புதன், 6 மே, 2020

அந்தமானின் அழகு – சீதாபூர் கடற்கரை – சூர்ய உதயம்…





அந்தமானின் அழகு – பகுதி 27 

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

The sunrise, of course, doesn’t care if we watch it or not.  It will keep on being beautiful, even if no one bothers to look at it.



இதற்கு முந்தைய பகுதியில் சொன்னது போல, முதல் நாள் மாலை லக்ஷ்மண்பூர் கடற்கரையில் சூரிய அஸ்தமனம் பார்க்கச் சென்று திரும்பிய பின்னர் அடுத்த நாள் காலை நேரத்தில் வேறொரு கடற்கரையில் சூரிய உதயம் பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தோம்.  வெகு சீக்கிரமாகவே எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு, சூரிய உதயம் காண்பதற்காக தயாரானேன்.  குழுவினர் அனைவரும் வருவதாக இல்லை – ஒரு சிலர் மட்டுமே பயணிப்பதாகத் திட்டம் – நாங்கள்


ஐந்து பேர் மட்டுமே சென்றோம் – ஒரு வாகனத்தில்.  அனைவரும் தயாராகி வெளியே வர, எங்களுக்கான வாகனத்துடன் ஓட்டுனர் காத்திருந்தார்.  முதல் நாள் லக்ஷ்மண்பூர் கடற்கரை என்றால் இந்த இரண்டாம் நாளில் நாங்கள் செல்ல இருந்த கடற்கரையின் பெயர் சீதாபூர் கடற்கரை (கடற்கரை எண் ஐந்து!).  லக்ஷ்மண், சீதா ஆகிய இருவரும் இருக்கிறார்களே ராம், பரதன் ஆகியோர் இல்லையா எனக் கேட்கலாம் – அவர்களும் உண்டு – அவர்கள் பெயரிலும் கடற்கரை உண்டு! மொத்தத் தீவும் அமைதியாக இருக்க, அந்த சிறுதீவின் சாலையில் எங்கள் வாகனம் மட்டுமே சென்று கொண்டிருக்கிறது. 






முந்தைய நாள் மாலையில் தீவின் அமானுஷ்யமான ஒரு பாதையில் பல்வேறு பறவைகளின் குரல்கள் பின்னணியில் ஒலிக்க நடந்து வந்தோம் என்றால், அடுத்த நாள் காலையில் அதே அமானுஷ்யமான சூழல் – வாகனத்தில் பயணித்தது மட்டுமே வேறுபாடு.  சாலைகளில் ஒருவருமே இல்லை. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி.  வாகனத்தில் நாங்கள் ஐந்து பேர் மற்றும் ஓட்டுனர் தருண் – சீதாபூர் கடற்கரையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் தங்குமிடத்திலிருந்து சுமார் 6.5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சீதாபூர் கடற்கரையில் Sun Rise Point என அழைக்கப்படும் இடம்.  பத்து நிமிடங்களில் நாங்கள் அங்கே சென்று சேர்ந்து விட்டோம்.  நாங்கள் சென்று சேர்ந்த போது  அந்த இடத்தில் ஒரு வாகனம் கூட இல்லை.  நாங்கள் தான் முதன் முதலாக சென்று சேர்ந்தோம்.  வாகனத்தின் வெளியே மண் சாலையில் இரண்டு செல்லங்கள் – லொள் லொள் என்று அவர்கள் பாஷையில் “எங்களை எதுக்குடா எழுப்பி விட்டீங்க?” என்று கேள்வி கேட்டனர்.  சில நிமிடங்கள் வாகனத்தின் உள்ளேயே அமர்ந்திருந்தோம்.


 

சில நிமிடங்கள் காத்திருந்த பிறகு வேறு ஒரு வாகனம் அங்கே வந்தது.  அதிலிருந்தும் சிலர் சூரியோதயம் பார்க்க வந்திருந்தார்கள்.  நாங்களும் வாகனத்தினை விட்டு இறங்கி கடற்கரை நோக்கி நடந்தோம். சாலை இருக்கும் வரை வாகனம் வந்திருந்தாலும், அதிலிருந்து கடற்கரை நோக்கி ஒரு 200 மீட்டர் நடக்க வேண்டியிருந்தது. பாறைகளால் ஒரு பெரிய தடுப்பு போல அமைத்து இருக்கிறார்கள். அங்கே நின்றபடியும் பார்க்கலாம் இல்லையென்றால் படிக்கட்டுகள் வழி கீழே இறங்கி மணல் பகுதிக்கும் சென்று சூரியோதயம் பார்க்கலாம். சில நிமிடங்கள் வரை மேலேயே நின்று காத்திருந்தோம். சிலர் இறங்கிப் போக, நாங்களும் இறங்கிச் சென்று கடற்கரையில் பவளப் பாறைகள் (ஆங்கிலத்தில் Dead Corals என்று சொல்கிறார்கள்) இருக்க, அவற்றின் மீது சில நிமிடங்கள் நின்றும், அமர்ந்தும் காத்திருந்தோம்.  தொடர்ந்து அலைகள் அப்பாறைகள் மீது அடித்துத் திரும்புவதால் கொஞ்சம் வழுக்கி விடும் அபாயம் உண்டு.  கவனமாக இருக்க வேண்டிய இடம்.  நானும் ஒரு இடத்தில் கொஞ்சம் கால் வழுக்கி, அங்கே இருந்த பாறையில் நச்சென்று கீழே அமர்ந்து கொண்டேன்! நல்லவேளை அடிபடவில்லை.





பொதுவாக நான்கரையிலிருந்து ஐந்து மணிக்குள் சூரியோதயம் இருக்கும் என்று சொன்னதால் நாங்கள் நான்கரை மணிக்கு முன்னதாகவே சீதாபூர் கடற்கரைக்குச் சென்று விட்டோம்.  மேகமூட்டமாக இருக்க, சூர்யோதயம் காட்சிகளை சரியாக பார்க்க முடியுமா என்ற சந்தேகம் எங்களுக்கு.  ஐந்தே கால், ஐந்தரை வரை சூர்யோதயம் ஆகவே இல்லை.  அடடா, இவ்வளவு சீக்கிரம் எழுந்து தயாராகி புறப்பட்டு வந்திருக்கிறோமே, காட்சிகளை பார்க்க முடியுமா முடியாதா என்று நினைத்தபடியே அங்கே காத்திருந்தோம்.  எங்களைப் போலவே நிறைய பேர் அங்கே வந்து காத்திருந்தார்கள்.  நல்லவேளையாக ஐந்தரைக்குப் பிறகு கொஞ்சம் மேகக் கூட்டங்கள் விலக, சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத் துவங்க, அற்புதமான சூர்யோதயக் காட்சியை எங்களால் கண்டுகளிக்க முடிந்தது.  ரொம்பவே அழகான காட்சிகள்.  நிறைய நேரம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம் – காமிரா கண்களாலும், எங்கள் கண்களாலும்.  ரொம்பவே ரசனையான காட்சிகள் இந்த சூர்யோதய, அஸ்தமனக் காட்சிகள்.  எந்த கடற்கரைக்குச் சென்றாலும் பார்த்து ரசிக்க வேண்டிய காட்சிகள் இவை.




நிறைய படங்களும், ஒன்றிரண்டு காணொளிகளும் எடுத்துக் கொண்டு கடற்கரையை விட்டு மேலே வர மனமே இல்லாமல் அங்கிருந்து மேலே வந்தோம்.  அதற்குள் அந்தப் பகுதியில் ஒரு தள்ளுவண்டியில் தேநீர் வியாபாரம் ஆரம்பித்து இருந்தது – லிக்கர் சாய் தான்! நன்றாகவே இருந்தது – பத்து ரூபாயில் லிக்கர் சாய்.  நாங்கள் அங்கே இருந்தபோது காலையில் உறக்கத்திலிருந்து எழுப்பி விட்டீர்களே என்று கேட்ட செல்லங்கள் எங்கள் அருகே நின்று வாலாட்டிக் கொண்டிருந்தன. தேநீர் கடைக்காரரிடம் டைகர் பிஸ்கெட் சிறிய பாக்கெட்டுகள் இருக்க அவற்றை வாங்கி செல்லங்களுக்குக் கொடுத்தோம்.  நான்கு ஐந்து பாக்கெட்டுகள் சாப்பிட்ட பிறகும் கூட அவற்றுக்கு பசி தீரவில்லை போலும்.  இன்னும் இன்னும் என பார்த்தபடியே இருக்க, இன்னும் இரண்டு பாக்கெட்டுகள் வாங்கிக் கொடுத்தோம். அதற்குள் கடற்கரைக்கு சூரியோதயம் பார்க்கச் சென்ற நாங்கள் அனைவருமே தேநீரை குடித்து முடித்திருக்க எங்கள் வாகனம் நோக்கி நகர்ந்தோம்.  காலையில் வரும்போது நாங்கள் மட்டுமே இருந்ததால் வாகன எண்ணைக் கூட பார்க்கவில்லை. நல்ல வேளை ஓட்டுனர் தருண் அலைபேசி எண் இருக்க அழைத்தோம்.







அவர் இதோ இங்கே தான் இருக்கிறேன் எனச் சொல்லி வேகமாக வந்து வாகனம் நோக்கி அழைத்துச் சென்றார்.  சீதாபூர் கடற்கரையில் இனிமையான தருணங்களாக அமைந்தது அந்த இனிய காலை நேரம்.  மிகவும் ரம்மியமான இயற்கைக் காட்சிகளை ரசித்து நாங்கள் தங்குமிடம் திரும்பியபோது காலை ஆறரை மணிக்கு மேல் ஆகிவிட்டது.  குழுவினரில் எங்களுடன் வராத சிலர் தங்குமிடத்தின் பின்னே இருக்கும் கடற்கரைக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.  நான் நேரே அறைக்குச் சென்று குளியல் வேலைகளை முடித்துக் கொண்டு என் உடைமைகளையும் தயார் செய்து விட்டு கடற்கரை நோக்கிச் சென்றேன்.  சூரியனின் உதயத்தினை பார்த்தாலும் இன்னும் சில மணித்துளிகள் கடற்கரையில் இருந்து ரசிக்கலாமே – வசதியாக மரப் பலகைகளில் சாய்ந்து கொண்டு ஓய்வில்லாமல் கரையைத் தொட்டுத் திரும்பும் கடலலைகளையும், சூரியனின் கிரணங்கள் தண்ணீரில் பட்டு தகதகவென மினுமினுப்பதையும், எண்ணிலடங்கா கடல்வாழ் உயிரினங்கள் ஆங்காங்கே திரிந்து கொண்டிருப்பதையும் ரசித்துக் கொண்டிருந்தேன்.  நேரம் போவதே தெரியாமல் அப்படி ஒரு ரசனை.  அங்கேயே இருந்துவிடலாம் தான் – ஆனால் இருக்க முடியாதே!




ஒரு சிறு முயற்சி - சில படங்களை இணைத்து காணொளியாக...



அடுத்ததாக என்ன செய்தோம், எங்கே சென்றோம் போன்ற விவரங்களை வரும் பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  இந்தப் பதிவில் சொன்ன விஷயங்கள், பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

26 கருத்துகள்:

  1. இயற்கையின் எல்லா நிகழ்வுகளுக்கும் இன்றைய வாசகம் பொருந்தும். இல்லையா?

    இரவுநேர, அதிகாலை அமானுஷ்யப் பயணங்கள் பற்றிய விவரம் சுவாரஸ்யம்.

    கோபப்பட்ட செல்லங்களுக்கு டைகர் பிஸ்கட் பொருத்தம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - இயற்கையின் எல்லா நிகழ்வுகளுக்கும் பொருந்தும் - உண்மை தான் ஸ்ரீராம்.

      பயணத்தின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      செல்லங்களுக்கு டைகர் பிஸ்கெட் - டைகருக்கு டைகர்! ஹாஹா...

      நீக்கு
  2. லக்ஷ்மண், சீதா, ராம், பரதன் எல்லா பெயர்களும் சரித்திர புருஷர்களின் நினைவாக வைத்தது ரசிங்க வைத்தது.

    படங்கள் அழகாக இருக்கிறது காணொளியும் கண்டேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் - ஒவ்வொரு கடற்கரைக்கும் இப்படி பெயர் வைத்திருப்பதும் நல்ல விஷயம் தான் கில்லர்ஜி.

      படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  3. சூரியோதயம் அருமை ஜி... காணொளி படக் காட்சிகளும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் காணொளியும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  4. சூரியோதயம் அருமை...

    காணொளி முயற்சிக்கு வாழ்த்துகள்.

    படங்கள் அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராஜி.

      நீக்கு
  5. நேரம் போவதே தெரியாமல் அப்படி ஒரு ரசனை. அங்கேயே இருந்துவிடலாம் தான்

    தங்களின் படங்களையும் பகிர்வினையும் பார்த்த எங்களுக்கே அப்படித்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கேயே இருந்து விடலாம் என்று தான் தோன்றியது. ஆனாலும் திரும்பி தானே ஆகவேண்டும்.

      படங்களையும் பதிவினையும் ரசித்தமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. சூர்யோதயம் காணக் கிடைப்பதே அதிருஷ்டம்தான். பெரும்பாலும் மேக மூட்டம், மழை என்று ஏதாவது கெடுத்துவிடும். இல்லைனா, நாம் சென்று சேர்வதற்குள் சூர்யன் எழும்பியிருப்பான்.

    படங்கள் எப்போதும்போல அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மேக மூட்டம் இருந்தால் பார்க்க முடிவதில்லை - எல்லாம் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே பார்க்க முடியும். ஓரளவு எங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தது - இருந்தாலும் மேக மூட்டம் கொஞ்சம் இருந்ததில் வருத்தமே.

      படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  7. லக்ஷ்மண்பூர் கடற்கரை சூரியோதயம் அழகு.
    காணொளியும் அருமை.

    செல்லங்கள் காலையில் எழுப்பி விட்டீர்கள் என்று அலுத்துக் கொண்டாலும்
    அவர்களுக்கு பிஸ்கட் வயிறு நிறைய கிடைத்ததில் மகிழ்ந்து வாழ்த்தி இருக்கும்.
    பதிவும், படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்லங்கள் - அவற்றுக்கு ஏதாவது கொடுத்தால் எத்தனை மகிழ்ச்சி இல்லையா...

      படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    கடற்கரைப் படங்கள் மனதை கொள்ளையடிக்கின்றன. சூரியோதயம் நன்றாக பார்க்க கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். லஷ்மண்பூர், சீதாப்பூர் என கடற்கரைக்கு வைத்த பெயர்கள் நன்றாக உள்ளன சூரியோதய படங்களும் மிகவும் அழகாக உள்ளது. தண்ணீர் உள்ள இடங்களில் வழுக்கும் அபாயமும் உள்ளதால் நாம் கவனமாக இருக்க வேண்டும். இதை என்னுடைய அனுபவத்திலும் சொல்கிறேன்.

    செல்லங்களின் படங்களும் அழகாக இருக்கின்றன. அவற்றிற்கு வயிறார உணவு தந்ததால் அவற்றின் நன்றி அதன் கண்களில் தெரிகிறது. காணொளிய்ம் அழகாக உள்ளது. கண்டு ரசித்தேன்.

    கடல் அலைகனை எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பு தட்டாது. தங்களின் அன்றைய பயணமும் அழகான வகையில் அமைந்திருக்கும் என நம்புகிறேன். அடுத்து தாங்கள் கண்டு ரசித்த கடற்கரையைப் பற்றி அறிய ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      கடற்கரை படங்களும் கடற்கரைக்கான பெயர்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. ஆமாம் கொஞ்சம் அல்ல நிறையவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருந்தது.

      செல்லங்கள் - அவற்றின் நன்றி கண்களில் தெரிகிறது - உண்மை தான்.

      கடல் அலைகள் - பார்க்கப் பார்க்க பரவசம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. கடற்கரை பெயர்கள் அழகாகவே வைத்துள்ளார்கள். சூரிய உதயம் அஸ்தமனம் காட்சிகள் எப்பொழுதும் மனதுக்கு நிறைவைத் தரும். அழகிய காட்சிகள்.
    எமக்கு கடல் அருகே தினந்தோறும் பார்க்கலாம் எத்தனை தடவைகள் பார்த்தாலும் சலிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடல் தினந்தோறும் பார்க்கலாம் - ஆஹா - எத்தனை வசதி. இங்கே தில்லியில் எங்கே பார்த்தாலும் கடல் அலையென வாகனங்கள் மட்டுமே! இருக்கும் யமுனை ஆறும் அழுக்காக!

      பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு
  10. இந்தப் படங்கள் மட்டும் சிறப்பாக அமைந்து விட்டதே. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜோதிஜி.

      நீக்கு
  11. செல்லம் ரொம்ப அழகாய் இருக்கே! ஜாம்நகரில் எங்களுடன் வசித்த செல்லம் போல் இருக்கு. அவற்றுக்கு பிஸ்கட் வாங்கிக் கொடுத்தது நல்லது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்லங்கள் - ஜாம்நகரில் இருந்த செல்லத்தினை நினைவு படுத்தியதோ... :) ஓகே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  12. கடல், மலைகள், யானை, ரயில் இவற்றை எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை. அதிலும் சூரியோதயமும்,சூரியாஸ்தமனமும் இங்கே மொட்டை மாடியில் பார்க்கும்போதே பரவசம். கடல் அலைகளில் பிரதிபலிக்கும் சூரியனைப் பார்ப்பது எவ்வளவு மகிழ்வான நிகழ்வு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்கத் திகட்டாத காட்சிகள் தான். எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதே இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  13. சீதாபூர் கடற்கரை அழகிய பெயர் ..

    அனைத்து காட்சிகளும் ரொம்பவே அழகு ...

    அதிலும் இரண்டாவது படமும் ,சூரியனின் கிரணங்கள் தண்ணீரில் பட்டு தகதகவென மின்னும் படமும் மனதை அதிகம் கவர்ந்தன ..


    ஒரே கடலின் பல வண்ண காட்சிகள் ...அற்புதம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது படமும், சூரியனின் கிரணங்கள் தண்ணீரில் பட்டு தகதகவென மின்னும் படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.

      ஒரே படலின் பல வண்ண காட்சிகள் - ஆமாம் ஜி. அழகிய காட்சிகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....