செவ்வாய், 5 மே, 2020

எனது மின்னூல்கள் – வாசிப்பனுபவம் – இரா. அரவிந்த்


நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

 

சில புத்தகங்களை சுவைப்போம்; சிலவற்றை அப்படியே விழுங்குவோம்; சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்! – ஃப்ரான்சிஸ் பேக்கன்.

 


அன்பின் நண்பர்களுக்கு, எனது வலைப்பூவில் எழுதி வந்த பயணக்கட்டுரைகளையும் மேலும் சிலவற்றையும் மின்னூல்களாக www.freetamilebooks.com தளம் மற்றும் www.amazon.com தளம் வழியாகவும் வெளியிட்டு வருவதை அறிந்திருப்பீர்கள். இது வரை வெளிவந்த எனது மின்னூல்களுக்கான சுட்டி எனது வலைப்பூவின் வலது ஓரத்தில் மின்புத்தகங்கள் என்ற தலைப்பின் கீழ் கிடைக்கும்.  நண்பர் இரா. அரவிந்த் - சில பதிவுகளில் இவர் பின்னூட்டம் இடுவதை நீங்களும் பார்த்திருக்கலாம். இவர் வலைப்பூ வைத்திருக்கவில்லை என்றாலும் நண்பர்களின் தளங்களில் கருத்துரைத்ததை பார்த்திருக்கலாம்.  சமீபத்தில் எனது மின்னூல்களை வாசித்து (12 நூல்கள்) தனது கருத்துகளை மின்னஞ்சல் வழி எனக்கு அனுப்பி வைத்தார்.  அவரது வாசிப்பனுபவம்/கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  நண்பர் அரவிந்த் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. 

 

அவரது நண்பர்களுக்கு வாசிப்பனுபவத்தினை பகிர்வது அவரது வழக்கம் என்று சொல்லும் அவரிடம் வாசிப்பனுபவங்களை என்னுடனும் பகிர்ந்து கொள்ளச் சொல்லி இருக்கிறேன். அவரது வாசிப்பனுபவங்கள் சில இந்தப் பக்கத்திலும் வெளியிடுகிறேன் என சொல்லி இருக்கிறேன்.  முதலாவதாக எனது மின்னூல்கள் பற்றிய வாசிப்பனுபவம் இன்றைய பதிவில்.  இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வழிச் சொன்னால் மகிழ்ச்சியடைவேன். கீழே அவரது மின்னஞ்சல்/ வாசிப்பனுபவம் – வெங்கட் நாகராஜ், புது தில்லி.

 

****

 

மின்னஞ்சல்:

 

வணக்கம் ஐய்யா,

 

தங்கள் பயண அனுபவங்களை 12 புத்தகங்களாக எங்களுக்கு வழங்கியதற்கு மிக்க நன்றி. இவை எங்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். எனது வாசிப்பு அனுபவத்தை இணைத்திருக்கிறேன். அனைத்து நூல்களையும் சேர்த்து ஒரே பேப்பர் பேக் புத்தகமாக எல்லா படங்களுடனும் இதுபோன்ற ஒரு நூலறிமுகத்தோடு வெளியிடுவது மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன்.

 

பயணிகளின் பொக்கிஷமாய் பன்னிரெண்டு நூல்கள்:

 

இந்த அழகான உலகைச் சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள் நாம்.  ஒரு நாள் திரும்பிச் செல்லத்தான் போகிறோம். தேதிகள் மட்டுமே ரகசியம்”.

 

உலகையே அடக்கி வைத்திருக்கும் வைரஸை அடித்துத் துரத்தியபின், அடங்கியிருந்த நாட்களுக்கும் சேர்த்து சுற்றுலா செல்ல அனைவரும் விரும்புவோமோ இல்லையோ, நம் வீடுகளின் குழந்தைகள் விடப்போவதில்லை. அப்படிச் செல்ல திட்டமிடும்போது இந்தியாவில் எங்கெங்கு என்னென்ன சிறப்புகள் உள்ளன? அவற்றை கண்டு களிக்க எப்படி எத்தனை நாட்களுக்கு திட்டமிட வேண்டும்? எந்தெந்த வழிகளில் எந்தெந்த முறையில் பயணம் செய்தால் எவ்வளவு செலவு பிடிக்கும்? குடும்பத்துடன் செல்கையில் தங்கும் இடம், உணவு உட்பட்ட அடிப்படைகள் எங்கெங்கு சிறப்பாக இருக்கும்? போன்றவற்றை முன்கூட்டியே அறிய உதவுபவை, நெய்வேலியில் பிறந்து டில்லியில் மத்திய அரசு ஊழியராய்ப் பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களின் சொந்த பயண அனுபவங்களாய் எளிய இனிய நடையில் வெளிவந்துள்ள பன்னிரெண்டு மின்னூல்கள்.

 

”சந்தித்ததும், சிந்தித்ததும்என்ற தலைப்புடன் வலைப்பூவில் எழுதிவரும் ஆசிரியர் அவற்றை மின்னூல்களாகத் தொகுத்து வெளியிடுவது பயணிகளின் கையடக்க செல்பேசிகளிலேயே சேமித்து எப்போதும் பார்த்துக்கொள்ளும் பயண வழிகாட்டியாய் உபயோகிக்க மிகவும் வசதியாகிவிட்டது.

 

சதிதேவியின் பாகங்கள் விழுந்த சக்திபீடங்களின் இருப்பிடங்கள், பஞ்ச் துவாரகா என்னும் ஐந்து துவாரகா கோயில்கள், பிரபலமான ஜோதிர்லிங்கங்கள், பஞ்ச கைலாசங்கள், சிலைகளும் சித்திரங்களும்  வடிவமைக்கப்பட்ட விதங்கள், நடை திறக்கும் நேரங்கள், போன்ற ஆன்மீகவாதிகளுக்கான எண்ணற்ற கோயில் வறலாற்றுத் தகவல்கள் இப்புத்தகங்களில் கொட்டிக்கிடக்கின்றன.

 

எழில் கொஞ்சும் மலைச்சிகரங்கள் மற்றும் தற்கொலைப் புள்ளிகள், மலை ரயில்கள், முக்கியமான உயிரியல் பூங்காக்கள் இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள், எண்ணற்ற அரண்மனைகள் மற்றும் அவை தொடர்பான அற்புதங்கள் மற்றும் சுவையான வரலாற்றுத் தகவல்கள், நாட்டில் நிறைந்துள்ள பிரபலமான ஏரிகள், அணைகள் மற்றும் படகுச்சவாரி அனுபவங்கள் போன்ற, குழந்தைகளும் ஏனையோரும் விரும்பும் எண்ணற்ற பயணக் குறிப்புகளுக்கும் பஞ்சமில்லை.

 

இணையத்தில் முன்பதிவு செய்யவேண்டிய  உத்திராகண்ட் ஜிம்கார்பெட் உயிரியல் பூங்காவில் சுதந்திரமாக நடமாடும் புலிகளைக் காண பிஜ்ராணி நுழைவுவாயில், குஜராத்தில் சிங்கங்களை அருகில் காண சாஸன் கிர் வனம், 900 வளைவுகள் 103 குகைகள் எண்ணூற்றிற்கும் மேற்பட்ட பாலங்கள் நிறைந்த கால்கா ஷிம்லா மலைரயில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மெஹ்ரான்கட் கோட்டையில் வானத்தில் பறந்தபடி ஊரை ரசிக்கும் Zip line  போன்ற தவறவிடக்கூடாத இடங்களும் அவை செயல்படும் நேரங்கள் மற்றும் சீசன்களும் முன்பதிவு செய்யவேண்டிய இணையதள முகவரிகளும் இருக்கும்போது டிராவெல் ஏஜன்சிகளின் தேவையே நமக்கு இல்லாமல் போகும் அல்லவா?

 

பயணத்தின்போது அந்தந்த ஊர்களின் பிரதானமான உணவுகளை உண்பதே அச்சீதோஷணத்திற்கு உடல் பழகிக்கொள்ளச் சிறந்தது என்று வலியுறுத்தும் ஆசிரியர் ஒவ்வொரு ஊரின் சிறந்த மற்றும் பயணத்தில் தவிர்க்க வேண்டிய உணவுவகைகள், நம்பத்தகுந்த உணவகங்கள் குறிப்பாக சைவ உணவகங்கள், செயல்படும் நேரங்கள் இவற்றை சொல்வதோடு நில்லாமல் அவற்றை வீட்டிலேயே தயாரிக்கும் முறையையும் செய்ய தேவைப்படும் நேரத்தையும் "சாப்பிட வாங்க" என்னும் நூலாகத் தந்திருப்பது என் போன்ற சாப்பாட்டு ராமன்களுக்கு விருந்துதான்.

 

இவை தவிர நம் உணவுக்கு பயன்படுத்தும் எண்ணற்ற கச்சாப்பொருட்கள், அழகுசாதனங்கள், மருந்துப்பொருட்கள் நாட்டின் எந்தெந்த  பகுதிகளிலிருந்து வருகின்றன என்பதை பயணங்கள் மூலம் கண்டு புத்தகத்தில் மட்டுமே நாம் படிக்கும் "வேற்றுமையில் ஒற்றுமை" வாசகத்தின் நடைமுறைப் பொருளை அறிந்துகொள்ளலாம்.

 

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் வெவ்வேறு இனத்தார், அவர்களின் தனிப்பட்ட கைவேலைப்பாடுகள் மற்றும் குணநலன்களைப் புரிந்துகொள்வதோடு நம் நட்பு வட்டமும் அறிவும் விசாலமாவதை பயணங்கள் மூலம் கண்கூடாக உணரலாம்.

 

சாகசப் பயண விரும்பிகளுக்காக "கடைசி கிராமம்" என்ற ஹிமாச்சல் பிரதேஷ் சித்குல் மற்றும் காம்ரு கிராமங்களுக்கு ஆசிரியர் மேற்கொண்ட முழு முன்னேற்பாடு செய்யாத சாகசப்பயண அனுபவ நூலும் இதில் அடக்கம்.

 

திருமணம் மூலம் புதிதான ஒரு நீண்ட பயணத்தைத் தொடங்கும் இல்லத்தரசிகள் இடமாற்றம், மொழிமாற்றம்,மற்றும் கலாச்சார வேறுபாடுகளால் எதிர்கொள்ளும் சவால்களையும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் யுக்திகளையும் நகைச்சுவை நிறைந்த எளிய  நடையில் எடுத்துக்காட்டுவது ஆசிரியரின் இல்லத்தரசி "ஆதி வெங்கட்" அவர்கள் எழுதிய "கோவை2தில்லி" நூல்.

 

செல்லும் இடங்களில் எல்லாம் எதையாவது சுட்டுக்கோண்டே செல்லும் குற்றவாளி வெங்கட் அவர்களைச் செல்ல அனுமதிக்கவில்லையே என அவர் ஏங்கிய தியூ பிரதேச சிறைச்சாலைக்குள் அனுமதித்திருக்கலாமே என்று எண்ணினால் அவர் சுட்டது எல்லாம் Canon DSLR கேமரா கொண்டே என்பதாலும் அக்காட்சிகளை பொருத்தமான இடங்களில் நூலில் சேர்த்து கண்களுக்கு தொய்வில்லாத விருந்து கொடுத்துவிட்டதாலும் அவரின் குற்றங்களை மன்னித்து நம் இதயச் சிறைகளில் அடைத்துவிடலாம்.

 

அப்படங்களின் உணர்வுகளையும் அதன்மூலம் பிறந்த உயரிய சிந்தனைகளையும் "முகம் காட்டச் சொல்லாதீர்" என்னும் கவிதை நூலாக வெளியிட்டிருப்பது மேலும் சிறப்பு.

 

இவ்வளவு பயன்மிக்க, திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் பன்னிரென்டு  நூல்களை தரவிறக்கும் சுட்டியை கீழே தருவதோடு அவரது வடகிழக்கிந்தியப் பயணம், தென்னிந்தியா, அந்தமான் மற்றும் இதர பயண அனுபவங்களையும் புத்தகங்களாகத் தொகுத்து வழங்கும் நாளை எதிர்நோக்கியுள்ளோம்.

 

மின்னூல்கள் தரவிறக்கம் செய்ய சுட்டிகள்...

 

நட்புடன்.

இரா. அரவிந்த்.


32 கருத்துகள்:

 1. வாசகம் நன்று. சில புத்தகங்களைப் படிக்காமல் அப்படியே வைத்திருப்போம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   ஆமாம் சில புத்தகங்கள் படிக்கப்படாமல் அப்படியே வைத்திருப்பதும் உண்மையே! :) என்னிடமும் உண்டு.

   நீக்கு
  2. ஹா. ஹா. உண்மை... நீங்கள் சொன்னதை ரசித்தேன் ஸ்ரீராம் சகோதரரே.. அதைவிட சில புத்தகங்களை பார்த்தும் வாங்காமலேயே வந்து விடுவோம்.

   நீக்கு
  3. என்னிடமும் சில புத்தகங்கள் வாசிக்கப்படாமல் - வாசிப்பிற்கு காத்திருக்கிறது! புத்தகங்களை வாங்க வேண்டும் என நினைத்து, வாங்காமல் வந்ததும் உண்டு - அதற்கு காரணமும் வாசிக்காத புத்தகங்கள் பட்டியலே - நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

   நீக்கு
 2. நண்பர் அரவிந்த் அனைத்தையும் தொகுத்து அருமையாய் விமர்சித்திருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் அரவிந்த் எழுதியது உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. மனதை ஒருமுகப்படுத்தி படிக்க ஆரம்பித்து விட்டால், புத்தகங்கள் என்றுமே இனிக்கும் தன்மையுடையவை.

  அரவிந்த அவர்கள் தங்கள் பயண நூல்களின் பயன்களை நன்றாக அலசித் தொகுத்து அருமையாக எழுதியுள்ளார். தங்களின் பயண நூல்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷம் என்பதை உங்களுடன் ஒவ்வொரு பயணத்திலும் பயணித்த நாங்கள் நீங்கள் பயணக்கட்டுரைகள் எழுதும் போதே உணர்ந்தது. அதை மின்னூலாக தொகுத்து பகிர்ந்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அதைப்படித்து தொகுத்து தந்த சகோதரர் அரவிந்த் அவர்களுக்கும் நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகம் - மனதை ஒருமுகப்படுத்தி படிக்க ஆரம்பித்துவிட்டால் இனிமையே!

   ஒவ்வொரு பயணத்தொடரிலும் கூடவே பயணித்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 4. நண்பர் இரா.அரவிந்த் அவர்களின் ரசிப்பு அருமை...

  வாழ்த்துகள் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. இரா.அரவிந்த் அவர்களின் கடிதம் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. அரவிந்த் அவர்களின் எழுத்தை ரசித்தமைக்கு நன்றி எல்.கே.

   நீக்கு
 7. இரசித்தும் படித்து இரசித்துப் படிக்கும்படியான அருமையான விமர்சனமும் எழுதிய அரவிந்தன் அவர்களுக்கும் அதைவெளியிட்டு கௌரவப்படுத்திய தங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரவிந்த் அவர்களின் எழுத்தினை ஸ்லாகித்து கருத்தினை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி ரமணி ஜி.

   நீக்கு
 8. அரவிந்த் அவர்கள் விமரிசனம் அருமை. புத்தகங்கள் யாவற்றையும் ஒரே தொகுப்பாக வெளியிட்டால் இவரது கருத்துக்களை அறிமுகமாகவோ அல்லது  அட்டைபபட பின்னுரையாகவோ சேர்க்கலாம். 
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புத்தகமாக வெளியிடும் பட்சத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் - அதே தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஜி.

   நீக்கு
 9. என் அணுபவப் பகிர்வை பொருமையாக படித்து கருத்து வழங்கிய அணைவருக்கும் நன்றி. பதிவை முன்கூட்டியே சரிபார்த்து எனக்கு ஊக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கும் கீதா அவர்களுக்கும் இங்கே பகிர்ந்து எங்களை மேலும் ஊக்கப்படுத்திய வெங்கட் ஐய்யாவுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... மகிழ்ச்சி அரவிந்த். தொடர்ந்து வாசியுங்கள். உங்கள் எண்ணங்களையும் சொல்லுங்கள்.

   நீக்கு
 10. வாசகம் மிக அருமை.

  உங்கள் மின்னூல்கள் பற்றி மிக அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறார் அரவிந்த அவர்கள்.
  அவருக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

   பதிவினை வாசித்து உங்கள் கருத்தினையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   நீக்கு
 11. உங்கள் அருமையான பயணத்தொகுப்புகளைப் படித்து அழகான கடிதமாகவும் அந்த விவரங்களை அனுப்பி இருக்கும் அரவிந்தன் அவர்களுக்கு மிக நன்றி. உங்கள் பயணங்களைத் தொடர்ந்தாலும் இத்தனை கோர்வையாக எழுத என்னால் முடியாது.'

  அன்பின் வெங்கட் அறிய வேண்டிய பல அரிய இடங்களை அறிய வைத்ததிற்கு உங்களுக்கு மிக நன்றி.
  அரவிந்தனுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   நீக்கு
 12. அரவிந்தன் அவர்களின் எழுத்து ரசனை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரவிந்த் அவர்களின் எழுத்து உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

   நீக்கு
 13. அணைவருக்கும் மிக்க நன்றி. தரமான தகவல்கள் நிறைந்த புத்தகங்கள் அணைவரையும் சென்று சேரவேண்டும் என்பதே இதன் நோக்கம். வாசிப்பாளர்கள் என்பது வெரும் கத புக் வாசிக்கிறான் என்று பலர் கூறக் கேட்டு வாசிப்பது என்ன? அதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று புரிய வைப்பதும் இத்தகைய நூல் அறிமுகங்களின் நோக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லதொரு நோக்கம் - பாராட்டுகளும் வாழ்த்துகளும் அரவிந்த்.

   மீள் வருகைக்கும் நன்றி.

   நீக்கு
 14. மிக அருமையாக அழகாக நறுக்கென்று குறிப்பிட்ட விஷயங்களுடன் கூடிய விமரிசனம். பாராட்டுகள், வாழ்த்துகள். நூல் அறிமுகங்கள் எல்லாம் அற்புதமான முறையில் சொல்லப்பட்டிருக்கின்றன. சிறப்பான வாசிப்பனுபவம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....