ஞாயிறு, 31 மே, 2020

பானிபத் கம்பளி – சொல்லப்படாத கதைகள்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


பாதையைத் தேடுபவன் சாதாரண மனிதன்… பாதையை உருவாக்குபவன் சாதனை மனிதன்.

 

இந்த வாரத்தின் ஞாயிறில், நாம் காணப் போவது குறும்படம் அல்ல! ஒரு டாகுமெண்டரி எனச் சொல்லலாம்.  அதற்கு முன்னர் சில விஷயங்கள்!   இப்போதெல்லாம் நம் ஊரிலும் கூட சில வட இந்தியர்கள் தன் தோள்கள் மீது கம்பளிகளை மூட்டையாக எடுத்து வந்து விற்பதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும் – 200 ரூபாய், 150 ரூபாய் என்றெல்லாம் விற்பதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். உங்களில் சிலர் வாங்கியிருக்கவும் கூடும்.  அவர்கள் விற்கும்போதே பானிபத் கா கம்பள் என்று சொல்லி விற்பனை செய்வதை கவனித்திருக்கிறேன்.  பானிபத் – சரித்திரப் பாடத்தில் முதலாம் பானிப்பட்டு போர், இரண்டாம் பானிப்பட்டு போர் என்றெல்லாம் தமிழில் படித்தோமே அதே பானிபட் தான் – ஆங்கிலத்தில் Panipat என்று எழுதியிருந்ததை பானிபட் என்றே படித்துப் பழக்கப்பட்டு விட்டோம் – ஆனால் இங்கே தலைநகர் வந்தபிறகு தான் தெரிந்தது அது பானிபட் அல்ல! பானிபத் என!  பானிபத்-சோனிபத் என இரண்டு நகரங்களும் அருகருகே இருப்பவை – தில்லியிலிருந்து சண்டிகட் செல்லும் பாதையில் தில்லியிலிருந்து பயணித்து சுமார் ஒன்றரை மணி நேரத்தில் நாம் பானிபத் அடைந்து விடலாம்!


அந்த பானிபத் நகரம் இந்த மாதிரி கம்பளிகள் மற்றும் வேறு சில துணிவகைகளும் தயாரிக்கப்படும் பிரபல இடம்! ஆனால் அந்த கம்பளிகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதை என்றாவது யோசித்து இருக்கிறீர்களா? இல்லை தெரிந்து கொண்டாவது இருக்கிறீர்களா?  அவை அனைத்துமே பழைய, பயன்படுத்திய துணிகளிலிருந்து செய்யப்படுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும்போது உங்களுக்கு என்ன தோன்றும்?  ஆமாம் அந்தக் கம்பளிகள் செய்யப்படுவது பழைய துணிகளைக் கிழித்து தான்! வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகள் – சில துணிகள் நான்கைந்து முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறிந்து விட – தோய்ப்பதை விட புதிது வாங்கிக் கொள்வது அவர்களுக்கு பிடித்திருக்குமோ? – அவை எல்லாம் சேகரிக்கப்பட்டு கப்பல் வழி சூரத் வந்து சேர்கிறது. அங்கேயிருந்து லாரிகள் வழியே பானிபத் வந்து சேர்கிறது. அங்கே வண்ணம் வாரியாக பிரிக்கப்பட்டு, அவற்றில் இருக்கும் பட்டன்கள்/கொக்கிகள் அகற்றப்படும். பிறகு அறுவாமணைகள் கொண்டு – ஆமாம் நாம் காய்கறி நறுக்க பயன்படுத்தும் அறுவாமணைகள் கொண்டு சிறிய சிறிய பீஸ்களாக கிழிக்கப்படுகின்றன.


பலவகை இயந்திரங்கள் வழி அவை பயணப்பட்ட பிறகு நூல்களாக மீண்டும் மாறுகின்றன. அவை கம்பளியாகவும் இன்னும் பிற துணிகளாகவும் மாறுகின்றன.  அவற்றை எப்படிச் செய்கிறார்கள் என்பதை இந்தக் காணொளியில் சொல்லி இருக்கிறார்கள் – ரேஷ்மா என்ற பெண்மணி – அங்கே பணிபுரியும் பெண்மணியின் கதையையும் சேர்த்து!  இந்தக் காணொளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்! – பானிபத் கம்பளியின் சொல்லப்படாத கதையை! ஹிந்தி மொழியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் Sub title இருக்கிறது – அதனால் புரிந்து கொள்வது சுலபம் தான். காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என வரலாம். அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!


The Untold story of old clothes


நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட பானிபத் கம்பளியின் கதை  உங்களுக்குப் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி


46 கருத்துகள்:

 1. இன்றைய இனிய மொழி -
  இனிமை.. அருமை...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 2. இந்த பழைய துணி மீட்பு ஏற்கனவே கேள்விப் பட்டுள்ளேன்...

  இந்த டகால்டிகி வேலை சீனாவின் உபயம் என்றார்கள்...

  ஏன்!... நம்மூரிலேயே கோவை திருப்பூர் பக்கங்களில் கழிவுப் பஞ்சுகளில் மெத்தை தலையணை தயாரித்து விற்ற வித்தகம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன் செய்திகள் வந்தன..

  பின் வழக்கம் போல் காணாமல் போயின...

  தரமற்ற திரி நூல்கள் புழக்கத்தில் இருப்பது அறிந்திருக்கின்றீர்களா...

  நம் ஆட்களிடம் ஏமாறுவது தானே
  நமது வேலை...

  இப்படி வைத்துக் கொள்ளலாம்...

  தமிழனை வஞ்சிப்பது தான்
  தமிழனின் வாழ்க்கைமுறை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இந்த டகால்டிகி வேலை //

   ஹா...  ஹா...  ஹா...

   நீக்கு
  2. எப்படியும் சம்பாதிக்கலாம் என நினைத்து விட்டால் டகால்டி வேலைகள் தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
  3. நீண்ட நாள் கழித்து இந்த வார்த்தையை படிக்கிறேன் ஸ்ரீராம். :)

   நீக்கு
 3. பாதையைத் தேடுபவன் சாதாரண மனிதன்…
  பாதையை உருவாக்குபவன் சாதனை மனிதன்.

  சிந்திக்க வைக்கும் வரிகள் இவை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி யாழ் பாவாணன் ஐயா.

   நீக்கு
 4. அடடே...   அப்படியா?  நான் கூட ஏதோ ஆட்டை எல்லாம் பிடிச்சு அதன் மேல் உள்ள கம்பளி போன்ற வஸ்துவை நறுக்கி எடுத்து பதபப்டுத்தி என்றெல்லாம் மனதுக்குள் கற்பனை வைத்திருந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரிஜினல் கம்பளி அப்படித்தான். ஆனால் இப்போது பழைய துணிகளிலிருந்தும் தயாரிக்கிறார்கள் ஸ்ரீராம்.

   நீக்கு
 5. காலை வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை.
  பானிபத் கம்பளிகள் கேள்விபடாத கதை. காணொளியும் பார்த்தேன். நானும் இந்த கம்பளி விற்கும் வியாபாரிகளை பார்த்திருக்கிறேன்.கம்பளிகள் வாங்கியதில்லை. இதற்குள் இவ்வளவு கதைகள் என இன்றுதான் தெரிந்து கொண்டேன்.இனி பானிபட் போருடன் இதுவும் நினைவுக்கு வரும். கடைகளில் வாங்குவதும் இதுதானா?

  /சில துணிகள் நான்கைந்து முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறிந்து விட – தோய்ப்பதை விட புதிது வாங்கிக் கொள்வது அவர்களுக்கு பிடித்திருக்குமோ?/

  ஹா. ஹா. ஹா. என்ன இருந்தாலும் இனி கம்பளிகள் எப்போதாவது போர்த்திக் கொள்ளும் போது இது நினைவுக்கு வரும். கடும் குளிரே (அப்படியொன்று வந்தால்) பரவாயில்லை போல் தோன்றும்.

  நானும் ஸ்ரீராம் சகோதரரைப் போல் கம்பளிகள் ஆடுகளின் உபயம் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். விபரங்களை தந்ததற்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

   நீக்கு
 6. பானிபத் கம்பளிகள் பற்றிய காணொளியும் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் வழி சொன்ன விஷயம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   நீக்கு
 7. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி.

  வட இந்தியர்கள் இங்கு வந்து கம்பளி விறபதைப் பார்த்திருக்கிறேன்.

  விலை குறைவாகவே இருப்பதை நினைத்து ஒரு வேளை பழைய கம்பளியைத்தான் புதுசு படுத்தி விற்கிறார்களோ என்று தோன்றியதுண்டு. ஏனென்றால் நல்ல கம்பளி விலை கூடுதல்.

  இப்போதுதான் அது எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதை அறிகிறேன் உங்கள் பதிவிலிருந்து. வீடியோ கொஞ்சம் கொஞ்சமாகப் பார்க்கிறேன்.

  வாசகம் அருமை. இந்த வீடியோ செய்திக்குப் பொருந்திப் போகுமோ! பொதுவாக கம்பளி-வுல் செம்மறியாட்டிலிருந்து எடுத்துத்தானே செய்யப்படுவதற்கு இது பரவாயில்லையே என்றும் கூடத் தோன்றியது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதாஜி.

   வட இந்தியர்கள் இப்படி நிறைய விற்பனை செய்கிறார்கள். பழைய கம்பளியை புதியதாக்குவதில்லை. நல்ல கம்பளி என்றால் விலை அதிகம் தான். செம்மறியாடுகள் தப்பிக்கிறது என்பதும் நல்லதே. ஆனால் இன்றைக்கும் அதிக குளிர் இருக்கும் பகுதிகளில் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் உடைகள்/கம்பளிகள் தான் பயன்பாட்டில் இருக்கிறது.

   வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 8. இதில் டேமேஜ் ஒன்றும் இல்லாத துணிகளை குறிப்பாக ஸ்வெட்டர்கள் போன்றவை மயூர் விஹார் சந்தையில் 50, 100 ரூபாய்களுக்கு விற்கிறார்கள்.
   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல இடங்களில் இப்படி கிடைக்கலாம் - விற்பனை செய்யப்படுவதை பார்த்திருக்கிறேன் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   நீக்கு
 9. பழைய துணி சேகரிப்பு கேள்விப்பட்டு இருக்கிறேன் கம்பளி ஆவது தெரியாது.

  அந்த சுசுறுசுறுப்பான பெண்மணி மிக மகிழ்ச்சி யாக வேலைகள் செய்வதுதான் சிறப்பு 'செய்யும் தொழிலே தெய்வம் '

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழைய துணிகளிலிருந்து கம்பளி - எனக்கும் இது புது செய்தியாக இருந்தது. அதனால் தான் பகிர்ந்து கொண்டேன் மாதேவி.

   மகிழ்ச்சியாக வேலை செய்யும் பெண்மணி - அவரின் சிரிப்பும், ஆசையும் பிடித்திருந்தது.

   நீக்கு
 10. மிக அழகான வீடியோ. ஒரு நிமிடத்தில் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்வையில் பார்க்க முடிகிறது. அந்த ரேஷ்மா துரு துருவென்றிருக்கிறார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீடியோ உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி Bபந்து ஜி. ரேஷ்மா - அவரின் துரு துரு எனக்கும் பிடித்திருந்தது.

   நீக்கு
 11. பானிபட் அல்ல பானிபத்....கம்பளியின் பின்னணியை அறியும்போது வியப்பாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவல்கள் வியப்பானவை தான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 12. பானிபத் கம்பளி காணொளி அருமை. தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவும் வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

   நீக்கு
 13. வாசகமும் காணொளியும் அருமை ஐய்யா. நானும் கம்பளி என்றால் ஆட்டு ரோமம் என்றுதான் நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் காணொளியும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

   ஆட்டு ரோமத்தில் தயாராகும் கம்பளிகள் விலை அதிகம். இவை குறைவான விலையில் கிடைப்பவை.

   நீக்கு
 14. நாங்க வடக்கே போனதுமே எச்சரிக்கப்பட்டோம். ஜூட் எனப்படும் சணலால் நெய்தவற்றைக் கூட கம்பளி என்னும் பெயரில் விற்பார்கள் என்று சொல்லிக் கொடுத்து நல்ல கம்பளி ஆடைகள் வாங்க உதவியும் செய்தார்கள். கம்பளிப் போர்வையும் நேரடியாக மில்லில் இருந்தே வாங்கினோம். டிக்ஜாம் கம்பளித் தயாரிப்பு. இன்னமும் வைத்திருக்கோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். வடக்கில் இருப்பவர்களுக்கு இப்படி தயாராவது தெரியும். சணலில் சாயம் சேர்த்து கம்பளி என்று விற்பது நிறையவே நடக்கும். கரோல் பாக் திங்கள் கிழமை மார்க்கெட் (அஜ்மல் கான் ரோடு) பகுதியில் இப்படி நிறையவே தமிழ்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றுவார்கள்.

   டிக்ஜாம், பாம்பே டையிங் கம்பளிகள் நன்றாகவே இருக்கும் கீதாம்மா...

   நீக்கு
 15. அந்தப் பெண்ணின் அழகும், சிரிப்பும் மனதைக் கவர்ந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனதைக் கவர்ந்த சிரிப்பு - உண்மை தான் கீதாம்மா... வசீகரம்.

   நீக்கு
 16. வாசகம் அருமை.
  பானிபத் கம்பிளி எவ்வளவு பேருக்கு வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்கிறது.
  அந்த பெண் அழகு, எவ்வளவு சந்தோஷமாக குழந்தையை தூக்கி கொண்டு வேலைக்கு போய் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்கிறார்.

  பழைய துணிகளை அரிவாள்மனையில் துண்டு துண்டுக்ககுவது, பட்டன் ஹூக் எடுப்பது கடினமானவேலை பார்க்கவே கஷ்டமாய் இருக்கிறது காணொளி பார்க்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

   பானிபத் கம்பளி - பலருக்கு வேலை அளிக்கிறது. அந்தப்பெண்ணின் சந்தோஷம் - ஆமாம் மா... பார்க்கவே அழகு.

   கடினமான வேலை தான். வயிற்றுப் பிழைப்புக்கு தானே எல்லாம்.

   நீக்கு
 17. தலைப்பைப் பார்த்து, காணொளியோ இல்லை புத்தக விமர்சனமோ என்று நான் இதுவரை வரவில்லை.

  பஞ்சத்வாரகா யாத்திரையின்போது குருஷேத்திரத்துக்கு முன்னால் பானிபத் வழியாகச் சென்றோம். அப்போ, அடடா போர்க்களத்தின் வழியாகச் செல்கிறோமே.. இங்கு அந்த இடம் கிரிக்கெட் கிரவுண்ட் அளவாக இருக்குமோ இல்லை தனியாக மார்க் செய்யப்பட்டு பாதுகாக்கிறார்களா என்றெல்லாம் யோசித்தேன். நான் காண வேண்டும் என்று மிகவும் விரும்புவது, வயல் வெளிகளினூடே இருக்கும் அக்பர் அரசாட்சியை ஏற்றுக்கொண்ட இடம்.

  நிற்க... உபயோகமான விஷயத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளீர்கள். என்னைக் கேட்டால், அரசே (தில்லி போன்ற மாநில அரசுகள்) நேரடியாக இந்த கம்பளிகளை வாங்கி தொண்டுணர்வு கொண்டவர்கள் மூலமாக மிகுந்த ஏழைகளுக்கு (குளிர் காலத்தில் பேப்பரை எரித்து அதன் அருகே படுத்துக்கொண்டிருப்பவர்கள் போன்று-இதனை பலமுறை பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன்) கொடுக்கலாம்.

  தொடர்ந்து, நாங்கள் கவனிக்க விட்ட காணொளிகளைப் பகிருங்கள். வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளியோ இல்லை புத்தக விமர்சனமோ என்று நான் வரவில்லை... :)))) காணொளிகள் பிடிக்காதோ?

   போர்க்களம் - இப்போது இருக்க வாய்ப்பில்லை - பல இடங்கள் வீடுகளாக மாறி விட்டன. பெரிய பெரிய வீடுகள், தொழிற்சாலைகள் என பானிபத் நகரில் காலி இடங்கள் குறைவே!

   மாநில அரசுகள் குளிர் காலத்தில் இப்படி கம்பளிகள் வாங்கி அரசு தங்குமிடங்கள் (Shelter for the homeless) கொடுப்பதுண்டு. சில தன்னார்வலர்களும் இப்படி அளிப்பது உண்டு நெல்லைத் தமிழன்.

   நான் பார்த்து, எனக்குப் பிடித்த காணொளிகளை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன். வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 18. அங்க்ரேசி என்று வெளிநாட்டுப் பெண்களைக் குறிப்பிடுகிறார்கள். அவங்க ரொம்ப அழகு, அவங்களைப் பார்க்கணும் என்று பேசும்போது அவர்களின் இன்னொசென்ஸ் புரிகிறது. ஆனா இப்படிச் சொல்றவங்க ரொம்ப அழகாக (மேக்கப் இல்லாமல்) இயல்பாக இருக்காங்க என்று எனக்குத் தோன்றுகிறது.

  நாம எப்பவுமே இருக்கறதை விட்டுவிட்டு பறக்கிறதைப் பிடிக்க ஆசைப்படுவோம். இவங்களோட அழகும் குணமும் இவங்களுக்கே தெரியலையே....

  எப்போதுமே பிறருக்கு, சேரிட்டிக்கு அல்லது இந்த மாதிரி விஷயங்களுக்கு துணியைக் கொடுப்பவர்கள் தோய்த்து இஸ்திரி போட்டு புதிது போலத்தான் கொடுப்பார்கள். நம்ம ஊர்லதான் அலட்சியமாகக் கொடுப்பார்கள்.

  இந்தக் கம்பளிகள்தாம் இரயில்வேயில் உபயோகிக்கிறார்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்களின் மேக்கப் இல்லாத இயற்கையான அழகு வசீகரம் தான். இருப்பதை விட்டு பறப்பதை பிடிப்பது - மனித இயல்பு தானே.

   ஓசில தானே கொடுக்கறோம்னு அழுக்கா கொடுக்கும் மனிதர்கள் - நிறையவே உண்டு.

   இரயில்வேயில் வரும் கம்பளிகள் - எல்லாம் காண்ட்ராக்ட், சப் காண்ட்ராக்ட் என எடுக்கப்பட்டு அளிக்கப்படும் கம்பளிகள் தான் - இரயில்வே நேரடியாக இதில் இறங்குவதில்லை. ஆனால் தரக்கட்டுப்பாடுகள் உண்டு - அத்னால் கொஞ்சம் தரமானதாகவே வாங்கப்படும் - பராமரிப்பு பற்றி சொல்லாமல் இருப்பது மேல் நெல்லைத் தமிழன். நான் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை - தலையணைக்குக் கீழே வைத்து விடுவேன்! மெல்லிய போர்வை மட்டுமே பயன்படுத்துவது வழக்கம் - ரொம்பவே குளிர் அதிகம் இருந்தால், மெல்லிய போர்வைக்கு மேலே போட்டுக்கொள்வேன் - வேறு வழியில்லாமல்.

   நீக்கு
 19. கம்பளி தயாரிப்பு ஆச்சர்யமாக இருக்கிறது வாசகம் அருமை ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   கம்பளி தயாரிப்பு - ஆச்சர்யம் தான்.

   நீக்கு
 20. த் ட் பிரச்சனை இருக்கறதுதான். மோதி / மோடி மாதிரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி நிறைய வார்த்தைகளில் பிரச்சனை தான் எல்.கே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 21. வட நாட்டினர் மலிவாக விற்கும் கம்பளி தரமானவை இல்லை என்றாலும் ... அதற்குப்பின்னால் இத்தனை மனித உழைப்பு இருப்பது நெகிழ்ச்சியை தருகிறது. என்னுடைய உறவினர் இப்படித்தான் அடித்துபிடித்து வடநாட்டவர்களிடம் மிகக்குறைவாக விலைபேசி நான்கு ஜமுக்காளம் வாங்கினார். இப்போது நல்ல "ரெசல்ட்" தெரிகிறதாம் . அதை போர்த்திக்கொண்டு இரவில் படுத்தால் நம் உடலிலுள்ள வியர்வையை எல்லாம் துளியும் வீணாகாமல் பத்திரமாக உறிந்து வைத்துக் கொள்கிறதாம் ... அதிகாலையில் வெளியில் பெய்யும் பனியை கூட "கேட்ச்" பிடித்துக்கொள்கிறதாம் .... காலையில் எழுந்து பிழிந்தால் ஒவ்வொரு ஜமுக்காளத்தில் இருந்தும் அரை லிட்டர் நீர் கிடைக்கிறதாம்... தண்ணீர் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்தது என்கிறார்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல ரெசல்ட்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவா.

   நீக்கு
 22. வெங்கட்,

  அருமையான புதிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  இயலாமையின் ஏக்கத்தை புன்னகையுடன் வெளிப்படுத்திய அந்த பெண்மணியின் விருப்பம் அவரின் மகன்மூலம் நிறைவேறும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்க அவரின் கணவரின் தன்னிறைவான எண்ணமும் எதார்த்த பேச்சும் மிகவும் என்னை கவர்ந்தது.

  வெளி நாட்டிலுள்ளவர்களைக்குறித்த அந்த பெண்ணின் கற்பனை மதிப்பீடு நிஜத்தின் துல்லியம்.

  காணொளி மிகச்சிறப்பு.

  மீண்டும் ச(சி)ந்தியுங்கள்.

  கோ.

  பதிலளிநீக்கு
 23. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி கோ.

  காணொளியும் அதில் வந்த கதை மாந்தரும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....