சனி, 20 பிப்ரவரி, 2021

காஃபி வித் கிட்டு - 99 - பனீர் டிக்கா - பூக்கள் - கேட்ச் மசாலா - லாரா - கவிதை - உற்சாகம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தேவை கொஞ்சம் விஷம்... பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


A flower does not think of competing with the flower next to it.  It just blooms!


******
இந்த வாரத்தின் உணவு - பனீர் டிக்கா:

இந்த வாரத்தின் உணவாக பனீர் டிக்கா!  பொதுவாக டிக்கா ஆலு எனும் உருளைக் கிழங்கில் தான் செய்வார்கள்.  எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ”நரேஷ் பனீர் டிக்கா” எனும் கடை உண்டு.  அந்தக் கடையில் கிடைக்கும் அனைத்துமே சைவ உணவு வகை தான்.  வெஜ் ரோல், பனீர் டிக்கா, சாப் என கிடைப்பது அனைத்தும் சைவம் தான்.  ஓரிரு முறை இங்கே சாப்பிட்டதுண்டு.  படம் எடுத்ததில்லை.  அடுத்த முறை சென்றால், படம் எடுத்து, பகிர்ந்து கொள்கிறேன். இந்த பகிர்வில் கொடுத்திருப்பது இணையத்திலிருந்து எடுத்த படம்! 


இந்த வாரத்தின் நிழற்படங்கள்- தால்கட்டோரா பூங்காவிலிருந்து…

சென்ற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை நேரத்தில் வீட்டின் அருகே இருக்கும் தால்கட்டோரா பூங்காவில் நடைப்பயணம் செல்ல ஆரம்பித்து இருக்கிறோம் நானும் நண்பரும்.  இந்தச் சமயத்தில் தான் பூக்கள் நிறைய பூத்து இருக்கும் என நினைத்தால் இப்போது தான் செடிகள் நட்டிருக்கிறார்கள். ஒரு சில பூக்கள் மட்டுமே இருந்தன.  அவற்றை இங்கே பகிர்ந்து இருக்கிறேன் - உங்கள் பார்வைக்கும் ரசனைக்கும்!


இந்த வாரத்தின் விளம்பரம் - Catch மசாலா


இந்த வாரத்தின் விளம்பரமாக 2018-ஆம் ஆண்டில்  Catch மசாலா வெளியிட்ட ஒரு விளம்பரம் தான் பார்க்கப் போகிறோம்.  இந்த விளம்பரத்தில் வரும் மூதாட்டி - ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் விளம்பரத்திலும் வருவார்.  அவரை ஏனோ எனக்கு மிகவும் பிடிக்கும்.  அவரது முகத்தில் அப்படி ஒரு களை - ஏதோ நமக்கு நெருக்கமானவர் போன்ற ஒரு உணர்வு.  விளம்பரத்தினை நீங்களும் பாருங்களேன் - ஹிந்தி தெரியாதவர்கள் மன்னிக்க! - ஆனால் காணொளியினைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும் என்பதே என் எண்ணம்.


இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு - லாரா


2013-ஆம் ஆண்டின் இதே நாளில் எனது பக்கத்தில் எழுதிய பதிவு - பதிவுலகில் ப்ரையன் லாரா! இப்படி கூட பதிவின் தலைப்பை வைத்திருக்கிறேன் என்று பார்த்த போது கொஞ்சம் மகிழ்ச்சியாகவே இருந்தது!  அந்தப் பதிவினை கீழே உள்ளது போல தொடங்கி இருக்கிறேன்…


பதிவுலகில் நான் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் சில பதிவர்களைப் பற்றிய பகிர்வு இது. 2009 ஆம் ஆண்டு பதிவுலகிற்கு வந்த பிறகு நான் தொடரும் பதிவர்களில் பல பதிவுகள் எழுதிய சில பதிவர்கள், மற்றும் அவர்களுடனான எனது நட்பு ஆகிய விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இன்று எனக்கு ஒரு வாய்ப்பு! வாங்க பார்க்கலாம் :)


முடிக்கும் போது, கீழேயுள்ள வரிகளைச் சொல்லி முடித்திருக்கிறேன்…


சரி, ”இதெல்லாம் இந்தப் பதிவில் இன்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன?” என சந்தேகத்தோடு படிக்கும் உங்களுக்கு, காரணம் சொல்ல வேண்டிய தருணம் வந்து விட்டது! கிரிக்கெட் விளையாட்டில் டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்க்ஸில் 400 ரன்கள் எடுத்த ஒரே வீரர் பிரையன் லாரா மட்டுமே! ஆனால் நமது தமிழ் வலைப்பூக்களில் 400 பதிவுகளுக்கு மேல் எழுதிய லாராக்கள் பலர்.


எதற்காக இந்தப் பதிவு?  படிக்காதவர்கள் படிக்கலாமே!  பதிவின் சுட்டி கீழே…


பதிவுலகில் ப்ரையன் லாரா


இந்த வாரத்தின் ரசித்த கவிதை - பிரபு தர்மராஜ்


இந்த வாரத்தின் ரசித்த கவிதையாக முகநூலில் படித்த கவிதை ஒன்று! 

கரையேற மனமில்லை!

கலங்கி நிற்கிறது குளம்!


படித்துறைப் பாசிகள் பசலை பூத்தன!

செல்லாதே என்கின்றன சேல்கள்!


அல்லிகள் அழுவதைக் கண்டிருக்கிறாயா மல்லியே?

கண்ணீரால் குளத்து நீர்மட்டம் கூடிப்போகிறது!


மொத்த நீர்ப்பரப்பும் நம் பிம்பங்களைப்

பிரதிபலித்ததைக் கண்டாயோ?

நீயின்றி நிலமேது நிதம்பமே!


நீர்மேவிய மேனியின் நித்திரையில் விழித்துக் கிடக்கின்றேன்...

நிகரற்ற நனைதலில் உறங்கிப் போவேன் !


முகிலின் முகட்டில் ஒரு முயக்கம்!

அதுவொரு நீண்ட முத்தம் !

குளமும் குளித்துக் கிடக்கிறதே!


பகலவன் நீவிய நீராவியின் வெம்மையில்

என்னையும் பாவியாக்காதே!


மீண்டும் ஒருமுறை மூழ்குவோம் வா..

அத்தனையும் காதல் வயப்படட்டும்!


பிரபு தர்மராஜ்


இந்த வாரத்தின் நிகழ்வு - உற்சாகமாய்….:


காலை நேர நடைப்பயிற்சி முடித்து வீடு திரும்பி, கையில் ஒரு கோப்பை காப்பியுடன் சற்றே இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, வீட்டிற்கு வெளியே குறுக்குச் சாலையில் யாரோ சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்தது காதில் கேட்டது.  காப்பிக்கோப்பையுடன் பால்கனிக்குச் சென்று பார்க்க மூன்று சிறுமிகள் - கீழே இருக்கும் குறுக்குச் சந்தில் நின்று கொண்டு விதம் விதமாய் நடை நடந்து, சிரித்து, Pose கொடுத்து படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  சில நொடிகள் அங்கே நின்று பார்த்தபோது அவர்களது மகிழ்ச்சியும் நம்மையும் தொற்றிக் கொள்ளும் என்று தோன்றியது.  கிட்டத்தட்ட அரை மணி நேரமாக - இந்தப் பதிவினை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் நேரத்தில் கூட அவர்களது ஃபோட்டோ செஷனும், சிரிப்பொலியும் அடங்கவில்லை.  கல்லூரியில் கூட காலடி எடுத்து வைக்காத சிறுமிகள் - நட்ட நடு சாலையில் நடப்பதும், உட்கார்ந்து போஸ் கொடுப்பதும் என தொடர்ந்து கொண்டிருக்கிறது அவர்களின் காலை நேரம்.  நிறையவே மகிழ்ச்சியாக, உற்சாகமாக இருக்கிறார்கள் - இந்த மகிழ்ச்சி அவர்களது வாழ்க்கையில் தொடரட்டும்!  


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


24 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. பூக்களினி படங்கள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பனீர் டிக்கா - இரண்டு நாட்களுக்கு முன்பு மகள் செய்தாள். படங்கள் எடுத்து வைத்திருக்கிறாள். நான் இனித்தால் பதிவு எழுதணும்.

  நிழற்படங்கள் அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இனிதான் பதிவு எழுதணும் - என்றே படித்தேன் - இனித்தால்! :)

   நிழற்படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. இங்கே கேவிஎம் ஓட்டலில் ஸ்டார்டர்ஸுக்குப் பனீர் டிக்கா ஒரு முறை ஆர்டர் செய்தோம். அருமை! கொத்துமல்லிச் சட்னி அதைவிட அருமை.
  அதென்ன நெல்லையார் "நான் இனித்தால்" பதிவு எழுதுவேன் எனச் சொல்லுகிறார். கசந்தால் எழுத மாட்டாராமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேவிஎம் உணவகம் பார்த்திருக்கிறேன் - உள்ளே சென்று சாப்பிட்டதில்லை கீதாம்மா.

   //கசந்தால் எழுத மாட்டாராமா?// ஹாஹா...


   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. மத்தியான நேரத்தில் வந்ததால் காணொளியை முழுசும் பார்த்துட்டேன். மழை நின்னுடப்போறதுனு நானே நினைச்சுண்டேன். :))) நல்லா இருக்கு. இப்படி ஒரு மசாலா இருப்பதே இன்னிக்குத் தான் தெரியும். நெடுந்தொடர்களை விட இம்மாதிரி விளம்பரப் படங்கள் நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முழுதாகப் பார்த்த காணொளி - :)

   இந்த மசாலா பிரபலமான ஒன்று கீதாம்மா.

   நெடுந்தொடர்களை விட இம்மாதிரி விளம்பரப் படங்கள் நல்லா இருக்கு - உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. நடைப்பயிற்சியின் போது பார்க்க நேர்ந்த பூக்களும், பிரபு த்ரமராஜின் கவிதையும் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களும் கவிதையும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. அன்பு வெங்கட் .
  எத்தனை அருமையான பதிவு.
  சிங்கத்துக்கு மிகப் பிடித்த காட்ச் மசாலா,
  உப்பு, மிளகுப் பொடி வாங்கி வருவார்.
  அந்த அம்மாவுக்கு அன்பான முகம். அது விளம்பரத்தில் வந்தால்
  பொருட்கள் சீக்கிரம் விற்றுப் போகும். அந்தப் பையனும்
  அருமையாக உணர்ந்து நடிக்கிறார்.
  வாழ்த்துகள் அம்மா.

  டால்கடோரா பூக்கள் கள்ளி வகை என்று நினைக்கிறேன்.
  அரிசோனா மாகாணத்தில் நிறைய கொடைக்கும்.
  அது தில்லியிலும் வகை வகையாகப்
  பூத்திருப்பதுதான் அருமை. மிக நன்றி மா.
  லாரா பதிவைப் போய்ப் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா. விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   கள்ளி வகை பூக்கள் - இங்கே இந்தப் பூக்கள் இருக்கின்றன. சீசனில் பார்க்க முடியும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பனீர் டிக்கா -  சுவாரஸ்யம்.
  பூக்கள் வெகு அழகு.
  கவிதையை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. அனைத்தையும் ரசித்தேன். விளம்பர காணொளி மிக அருமை.
  அந்த அம்மாவை எனக்கும் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. //நிறையவே மகிழ்ச்சியாக, உற்சாகமாக இருக்கிறார்கள் - இந்த மகிழ்ச்சி அவர்களது வாழ்க்கையில் தொடரட்டும்! //

  நானும் வாழ்த்துகிறேன் அந்த குழந்தைகளை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவரும் மகிழ்ச்சியாகவே இருக்கட்டும் - அது தானே நம் எல்லோருக்கும் தேவை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 11. பதில்கள்
  1. பூக்களின் படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 12. பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....