சனி, 11 ஏப்ரல், 2020

காஃபி வித் கிட்டு – பணம் – கஸ்தூரிபா - பாசம் – கிட்டுமணி – மதன்


காஃபி வித் கிட்டு – பகுதி 62


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

பணம் இருக்கும்போது மட்டுமே கிடைக்கும் உறவு, பாசம், மதிப்பு, மரியாதை அனைத்தும் முற்றிலும் போலியானது. இந்த உண்மையை, பணமும் வேலையும் இல்லாதபோது புரிந்து கொள்வாய்.

இன்று பிறந்தநாள் காண்பவர்:

கஸ்தூரிபா காந்தி – 1869-ஆம் ஆண்டின் இதே நாளில் பிறந்தவர்.  காந்தியை எல்லோரும் தேசப் பிதா என்று கொண்டாடினார்கள். அதற்கு உதவிய கஸ்தூரிபாவும் சுதந்திரப் போராட்டத்தில் தனது பங்கினை ஆற்றினார்.  அவரது பிறந்த நாள் இன்று! யாருக்காவது நினைவில் இருக்க வாய்ப்புண்டு! இந்தப் பதிவிற்காக தேடியது போது இவரது பிறந்த நாள் எனத் தெரிய, இங்கே பதிவு செய்கிறேன்.  Behind every successful man is a woman என்பதற்கு இவரும் ஒரு எடுத்துக்காட்டு!

இந்த வாரத்தின் விளம்பரம்:

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக தாய்லாந்திலிருந்து ஒரு விளம்பரம். நான் பார்த்த வரை தாய்லாந்து நாட்டின் விளம்பரங்களில் பல மனதைத் தொடும் விதமாக இருப்பவை.  இந்த விளம்பரமும் அப்படியே… ஒரு குழந்தைக்குத் தேவை அம்மா அப்பாவின் பாசம் மட்டுமே என்பதைச் சொல்லும் விளம்பரம்.  பாருங்களேன்.கிட்டுமணி…

கிட்டுமணிக்கு ஒரு ராசி! முகத்தில் இ.வா. என்று எழுதி ஒட்டி இருக்கிறதோ என்று தோன்றும் ஒரு முகம்.  யார் வீட்டில் என்ன வேலையென்றாலும் தயங்காமல் இவரைக் கூப்பிடலாம்! இவரும் ஏதோ தன்னை மதித்து, தன் திறமையில் வியந்து உதவி செய்ய கூப்பிடுகிறார்கள் என கருமமே கண்ணாயினராக அவர்களது வீட்டுக்குச் சென்று வேலைகளைச் செய்து கொடுத்து விட்டு தான் திரும்புவார்.  எங்க வீட்டுல ரெண்டு நாளா சாக்கடை அடைச்சுண்டு ரொம்பவே அவதி… என்று சொன்னால், உடனே கையில் ப்ளாஸ்டிக் கவரை மாட்டிக் கொண்டு ”நான் எதுக்கு இருக்கேன்”ன்னு கிளம்பிடுவார் கிட்டுமணி! அப்படி ஒரு கேரக்டர்! சும்மாவே அடுத்தவருக்கு உதவி செய்வதில் இவருக்கு இணை இவரே! இவரைப் பார்த்தாலே ஏதாவது வேலை சொல்லணும், உதவி கேட்கணும்னு எல்லாருக்கும் தோணும் போல!  அன்னிக்கு ஒருத்தர் அப்படித்தான், நான் வீடு காலி பண்ணனும், கொஞ்சம் வந்து மேற்பார்வை பார்த்துக்கணும்னு கூப்பிட, அங்கே போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது – மேற்பார்வை மட்டுமல்ல, ஏத்தி இறக்கற ஆளே அவர் தான்னு!  இரண்டு நாளா முதுகு வலின்னு தனியா புலம்பிண்டு இருக்கார் கிட்டுமணி!

இந்த வாரத்தின் நகைச்சுவை:

மதன் ஜோக்ஸ் எப்போதும் ரசிக்க முடிகிற ஜோக்ஸ்! அவருடைய ஜோக் ஒன்று இந்த வாரத்தின் ரசித்த ஜோக் பகுதியாக!படித்ததில் பிடித்தது:

இந்த வாரத்தின் படித்ததில் பிடித்ததாக ஒரு கவிதை!

நீ முதல் நான் வரை – சகாரா…

வெற்றி பெற
வாழ்த்துகிறேன்

வெளிப்படையாய்
கைகுலுக்குகிறேன்

வெற்றிபெற்று வருகையிலோ
உள்ளுக்குள் பொருமுகிறேன்
உதட்டளவில் பாராட்டுகிறேன்

என்னிலும் ஒருபடி
ஏறிவிடாதபடி
எச்சரிக்கையாய் இருக்கிறேன்

முட்டி மோதி
மூச்சுத் திணறுகையில்
குழிபறிக்க வழிபார்க்கிறேன்

முயன்று முன்செல்கையில்
குறிவைக்க வெறி கொள்கிறேன்

எல்லாரையும் விழுங்கி ஏப்பம் விடும்
இந்த மனித நாடகத்தில்
என் பாத்திரம் எம்மாத்திரம் ?

அதைமட்டும் ஏனோ
அவ்வப்போது மறந்துவிடுகிறேன்.

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

2011-ஆம் வருடம் இதே நாளில் என் வலைப்பூவில் எழுதிய பதிவிலிருந்து…

தில்லியில் உள்ள பெண்களுக்கு சுதந்திரம் என்பது நிறைய இருந்தாலும், பாதுகாப்பு இல்லை என்பதைப் பார்க்கும்போது மிகவும் கவலைக்கிடமாய் இருக்கிறது. எங்கே என்ன நடக்கிறது என்பது காவல்துறைக்கும் புரியவில்லை, தில்லியில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் புரியவில்லை. தில்லியின் முதலமைச்சர் கூட சில மாதங்களுக்கு முன் இது போன்ற ஒரு கொலை நடந்தபோது பெண்கள் இரவில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்.  முழுப்பதிவும் படிக்க ஏதுவாய் சுட்டி கீழே...


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

46 கருத்துகள்:

 1. ,வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் வந்து சேர்கிறார் பாரடா' எனும் கவிஞர் பாடல் வரிகளை நினைவு படுத்துகிறது இன்றைய வாசகம்.

  பதிலளிநீக்கு
 2. எனக்கென்னவோ மகாத்மா காந்தியை விட போற்றப்பட வேண்டியவர் அன்னை என்று தோன்றும். இன்று அவருக்குப் பிறந்த நாளா? நினைவூகூர்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிகம் போற்றப்பட வேண்டியவர் அன்னை - உண்மை தான் ஸ்ரீராம்.

   நீக்கு
  2. காலையிலேயே இடுகையைப் படித்தேன். அப்போ ஸ்ரீராம் பின்னூட்டங்கள் மட்டும்தான் இருந்தன.

   எப்போதுமே யுக புருஷர்களுக்கு மனைவியாக வாய்ப்பவர்கள், மிகுந்த கஷ்ட வாழ்க்கை வாழ்வார்கள். கஸ்தூர்பா செய்தவை அனைத்தும் காந்தியின் கண்டிப்பாலும் வேறு வழி இல்லாததாலும் செய்யப்பட்டவை என்றே நான் நினைக்கிறேன். இதுபோலவே பாரதியில் மனைவியும்.

   உங்க எல்லாருக்கும் தெரியும். ஒருவன் மிக்க நேர்மையாகவும் உண்மையே பேசுபவனாகவும் இருந்துவிட்டால், அதிலும் 'வரவு' உள்ள அரசாங்கப் பதவியில் இருந்தால், அவனது குடும்பம் எத்தனை துயரங்களுக்கு உள்ளாகும் என்று. பாவம் அந்த ஜீவன்கள்.

   நீக்கு
  3. யுக புருஷர்களுக்கு மனைவியாக வாய்ப்பவர்கள், மிகுந்த கஷ்ட வாழ்க்கை வாழ்வார்கள் என்பது உண்மை தான் நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 3. கிட்டமணி என்றதும் கிஷ்முவும் மணல்கயிறும் நினைவுக்கு வருகிறார்கள்!

  மதன் ஜோக் ரசிக்கும் ஒன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிஷ்மூவும் மணல் கயிறும்... மறக்க முடியாத கதாபாத்திரங்கள்.

   மதன் ஜோக் - என்றும் ரசிக்க முடிபவை அவரது ஜோக்குகள் தான் ஸ்ரீராம்.

   நீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  காஃபி வித் கிட்டு நல்ல மணமாக உள்ளது. வாசகம் அருமை. உண்மை. உலகில் பணந்தான் பிரதானமானது என்ற கருத்துடன் இருக்கும் வாசகத்தை ரசித்தேன். அதனால்தான் "பணம் என்றால்,பிணமும் வாய் திறக்கும்" என்ற பழமொழி உருவாகியுள்ளது.

  இன்று அன்னை கஸ்தூரி பாய் அவர்களுக்கு பிறந்த நாள் என்பதை அறிந்து கொண்டேன். நல்ல தகவலுக்கு நன்றி.

  குழந்தைக்கு தாய் தந்தை இருவரது பாசந்தான் முக்கியமானது. விளம்பரம் நன்று.

  கிட்டுமணியின் உதவி செயல்கள் வியக்க வைக்கிறது. உதவியின் பரிசு உடல் வலிகளா? கிட்டுமணியின் நிலை பாவந்தான்...!

  மதன் நகைச்சுவை நன்றாக உள்ளது. முதலில் ஏறியவுடன் எடைமிஷின் தாங்கியதே பெரியபாடுதான்.

  படித்ததில் பிடித்த கவிதையை நானும் மிகவும் ரசித்தேன்.

  பின்னோக்கி பார்க்கலாம் படித்தேன். டில்லி கொலைகள் மனதுக்கு கஸ்டமாக இருக்கிறது. டில்லி மட்டுமல்ல பொதுவாகவே கொலைகள் செய்யும் போது மனிதன் ஏனோ மிருகமாகவே மாறி விடுகிறான் என்பது கவலைக்குரிய விஷயம். எப்போது மனிதன் மனிதனாகவே வாழப் போகிறானோ? அந்த நாள் வர வேண்டும். அத்தகைய வேண்டுதலை தவிர நம்மால் வேறெதுவும் செய்ய இயலாது. தங்களது பகிர்வினுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   காஃபி வித் கிட்டு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்... அதே தான்.

   பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

   நீக்கு
 5. கவிதையும் அருமை ஜி...

  இன்றைய நிலை அனைத்தையும் புரிய வைப்பதோடு, உணரவும் வைத்து விடும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   இன்றைய நிலை - அனைத்தையும் உணர வைக்கும் - உண்மை.

   நீக்கு
 6. பொன்மொழி எனது இன்றைய சூழலுக்கு சொன்னது போலவே இருக்கிறது ஜி

  கவிதையும் அழகு

  பிறருக்கு உதவுபவர் இ.வா.தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் நம்மில் பலருக்கும் பொருத்தமானதே கில்லர்ஜி.

   கவிதை பிடித்ததில் மகிழ்ச்சி.

   இ.வா. - :) உண்மை கில்லர்ஜி. பலரால் பயன்படுத்தப் படுகிறார்கள் என்பதை இவர்கள் உணர்வதே இல்லை.

   நீக்கு
 7. அனைத்தையும் ரசித்தேன். நகைச்சுவையை சற்றே அதிகமாக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 8. என்னுடையபேத்தி 3 வயது. பள்ளியில் சேர்க்கவில்லை. அம்மாவுடன் தான் வீட்டில் தான் இருக்கிறாள். அதுவும் இந்த 21 நாட்களாக எல்லோரும் வீட்டில் தான். ஆனாலும் ஐபாட் இல்லாமல் சாப்பிட மாட்டாள். பிள்ளைகளுக்கு காட்ஜெட்ஸ் ஒரு இன்றிமையாத விளையாட்டு பொருள் ஆகிவிட்டது. ஆனாலும் அது வழியும் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். 

  கவிதை ஏதோ ஏமாற்றப்பட்டவர் எழுதியது போல் உள்ளது. இதே கருத்துடன் தான் கில்லெர்ஜீயும் பதிவு எழுதியுள்ளார். தற்செயல்? 
  //பணம் இருக்கும்போது மட்டுமே கிடைக்கும் உறவு, பாசம், மதிப்பு, மரியாதை அனைத்தும் முற்றிலும் போலியானது. இந்த உண்மையை, பணமும் வேலையும் இல்லாதபோது புரிந்து கொள்வாய்.//
  கில்லெர்ஜீ எப்போதும் கூறுவது. 

  பதிலளிநீக்கு
 9. Gadgets இன்றியமையாத விளையாட்டுப் பொருட்களாக ஆகிவிட்டன. உண்மை. கற்றுக் கொளவதும் உண்டு.

  பதிவின் பகுதிகள் பற்றிய உங்கள் கருத்துகளுக்கு நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

  பதிலளிநீக்கு
 10. பிறருக்கு நல்ல மனதோடு உதவுபவர்கள் எப்படியும் அதற்கான நற்பலனைப் பெறுவார்கள்.

  அப்படிப்பட்டவர்கள் இ.வா என்று மனதில் நினைத்துக்கொண்டு தங்களுக்குப் பயன்படுத்துபவர்கள் - ஹா ஹா. வாழ்க்கை அவர்களுக்கு இன்னும் கற்றுக்கொடுக்கவேண்டியது பல உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே தான் நெல்லைத் தமிழன்.

   அடுத்தவர்களைப் பயன்படுத்துவோரும் கற்றுக் கொள்ள வேண்டும்! கற்றுக் கொள்வார்கள் என்றாவது ஒரு நாள்!

   நீக்கு
 11. அனைத்தையும் இரசித்தேன், குறிப்பாக மதனின் நகைச்சுவை துணுக்கும் தாய்லாந்து விளம்பரமும் மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 12. உண்மையை கூறும் வாசகம்.
  மதன் ஜோக் சிரிக்க வைத்தது.

  தில்லி செய்தி மனதை வருந்த வைக்கிறது.
  காணொளி அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம், ஜோக், காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

   தில்லி செய்தி - வருத்தமே.

   நீக்கு
 13. மதன் ஜோக்குகள் ஆனந்த விகடனில் வாராவாரம் படித்து ரசித்தது நினைவுக்கு வருகிறது. டில்லி கொலை சம்பவங்கள் மனதை பாரமாக்கி விட்டத்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதன் ஜோக்குகள் வெளிவந்த ஆனந்த விகடன் இதழ்கள் ரசிக்கத் தக்கவை. இப்போது படிக்கவே பிடிக்கவில்லை.

   தில்லி கொலை சம்பவங்கள் - வருத்தம் தருபவையே இராமசாமி ஜி.

   நீக்கு
 14. இனிய மாலை வணக்கம் வெங்கட்ஜி! இப்போதெல்லாம் காலையிலிருந்து மாலை ஆகிவிட்டது..ஹா ஹா ஹா

  வாசகம் அருமை பெரும்பாலும் யதார்த்தமும் கூட.

  Behind every successful man is a woman என்பதற்கு இவரும் ஒரு எடுத்துக்காட்டு!// கண்டிப்பாக.

  இவர் பிறந்தநாள் என்பது தெரியாது ஜி. நினைவிலும் இருப்பதில்லை. உங்கள் பதிவினால் தான் தெரிந்து கொண்டோம்.

  விளம்பரம் அருமை..அதுவும் விற்பவரே இப்படிச் சொல்லுவது செம. பெரும்பாலும் விற்கத்தானே முனைவார்கள் இந்த கேம் இருக்கு சார் அந்த கேம் இருக்கு என்று...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாலை வணக்கம் கீதாஜி. காலையிலிருந்து மாலை! படிப்பது மட்டுமே முக்கியம் கீதாஜி.

   வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. கஸ்தூரிபா பிறந்த நாள் - இன்றைய பதிவுக்காக தேடும்போது கிடைத்த தகவல் தான் கீதாஜி.

   விளம்பரம் நல்ல விஷயம். ஆமாம் விற்பனை செய்யவே முயல்வார்கள் - இவர் வித்தியாசமாக சொல்லி இருக்கிறார்.

   நீக்கு
 15. நல்ல பதிவு
  அப்புறம் ஒரு தகவல்
  சகாரா புதுகை கணினித் தமிழ் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரின் புனைப்பெயர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கஸ்தூரி ரெங்கன்.

   சகாரா - புதுகை கணினித் தமிழ் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரின் புனைப்பெயர். தகவலுக்கு நன்றி நண்பரே.

   நீக்கு
 16. கிட்டுமணி போல கேரக்டர்ஸ் இப்போதும் இருக்கிறார்களோ? விரல் விட்டு எண்ணிவிடலாம். அனுபவம் உண்டு.

  மதன் ஜோக் ஹா ஹா ஹா

  கவிதை நல்லாருக்கு

  தில்லி கொலைகள் மிக மிக வருத்தத்திற்குரியது..அதுவும் நம் தலைநகரத்தில்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிட்டுமணி கேரக்டர் இப்போதும் உண்டு கீதாஜி.

   மதன் ஜோக் - :))

   கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தில்லி கொலைகள் - வருத்தம் தரும் விஷயம் தான்.

   நீக்கு
 17. கஸ்தூரி பாவுக்கு இன்று பிறந்தனாளா? சீதையைப் பற்றி விவேகானந்தர், "ராமனைப் போன்ற ஒரு ஆண்மகனை உலகத்தின் எந்த பகுதியிலும் காண முடியும், ஆனால் சீதையைப் போன்ற ஒரு பெண்ணை இந்தியாவில் மட்டும்தான் பார்க்க முடியும்"என்றார். அந்த சீதையின் வழித் தோன்றல் கஸ்தூரிபா. நினைவூட்டியதற்கு நன்றி.
  ஸ்க்ரால் பண்ணிக்கொண்டே வரும்பொழுது முழு படதையும் பார்க்கும் முன்பே ரெட்டைவால் ரங்குடுவின் வசனம் நினைவுக்கு வந்து விட்டது. மறக்க முடியாத ஜோக்.
  கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சீதாவை பற்றி விவேகானந்தர் சொன்னது சிறப்பு. கஸ்தூரிபாவும் அப்படியே.

   ரெட்டைவால் ரெங்குடு! மறக்க முடியுமா?

   கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா...

   நீக்கு
 18. அன்பு வெங்கட் , இந்த வார
  அனைத்துப் பகுதிகளும் சூப்பர்.
  கிட்டுமணி போல மனிதர்கள் இப்போது வேண்டாம். பாவம்.
  தன் கையே தனக்குதவி ,நாம் நம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டிய
  காலம்.

  கஸ்தூரிபா அம்மையாரின் வாழ்க்கையே ஒரு வேதனை.
  நிறைய விஷயங்களில் காந்திஜியுடன் எனக்கு உடன்பாடு
  இல்லை. எல்லோரும் மஹாத்மா ஆக முடியாது இல்லையா.

  தில்லி இன்னும் பாதுகாப்பு இல்லாமல் தான் இருக்கிறது. சோதனையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

   கிட்டுமணி - அவரைப் போன்றவர்கள் சில சமயங்களில் தேவை தான் மா... எல்லா நேரங்களிலும் அல்ல!

   கஸ்தூரிபா அம்மையாரின் வேதனை நிறைந்த வாழ்க்கை. எனக்கும் காந்தியின் பல கொள்கைகளில் உடன்பாடு கிடையாது தான்.

   தில்லி - இன்றைக்கும் பல விஷயங்கள் நடந்து கொண்டு இருப்பது வேதனை தான் வல்லிம்மா...

   நீக்கு
 19. மதன் ஜோக் ஹாஹா. தாய்லாந்து படம் மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதன் ஜோக் மற்றும் தாய்லாந்து படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   நீக்கு
 20. பதில்கள்
  1. மதன் ஜோக்ஸ் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

   நீக்கு
 21. கஸ்தூரிபாய் காந்தியை விட அதிகம் போற்றப்பட வேண்டியவர்... அந்த மதன் ஜோக் உண்மையிலேயே மிக அருமை ... அந்த கவிதை அரசியல் வியாதிகளுக்கு நன்கு பொருந்துவதாக தோன்றுகிறது... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிவா.

   நீக்கு
 22. கதம்பம் அருமை. அந்த கார்ட்டூன் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 23. கஸ்தூரிபாவின் வாழ்க்கை குறித்து எனக்கும் மனக்குறை உண்டு. கவிதை கூட எழுதியிருந்தேன். விளம்பரம் அருமை. அனைத்தும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதமஞ்சரி. உங்கள் கவிதைக்கான சுட்டி தந்திருக்கலாமே!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....