வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

தேவை கொஞ்சம் விஷம்...


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட ஆதியின் அடுக்களையிலிருந்து - யூட்யூப் புராணம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


துக்கத்தால் தற்கொலை செய்து கொள்பவன் தைரியசாலி என்றால், அந்தத் துக்கத்தைத் தாங்கிக் கொள்கிறவனோ பெரும் வீரன் - மாஸிங்கர்.


******


கொஞ்சம் குனிந்து முட்டியைத் தொட்டு ”பேரி போனா ஜி…” என்று வணங்கினான் இந்தர்ஜீத். 


”ஜீத்தே ரஹோ புத்தர்” அவனை வாழ்த்தினார் சிம்ரன் கௌர்.  அதற்கு அடுத்து இந்தர்ஜீத் கேட்டது மூதாட்டியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது - அப்படி என்ன கேட்டு விட்டான் இந்தர்ஜீத்! 


“கொஞ்சம் விஷம் கொடுங்க!”  வாழ்ந்து ஒரு பயனும் இல்லை ஜி.  ஒரு வாரமா வீட்டுல பிரச்சனை.  ஒவ்வொரு நிமிஷமும் சண்டை - வாழ்ந்து ஒரு பயனும் இல்லைன்னு தோணிடுச்சு Bபுவா ஜி.  


தொடர்ந்து பேசிய இந்தர்ஜீத்-ஐ தனது பக்கத்தில் அமர வைத்துக் கொண்ட சிமரன் கௌர், உள்ளே குரல் கொடுக்க, பணிப்பெண் ஒரு தட்டில் கொஞ்சம் பிஸ்கெட்டுகளும் தேநீரும் கொண்டு வந்து கொடுத்தார். புத்தர் ”முதலில் தேநீரை அருந்து, பிஸ்கெட்டுகளும் எடுத்துக் கொள்.  பேச வேண்டியதை பிறகு பேசலாம்” என்று  சொல்ல அங்கே மௌனம் நிலவியது.  சிம்ரன் கௌர் தேநீர் குடித்தபடியே இந்தர்ஜீத் அப்படிச் சொல்ல என்ன காரணமாக இருந்தாலும் இந்த எண்ணம் வருவது சரியல்லவே என்று நினைத்தபடியே தானும் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார்.  


கொஞ்சம் ஆஸ்வாஸப்படுத்திக் கொண்ட பிறகு, இப்படிக் கேட்க என்ன தான் காரணம் சொல்லேன் - என்னால் முடிந்தால் தீர்வு சொல்கிறேன் என்று கேட்க, இந்தர்ஜீத் மீண்டும் பேச ஆரம்பித்தான்.  


”சின்ன வயதிலிருந்தே எனக்கு அவள், அவளுக்கு நான் என்று சொல்லிச் சொல்லியே வளர்த்தார்கள்.  எங்கள் இருவருக்குள்ளும் இந்த விதையை விதைத்து, அதனை அவ்வப்போது தண்ணீர் விட்டு வளர்த்து, இப்போது திருமணம் நடக்கும் என்று நாங்கள் இருவரும் நம்பிக்கொண்டிருக்க, மொத்தமாக அந்த மரத்தினை ஆணிவேருடன் பிடிங்கிப் போடும் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் - எனது பெற்றோரும் மஞ்சீத்-இன் பெற்றோரும்.  நாங்க எடுத்த முடிவு தான் முடிவு - இதுக்கு மேலே பேச ஒண்ணுமே இல்லை என்று பிடிவாதமாக இருக்கிறார்கள்.  அந்தப் பக்கம் மஞ்சீத் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்க, நான் இங்கே தவித்துக் கொண்டிருக்கிறேன். 


நான் எனது பெற்றோருடனும் மஞ்சீத் அவளது பெற்றோருடனும் பேசினாலும் எந்த மாற்றமும் இல்லை.  எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் - கிராமத்தில் இருக்கும் நிலம்!  நிலத்தினை சொந்தம் கொண்டாடுவதில் உண்டான சின்னச் சின்ன பிரச்சனைகள் - இருவருமே விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.  இந்தப் பிரச்சனையில் எங்களுக்குள் இருக்கும் காதலை அடியோடு வெட்டி எறிந்து விட்டு, வேறு சம்பந்தம் பேசி முடிவெடுக்க தயாராகி விட்டார்கள்.  எங்கள் நிலை ரொம்பவே மோசமாக இருக்கிறது.  நானானாவது வெளியே நடமாட முடிகிறது.  மஞ்சீத் வீட்டுக்குள்ளேயே சிறை வைக்கப்பட்டது போல இருக்கிறாள்.  அவளுடன் பேசக் கூட முடியவில்லை.  வாழ்ந்து என்ன பயன், சாவதே மேல்னு எனக்கு தோணுது Bபுவாஜி. வேற ஒரு வழியும் தெரியல!


கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி பேசும் இந்தர்ஜீத்-இடம் என்ன சொல்லி சமாதானம் செய்யலாம் என்று யோசித்தபடியே அமர்ந்திருக்கிறார் சிம்ரன் கௌர்.  இதுவரை இந்தர்ஜீத் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்ட பிறகு, ஒரு முடிவுக்கு வந்தவராக, பேச ஆரம்பித்தார்.  


“இந்தர்ஜீத் புத்தர், வாழ்க்கையில் பிரச்சனைகள் வரத்தான் செய்யும், அதற்கான தீர்வு தற்கொலை மட்டுமே இல்லை.  தற்கொலை செய்து கொள்வதால் உனக்கு மஞ்சீத் கிடைத்து விடுவாளா?  சொர்க்கத்தில் சேர்ந்து வாழ்வோம் என்று சொல்வதெல்லாம் சினிமாவுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும்.  நிஜ வாழ்க்கையில் பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை.  பிரச்சனைகளை எதிர்த்து போராடுவதில் தான் இருக்கிறது சாமர்த்தியம்.  உன் பெற்றோருடன் நீ பேசு.  நானும் உன் வீட்டிலும், மஞ்சீத் வீட்டிலும் பேசுகிறேன்.  பேசித் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை என்பது தான், நான் இந்த வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடம்.    யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போக வேண்டியது அவசியம். நிச்சயம் நல்ல முடிவு தான் கிடைக்கும்!”


”அவசரமான, அசட்டுத்தனமான முடிவு எடுத்து ஒரு பலனும் இல்லை.  உன் காதல் ஜெயிக்கும் என்ற தீர்க்கமான முடிவுடன் இரு! எந்த வித முட்டாள்தனமான முடிவும் எடுக்க மாட்டேன் என எனக்கு சத்தியம் செய்து கொடு! உன் காதல் திருமணத்தில் தான் முடியும் - அதுக்கு நானாச்சு! ” என்று இந்தர்ஜீத்-இடம் சொன்ன சிமரன் கௌர் தனது கைத்தடியை எடுத்துக் கொண்டு, அப்போதே பேச்சுவார்த்தை நடத்த புறப்பட்டு விட்டார். 


ஒரு வாரத்தில் கையில் பத்திரிகையுடன் வந்த இந்தர்ஜீத், “பேரி போனா Bபுவா ஜி!” என்று முட்டியைத் தொட்டு வணங்கி ”உங்களுக்குத் தான் முதல் பத்திரிக்கை - அடுத்த வாரம் எனக்கும் மஞ்சீத்-க்கும் ”வ்யா” - கண்டிப்பாக வந்து ஆசீர்வாதம் செய்யணும்” என்று சொல்ல, சிம்ரன் கௌரும் அவரது வழக்கம் போல, “ஜூக் ஜூக் ஜீயோ புத்தர்!”  என்று ஆசீர்வாதம் செய்ததோடு, “ஷகுன்” ஆக கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பினார்.  


*****


கொஞ்சம் ஹிந்தி/பஞ்சாபி கற்றுக் கொள்ளலாம்! :)  


பேரி போனா ஜி! என்ற வாக்கியத்திற்கு நேரடி அர்த்தம் காலில் விழுவது…  காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவோம் அல்லவா, அம்மாதிரி இங்கே இருப்பவர்கள் காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கும்போது சொல்வார்கள்.  


ஜீத்தே ரஹோ புத்தர்:  நீடுழி வாழ்க மகனே! என்பதையே இப்படிச் சொல்வார்கள். 


Bபுவா:  அத்தை.  ஷகுன்: கல்யாணத்திற்குக் கொடுக்கும் ஆசீர்வாத மொய்ப் பணம். 


 ஜூக் ஜூக் ஜீயோ:  யுகம் யுகமாக வாழ்வாயாக! 


*****


வழமை போல இதுவும் நடந்த நிகழ்வு ஒன்றினை வைத்து எழுதப்பட்ட பதிவு - சிறுகதை போல! பதிவு குறித்த தங்கள் எண்ணங்களைப் பின்னூட்டம் வழி சொல்லுங்களேன்.  நாளை வேறு ஒரு பதிவு வழி சந்திக்கும் வரை…


நட்புடன்
வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து....


26 கருத்துகள்:

 1. ஜீத்தே ரஹோ புத்தர் என்ற சொற்றொடருக்கும் புத்தருக்கும் தொடர்பு இருக்குமோ என யோசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புத்தர் (Puththar) புத்திரன் என்பதைப் புத்தர் எனச் சொல்வார்கள் வட மாநிலங்களில், முக்கியமாய்ப் பஞ்சாபில்.

   நீக்கு
  2. புத்தர் - புத்திரன் என்று நாம் தமிழில் சொல்வதையே இங்கே (P)புத்தர் என பஞ்சாபிகள் அழைக்கிறார்கள் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. நீங்களும் விளக்கம் அளித்ததற்கு நன்றி கீதாம்மா.

   நீக்கு
 2. நல்லா இருக்கு. புனியாத் தொடர் பார்த்த நினைவுகள் மனதிலே! நேரிலேயும் இதைப் பார்த்துக் கேட்டு இருந்தாலும் புனியாத் தொடரில் தான் அதிகம் பஞ்சாபி வார்த்தைகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Bபுனியாத் தொடர் எல்லாம் பார்த்ததில்லை. நான் நேரடியாக தில்லி வந்த பிறகு தான் ஹிந்தி, பஞ்சாபி என வட இந்திய மொழிகள் எனக்கு பழக்கமானது கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. புத்தரை தற்கொலையிலிருந்து காத்த சிம்ரன் என்று தலைப்பிட்டிருக்கலாம்!  நல்ல அனுபவக்கதை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகனைக் காத்த சிம்ரன் என்றாலும் ஒரு அர்த்தம் இருக்கு. ஏதோ கௌதம புத்தரையே தற்கொலையிலிருந்து சிம்ரன் காப்பாற்றினார் என்ற அர்த்தம் வருதே நீங்க சொல்லும் தலைப்புல.

   நீக்கு
  2. ஹா..  ஹா..  ஹா...   என்னடா இது என்று வந்து படிக்கத்தோன்றுமே..!!

   நீக்கு
  3. தலைப்புக்கான ஐடியா! ஹாஹா... (B)புத்தர் பாவம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  4. கௌதம புத்தரையே தற்கொலியிலிருந்து காப்பாற்றிய சிம்ரன் - ஹாஹா... அப்படியும் அர்த்தம் வரும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
  5. பதிவை படிக்க வைக்க எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது எனத் தோன்றுகிறது ஸ்ரீராம்! ஹாஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. இவ்வளவு சுலபமாக ஒரு வாரத்துக்குள் முடியும் பிரச்சனையா, பெரிய கஷ்டம்போல இந்தர்ஜித் மனதை வருத்தியது? தற்கொலை முடிவு ஒரு செகண்டில் எடுத்து பிறகு பல வருடங்கள் வருந்தவைக்கும் செயலாயிற்றே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சம்பந்தபட்ட இந்தர்ஜித் மனதுக்கு இது பெரிய பிரச்சனையாக இருந்தாலும், சிமரன் கௌர் தனது முயற்சியால் சுலபமாக முடித்து வைத்திருக்கிறார் நெல்லைத் தமிழன்.

   ஒரு செகண்ட் முடிவு - பல வருடங்கள் வருந்த வைக்கும் என்பது உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. நல்லதொரு தன்னம்பிக்கை தரும் குட்டிக்கதை அருமை ஜி

  பதிலளிநீக்கு
 6. வாசகம் நன்றாக இருக்கிறது.

  நல்ல கதை. நன்றாக எழுதபட்ட கதை.
  சிறு கதை போல தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. மிக நல்ல இந்தித் தொடரைப் பார்த்த மகிழ்ச்சி.
  புனியாத்,ஹம்லோக் எல்லாம்
  நிறைய ஹிந்தி கற்றுக் கொடுத்தது.
  புவாஜி கூடத்தான்.

  நல்ல சிம்ரன் வந்து பையனைக் காப்பாற்றினார்.
  அந்த சரியான நேரத்தில் காப்பாற்றப் பட்டால்
  எந்தத் தற்கொலையையும் தடுக்கலாம்.
  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மிக நல்ல இந்தித் தொடரைப் பார்த்த மகிழ்ச்சி// நன்றி வல்லிம்மா.

   //சரியான நேரத்தில் காப்பாற்றப்பட்டால், எந்தத் தற்கொலையையும் தடுக்கலாம்// உண்மை தான் மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. கதை உங்களுக்கும் பிடித்த விதத்தில் இருந்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 9. நல்ல என்னங்களை விதைக்கும் சிறுகதை சார்.
  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....