தொகுப்புகள்

திங்கள், 8 பிப்ரவரி, 2021

உள்ளத்துள் ஒளித்தேன் - ஒரு மின்னூல் - இரண்டு வாசிப்பனுபவங்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட இரயில் ஃபேனிங் - ஒரு அறிமுகம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால்… வார்த்தையும், வாழ்க்கையும் அர்த்தம் இல்லாமல் போய்விடும். 


******






ஜனவரி மாதத்திற்கான சஹானா புத்தக வாசிப்புப் போட்டியில் பங்கு பெற்ற ஒரு மின்னூல் - உள்ளத்துள் ஒளித்தேன் - இன்னிலா போஸ் அவர்களின் எழுத்தில் - இந்த மின்னூலுக்கு நாங்கள் இருவர் எழுதிய வாசிப்பனுபவங்கள் இந்தப் பதிவில் ஒன்றாக…


#சஹானா_புத்தகவாசிப்புப்போட்டி- ஜனவரி 2021

நூல்:  உள்ளத்துள் ஒளித்தேன்

ஆசிரியர்: இன்னிலா போஸ்

பக்கங்கள்:  202

வெளியீடு:  அமேசான்

விலை:  ரூபாய் 75/- மட்டும். 

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி: உள்ளத்துள் ஒளித்தேன் (நாவல்)


பிரதான கதாபாத்திரங்கள்:  காவ்யா, ஆதவன், கதிரேசன், சிவநேசன், காயத்ரி, கமலம்.


மனதுக்குள்ளேயே பூட்டி வைத்த நினைவுகள் யாரிடமாவது முழுவதும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் இருக்கும் ஆவல் தான்.  சென்னையில் தன் மகள் காவ்யாவுடன் வசிப்பவர் கதிரேசன். வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் கமலம்.  தன் மனைவி இறந்த பிறகு கமலம்மா தான் காவ்யாவினை பாசத்துடன் பார்த்துக் கொண்டவர் - அண்ணா அண்ணா என்று சொந்த தங்கை போலவே பாசத்துடன் வளைய வருபவர். ஆனால் கதிரேசன் மனதில் பூட்டி வைத்திருக்கும் விஷயம் என்ன?  அதுவும் ஒரு தங்கை பற்றிய விஷயம் தான்.  அந்தத் தங்கை காயத்ரி!  


சிறு வயதில் தங்கை காயத்ரி தான் அண்ணன் கதிரேசனுக்கு எல்லாமும்!  கதிரேசன் ஊட்டி விட்டால் தான் சாப்பிடுவார் காயத்ரி.  அத்தனை அன்னியோனியம் அண்ணன் - தங்கைக்குள்!  அப்படி இருந்த உறவை அறுத்துக் கொண்டு, ஊரை விட்டே ஓட வைக்கும்படி ஒரு நிகழ்வு நடந்து விடுகிறது.  அப்படி நடக்கக் காரணமாக இருந்தது சிவநேசன் - கதிரேசனின் அத்தை மகன்.  இணை பிரியாத சகோதர-சகோதரியாக, பாசத்திற்கு எடுத்துக் காட்டாக இருந்த கதிரேசன் - காயத்ரி உறவில் ஒரு சுணக்கம் வரக் காரணமாக, கதிரேசன் என்ற தனது அண்ணனின் பெயரைக் கேட்டாலே கோபம் வருகிற காயத்ரியாக ஆக்கி விட்ட அந்த நிகழ்வு என்ன!  


காவ்யா - செவிலியர் படிப்பினைப் படித்து மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண் - தன் தந்தை தனது பெயரிலேயே ஒரு கடை திறக்க, அந்தக் கடையைத் திறக்க வந்த சிறப்பு விருந்தினராக - ஆதவன்!  பார்த்த மாத்திரத்திலேயே காவ்யாவின் மனதுக்குள் ராஜாவாக அமர்ந்து கொண்டவன் - ஆதவனைப் பார்த்த நொடியிலேயே இவன் தான் என் வாழ்க்கைத் துணைவன் என்று காவ்யா யோசிக்க, ஆனால் கதிரேசனோ, ஆதவனைப் பார்த்த மாத்திரத்திலேயே மனதுக்குள் குழப்பத்துடனும், அதிர்ச்சியுடனும் தான் இருக்கிறார் - பார்க்கும்போதே தனது நெருங்கிய உறவினன் மாதிரி இருக்கிறானே - அப்படியும் இருக்குமோ என்று குழப்பத்துடன் இருக்கிறார்.  தான் நினைத்தபடியே, அப்படி இருந்து விட்டால், தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்வார்களா? இழந்த உறவுகள் தனக்குத் திரும்பக் கிடைக்குமா என்ற குழப்பம் தான். 


ஆதவன்:  என்னதான் கடை திறப்பு விழா அன்று காவ்யாவைப் பார்த்ததும் திரும்பி விட்டாலும் ஏனோ அவனால் காவ்யாவினை மறக்கவே முடியவில்லை.  காவ்யாவின் அப்பா தன்னைப் பார்த்ததும் அதிர்ச்சியுற்றாரே அது ஏன் என்பதும் புரியாத புதிராக இருக்கிறதே?  என்ன தான் நடக்கிறது/நடந்தது?  யார் இந்தக் கதிரேசன்?  தனக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?  அவரைப் பார்த்தால் எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கிறதே?  தேடித் தான் விடைகளைக் கண்டுபிடிக்க வேண்டும்!  தான் விட்டாலும், காவ்யாவின் நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்து விடைகளைக் கண்டுபிடிக்க வைத்து விட்டதே!  


காவ்யா, கதிரேசன், ஆதவன் இவர்களுக்குள் என்ன உறவு?  கதிரேசன் தன்னுடைய இழந்த உறவுகளை அடைந்தாரா? அவர் உள்ளத்துள் ஒளித்து வைத்த விஷயங்களை வெளியில் சொன்னாரா? ஆதவன் - காவ்யா ஆகியோர் தங்கள் காதலைச் சொன்னார்களா? மேலும் என்ன நடந்தது என்பதை இன்னிலா போஸ் அவர்களின் ”உள்ளத்துள் ஒளித்தேன்” மின்னூலை வாசித்துத் தெரிந்து கொள்ளலாமே!  குறைந்த பக்கங்கள் என்பதால் சில மணி நேரத்தில் வாசித்து விடலாம்.  


வெங்கட் நாகராஜ்


******


கதையின் தலைப்பு போலவே உள்ளத்துள் ஒளித்துக் கொண்ட விஷயங்கள் தான் கதையை நகர்த்துகிறது.


தன் கடும் உழைப்பால் வாழ்வில் முன்னேறி புதிதாக சூப்பர் மார்கெட் துவங்கியுள்ள கதிரேசன். அவரின் செல்ல மகள் காவ்யா. நர்ஸிங் கோர்ஸ் முடித்து ஒரு மருத்துவமனையில் பணிபுரிகிறாள். காவ்யாவின் வளர்ப்புத் தாயாக கமலம்.. இவர்களைச் சுற்றி தான் கதை நகர்கிறது.


இவர்களின் சூப்பர் மார்கெட் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வரும் ஆதவன்..ஆதவனை பார்த்தது முதல் அவன் மேல் காதல் கொண்ட காவ்யா! மற்றொரு புறம் ஆதவனை பார்த்தது முதல் கலக்கமும், பயமும் கொள்ளும் கதிரேசன்!!!


சிறுவயதில் தெரியாமல் செய்த ஒரு தவறால் குடும்பத்தை விட்டு பிரிந்து, வேறொரு அடையாளத்துடன் வாழ்வில் முன்னேறினாலும் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் நினைவுகளால் தவிக்கும் கதிரேசன்!!

ஆதவன் இவர்களின் வாழ்வில் யார்? ஆதவனை கண்டு ஏன் கலக்கமடைகிறார் கதிரேசன்? காவ்யா ஆதவன் மீது கொண்ட காதல் என்னவாயிற்று? கதிரேசனின் சிறுவயதில் என்ன நடந்தது? அவர் தன் குடும்பத்தோடு இணைந்தாரா? இது போன்ற புதிர்களுக்கான விடையை புத்தகத்தை வாசித்து தெரிந்து கொள்ளுங்களேன்.


நல்லதொரு குடும்பக் கதையை தந்த ஆசிரியருக்கு பாராட்டுகள். தொய்வில்லாத நடை..குறைவான சிக்கலில்லாத கதாபாத்திரங்கள்..நேரம் கிடைத்தால் நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.


ஆதி வெங்கட்.


******


என்ன நண்பர்களே, இன்னிலா போஸ்  அவர்கள் எழுதிய மின்னூலான உள்ளத்துள் ஒளித்தேன் பற்றிய எங்கள் இருவரின் வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  நாளை மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


12 கருத்துகள்:

  1. சுபம் போடும்முன் சுவாரஸ்யமான முடிச்சுகளை லாவகமாக விடுவித்திருப்பார் ஆசிரியர் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுபம் போடுமுன் - ஆமாம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இருவரது விமர்சனமும் சிறப்பு.
    ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வாசிக்க தூண்டும் இரு நூல் விமர்சனங்கள்.
    நூலை தரவிறக்கம் செய்துவிட்டேன்.
    விரைவில் வாசிக்கிறேன் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடிதததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. மதிப்புரை சிறப்பு. வாழ்த்துகள்.
    தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால்...இதனை அதிகம் ரசித்தேன்.
    பல வருடங்களுக்கு முன்பாக The Hindu இதழில் ஒரு அரசியல் தலைவர் அப்போதைய முக்கிய பிரச்சினை தொடர்பாக ஒரு பேட்டியில் கூறியிருந்த நான் ரசித்த வாக்கியம் இதோ : I do not want any more commas to this problem, a full stop has to be placed.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நிறைய பிரச்சினைகள் தொடர்வது முற்றுப்புள்ளி இல்லாமல்,comma போடுவது தான். சிந்திக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முற்றுப்புள்ளி இல்லாமல் கமா போடுவது தான் பல பிரச்சனைகள் தொடரக் காரணம். உண்மை தான் கயல் இராமசாமி மேடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. சிறப்பான விமரிசனம், ஏற்கெனவே படித்தேன். புத்தகம் படிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....