சனி, 2 மே, 2020

காஃபி வித் கிட்டு – மனிதம் – உள்ளே இருப்போம் – நீலத்தாமரை – ஓடாதே – குழப்பமும் பயமும்


காஃபி வித் கிட்டு – பகுதி 65


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி; ஒரே தவறை திரும்பத் திரும்ப செய்பவன் மூடன்; ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை; தன்னையறியாமல் தவறு செய்து தன்னையறிந்து திருத்திக் கொள்பவனே மனிதன் – கண்ணதாசன்.

இந்த வாரத்தின் படித்ததில் பிடித்தது:

நண்பர் முரளி அவர்கள் அவ்வப்போது முகநூலில் எழுதுவார்.  நீண்ட நட்பு – 32 வருடங்களுக்கும் மேலான நட்பு எங்களுடையது. அவருடைய எழுத்தில் சிலவற்றை முன்னரும் இங்கே பகிர்ந்ததுண்டு. இன்றைக்கு அவர் எழுதியதிலிருந்து ஒரு இடுகை இங்கே படித்ததில் பிடித்ததாக…

"ஈஸ்வர், the great kick boxing champion" என்று பிரகாஷ்ராஜ் M . குமரன் s /o மஹாலக்ஷ்மி என்ற படத்தில் கொக்கரிப்பார்.

"கண்ணுக்குத் தெரிந்த நாலு பேர அடிச்சு win பண்ணா நீ பெரிய champion ஆ? கண்ணுக்குத் தெரியாத 100 வில்லன வாழ்க்கையில சமாளிச்ச என் அம்மாதான்யா real champion" என்று ஜெயம் ரவி எதிர்க்குத்து விடுவார்.

உலகின் தற்போதைய நிலை அவ்வாறே உள்ளது. Super power, advanced countries, developed nations அனைத்தும் கண்ணால் காண முடியாத ஒரு கிருமியின் முன் மண்டியிட்டுக் கிடக்கின்றன. இயற்கையின் தன்மை புரியாமல் மிகவும் விளையாடி விட்டோம் என்றே தோன்றுகிறது. கிருமிகள் வாழத் தேர்ந்தெடுத்திருந்த விலங்குகளையும்/தாவரங்களையும் மனிதன் அழிக்கத்தொடங்கிய பின் அவை மனிதர்களைத் தன் வாழ்விடங்களாகத் தேர்ந்தெடுக்கத் தொடங்கிவிட்டன.

பெரிய அலுவலகங்களில், பல ஆண்டுகள் பணி புரிந்து efficient worker என்றும் அனைத்தும் அறிந்தவர் என்றும் பெயர் பெற்ற சிலர் இருப்பதுண்டு. அவர்களிடம் தன்னால் எல்லாம் முடியும் என்ற இறுமாப்பு இருக்கும். அந்த இறுமாப்பு சில சமயங்களில் பல பேரைச் சிக்கலில் சிக்க வைப்பதுண்டு. தணிக்கை நேரங்களில் தாங்கள் எடுத்துக்கொண்ட வேலையை முடிக்க முடியும் என்று நம்பி, கடைசி வரை இழுத்தடித்து கடைசி நேரத்தில் கையைத்தூக்கி விடுவார்கள். அந்த சிக்கலை சரி செய்வதற்காகக் கம்பெனியே உட்கார்ந்துக்கொண்டு வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அது போல சீனா முன்னதாகவே அலறி உலகை alert செய்யாததால் இன்று உலகே இருமத் தொடங்கி விட்டது.

இப்பொழுதும் பல TV channel களில் நடைபெறும் விவாதங்களில் கலந்து கொள்ளும் so called experts பொறுப்பற்ற முறையில் உளறிக்கொண்டும் அரசைத்திட்டிக்கொண்டும் இருப்பதைக்காண முடிகிறது. அரசியல் செய்ய இது தருணம் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். Cricket-ல் ஒரு batsman-க்கு நேரம் சரியில்லை என்றால் அவருக்கு seniors கூறும் advice ஒன்றே ஒன்றுதான், "Don't try anything new. Just stick to basics". Now we are in that situation. WE SHALL JUST STICK INSIDE THE CREASE"

இந்த வாரத்தின் ரசித்த பாடல்:

இந்த வாரத்தின் ரசித்த பாடலாக,  நீலத்தாமரா படத்திலிருந்து ஒரு பாடல் – கேட்டுப் பாருங்களேன்.

 


பயம் நல்லதல்ல...

அலுவலக நண்பர் ஒருவர் – இளைஞர் – தில்லியில் அவரும் தம்பியுமாக சேர்ந்து இருக்கிறார்கள் – என்றாலும் அவர்களுக்குள் பெரிதாக பேச்சு வார்த்தை கிடையாது.  இந்தப் பேரிடர் காலத்தில் ரொம்பவே பயந்து போய் இருக்கிறார்.  காய்கறி வாங்கினால் கூட தொற்று வந்து விடுமோ என பயந்து தால் வகைகளை மட்டுமே உண்பதாகவும், வீட்டை விட்டு வெளியே வந்து திரும்பினால் முக்கால் மணி நேரம் குளிப்பதாகவும், சில நாள் அலுவலகம் வந்து திரும்பியதிலிருந்து ஏதோ மனதைக் குடைவதாகவும் புலம்பினார் ஒரு நாள் இரவு பதினோறு மணிக்கு – ரொம்பவே பயந்து போயிருக்கிறார். உள்ளுக்குள் ஜூரம் இருப்பது போல இருக்கிறது, இருமல் வருவது போல இருக்கிறது  என்று வீட்டின் அருகே இருக்கும் மருத்துவமனைக்குச் செல்ல, அவர்கள் பெரிய மருத்துவமனைக்குச் சென்று தேவையெனில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் எனச் சொல்லி கால்பால் போன்ற மாத்திரை கொடுத்து அனுப்பி இருந்தார்கள் போலும். இரவு, அவருடன் நீண்ட நேரம் பேச வேண்டியிருந்தது.  அதுவும் வாட்ஸப் வழி செய்திகளையும் முகநூல் செய்திகளையும் உண்மை என்று நம்பி அதையே தொடர்ந்து படித்து ஒரு வித பயத்தில் இருக்கிறார் என்பதும் புரிந்தது. 

சில நாள் வரை வாட்ஸப், முகநூல் எதையும் பார்க்காதே, அலைபேசி வழி இனிமையான புல்லாங்குழல் இசையைக் கேள், பிடித்த புத்தகம் படி, ரொம்பவே யோசிக்காதே, எப்போது வேண்டுமானாலும் என்னுடன் பேசு என நிறைய அறிவுரை சொல்லி இருக்கிறேன்.  நாளைக்கே இறந்து விடுவேனோ என்று கேட்ட போது என்ன சொல்வது எனப் புரியவில்லை.  படித்த இளைஞர், நல்ல வேலையில் இருப்பவர், பணத்திற்குப் பெரிதாக பிரச்சனை எதுவும் இல்லை – ஆனாலும் பயம் – இந்தப் பேரிடர் சமயத்தில் தம்மை நோய் தாக்கி இறந்து விடுவோமோ என்ற பயம் ரொம்பவே அவரை ஆட்டி வைக்கிறது பாவம்.  நம்மால் முடிந்த வரை பாதுகாப்பாக இருப்போம்.  வீட்டினுள் இருப்போம். இப்போதைக்கு நம்மால் செய்ய முடிந்தது அது மட்டுமே.  அப்படியே நோய் தாக்கினாலும் நம்மால்  என்ன செய்து விட முடியும்?  பாவம் அந்த இளைஞர்.  இப்பொழுது தினம் தினம் அவருடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருக்கிறேன் – நான் பேசுவது மனோ பலம் தரும் என்ற நம்பிக்கையுடன்.  இந்தப் பேரிடர் விரைவில் விலக வேண்டும் – இன்னும் என்னென்ன பிரச்சனைகளை இவ்வுலகம் சந்திக்கப் போகிறதோ?

இந்த வாரத்தின் கேள்வி-பதில்:

தமிழ் கோரா தளத்தில் ரசித்த கேள்வி-பதில் ஒன்று இந்த வாரத்தில் ரசித்ததாக.  உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் – பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

கேள்வி:        வாழ்க்கை அழகானது என்று எந்த நேரங்களில் நினைப்பீர்கள்?

பதில்:           எதிர்பாரா நேரத்தில் ரயில்/பயணத்தில் கிடைக்கும் ஜன்னல் சீட்டு; அந்த அற்புதமான தருணத்தில் எதிர்பாரா விதமாக பின்னணியில் பிடித்தமான பாடல்;  மொக்கையாக செல்லும் ஒரு பயணம் ஒரு குழந்தையின் சிரிப்பில் சுவாரஸ்யமாக மாறும் நொடி;  நவீன உலகில் எவ்வளவு மாறினாலும் எவ்வளவு தூரமானாலும் அரிதாக கிடைக்கும் சமயங்களில் மொட்டை மாடியில் அம்மாவுடன் படுத்து நட்சத்திரங்களை எண்ணும்பொழுதும் கடந்து செல்லும் விமான ஊர்திகளை கண்டு தாயவள் குழந்தை போல் குதூகலிக்கும் போதும் - சுவாதிப்ரியா

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

2012-ஆம் வருடம் இதே நாளில் என் வலைப்பூவில் எழுதிய பதிவிலிருந்து…

இரண்டாம் முறையாக நான் போன போது, கொண்டு வந்ததை எல்லாம் திருப்பி எடுத்து போக வேண்டாம் என்று விற்கத் தொடங்கியிருந்தார்கள். வாத்தியார் எழுதிய புத்தகங்களில்ஓடாதேமட்டும் தான் கடையை விட்டு வாசகரோடு ஓடாமல் இருந்தது. உடனே வாங்கி விட்டேன்.  தலைப்பு மட்டும் தான்ஓடாதேஆனால் கதை முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்ஒரு தம்பதியர் தேனிலவைக் கூட விட்டு விட்டு

இது ஒரு க்ரைம் நாவல். படிக்க ஆரம்பித்ததிலிருந்து கீழே வைக்க மனம் வரவில்லை. அவ்வளவு சுவாரசியம். கதையின் நாயகன்நாயகி, புதுமணத் தம்பதியினர். அவர்கள் தேனிலவு செல்ல, ஒரு கும்பல் துரத்துகிறது அவர்களை. எதற்கு? அது நாயகன்நாயகி, மற்றும் படிக்கும் நமக்கும் புரியவில்லை. படிக்கப் படிக்கத் தான் தெரிகிறது. துரத்திக்கொண்டு இருக்கும் நபர்கள் திடீரென துரத்துவதை நிறுத்தி விடுகிறார்கள்.

ஓடிக் கொண்டே இருக்கும் இவர்களை ஒரு கட்டத்தில் கணேஷ்வஸந்த் காப்பாற்றுகிறார்கள். அத்துடன் நில்லாது எதற்காக துரத்துகிறார்கள் என்பதையும் ஆராய்ச்சி செய்வது தான் இந்த விறுவிறுப்பான கதை. நடுநடுவே சுஜாதாவின் அடையாளச் சின்னங்கள் வரும்போது தன்னையறியாமல் சிரிக்க வைக்கிறது. முழுப்பதிவும் படிக்க ஏதுவாய் சுட்டி கீழே...


அடுத்த மின்னூல் வெளியீடு - இரண்டாம் தலைநகரம்

ஹிமாச்சலப் பிரதேசத்தின் இரண்டாம் தலைநகரான தரம்ஷாலா மற்றும் அதன் அருகே இருக்கும் மெக்லாட்கஞ்ச், டல்ஹவுசி, பகுதிகளுக்கும், இந்தியாவின் மினி ஸ்விஸ் என அழைக்கப்படும் கஜ்ஜியார் பகுதிக்கும் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து “இரண்டாம் தலைநகரம்” என்ற தலைப்பில் மின் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். புத்தகத்தினை தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே...


கிண்டில் அன்லிமிட்டட் கணக்கு வைத்திருப்பவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து படிக்க முடியும். இந்த விடுமுறை நாட்களில் செய்த பணிகளில் இந்த மின்புத்தக தரவேற்றமும் ஒன்று. இதுவரை வெளியிட்ட மின்புத்தகங்களுக்கான சுட்டி என் வலைப்பூவில் வலது ஓரத்தில் “மின்புத்தகங்கள்” என்ற தலைப்பில் இருக்கும் சுட்டி மூலம் அறிந்து கொள்ளலாம். இன்னும் இருக்கும் நாட்களில் முடிந்தால் வேறு சில பயணத் தொகுப்புகளும் மின்னூலாக வெளியிடலாம் என்ற எண்ணம் உண்டு. இந்தக் கட்டுரைகளை மின்புத்தகமாக தரவிறக்கம் செய்து வாசிக்க விரும்புபவர்கள் தங்களது கிண்டிலிலோ அல்லது அலைபேசியிலோ/ கணினியிலோ தரவிறக்கம் செய்து வாசிக்க முடியும். அமேசானில் கணக்கு வைத்திருந்தால் போதும். கிண்டில் அன்லிமிட்டட் கணக்கு இல்லாதவர்கள் பணம் செலுத்தி படிக்க வேண்டியிருக்கும்.

நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

20 கருத்துகள்:

  1. இன்றைய பகுதிகள் நன்றாக இருந்தன.

    கொரோனா பற்றிய நண்பரின் இடுகை அர்த்தமுள்ளது. அவருக்கு பாராட்டுகள்.

    இரண்டாம் தலைநகரம் மின்னூலுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      நண்பரின் இடுகையைப் பாராட்டியதற்கு நன்றி.

      மின்னூல் - தங்களின் பாராட்டுகளுக்கு மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  2. வாழ்க்கை அழகானது என்பதை, பலன் கருதாது பிறர்க்கு உதவி செய்பவர்களைக் கண்ணுறும்போது நினைக்கத் தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலன் கருதாது பிறர்க்கு உதவி செய்பவர்கள் என்றும் போற்றப்பட வேண்டியவர்கள். பெரும்பாலும் அவர்களை போற்றுபவர்கள் குறைவு என்பதை பல முறை உணர்ந்திருக்கிறேன் நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. காலை வணக்கம். கண்ணதாசன் வரிகளைப் படித்தபோது பெற்றால்தான் பிள்ளையா பாடலான நல்ல நல் பிள்ளைகளை நம்பி நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - அர்த்தம் பொதிந்த பாடல். கண்ணதாசனின் வரிகளுக்கு கேட்கவா வேண்டும்.

      நீக்கு
  4. இரண்டாம் தலைநகரம் மின்நூலுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும். நண்பர் முரளியின் கருத்தில் உண்மை இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாம் தலைநகரம் - மின்னூல் வெளியீடு - தங்களது பாராட்டுகளுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நண்பர் முரளியின் கருத்தில் உங்களுக்கும் உடன்பாடு இருப்பதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  5. பயந்து கிடக்கும் அந்த டெல்லி இளைஞர் நிலையில் இந்தியாவில் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் - பலரும் சூழல் குறித்த பயத்தில் தான் இருக்கிறார்கள் ஸ்ரீராம்.

      நீக்கு
  6. கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இந்த நேரத்தில் அரசியல் பேசுவது அநாகரீகமானது இதை மக்களும் உணரவேண்டும்.

    கொரோனாவால் மட்டுமல்ல, பயத்தால் மட்டுமல்ல பசியால், கடனால் மக்களின் மரணம் தொடங்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். என்ன செய்வது இயற்கையை மதித்து வாழ இனியாவது தெரிந்து கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது மிகவும் அவசியம் கில்லர்ஜி. இந்த நேரத்தில் இதை உணர்ந்து கொள்வது நலம்.

      இயற்கையை மதித்து வாழ இனியாவது தெரிந்து கொண்டால் நலமே.

      நீக்கு
  7. ஜெயரஞ்சன் விவாதத்தில் இருந்தால் பார்ப்பது உண்டு...

    நீலத்தாமரா பாடல் நல்லாயிருக்கு... ஏதோ தமிழ் பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது...

    பயம் நல்லது இல்லை என்று பயத்துக்கு தெரியலையே...

    மின்னூல் தொடர் வாழ்த்துகள் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் பாடல் நினைவுக்கு வந்தால் சொல்லுங்கள்.

      பயத்துக்கு தெரியலையே - அதானே...

      தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. பயம் மனிதரை கொன்று விடும் .பாவம் அந்த இளைஞர் உங்கள் ஆறுதலான வார்த்தை அவருக்கு மனதைரியத்தை தரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயம் மனிதரைக் கொன்று விடும் என்பது உண்மையான வார்த்தை மாதேவி.

      நீக்கு
  9. தொற்றைவிடம் பயம் கொன்றுவிடும் ஆளை.
    முதலில் பயத்தைப் போக்க வேண்டும்.
    இன்றைய பதிவு அருமை அனைத்தும்.
    மின்னூலுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொற்றை விட பயம் கொன்றுவிடும். உண்மை கோமதிம்மா...

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      மின்னூல் - வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  10. மனோதிடம் - நெஞ்சுரம்..

    உணவும் மற்ற தேவைகள் தடையில்லாமல் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் மனோ திடம் தான் இன்றைய தேவை..

    ஆனால் பசி வந்திடப் பத்தும் பறந்து விடுமே..

    சிக்கல் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோதிடம், நெஞ்சுரம் நிச்சயம் தேவை தான் இன்றைய சூழலில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....