புதன், 10 பிப்ரவரி, 2021

சுந்தரி கண்ணால் ஒரு சேதி…



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


சூழ்நிலைக்கு ஏற்ற மனிதனாக உன்னை மாற்றிக் கொள்! ஆனால், சூழ்நிலைக் கைதியாக எந்த சூழ்நிலையிலும் மாறிவிடாதே!


மேலே சொல்லி இருக்கும் வாசகம் நல்ல அறிவுரை - ஆனால் சூழ்நிலைக் கைதிகளாகவே பலரும் மாறிவிடுகிறோம் என்பது தான் நகைமுரண்!


******






”சுந்தரி கண்ணால் ஒரு சேதி” பாடிக்கொண்டே தனது காதலி சுந்தரியைக் காண இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தான் சுந்தர்.  ஐந்து வருடமாக சுந்தர்-சுந்தரி இருவரும் காதலில் திளைத்திருந்தாலும், இரு வீட்டினரின் சம்மதம் கிடைத்தால் மட்டுமே திருமணம் என்ற முடிவோடு இருந்தார்கள் இருவரும்.  இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான் சுந்தர்.  சுந்தரியின் வீட்டில் முதலிலேயே சம்மதம் தெரிவித்து இருந்தாலும், சுந்தர் வீட்டில் அத்தனை சுலபமாக சம்மதம் தெரிவிக்க வில்லை.  இன்றைய காலையில் தான் சுந்தரின் வீட்டினர் ஒரு வழியாக சம்மதம் தெரிவித்திருந்தார்கள். அந்த மகிழ்வான செய்தியை தனது காதலியிடம் தெரிவிப்பதற்காகவே பாட்டு பாடியபடி வந்து கொண்டிருந்தான்.  


ஐந்து வருடம் காதலித்த பிறகே இரு வீட்டினரும் சம்மதம் தெரிவிக்க, சின்னச் சின்ன பிரச்சனைகளைக் கடந்து திருமணம் நடந்து முடிந்தது.  சுந்தரியும் சுந்தரும் மண வாழ்க்கையை இனிதே ஆரம்பித்து இருந்தார்கள்.  ஒவ்வொரு நாளும் இனிமையாகக் கழிந்து கொண்டிருந்தது.  முதலில் காதலுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தாலும், சுந்தரின் தாயார் தனது மருமகளிடம் பாசமாகவே நடந்து கொண்டார்.  மருமகளும் மாமியாருமாகச் சேர்ந்து கொண்டு சுந்தரை அவ்வப்போது கிண்டல் செய்வதும் நடந்தது!  அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய பிறகு இருவரும் வெளியே சென்று பொழுதைக் கழிப்பதை வழக்கமாகவே வைத்திருந்தார்கள்.  


காதலித்தபோது தங்கள் எல்லைகளை உணர்ந்தே இருந்தார்கள் - காதலுக்கும் காமத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தினை உணர்ந்திருந்தார்கள்.  திருமணம் முடிந்த பிறகு தங்களது இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்.  இருவருமே பணி புரிந்து கொண்டிருந்ததால், சுந்தரியை அலுவலகத்தில் விட்டு விட்டு தனது அலுவகத்திற்குச் செல்வது சுந்தரின் வழக்கமாக இருந்தது.  ஒரு நாள் அப்படி அலுவலகத்திற்கு சுந்தரியை விட்டு, வழக்கம் போலவே Sweet Nothings என்று சொல்லக்கூடிய காதல் மொழிகளை தனது மனைவியுடன் பேசிவிட்டு புறப்பட்டுச் சென்றான் சுந்தர்.  


அவன் பேசிச் சென்ற விஷயங்களை மனதிற்குள் நினைத்த போது சுந்தரிக்கு அவளை அறியாமல் வெட்கம் வர சிரித்தபடியே  அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.  பாவம் அவளுக்குத் தெரியாது, அவளது சிரிப்பு அவளது முகத்திலிருந்து நிரந்தரமாக பறிக்கப்படப் போவது!  அலுவலகத்திற்கு வந்து அமர்ந்த சில நிமிடங்களுக்குப் பிறகு அவளது அலைபேசிக்கு அழைப்பு - “Sundar Calling!” என்று வரவே “இப்ப தானே விட்டுட்டுப் போனார்… அதுக்குள்ள என்ன ஃபோன்? ஃபோன் வழியேயும் “Sweet Nothings” தொடரப் போகிறாரா என்று மனதுக்குள் யோசித்தபடி ஃபோனை எடுக்க, “ஹலோ, சுந்தரி பேசறீங்களா?” என்று யாரோ ஒருவர் பேச, கொஞ்சம் பதறினாள்.  “ஆமாம் சொல்லுங்க!” என்று சொல்லிய பிறகு கேட்ட செய்தி…


தன்னை அலுவலகத்தில் இறக்கி விட்டுச் சென்றவன் தனது அலுவலகத்திற்குச் சென்று சேர்ந்த உடனேயே நெஞ்சு வலிக்கிறது என்று சொல்லி இருக்கையில் அமர்ந்தவன் அப்படியே இவ்வுலகை விட்டுச் சென்று விட்டான்!  30 வயதில் மாரடைப்பு!  அலைபேசி கைநழுவிக் கீழே விழ, சூழலை மறந்து குலுங்கி அழ ஆரம்பித்தாள் சுந்தரி.  காலையில்  பேசிக் கொண்டிருந்த சந்தோஷச் செய்தி - தான் கருவுற்றிருக்கும்  சந்தோஷச் செய்தி இன்னும் யாரிடமும் பகிர்ந்து கொள்வதற்குள் இப்படி ஒரு பேரிடி!


சடங்குகள் அனைத்தும் நடந்து கொண்டிருந்தது - தனக்கு என்ன நிகழ்ந்தது என்பதைக் கூட தெரிந்து கொள்ள இயலாத நிலையில் சுந்தரி.  கதறிக் கதறி அழுது, கண்ணீர் உறைந்து விட தன்னையும், தன் நிலையையும் நினைத்து மூலையில் அமர்ந்திருந்தாள் சுந்தரி.  தனது மகனை இழந்திருந்தாலும், தன்னை விட பேரிழப்பு தனது மருமகளுக்கு என்பதை உணர்ந்திருந்த சுந்தரின் தாயார், சுந்தரியை அணைத்தபடியே, “கண்ணா, இன்னும் எத்தனை நாளுக்கு தான் இப்படியே அழுதுட்டே இருப்பே, உனக்கென்று ஒரு வாழ்க்கை வாழ வேண்டும், போனவன் போய்விட்டான், நீ உன்னை கவனித்துக் கொள்ள வேண்டாமா?” என்று சொன்ன போது, அழுதபடியே சுந்தரி தான் கருவுற்றிருக்கும் விஷயத்தினைத் தெரிவித்தாள். 


தனது சந்ததி தழைத்தோங்கியது நினைத்து மகிழ்ச்சி கொள்வதா இல்லை தனது மகன் இறந்து போனதை நினைத்து ஏங்குவதா, மகனையே நம்பி வந்த மருமளை நினைத்து வருந்துவதா என்ற குழப்பம் மனதுக்குள்.  குழப்பமான நிலையிலும் ஒரு தெளிவான முடிவை எடுத்தாள் மாமியார் செண்பகவல்லி! அவள் எடுத்த முடிவு - மருமகளை தன்னுடனேயே வைத்துக் கொள்வது - மகளாகவே அவளையும் ஆதரித்து, அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தையையும் ஆதரிக்க வேண்டும் என்ற முடிவு தான் அது.  நல்ல முடிவு தானே! 


தன்னை விட்டுச் சென்ற கணவனின் வீட்டிலேயே இருந்தாலும், சுந்தரி சோகத்துடனே தான் வளைய வருகிறாள். தனக்கு தனது கணவனே மகனாக பிறந்து இருக்கிறான் என்ற எண்ணத்துடன், மகனை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறாள் - ஒரே ஒரு குறை அவளது புன்னகை மட்டும் அவளை விட்டு நிரந்தரமாக அகன்று விட்டது.  கண்களாலேயே தனது காதலை வெளிப்படுத்திய சுந்தரியின் கண்கள் தற்போது சோகத்தினை மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.


*****


நண்பர்களே, இந்த நாளின் பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வழி சொல்லுங்களேன்.  நாளை வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


18 கருத்துகள்:

  1. கண்கள் பனித்து விட்டது, இது உண்மை சம்பவம் இல்லை தானே? இருக்க வேண்டாம், இந்த கொடுமை நிஜத்தில் யாருக்கும் நேர வேண்டாம்.கதை எனில், உணர்வுகள் கோர்க்கபட்ட விதம் கிரேட். சிறிய கதையே என்றாலும் மனதை நெகிழச் செய்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடந்த சம்பவம் தான் - என் பாணியில் எழுதி இருக்கிறேன்.

      பதிவு குறித்த உங்கள் கருத்துகளுக்கு நன்றி அப்பாவி தங்கமணி.

      நீக்கு
  2. நீர்க்குமிழி வாழ்க்கை என்று மறுபடியும் நினைவு படுத்திய நிகழ்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீர்க்குமிழி வாழ்க்கை - உண்மை தான் நாகேந்திர பாரதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. உங்க கதை பெரும்பாலும் நிகழ்ந்த சம்பவமாகத்தான் இருக்கும். அதனாலத்தான் ஆர்வத்துடன் படித்தேன்.

    படிக்கும்போதே....ஆக்சிடண்ட் நடக்குமோ என்ற பதைபதைப்பில்தான் படித்தேன். விதிதான் எவ்வளவு கொடூரமானது. கணவன் வீட்டில் அவளை ஆதுரத்துடன் வைத்துக்கொள்ளட்டும். அவள் இழந்த மகிழ்ச்சியை அவளுக்கு பையன் நன்கு வளர்ந்து அவளை மகிழ்வுடன் வைத்திருப்பதில் கொடுக்கட்டும்.

    (ஐந்து வருடங்கள் கழித்து கணவன் வீட்டில் சம்மதம் சொல்லித் திருமணம் என்றது எனக்கு பதிவர் ஒருவரை நினைவுபடுத்தியது. அவருக்கு ஏழு வருடங்கள் கழித்து என்று சொல்லியிருந்தார்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவர் யாருனு தெரியாது. ஆனால் ரமா ஶ்ரீநிவாசன் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் காதலித்த பின்னரே திருமணம் நடந்ததாகச் சொல்லி இருக்கார். அவர் மாமியார் சம்மதம் கிடைக்கவில்லையாம்.

      நீக்கு
    2. நிகழ்ந்த சம்பவம் தான். //விதி தான் எவ்வளவு கொடூரமானது// உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    3. மேலதிகத் தகவல் - தெரிந்த தகவல் - நானும் படித்தது நினைவில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  4. மிகவும் சோகமான சம்பவம்.  குழந்தை இருந்தால் என்ன, மறுதிருமணம் செய்து வைக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப கஷ்டமான ஆலோசனை ஸ்ரீராம்... 1. இவள் மறக்கணும். 2. வருபவர் இந்தப் பையனையும் நல்லா பார்த்துக்கணும். சொந்தக் குழந்தை வந்த பிறகு, இவனுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போயிடக்கூடாது. எதைச் செய்தாலும் 'தன் குழந்தை' என்று பார்க்கும் எண்ணம்தான் வரும். பசங்களுக்கிடையில் வரும் சண்டையும், 'என் பையன்', 'உன் பையன்' என்று ஆகிவிடும். 3. முதல் கணவனின் வீட்டார் தொடர்பு போயிடும். புதுக் கணவன் வீட்டாரும் சரியா நடத்தணும். இதெல்லாம் நடப்பது சுலபமல்ல. இன்னும் இன்னும் பிரச்சனைகள் வந்ததுபோல ஆகிவிடும்.

      தொடர்பில்லாமல் நான் நினைப்பது..யார் போனாலும், 'போயிடுவார்' என்று மற்றவர்கள் நினைத்த பிறகு போனால் ரொம்பவும் அதிர்ச்சி இருக்காது. இந்த மாதிரி, அப்புறம் நம்ம வல்லிம்மா, கோமதி அரசு மேடம் இவங்களுக்கு ஆன மாதிரி, டக் என்று எதிர்பார்க்காமல் போயிட்டா அதைத் தாங்குவது ரொம்பவே கடினம்.

      நீக்கு
    2. சோகமான சம்பவம் தான் ஸ்ரீராம். மறுமணம் - செய்து வைக்கலாம் - நிறைய சோதனைகள் வரலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. நீங்கள் சொல்வது போல மறுமணம் என்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான். நிறைய சோதனைகள் வரலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. வருத்தமான பதிவு. இது நிஜமாக இருக்குமோ என்னும் சந்தேகமும் வருது. ஆனாலும் குழந்தை பிறந்திருந்தாலும் எத்தனையோ ஆண்கள் பெண்களை ஏற்றுக்கொள்கிறார்கள். அது போல் சுந்தரியையும் ஏற்றுக்கொள்ளும் ஆண்மகன் இருக்காமலா போய்விடுவான்! ஆனாலும் சில சமயங்களில் கடவுளுக்கு ஏன் இப்படி எல்லாம் சோதனை செய்யத் தோன்றுகிறது என்னும் எண்ணம் வராமல் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிகழ்ந்த சம்பவம் தான் இங்கே கதை மாந்தர்களின் கதையாக...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  6. சுந்தரிக்கு மீண்டும் நல்ல செய்தி கிடைக்கட்டும். மறுமணம் தேவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுந்தரிக்கு நல்ல செய்தி கிடைக்கட்டும் - அப்படி நடந்தால் மகிழ்ச்சி தான் வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. கதையை படித்து முடித்ததும் கண்களில் கண்ணீர் பெருகுவதை நிறுத்த முடியவில்லை.
    இந்த திடீர் சோகம் யாருக்கும் வேண்டாம், அதுவும் இந்த இளம் வயதில்.
    கணவரின் தாயார் நன்கு பார்த்துக் கொண்டாலும் அந்த பெண்ணுக்கு இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்புதான். , குழந்தைக்கு தந்தை இல்லை.


    கதையில் கூட வேண்டாம் இந்த முடிவு என்று இறைவனிடம் கேட்க தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கதையில் கூட வேண்டாம் இந்த முடிவு// - ஆனாலும் இப்படியும் நடந்து விடுவது தான் வேதனை கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....