புதன், 22 ஏப்ரல், 2020

அந்தமானின் அழகு – அடுத்த தீவு நோக்கி…


ஸ்வராஜ் த்வீப் தீவு - துறைமுகம் அருகே...


அந்தமானின் அழகு – பகுதி 23


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
 
புன்னகைத்துப் பாருங்கள்
நட்புகள் கிடைக்கும்

பிரார்த்தனை செய்யுங்கள்
நல்ல மனம் கிடைக்கும்

நம்பிக்கை வையுங்கள்
வெற்றி கிடைக்கும்

உண்மையாய் உறுதியோடு
உழைத்துப் பாருங்கள்
வாழ்க்கையில்
எல்லாமே கிடைக்கும்!


ஸ்வராஜ் த்வீப் தீவு - துறைமுகம் அருகே இன்னுமொரு காட்சி...

தங்குமிடத்திலிருந்து அடுத்த தீவு நோக்கிய சொகுசுக் கப்பல் பயணத்திற்காக நாங்கள் அனைவரும் ஸ்வராஜ் த்வீப் தீவின் துறைமுகத்திற்குச் சென்று சேர்ந்தோம்.  எங்களுக்கான சொகுசுக் கப்பல் பயணத்திற்கான முன்பதிவினை செய்து வைத்திருந்தார் பயண ஏற்பாடுகளைச் செய்த திரு சுமந்த்.  ஸ்வராஜ் த்வீப் தீவிலிருந்து அடுத்த தீவுக்குச் செல்வதற்காக முன்பதிவு செய்த சொகுசுக் கப்பல் அன்றைய தினம் போர்ட் Bப்ளேயரிலிருந்தே புறப்பட வில்லை, ரத்து செய்து விட்டார்கள் என்ற தகவலை துறைமுகம் சென்ற போது எங்களுக்குத் தெரிவித்தார்கள். ஆனால் கவலை வேண்டாம் – இது மாதிரி சமயங்களில் உங்கள் முன்பதிவு வேறு  சொகுசுக் கப்பலுக்கு மாற்றி விடுவார்கள்.  அதற்கான தகவலை நீங்கள் துறைமுகத்திலேயே தெரிந்து கொள்ளலாம் என்று சொல்லி அதற்கான வழியையும் சொல்லி விட்டார்கள்.  நாங்கள் முன்பதிவு செய்து வைத்திருந்த கப்பல் நிறுவனத்தின் அலுவலகம் ஒன்று துறைமுகத்திலேயே இருக்கிறது. அந்த அலுவலகத்திற்குச் சென்று எங்கள் பயணச் சீட்டினைக் காண்பித்தால் அவர்களாகவே எங்கள் பயணம் எந்தக் கப்பலில் என்பதைச் சொல்வார்கள் என்ற தகவலைச் சொன்னார்கள். 


ஷாகித் த்வீப் தீவு - துறைமுகம் அருகே - கரை தட்டிய ஒரு படகு...

உள்ளூரில் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஓட்டுனர்கள் எங்களைத் துறைமுகத்தில் விட்டுச் சென்று விட்டதால் நாங்களாகவே அலுவலகத்திற்குச் சென்று எங்கள் முன்பதிவு செய்ததற்கான பயணச் சீட்டினை கொடுக்க, ஒரு மணி நேரத்திற்குள் தகவல் சொல்வதாகச் சொல்லி அனுப்பி வைத்தார்கள். அதனால் துறைமுகத்தில் இருந்த காத்திருப்பு அறையில் எங்கள் குழுவினர் காத்திருக்க, நானும் நண்பர் மணியும் கப்பல் அலுவலகத்திற்கு அருகிலேயே காத்திருந்தோம்.  காத்திருந்த வேளையில் அங்கே இருந்த ஒரு பெரிய கடையில் தண்ணீரும் சாக்லேட்டுகளும் வாங்கினோம். அந்தக் கடையின் உரிமையாளர் தமிழர்! அருகேயே ஒரு ட்ராவல்ஸ் கடை – அதுவும் தமிழரின் கடை தான்! ஸ்வராஜ் த்வீப் தீவில் பெங்காலிகள் அதிகம் இருப்பதாக முந்தைய பகுதி ஒன்றில் சொல்லி இருப்பது நினைவில் இருக்கலாம்.  இந்தத் தீவில் பெங்காலிகளுக்கு அடுத்தபடியாக அதிகம் இருப்பது தமிழர்கள் தான்.  நிறைய தமிழர்கள் கடைகள் வைத்திருக்கிறார்கள்.  பெரும்பாலானவர்களின் தொழிலே சுற்றுலா சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது.  அரசுத் துறையிலும் சில தமிழர்கள் வேலை செய்கிறார்கள் என்றாலும் கடைகள் வைத்திருப்பவர்கள் அதிகம் எனத் தோன்றுகிறது.


நாங்கள் பயணித்த ITT Majestic - சொகுசுக் கப்பல்...

சரி கப்பல் பயணம் பற்றிய தகவலுக்கு வருகிறேன். ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த பிறகு எங்கள் பயணம் ITT Majestic என்ற சொகுக் கப்பலில் என்றும் எங்களுக்கான இருக்கைகள் என்ன என்பதை நாங்கள் முன்பதிவு செய்திருந்த கப்பல் நிறுவனத்தின் உள்ளூர் அலுவலகத்தில் சொன்னார்கள். அந்தத் தகவலை வாங்கிக் கொண்டு நாங்கள் குழுவினர் காத்திருந்த இடத்திற்குச் சென்று தகவலைச் சொன்னோம்.  சொகுசுக் கப்பல் போர்ட் Bப்ளேயரிலிருந்து வந்து சேர, தீவில் இறங்குபவர்கள் இறங்கிய பின்னர் எங்களை உள்ளே அனுப்பினார்கள்.  வரிசையில் சென்று பயணச் சீட்டினைக் காண்பித்து கப்பலின் அருகே காத்திருந்து, அழைத்த சமயத்தில் எங்கள் உடைமைகளை கப்பலின் கீழ் தளத்தில் வைத்துக் கொள்ள, சிப்பந்திகளிடம் அளித்தோம். அதன் பிறகு சிறிது நேரம் சொகுசுக் கப்பல் முன் சில பல நிழற்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம்.  கப்பலில் சுத்தம் செய்த பிறகு எங்களை அழைக்க, அனைவரும் கப்பலின் உள்ளே நுழைந்து அவரவருக்கான இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம்.  இந்த முறை எங்கள் பயணம் குறைந்த தொலைவு தான் – சுமார் 18 கிலோமீட்டர் – பயணம் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் சுமார் ஒரு மணி நேரம்.   


சொகுசுக் கப்பலின் உள் பகுதியில் - ஒரு ஓரத்தில் நானும் இருக்கிறேன்!

இந்த ஏற்பாடுகளில் அந்த நாளின் முதல் சில மணி நேரம் வரை எங்களுக்கு போய்விட்டது. அடுத்துச் செல்லப் போகும் தீவில் எங்களுக்குக் கிடைத்த நேரம் கொஞ்சம் குறைவானது போல இருந்தாலும் கிட்டத்தட்ட ஒன்றரை நாள் அந்தத் தீவில் எங்களுக்குக் கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சியே. சொகுசுக் கப்பலில் வழக்கம் போலவே பயணிகள் பலரும் படங்கள் எடுப்பதிலேயும், கண்ணாடி வழியே கடலை ரசிப்பதிலும் செலவு செய்தார்கள். எங்கள் குழுவினரும் நிறைய படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.  ஒரு சிலருக்கு இந்தக் கடல் பயணத்தில் ஒவ்வாமை இருந்தது – குழுவில் இருந்த தோழரின் மனைவி வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த காய்ந்த நார்த்தங்காய் வழக்கம் போல சஞ்சீவினியாக ஆனது. அனைவரும் அதில் ஒரு துண்டு வாயில் அடக்கிக் கொள்ள எங்கள் குழுவினருக்குப் பிரச்சனைகள் இல்லை.  ஒரு மணி நேரத்தில் நாங்கள் அடுத்து அடைய வேண்டிய தீவிற்குச் சென்று சேர்ந்தோம். அது எந்தத் தீவு என்பதை இதுவரை சொல்லவே இல்லையே!  அந்தத் தீவின் முந்தைய பெயர் நீல் தீவு.  அதற்கான பெயர்க் காரணம் என்ன என்பதையும் பார்க்கலாம்! இப்போதைய பெயரும் சொல்லி விடுகிறேன்!


இது என்ன என்று சொல்ல முடியுமா?

1857-ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்தின் போது ஆங்கிலேயர்களின் படையில் இருந்த ஆங்கிலேயரான Brigadier General James Neil என்பவரின் பெயரையே இந்தத் தீவிற்கு வைத்திருந்தார்கள் ஆங்கிலேயர்கள்.  2018-ஆம் ஆண்டு தான் இந்தத் தீவின் பெயரும் இந்திய அரசாங்கத்தால் மாற்றம் செய்யப்பட்டது. முந்தைய பகுதிகளில் ஏற்கனவே ராஸ் தீவு போஸ் தீவு என்றானதையும் ஹேவ்லாக் தீவு ஸ்வராஜ் த்வீப் தீவான விஷயத்தினையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.  இந்த நீல் தீவின் பெயரை 2018-ஆம் ஆண்டு ஷகீத் த்வீப் (Shaheed Dweep) தீவு என்று பெயர் மாற்றம் செய்தார்கள்.  இந்த மூன்று பெயர் மாற்றங்களும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு மரியாதை செய்யும் வழியாக செய்யப் பட்டன என்பது கூடுதல் தகவல்.  ஷகீத் என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் தியாகம் என்பதையும் உங்களுக்குச் சொல்லி விடுகிறேன். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் தங்கள் இஷ்டப்படி வைத்துக் கொண்ட பெயர்களை மாற்ற, சுதந்திரம் அடைந்த பிறகும் இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது! பெயர் மாற்றத்திலும் அரசியல் உண்டு – அதைப் பற்றி இங்கே பேச வேண்டாம்! தகவலை மட்டும் பார்க்க வேண்டியது தான்.


மேலே உள்ள படத்தில் இருப்பது தான் இதுவும்...

இனிதான, சுகமான சொகுசுக் கப்பல் பயணம் முடிந்து நாங்கள் ஷகீத் த்வீப் தீவின் துறைமுகத்தினை வந்தடைந்தோம்.  எங்களுக்காக இங்கேயும் மூன்று வாகனங்களை திரு சுமந்த் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தவர்கள் வந்திருந்தார்கள்.  அவர்களைத் தொடர்பு கொண்ட போது துறைமுகத்தின் நுழைவாயிலேயே காத்திருந்தது தெரிந்தது.  எங்கள் உடமைகளைக் கப்பலிலிருந்து பெற்றுக் கொண்டு சற்று நடந்து வெளியே வந்து வாகனத்தில் புறப்பட்டோம்.  நாங்கள் நேரடியாகச் சென்று சேர்ந்தது நான்காம் நாளின் பகல் 11.30 மணிக்குப் பிறகு தான். அன்றைய தினமும் அடுத்த நாள் மாலை வரை நாங்கள் தங்கப் போகும் ஒரு ரிசார்ட்டிற்கு.  அந்த ரிசார்ட் எப்படிப்பட்டது, அங்கே என்ன வசதிகள் என்பதையும் ஷகீத் த்வீப் தீவில் நாங்கள் பார்த்த இடங்கள் பற்றியும் வரும் பகுதிகளில் சொல்கிறேன்.  இந்தப் பகுதியின் வழி உங்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்கள் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். 


உள்வாங்கியிருக்கும் கடல் - ஷாகீத் த்வீப் தீவில்...

நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

26 கருத்துகள்:

  1. வாசகம் நன்று. அந்தப் படத்தில் இருப்பது என்ன என்று அடுத்த பகுதியில்தான் சொல்வீர்களா?!! மொபைலில் படங்கள் வேறு குட்டி குட்டியாய்த் தெரிகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      படத்தில் இருப்பது - பவளப் பாறை வகையைச் சார்ந்தவை தான் - சிறு சிறு துண்டுகளாக அங்கே நிறைய இருக்கிறது - பிறகு மணலாகலாம்! காய்ந்த மஞ்சள் போலவும் தோன்றுகிறது அல்லவா!

      நீக்கு
  2. இன்றைய வாசகங்கள் கொஞ்சம் முரண்பட்டவையாக தோன்றுகிறது. 
    புன்னகைத்துப் பாருங்கள்
    நட்புகள் கிடைக்கும்

    பார்த்தேன் அடிக்க வராங்கோ 
    பிரார்த்தனை செய்யுங்கள்
    நல்ல மனம் கிடைக்கும்

    கிடைத்தது புளியோதரை 

    நம்பிக்கை வையுங்கள்
    வெற்றி கிடைக்கும். 

    கிடைத்தது ஏமாற்றம். 

    உண்மையாய் உறுதியோடுஉழைத்துப் பாருங்கள்
    வாழ்க்கையில்எல்லாமே கிடைக்கும்!

    பயன் இல்லை. கிடைத்தது விரக்தி

    என்னடா இவன் பெரிய pessimist ஆக இருப்பான் போல என்று எண்ணாதீர்கள். என் வாழ்க்கை அனுபவம் அது. 
    கரித்துண்டுகள் போல் இருப்பவை  பவளப்பாறைகள் துண்டுகள் என்று தோன்றுகிறது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகத்தின் முரண்பாடு - :)

      பவளப் பாறைகளின் துண்டுகள் - ஆமாம். சரியாகவே கணித்திருக்கிறீர்கள் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  3. கப்பலின் பிரமாண்டம் அந்த ஒரு படத்திலே (panorama) தெரிகிறது...

    அது என்னவென்று சரியாக கணிக்க முடியவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கப்பலின் பிரம்மாண்டம் - அலைபேசி வழி எடுத்த படம் அது.

      மேலே பதில் சொல்லி இருக்கிறேன் தனபாலன்.

      நீக்கு
  4. படங்கள் எப்போதும்போல் அழகு.

    படத்தைப் பார்த்தால் சின்ன வயதில் உபயோகித்த பலப்பம் (கடலில் கிடைக்கும் பூச்சியின் உடலில் உள்ள முட்கள்) மாதிரித் தெரியுது. அந்த நினைவைத் தொடர்ந்து சிலேட் போன்றவற்றை நினைவுகூர வைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      பவளப் பாறைகள் நாள்பட நாள்பட இப்படி துண்டுகளாகி கரைகளில் ஒதுங்கிவிடுகின்றன. பலப்பம் நினைவுக்கு வந்ததா? ஹாஹா... சிலர் அதைச் சாப்பிடுவதுண்டு. :)

      நீக்கு
  5. படத்துல இருக்குறது வசம்பு மாதிரி இருக்கே?! இல்ல கடலுக்கடியில் இருக்கும் எதாவதா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வசம்பு இல்லை ராஜி. பவளப் பாறைகளின் கடல் தண்ணீரில் அரிக்கப்பட்டு இப்படி சிறு துண்டுகளாகி பின் துகள்களாகி விடுகின்றன.

      நீக்கு
  6. சொகுசுக் கப்பலைப் பார்த்தாலே பயணிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொகுசுக் கப்பல் பயணம் விரைவில் உங்களுக்கும் வாய்க்கட்டும் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. வாசகம் அருமை ஜி
    கப்பலின் பிரமாண்டம் பிரமிக்க வைக்கிறது.

    எனது வாழ்வில் இன்னும் கப்பல் பயணம் அமையவில்லை பார்க்கலாம் கொரோனா மனது வைத்தால் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      பிரம்மாண்டம் - பிரமிக்க வைப்பது தான். விரைவில் உங்களுக்கும் கப்பல் பயணம் வாய்க்கட்டும். கொரோனா - நலமே விளையட்டும்.

      நீக்கு
  8. வாசகம் அருமை.
    சொகுசு கப்பல் அழகு.
    கப்பலில் நீங்கள் இருப்பதையும் பார்த்தேன்.
    கப்பல் பயணம் சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. அதற்கு நார்த்தங்காய் துண்டை வாயில் ஒதுக்கி கொள்வது நல்லதுதான்.

    படத்தில் என்ன என்று கேட்டு இருப்பதை வெள்ளையாக வேர் குச்சி போல நிறைய சேகரித்து இருக்கிறேன் கடற்கரையில். அதுவும் உயிரினம் தான் என்று நினைக்கிறேன்.
    இது கருப்பும் பழுப்பும் சேர்ந்தாக இருக்கிறது தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      சொகுசுக் கப்பல் - ரொம்பவே அழகு தான் மா. நார்த்தங்காய் நல்லது. சிலருக்கு அதன் பிடிப்பதில்லை.

      இதுவும் பவளப் பாறைகளின் துண்டுகள் தான்மா...

      நீக்கு
  9. வாசகம் செம ஜி!

    ஆஹா சொகுசுக் கப்பல் உள்ளே என்ன அழகா இருக்கு. நீங்கள் இருப்பதைப் பார்துவிட்டோமே!!!!!!!

    நல்லகாலம் கான்சல் ஆனாலும் வேறு கப்பலில் மாற்றி விடுகிறார்களே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், கப்பலின் அழகு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      கேன்சல் ஆனாலும் வேறு கப்பலுக்கு மாற்றிவிடுவது நல்ல விஷயம் தான். ஆனால் கொஞ்சம் காத்திருக்க வேண்ட்யிருக்கிறது - அது சிலருக்கு பிடிப்பதில்லை.

      நீக்கு
  10. ஷகீத் த்வீப் தீவைப் பற்றியும் ரெசார்ட் பற்றியும் அறிய ஆவலுடன் தொடர்கிறோம்.

    அந்தப் படத்தில் உள்ளவை கடற்பாறை...பொற பொற என்ரு இருக்கும் வெள்ளையாக...கிளைகள் கூட இருக்கும். நான் அப்படி நிறைய வைத்திருந்தேன் நாகர்கோவிலில் இருந்த வரை. ஆனால் இது பழுப்பு நிறமாக இருக்கிறது என்றாலும் அதைப் போன்றுதான் இருப்பது போல் இருக்கு.
    படங்கள் எல்லாமே அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த தீவின் தகவல்கள் வரும் பதிவுகளில்...

      பவளப் பாறைகள் துண்டுகள் தான் கீதா ஜி. அந்தமான் பகுதிகளில் இது போல நிறைய இருக்கிறது.

      நீக்கு
  11. வாசகம் அருமை! உங்கள் விவரனையும் படங்களும்தான். அந்தமான் சென்றே தீர வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      உங்களுக்கும் அந்தமான் பயணம் அமைய வாழ்த்துகள் பானும்மா...

      நீக்கு
  12. அந்த படத்திலுள்ளது ஏதோ கடலில் வாழும் தாவரங்களின் உடைந்த குச்சிகள் என்று நினைக்கிறேன் ... ஆனால் நீங்கள் பவளப்பாறை என்கிறீர்கள் .... நீங்கள் ஆராயாமல் எதையும் சொல்ல மாட்டீர்கள் என்பதால் நாங்கள் நம்புகிறோம் .. நன்றி !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரக் குச்சிகள் அல்ல சிவா. பவளப் பாறைகளின் துண்டுகள் தான்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....