திங்கள், 11 மே, 2020

அந்தமானின் அழகு – பரத்பூர் கடற்கரை – உற்சாகக் கொண்டாட்டம்…பரத்பூர் கடற்கரையில் கடல் அலைகள்...

அந்தமானின் அழகு – பகுதி 29 

முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6  பகுதி 7 பகுதி 8 பகுதி 9  பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

 

உங்களின் நேற்றைய தோல்விகளுக்கான காரணங்களை நீங்கள் கண்டறியாவிட்டால், நாளைய வெற்றியை நோக்கி உங்களால் ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாது. 

 


Bபரத்பூர் கடற்கரை - மிதவையிலிருந்து எடுத்த படம்...கடற்கரையும் கடலும் - எத்தனை தெளிவான நீர் பாருங்கள்... 


ஷாகீத் த்வீப் தீவில் எங்கள் தங்குமிடமாக இருந்த டேங்கோ பீச் ரிசார்ட்டிலிருந்து மூன்று வண்டிகளில் புறப்பட்ட எங்களுடைய அன்றைய இலக்கு தீவில் இருக்கும் இன்னுமொரு கடற்கரையான பரத்பூர் கடற்கரைக்குச் செல்வது. ஏற்கனவே லக்ஷ்மண்பூர், சீதாபூர் கடற்கரைகளுக்குச் சென்று வந்தது பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம்.  இந்த பரத்பூர் கடற்கரையில் என்ன ஸ்பெஷல்? பார்க்கலாம் வாருங்கள். எங்கள் தங்குமிடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பரத்பூர் கடற்கரைக்கு ஐந்து நிமிடங்களில் சென்று சேர்ந்து விட்டோம். கடற்கரையிலிருந்து சற்று தள்ளி எங்களை இறக்கி விட்ட வாகன ஓட்டுனர்கள் கடற்கரையில் இருக்கும் விஷயங்களை கண்டுகளித்து, ரசித்து, அனுபவித்த பிறகு அழைத்தால் வந்து விடுகிறோம் என்று சொல்லி எங்களுக்கான நேரத்தினையும் சொல்லிச் சென்றார்கள் – மதிய உணவு முடித்து எங்களை கப்பல் புறப்படும் ஜெட்டி (Jetty) வரை கொண்டு விட வேண்டியது மட்டுமே அவர்களுக்கு அன்றைய வேலை. இடையில் இருக்கும் நேரத்தில் அதே வாகனங்கள் வேறு குழுவினர்களையும் அழைத்துச் செல்வதும், மற்ற வேலைகளைக் கவனிப்பதும் உண்டு.


ஜெட் ஸ்கீ - வேகமாகப் பயணிக்கும் ஆசை உங்களுக்கும் வரலாம்... 


ஷாகீத் த்வீப் தீவின் இந்த Bபரத்பூர் கடற்கரையில் தான் எல்லா நீர் விளையாட்டு விஷயங்களும் இருக்கின்றன.  இந்தத் தீவிலும் Scuba Diving, Snorkeling, Glass Boat Ride என அனைத்து விஷயங்களும் உண்டு.  கூடவே இங்கே இருந்த இன்னுமொரு விஷயம் Banana Ride என்ற விஷயம். அது என்ன Banana Ride? அதைப் பற்றி பார்க்கும் முன்னர் மற்ற விஷயங்களைக் கவனிக்கலாம்.  ஏற்கனவே குழுவில் இருந்தவர்கள் இந்த Scuba Diving, Glass Boat Ride, Jet Ski, Snorkeling போன்றவற்றை அந்தமான் பயணத்தில் இரண்டாம் நாள் North Bay தீவிலேயே செய்து இருந்தோம்.  ஆனாலும் இங்கேயும் சில Activities செய்ய நினைத்திருந்தோம்.  North Bay தீவு மாதிரியே இங்கேயும் கடற்கரையில் ஒரு சில Counter-கள் இருந்தன.  எந்த Activity செய்ய வேண்டுமோ அதற்கான பணம் கட்டி சீட்டு வாங்கிக் கொண்டால் உங்களை படகுகள் மூலம் அந்த Activity செய்ய அழைத்துச் செல்வார்கள்.

 ஜெட் ஸ்கீ - சொகுசுக் கப்பலைத் தொட்டு விடுவாரோ... 


எங்கள் குழுவினர்களில் இளைஞர்களும் இளைஞிகளும் மீண்டும் ஸ்கூபா டைவிங் செய்ய ஆசைப்படவே அதற்கு பணம் கட்டினோம்.  North Bay தீவில் வாங்கிய கட்டணத்தினை விட இங்கே அதிகம் – பெரும்பாலான Activities-கான கட்டணம் இங்கே அதிகமே.  ஸ்கூபா டைவிங் இங்கே செய்ய குறைந்த பட்ச கட்டணம் 4500 ரூபாய். North Bay தீவில் ரூபாய் 3500 மட்டுமே.  என்றாலும் அந்தத் தீவில் செய்த ஸ்கூபா டைவிங்-ஐ விட இங்கே செய்த ஸ்கூபா டைவிங் இன்னும் சிறப்பாக இருந்தது – தவிர இங்கே பார்த்த பவளப்பாறைகளும், விதம் விதமான மீன்களும் அங்கே இல்லை என்பதை ஸ்கூபா டைவிங் சென்று வந்த பின்னர் எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  மிகவும் ரசித்துத் திரும்பினார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.  அதைப் போலவே ஜெட் ஸ்கீயும் இங்கே இன்னும் சிறப்பாக இருந்தது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் குழந்தைகள்.  நான் இந்தக் கடற்கரையில் இரண்டு Activities செய்தேன் – ஒன்று Glass Boat Ride மற்றும் Banana Ride!  அவரவர் தேர்ந்தெடுத்த Activities தகுந்தமாதிரி குழுவினர் பிரிந்து சென்றோம்.  Activities முடிந்த பிறகு இந்த இடத்தில் சந்திக்கலாம் என்று அனைவரிடமும் சொல்லி அனுப்பினோம். 


ஜெட் ஸ்கீ - ஸ்டண்ட்டும் அடிப்போம்!...  

இந்தக் கடற்கரைப் பகுதியிலும் இருந்த படகு ஓட்டுனர்களும் உதவியாளர்களும் தமிழர்கள் தான்.  குழுவினரில் யார் யாரெல்லாம் Glass Boat Ride தேர்ந்தெடுத்து இருந்தோமோ அவர்கள் அனைவரும் இரண்டு படகுகளில் பயணத்தினை துவங்கினோம்.  சிறிது தூரம் கடலில் பயணித்த பிறகு பவளப் பாறைகள் இருந்த பகுதிக்கு சென்று சேர்ந்திருந்தோம்.  ஆகா எத்தனை எத்தனை விதமான பவளப் பாறைகள், வண்ண வண்ண மீன்கள், தெரியாத பல கடல்வாழ் உயிரினங்கள் என ஒவ்வொன்றும் பார்க்கப் பார்க்க ஆனந்தம்.  இந்த படகோட்டிகள் தினம் தினம் இந்தப் பகுதிகளில் படகினை ஓட்டிச் செல்வதால் அவர்களுக்கு எந்த இடத்தில் என்ன இருக்கும் என நன்கு தெரிந்திருப்பதால் நேராக அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கே படகை நிறுத்துகிறார்கள்.  சில நிமிடங்கள் அப்படி ஒரே இடத்தில் நின்று ரசித்த பிறகு அங்கிருந்து அகன்று அடுத்த இடம் – அங்கே வேறு விதமான பவளப் பாறைகள், வேறு வகை மீன்கள்  பார்க்க சில நிமிடங்கள், என நிறைய அனுபவங்கள்.

 

ஜெட் ஸ்கீ - மரங்களுக்கு மேலே ஏற்றிவிடுவாரோ?... 


ஒவ்வொரு இடத்திலும் இப்படிச் சில நிமிடங்கள் நின்று நிதானித்துக் காண்பிப்பதால் ரொம்பவே ரசிக்க முடிந்தது.  இப்படி பூதக் கண்ணாடியை அடிப்பாகமாகக் கொண்ட படகுப் பயணத்தில் ரொம்பவே ரசித்துப் பார்த்த பிறகு நாங்கள் கடற்கரைக்குத் திரும்பினோம்.  கடற்கரையில் குளிப்பது என்பது ரொம்பவே மகிழ்ச்சிகரமான ஒன்று.  இந்தப் பயணத்தில் நான் ஸ்னார்க்ளிங்க் சென்றபோது கடல் நீரில் சென்று வந்தாலும் குளித்ததாகக் கணக்கில் கொள்ள முடியாது. ஹேவ்லாக் தீவில் ராதா நகர் கடற்கரையில் மற்றவர்கள் குளித்தாலும் நான் குளிக்கவில்லை – படங்கள் எடுத்துக் கொண்டு திரிந்தேன்.  அதனால் இந்த பரத்பூர் கடற்கரையில் குளிக்கலாம் எனத் தோன்றியது.  கடலில் நீண்ட தூரத்திற்கு மிதவைகளைக் கொண்டு பாதை அமைத்து இருக்கிறார்கள் இங்கே.  அந்த மிதவைப் பாதையில் நடந்து அதன் முடிவு வரை சென்றால் நன்றாக இருக்குமே என அதில் நடந்து சென்றோம்.  இந்த மிதவை ரொம்பவே நீளமாக அமைத்திருக்கிறார்கள் – சுமார் 750 மீட்டர் தூரம் இருக்கும் எனத் தோன்றியது.

 மிதவையில் பிணைக்கப்பட்ட படகு ஒன்று... 


எதற்கு இத்தனை தூரம் என முதலில் தோன்றினாலும் பிறகு தான் அதற்கான தேவை புரிந்தது.  காலையில் கரை வரை இருந்த கடல், கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்க ஆரம்பித்தது.  மதியத்திற்குள் மிதவையின் இறுதிப் பகுதி வரை உள்வாங்கி விட்டது.  காலையில் கரையிலிருந்து புறப்பட்ட படகுகள் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே கொண்டு வந்து நிறுத்த ஆரம்பித்து விட்டார்கள் படகு ஓட்டுனர்களும் உதவியாளர்களும்.  தண்ணீர் உள்வாங்கி விட்டால் படகை இயக்குவது கடினமாகி விடும்.  கடல் உள்வாங்க ஆரம்பித்த பிறகு படகுகளை மிதவையின் இரண்டு பக்கங்களிலும் சேர்த்து பிணைத்து விடுகிறார்கள்.  நாங்கள் சிலர் மட்டும் மிதவையின் ஓரம் வரை நடந்து கடலன்னையின் எழிலை ரசித்துக் கொண்டிருந்தோம்.   அங்கே பார்த்தால் சிலர் கடலில் குளித்துக் கொண்டிருந்தார்கள். அத்தனை தூரம் உள்ளே கூட கடலில் ஆழம் இல்லை என்பதால் முழங்கால் வரையே தண்ணீர் இருந்தது. அவ்வப்போது அலை அடிக்கும்போது இடுப்பு வரை வந்தாலும் பெரும்பாலும் முழங்கால் வரை தான்.  என்னுடைய Extra உடைகள் வைத்திருந்த பை கரையில் இருந்தவர்களிடம் இருந்தது. 

மிதவையின் மீது நான்....... 
 

குளிக்கலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்க, கரை நோக்கிச் சென்றவர்கள் நாங்கள் உங்கள் பையை கொடுத்து அனுப்புகிறோம், நீங்கள் குளியுங்கள் என்று சொல்ல கடலில் இறங்கி விட்டேன்.  ஆஹா எவ்வளவு நேரம் குளித்துக் கொண்டிருந்தேன் என கணக்கே இல்லை.  அங்கே குளித்துக் கொண்டிருந்த சிலர் தமிழகத்திலிருந்து வந்திருந்தவர்கள். அவர்கள் எட்டு நாள் பயணமாக வந்திருந்தார்கள் என்ற தகவலையும் அவர்களிடம் பேசித் தெரிந்து கொண்டேன்.  நிறைய நேரம் கடலில் குளித்துக் கொண்டிருக்க, குழுவினரில் இன்னும் சிலரும் அங்கே வந்து சேர்ந்தார்கள்.  அனைவருமாக குளித்துக் கொண்டிருந்த போது குழுவினரின் சில குழந்தைகள் ஜெட் ஸ்கீ/ஸ்கூபா டைவிங் முடித்து வந்து சேர்ந்தார்கள்.  நான் கடலை விட்டு வெளியே வருவதாக இல்லை! தொடர்ந்து கடல் நீரில் தான் கிடந்தேன்!  அப்போது படகை மிதவையில் இணைக்க வந்த ஒரு தமிழ் இளைஞர் எங்களிடம் பேச்சுக் கொடுத்தார்.  சார் Ride எதுவும் போகிறீர்களா? எனக் கேட்டவுடன், விவரங்களைக் கேட்டோம்! 


பரத்பூர் கடற்கரையில் மிதவைப் பாலம் - ஒரு நடை போகலாம் வாங்க!... 
 

அவர் சொன்ன விவரங்கள் என்ன, அந்த Ride எது? அந்த Ride சென்றபோது நடந்த ஒரு விஷயம் என ஸ்வாரஸ்யமான விஷயங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  அடுத்த பகுதியிலும் பரத்பூர் கடற்கரை விஷயங்கள் தான்.  காத்திருங்கள்  நண்பர்களே! இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி


34 கருத்துகள்:

 1. வாசகம் உண்மையைச் சொல்கிறது.

  கடல்நீர்க் குளியலை அனுபவித்....து விட்டீர்கள் போல..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   கடல்நீர் குளியல் - நன்றாகவே இருந்தது! :) நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு கடல் குளியல்!

   நீக்கு
 2. பொன்பொழி அருமை ஜி
  படங்கள் வழக்கம் போல சொல்லிச் சென்ற பரத்பூரின் கடற்கரை அனுபவங்கள் ஸூப்பர்.

  அந்த Ride எது ? அறிய தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொன்மொழி, படங்களும், பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   அடுத்த பதிவில் அந்த Ride பற்றி சொல்கிறேன் கில்லர்ஜி.

   நீக்கு
 3. பொன் மொழி கருத்தும் படங்கள் மட்டுமல்ல நீங்களும் மிக இளமையாக காட்சி அளிப்பதும் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொன்மொழி கருத்து, படங்கள், பதிவு அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 4. கடல்நீர்க்குளியல் உடலில் அரிப்பைத் தராதோ? (எனக்குனு இப்படி எல்லாம் தோணும். ) அருமையான பயணம். நல்ல அனுபவங்கள். அனுபவிச்சுப் பார்த்திருக்கீங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடல் நீர் குளியல் - அந்தமான் தீவுகளில் அரிப்பினைத் தரவில்லை. அதுவுமில்லாமல் கடலில் குளித்த பிறகு நல்ல தண்ணீரில் குளியலும் உண்டு - அதற்கான வசதிகளும் அந்தக் கடற்கரையில் இருந்தது.

   ரசித்த பயணங்களில் இதுவும் ஒன்று தான் கீதாம்மா...

   நீக்கு
 5. விதவிதமான அனுபவங்கள்... மேலும் அறிய காத்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. பணாணா ரைடுனா வாழைப்பழத்தை சாப்டுட்டே செல்கிற ரைடுதானே? என்னே எங்கள் அறிவு பாருங்கள்.
   கோவாவில் இந்த ரைடு பார்த்தோம், வழுக்கிக்கொண்டே செல்லத்தக்க பணாணா ரைடு படகுகளை புயல் வரும் என்ற எச்சரிக்கை கருதி கட்டி வைத்துவிட்டார்கள்.
   எப்படியும் என் போன்ற மாற்றுத்திறனாளிகளை ஸ்கூபா டைவிங், பணாணா ரைட் போன்ற ரைடுகளில் விடுவதில்லை என்றாலும் குடும்பத்தினரும் நன்பர்களும் புயல் காரணமாக இழக்கிரார்களே என்று வருத்தமாக இருந்தது.

   நீக்கு
  2. ஆமாம் தனபாலன். அனுபவம் பலவிதம் தான்.

   தொடர்ந்து பயணிப்போம்.

   நீக்கு
  3. பனானா ரைடுனா வாழைப்பழத்தை சாப்டுடே செல்கிற ரைடு தானே... ஹாஹா...

   கோவாவிலும் இந்த மாதிரி உண்டு. புயல் சமயத்தில் அனுமதிக்க மாட்டார்கள் - ரிஸ்க் தானே. புயல் சமயங்களில் அப்படி அனுமதிக்காததும் நல்லதற்குத் தானே அரவிந்த்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. கடலூரில் கல்லூரியில் படிக்கும்போது கட் அடித்துவிட்டு கடலில் குளித்த நினைவலைகள். 
  ஒரு புதிய முயற்சியாக கரையில் நின்று போட்டோ எடுக்காமல் கடலில் சென்று எடுத்திருக்கிறீர்கள். நன்று.
  குளிக்கும் போட்டோ ஒன்று கவர்ச்சிப்படமாக வெளியிட்டிருந்தீர்கள் என்றால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாண்டியிலும் கடலூரிலும் சில முறை குளித்திருக்கிறேன். கல்லூரி நினைவுகள் - :)

   கடலில் பயணித்தபோது எடுத்த படங்கள் முன்பும் பகிர்ந்து கொண்டதுண்டு ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   நீக்கு
 7. மிதவைப் பாலம் மிகவும் அருமை. ஸ்கூபா டைவிங் என்றாலே எனக்கு பீடல் காஸ்ட்ரோதான் நினைவிற்கு வருகிறார். முதன்முதலில் அவரைப் பற்றிப் படித்தபோது இந்த ஸ்கூபா டைவிங் என்ற சொல் அறிமுகமானது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிதவைப் பாலம் படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   ஸ்கூபா டைவிங் - ஃபிடல் காஸ்ட்ரோவினை நினைவுக்குக் கொண்டு வந்ததா... மகிழ்ச்சி ஐயா.

   நீக்கு
 8. கடலில் அதிக நேரம் குளிக்க முடியாதே! உடல் அரிக்க ஆரம்பிச்சுடுமே!

  மிதவை பால அழகா இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தமான் தீவுகளில் கடற்கரையில் குளித்தபோது அத்தனை அரிப்பு இல்லை ராஜி. உப்புத் தன்மை குறைவோ என்னவோ? பிறகு நல்ல நீர் குளியலும் உண்டு என்பதால் தெரியவில்லை.

   மிதவை பாலம் படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 9. பரத்பூர் கடற்கரை அழகு, மிதவை பாலம் மிக அருமை.
  படங்கள் எல்லாம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரத்பூர் கடற்கரையும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

   நீக்கு
 10. கடல் நீர் குளியல், பனானா ரைடு, கடல் நீர் உள்வாங்குதல்.... எல்லாம் இந்தோநேஷியா டிரிப்பை நினைவுபடுத்திவிட்டது.

  படங்கள் அழகு. கட்டுரையும் மிக உபயோகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் இந்தோனேஷியா பயணத்தினை இந்தப் பதிவு நினைவூட்டியதில் மகிழ்ச்சி.

   படங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சியும் நன்றியும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 11. மிதவை பாலம் அருமை. நாங்கள் பரத்பூர் கடற்கரையை மிஸ் பண்ணிவிட்டோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரத்பூர் கடற்கரை மிஸ் செய்தீர்களா? அடடா... இன்னுமொரு பயணம் செய்து விடலாம் - நேரமும் சூழலும் சரியாக இருந்தால்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 12. அங்கு அலைகள் சீறி வராதோ. அது ஒன்றுதான்
  கடல் நீர் குளியலில் பயம் கொடுக்கக் கூடியது.
  உங்களது அனுபவங்களும், விவரிக்கும் முறையும்.
  படங்களும், முக்கியமாக மிதவையும் மிக மிக அருமை.

  அருமையான பயணி நீங்கள். நன்றி மா வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லிம்மா....அலைகளே வரக்கூடாதுன்னா பஹ்ரைன் கடல்தான் சரி. அது வெறும் ஏரி மாதிரி அலைகளே இருக்காது.

   அந்தக் காலத்தில் வேளாங்கன்னி கடலில் அலையேருக்காது, ஒரு பர்லாங்குக்கு மேலேயே நடந்து செல்லலாம். சுனாமிக்கு அப்புறம் நிலைமை மாறிவிட்டதுன்னு நினைக்கறேன்.

   நீக்கு
  2. சீறி வரும் அலைகள் - இங்கே அத்தனை பயம் இல்லை வல்லிம்மா... சில இடங்களில் கடல் உள்வாங்குவதால் அலைகள் அதிகமில்லை. கரை வரை இருக்கும்போது சற்று அதிகமாகவே அலைகள் இருக்கும்.

   படஙக்ளும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

   அருமையான பயணி - ஆஹா... நன்றிம்மா..

   நீக்கு
  3. இராமேஸ்வரத்தில் கூட அவ்வளவு அலை இருக்காது - சிறு வயதில் அங்கே சென்றது. இப்போது எப்படியோ தெரியாது.

   வேளாங்கன்னி, பூம்புகார் பகுதிகளுக்கு இது வரை சென்றதில்லை. செல்ல ஆசை உண்டு.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 13. ராமேஸ்வரம், திருச்செந்தூர் போன்ற இடங்களில் கடலில் குளித்ததுண்டு.ஆனால் அதெயெல்லாம் அனுபவித்து குளித்தோம் என்று சொல்ல முடியாது. அழகான அனுபவங்களை, அழகான படங்கள் சொல்லுகின்றன. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறு வயதில் ராமேஸ்வரம் சென்றதுண்டு. திருச்செந்தூர் சென்ற நினைவில்லை. இராமேஸ்வரம் கடலில் குளித்ததுண்டு - காக்காய் குளியல் தான் - ஓடி ஓடி கிணறுகளில் இருந்து சொம்பில் எடுத்து தண்ணீர் ஊற்றிக் கொண்டதும் நினைவில்.

   படங்கள் சொல்லும் அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா...

   நீக்கு
 14. மிதவைப் பாலம் பிரமிப்பூட்டுகிறது. ராமாயணத்தில் கடலைக் கடக்க வானரங்களின் துணை கொண்டு ராமர் பாலம் காட்டினார் என்றும் அதில் நலன்,நீலன் என்ற இரு வானரங்கள் எதை கடலில் தூக்கிப்போட்டாலும் அது மிதக்கும் என்னும் சாபம் பெற்றதால் அவைகளை விட்டு பாறைகளை கடலில் எறியச் சொன்னதாகவும், அதனால் சுலபமாக பலத்தை கட்டி முடிக்க முடிந்தது எனவும் படித்திருக்கிறோம். மிதக்கும் கற்களில் நடப்பது கஷ்டமாக இருக்காதோ? என்று தோன்றும். இந்த மிதவைப் பாலம் படத்தை பார்த்த பொழுது சந்தேகம் தீர்ந்து விட்டது.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தமானின் பெரும்பாலான கடற்கரைகளில் இந்த மாதிரி மிதவைப் பாலங்களை அமைத்திருக்கிறார்கள். கடலலைகள் வரும்போது இந்த மிதவையில் நடப்பது சர்க்கஸ் போல! ஆடும்போது கொஞ்சம் பயமும் வரலாம்! :)

   வானரங்கள் - நலன், நீலன் நினைவுக்கு வந்தது சிறப்பு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா...

   நீக்கு
 15. அழகிய கடல்.மிதவை பாலம் அருமை.

  பாதுகாப்பான கடல் குளியல் இடங்கள் நமது நாட்டில் பல இருக்கின்றன பலதடவை குளித்தாலும் கடலைக் கண்டால் ஆசை தீர்வதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

   எத்தனை முறை கடலைக் கண்டாலும், குளித்தாலும் ஆசை தீர்வதில்லை - உண்மை தான். தீராத ஆசை அது.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....