ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

இரயில் காதலர்கள் - இரயில் ஃபேனிங் - ஒரு அறிமுகம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


You don’t know the meaning of stress until you have a panipuri in your mouth, a panipuri in your hand, a panipuri in your bowl and the panipuri wala is standing in front of you with another ready panipuri!


******


ஆங்கிலத்தில் Rail Fanning என்ற வார்த்தை உண்டு - அதற்கு ஈடான தமிழ் வார்த்தை என்று “இரயில் காதலன்” போன்ற வார்த்தையைச் சொல்லலாம்.  இந்த மாதிரி Rain Fanning செய்பவர்கள் வெளிநாட்டில் அதிகம் உண்டு - சமீப வருடங்களில் இந்தியாவிலும் இதனை மிகவும் ஈடுபாட்டுடன் செய்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர்களுக்கு இரயில், இரயில் பயணம், இரயில் இஞ்சின்கள், இரயில்வே பாலங்கள், இரயிலில் பயன்படும் கருவிகள் என இரயில் சம்பந்தப்பட்ட அனைத்தின் மீதும் அலாதியான காதல் உண்டு!  எனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு இரயில் காதலர்கள் உண்டு.  என் அக்காவின் மகனும் ஒரு இரயில் காதலன் தான்.  அவ்வப்போது இரயில் இஞ்சின்கள், அவற்றின் திறன் என பலவற்றை தனது WhatsApp Status - ஆக வைத்துக் கொள்வது அவனது வழக்கம்.  இரயில் இஞ்சின்களையும் இரயில் வண்டிகளையும் படம், காணொளி எடுப்பதற்காகவே சில நாட்கள் சிறு இரயில் நிலையங்களுக்கும், சந்திப்புகளுக்கும், ரெயில்வே கிராசிங் பகுதிகளுக்கும் சென்று வருவது அவனது வாடிக்கை.  

இந்த மாதிரி இரயில் காதலர்களுக்கென சில குழுக்களும், இணையதளங்களும் உண்டு. www.irfca.org என்பது அப்படியான ஒரு தளம். இந்தத் தளத்தில் உறுப்பினர்கள் எழுதிய கட்டுரைகளும் உண்டு.  சில கட்டுரைகளை நானும் படித்து ரசித்தேன்.  உங்களுக்கும் விருப்பமிருந்தால் அந்தத் தளத்தில் படிக்கலாம்.  அவ்வப்போது இரயில் காதலர்கள் இரயில்களைப் படம் எடுப்பதற்காகவே பயணம் செல்வதுண்டு.  சிலர் இரயில் பயணங்களை - அதிலும் பாசஞ்சர் வண்டிகளிலேயே நீண்ட தூரம் பயணிப்பதுண்டு - சென்னையிலிருந்து புறப்பட்டு நான்கு நாட்கள், ஐந்து நாட்கள் என பாசஞ்சர்களில் பயணித்த கதை அவர்களிடம் இருக்கும். கல்கா-ஷிம்லா, மேட்டுப்பாளையம் - ஊட்டி, டார்ஜிலிங்க் போன்ற பாதைகள் இப்படியான பயணங்களுக்கு மிகவும் பிரபலம்.   அக்காவின் மகனும் சில நண்பர்களுமாகச் சேர்ந்து பெங்களூரிலிருந்து புறப்பட்டு ஐந்து நாட்களில் பெங்களூர் திரும்பினார்கள்.  ஐந்து நாட்கள் தொடர் பயணம் - அவர்கள் பயணித்த பாதை கீழே!


பெங்களூரு - சென்னை -குர்துவாடி - லாட்டூர் - பூர்ணா - அகோலா - மௌ - இண்டோர் - போபால் - சென்னை - பெங்களூரு!


அந்தப் பாதைகளில் Akola-விலிருந்து Mhow மீட்டர் காஜ் பாதை, வளைந்து நெளிந்த பாதைக்குப் பிரபலமான பாதை - தற்போது மீட்டர் காஜிலிருந்து ப்ராட் காஜ்-ஆக மாற்றும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் பாதை மூடப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.  பிரபலமான ஓம்காரேஷ்வர் கோவில் இந்தப் பாதையில் தான் இருக்கிறது.  ஐந்து நாட்கள் அவர்கள் பயணித்த போது கிடைத்த அனுபவங்களை எழுதித் தரச் சொல்லி கேட்ட வேண்டும்.  அப்படி எழுதி அனுப்பினால் நிச்சயம் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.  


ஒவ்வொருவருக்கு ஒரு வித Passion - சிலருக்குக் கவிதை, சிலருக்கு சினிமா, சிலருக்கு புத்தகம் - இப்படி ஏதோ ஒன்றை பிடித்துக் கொண்டு அதில் அவர்கள் நேரத்தினைச் செலுத்துகிறார்கள்.  நல்ல விஷயம் தானே.  எனக்கும் இப்படியான ஒரு பாசஞ்சர் பயணம் செய்ய ஆசை உண்டு - சில பாசஞ்சர் இரயில்களில் பயணம் செய்ததுண்டு - விசாகப்பட்டிணத்திலிருந்து அரக்குப் பள்ளத்தாக்கு பயணமும், திருச்சியிலிருந்து சிவகங்கை வரை சென்ற பயணமும் இப்படியான பாசஞ்சர் இரயில்களில் தான். மீண்டும் இப்படியான ஒரு பயணம் எப்போது அமையும் என்ற ஏக்கத்தில் நானும் காத்திருக்கிறேன்.


இந்த நாளில் நான் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்தமானதாக இருக்கும் என நம்புகிறேன்.  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டங்கள் வாயிலாகச் சொல்லலாமே. மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன் வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


18 கருத்துகள்:

 1. படங்களையும் விவரங்களையும் பார்த்தால் நமக்கும் காதல் வந்துவிடும் போலிருக்கிறது.  சுவாரஸ்யமான தகவல்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. இரயில் காதலர்கள் - புதிய விஷயம். ஏசி மற்றும் அதி வேக இரயில்களில் பயணிப்பதைவிட ஒரு ஸ்டாப் விடாமல் செல்லும் பாசஞ்சர் இரயில் பயணம் எனக்கு மிகவும் பிடித்தமானது, அதுவும் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் எதையாவது விற்றுக்கொண்டு வருவார்கள், இரயில் மெதுவாகச் செல்லும்போது பலப்பல இடங்களைக் கண்டுகொண்டே செல்வது... இனிமையானதுதான். ஒரு இடத்திற்கு, 8 மணி நேரத்தில் போவதைவிட பாசஞ்சரில் பதினைந்து மணிநேரம் பயணம் செய்வது இனிமை.

  கொரோனா முடியட்டும்.... ஏதாவது பயணம் போகவேண்டியதுதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொரோனா முடியட்டும் - நானும் இதே யோசனையில் தான் இருக்கிறேன் நெல்லைத் தமிழன். வரும் வாரம் பக்கத்தில் எங்காவது சென்று வரலாம் என யோசித்திருந்தேன் - ஆனால் செயல்படுத்துவது கடினமாகி விட்டது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. இரயில் பயணம் யாவரும் ரசிக்க கூடியதே... ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலருக்கும் பிடித்தது இரயில் பயணம் தான் கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. அருமை
  தொடர் வண்டிகளின் படங்கள், அடுத்தடுத்துப் பார்க்கப் பார்க்க எப்போது பயணிக்கப் போகிறோமோ என்னும் ஏக்கம் வரத்தான் செய்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ”அடுத்து எப்போது பயணிக்கப் போகிறாமோ என்னும் ஏக்கம்” எனக்கும் இருக்கிறது கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. அன்பு வெங்கட் ,
  அந்தத் தளத்தைப் போய்ப் பார்க்கிறேன். எனக்கும் ,எங்கள்
  பெற்றோர் ,சகோதரர்களுக்கு
  நீண்ட நாளாக ரயில் காதல் உண்டு.
  பயணத்துக்காக டிக்கெட் வாங்குவதில் இருந்து
  அதில் ஏறி இறங்கும் வரையான
  நிகழ்வுகளை ரசித்து சுவைப்போம்.
  உங்கள் செய்தி புதிது. இனிது.
  புகைப் படங்கள் மிக இனிமை.
  உங்கள் அக்கா மகனை எழுதச் சொல்லிப்
  பதிவிடவும்.
  இதற்காகவே திரு.பி விஆர் எழுதும் சென்ட்ரல்
  மீண்டும் மீண்டும் படிப்பேன். மிக நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணம் - அதிலும் இரயில் பயணம் பலருக்கும் பிடித்த விஷயம் தான் வல்லிம்மா... கடந்த ஒரு வருடமாக பயணம் தடைபட்டுவிட்டது - அதில் எனக்கும் வருத்தம் உண்டு. காலம் கனிந்து வர நானும் காத்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. ரயில் பயணம் பிடித்தமான ஒன்று
  படங்களும் பகிர்ந்த விஷயங்களும் மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரயில் பயணம் உங்களுக்கும் பிடித்த விஷயம் என்பதறிந்து மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. சுவையான பதிவு சார்.
  IRFC ரயில்வேக்கு கடன் வழங்கும் நிறுவனம்.
  அதன் தளம் சுட்டியில் உள்ள கட்டுறைகளை விரைவில் வாசிக்கிறேன்.
  IRFC சமீபத்தில் அதன் பங்குகளை IPO மூலம் வெளியிட்டார்கள்.
  அதை நெடுநாள் வைத்திருந்தால் பாதுகாப்பான வருமானம் என்று பல நிபுனர்கள் சொன்னதால் அதன் பங்குகளை சிறுகச்சிறுக வாங்கி வருகிறேன்.
  இப்போது ரயில் குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் வழங்கியுள்ளீர்கள்.
  மிக்க நன்றி.
  தங்கள் அக்கா மகனை மேலும் அணுபவங்களை பகிர்ந்து எழுதச் சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடன் வழங்கும் நிறுவனம் - ஆமாம். தளத்தில் உள்ள தகவல்கள் உங்களுக்கும் பிடிக்கலாம் அரவிந்த்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. ரயில் பயணம் மிகவும் பிடிக்கும். இந்த விவரங்கள் தெரியாமல் இருந்தேன். அந்த தளத்தில் உள்ள கட்டுரை படிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரயில் பயணம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி மேடம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. ரயில் பயணமும் சரி, ரயிலைப் பார்ப்பதும் சரி அலுக்காத ஒன்று. ஆனால் இப்போதெல்லாம் தொலைதூரப் பயணங்களை ரயிலில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. உங்கள் அக்கா மகனின் அனுபவப் பகிர்வுகளுக்குக் காத்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொலைதூரப் பயணங்களை ரயிலில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. எனக்கும் அப்படியே - நேரம் அதிகம் கிடைப்பதில்லை என்பதால் விமானப் பயணத்தினை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....