திங்கள், 27 ஏப்ரல், 2020

கொண்டையான்குளம் நினைவலைகள் - பத்மநாபன்அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, வினோத் என்பவர் எழுதிய ஒரு இனிமையான கவிதையுடன் ஆரம்பிக்கலாம்.

கருவுடையணிந்த மேகமது
கரங்கோர்த்து நிற்க
காற்று அத்தருணத்தில்
காதினில் ஓதியதும்
காரினைப் பொழிய
களிப்புடன் நனைந்திருந்தன
கிராமத்துக் குளத்தின்
களிமண் தரை…இன்றைக்கு தில்லி நண்பர் பத்மநாபன் அண்ணாச்சியின் கொண்டையான்குளம் நினைவலைகள் பதிவாக… ஓவர் டு பத்மநாபன் அண்ணாச்சி… - வெங்கட் நாகராஜ், புது தில்லி.

************

கொண்டையான்குளம் நினைவலைகள் – பத்மநாபன்


படம்: இணையத்திலிருந்து...

இப்ப நினைச்சா கொஞ்சம் அல்பத்தனமாத்தான் இருக்கு. அதுக்குன்னு மறக்க முடியுமா!

அப்போ பள்ளிக்கூடம் லீவு விட்டுருந்தது. இப்ப மாதிரி வீட்டுல அடங்கிக் கிடக்கதுக்கு கொரானா பயம் இல்லேல்லா. காலையில எங்க அம்மா கையால இட்டிலியோ தோசையோ இல்லேன்னா கொழுக்கட்டயோ குழாப்புட்டோ ஏதோ ஒண்ண வயித்துக்குள்ள தள்ளிக்கிட்டு ஊரைச்சுத்தக் கிளம்ப வேண்டியது. ஆனா இந்த அயிட்டமெல்லாம் ரொம்ப நேரம் தாங்காது. சீக்கிரமே பசிக்க ஆரம்பிச்சிரும். ஆனா உளுந்தங்கஞ்சின்னு ஒரு அயிட்டம் உண்டு. நல்ல சம்பா அரிசியையும் கருப்பு உளுந்தையும் போட்டு கூடவே கைநிறைய உரிச்ச வெள்ளவுள்ளியையும் கொஞ்சம் வெந்தயத்தையும் போட்டு கஞ்சி வச்சு கடைசியில ஒரு முத்தின தேங்காயை பூப்பூவா திருகிப் போட்டு சரியா உப்பைப் போட்டு தொட்டுக்கிட இந்த கொத்தமல்லி தொவையல்னு ஒரு அயிட்டம்! அட அட அட! எவ்வளவு நேரம் வெட்டியா வெளிய சுத்துனாலும் மத்தியானம் இரண்டு மணி வரைக்கும் தாங்கும்.

அப்போல்லாம் தினசரி விவசாய  வேலை, கொத்த வேலை மாதிரி கடின வேலை செய்யறவங்களுக்கு இந்த உளுந்தங்கஞ்சிதான் வெள்ளக்குடி! இப்போல்லாம் அவங்களும் உளுந்தங்கஞ்சி வேண்டாம், உள்ள காசைக் கொடுத்துருங்க, ஹோட்டல்ல சாப்பிட்டுக்குறோம்னு மாறிட்டாங்க! இந்த உளுந்தங்கஞ்சி ருசியில சொல்ல வந்த கதையை மறந்திட்டனா!

இந்த உளுந்தங்கஞ்சியை குடிச்சிக்கிட்டு ஒரு நிக்கரப் போட்டுக்கிட்டு மேல ஒரு புரூஸ்லீ படம் போட்ட ஒரு பனியனப் போட்டுக்கிட்டு அப்படியே கிளம்பி எங்க ஊரு நேரு ஸ்டேடியம் - அதுக்கு பிச்சம்விளைன்னு பேரு. அங்க நடுநாயகமா நின்ன பலாமரமூட்டுல நம்மளப் போல சின்சியரான கொஞ்சபேரு ஏற்கனவே வந்துருப்பான். அங்க வச்சுதான் அடுத்த செயல் திட்டம் தீட்டப்படும். கபடி விளையாடுவமா இல்ல கடற்கரைக்கு போவமா என்று! ஒருநாள் ஒரு பயலைக்கூட கண்ணுல காணோம். என்னடா இந்த பிச்சம்விளைக்கு வந்த சோதனைன்னு மண்டையை சொறிஞ்சிகிட்டு நின்னா தூரத்தில மாதவன் வந்தான். அப்பதான் கொஞ்சம் நிம்மதியாச்சு. 

இரண்டுபேரும் சேர்ந்து கொஞ்சம் தள்ளியிருந்த வாட்டர் டேங்கப் பார்த்து நடந்தோம். இந்த டேங்கு படியில இருந்தா ரோட்டுல போற வார மனுஷனுகளை வாய்ப்பாத்து பொழுது போயிரும். அன்னைக்கு ரோட்டிலயும் ஒருத்தனையும் காணல்ல. ஆமா பதினோரு மணி உச்சிவெயில்ல எவன் வெளியில வருவான். அப்போ ரோட்டில ஒரு கார் சல்ல்லுன்னு எங்களத் தாண்டி போகுது. காருக்குள்ள மாலையும் கழுத்துமா ஒரு புது கல்யாண ஜோடி! பக்கத்துல கணவதிபுரத்துலயோ ஆலங்கோட்டையிலேயோ உள்ள ஜோடி போலன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது பக்கத்தில இருந்த மாதவன் என்னப் பாத்து ஓடி வா!ஓடி வான்னு சொல்லிக்கிட்டே கார் போன திசையில ஓடுகான்! காருக்க பொறத்தால அவன் ஓடுகான். அவன் பொறத்தால நான்  ஓடுகேன். ஓட்டம்ன்னா அப்படி ஒரு ஓட்டம். கார் ஒரு முன்னூறு மீட்டர் தள்ளி கொண்டையான் குளத்தம்மன் கோவில் முன்னாடி நின்னுது. காரிலிருந்து ஒரு ஆள் இறங்கி கோவில் முன்னாடி போய் ஒரு கும்பிடு போட்டு கையில இருந்த விடலைத் தேங்காயை ஓங்கி உடைச்சாரு. அவர் உடைக்கவும் நாங்கள் மூச்சிரைக்க ஓடி அங்கே போய் சேரவும் சரியாக இருந்தது. வெற்றி எங்களுக்கே! சிதறி சில்லு சில்லா உடஞ்சு கிடந்த தேங்காய் முழுதும் பொறுக்கி எடுத்து திரும்ப டேங்க் கீழே உட்கார்ந்து பொறுமையாக உடைச்சு சாப்பிட்டா என்னா ருசி! என்னா ருசி!

இந்த மாதவன் இருக்கானே, அவன் ஆயிரம் தென்னைமரத்துக்கு சொந்தக்காரன். எங்க வீட்டிலயும் தேங்காய்க்கு குறைவு கிடையாது. ஆனாலும் காருக்கு பொறத்தாலே ஓடி கிடைச்ச விடலைத் தேங்காய் ருசி தனிதான். என்ன ஆனாலும் சாமிக்கு உடச்ச தேங்காயில்லா! பிரசாதமுல்லா! இப்ப நினைச்சா கொஞ்சம் அல்பத்தனமாத்தான் தெரியும். ஆனாலும் அன்னைக்கு முழுத் தேங்காயும் எங்களுக்கே கிடைச்ச சந்தோஷம் இருக்கே! சொக்கா! அப்புறம் இந்த கொண்டையான் குளத்தம்மனும் அந்த கொண்டையான் குளமும் எங்கள் சிறுவயதில்  எங்களோடு பின்னிப் பிணைந்தது. அந்த அம்மன் கோவில் அப்போது கொஞ்சம் பாழடைந்து கிடந்தது. அதை ஒட்டி நின்ற பெரிய வேப்பமரமும் அந்த பழைய கட்டிடமும் பகலிலேயே கொஞ்சம் அச்சமும் அமானுஷ்யமுமாகத்தான் இருக்கும். மேலும் நிறைய கதைகள் சொல்ல கிழவிகள் இருந்ததால் தனியாக கொண்டையான் குளத்தம்மன் கோவில் பக்கம் போக கொஞ்சம் பயம்தான்! இப்போது அந்த கோவிலைப் புதுப்பித்து அழகாக பராமரிக்கிறார்கள்.

இந்த கொண்டையான் குளம் இருக்கே அது ஒரு அழகான விவசாயக் குளம். சாயுங்காலம் ஆச்சுன்னா ஜே! ஜேன்னு கூட்டம்தான். சுத்திமுத்தி இருக்கும் வயல்லயும் தோப்பிலும் வேலை செய்து முடித்து இந்தக் குளத்தில் குளிச்சு கொண்டையான் குளத்தம்மனுக்கு வெளியில இருந்தே ஒரு கும்பிடப் போட்டு வீடு போனாத்தான் பாதிப்பேருக்கு நாள் முழுமையடையும். இந்தக் குளத்தில்   நண்பர்கள் சகிதம் குளியல் போடுவது சலிக்காத ஒன்று.

அதுவும் வாய்க்காலில் தண்ணீர் வந்து குளம் நிரம்பி புதுத்தண்ணீரில் குளித்த நினைவுகள் இன்னும் ஈரங்காயாம இருக்கு. ஆனால் இந்தக் குளத்துக்கு பயமுறுத்தும் மறுபக்கமும் உண்டு. ஒருமுறை பகல் பதினொரு மணியளவில் அந்த குளத்திற்கு குளிக்கலாம்னு கிளம்பினேன். கூட கம்பெனி கொடுக்க ஒருத்தரும் இல்லை. பின்னே அந்த ரண்டும் கெட்டான் நேரத்தில யாரு வருவா! குளத்துக்குப் போனா ஒரு காக்கையை காணோம். கொஞ்சம் தள்ளி பொம்பளக்கரையில ஒரேயொரு பொம்பிள மாங்கு மாங்குன்னு துணியை துவைச்சுக்கிட்டு இருக்கு. நானும் இடுப்புல துண்டைக் கட்டிக்கிட்டு குளத்துல இறங்கி ஒரு முங்கு போட்டேன்! சரி! நம்மாலே எவ்வளவு நேரம் தண்ணிக்குள்ள முங்கி இருக்க முடியும்ன்னு ஒரு விபரீத எண்ணம். அப்படியே தண்ணிக்குள்ள முங்கி ஒண்ணு ரண்டு மூணு.... அம்பது அம்பத்தொண்ணு.... நூறு நூத்தியொண்ணு.... நூத்தியிருவதுன்னு எண்ணி பச்சக்குன்னு தண்ணிக்குள்ளயிருந்து எந்திச்சேன். பொம்பளக்கரையில இருந்த அம்மணி குளத்திலிருந்து  நெஞ்சு வரைக்கும் ஏத்தி கட்டியிருந்த பாவாடையோட கரைக்கு வந்து முகம் வெளிர தண்ணியையே பாத்துக்கிட்டு அரண்டு போய் நிக்குது. நான் எழுந்ததும் என்னப் பாத்து ஒரே கத்து கத்துது. என்னப்போ இப்படி பண்ணுக. நான் பயந்துல்லா போனேன். இந்த குளத்தப்பத்தி தெரியுமுல்லா. அதனாலதான் பயந்து போனேன். ஒத்தையிலேயா முக்குளி போட்டு விளையாடுகதுன்னு சிடு சிடுன்னு கத்துனா! அந்த குளத்தின் பயமுறுத்தும் மறுபக்கம் தெரிந்த பெண்மணி.

ஒருமுறை என் அக்கா ஒருத்தி அவளது கூட்டுக்காரிகளோடு குளிக்கப் போய் தொட்டுப் பிடிச்சு விளையாட,  இவளுக்கு நீச்சல் தெரிஞ்ச தைரியத்தில் கொஞ்சம் ஆழமான பகுதிக்கு சென்று சவால் விட இவளது நீச்சல் தெரியாத தோழி இவளை பிடிக்கப் போய் இரண்டு பேரும் ஆழத்தில் மாட்டி எப்படியோ தப்பி வெளி வந்தார்கள். ஆயுள் கெட்டி.

ஒரு முறை சென்னையில் இருந்து இரண்டு நாள் முன்னதான் அப்பா அம்மா பையன் பொண்ணு நாலு பேரும் ஊருக்கு வந்திருந்தா.  சென்னையில் நாலு சொம்பு தண்ணியை தலையில ஊத்தி குளிச்ச பார்ட்டி. கொண்டையான் குளத்தில தண்ணி நிரம்பி கிடக்குன்னு தெரிஞ்சதும்  பையனை கூட்டிக்கிட்டு குளிக்க கிளம்பிட்டாரு. குளத்தில ஒருத்தரையும் காணல்ல. பையனுக்கு ஒரே சந்தோஷம். மொத்த குளமும் நமக்குத்தான்.

சனநெருக்கடியில் கொசு மூத்திரத்தில மூஞ்சி கழுவி பவுடர் போட்டவனுக்கு சலசலன்னு அங்கங்க அல்லிப்பூ தலையாட்டி தலையாட்டி தண்ணிக்கு மேல கொண்டாடுகதப் பார்த்து ஒரே சந்தோஷம்.  ஆனா விதி வலிதுல்லா. அப்பாவுக்கு கொஞ்சம்  வயிறு கடா முடான்னுது.  எலே மக்கா! இப்படியே கரையிலேயே இரு. தண்ணிக்குள்ள இறங்கிறாத. நான்  வெளிக்கு போய்ட்டு வந்திருகேன்னுட்டு கொஞ்ச தூரம் தள்ளிப்போய் குத்த வச்சாரு. காத்தாட கக்கூஸ் போனவனுக்குத்தான் அந்த சுகம் தெரியும். அது ஒரு போதை மாதிரி. ரொம்பநாள் கழிச்சு வெளியில வெளிக்குப் போன சுகத்துல கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக்கிட்டாரு.

இங்க கரையில இருந்த பய கொஞ்சநேரம் சும்ம இருந்தான். சின்னப்பயல்லா! கொஞ்சம் கொஞ்சமா  தண்ணிக்கு கிட்டபோய் தண்ணியை அளையான். கைக்கெட்டுக மாதிரி இருந்த தூரத்துல ஒரு அல்லி விரிஞ்சும் விரியாமலும் இவனை வா வான்னு கூப்பிடுகு. என்ன ஆனாலும் சின்னப் பையன்தானே. கூப்பிட்டது அல்லி இல்லேன்னு அவனுக்கு தெரியாதுல்லா.

இந்த வெளிக்குப் போன மனுஷன் குளத்திலேயிருந்து மறுகால் பாய்ஞ்சு போற ஓடைத் தண்ணியில கையி காலக் கழுவி ஆற அமர வாராரு. குளத்தங்கரையில பயலக் காணல்ல. ஏலே! மக்கா! எங்கல இருக்க. ஒருவேளை பயலுக்கும் வெளிக்கு வந்திருக்குமோ! கொஞ்சம் தள்ளிப் போய் பாக்காரு. பயலக் காணல்ல. மனுஷனுக்கு கும்பி கலங்கிப் போச்சு. ஏலே மக்கான்னு கத்திக்கிட்டே தண்ணிக்குள்ள குதிச்சு தேடுகாரு. பைத்தியம் போல தேடுகாரு. தட்டுப்படல்ல. இடுப்புல கட்டின துண்டோட ஊருக்குள்ள ஓடி வந்து கதறுகாரு. ஊரே திரண்டு போய் குளத்துக்குள்ள குதிச்சாச்சு. கடைசியில தண்ணிக்கடியில அல்லிக்கொடியில சிக்கிக்கிடந்த பயல வெளிய கொண்டு வந்து  ஊரே கண்ணீர் விட்டத நினைச்சா இப்பவும் மனசு கலங்கிப் போகுது.

இப்படி சந்தோஷங்களையும் சோகங்களையும் தந்தது இந்த கொண்டையான் குளம். இப்போதும் எனக்கு சந்தேகமுண்டு. நான் இந்த கொண்டையான் குளத்தம்மன் மீது வைத்திருந்தது பக்தியா இல்லை பயபக்தியா என்று!

இந்த நினைவலைகள் பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…

நட்புடன்

பத்மநாபன்
புது தில்லி.

28 கருத்துகள்:

 1. கவிதை அருமை. அண்ணாச்சியின் சுவாரஸ்யமான நினைவலைகளும் வட்டார வழக்கில் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   அண்ணாச்சியின் பதிவு உங்களுக்கும் பிடித்ததை அவரிடம் சொல்கிறேன் ஸ்ரீராம்.

   நீக்கு
 2. பத்மநாப அண்ணாச்சி நினைவலைகள்ன உடனே அதைப் படிக்கத்தான் மொதல்ல வந்தேன்.

  வெட்டி ஊர்சுத்தி வெயிலை வீணாக்காமல் தலையில் வாங்கி வருவது, சிதறு தேங்காய், குளத்தில் குளிப்பு (எங்களுக்கு தாமிரவருணியில் குளியல்) என்று பளய காலத்துக்கு இழுத்துச் சென்றுவிட்டார்.

  தாமிரவருணி ஆத்துல முட்டிக்காலுக்கு மேல தண்ணி ஓடுத சமயத்துல (ஆறு 200 மீட்டர் அகலம்), மூக்கைப் பிடிச்சிக்கிட்டே தரையொட்டி மல்லாந்து படுத்துக்கிட்டு, ஆற்றின் வேகத்தில் மெதுவா தண்ணிக்குள்ளயே அது இழுத்துச் செல்லும்வரை போவேன். எவ்வளவு தூரம் மூச்சை அடக்கமுடியுது (எவ்வளவு தூரம் தண்ணிக்குள,ளயே போறேன் என்பது கணக்கு) என்பதைப் பார்க்க இந்த வேலை. அப்படி ஒரு நாள் போனபோது, ஆத்துக் குறுக்கே பொம்பிளைக பத்துபேர் கூடையைச் சுமந்துக்கிட்டு இக்கரையிலேர்ந்து அக்கரைக்கு நடக்குறாங்க (எனக்குத் தெரியாது அப்போ). தண்ணீலயே மூழ்கிட்டு படுத்துக்கிட்டு வந்தவன் மூச்சை அடக்க முடியலைனு எழுந்தேன். சட்னு தண்ணிக்குள்ளேர்ந்து எழுந்தவனைப் பார்த்ததும் கூடையைக் கீழே போட்டுட்டு இருவர் அலறிட்டாங்க. ஒரு தடவை ருசி கண்டாச்சுனா, இதே மாதிரி மத்தவங்களை பயபுறுத்துவது விளையாட்டுனு ஆகிப்போச்சு

  தண்ணீல சோகத்தோட முடிச்சது கொஞ்சம் எதிர்பாராத்துதான் (அண்ணாச்சி சோகத்தை விஸ்தாரமா வளக்கமா எளுத மாட்டாருல்ல)


  வெள்ளிக்குடி - வெள்ளன-காலைல. குடிப்பது, கஞ்சி மாதிரி. இப்படி அர்த்தம் புரிஞ்சிக்கறேன். வெள்ளிக்குடி இப்போதான் கேள்விப்படறேன்.

  அண்ணாச்சி எழுத்து அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணாச்சியின் பதிவு உங்களிடமிருந்து நீண்டதொரு பின்னூட்டத்தினை வரவைத்திருக்கிறது நெல்லைத் தமிழன். மகிழ்ச்சி.

   உங்கள் நினைவலைகளையும் இப்பதிவு மீட்டெடுத்து இங்கே பகிரச் செய்திருக்கிறது. அதற்கு பத்மநாபன் அண்ணாச்சிக்கும் உங்களுக்கும் நன்றி.

   சோகம் - ஆமாம் பொதுவாக அவரது பதிவில் சோகம் அதிகம் இருப்பதில்லை! இந்தப் பதிவு கொஞ்சம் வித்தியாசம்.

   நீக்கு
 3. அண்ணாச்சி பாட்டுக்கு போகிறபோக்கில் கபடி விளையாட்டுனு சொல்லிட்டாரு. எங்கூர்ல, மறவங்கதான் கபடி விளையாடுவாங்க. ரொம்ப ஆக்ரோஷபா. அடி படறது சகஜம். ஒரு தடவை எல்லோரும் ஒருத்தன் மேல விழுந்து கிடிச,சு, அவன் மூச்சுத் திணறி இறந்துவிட்டான்னு சொல்லுவாங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கபடி - கொஞ்சம் டெரராகவே விளையாடுவாங்க போல அங்கே!

   மூச்சுத் திணறி இறக்கும் அளவுக்கு டெரரா? ஆக்ரோஷமாக விளையாடுவாங்க போல உங்க ஊர்க்காரர்கள் நேலைத் தமிழன்.

   நீக்கு
 4. அண்ணாச்சியோட கதை சோகத்தில் முடிந்தது தான் சோகம். அந்த சோகம் அண்ணாச்சி என்றாலே கொஞ்சம் நாரோயில் பாஷை ரசிப்பு + சிரிப்பு என்ற எதிர்பார்ப்புகளை நிராசையாக்கிவிட்டது. எனக்கு ஒரு சந்தேகம். தமிழில் speech to text மென்பொருள் உபயோகிக்கிறீர்களா? காரணம் பேச்சு தமிழில் எழுதுவது கடினம். அண்ணாச்சி கதையை எழுதிக் கொடுப்பாரா? 
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணாச்சியோட கதை சோகத்தில் முடிந்தது தான் சோகம். உண்மை ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   தமிழில் Speech to text மென்பொருள் உபயோகிப்பதில்லை. அண்ணாச்சி அலைபேசியில் தட்டச்சு செய்து அனுப்பி விடுவார். அதை பதிவு வடிவில் தருவது மட்டுமே என் வேலை - உங்கள் சந்தேகம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன்.

   நீக்கு
 5. கவிதை அருமை...

  அழகான விவசாயக் குளம் இப்படி ஆக்கி விட்டதே... வருத்தம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   நம் ஊர்களில் பல குளங்கள் இப்படியே... இன்னும் சில காலம் விட்டால் அங்கேயும் கட்டிடங்கள் வந்து விடக்கூடும்.

   நீக்கு
 6. சந்தோஷமாக படித்து வந்தேன் முடிவு மனதை வருத்தி விட்டது.

  பதிலளிநீக்கு
 7. கொண்டையான் குளத்து அம்மன் பயபக்தி ஆகத்தான் தோன்றுகிறது:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெய்யிலில் அனுபவித்த சுகங்கள் அத்தனையும் அண்ணாச்சியின் பதிவில்.
   எங்களையும் ,இந்த வாருவான்ல, போவான்ல்லா,
   பிடித்துக் கொண்டிருந்தது கொஞ்ச நாளுக்கு.
   கொண்டையான் குளம் பெயரே ஈர்க்கிறது.

   தொடர்ந்து வரும் பின்னூட்டங்களில் அவரவர் நினைவுகளைப் பதிவதும் மிக அருமை.

   பத்மனாப அண்ணச்சி அந்த சோகத்தைச் சொல்லி இருப்பதும்
   இயல்புதான்.
   எல்லாம் தண்ணீரின் குணம் தானே. காப்பதுவோம் அழிப்பதுவும். நன்றி வெங்கட்.

   நீக்கு
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
  3. உங்களுக்கும் நாரோல் நினைவுகளை இப்பதிவு மீட்டெடுத்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

   பத்மநாபன் அண்ணாச்சியின் பதிவு உங்களுக்கும் பிடித்ததை அவரிடம் சொல்கிறேன்.

   நீக்கு
 8. கவிதை அருமை.
  பத்மநாதன் அவர்கள் கதை ஆரம்பத்தில் அவர் நினைவுகளை பகிர்ந்து கொண்டு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. உளுந்தம் கஞ்சி, உளுந்தப்பருப்பு சாததிற்கு எல்லாம் கொத்தம்லலி துவையல் நன்றாக இருக்கும்.

  கொண்டையான் குளத்தில் குளித்த அனுபவங்கள் சொன்னது அருமை.
  //சின்னப் பையன்தானே. கூப்பிட்டது அல்லி இல்லேன்னு அவனுக்கு தெரியாதுல்லா.//
  அப்புறம் சிறுவனை அல்லி வா வா என்றதும் நினைத்தேன் முடிவு இப்படித்தான்
  இருக்கும் என்று.

  //நான் இந்த கொண்டையான் குளத்தம்மன் மீது வைத்திருந்தது பக்தியா இல்லை பயபக்தியா என்று!//

  பயபக்திதான் என்று தெரிகிறது.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதை உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி கோமதிம்மா..

   உளுந்தங்கஞ்சி, கொத்தமல்லி துவையல் - செம காம்போ போல! இதுவரை சுவைத்ததில்லை.

   முடிவினை யூகிக்க முடிந்ததா? அல்லி வாவா என்று கூப்பிடும்போது அழகான ஆபத்து என்று தோன்றியது எனக்கு.

   பயபக்தி - அப்படித்தான் இருக்க வேண்டும்.

   நீக்கு
 9. பல வருடங்கள் கழித்து நாகர்கோவில் வட்டார வழக்கு இடையிடயே பரவிட கொண்டையான் குளத்துடன் ஆன பத்மனாபன் அண்ணாச்சியின் அழகான நினைவலைகள். ரசித்தேன். ஆனால் முடிவில் ஒரு சோகம்.

  கவிதை அருமை.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்பதிவு உங்களை நாகர்கோவில் பற்றிய நினைவுகள் தந்திருக்கிறது போலும்.

   பதிவின் முடிவில் சோகம் - ஆமாம்.

   கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 10. வினோத்தும் பத்மநாப அண்ணாசியும் ஒருவருக்கொருவர் வாங்கல் இல்லை. ஒருத்தர் கிராமத்து களிமண் தரையை கவிதையால் குளிப்பாட்டியிருக்கிறார் என்றால் இன்னொருவர், நினைலைகளா>..
  இதான் இந்நாளைய அட்சரம் பிசகாத கதையய்யா! அண்ணாச்சிக்கிட்டே சொல்லுங்க, ஆனந்த விகடன்லே கூட இதை விட மாத்து குறைச்ச கதைகங்களத்தான் பெரிசா படம்லாம் வரைஞ்சு பெரிசா பிலிம் காட்டறாங்கன்னு. பாரா பாராவா பிரிச்சு அங்கங்கே சில டச்அப்லாம் செஞ்சா கண்லே ஒத்திரக்கற சிறுகதைங்க, அண்ணாச்சியோடது...

  ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்கங்கே சில டச் அப்லாம் செஞ்சா கண்ணில் ஒத்திக்கிற சிறுகதை - நன்றி ஜீவி ஐயா. உங்கள் பின்னூட்டத்தினை அண்ணாச்சிக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.

   நீக்கு
 11. //ஆனா உளுந்தங்கஞ்சின்னு ஒரு அயிட்டம் உண்டு. நல்ல சம்பா அரிசியையும் கருப்பு உளுந்தையும் போட்டு கூடவே கைநிறைய உரிச்ச வெள்ளவுள்ளியையும் கொஞ்சம் வெந்தயத்தையும் போட்டு கஞ்சி வச்சு கடைசியில ஒரு முத்தின தேங்காயை பூப்பூவா திருகிப் போட்டு சரியா உப்பைப் போட்டு தொட்டுக்கிட இந்த கொத்தமல்லி தொவையல்னு ஒரு அயிட்டம்! அட அட அட!//

  அட அட அட!! அண்ணாச்சி போன ரண்டு நாள் முன்ன வைச்சன்லா....

  கஞ்சியாவும் வைக்கலாம், உளுந்தச் சோறாகவும் வைக்கலாம்...

  அண்ணாச்சி உங்கள் நினைவலைகள் நல்லாருந்துச்சு. நாறோல் மொழி வாசிக்க வாசிக்க ஒரே சந்தோஷம்.

  சரி அண்ணாச்சி அந்த குளத்துப் பக்கம் அமானுஷ்யக் கதைகள் கொஞ்சம் எடுத்து விடலாம்கேன்...

  கவிதையையும் ரசித்தேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு நாள் முன்ன செய்தீர்களா? இதுவரை நான் இந்த காம்போ சுவைத்ததில்லை கீதாஜி. சுவைக்க மனம் இருக்கிறது - ஆனால் எப்போது சுவைக்கக் கிடைக்குமோ?

   அண்ணாச்சியின் நினைவலைகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   அமானுஷ்யக் கதைகள் கொஞ்சம் எடுத்து விடலாம்கேன்... சொல்கிறேன்.

   நீக்கு
 12. ஹா ஹா ஹா நினைவலைகள்.. உண்மைச் சம்பவமோ.. அருமையான எழுத்து நடை, காருக்குப் பின்னால ஓடினது, உடைக்கும் தேங்காயைப் பொறுக்கவோ.. நானும் என்னவோ ஏதோ என நினைச்சிட்டேன் ஹா ஹா ஹா..

  கடசியில், குளத்தில் சிக்கிய குழந்தை.. மனம் கனக்குது..[உண்மைச் சம்பவமாக இருந்திடக்கூடாதென நினைத்துக் கொள்கிறேன்]

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைச் சம்பவமே தான் அதிரா.

   குழந்தையின் இழப்பு - மனம் கனத்துப் போனது உண்மை தான்.

   நீக்கு
 13. உளுந்தங்கஞ்சியைவிட "உளுந்தம் சோறும் கோழிக்குழம்பும்" பிசைந்து அடித்து பாருங்க ... அட ஆண்டவா ... ஆயுளுக்கும் மறக்கமுடியாது ... இதன் ருசிக்காகவே மீண்டும் ஒருமுறை பிறக்க வேண்டும்போல் தோணும்... சரி அது இருக்கட்டும் ... அப்புறம் உங்கள் பதிவில் எனக்கு ஒரு ஏமாற்றம் .... அது என்னான்னா ... அந்த கொண்டையான் குளத்துக்கு ஏன் "கொண்டையான்" என்று பெயர் வந்தது என்று கடைசிவரை நீங்கள் சொல்லவே இல்லையே ? .... இது நியாயமோ ? ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதிய காம்பினேஷன் - :)

   கொண்டையான் குளம் - பெயர்க்காரணம் - பத்மநாபன் அண்ணாச்சி பதில் சொல்வார் என நினைக்கிறேன் சிவா. பார்க்கலாம்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....