அந்தமானின் அழகு – பகுதி 35
முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34
அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளை, நல்லதொரு
வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரும், அது உண்மை. அதற்காக எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ முடியாது. ஆனால் யாரிடம் எதிர்பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
சென்ற பகுதியில் போர்ட்
Bப்ளேயரிலிருந்து அதிகாலை புறப்பட்டு Bபாராடாங்க் நோக்கி பயணம் செய்ததைப் பற்றியும்
அதற்கான ஏற்பாடுகள், வழிகள் பற்றியும் சொல்லி இருந்தேன். ஜிர்காடாங்க் என்ற பகுதியில் இருக்கும்
வனப்பகுதியின் சோதனைச் சாவடி வரை வந்தது பற்றி சொல்லி இருந்தேன். அந்த சோதனைச் சாவடி இருக்கும் ஜிர்காடாங்க் பகுதியில்
வனப்பாதை திறப்பதற்கு காத்திருந்த வேளையில், அங்கே பணியில் இருந்த அந்தமான்
காவல்துறை அலுவலர் ஒருவரிடம் சிறிது நேரம் பேச முடிந்தது. அங்கே இருக்கும்
வசதிகள், அதிகமான பணி நேரம், வெளியுலகில் நடப்பது எதையும் தெரிந்து கொள்ள முடியாத
சூழல் என அவரது பணியில் இருக்கும் கஷ்டங்களைப் பற்றியும் தற்போதைய அரசியல் சூழல் பற்றியும்
பேசிக் கொண்டிருந்தோம். இந்த மாதிரி பேசிக் கொண்டிருப்பதில் சில விஷயங்களை நாம்
தெரிந்து கொள்வதோடு, அவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சி – தன்னை மதித்து பேசுகிறார்களே
என்ற மகிழ்ச்சி அவர்களுக்கும் தர முடிவதில் நமக்கும் மகிழ்ச்சி – கூடவே சில
தகவல்கள்/அனுபவங்கள் நமக்கு லாபம்!
வனப்
பகுதியில் நுழைவதற்கான அனுமதியைப் பெற ஓட்டுனர் மார்ஷல் சென்று திரும்பியதும்,
நுழைவாயில் திறக்க முதல் பத்து வண்டிகளுக்குள் எங்கள் வண்டியும் இருந்தது. வாகனம்
புறப்படும் போதே மீண்டும் ஒரு முறை எச்சரிக்கைகளைச் சொல்லி விட்டார் – மார்ஷல்.
பழங்குடி மக்கள் கண்ணில் படுவார்களா? நம்மைப் பார்த்து ஏதேனும் கேட்பார்களா? என்ற
எண்ணங்களுடன் அனைவரும் வாகனத்தில், ஒரு
எதிர்பார்ப்புடன் தான் புறப்பட்டோம். வழி
நெடுக வனப்பகுதி தான். நான் ஓட்டுனருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்ததால்
அவருடன் பேசியபடியே என் கண்களை சுழற்றி பார்த்துக் கொண்டே வந்தேன் – யாராவது
பழங்குடியினர் தென்படுகிறார்களா என?
அதிகாலை நேரம் (06.00 மணி) என்பதால் வெளியே வருவார்களா இல்லையா என்பது ஒரு
பெரிய கேள்விக்குறியாகவே இருந்தது.
வாகனத்தினைச்
செலுத்தியபடியே வழியில் ஒரு இடத்தில் கொஞ்சம் நிதானமாகச் செலுத்திய மார்ஷல்
வனப்பகுதிக்குள் இருந்த ஒரு தற்காலிகக் கட்டிடத்தினைக் காண்பித்தார். அங்கே தான்
பழங்குடி மக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்ய வரும் அரசாங்க மருத்துவர் தினமும்
வருவார் என்றும் கூடவே அவர்களுக்கு ஹிந்தி மொழியைக் கற்றுத் தருபவரும் வந்து ஹிந்தி
கற்றுத் தருவார்கள் என்பதையும் சொல்ல, கேட்டபடியே மேலே பயணித்தோம். சிறிது தொலைவு
சென்றபிறகு சாலையின் ஓரங்களில் மறைந்திருந்த இரண்டு காவலர்கள்/வனத்துறையினரைக்
காண்பித்தார் மார்ஷல் – பயணிகள் எவரேனும் காமிராவைப் பயன்படுத்துகிறார்களா
என்பதைக் கவனிக்க நியமிக்கப்பட்ட அலுவலர்கள் என்பதையும் தெரிவித்தார்.
பத்து,
பதினைந்து கிலோமீட்டர் தொலைவுக்கும் மேல் பயணித்திருந்தோம். ஆனாலும் எங்கள்
கண்களில் இதுவரை ஒரு பழங்குடியினரும் தென்படவில்லை. இங்கே இன்னும் ஒரு விஷயமும் சொல்லி விடுகிறேன் –
இங்கே அனுமதிக்கப்படும் வாகனங்கள் – போர்ட் Bப்ளேயரிலிருந்து டிக்லிபூர் என்ற இடம்
வரை செல்லும் பேருந்துகள், பொருட்களை எடுத்துச் செல்லும் லாரிகள் மற்றும் சுற்றுலா
வாகனங்கள் மற்றும் அரசு வாகனங்கள் மட்டுமே – அதிலும் இரு சக்கர வாகனங்களுக்கு பொதுவாக
அனுமதி இல்லை. காவல்துறை/வனத்துறை அலுவலர்கள் கூட ரோந்துப் பணிகளில் செல்லும்போது
பொதுவாக இரு சக்கர வாகனங்களில் செல்வதில்லை! டுப்பாக்கி (ஓட்டுனர் மார்ஷல்
இப்படித்தான் துப்பாக்கியைச் சொல்லிக் கொண்டு வந்தார்!) ஏந்திச் செல்லும் போது கூட
ஜீப்பில் தான் பயணிக்கிறார்கள்.
சில
மணித்துளிகளுக்குப் பிறகு, எதிரே ஒரு லாரி வந்தது. கொஞ்சம் தொலைவில் வந்தபோதே
மார்ஷல் பார்த்து என்னிடம் சொன்னார் – அந்த வண்டிக்குள் பாருங்கள் என – சில பழங்குடி
மக்களை அழைத்துச் செல்கிறார்கள் – எங்கே? – நாம் வழியில் பார்த்த வனப்பகுதியில்
இருக்கும் மருத்துவ உதவி மையத்திற்கு தான். உள்ளே அமர்ந்திருந்தவர்களை தான்
பார்க்க முடிந்தது. அதனால் முழுமையாக பார்க்க இயலவில்லை. முன்பெல்லாம் குறைவான உடைகளே பயன்படுத்தியவர்கள்
இப்போதெல்லாம் மற்ற மனிதர்கள் போலவே உடைகளை பயன்படுத்துகிறார்கள். வண்டியின் உள்ளேயும் (லாரி ஓட்டுனர் இருக்கும்
பகுதியில்), பின்னேயும் சிலர் இருந்தார்கள் என்பதை லாரி எங்களைக் கடக்கும்
சமயத்தில் பார்க்க முடிந்தது. இன்னும் சில கிலோமீட்டர்கள் பயணித்தபிறகு வேறு ஒரு
வாகனத்தில் இன்னும் சிலர் – இப்படித் தான் பார்க்க முடிந்ததே தவிர, நாங்கள்
பயணித்த பொழுதில் சாலையோரங்களில் நின்று கொண்டு இருப்பவர்களைப் பார்க்க
முடியவில்லை.
மொத்தமாக
ஆறு ஏழு ஜார்வா என அழைக்கப்படும் பழங்குடியினரையே எங்களால் பார்க்க முடிந்தது. திரும்பி
வரும் போது நீலாம்பூர் ஜெட்டி பகுதியில் ஒரு பழங்குடி ஆண் அமர்ந்திருந்தார். அவர்
அருகில் வனத்துறை அலுவலர் அமர்ந்திருந்தார் – அவரைத் தான் சற்றே நிதானித்துப்
பார்க்க முடிந்தது. நாங்கள் சொல்லி அழைத்துச் சென்றதில், எங்கள் குழுவினருக்கு வனப்
பாதையில் பயணித்தும் பயமுறுத்திய அளவுக்கு ஒருவரை கூட பார்க்க முடியவில்லையே
என்பதில் ஏமாற்றம்! அதுவும் அத்தனை திட்டமிட்டு, அவர்களுக்குத் தெரியாமல் பார்க்க
வேண்டும் என்றெல்லாம் பேசி, கடைசியில் சரியாக பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கம்!
நாங்கள் நீலாம்பூர் ஜெட்டி என அழைக்கப்படும் இடத்தினை அடைந்தோம். அதற்கு மேல்
எங்கள் வாகனம் பயணிக்காது! அப்படி பயணிக்க வேண்டுமெனில் அதையும் கப்பலில் ஏற்ற
வேண்டும்! அரசுப் பேருந்துகளும் இன்னும் சில வாகனங்களும் கப்பலில் ஏறக்
காத்திருந்தன. நாங்கள் வண்டியை அங்கேயே வைத்து விட்டு கப்பலில் செல்ல வேண்டும்.
கப்பல் பயணம் எப்படி, அதன் தகவல்கள் என்ன என்பதையெல்லாம் அடுத்த பகுதியில்
சொல்கிறேன்.
நண்பர்களே! இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில்
சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
Anti climax
பதிலளிநீக்குCould have included some photos by google search. Your speciality is photo journalism. That is missing in this blog.
கூகுளிலிருந்து படம் சேர்த்திருக்கலாம் - சேர்க்கத் தோன்றவில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.
இனிய காலை வணக்கம் அன்பு வெங்கட்.
பதிலளிநீக்குஇத்தனை முன்னேற்பாடுடன் சென்றும் பழங்குடி மக்களை அதிகம் பார்க்க முடியவில்லை என்பது ஏமாற்றமே.
ஆனாலும் அவர்கள் பாதுகாக்கப் பட வேண்டியவர்கள்
என்பதில் மறு கருத்து இல்லை.
அவர்களை தவறுதலாகப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள் தானே,.
சுவாரஸ்யமாகச் சொல்லி வருகிறீர்கள். நன்றி மா.
வணக்கம் வல்லிம்மா...
நீக்குஅதிகம் பார்க்கமுடியவில்லை என்பதில் வருத்தம் தான் - ஆனாலும் அதற்காக ஏமாற்றம் ஒன்றும் இல்லை.
பதிவின் வழி சொல்லும் தகவல்கள் ஸ்வாரஸ்யமாக இருந்ததில் மகிழ்ச்சி மா.
சுமார் 30 வருடங்களுக்கு முன்பு (1990) என் அலுவலகத்தில் இருந்து சிலர் LTC பயணமாக அந்தமான் சென்று வந்தனர். அதில் ஒரு குடும்பம் மட்டும் நீங்கள் சொன்ன வழியில் டாக்ஸியில் பயணித்து பழங்குடிகளைக் கண்டது பற்றி சொன்னார்கள். வாழைப்பழம், மற்றும் பிசுகட் கொண்டு போனதையும் அவற்றை பழங்குடியினர் பிசுக்கோத்தா என்று அடித்து பிடித்து வாங்கியதையும் சொன்னார்கள். புகைப்படம் எடுக்கவில்லை. தடை. அப்போது கான்வாய் ஒன்றும் இல்லை.
பதிலளிநீக்குமுப்பது வருடங்களுக்கு முன்பான சூழல் இப்போது இல்லை. நிறைய மாற்றங்கள் வந்து விட்டன. கூடவே சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. அப்படி வருபவர்கள் செய்த சில செயல்களால் இப்படியான கட்டுப்பாடுகள் அவசியமாகி விட்டது ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.
நீக்குகடைசிவரை பழங்குடியினரை சந்தித்து பேசாதது ஏமாற்றமாக இருக்கிறது ஜி
பதிலளிநீக்குகொஞ்சம் ஏமாற்றம் தான் - இருந்தாலும் அந்தப் பாதையில் பயணித்ததும் ஒரு நல்லனுபவம் தானே கில்லர்ஜி. அந்த மகிழ்ச்சி கிடைத்ததே!
நீக்குசட்டென்றும் சப்பென்றும் ஆகி விட்டது போல அனுபவம். நம் ராசி! ஆனால் அந்த த்ரில் அனுபவம் மறக்க முடியாததுதான்! இல்லையா?
பதிலளிநீக்குசில சமயங்களில் இப்படித்தான் - அதீத எதிர்பார்ப்பு இருந்தால் அந்த விஷயம் நடப்பதில்லை. த்ரில் அனுபவம் மறக்க முடியாதது தான் ஸ்ரீராம்.
நீக்குபழங்குடி மக்களை அடுத்த முறை பார்த்து விடலாம் ஜி...
பதிலளிநீக்குஆமாம். இன்னுமொரு பயணம் அந்தப் பாதையில் செல்ல திட்டம்/ஆசை உண்டு தனபாலன். அப்பொழுது பார்த்துவிடலாம்!
நீக்குயாரிடம் எதிர்பார்க்கவேண்டும்...மிகவும் சிறப்பு. கப்பலில் தொடரக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குகப்பலில் பயணம் - தொடர்ந்து பயணிப்போம் ஐயா.
நிதானித்தாவது பழங்குடியினரை பார்க்க கிடைத்ததே.
பதிலளிநீக்குஅடுத்து தொடர்வோம்...
சிலரையாவது பார்க்க முடிந்ததே... அதில் எங்களுக்கும் மகிழ்ச்சி தான் மாதேவி.
நீக்குரொம்ப பில்டப் கொடுத்துவிட்டார்கள் போலிருக்கு. அதனால் வந்த ஏமாற்றம்தான்.
பதிலளிநீக்குஅது சரி... காட்டிலேயே மிருகங்களைப் பார்ப்பது நிச்சயமில்லை. அதுபோல இவங்களும் அவங்க வேலையைப் பார்த்துக்கொண்டு காட்டுக்குள்ளேயே இருப்பாங்க. வண்டி வருதுன்னு உங்களைப் பார்க்க வெளியில் சாலையிலா வந்து நிற்பார்கள்?
நாகரீக உலகில் அனைவரின் உடை உடுத்தும் வழக்கமே மாறிவிட்டது.
ரொம்பவே பில்டப் - :) உண்மை தான் நெல்லைத் தமிழன்.
நீக்குகாட்டில் மிருகங்களைப் பார்ப்பதும் அப்படியே - சென்ற வனப் பயணங்களில் சில சமயம் அப்படி ஆனதுண்டு - புலிகளைப் பார்க்கச் சென்று மான்களை பார்த்து வந்தோம்! மத்தியப் பிரதேசத்தில்!
பழக்குடி மக்களுக்கு இந்தி கற்றுத் தருகிறார்களா?
பதிலளிநீக்குஆமாம் கரந்தை ஜெயக்குமார் ஐயா. அந்தப் பகுதியில் ஹிந்தி மொழி தான் அதிகம் பேசுகிறார்கள். அதனால் ஹிந்தி தான் கற்றுத் தருகிறார்கள்.
நீக்குஇன்னாது பழங்குடி மக்களை சந்திக்கவே இல்லியா?! இதுக்கா போன வாரம் முதல் காத்திருக்கோம்...
பதிலளிநீக்குபயணித்த போது பார்த்ததோடு சரி. நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை ராஜி.
நீக்குபழங்குடி மக்களைப் பார்க்க முடியாமல் போனதில் வருத்தம் தான். ஆனாலும் தூரத்திலிருந்தாவது தெரிந்தனரே! ஒரு வேளை நீங்கல்லாம் வரப்போவதைத் தெரிந்து கொண்டு ஒளிந்து கொண்டார்களோ? ஹிந்தி பேச வருகிறதாமா அவர்களுக்கு? அடுத்துக் கப்பல் பயணத்துக்குத் தயாரா இருக்கோம்.
பதிலளிநீக்குதூரத்திலிருந்து பார்க்க முடிந்ததே - அதில் மகிழ்ச்சி தான். நாங்கள் செல்வது தெரிந்து ஒளிந்து கொண்டார்களோ - இருக்கலாம் - நம்மை விட அதிக டெரரா இருப்பாங்க போலன்னு அவங்க நினைத்திருக்கலாம் கீதாம்மா! ஹிந்தி கற்றுக் கொண்டு பேசுகிறார்கள்.
நீக்குபழங்குடி மக்களை சந்திக்க முடியாமல் போனது ஏமாற்றம்தான்.
பதிலளிநீக்குஉண்மை தான் கோமதிம்மா... ஆனாலும் இப்படி நடக்க வாய்ப்பு இருந்ததை உணர்ந்திருந்தேன்.
நீக்குவனச் சாலைக்குள் திகில் பயணம்...
பதிலளிநீக்குபழங்குடியினரைப் பார்ப்பதற்கு காருக்குள் பயணித்த மாதிரி இருக்கிறது...
காருக்குள்/பேருந்துக்குள் பயணம் - :)
நீக்குமறக்க முடியாத பயணமாக அமைந்துவிட்டது துரை செல்வராஜூ ஐயா.
அவுங்களுக்குத் தமிழ் கத்துக் கொடுக்கச் சொல்லி யாரும் போராடலையாமா!...
பதிலளிநீக்குஹாஹா... நல்ல கேள்வி! அங்கே ஹிந்தி தான் முதல் மொழி. பள்ளிகள் இருக்கும் தீவினைப் பொறுத்து, ஹிந்தி, தமிழ், பெங்காலி, தெலுங்கு என பல மொழிகளை அங்கே கற்றுத் தருகிறார்கள் துரை செல்வராஜூ ஐயா.
நீக்குஅந்தமானைப் பார்க்க ஆசையிருந்தது - பணியில் இருந்தபோது. வாய்க்கவில்லை. அமெரிக்காவை அருகில் இருந்து பார்க்கமுடிகிறது. நம்க்கு அருகிலே இருக்கும் 'அந்த' மானைப் பார்க்க முடியவில்லை. உங்கள் வார்த்தைகள் அந்தக் குறையை ஓரளவு போக்குகிறது!
பதிலளிநீக்குஉங்களுக்கும் ஒரு அந்தமான் பயணம் வாய்க்கட்டும் இராய செல்லப்பா ஐயா.
நீக்குபதிவின் வழி நீங்களும் அந்தமானை பார்த்து ரசிப்பதில் மகிழ்ச்சி.
பழங்குடி மக்களைப் பற்றி அறிய ஆவலோடு எதிர்பார்த்தேன். இப்போது அவர்களிடையும் மாற்றங்கள் வந்திருப்பது அறிய முடிகிறது. தொடர்கிறென்.
பதிலளிநீக்குதுளசிதரன்
நிறைய மாற்றங்கள் வந்திருக்கின்றன துளசிதரன் ஜி.
நீக்குதொடர்ந்து பயணிப்போம்.
வெங்கட்ஜி இன்றைய வாசகத்தின் வரிகள் உங்கள் பதிவுக்கு ரொம்பவே பொருத்தமோ!!! ஹா ஹா //ஆனால் யாரிடம் எதிர்பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.// இந்த ஒன்றைத் தவிர. எதிர்பார்த்தேன் பழங்குடி மக்களைப் பற்றிய உங்கள் விவரணம். பரவாயில்லை அவர்கள் என்ன ஷோ பொருட்களா நாம் போகும் போது அங்கு வந்து நமக்குக் காட்சி தர. அவர்களும் மக்கள் தானே. பாவம்.
பதிலளிநீக்குநான் முன்பு அவர்களைப் பற்றி வாசித்ததை விட இப்போது நிறைய முன்னேற்றங்கள் வந்திருக்கு போல. நல்ல விஷயம்தான். கொஞ்சம் பேரையேனும் பார்க்க முடிந்ததே. ஒரு வேளை இன்னும் சில வருடங்களில் ஃபோட்டோ கூட எடுத்துக் கொள்ளும் வகையில் முன்னேற்றம் வந்துவிடும் என்றே தோன்றுகிறது அவர்களும் கற்க தொடங்கியிருக்கிறார்களே! ஒருவரையேனும் பார்க்க முடிந்ததே.
அவர் அருகில் செல்ல சான்ஸ் கிடைத்திருந்தால் கண்டிப்பாக வெங்கட்ஜி அவரோடு சைகை பாஷையிலேனும் பேச முயற்சி செய்திருப்பார்!! பேசி இங்கு பகிர்ந்திருப்பார்..
கீதா
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குஅவர்கள் என்ன ஷோ பொருட்களா? நல்ல கேள்வி.
நிறைய முன்னேற்றங்கள் இருக்கின்றன. நல்ல முன்னேற்றமும் கூட. ஹிந்தி படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் வாய்ப்பு கிடைத்திருந்தால் நிச்சயம் பேசியிருப்பேன் கீதாஜி! :)
எங்களுக்கே கொஞ்சம் ஏமாற்றம் என்றால் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடத் தோன்றியிருக்கும் இருந்தாலும் அதையும் எதிர்பார்த்துதான் சென்றிருப்பீர்கள் இல்லையா வெங்கட்ஜி?
பதிலளிநீக்குபொதுமக்கள் அவர்களைப் பார்க்க சான்ஸ் கிடைத்தால் பேச அனுமதியுண்டா? அவர்கள் ஹிந்தியில் பேசுவார்கள் என்றால்?
கீதா
ஆமாம். என்னைப் பொறுத்தவரை அதீதமான எதிர்பார்ப்புகள் இல்லை - பார்க்க முடிந்தால் நல்லது. இல்லை எனில் ஒன்றும் வருத்தமில்லை என்ற எண்ணத்துடன் தான் சென்றேன்.
நீக்குபொதுவாக அவர்களுடன் உரையாட நமக்கு அனுமதி இல்லை கீதாஜி.
அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள்
பதிலளிநீக்குகீதா
வாழ்த்துகளுக்கு நன்றி கீதாஜி.
நீக்குஅங்கு உள்ள பழங்குடி இனமக்கள் ஆபத்தானவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ... உண்மையா?
பதிலளிநீக்குசெண்டினெல் தீவில் இருப்பவர்கள் ரொம்பவே ஆபத்தானவர்கள். பாராடாங்க் பகுதியில் இருப்பவர்கள் கொஞ்சம் முன்னேற்றப் பாதையில் திரும்பி விட்டார்கள் - தற்போது ஹிந்தி படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டு இருக்கிறார்கள் சிவா.
நீக்குவித்தியாச அனுபவம் ....
பதிலளிநீக்குவித்தியாசமான அனுபவம் தான் அனுப்ரேம் ஜி.
நீக்குஎதிர்பார்த்தபடி இல்லாவிட்டாலும் ஒருசிலரையாவது பார்க்க முடிந்தது அதிர்ஷ்டமே.
பதிலளிநீக்குஒரு சிலரையாவது பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி தான் ராமலக்ஷ்மி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.