புதன், 27 மே, 2020

அந்தமானின் அழகு – நீலாம்பூர் – கப்பலில் பயணிக்கும் வாகனங்கள்

 

அந்தமானின் அழகு பகுதி 36


முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6  பகுதி 7 பகுதி 8 பகுதி 9  பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30  பகுதி 31 பகுதி 32  பகுதி 33 பகுதி 34 பகுதி 35


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


கப்பல் கரையில் இருப்பது பாதுகாப்பானது தான். ஆனால் அதற்காக அது உருவாக்கப் படவில்லை.


கப்பலில் பயணிக்கத் தயாராகும் வாகனங்கள் - எதிர் கரையில்...பெரிய கப்பலிலிருந்து சிறிய கப்பலுக்கு...


சென்ற பகுதியில் போர்ட் Bப்ளேயர் தீவிலிருந்து ஜிர்காடாங்க் வழியாக நீலாம்பூர் ஜெட்டி என அழைக்கப்படும் இடத்திற்கு வந்து சேர்ந்தது பற்றி சொல்லி இருந்தேன்.  நீலாம்பூர் ஜெட்டி – இந்த இடத்திற்கு மேல் சாலை வழி வந்த வாகனத்தில் பயணிக்க முடியாது! நடுவே ஒரு வளைகுடா! அதனைக் கடக்க உங்களுக்குத் தேவை ஒரு கப்பல்! அந்தக் கப்பலில் நீங்கள் மட்டுமல்ல, நீங்கள் சாலை வழியே வந்தபோது பயன்படுத்திய பேருந்து, சிற்றுந்து என அனைத்தும் ஏற்றிக் கொள்ளும் வசதி உண்டு எனும் அளவுக்கு பெரியது!  கப்பலில் பயணித்து இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்ல உங்களுக்கு ஆகப் போகும் நேரம் பத்து நிமிடம் மட்டுமே  என்றாலும் பயணிக்கும் முன்பான முஸ்தீபுகள் முடிய அரை மணி நேரம் ஆகிவிடுகிறது.  இக்கரைக்கும் அக்கரைக்குமாக அந்தக் கப்பல் மனிதர்களையும், வாகனங்களையும் சரக்குகளையும் கடத்தியபடியே இருக்கிறது. கப்பலில் இணைத்திருக்கும் இரும்புப் பாலம் பெரிய சக்கரங்களால் இயக்கி இறக்கப்பட அக்கரையிலிருந்து வந்த மனிதர்களும் வண்டிகளும், இறங்குகின்றன.


ஸ்பீட் போட் சாகஸம் செய்யும் சில கடலோடிகள்...அதற்கு முன் நாங்களும் சளைத்தவர்களல்ல என்று நிற்கும் சிறு படகுகள்...


அக்கரையிலிருந்து வந்த மனிதர்களும் வண்டிகளும் இறங்குவதற்குள் இக்கரையிலிருக்கும் மனிதர்களுக்கும் வாகனங்களும் பொறுமை இல்லை.  வேகவேகமாக உள்ளே பயணிக்கிறார்கள் – சிலர் மட்டும் கப்பலுக்குள் மேற்கூரை இருக்கும் பகுதிக்குச் செல்ல மற்றவர்கள் கப்பலின் ஓரங்களில் நின்று கொள்ள வேண்டும். நடுவே கொஞ்சம் கொஞ்சமாக வாகனங்கள் ஏறுகின்றன – வாகனங்களில் வந்த பயணிகளும் இறங்கி கப்பலின் ஓரங்களில் தான் நிற்க வேண்டும்! எரிபொருள் கொண்டு வரும் லாரியைக் கூட இந்தக் கப்பலில் ஏற்றி விடுகிறார்கள் என்றால், எத்தனை எடையைத் தாங்கும் கப்பலாக இருக்க வேண்டும் என்பது உங்களுக்குப் புரியும். கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் அனைவரும் கப்பலுக்குள் ஏறிக் கொண்டு, வாகனங்களும் மேலே ஏற்றிக் கொண்ட பிறகு, இரும்புப் பாலம் மீண்டும் தூக்கப் படுகிறது.  பார்க்கும்போது, சக்கரங்களைச் சுழற்றி மிகச் சுலபமாக தூக்கிவிடுவது போலத் தெரிந்தாலும் அந்தச் சக்கரங்களைச் சுழற்றுவது அப்படி ஒன்றும் எளிதல்ல!பெரிய லாரியையும் நான் தாங்குவேன் எனச் சொல்லும் கப்பல்...கரங்களுக்காகக் காத்திருக்கும் வளையல்கள்!
 

டீசல் மூலம் இயக்கப்படும் இந்தக் கப்பலில் செல்லும்போது ஏதோ மிதந்து கொண்டு இருக்கும் உணர்வு தான் நமக்கு. பயணிக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல் இருப்பது போல இருந்தாலும், நாமும் கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். கூடவே வாகனங்களும்.  இப்படிப் பயணிக்கும் நமக்கும் வாகனத்திற்குமான கட்டணம் வசூலிக்க நம் பேருந்து நடத்துனர் போலவே ஒருவர் கைப்பையுடனும் பயணச் சீட்டுடனும் கப்பலில் இருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே புகுந்து புறப்பட்டு வருகிறார்! அவரிடம் பயணச் சீட்டு வாங்கிக் கொள்ள வேண்டும் – முன்னரே வாகன ஓட்டுனர் மார்ஷல் எங்களிடம் பயணச் சீட்டு கேட்கும்போது – மார்ஷல் உடன்  வந்திருக்கிறோம் என்று சொல்லச் சொன்னார்.  கட்டணம் ஒன்றும் அதிகமில்லை ஜெண்டில்மேன் – ஒருவருக்கு பத்து ரூபாய் மட்டும்!  கேரளாவின் காலடி அருகே இப்படி ஒரு படகுப் பயணத்தில் ஒரு ரூபாய் கொடுத்தது இன்னமும் நினைவில்.  இங்கே பத்து ரூபாய்.  வாகனங்களுக்கு சற்று அதிகம்.  முப்பது ரூபாய்/ஐம்பது ரூபாய் என வாகனத்திற்குத் தகுந்த மாதிரி கட்டணம்.


வாகனங்களுடம் பயணிக்கும் கப்பல்....வேலை முடிந்து விட்டால் ஒதுக்கி விடுவார்கள் எனச் சொல்லும் படகுகள்...
 

போர்ட் Bப்ளேயரிலிருந்து டிக்லிபூர் வரை செல்லும் பேருந்துகள், இந்த மாதிரி நடுநடுவே இரண்டு அல்லது மூன்று முறை சாலையை விட்டு கப்பலுக்குள் புகுந்து பயணிக்க வேண்டியிருக்கும்.  எங்களிடம் நேரமும் காலமும் இல்லை என்பதால் இந்தப் பயணத்தில் அப்படி ஒரு பயணம் செல்ல வாய்க்கவில்லை. எல்லாம் சரியாக அமைந்தால், தற்போது உலகம் முழுவதும் இருக்கும் இந்த கொரோனா சூழல் சரியானால் மீண்டும் ஒரு முறை அந்தமானில் பார்க்காத சில இடங்கள் – டிக்லிபூர், பேரட் தீவு, எலிஃபண்ட் தீவு, பாம்புத் தீவு போன்ற இடங்களைப் பார்க்க ஆவலுண்டு! பார்க்கலாம் எப்பொழுது அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என! ஆசைக்கு அளவே இல்லை என்பது உண்மை தானே! சரி இந்தப் பயணத்திற்கு வருவோம் – கப்பலில் பயணிக்கும்போது சுற்றிலும் பார்க்கிறோம் – இயற்கை, இயற்கை எங்கே பார்த்தாலும் இயற்கையின் பசுமையும், கடல் நீரின் நீலமும்!  ஒரு வழியாக கப்பல் இக்கரையிலிருந்து அக்கரையை அடைந்தது.  மீண்டும் பாலம் இறக்கப்பட, முதலில் வாகனங்கள் கப்பலிலிருந்து இறங்குகின்றன.  பிறகு மக்கள் இறங்குகிறார்கள்.


அந்தமான் அரசு பேருந்து...


என்னையும் ஒதுக்கி விட்டார்கள் - வயதாகிவிட்டதாம்! எனச் சொல்கிறதோ இந்தப் படகு!

அந்த வாகனங்களில் அரசுப் பேருந்தும் – போர்ட் Bப்ளேயரிலிருந்து டிக்லிபூர் செல்லும் பேருந்துகள் – உண்டு! அதில் பயணிப்பவர்கள் ஓட்டமாக ஓடி கரையில் சென்று நின்ற பேருந்தில் அமர்ந்து கொண்டு மேலே பயணிக்கிறார்கள்.  நாங்கள் இறங்கியதும், குழுவினர் அனைவரையும் ஒரு ஓரமாக நிற்கச் சொல்லி விட்டு, நாங்களும் ஒரு இடத்தினை நோக்கி ஓடுகிறோம்! எதற்காக?  கப்பல் நின்றவுடன் ஓடுங்கள் என என்னிடமும் நண்பர் மணியிடமும் சொல்லி  இருந்தார் எங்கள் ஓட்டுனர் மார்ஷல்!  எதற்காக அந்த ஓட்டம்?  அதையும் சொல்கிறேன்.  அப்பொழுது தான் கப்பல் பயணம் முடித்து இறங்கி இருக்கிறோம் என்றாலும் அடுத்து இன்னுமொரு பயணம் – அதே மாதிரி நீர்வழிப் பாதையில் மோட்டார் பொருத்திய படகுகளில் பயணிக்கப் போகிறோம் – சுமார் முப்பது நிமிட பயணம் அது!


இதோ வந்துட்டேன் - கரையை நோக்கி வரும் கப்பல்...
 

சுற்றுலாப் பயணிகள் அதிகம் இருந்தால் அந்தப் படகுகள் நமக்குக் கிடைப்பது கடினம்! குறைவான படகுகளே இருக்கின்றன என்பதால் – First Come First Serve! வேகமாக ஓடி அந்தப் படகுப் பயணத்திற்கான சீட்டுகளை வாங்க வேண்டும் – மார்ஷல் ஓடிய ஓட்டத்திற்கு இணையாக நானும் மணியும் ஓடினோம்! ஓடினோம் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினோம் எனும்படியாக ஓட்டம்! நானும் நண்பர் மணியும் மூன்றாவது நான்காவது இடங்களில் இருந்தோம்! எங்களுக்கு முன்னர் சில ஓட்டுனர்கள்! ஆனாலும் பிரச்சனையில்லை. இரண்டு படகுகளுக்கான சீட்டுகளை வாங்கிக் கொண்டோம்.  படகு ஓட்டும் இளைஞர்கள் எங்களை ஒரு மரத்தின் கீழே நிற்கச் சொல்லி விட்டு, படகை எடுத்து வரச் சென்றார்கள்.  பிறகு என்ன நடந்தது, எங்கே சென்றோம் போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

 

நண்பர்களே! இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி

32 கருத்துகள்:

 1. ஓட்டமாய் ஓடி இடம் பிடிபபது த்ரில்லான அனுபவம்.  ஓடமுடிபவர்களை ஓடவிட்டு விட்டு மற்றவர்கள் நிதானமாகச் செல்லலாம்.

  படங்கள் அருமை.  கப்பலில் வாகனங்கள் சிங்கப்பூர் நினைவு வருகிறது!  நான் போனதில்லை.  நினைத்தாலே இனிக்கும் படத்தில் பார்த்திருக்கிறேன்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓட முடியாதவர்கள் நிதானமாகச் செல்லலாம்! :) படகு கிடைக்கும் வரை காத்திருக்கலாம்!

   படங்கள் - மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   சிங்கப்பூர் - நானும் சென்றதில்லை! இந்தியாவிலேயே பார்க்காத இடங்கள் நிறைய உண்டு! வெளிநாட்டுப் பயணம் இதுவரை அமையவில்லை.

   நீக்கு
 2. விவரிப்பு வழக்கம் போல அருமை ஜி
  பொன்மொழியில் நல்லதொரு அர்த்தம்.
  படங்கள் ஸூப்பர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவில் விவரிப்பு, பொன்மொழி மற்றும் படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   நீக்கு
 3. // வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினோம் // ஹா... ஹா...

  பார்க்காத இடங்கள் கூட ஒரு பட்டியல் இருக்கும் போல... (பாம்புத் தீவு - !!!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்க்காத இடங்கள் - ஆமாம் - பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன தனபாலன். எல்லாவற்றையும் ஒரே பயணத்தில் பார்க்க முடியாது.

   நீக்கு
 4. சுவையான அணுபவம். மும்பையிலிருந்து டாப்போலி செல்லும் வழியில் இதே போன்ற சிறு கடற்பகுதியைக் கடக்க நாங்கள் பயனித்த பேருந்தையும் சுமந்துகொண்டு ஒரு கப்பல் சென்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் அனுபவத்தினையும் இங்கே பகிர்ந்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

   நீக்கு
 5. பார்க்காத இடங்களை குறிப்பிட்டிருந்தீர்கள் அதையும் எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது.

  பதிலளிநீக்கு
 6. பார்க்காத இடங்கள் - பார்த்துடலாம்! ஒரு ட்ரிப் அடிச்சுடலாம் - சூழல் சரியாகட்டும்!

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரங்கராஜன் ஜி.

  பதிலளிநீக்கு
 7. //கொரோனா சூழல் சரியானால் மீண்டும் ஒரு முறை அந்தமானில் பார்க்காத சில இடங்கள் – டிக்லிபூர், பேரட் தீவு, எலிஃபண்ட் தீவு, பாம்புத் தீவு போன்ற இடங்களைப் பார்க்க ஆவலுண்டு//

  கொரோனா இல்லை என்ற நிலை வரும். நீங்கள் ஆசைபட்ட இடங்களை மீண்டும் அந்தமான் போய் பார்த்து வந்து எங்களுக்கு சொல்ல வாழ்த்துக்கள்.

  எங்கும் இயற்கை எதிலும் இயற்கை காண ஆயிரம் கண் கோடிதான் வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாய்ப்பு கிடைக்கும் போது சென்று வர எண்ணம் உண்டு கோமதிம்மா...

   இயற்கை அழகினை எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிக்கலாமே!

   நீக்கு
 8. நாம் பயணித்த வாகனங்களுடன் கப்பலில் பயணிப்பது நல்ல அனுபவம் ... இதுபோலவே இங்கிலாந்தில் கடலுக்குள்ளே அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை வழியாக பயணிக்கும் தொடர்வண்டியில் நாம் பயணித்த வாகனங்களுடன் பயணிக்கலாம் என்பதனை அண்மையில் ஒரு youtube காணொளி மூலம் அறிந்தேன் ... அந்த தொடர்வண்டியின் பிரமாண்டத்தையும் கண்டு வியந்தேன் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கிலாந்தில் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை வழியாக பயணிக்கும் தொடர்வண்டியில் நாம் பயணித்த வாகனங்களுடன் பயணிக்கலாம்! மேலதிகத் தகவலுக்கு நன்றி சிவா. இணையத்தில் தேடிப் பார்க்கிறேன்.

   நீக்கு
  2. நண்பரே கேழே உள்ள url ல் சென்று பாருங்கள் . அதில் அந்த சுரங்கப்பாதையை பற்றியும் அந்த பிரமாண்ட தொடர்வண்டியையும் காணலாம் ... நன்றி !! . https://www.youtube.com/watch?v=ixb7puiIRwI

   நீக்கு
  3. நீங்கள் தந்த சுட்டி வழி காணொளியைக் கண்டு ரசித்தேன் சிவா. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   நீக்கு
 9. ஒதுக்கிவிட்டார்கள், வயதாகிவிட்டதாம் - ரசித்த படம்...... புதியதற்கு இருக்கும் பவுசு, ரொம்ப நாள்பட்ட, உழைத்த பொருட்களுக்கு இல்லை போலிருக்கு. அல்லது ஏதேனும் பிரச்சனை வந்தால், அத்தனை வருடங்கள் உழைத்ததை மறந்து தூக்கிக் கடாசிவிடுவோம் போலிருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாள்பட உழைத்த மனிதர்களுக்கே கூட ஒதுக்கப்படுவது நடப்பது தான் எனும்போது பொருட்கள் ஒதுக்கப்படுவது இயல்பு தான். ஆனாலும் கொஞ்சம் சோகம் ததும்புவது போல தெரிந்தது எனக்கு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 10. 'ஓடினோம் ஓடினோம் ....' சபாஸ் வெற்றி அடைந்து விட்டீர்கள் அளவில்லாத மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

  பயணங்கள் ஓய்வதில்லை. மனம் போல இனிய பயணங்கள் அமையட்டும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சபாஷ் வெற்றி! :)

   மனம் போல் பயணங்கள் அமையட்டும் - நன்றி மாதேவி.

   நீக்கு
 11. எரிபொருள் கொண்டு வரும் லாரியைக் கூட இந்தக் கப்பலில் ஏற்றி விடுகிறார்கள்....வாவ்

  ஓடினோம் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினோம் எனும்படியாக ஓட்டம்....படகில் பயணம் என்றால் சும்மாவா ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படகில் பயணம் என்றால் சும்மாவா? :) அதே தான் அனுப்ரேம் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. அன்பு வெங்கட், அருமையான வாசகம் யோசிக்க வைக்கிறது.
  நீங்கள் ஓடிய ஓட்டம் உடலுக்கு நல்லது. ஃபெர்ரீஸ் பார்க்க அருமையாக இருக்கிறது.
  மகத்தான சேவை.

  படங்கள் எல்லாமே விறுவிறுப்பான வாழ்க்கையை
  காண்பிக்கின்றன. ஒதுக்கிய படகுகளா, ஒதுங்கிய படகுகளா:)

  எல்லாவற்றுக்கும் ஏதாவது காரணம் எப்போதும் உண்டு.
  அதிலேயும் இனிமை உண்டு. அசைபோடும்
  எண்ணங்களோடு அசைந்தாடும் படகுகள் அமைதியாக இருக்கும்.
  பயாங்கள் சிறக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வல்லிம்மா, வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   ஓட்டம் நல்லது! ஆமாம்.

   படங்கள் வழி சொல்ல வந்ததை நீங்களும் ரசித்திருக்கிறீர்கள். ஒதுக்கிய படகுகளே அதிகம்.

   பயணங்கள் சிறக்கட்டும் - நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 13. படங்கள் தெளிவாக உள்ளது. கடற்கரையோரம் உள்ள ஊர்கள், தீவுகள் போன்ற இடங்களில் ஓடும் பேரூந்துகள் அனைத்தும் டப்பா போலவே உள்ளது. அந்தமான் பயணம் நீண்ட நாள் கனவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜோதிஜி.

   பேருந்துகள் - டப்பா போல! நம் தமிழகத்தின் பேருந்துகள் பார்த்த பிறகு பல மாநிலப் பேருந்துகள் டப்பா தான். குறிப்பாக அரசுப் பேருந்துகள்.

   அந்தமான் பயணம் - உங்களுக்கும் விரைவில் அமையட்டும்.

   நீக்கு
 14. நாம் பயணித்த வாகனங்களுடன் கப்பலில் பயணிப்பது நல்ல அனுபவம் ... இதுபோலவே இங்கிலாந்தில் கடலுக்குள்ளே அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை வழியாக பயணிக்கும் தொடர்வண்டியில் நாம் பயணித்த வாகனங்களுடன் பயணிக்கும் அனுபவம் பற்றிய you tube காணொளி url கேழே ... நன்றி !
  https://www.youtube.com/watch?v=ixb7puiIRwI

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சுட்டி தந்த அன்றே பார்த்து விட்டேன் சிவா. நன்றாக இருந்தது காணொளி. நல்ல அனுபவம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   நீக்கு
 15. எப்படி சார் 47.5 டிகிரி சூட்டை சமாளிக்கிறீர்கள்?அதுவும் இந்த வெயிலில் அலுவலகத்துக்கு 6 கி மி நடந்து செல்கிறீர்கள்?
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெயில் - கடந்த 29 வருடங்களுக்கும் மேலாக தில்லி வாசம் - பழகி விட்டது வெயிலும் குளிரும்!

   இந்த வெயிலில் நடை - இல்லை - லாக் டவுன் ஆரம்பித்த சில நாட்கள் மட்டுமே நடை. பிறகு அலுவலகத்திலிருந்து வாகனம் தந்து விட்டார்கள். இப்போது பேருந்துகள்/ஆட்டோக்கள்/டேக்ஸிகளும் ஓடுகின்றன. அதனால் பிரச்சனை இல்லை ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....