வெள்ளி, 8 மே, 2020

அந்தமானின் அழகு – காலை உணவு – உழைப்பாளி…

லக்ஷ்மண்பூர் கடற்கரையில் சூரியோதயம்...

அந்தமானின் அழகு – பகுதி 28


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

ஆசை ஒருவனை அழிக்கும். நாம் மற்றவரின் மேல் செலுத்தும் அன்பு நம்மை வளர்க்கும். தேவையற்ற ஆசைகளால் துன்பம் வருமே தவிர நன்மை விளையாது – திருமுருக கிருபானந்த வாரியார்.



லக்ஷ்மண்பூர் கடற்கரையில் கடல்வாழ் உயிரினம் ஒன்று...



லக்ஷ்மண்பூர் கடற்கரையில் காலை நேரக் கடல்...



லக்ஷ்மண்பூர் கடற்கரையில் இன்னும் ஒரு உயிரினம்...


சீதாபூர் கடற்கரையில் சூரிய உதயம் காட்சிகளை ரசித்து, எங்கள் தங்குமிடத்தின் பின்னர் இருந்த லக்ஷ்மண்பூர் கடற்கரையிலும் சில காட்சிகளை பார்த்து ரசித்ததை சென்ற பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன்.  கடற்கரையிலிருந்து திரும்பிய பின்னர் என்ன செய்தோம், எங்கே சென்றோம், என்ன சாப்பிட்டோம் போன்ற சில விஷயங்களையும், அங்கே சந்தித்த சில உழைப்பாளிகள் பற்றிய தகவல்களையும் இந்தப் பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.  காலை நேரம் எங்களுடன் சீதாபூர் கடற்கரைக்கு வராத நண்பர்கள் சற்று நேரம் அதிகமாகவே உறங்கி எழுந்தவர்கள், அப்படியே கொஞ்சம் வெளியே நடந்து வரவும், கடைகள் ஏதாவது இருந்தால் தேநீர் அருந்தவும் செய்யலாம் என நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன்.  தங்குமிடத்திலேயே தேநீர் தயாரிக்கும் வசதிகள் இருந்தாலும், காலார கொஞ்சம் நடந்து தேநீர் அருந்துவதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது இல்லையா?  நாங்களும் காட்சிகளை ரசித்தபடி – சாலை ஓரங்களில் வளர்ந்திருந்த வித்தியாச செடிகள், பூக்கள் பார்த்தபடி நடந்தோம். 


தங்குமிடத்தின் நுழைவாயில்......


தங்குமிடத்தின் அருகே ஒரு அழகிய தென்னந்தோப்பு.  தோப்பில் சில அறைகள் கட்டி விட்டிருக்கிறார்கள். கூடவே வாசல் பக்கத்தில் ஒரு சிறு கடை. அழகாக இருந்தது.  அங்கே தேநீர் இருக்கவே, தேநீர் அருந்தலாம் என சென்றோம்.  கடை, தோப்பு, தங்குமிடம் ஆகிய அனைத்துக்கும் சொந்தக்காரர் ஒரு தமிழர்.  புதுக்கோட்டை மாநிலத்தின் கீழ் வரும் திருமயம் பகுதியிலிருந்து பல வருடங்களுக்கு முன்னதாகவே அந்தமான் தீவுகளில் சென்று சேர்ந்தவர். இப்போது இந்தத் தோப்பு, தங்குமிடம், கடை என வைத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர்கள்.  கடையில் மதிய உணவும் கிடைக்குமாம் – மீன்பிடித்து சமைத்துத் தருவோம் என்று சொல்லிக் கொண்டிருந்தார் – நாங்கள் கடையின் பக்கத்தில் இருந்த இடத்தில் அமர்ந்திருக்க, பின்புறம் மீன்களைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார் ஒரு இளைஞர்.  தேநீருக்காக காத்திருந்த வேளையில் கடைப் பெண்மணி எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.  அதில் தெரிந்து கொண்ட விஷயங்கள் தான் இவை.  தேநீர் அருந்திய பிறகு – தேநீருக்கான விலை அதே பத்து ரூபாய் தான் – அங்கிருந்து தங்குமிடம் நோக்கி நகர்ந்தோம்.


சாலையோரச் செடிகளில்...


சாலையோரச் செடிகளில்...


குழுவினர் அனைவரும் தயாராக வேண்டும். அன்றைக்கு ஷாகீத் த்வீத் தீவினை விட்டு புறப்பட வேண்டும் – மாலை தான் என்றாலும், காலையிலேயே எங்கள் உடைமைகளைச் சரி செய்து தங்குமிடத்தின் வரவேற்பறையில் வைத்து விட்டால் நாங்கள் தீவில் சுற்றி முடித்து, கப்பல் புறப்படும் இடத்திற்கு நேரே சென்று சேர, எங்கள் உடைமைகளை சுற்றுலாவில் எங்களை அழைத்துச் சென்ற நிறுவனத்தினர் நேரடியாக எடுத்து வந்து விடுவார்கள்.  என்னிடம் இருந்தது ஒரே ஒரு Back pack! கையில் கேமரா பையை மட்டும் வைத்துக் கொண்டு அதனை தங்குமிடத்தின் வரவேற்பரையில் வைத்து விட்டு அங்கே இருந்த ஊழியர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன்.  காலை உணவு தயாராக இருப்பது தெரிய குழுவினரிடம் தெரிவித்து விட்டு அனைவரும் உணவு சாப்பிட தங்குமிடத்தில் அதற்கான இடத்திற்கு சென்று சேர்ந்தோம். 

சாலையோரச் செடிகளில்...


காலை உணவுக்கான மெனு:  Corn Flakes with hot milk, Bread Slices with Jam and Butter, வேக வைத்த முட்டை, பூரி-சப்ஜி, சேமியா உப்புமா, காஃபி/டீ, மற்றும் பழ ரசம்!  பெரிய பட்டியலாக இருக்கிறதே என நினைக்காதீர்கள் – எல்லாவற்றையும் சாப்பிட முடியுமா என்ன – நிச்சயம் என்னால் முடியாது. நான் எடுத்துக் கொண்டது ஒரு கப் Corn Flakes/பால், நான்கு Toasted Bread Slice with Butter/Jam, Coffee! அம்புட்டுதேன்!  எல்லோரும் என்னை மாதிரியே இருப்பார்களா என்ன?  நாங்கள் அங்கே இருந்தபோது ஒரு பெங்காலி குடும்பத்தினரும் வந்து சேர்ந்தார்கள். அடித்து ஆடினார்கள்.  ஒன்றையும் விட வில்லை – அதுவும் ஏகப்பட்ட அளவுக்கு சாப்பிட்டதோடு, சந்தடி சாக்கில் கைப்பையில் வைத்திருந்த சில்வர் ஃபாயிலில் கொஞ்சம் சுருட்டி வைத்துக் கொண்டார்கள்.  அவர்கள் Bread சாப்பிட எடுத்துக் கொண்ட Butter அளவு மலைக்க வைத்தது – ஆம் மலை போல தட்டில் குவித்து எடுத்து வந்தார்கள் – ரிசார்ட் ஊழியர்கள் பிரமித்துப் போய், திகைத்து நின்றதைப் பார்க்க முடிந்தது.  ஒன்றையும் விடவில்லை.  எல்லா வகை உணவையும் ஒரே நேரத்தில் அவர்களால்  சாப்பிட முடிகிறதே  என்ற எண்ணத்துடன் நான் என் காலை உணவை முடித்துக் கொண்டேன்.


இது என்னவோ - தங்குமிடத்தில் ஒரு செடியில்...

விரைவில் நான் எழுந்து விட, என்னை ஏளனமாகப் பார்ப்பது போல ஒரு ஃப்லீங்க் எனக்கு – அட இத்தனூண்டு சாப்பிட்டு எழுந்துட்டியா, சரியான ஏமாளி நீ என்று நினைத்திருப்பார்களோ? ஹாஹா.  என்ன இருந்தாலும், நமக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தானே சாப்பிட முடியும்! அவர்களால் முடிந்ததை அவர்கள் சாப்பிடட்டும் என நினைத்துக் கொண்டு வெளியே வந்தேன்.  தங்குமிடத்தில் சில பல நிழற்படங்களை எடுத்துக் கொண்டு அங்கே இருந்த ஊழியர்களிடம் பேச்சுக் கொடுத்தேன்.  தங்குமிடத்தில் ஒரு காவலர் – தனியார் நிறுவனத்திலிருந்து இங்கே வேலைக்கு வந்திருப்பவர் – தமிழர் என்பதையும் சொல்லி விடுகிறேன்.  அவருடைய மூதாதையர்களும் மதுரை/திருநெல்வேலி பக்கத்திலிருந்து தான் இங்கே வந்து இங்கேயே தங்கிவிட்டார்களாம்.  நல்ல உயரம், சரியான அளவுக்கு உடம்பு என விரைப்பாக நின்று கொண்டிருந்தார்.  அவரிடம் பேசியதில் இந்திய ராணுவத்தில் சேர்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பது தெரிந்தது. Physical எல்லாம் இரண்டு மூன்று முறை clear செய்து விட்டாலும், பரிட்சையில் வெல்ல முடியவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  அவரிடம் நன்கு தயார் செய்து விரைவில் வெல்லுங்கள் என வாழ்த்துகளையும்  சொல்லி உற்சாகப் படுத்தினேன். 

தங்குமிடத்தில் பப்பாளி...


குழுவினர்கள் ஒவ்வொருவராக அவர்களது காலை உணவை முடித்துக் கொண்டு திரும்ப, அறைகளை காலி செய்து படகுத் துறைக்கு எடுத்து வர வேண்டிய உடைமைகளை வரவேற்பறையில் ஒரே இடத்தில் வைத்து அவற்றை எண்ணி வைத்துக் கொண்டோம்.  நிறைய நிழற்பட செஷன்களும் நடந்து கொண்டிருந்தது – காலை நேரத்தில் உற்சாகமாக புறப்பட்டு, ஃப்ரெஷ்-ஆக இருக்கும் நேரத்தில் படம் எடுப்பது எல்லோருக்கும் பிடித்தமான விஷயமாயிற்றே! குடும்பம் குடும்பமாக, குழுவாக, பெண்கள் மட்டும், ஆண்கள் மட்டும், சிறியவர்கள் மட்டும் என தனித்தனியாக நிழற்பட செஷன்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது. அங்கே இருந்த உழைப்பாளிகளுடன் நானும் நண்பர் மணியும் சில படங்கள் எடுத்துக் கொண்டோம்.  எங்கள் குழுவினர் அனைவரையும் சேர்த்து அங்கே இருந்த காவலர் படம் எடுத்துத் தர முன்வந்தார்.  அதுவும் நல்லது தானே – இப்படி குழுவாக இருக்கும்போது யாராவது ஒருவர் படம் எடுத்தால் அவர் மட்டும் படத்தில் இருக்க மாட்டார் – இந்த மாதிரி குழுவில் இல்லாத யாராவது படம் எடுத்தால் தான் உண்டு இல்லையா.  என்னுடைய கேமராவிலும், நண்பரின் கேமராவிலும் அப்படி சில படங்கள் எடுத்துத் தந்தார். 

தங்குமிடத்தின் உழைப்பாளிகள்...


இப்படியாக நிழற்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் எங்களுக்கான வாகனங்கள் வந்து சேர்ந்தன. அந்த தங்குமிடத்தில் இருந்த உழைப்பாளிகள் – தமிழ் காவலர் உட்பட அனைவருக்கும் எங்களால் இயன்ற அன்பளிப்பினை அளித்து, அவர்களுக்கு நன்றி சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம்.  இந்த மாதிரி அன்பளிப்பு அவர்களுக்குக் கொடுப்பதில் நமக்கும் ஒரு மகிழ்ச்சி – அவர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் அது பயன்படுமே என்பதால் இப்படிக் கொடுப்பது வழக்கம் தான்.  மூன்று வாகனங்களில் எங்களது அன்றைய பயணம் இலக்கினை நோக்கிச் சென்றோம் – அதுவும் ஒரு கடற்கரைப் பகுதி தான். அந்தக் கடற்கரைப் பகுதியில் நாங்கள் என்ன செய்தோம், எப்படி எங்கள் பொழுதினை உற்சாகமாகச் செலவழித்தோம் போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  இந்தப் பதிவில் சொன்ன விஷயங்கள், பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

34 கருத்துகள்:

  1. மனசே இல்லாமல்தான் புறப்பட்டிருப்பீர்கள். வாசகம் நன்று. பெங்காலிக்குடும்பத்துக்குக் கூச்சம் என்கிற வார்த்தையே தெரியாது போல..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அந்த இடத்திலிருந்து புறப்பட மனதே இல்லை ஸ்ரீராம்.

      கூச்சம் - ஹாஹா... அவர்களுக்கு எல்லா இடமும் வீடு போலவே தான் போல! ருசித்துச் சாப்பிட வேண்டியது தான் - அதற்கு அளவே இல்லை எனும்போது தான் வித்தியாசமாகத் தெரிகிறது.

      நீக்கு
  2. வயிறு புடைக்க சாப்பிடுவதும்கூட இறைவன் கொடுத்த கொடுப்பினைதான் ஜி பொதுவாக பங்க்ஸ்'களுக்கு நாகரீகம் தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயிறு புடைக்க சாப்பிடுவதும் கூட இறைவன் கொடுத்த வரம் - உண்மை தான் கில்லர்ஜி. எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை.

      நீக்கு
  3. கடல்வாழ் உயிரினம் படத்தைப் பார்த்து, பஜ்ஜி என்று நினைத்து, இன்றைக்கு ஆதி வெங்கட் அவர்கள் எழுதியிருக்காங்கன்னு நினைத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

    உயிரினம், ப்ரெட் பஜ்ஜி மாதிரியே இருப்பதாகத் தெரிவது என் கண்ணுக்குத்தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் தான் நெல்லை, நான் முதலில் வெங்கட் எழுதியதை படிக்கும் முன் நினைத்தேன்.

      நீக்கு
    2. ஆகா.. ஆண்டவா.. இனி பஜ்ஜி சாப்பிடும் போதெல்லாம் இந்த நினைவு வரப்போகுதே...! ஆனாலும் உங்களுக்கு இந்த உதாரணம் எப்படித் தோன்றியது. நெல்லை சகோதரரே.. ஹா.ஹா.ஹா.

      சென்ற பகுதி படங்களிலும் இந்த உயிரினங்கள் கோதுமை/மைதா மாவு கரைத்த தோசையாய் பாறைகளில் பதிந்து படுத்திருந்தன என நான் ஏதாவது சொன்னேனா? (ஏதோ ஒரு பதிவில், மைதா கரைத்த தோசை உங்களுக்கு பிடிக்குமென நீங்கள் கூறியிருந்ததாய் நினைவு.:)) இந்த உயிரினங்களை பார்த்ததும் அது நினைவுக்கு வந்ததும் அன்றைய தினம் எனக்கும் அப்படித்தான் கண்ணுக்கு தெரிந்தன. ஹா.ஹா.ஹா.

      இப்படியெல்லாம் நாம் யோசிப்பது அந்த உயிரினங்களுக்கு தெரிந்தால், இனி மேல் கடலுக்குள்ளேயே பேசாமல் தவமாக கிடந்து விடலாம் என அதுவும் யோசிக்கும்.:)

      நீக்கு
    3. ஹாஹா... கடல்வாழ் உயிரினம் பஜ்ஜி போலத் தெரிந்ததா நெல்லைத் தமிழன் உங்களுக்கு? இது கால் முளைத்த உயிருள்ள பஜ்ஜி! எடுத்து கடித்தால் கடித்து விடலாம்! ஹாஹா...

      நீக்கு
    4. ஹாஹா... உங்களுக்கும் ப்ரெட் பஜ்ஜி/பகோடா போலத் தெரிந்ததா கோமதிம்மா... கால்களும் தெரிகிறதே முன்பக்கத்தில்! இனிமே ப்ரெட் பகோடா பார்த்தால் இந்த உயிரினம் நினைவுக்கு வரக்கூடும்.

      நீக்கு
    5. ஹாஹா.. இந்த உயிரினங்கள் கோதுமை/மைதா மாவு தோசை போலவும் ப்ரெட் பகோடா/பஜ்ஜி போலத் தோன்றுவது என்று இங்கே சொன்னதால் இனிமேல் அவற்றைச் சாப்பிடும்போதெல்லாம் இந்த கடல் வாழ் உயிரினங்கள் நினைவுக்கு வரப் போகிறது கமலா ஹரிஹரன் ஜி.

      கொஞ்சம் விட்டால் எடுத்துச் சாப்பிட்டு விடுவார்கள் என வெளியே வராமல் கடலுக்குள் இவை இருந்து விடலாம்! ஹாஹா...

      நீக்கு
    6. ஹாஹா... எல்லோருக்குமே உணவுப் பொருள் போலத் தெரிகிறதே இந்த கடல்வாழ் உயிரினம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

      நீக்கு
  4. //எல்லா வகை உணவையும் ஒரே நேரத்தில் அவர்களால் சாப்பிட முடிகிறதே // - இப்படி நினைப்பது தப்பல்லோ...... நான் ஹைதிராபாத் ஹோட்டல் ஒன்றில் தங்கியபோது, அங்கு ப்ரேக்ஃபாஸ்டுக்கு (இலவச பஃபே) வைத்திருந்ததைப் பார்த்து அசந்துவிட்டேன். 60 ஐட்டங்களாவது இருந்தன. ஃப்ரெஷ் ஜூஸ், உப்புமா, இட்லி, பூரி....கேசரி, இனிப்புக்கள், கேட்டால் உடனே செய்துதரும்படி வித வித தோசை என்று லிஸ்டுக்கு அளவே இல்லை. சரி... மதிய சாப்பாட்டை மறந்துவிடுவோம் (கோல்கொண்டா கோட்டை போவதால்) என்று நினைத்து நிறையவே சாப்பிட்டேன். அப்புறம் கோட்டையில் 12 மணி வெயிலில் ஏற, கிறுகிறுத்துப்போயிற்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சில உணவகங்களில் நிறையவே ஐட்டங்கள் வைத்திருப்பார்கள் - பஃபேயில். ஆனால் ஒரு அளவிற்கு தானே சாப்பிடமுடியும் - அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  5. படங்கள் நீங்கள் சொல்லாதவற்றை எல்லாம், தனியாக சிந்திக்க வைக்கின்றன ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் சொல்லாதவற்றையும் சொல்லும் - உண்மை தான் தனபாலன். படங்கள் உங்களை சிந்திக்க வைத்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  6. கடல்வாழ் உயிரினங்களின் உருவம் வியப்பினை அளிக்கின்றன ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி எத்தனை எத்தனை உருவங்கள் கடலுக்குள் - வியப்பு தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. >>> எல்லா வகை உணவையும் ஒரே நேரத்தில் அவர்களால் சாப்பிட முடிகிறதே!.. <<<

    அந்தக் கால பகாசுரர்கள் இந்தக் காலத்திலும் உள்ளனர்..
    நானும் இங்கே நேரில் கண்டிருக்கிறேன்...

    இப்படியான கொடுமைகளால் தான் அவர்கள் இருக்கும் பக்கத்துக்கே செல்வதில்லை...

    பெங்காலிக் குடும்பத்தினர் என்று சொல்லி விட்டீர்கள்...98% அவர்களுக்கு இவர்களும் நெருக்கமே..

    மோர் குடித்து - அது இரைப்பையை அடையும் முன் - தேநீர் குடிக்கும் ஆட்களைக் கண்டதுண்டா!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் காலத்திலும் பகாசுரர்கள் - உண்மை தான். அவர்களால் முடிகிறதே. நம்மால் நிச்சயம் இப்படிச் சாப்பிட முடியாது.

      மோர் குடித்து இரைப்பையை அடையும் முன் தேநீர் - அடடா... இப்படியுமா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  8. கடற்கரைபடங்கள், உயிரினங்கள், சாலையோர செடிகள், தங்கும் இடத்து செடிகள் , மரம் எல்லாம் அழகு. தங்கும் இடத்தின் படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      நீக்கு
  9. அந்தமான் படங்கள் மிக அருமை. ரொட்டித்துண்டு போல இருக்கும் அந்தப் பூச்சி ரொட்டியை விழுங்கி இருக்குமோ.
    எல்லாப் படங்களுமே என்னவோ செய்தியைச் சொல்கின்றன.
    இலவச ப்ரேக்ஃபஸ்ட் என்றால் மேய்பவர்களை நிறையப் பார்த்துவிட்டேன்.
    நம்மால் முடியாது.
    இதே வெண்ணெய் முழுங்கி மகாதேவங்களும் தேவிகளும்.(இந்தியர்களே)
    நம்மைக் கூச வைப்பார்கள்.
    என்ன செய்யலாம்:(
    ஏதோ ஒன்று உங்களைத் தயங்க வைப்பது தெரிகிறது. நானே அங்கிர்ந்து
    கிளம்புவது போல ஒரு சோகம்.

    அந்தத் தமிழ் வீரருக்கு வாழ்த்துகள். நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தமான் படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

      ரொட்டி விழுங்கிய பூச்சி - ஹாஹா... நல்ல கற்பனை.

      வெண்ணெய் முழுங்கி மஹாதேவர்கள்/தேவிகள் - ஹாஹா..

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வாசகம் நன்று. ஆசைகளை அது துன்பமென தெரிந்தும் முற்றிலும் அழிக்கத்தான் முடியவில்லை. ஆனால் முயன்று கொண்டுதான் இருக்கிறோம். கடவுள் துணையுடன் விரைவில் வெல்ல வேண்டும்.

    சாலையோர படங்கள், கடல்வாழ் ஜந்துக்கள் படங்கள், ஏனைய விபரங்கள் அனைத்தும் அருமை. அங்கு சென்று தங்கள் உழைப்பால் உயர்ந்திருக்கும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களுக்கு வாழ்த்துக்கள். அந்த தமிழக வீரரின் கனவும் பலிக்கட்டும். உழைப்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அங்கிருந்து கிளம்பும் முன் அவர்களுக்கு அன்பளிப்பாக நீங்கள் அனைவரும் பணம் தந்தது மகிழ்வான விஷயம். அந்தமான் பயணம் விறுவிறுப்பாக செல்கிறது. நாங்களும் உடன் பயணிக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவும் வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      அந்தமான் பயணத்தில் நீங்களும் உடன் பயணிப்பதற்கு நன்றி.

      நீக்கு
  11. இத்தனூன்டு என்ற வார்த்தையெல்லாம் வழக்கில் இல்லாமல் போய்விட்டது. நிச்சயம் நீங்க எழுதிய இந்த வார்த்தை கூகுள் தேடு பொறியில் உயிர் வாழும். அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தனூண்டு - பேச்சுத் தமிழில் இப்போதும் சொல்வதுண்டு ஜோதிஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. கடல் வாழ் உயிரினங்கள் பஜ்ஜி மைதா தோசை ஆகிவிட்டனவா:))ரசித்தேன்.

    உணவு முழுங்குபவர்கள் நினைத்தாலே சிரிப்பு தான் வருகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடல்வாழ் உயிரினங்கள் பஜ்ஜி மைதா தோசை ஆகிவிட்டன - ஹாஹா... ஆமாம் மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. முதல் படம் வெகு அழகு ..

    சாலையோரச் செடிகளில்...ஆஹா


    நமக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தானே சாப்பிட முடியும்....உண்மை உண்மை அதுவும் இப்படி சுற்றுலா செல்லும் போது பாதி அளவு உணவு தான் என்பது எங்கள் கொள்கை பசங்களுக்கும் அப்படியே ...

    ஆனால் எங்களுடன் சுற்றுலா வந்த ஒரு குடும்பம் என்ன இப்படி சாப்பிடற நல்லா சாப்பிடு ன்னு திணிச்சா விதம் பார்த்து நாங்கள் பயந்து ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.

      பயணத்தில்/சுற்றுலாவில் பாதி உணவு - நல்ல கொள்கை.

      சிலர் இப்படித்தான் - ஒன்றும் செய்வதற்கில்லை. நிறைய சாப்பிட்டு உடம்புக்கு ஒத்துக் கொள்ளாமல் போன சிலர் கண்டதுண்டு - அவர்களால் பயணத்தில் பிரச்சனைகளும், தடங்கல்களும் உண்டானது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. படங்கள் அனைத்தும் அருமை .... அந்த சாலையோர செடிகள் ... எங்கள் இடத்திலும் சாலையோரத்தில் நிறைய இருகின்றன ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் வெளியிட்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிவா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....