் பயணத்தினை துவங்கி விடுகின்றன.  ஆனாலும், பெரும்பாலான சமயங்களில் படகுகள் ரத்து செய்யப்படுவதும் உண்டு – குறைந்த அளவு பயணிகள் இருந்தால், அதற்கேற்றவாறு வேறு சொகுசுப் படகில் அனுப்பி விடுகிறார்கள்.  இந்த சொகுசுக் கப்பலில் நீங்கள் அமரும் இடம் பொறுத்து மூன்றுவித கட்டணங்கள் உண்டு – Economy, Luxury, Royal Class என மூன்று வித பிரிவுகள் – கட்டணம் பொறுத்து நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம். இந்த மூன்று பிரிவுகளின் பெயர்கள் கப்பலுக்குக் கப்பல் மாறுபடலாம்.  எல்லாம் ஒரே மாதிரி தான் என்றாலும், நல்ல வ்யூ கிடைப்பதைப் பொறுத்து தான் இந்த பிரிவுகள். எங்களுக்கான பயணத்திட்டத்தில் நாங்கள் நல்ல வ்யூ கிடைக்கும் இடத்தில் தான் அமர்ந்திருந்தோம். ஓரங்களில் அமர்ந்திருந்தால் இன்னும் நல்ல வ்யூ கிடைத்திருக்கலாம். நாங்கள் கப்பலின் முன் பாகத்தில் கண்ணாடிக்கு அருகே அமர்ந்து பயணம் செய்தோம். எங்கே பயணம் செய்யப் போகிறோம் அதற்கான கட்டணம் ஆகியவற்றையும் இந்தப் பகுதியில் சொல்லி விடுகிறேன்.ஸ்வராஜ் த்வீப் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஹேவ்லாக் எனும் தீவுக்குத் தான் நாங்கள் பயணம் செய்ய இருக்கிறோம். மூன்றாம் நாள் காலையில் இந்தப் பயணம் துவங்கினோம்.  இந்தப் பயணத்திற்கு ஆளொருவருக்கு 1500 வரை கட்டணம் உண்டு.  இதுவும் எங்கள் பயணத்திட்டத்தில் உண்டு என்பதால் தனியாக கட்டணம் செலுத்தி பயணச் சீட்டு வாங்கத் தேவையில்லை.  முன்னரே திரு சுமந்த் அவர்கள் ஏற்பாடு செய்திருப்பதால் அவர் அனுப்பும் வாகனத்தில் ஏறிக் கொண்டு துறைமுகத்திற்குச் சென்றால் போதுமானது.  சொகுசுப் படகுப் பயணத்திற்கு முன்னர் உங்களுக்கு ஒரு விஷயம் நினைவு படுத்துகிறேன் – அனைவரும் கண்டிப்பாக அடையாள அட்டை – ஆதார் அட்டை எடுத்துக் கொள்வது அவசியம்.  விமான நிலையம் போலவே இந்த துறைமுகத்திலும் எல்லாவித பாதுகாப்பு பரிசோதனைகளும் உண்டு என்பதால் அதற்கான நேரமும் எடுக்கும் என்பதால் படகுப் பயண நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னரே நீங்கள் துறைமுகம் சென்று விடுவது நல்லது.  நாங்கள் அடுத்த நாள் காலையில் எப்போது புறப்பட்டோம், எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி


நேற்று வெளியிட்ட எனது இரு பதிவுகள் - படிக்காதவர்கள் வசதிக்காக...28 கருத்துகள்:

 1. வெங்க்ட ஜி நீங்கள் அரசு வேலையில் இருந்து ரிட்டையர்மெண்ட் ஆன பிறகு உங்கள் கையில் மிகவும் நல்ல பிஸினஸ் உள்ளது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... அரசு வேலையில் இருந்து ரிட்டையர்மெண்ட் ஆன பிறகு என்னென்ன செய்யப் போகிறோமோ? வீட்டிலேயே வேலை வாங்க ரெடியாக இருப்பார்களே மதுரைத் தமிழன்!

   பார்க்கலாம் - காலம் என்னென்ன நமக்காக வைத்திருக்கிறது என்பதை யார் அறிவார்.

   நீக்கு
 2. // தனியார் இயக்கும் கப்பல்களில் கட்டணம் குறைவு என்றாலும் // ....,

  தனியார் சொகுசுப் படகுகளுக்கான கட்டணம் சற்றே அதிகம் //

  ஜி திருத்தம் செய்ய வேண்டுமா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி தனபாலன். மாற்றி விட்டேன்.

   நீக்கு
 3. பதிவை நல்ல சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறீர்கள் ஜி. தொடர்கிறேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு ஸ்வாரஸ்யமாக இருப்பதாகச் சொன்னதில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தொடர்ந்து பயணிப்போம்.

   நீக்கு
 4. டைட்டானிக் போல... விளிம்பில்... பறவை போல் கைகளை...

  சரி முதலில் நிற்பதற்கு அனுமதி உண்டா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டைட்டானிக் போல... விளிம்பில் - ஹாஹா....

   வாய்ப்பில்லை தனபாலன். கப்பல் பயணிக்கும்போது வெளியே நிற்க பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. துறைமுகத்தில் நிற்கும்போது கூட சாதாரணமாக அனுமதிப்பதில்லை. ஷூட்டிங் போன்ற சமயங்களிலும், முக்கியப் புள்ளிகளாக இருந்து அவர்கள் விரும்பினாலும் அனுமதிக்கலாம்! பொதுவாக அனுமதி இல்லை.

   சிறு மோட்டார் படகுகளில் அப்படி நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் தேனிலவுத் தம்பதிகளை பார்த்தேன்! நான் தனியாக நின்று அப்படி படம் எடுத்துக் கொண்டால் ஒரு வேளை மான் கராத்தே போஸ் போல இருந்திருக்கும்! ஹாஹா....

   நீக்கு
 5. அன்பு வெங்கட், சொகுசுக் கப்பல் பார்க்கவே நன்றாக இருக்கிறது.
  விவரமாக நீங்கள் சொல்வது நாங்களே செல்வது போல நினைக்க வைக்கிறது.
  ஸ்விஸ் இங்கெல்லாம் டெக் இருக்கும் எல்லாவிதத்திலும் சுற்றி நின்று படங்கள் எடுக்கலாம்.Cruise ship என்று இங்கயும் பிரம்மாண்டமாக இருக்கும்.
  நாம் செல்லும் வண்டி எல்லாம் நம்முடன் வரும்.

  நம் ஊரில் கடல் என்பதால் இன்னும் அக்கறை எடுத்துச் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.
  மிக மிக நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனியார் சொகுசுக் கப்பல்கள் அழகாகவே இருக்கிறது வல்லிம்மா. அரசு கப்பல்கள் சுமார் ரகம் தான். இங்கே டெக் இருந்தாலும் கப்பல் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அரசுக் கப்பல்களில் வெளிப்புறமும் நின்று பயணிக்க முடிகிறது. நல்ல அனுபவம் கிடைத்ததும்மா இந்தப் பயணத்தில்.

   நீக்கு
 6. கப்பல் படங்களைப் பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா
  கப்பலில் தங்களின் பயண அனுபவத்தையும்அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கப்பல் படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   பயண அனுபவம் தொடர்ந்து வெளி வரும் ஐயா.

   நீக்கு
 7. நல்ல விளக்கமாக எழுதியிருக்கீங்க. உபயோகமான தகவல்கள்.

  எப்போவுமே தனியார், அரசைவிட ஸ்மார்ட்டாக இயங்குவது வருத்தத்துக்குரிய நிலைமைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவல்கள் சிலருக்காவது பயன்படும் என நம்புகிறேன் நெல்லைத் தமிழன்.

   தனியார் - அரசு - வித்தியாசங்கள் வருத்தம் தருபவையே... மாற்றங்கள் தேவை - ஆனால் எளிதில் கொண்டு வர முடிவதில்லை என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

   நீக்கு
 8. வெங்கட்ஜி செம ஸ்வாரஸ்யம். நல்ல விவரமாகச் சொல்லியிருக்கீங்க. கப்பல் பயணமும் மிகவும் பிடிக்கும். கப்பல் பயணம் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது இலங்கை தலைமன்னாரிலிருந்து ராமேஸ்வரம் வருவதுதான். 4, 5 முறை செய்திருப்பேன் இங்கிருந்து அங்கு போவதும் அங்கிருந்து வருவதும் என்று. அப்போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தவள். அங்கு மூன்றாம் வகுப்பு வரை படித்தேன். அப்போது கப்பலின் தளங்களுக்குச் சென்று பார்த்து விளையாடுவது உண்டு. கப்பலின் டெக்கில்/விளிம்பில் கம்பியைப் பிடித்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்து வந்ததுண்டு. கப்பல் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு செல்லும் அழகு, கடலின் சின்ன அலைகள், கடல் தண்ணீர் அலை அடிப்பது என்று எல்லாம் நல்ல பசுமையாக நினைவில் இருக்கிறது. ராமேஸ்வரம் வந்ததும் கப்பல் நிற்கும் இடத்திலிருந்து எங்களை கப்பலில் இருந்து இறக்கி, தோணியில் ஏற்றி கரைக்கு அழைத்துச் செல்வார்கள். தோணி ஆடிக் கொண்டே இருக்கும். அதில் இறங்குவது ஒரு த்ரில். எல்லாமே பசுமையாக நினைவிருக்கு.

  உங்களின் இந்தப் பயணம் பற்றி வாசித்ததும் பல நினைவுகள், மற்றும் அந்தமான் செல்லும் வாய்ப்பு அமைய வேண்டுமே என்றும் எழுகிறது.

  மிக நெருங்கிய என் உறவினர் இருவர் குடும்பத்துடன் க்ரூஸ் கப்பலில் சென்ற அனுபவம் சொல்லி புகைப்படங்களும் அனுப்பியிருந்தார்கள். அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் வரை கப்பல் பயணங்கள் - செம அனுபவமாக இருந்திருக்கும் இல்லையா அந்தப் பயணங்கள். உங்கள் நினைவுகளை இப்பதிவு மீட்டெடுக்க உதவியதில் மகிழ்ச்சி கீதாஜி.

   விரைவில் உங்களுக்கும் அந்தமான் செல்லும் வாய்ப்பு அமைந்திடட்டும்.

   நீக்கு
 9. சுவையான படகுப் பயணத் தகவல்
  தொடருகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி யாழ்பாவாணன்.

   தொடர்ந்து பயணிப்போம்.

   நீக்கு
 10. விஷயம் எதுவாக இருந்தாலும் அதைச் சொல்லும் முறையில் சுவாரஸ்யப்படுத்தி விடுகிறீர்கள் என்பது தான் உங்கள் விவரிப்பின் + பாயிண்ட். அந்த சொகுசு கப்பல்கள் பற்றி விவரித்தது மாதிரியான விஷயங்கள் இதற்கு உதாரணம். நீங்கள் சொல்லும் விஷயத்தைப் படிப்பது உடனே படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்வது என்று செம உற்சாகம்.

  அந்தமான், Bபிளேயர் எல்லாம் நாம் போய் இறங்குவதற்கான இடங்கள் தான் என்று தெரிந்தது. அதற்காக பார்ப்பத்தற்கு அங்கு ஒன்றுமே இல்லை என்று என்று சொல்லி விடவும் முடியாமல் முக்கியமான வரலாற்று பதிவுகள் பெற்ற பார்வை இடங்கள். சொல்லப் போனால் அந்த சிறைசாலைகளைப் பார்த்த பிறகு தான் சுற்றுலாவே ஆரம்பிக்கிறது. தீவுகள் பார்க்க வேண்டிய அரிய இடங்கள். ஒரு தீவைப் பார்த்தோமா, மறுபடியும் Bபிளேயருக்கு வந்து அங்கிருந்து அடுத்த தீவுக்கு என்று இல்லாமல் இந்த தீவுகள் பயணம் இருப்பது தான் விசேஷம். ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவுக்கு என்று இருப்பது இந்த சுற்றுலாவின் தனித்தன்மையாக எனக்குப் படுகிறது.

  நியூயார்க் நகரிலிருந்து சுதந்திர தேவி சிலையைப் பார்க்கப் போன நினைவுகள் சொல்லிக் கொள்ளாமல் என் மனதில் படிந்தது. நயாகராவை தரிசித்ததும் கூடவே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மொத்தம் 572 தீவுகள் இங்கே உண்டு ஜீவி ஐயா. அவற்றில் 37 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் இருக்கிறார்கள். அவற்றிலும் எல்லா தீவுகளுக்கும் நாம் பயணித்து விட முடியாது! அந்தமான் சுற்றுலா நிச்சயம் அனைவருக்குமே மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. முடிந்தால் ஒரு முறை சென்று வரலாம் ஜீவி ஐயா.

   உங்கள் நியூயார்க்/நயாகரா நினைவுகளை மீட்டெடுக்க இப்பதிவு உதவியதில் மகிழ்ச்சி.

   தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.

   நீக்கு
 11. இதெல்லாம் அந்தமான் போற கப்பல்தானா ... இல்ல வேற எதாவது ரூட் கப்பல்களா ? .. ஒவ்வொரு கப்பலும் மினி டைட்டானிக் கப்பல் மாதிரியே டிசைன் பண்ணியிருக்காங்க.!!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தமான் நிகோபார் தீவுகள் குழுமத்தில் இருக்கும் பயணிக்கமுடிந்த தீவுகளுக்கு இந்த மாதிரி சொகுசுக் கப்பல்களும் அரசுக் கப்பல்களும் உண்டு சிவா. நல்ல டிசைன், சிறப்பான அனுபவம் தரக் கூடியவை இப்பயணங்கள்.

   நீக்கு
 12. கண்டிப்பாக அந்தமான் செல்லவேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கிறது. அவ்வாறு செல்வதற்கு காலம் அமைந்தால், உங்களின் இந்த பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் அந்தமான் பயணிக்கும் ஆசை விரைவில் நிறைவேறட்டும்.

   இப்பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் மகிழ்ச்சியே சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 13. //வடிவேலு மாதிரி “ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி” என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் இஷ்டம்.//

  நகைச்சுவையாக சொன்னாலும் இதை கண்டிப்பாய் மனதில் குறித்து கொள்ள வேண்டிய விஷயம்.
  விலை உயர்ந்த பொருட்களை கையோடு கொண்டு செல்வதே நல்லது.
  சொகுசு கப்பல், அரசு கப்பல் பற்றிய விவரங்கள் அருமை.

  பயண அனுபவங்களை தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் வழி சொன்ன தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தொடர்ந்து பயணிப்போம் கோமதிம்மா...

   நீக்கு
 14. பதில்கள்
  1. பயணம் இனிதானதே! தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....