தொகுப்புகள்

வியாழன், 4 பிப்ரவரி, 2021

ராஜா ராணி - கதை கேளு கதை கேளு...



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


DON’T LET AGE CHANGE YOU. CHANGE THE WAY YOU AGE!


******







சில நாட்களுக்கு முன்னர் என்னைத் தேடி வந்த சொந்தக் கதை, சோகக்கதைகளில் ஒன்றை இந்த நாளில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.  சில சமயம் தனது கஷ்டங்களை சோகமான விஷயங்களை அடுத்தவரிடம் இறக்கி வைத்து விட்டால் அவர்களுக்கு பாரம் குறைந்த மாதிரி உணர்வு வரும்.  அப்படி ஒருவர் தனது பாரத்தினை இறக்கி வைக்க என்னைத் தேடி வந்தார்.  வழக்கம் போல அவருக்கு, அவர் சோகத்தினை இறக்கி வைக்க ஒரு வழியாக நானும் இருந்தேன்.  இப்படியான விஷயங்கள் இந்த நாட்டில், பல ஊர்களில், பல வீடுகளில், ஏதோ ஒரு இடத்தில் நடந்த வண்ணமே இருக்கிறது.  இதற்கு காரண காரியங்களை ஆராய்ச்சி செய்வதில் எந்த வித பயனும் இல்லை.  நம்மிடம் சொல்லிச் சென்றால் ஏதோ ஒரு விதத்தில் மன அமைதி கிடைக்கிறது என வருபவரை அமர வைத்து கதை கேட்டு, அவரை ஆஸ்வாஸப்படுத்தி அனுப்பி வைப்பதில் நாம் என்ன குறைந்து விடப் போகிறோம்.  சரி வாங்க…  அவர் அப்படி என்னதான் தனது சோகத்தினை இறக்கி வைத்தார் என்று பார்க்கலாம். 


பாட்டி, அம்மா, அப்பா, ஒரே ஒரு மகன் என அளவான குடும்பம்.  மகிழ்ச்சிகரமான வாழ்க்கை.  அப்பா, அம்மா இருவரும் வேலைக்குச் செல்பவர்கள்.  காலையில் வேலைகளை பகிர்ந்து கொண்டு இருவரும் புறப்பட, மாலை வரை பாட்டி தான் ராஜாங்கம்.  சின்ன வயதிலிருந்தே மகன் - வசதிக்காக ராஜா என்ற பெயரை வைத்துக் கொள்ளலாமே!  - ராஜாவுக்கு பாட்டி மீது அலாதியான பாசம்.  பாட்டியும் பேரனும் சேர்ந்து விட்டால் ஒரே மகிழ்ச்சி தான் வீட்டில்.  எல்லாம் சில வருடங்கள் வரை தானே - ராஜா வளர்ந்து இளைஞனான பிறகு பாட்டியிடம் அவ்வளவு ஒட்டுவதில்லை.  “ஹாய்…” என்று சொல்லி விட்டு வெளியே நண்பர்களிடம் சுற்றுவதில் தான் அதிக ஆர்வம் அவனுக்கு.  சின்ன வயதில் இருந்த மாதிரியே பாட்டியுடன் தாயக்கட்டையும், ஐந்தாங்கல்லுமா விளையாடிக் கொண்டிருக்க முடியும் ராஜாவால்?  அவன் வயதுக்கேற்ப நண்பர்களுடன் வெளியே சுற்றுவதில் தான் அதிக ஈடுபாடு இருந்தது.  


ஜிம், உடற்பயிற்சி, ஓட்டம் என அனைத்தும் செய்து, கட்டுமஸ்தான உடலுடன் இருந்தான் ராஜா. நல்ல படிப்பு, தனியார் நிறுவனத்தில் வேலை என அனைத்தும் அமைந்துவிட, அவனது வீட்டில் அவனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள்.  ஒவ்வொரு முறை ஏதாவது ஒரு பெண் அவர்கள் வீட்டிற்கு மருமகளாக ஆவார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரிக்கும் போது, ராஜா ஏதாவது ஒரு காரணம் சொல்லி “பெண்ணைப் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவான்” . இப்படி மூன்று நான்கு முறை நடந்து விட, தனது பேரனின் திருமணத்தினை பார்க்காமலேயே இறந்து போய் விடுவோமோ என்ற சோகம் மனதை அழுத்திக் கொண்டிருக்கிறது.  எப்படியாவது பேரனிடம் பேசி, அவனது திருமணத்தினை நடத்தியே தீர்வேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார் பாட்டி.  ராஜாவின் பெற்றோர்களும் தங்கள் தேடலை தீவிரப் படுத்தினார்கள்.  இது இப்படி இருக்க, ராஜா வேறு விதத்தில் பயணிக்கத் துவங்கி இருந்தான் - வீட்டினருக்குத் தெரியாமலேயே!  அந்த பாதை என்ன? பார்க்கலாம்! 


அதே ஊரில் வேறு ஒரு பகுதியில் இருக்கும் ஒரு பெண்மணி ராணி - வயது நாற்பதைத் தொட்டும் திருமணம் மட்டும் ஏனோ நடக்கவே இல்லை - அம்மா, அப்பா இருவரும் இறந்து விட, இப்போது ராணி ஒண்டிக்கட்டை.  அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணியில் இருந்தாலும், நல்ல சம்பாத்தியம் இருந்தாலும் ஏனோ திருமணம் நடக்கவில்லை.  பெற்றோர்கள் இருந்தவரை திருமணம் செய்து வைப்பதில் ஏதேதோ தடைகள் - தங்கள் மகளின் சம்பாத்தியம் கைவிட்டுப் போய்விடுமோ என்ற பயத்திலேயே தனக்கு திருமணம் செய்து வைக்காமல் இப்படி தனியே விட்டுவிட்டுச் சென்றார்களோ என்ற எண்ணம் ராணிக்கு எப்போதும் வருவதுண்டு.  அவர்களும் இல்லாமல், திருமணமும் நடக்காமல் தனியே வாழ்க்கையினை நடத்துவது அவளுக்கும் கடினமாகவே இருந்தது.  பள்ளியிலும், ஊரிலும், அவளை அடைந்துவிடத் துடித்தவர்கள் எத்தனையோ பேர்.  அனைவரிடத்திலும் இருந்தும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.  


ராணிக்கும், ராஜாவுக்கும் இருந்த ஒரு பழக்கம் அவர்கள் இருவரையும் சந்திக்க வைத்தது - அந்தப் பழக்கம் - நூலகம் சென்று வாசிப்பது.  ஒன்றிரண்டு முறை சந்தித்த போது, தங்கள் இருவருக்குமான ஒற்றுமைகள் புரிய வந்தது - பிடித்த புத்தகம், பிடித்த கதாசிரியர், பிடித்த நடிகர், பிடித்த சினிமா என பல ஒற்றுமைகள். நாட்கள் செல்லச் செல்ல, நட்பாய் பழக ஆரம்பித்த அவர்களுக்குள், நட்பைத் தாண்டி ஒரு உறவு உருவாகி இருந்தது.  ஒருவர் இல்லாமல் மற்றவர் இல்லை என்ற நிலைக்கு வந்து விட அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள் - ராஜாவுக்கு வயது 22 ராணிக்கு வயது 40!  தன்னை விட 18 வயது அதிகம் உள்ள பெண்மணியுடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததை வீட்டில் தெரிவிக்க, வீட்டில் அதிர்ச்சி.  யாருமே ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் அப்பா, அம்மா, பாட்டி என மூவரையும் ஒதுக்கி வைத்து விட்டு ராணியின் வீட்டுக்குச் சென்று விட - ராஜா-ராணி திருமணம் எளிமையாக நடந்து விட்டது - நண்பர்கள் மட்டுமே சாட்சியாக வைத்துக் கொண்டு. 


ராஜா - ராணி அதே ஊரில் இருந்தாலும், வீட்டிற்கு வருவதும் இல்லை, பேசிக் கொள்வதும் இல்லை.  ஊரில் இருப்பவர்கள் ஒரு விதமாக பேச ஆரம்பிக்க, உங்களுக்குத் தொல்லை தர விரும்பவில்லை என்று சொல்லி, ராஜா - ராணி இருவருமே தங்கள் ஊரை விட்டு வேறு ஊருக்கு மாற்றம் வாங்கிக் கொண்டு சென்று விட்டார்கள்.  தன்னுடைய விருப்பத்தினை மட்டுமே கணக்கில் கொண்ட ராஜா - ராணி.  தன் மகன்/பேரன் தங்களுக்கு பெரிய இடியைத் தலையில் போட்டுச் சென்று விட்டானே என்ற கவலையில் ராஜாவின் பெற்றோரும் பாட்டியும்.  ராஜாவின் அப்பா, அம்மா இருவரும் “ராஜா எங்கள் மகனே இல்லை” என்று திடமாக இருக்க, தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விட்ட தனது பேரனை எப்படியாவது ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்ற ஆசையோடு இருக்கும் அந்த மூதாட்டி. என்ன தான் செய்து விட முடியும் அந்த மூதாட்டியால் - தனது பாரத்தினை இறக்கி வைப்பதைத் தவிர!  


*****


என்ன நண்பர்களே, இன்றைய நாளில் பகிர்ந்து கொண்ட விஷயங்களைப் பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.  நாளை வேறு ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


14 கருத்துகள்:

  1. அதிர்ச்சியான நிகழ்வு.  ஒரு குடும்பத்தை இது எந்த அளவு பாதிக்கும் என்பது புரிகிறது.  என்ன சொல்ல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டி தான் மிகவும் சஞ்சலத்தில் இருக்கிறார். புரிய வேண்டிய இளைஞருக்கு இன்னமும் புரியவில்லை என்பதே வேதனை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகும் கடினமான சூழ்நிலையில் பேரனை அன்புடன் வளர்த்து வந்த அந்த பாட்டிக்கு இப்படி ஒரு கஸ்டமான நிலை வந்திருக்க வேண்டாம். அவருக்கு தாங்கிக் கொள்ளும் மன நிலையை கடவுள்தான் அருள வேண்டும். எத்தனையோ முறைபாடான நிகழ்வுகளில் இப்படியும் ஒன்று... வயது வித்தியாசம் ஒரளவு என்றாலும், ஒத்துக் கொள்ளலாம். இப்படி ஒரேடியாக இருப்பதை எந்த பெற்றோர்களால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? என்னவோ.... காலம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது. வேறு யாரை குற்றம் சொல்ல முடியும்... பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பாட்டியின் நிலை பரிதாபமானது தான். இன்னமும் ஆதங்கத்தினை விட்டு வெளியே வர இயலவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. பாட்டி பாவம் தான். புரிந்தால் சரி தான். ஆனால் புரியவில்லையே அப்பாவி தங்கமணி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. காலம் எப்படி எப்படியோ மாறுதலடைகிறது. இதில் பாசம் என்பதே வெறும் வேஷம்தானோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாசம் என்பதே வெறும் வேஷம் தானோ - எனக்கும் அப்படியே தோன்றுகிறது நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பாசமும் காதலும் வேறு வேறு கோணங்கள்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. பாட்டி பாவம். யாரையும் சொல்லி பலன் இல்லை. எல்லாம் சரியாக பையன் தான் முயற்சி எடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....