திங்கள், 18 மே, 2020

அந்தமானின் அழகு – கப்பலிலிருந்து சூரிய அஸ்தமனம் – இணையப் பிரச்சனை


அந்தமானின் அழகு – பகுதி 32


முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6  பகுதி 7 பகுதி 8 பகுதி 9  பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30  பகுதி 31   


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


A BEAUTIFUL SUNSET IS YOUR REWARD FOR SURVIVING ANOTHER DAY. ENJOY AS MANY AS YOU CAN.” – UNKNOWN


ஷாகீத் த்வீப் தீவு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நீல் தீவிலிருந்து சொகுசுக் கப்பலில் புறப்பட்டு, அந்தமான் நிகோபார் தீவுகள் யூனியன் பிரதேசத்தின் தலை நகரமான போர்ட் Bப்ளேயர் நோக்கி Macphal என்ற சொகுசுக் கப்பலில் பயணம் செய்தோம் என்று சென்ற பகுதியில் உங்களுடன் தகவலை பகிர்ந்து கொண்டிருந்தேன்.  அது உங்கள் நினைவில் இருக்கலாம்! இந்தக் கப்பல் பயணத்தில் நாம் கடக்கப் போகும் தொலைவு 37 கிலோமீட்டர் – சுமார் ஒரு மணி நேரம் எடுக்கும் இந்தப் பயணத்தில் எங்கள் குழுவினருக்கு கிடைத்த இருக்கைகள் முன்பக்கத்தில் கண்ணாடிக்கு அருகில் என்பதையும் எங்கள் கப்பல் புறப்பட்ட நேரம் மாலை நான்கு மணி என்பதையும் சென்ற பகுதியில் சொல்லி இருந்தேன்.  ஆனால் கப்பலில் புறப்பட்ட போது நாங்கள் காணப் போகும் அற்புதமான காட்சியைப் பற்றி நாங்கள் அறிந்திருக்கவில்லை.  அந்தக் காட்சி என்ன தெரியுமா – எங்கள் கண்முன்னர் அன்றைய தினத்தின் சூரியாஸ்தமனம் – அதுவும் கப்பலில் பயணித்தபடியே!  ஆஹா என்ன அருமையான காட்சி அது! 


கடலில் பயணித்தபடியே எங்கள் கப்பலின் முன் பகுதியில் இருந்த கண்ணாடி வழியே கடலில் சூரியனின் கிரணங்கள் பட்டு தங்கமென மின்ன, சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்க, கடலரசன் சூரியக் கோளத்தினை மொத்தமாக விழுங்கும் காட்சி – ரொம்பவே அழகாக இருந்தது.  முன் பக்க இருக்கைகள் எங்களுக்கானது என்றாலும் அங்கே நிறைய பயணிகள் படம் எடுப்பதற்காக வந்து நின்றும், கீழே உட்கார்ந்தும் கொண்டார்கள் என்பதால், என் கேமராவில் படம் எடுக்கத் தகுந்த வசதிகள் இல்லை. ஆனால் மொபைல் வழி சில படங்களை குழுவில் உள்ளவர்கள் எடுத்தார்கள். அனைத்தும் சிறப்பாக வந்திருந்தன.  அந்த படங்களையே நான் இந்தப் பதிவில் இணைத்திருக்கிறேன்.  நான் கேமராக் கண்கள் கொண்டு பார்க்காமல் ஆண்டவன் அளித்த இரு கண்களைக் கொண்டு பார்த்து ரசித்துக் கொண்டே வந்தேன்.  மறக்க முடியாத சூரியன அஸ்தமனக் காட்சிகள் அவை.  கடலில் பயணித்தபடியே பார்த்த அந்த சூர்யாஸ்தமனக் காட்சியை, வாழ்நாள் முழுவதும் நிச்சயம் மறக்கவே முடியாது!


சுகமான பயணமாக இருந்த கப்பல் பயணத்தில் சுமார் ஒரு மணி நேரம் பயணம் செய்து ஷாகீத் த்வீப் தீவிலிருந்து போர்ட் Bப்ளேயர் தீவிற்கு வந்து சேர்ந்திருந்தோம்.  துறைமுகத்திற்கு வந்து சேரும்போதே எங்கள் பயண ஏற்பாடுகளைச் செய்த சுமந்த் அவர்களை அழைக்க, ஓட்டுனருடன் எங்களுக்கான வாகனம் துறைமுகத்தில் காத்திருக்கும் தகவலை அளித்தார் அவர்.  துறைமுகத்திலிருந்து நேரே தங்குமிடமான கவிதா ரீஜெண்ட் தான் வர வேண்டும். அன்றைய தினம் வேறு எங்கேயும் சுற்றிப் பார்க்கப் போவதில்லை.  காலையிலிருந்து சுற்றிக் கொண்டிருக்கிறோமே! அதுவும் இல்லாமல் என்னதான் கடலில் குளித்த பிறகு நல் நீரில் குளித்திருந்தாலும் தங்குமிடம் திரும்பி மீண்டும் ஒரு முறை குளித்தால் தானே திருப்தி!  கொஞ்சம் பயண அலுப்பும் போகுமே! தங்குமிடம் திரும்பி, அவரவர்களுக்கான அறைகளுக்குச் சென்று சேர்ந்தோம்.  எங்களது உடைமைகளில் சிலவற்றை அங்கே வைத்துச் சென்றிருந்தோம் என்று முன்னர் சொன்னதை என்பதை நீங்களும் நினைவில் வைத்திருக்கலாம்! அந்த உடைமைகளை தங்குமிட சிப்பந்தி சாஜன் அவரவர் அறைகளுக்கு கொண்டு வந்து தந்தார்.


குளித்து புத்தணர்வுடன் நான் தயாராக இருந்தேன்.  நண்பரின் மகளுக்கு கொஞ்சம் Print Out எடுக்க வேண்டியிருந்தது. சரி என நண்பரின் மகளும் நானும் அபெர்தீன் பஜாரில் கடைகள் இருக்கலாம் என இணைய சேவை வழங்கும் இடத்தினைத் தேடிச் சென்றோம். ஒரு கடை திறந்திருந்தது – இங்கே பல கடைகள், மாலை ஏழு மணிக்கு முன்னராகவே அடைத்து விடுகிறார்கள்.  சரி என அங்கே சென்று இணையத்தின் வழி Print Out எடுக்க கூகிள் கணக்கில் நுழைய முயற்சிக்க, சுற்றிக் கொண்டே இருந்தது! சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் – “நல்லா பாருங்க, கவனிச்சு பாருங்க!”ன்னு Psychiatrist சொல்வது நினைவில் வந்தது, நாம் நமக்குள் நுழைந்து சின்ன வயது நினைவுகளைச் சொல்லி விடுவோம் போல இருந்தது - அந்த அளவுக்குச் சுற்றியது! இணையம் ரொம்பவே படுத்தல்! இத்தனைக்கும் இரண்டிரண்டு இணைப்புகளை வாங்கி வைத்திருக்கிறார் அந்த கடை உரிமையாளர். நண்பரின் மகள் முயற்சித்துக் கொண்டிருக்க, நான் கடை உரிமையாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.  அந்தமானில் இணையம் ரொம்பவே படுத்தல், அலைபேசி வசதிகளும் ரொம்பவே மோசம் என்று சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார்.


ஒரு பெண் வந்து மலை, கடல், அலை என எங்கே சென்றாலும் அலைபேசி இணைப்பு உங்களுக்கு கிடைக்கும் அதுவும் 4ஜி என நிறைய விளைம்பரம் செய்கிறார்களே, அதுவும் இங்கே கிடைக்காதா என சிரித்தபடியே கேட்க, அந்தப் பெண் மட்டும் என் கையில் கிடைத்தால் உதைக்க வேண்டும் எனத் தோன்றுகிறது என கொந்தளித்தார். பெண் பாவம் பொல்லாதது என்று நினைத்துக் கொண்டு விளம்பரத்தினை நம்பி ஏமாற்றம் அடையக் கூடாது என சொன்னேன்.  ஆனால் ஒரு நல்ல விஷயம் – முன்னேற்றம் பற்றிய விஷயம் ஒன்றை அந்தக் கடை உரிமையாளர் பகிர்ந்து கொண்டார்.  கடலின் கீழ் வழியே Optical Fibre மூலம் இணைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் இருக்கிறது – இன்னும் சில மாதங்களில் இந்தப் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கிறார்கள் எனும் தகவல் தான் அது.  அது மட்டும் முடிந்து விட்டால் இணைய வசதிகள் இன்னும் அதிகமாக இருக்கும். அந்தமான் வரும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது, இங்கே இருக்கும் சுற்றுலா நிறுவனங்கள் அனைத்துமே அவதிப்படுவது இந்த இணைய/அலைபேசி வசதிகள் குறைவினால் தான்.  பல முறை இணைய வழி முன்பதிவு செய்வதில் தடைகள் ஏற்படுகின்றது. நீங்கள் முன்பதிவு பற்றி மின்னஞ்சல் அனுப்பினால், அதைப் பார்ப்பதற்குள் எங்கள் தாவு தீர்ந்து விடுகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.


கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆனபிறகும் எங்களால் எங்களுக்குத் தேவையான Print Out – இரண்டே இரண்டு பக்கம் தான் – எடுக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல், அலைபேசியில் கிடைத்த இணையம் கொண்டு தரவிறக்கம் செய்து, Share it வழி கடை உரிமையாளர் அலைபேசிக்கு அனுப்பி, அவரது அலைபேசியை கணினியில் இணைத்து பிறகு Print Out எடுத்தோம்! இதை முன்னரே செய்திருக்கலாம் – Share it பயன்படுத்த வேண்டாம் என நினைத்ததால் முதலில் செய்யவில்லை. கூடவே அங்கே காத்திருந்த வேளையில் கடை உரிமையாளரிடம் பேசியதும் ஒரு விதத்தில் நல்லது தானே – உள்ளூர் மக்களுக்கு இருக்கும் பிரச்சனைகளைத் தெரிந்து கொள்ள முடிந்ததே – சுற்றுலா செல்லும் சமயங்களில் பார்க்க வேண்டிய இடங்களை மட்டும் பார்த்து வருவதில் எனக்கு எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை. உள்ளூர் மக்களுடன் பேசினால் தான் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும் என்பது என்னுடைய அசைக்கமுடியாத நம்பிக்கை.  பாருங்களேன் – இந்த இணையத் தொடர்பில் இருக்கும் பிரச்சனைகளை அங்கே பேசியதால் தானே தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த விஷயத்தினை உங்களுக்கு இங்கே சொல்வது எதற்காக என்றால் – இங்கே பயணம் செய்யும் பட்சத்தில் உங்கள் பயணச் சீட்டுகள், முன்பதிவு சீட்டுகள் என அனைத்தையும் புறப்படும்போதே Print out – ஒன்றுக்கு இரண்டாக எடுத்து வைத்துக் கொள்வது அவசியம் என்பதற்காகவே.


அங்கேயிருந்து புறப்பட்டு நானும் நண்பர் மகளும் பேசியபடியே வரும்போது மணிக்கூண்டு அருகே ஒரு டீ கடை. சுடச் சுட மெதுவடை தயாராகிக் கொண்டிருந்தது.  அங்கே நின்று அவரும் நானும் தேநீர்/வடையைச் சுவைத்தோம். சின்னச் சின்னதாக சில பொருட்களை வாங்க வேண்டியிருந்தது. அவற்றையும் வாங்கிக் கொண்டு பேசிக் கொண்டே நடந்தோம். எங்கள் தங்குமிடம் திரும்பியபோது தான் தெரிந்தது – ஒரு கொண்டாட்டத்திற்கான முனைப்பில் இருந்தது எங்கள் குழு என்பது!  என்ன கொண்டாட்டம்? என்ன விசேஷம் என்பதை இப்போது சொல்லவா? இல்லை அடுத்த பகுதியில் சொல்லவா? அடுத்த பகுதியிலேயே சொல்கிறேன்! நண்பர்களே! இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

46 கருத்துகள்:

  1. நிச்சயம் அந்த சூர்யாஸ்தமனம் மறக்க முடியாததாக இருக்கும். பல கடலோடிகளின் நினைவு வந்திருக்கும். நல்லவேளை காமெரா கண்கொண்டு நஷ்டப்படாமல் சொந்தக் கண்களில் வாங்கி நினைவு வங்கியில் சேமித்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். நிச்சயம் மறக்க முடியாத காட்சி தான். கடலோடிகள் நினைவு - ம்ம்ம். வந்தது.

      காமெரா கன்கொண்டு நஷ்டப்படாமல் சொந்தக் கண்ணில் வாங்கி நினைவு வங்கியில் வைத்துக் கொள்வதும் ஒரு சுகமே.

      நீக்கு
  2. அவர்களின் இணையப் பிரச்னை சீக்கிரம் தீரட்டும். மெதுவடை நன்றாய் இருந்ததா? சட்னி ஏதும் தந்தார்களா?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் அங்கே இணையப் பிரச்சனை தீர வேண்டும்.

      மெதுவடை நன்றாகவே இருந்தது. சட்னியும் உண்டு - ஆனால் நாங்கள் வாங்கிக் கொள்ளவில்லை ஸ்ரீராம்.

      நீக்கு
    2. திங்கள் என்பதால் மெதுவடை நினைவில் தங்கிவிட்டதா?

      நீக்கு
    3. ஹாஹா... திங்கள் என்றாலே சமையல்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. சூரியாஸ்தமனம் ஆகா...!

    Optical Fibre பணிகள் முடிவடைந்தால் சிறப்பு தான்...

    // Print out – ஒன்றுக்கு இரண்டாக // இந்த பயணத்தின் முக்கிய தகவல்...

    வடை போச்சே... ஹா... ஹா... கொண்டாட்டத்தின் விசேசம் என்னவென்று வரும் பதிவில் அறிய காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூரியாஸ்தமனம் காட்சிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      விரைவில் ஆப்டிகல் ஃபைபர் பணிகள் முடிந்தால் நலமே.

      பயணத்திற்கான சில முக்கியத் தகவல்கள் - கடைசியில் தொகுத்துத் தர எண்ணம்.

      வடை போச்சே! :) அங்கே இருந்த நாட்களில் அதிகம் ருசித்தவை - இளநீரும் வடையும்! :)

      நீக்கு
  4. காணொளிப்படங்கள் ஸூப்பர் ஜி

    கப்பல் பயணம் வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவிக்கணும்.

    நான் ஸ்டாப் கொண்டாட்டம் அறிய ஆவல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிப் படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      கப்பல் பயணம் - உங்களுக்கு விரைவில் அமைந்திட வாழ்த்துகள்.

      கொண்டாட்டம் பற்றிய தகவல்கள் - நாளை மறுநாள் வெளியாகும்!

      நீக்கு
  5. பினாங்கு சென்ற போது பெர்ரி மூலம் கடல் பயணம் சென்று உள்ளேன். கப்பல் பயணம் இனிமேல் தான் செல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே சில கப்பல் பயணங்கள் உண்டு - Cruise, அரசுக் கப்பல்கள் என உங்களுக்கு அனுபவம் கிடைக்கும் ஜோதிஜி. நான் இந்தியாவில் மட்டுமே பயணித்திருக்கிறேன் - இது வரை வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை! இனிமேலும் அமையும் எனத் தோன்றவில்லை.

      நீக்கு
  6. படங்கள் அருமை. கப்பல் படத்தையும் போட்டிருக்கலாம். பேச்சு கொடுத்து விவரங்கள் அறிவதில் நீங்கள் நிபுணர் ஆயிற்றே!! 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கப்பல் படம் - ஏற்கனவே சென்ற பயணங்களில் படம் சேர்த்திருக்கிறேன். இந்தக் கப்பல் பயணத்தில் ஆட்கள் இல்லாமல் கப்பலை படம் எடுக்க இயலவில்லை! இருக்கும் சில படங்களில் குழுவினர் இருப்பதால் இங்கே சேர்க்கவில்லை.

      பேச்சு கொடுத்து விவரங்கள் - :) நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  7. பயணம் நிறைவுப்பகுதி நோக்கிச் செல்கிறது. சூரிய அஸ்தமனப் படங்கள் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சில பகுதிகள் வரும் நெல்லைத் தமிழன் - அவ்வளவு சீக்கிரம் முடியாது! :) ஹாஹா...

      சூரிய அஸ்தமனப் படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  8. சூரியன் மறைவுப் படங்கள் அனைத்தும் அருமை அழகு ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூரியன் மறைவுப் படங்கள் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. அற்புதமான சூரியாஸ்தமனக் காட்சிகள். நேரில் பார்த்தால் எப்படி இருந்திருக்கும்! இன்னும் பழைய சில பதிவுகளைப் படிக்காததால் தொடர்பு புரியவில்லை. காணொளியையும் பார்க்க முடியவில்லை. இணையப் பிர்ச்னை இங்கேயே இருக்கும்போது அவங்களுக்கு இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும். நாங்களும் சுற்றுலா போனால் உள்ளூர் மக்களிடம் பேசிப் பல விஷயங்களைச் சேகரித்துக் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய பதிவுகள் - முடிந்த போது படிக்கலாம் கீதாம்மா. அவசரம் ஒன்றுமில்லை.

      உள்ளூர் மக்களிடம் பேசுவதில் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியும். பெரும்பாலும் நான் பேசுவேன்.

      நீக்கு
  10. //எங்கள் கண்முன்னர் அன்றைய தினத்தின் சூரியாஸ்தமனம் – அதுவும் கப்பலில் பயணித்தபடியே! ஆஹா என்ன அருமையான காட்சி அது!//

    அருமையான காட்சிதான், நாங்களும் கண்டு களித்தோம்.
    பயண அனுபவம், இணைய அனுபவம் எல்லாம் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காட்சிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      நீக்கு
  11. சீக்கிரமாகவே வெளியிட்டு உடனே வந்து விடுகிறதே உங்கள் வலைப்பக்கத்தில்! இப்போதைக்கு எங்கள் ப்ளாகில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. அடுத்து அதிராவின் "என் பக்கம்"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் இப்படி படுத்துகிறது வலைப்பூவும், இணையமும். சீக்கிரம் வெளியிட்டால் மகிழ்ச்சி தான் கீதாம்மா...

      நீக்கு
  12. கப்பலில் பயணித்தபடியே சூரிய அஸ்தமன காட்சிகள் வாவ்! சூப்பரோ சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காட்சிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு
  13. சூர்ய அஸ்தமனம் பற்றிய பொன்மொழியுடன் அழகான படங்கள்...

    ஒரு நாளை நல்லபடியாக நடத்தியதில் தான் சூரியனுக்கு எத்தனை மகிழ்ச்சி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஜி.

      நீக்கு
  14. அத்தனையும் அழகான படங்கள் ... என்றுமே அழகில் நம்மை மெய்சிலிர்க்க வைப்பது இயற்கை மட்டும்தான் !!! ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிவா.

      இயற்கை அழகின் முன் வேறு எதுவும் அழகல்ல!

      நீக்கு
  15. கிழக்கு வானம் சிவக்கும் நேரம் .. பாடல் நினைவுக்கு வந்தது படம் பார்த்தவுடன், பின்புதான் கண்டுகொண்டேன் அது மேற்கு வானம் சிவக்கும் நேரம் என..

    இயற்கையில் எல்லாமே அழகோ அழகுதான்.. சூரியன் என்ன சந்திரன் என்ன மேகம் என்ன முகில் என்ன.. கடல் என்ன.. ஏன் ஒரு குட்டிச் செடியைக் கொஞ்சம் நேரம் உற்றுப் பார்த்தால்.. அதுவும் மிக மிக அழகாகவும், இறைவனின் படைப்பில் வியப்பும் தெரியும்..

    அழகிய பயணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேற்கு வானம் சிவக்கும் நேரம் - :) ஆமாம். மாலை நேரத்தில் எடுத்த படம் தான் அதிரா.

      இயற்கையின் அழகுக்கு நிகர் வேறென்ன!

      பயணமும் பகிர்வும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  16. அழகான படங்களுடன் பொன்மொழியையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      நீக்கு
  17. அழகான படங்கள் ஐயா. அடியேனின் புது மின்னூல் https://freetamilebooks.com/ebooks/karudasevai/ சமயம் கிடைத்தால் பாருங்கள் ஐயா. மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முருகானந்தம் ஐயா.

      புது மின்னூல் - வாழ்த்துகள். தரவிறக்கம் செய்ய முயன்றேன். தளத்தில் ஏதோ பிரச்சனை. நாளை மீண்டும் முயற்சி செய்வேன்.

      நீக்கு
  18. சூரியன் மறையும் காட்சிகள் அருமை. அதுவும் கடலில் பயணித்துக் கொன்டே என்ன ஒரு அனுபவம் வெங்கட்ஜி!

    தொடர்கிறோம்..

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூரியன் மறையும் காட்சிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி. ஆமாம் மறக்க முடியாத அனுபவம் அது.

      நீக்கு
  19. பரத்பூர் கடற்கரையும் பார்த்துவிட்டேன்! என்ன அழகு! ஜி செம அனுபவங்கள் உங்களுக்கு.

    இப்பதிவில் சூர்யாஸ்தமனம் வாவ்! கடலின் விளிம்பில் சூரியன் மறைவதைப் பார்க்க ஆஹா கப்பலில் பயணித்துக் கொண்டே. கன்னியாகுமரியில் பல முறை பார்த்த நினைவு வந்தது. நாரோயிலில் இருந்தவரை அஸ்தமனம் பார்த்ததுண்டு ஆனால் காலை சூரியன் உதிப்பதை கன்னியாகுமரியில் பார்த்ததே இல்லை அங்கு தங்கும் சான்ஸ் இல்லையே..

    நல்ல பயணம் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரத்பூர் கடற்கரையை நீங்களும் பார்த்து ரசித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      கன்னியாகுமரி சில முறை சென்றிருந்தாலும் எனக்கும் அங்கே சூரிய உதயம் பார்க்க வாய்ப்பு கிடைத்ததில்லை. எப்போதேனும் சென்று வர வேண்டும் - குடும்பத்துடன். பார்க்கலாம் வாய்ப்பு எப்போது கிடைக்குமென.

      நீக்கு
  20. அந்தப் பெண் மட்டும் என் கையில் கிடைத்தால் //

    ஹா ஹா ஹா ஹா ஹா எனக்கும் அப்பெண்ணைப்ப்பார்க்கணும்!!! பின்ன இங்கும் இணையம் சுத்து சுத்துன்னு சுத்திக் கொண்டே ஏஏஏஏஏஏ இருக்கும்...டைம் ரொம்ப வேஸ்ட் ஆகுது வலையில் உட்கார்ந்தால். எனவே ஒரு கருத்து போடும் போது போகவில்லை என்றால் எழுந்து உள்ளே போய் வேலை ஏதேனும் முடித்து வருவது அல்லது ஏதேனும் கதைகள் வாசிக்க டாக்குமென்ட் எடுத்து வைத்துக் கொண்டு அதை வாசித்து இங்கு வ்ந்து கருத்து போச்சானு பார்த்து என்று!!!!!

    ஆப்ட்டிகல் ஃபைபர் முடியும் தருவாயிலா ஆஹா நல்ல விஷயம். ரொம்ப வருஷமா நடக்குது இந்தப் பணி. திட்டம். முடிந்தால் நல்லது. இங்கு பயன் உண்டு.

    அது என்ன கொண்டாட்டமாக இருக்கும் என்று கொஞ்சம் யூகிக்க முடியுது பார்ப்போம் அடுத்த பகுதியில்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப்பெண் மட்டும் என் கையில் கிடைத்தால் - ஹாஹா... உண்மை தான். ரொம்பவே பொறுமையை சோதிக்கும் இணையம் எனில் திண்டாட்டம் தான். சில இடங்களில் இதை உணர்ந்திருக்கிறேன்.

      ஆப்டிகல் ஃபைபர் விரைவில் முடிந்தால் நல்லது தான்.

      கொண்டாட்டம் - உங்கள் யூகம் சரியாக இருக்குமா இல்லையா என்பது அடுத்த பகுதியில் தெரிந்து விடும் கீதா ஜி.

      நீக்கு
  21. நன்றாக எழுதுகிறீர்கள். ஆயிரம் பக்கம் எழுதினாலும் அலுக்காமல் வாசிக்கலாம் போல... இணையப் பிரச்சினை மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கையே பிரச்சினை தான்.....

    என்னைத் தேடி...
    https://vazhkai-oru-porkkalam.blogspot.com/2020/05/ennaith-thedi.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      உங்களது முதல் வருகை மகிழ்ச்சி தந்தது.

      நீக்கு
  22. வெங்கட்,

    பயண அனுபவம் பகிர்ந்தவிதம் அருமை. கூகிள் உதவியுடன் பல இடங்களை சுற்றும் நமக்கு கொஞ்சம் நேரம் கூகுள் சுற்றுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

    மெதுவடையும் தேநீரும் உங்கள் பதிவின் மணத்தை கூட்டுகிறது.

    சூரிய உதயத்தையும் அஸ்த்தமனத்தையும் நேரடியாக பார்ப்பது ஒருவகை சுகமென்றால் அதனை கடற்பரப்பில் பிரதிபலிப்பாக பார்ப்பது கூடுதல் சுகம் .

    பயணங்கள் தொடரட்டும் .

    மீண்டும் ச(சி)ந்தியுங்கள்.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடற்பரப்பில் பிரதிபலிப்பாக பார்ப்பது கூடுதல் சுகம் - உண்மை தான் கோ. மறக்கமுடியாத விஷயம் அது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....