அந்தமானின் அழகு – பகுதி
34
முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20
பகுதி 21
பகுதி 22
பகுதி 23
பகுதி 24
பகுதி 25
பகுதி 26
பகுதி 27
பகுதி 28
பகுதி 29
பகுதி 30
பகுதி 31
பகுதி 32
பகுதி 33
அனைத்து நண்பர்களுக்கும்
இனிய காலை வணக்கம். இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
வாழ்க்கையில்
ஏற்படும் துன்பங்கள் சாலைப் பயணத்தின் போது எதிர்படும் குன்றுகள் போல் முதலில் கடக்க
முடியாதவை போல் தோன்றும் – நெருங்கிச் சென்றால் அப்படியொன்றும் பெரிதானதல்ல என்று தெரியும்
– சார்லஸ் கால்டன்.
சென்ற பகுதியில் மணநாள் கொண்ட்டாட்டம் பற்றியும் அடுத்த
நாள் பயணிக்கப் போகும் இடத்திற்கான ஏற்பாடுகள் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். சென்ற பகுதியையோ அதற்கு முந்தைய பகுதிகளையோ நீங்கள்
வாசிக்காமல் இருந்தால் மேலே உள்ள சுட்டிகள் மூலம் அந்தப் பகுதிகளை படித்து ரசிக்கலாம்! சரி இன்றைய பகுதிக்கு வரலாம். எங்கள் பயணத்தின் ஆறாம் நாள் – 12 நவம்பர் 2019
அன்று அதிகாலை இரண்டு மணிக்கே நான் எழுந்து வேலைகளை முடித்துக் கொண்டு தயாராகி விட்டேன். காலை மூன்று மணிக்கு எங்களுக்கான வாகனம் வரும் என்பதை
முந்தைய நாளிலேயே பயண ஏற்பாடு செய்திருந்த திரு சுமந்த் அவர்கள் எங்களுக்குச் சொல்லி
இருந்தார். குழுவினர் அனைவரையும் அதற்குள்
தயாராகி இருக்கும்படி முன்னிரவிலேயே சொல்லி இருந்தோம். அனைவரும் தயாராகி வருவதற்குள் Bபாராடாங்க் தீவிற்கு
எப்படிச் செல்ல வேண்டும், எத்தனை தொலைவு, என்னென்ன வசதிகள் என்பதை பார்த்து விடலாம். Bபாராடாங்க்
தீவு, யூனியன் பிரதேசத்தின் தலைநகர் போர்ட் Bப்ளேயரிலிருந்து சுமார் 101 கிலோமீட்டர்
தொலைவில் இருக்கிறது.
இந்தத் தீவிற்குச் செல்ல இரண்டு வழிகள் உண்டு – ஒன்று கடல்
வழி – கப்பல் மூலம் பயணிக்க வேண்டியிருக்கும் – இந்தத் தீவினையும் தாண்டிச் செல்லும்
கப்பல்களில் பயணித்து வழியில் இருக்கும் Bபாராடாங்க் தீவில் இறங்கிக் கொள்ளலாம் – ஆனால்
அதற்கு ஆகும் நேரம் அதிகமாக இருக்கும். உங்களிடம் நேரம் அதிகம் இருந்தால், இயற்கை எழிலை
ரசிக்க விரும்பினால் இந்த கப்பல் வழிப் பயணத்தினைத் தேர்ந்தெடுக்கலாம். இல்லை குறைவான
நேரத்தில் – ஒரே நாள் காலையில் சென்று மாலைக்குள் திரும்ப நினைத்தால் சாலை வழிப் பயணம்
மேற்கொள்வது நல்லது. அந்த சாலையின் பெயர் என்ன
தெரியுமா? Great Andaman Trunk Road! அந்தமான் என்றாலே Great என்று சொல்வது போல இருக்கிறது
அதன் பெயர். இந்தப் பயணத்தில் வழியில் சில
பகுதிகள் ஜார்வா/ஜராவா என அழைக்கப்படும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் என்பதால்
அந்தப் பகுதி வழியே பயணிக்க நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. போர்ட் Bப்ளேயரிலிருந்து Bபாராடாங்க் வரை செல்ல
பேருந்து வசதிகளும் உண்டு. தனியார் டாக்ஸிகள் வழியாகவும் பயணிக்க முடியும்.
பயணிக்கும் வழிகள் என்ன என்பதை மேலே பார்த்தோம். இனி எங்கள்
பயணத்தினை பார்க்கலாம் வாருங்கள். காலையில் சரியான நேரத்தில் எங்களுக்கான வாகனம் வந்து
சேர்ந்தது. குழுவில் இரண்டு பேர் மட்டும் –
நண்பர்களின் மகன்/மகள் அன்றைக்கு தில்லிக்கு/சென்னைக்கு திரும்ப வேண்டும் – அவர்களுக்கான
Airport Drop வசதிகளையும் திரு சுமந்த் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்து விட்டோம் –
முன்னிரவே. 16 பேர் கொண்ட குழு Bபாராடாங்க்
தீவிற்குச் செல்ல வாகனத்தில் புறப்பட்டோம். அந்த நாளில் எங்களுடன் பயணிக்கப் போவது
மார்ஷல் என்ற தமிழ் ஓட்டுனர். சிறப்பாக வாகனத்தினை
செலுத்தினார். கூடவே நல்ல சுறுசுறுப்பு. எங்களுக்குத் தேவையான அனைத்தையும் ஓடி ஓடி
பார்த்துக் கொண்டார். ஆங்காங்கே செய்ய வேண்டிய, பயணத்திற்கான வேலைகளையும் அவர் பார்த்துக்
கொண்டார் – என்ன வேலை என்பதை பிறகு சொல்கிறேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும்
அதிகமான பயணம் – சாலை வழிப் பயணம். அதன் பிறகு நாம் சென்று சேரும் இடம் ஜிர்காடாங்க்
சோதனைச் சாலை.
இந்த ஜிர்காடாங்க் வரை சென்று சேர்வதில் எந்தப் பிரச்சனையும்
இல்லை. நாள் முழுவதும் இங்கே பயணிக்க முடியும். அதன் பிறகு பயணிக்க சில கட்டுப்பாடுகள்
உண்டு. ஒவ்வொரு நாளும் நான்கே முறை தான் அடுத்த
49 கிலோமீட்டர் பாதையைக் கடப்பதற்கான வழியைத் திறப்பார்கள் – காலை 06.00 மணி,
09.00 மணி, மதியம் 12.00 மணி மற்றும் 02.30 மணி.
அதற்குள் நீங்கள் ஜிர்காடாங்க் பகுதிக்கு வந்து விட்டால் வனப் பகுதி வழியே
- ஜார்வா/ஜராவா பழங்குடியினர் இருக்கும் வனப்பகுதி வழியே பயணித்து நீலாம்பூர் ஜெட்டி
என அழைக்கப்படும் துறைமுகப் பகுதிக்கு வந்து சேர முடியும். சோதனைச் சாவடி திறக்கும்
நேரத்தில் தனி வாகனமாக செல்வது இயலாது. வரிசையாக
எல்லா வாகனங்களையும் அனுப்புவார்கள் – ஒரு Convoy –ஆக! முன்னும் பின்னும் அந்தமான்
வனத்துறையினரின் வாகனமும், அதிலே துப்பாக்கி ஏந்திய வனத்துறை ஊழியரும் வருவார்கள். என்னதான் பழங்குடி மக்கள் தற்போது ஹிந்தி மொழி பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டாலும்,
அவர்கள் மற்ற மனிதர்களைப் பார்த்து பயந்து விட்டால், எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தத்
தயங்க மாட்டார்கள் – அம்பு, வில் போன்றவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்துவார்கள் – அதிலும்
வனத்திலிருந்து பெறப்பட்ட விஷம் பூசப்பட்ட அம்புகள்! அவர்கள் பயப்படுவது துப்பாக்கிக்கு
மட்டுமே – இந்த விஷயங்களை ஓட்டுனர் மார்ஷல் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணித்து நாங்கள் ஜிர்காடாங்க்
சோதனைச் சாவடி அருகே வந்து சேர்ந்தபோது காலை ஐந்து மணி! சுமார் ஒரு மணி நேரத்திற்கும்
மேலாக காத்திருந்து அன்றைய நாள் முதல் முதலாக பாதை திறக்கும் நேரமான காலை 06.00 மணி
வரை அங்கே காத்திருக்க வேண்டும். இந்த இடத்தில்
ஒரு கோவிலும் நிறைய கடைகளும் இருக்கின்றன.
Pay and Use வாஷ்ரூம் வசதிகளும் உண்டு.
காலை ஐந்து மணிக்கு மேல் தான் அதை திறக்கிறார்கள். அதன் பிறகு எங்கேயும் வாகனத்தினை நிறுத்த முடியாது
– எந்த வசதியும் கிடையாது என்பதால் எல்லா வேலைகளையும் அங்கே முடித்துக் கொள்ள வேண்டும்!
கண்டிப்பாக வழியில் வண்டியை நிறுத்த விட மாட்டார்கள் என்பதை மனதில் நன்றாக கவனம் கொள்ளுங்கள்.
அதனால் வாஷ்ரூம் வேலைகளை அங்கேயே முடித்துக் கொள்வது அவசியம். அதைத் தவிர இந்த இடத்தில்
நிறைய கடைகள் இருப்பதைச் சொன்னேன் – அந்தக் கடைகளில் சுடச் சுட இட்லி, வடை, தேநீர்
போன்றவை கிடைக்கிறது. காலை உணவையும் அங்கே
முடித்துக் கொள்வது நல்லது. கடைகளில் பெரும்பாலானவை தமிழர்கள் நடத்தும் கடைகள்.
ஜிர்காடாங்க் பகுதியில் நான் பசுநேசனாக மாறிய பொழுதில்...
காலை ஆறு மணி வரை காத்திருக்க வேண்டும் – அந்த நேரத்தில்
என்ன செய்யலாம்? நாங்கள் காலையில் தங்குமிடத்திலிருந்து
புறப்படும் போதே எங்களுக்கான காலை உணவை – ப்ரெட் பட்டர் ஜாம் மற்றும் பிஸ்கெட்டுகள்
– Pack செய்து தந்து விட்டார் தங்குமிடச் சிப்பந்தி சாஜன். இரவு இரண்டு மணிக்கே எழுந்திருந்து புறப்பட்டதால்
ஐந்தரை மணிக்கே பசிக்க ஆரம்பித்து விட்டது. சரி அங்கே காத்திருக்கும் நேரத்திலேயே சாப்பிட்டு
விடலாம் என அனைவரும் சாப்பிட்டோம். பிறகு அந்தப்
பகுதியில் இருந்த ஒரு தமிழரின் கடைக்குச் சென்று
தேநீரும் – பால் பவுடர் கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் தான் – அங்கே சில மாடுகளும்
சுற்றிக் கொண்டிருந்ததை கவனித்தோம் – என்றாலும் பால் பவுடர் தேநீர் தான் கடைகளில் கிடைக்கிறது. சுடச்சுட வடையும் இட்லியும் தயாராகிக் கொண்டிருக்க,
ஒன்றிரண்டு வடைகளையும் சிலர் (தேவையானவர்கள்) மட்டும் உள்ளே தள்ளினோம்! சுவையாகவே இருந்தது வடை/இட்லி. தொட்டுக்கொள்ள சாம்பாரும்
சட்னியும் உண்டு! நாம் இங்கே சாப்பிட்டு, தேநீர் அருந்திய வேளையில் ஓட்டுனர் மார்ஷல்
ஓடிப் போய் எங்களுக்கான வேலை ஒன்றை முடித்து வந்தார்.
அந்த வேலை – சோதனைச் சாவடியில் எங்கள் குழுவில் உள்ள அனைவருடைய பெயர், வயது, ஆதார் எண் போன்றவை எழுதிய காகிதத்தினை, அவரது பெயரையும் தகவல்களையும் சேர்த்து எழுதிய பிறகு சோதனைச் சாவடியில் காண்பித்து அதற்குரிய சீல்களை பெற்றுக் கொண்டு, அனுமதி வாங்கி வர வேண்டிய வேலை! இந்த வேலை முடிந்த பிறகு தான் சோதனைச் சாவடி வாசல் திறந்த பின் வாகனங்களை அனுப்புவார்கள். சரியாக ஆறு மணிக்கு சோதனைச் சாவடி அருகே இருந்த வனத்துறைக்கான வாயில் திறக்கப்பட்டது! வாகனங்கள் புறப்படத் துவங்கின. அப்படியாக போர்ட் Bப்ளேயரிலிருந்து ஜிர்காடாங்க் சோதனைச் சாவடி வரையிலான பயணத்தினை இந்தப் பகுதியில் பார்த்தோம். பழங்குடி மக்கள் இருக்கும் வனப்பகுதியில் பயணித்த அனுபவம் பற்றிய தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். நண்பர்களே! இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
இந்தப் பகுதியில் புகைப்படங்கள் அதிகமாக இணைக்க முடியவில்லை - அதிகாலைப் பயணத்தில் படங்கள் எடுக்காததால்.
வழக்கம்போல வாசகம் நன்று.
பதிலளிநீக்குபழங்குடி மக்கள் பற்றிய சஸ்பென்ஸ் ஒத்திப்போடப்பட்டுள்ளது. நகத்தைக் கடித்துக் கொண்டு படித்து வந்தது இன்னும் காத்திருக்க வேண்டுமா என்று முடிந்திருக்கிறது!
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குநகத்தைக் கடித்துக் கொண்டு படித்து வந்தது - ஹாஹா.... வரும் திங்கள் அன்று பழங்குடிகளைச் சந்தித்து விடலாம்! காத்திருங்கள்.
பசுநேசனாக மாறிய பொழுதில் ஹா..ஹா.. கிராமராஜனா ? கையில் சொம்பு இல்லையே ஜி
பதிலளிநீக்குதி கிரேட் தேவகோட்டை போல அங்கும் தி கிரேட் அந்தமான் போலும்...
தொடர்கிறேன் ஜி...
கையில் சொம்பு இல்லையே ஜி! ஹாஹா... அதுவும் குறை தான் கில்லர்ஜி.
நீக்குதி கிரேட் அந்தமான் - தேவகோட்டை போலவே! மகிழ்ச்சி.
தொடர்ந்து பயணிப்போம்.
முதல் வரிசையிலேயே 6 மணிக்குச் சென்றுவிட்டீர்களா? கடைகள் சுத்தமாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்குபசுங்கன்றா காளையானயோசித்தேன்.
இன்னும் பழங்குடியினரைச் சந்திக்கவில்லையா? தொடர்கிறேன்.
ஆமாம் - நாளில் முதலாவதாக வாயில் திறக்கும் நேரத்திலேயே சென்று விட்டோம். அதுவே நல்லது - ஒரே நாளில் திரும்புவதாக இருந்தால்.
நீக்குபசுங்கன்றா - காளையா? நல்ல சந்தேகம் நெல்லைத் தமிழன்! :)
தொடர்ந்து பயணிப்போம்.
"பசுநேசன்" ராமராஜன் காப்பிரைட் ஆச்சே. இந்த டிரஸ் கச்சிதம். நல்லா இருக்கு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.
நீக்குவிஷம் பூசப்பட்ட அம்புகள்... யம்மாடி..!
பதிலளிநீக்குபசு ரொம்பவே இளைத்துள்ளது...
101 கிலோமீட்டர் - இரு சக்கர வாகனத்திற்கு அனுமதி இல்லையா ஜி...
விஷம் பூசப்பட்ட அம்புகள் - ஆபத்தான விஷயம் தான் தனபாலன்.
நீக்குஇளைத்த பசு - :)
இரு சக்கர வாகனத்திற்கு அனுமதி இல்லை தனபாலன்.
உங்கள் பயண அனுபவத்தில் நான் முக்கியமாக ரசிப்பது நேரத்தை வீணாக்காமல் உரிய முறையில் நீங்கள் பயன்படுத்துவதே.
பதிலளிநீக்குவாஷ் ரூம் வசதி....எங்கு போனாலும் நான் முதலில் தேடுவது...அனைவருக்கும் முக்கியமானது.
பயண அனுபவங்கள் - நேரத்தினை சரியாகப் பயன்படுத்துவது தேவையானதும் கூட.
நீக்குவாஷ்ரூம் வசதி - சரியாக இருந்துவிட்டால் எல்லாம் சுகமே!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
வடகிளக்கிந்தியாவில் நீங்கள் சொல்லியதுபோல் இங்கேயும் பால் டீ இல்லையா? சிறந்த வழிகாட்டுப் பயணக் கட்டுறைகள் ஐய்யா. போர்ட்பிளேயர் சிங்காரி சரக்கை விட இக்கடை தேனீர் இட்டலி வடை சரக்குகள் சுவையா இருந்ததா?
பதிலளிநீக்குஇங்கே பால் பவுடர் பயன்பாடு தான் அதிகம் அரவிந்த். பால் பவுடர் டீ குடிப்பதற்கு பதில் ப்ளாக் டீ குடிப்பது எனக்கு பிடித்தமானது!
நீக்குஇரண்டு இடங்களிலும் - சிங்காரம் கடையிலும், ஜிர்காடாங்க் பகுதியில் இருந்த கடையிலும் நன்றாகவே இருந்தது அரவிந்த்.
பழங்குடி மக்கள் குறித்த கூடுதல் தகவல் அடுத்தப் பதிவில் இருக்கும்என எதிர்பார்த்து...வாழ்த்துகளுடன்..
பதிலளிநீக்குபழங்குடி மக்கள் பற்றிய தகவல்கள் அடுத்த பகுதியில்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.
பழங்குடியினர் வசிக்கும் பகுதி வழியானப் பயண நிகழ்வுகளை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
பதிலளிநீக்குஅடுத்த பகுதியில் பழங்குடியினர் வசிக்கும் பகுதி வழியான பயணம் தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குகன்னுக்குட்டியை காட்டி பசுன்னு சொல்றதுலாம் ஓவர்
பதிலளிநீக்குகன்னுக்குட்டி - நாளைய பசு தானே ராஜி!
நீக்குபசு கன்று என்று சொல்லலாமா?
பதிலளிநீக்குஒரு காலத்தில் நம்ம நாட்டு இராணுவ சோதனை சாவடிகள் போல இருக்கிறதே அனுமதி பெற்று செல்லும் அனுபவம். பழங்குடி யினரை காண்போம்தானே :)
பசு கன்று - சொல்லலாமே!
நீக்குஇராணுவ சோதனை சாவடிகள் போல! இப்படி இன்னும் சில இடங்கள் உண்டு மாதேவி.
பழங்குடியினரைக் காண்போம் தானே! ஹாஹா... நல்ல சந்தேகம்!
கப்பல் பயணத்தில் முதல் முறையாக செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டியதைப் பற்றி தனியாக எழுதுங்க.
பதிலளிநீக்குகப்பல் பயணத்தில் முதல் முறையாக பயணம் - இந்தத் தொடரின் சில பகுதிகளில் எழுதி இருக்கிறேன் ஜோதிஜி. தனியாகவும் தர முயல்கிறேன்.
நீக்குபயணக் கட்டுரை அருமை.. அது பசுவேதானோ? நான் நம்ப மாட்டேன்...
பதிலளிநீக்குபயணக் கட்டுரை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அதிரா.
நீக்குபசுவே தானா? ஹாஹா... இல்லை எருமை! நான் என்னைச் சொன்னேன்!
வாசகம் நன்றாக இருக்கிரது.
பதிலளிநீக்குபயணத்தில் முதலில் செய்யவேண்டியது, நேரத்திற்கு ஏற்றார் போல் பயணத்திட்டத்தை வகுப்பது எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
பசுகன்றுடன் படம் நல்லா இருக்கிறது. அதற்கு கொடுத்து இருக்கும் பசுநேசன் வாசகம் ராமராஜனை நினைக்க வைத்தது.
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...
நீக்குபயணத்தில் முதலில் செய்ய வேண்டியது - நேரத்திற்கு ஏற்றார் போல் பயணத்திட்டத்தை வகுப்பது. ஆமாம். கொஞ்சம் தவறினாலும் திட்டம் சொதப்பி விடலாம்!
பசுக்கன்றுடன் படம் - நண்பர் மணி எடுத்தது.
ரசித்து வாசிக்கிறேன் வெங்கட்ஜி! சுவையான அனுபவம். அடுத்து பழங்குடி மக்களைக் கண்ட அனுபவம் அறிய ஆவலுடன் தொடர்கிறோம். வாசகம் நன்றாக இருக்கிறது
பதிலளிநீக்குதுளசிதரன்
பயணத்தில் தொடர்ந்து வருவது மகிழ்ச்சி தருகிறது துளசிதரன் ஜி.
நீக்குவெங்கட்ஜி!!!! இப்படி சீட் நுனில வந்து நகம் கடிக்க வைச்சுட்டீங்களே! மிக மிக முக்கியமான பகுதியாச்சே அது பழங்குடி மக்கள் பார்த்த அனுபவம்...விஷ அம்புகள்// ஆமா அவங்க அதுதான் யூஸ் செய்வாங்க. இப்ப நிறைய முன்னேற்றம் போல மொழி கற்று பேசுவது...முன்ன எல்லாம் அவங்க குரல் எழுப்பிதான் கம்யூனிக்கேட் செய்வாங்கன்னும் அவங்களைப் பத்தியின் திகிலா வாசிச்சிருக்கேன் அதான் உங்க அனுபவம் அறிய ஆவல்!
பதிலளிநீக்குகான்வாயோடு போவது எல்லாமே த்ரில்லான அனுபவம் தான். //பசுநேசனாக மாறிய பொழுதில்.// ஹா ஹா ஹா ஹா ஹா...பாவம் எலும்பும் தோலுமா இருக்கு குழந்தை. அங்கு புல் இல்லையோ சரியான தீனி இல்லையோ?!
வாசகம் பொருத்தம்!!
அடுத்த பகுதி விரைவில் ப்ளாக் திரையில் ப்ளீஸ்!!
கீதா
நுனி சீட்டில் வந்து நகம் கடிக்க வைச்சுட்டீங்களே! ஹாஹா... திங்களன்று வெளியாகும் பகுதியில் பழங்குடியினர் பகுதி தான் கீதாஜி.
நீக்குநிறைய விஷயங்கள் அவர்கள் பற்றி இணையத்தில் உண்டு ஜி. எங்கள் அனுபவம் அடுத்த பகுதியில்.
கான்வாயில் பயணிப்பது - இன்னும் சில இடங்களில் இப்படி பயணித்திருக்கிறேன்.
பசு நேசன் - கிடைப்பதைச் சாப்பிடுவதால் இப்படி மெலிதாக இருக்கிறது போலும்!
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
அடுத்த பகுதி - வரும் திங்களன்று!
சுவாரஸ்யமான தகவல்கள்! பயணம் தொடரட்டும்!!
பதிலளிநீக்குபயணம் உங்களுக்கும் ஸ்வாரஸ்யமாக இருந்ததில் மகிழ்ச்சி மனோம்மா...
நீக்கு