செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

சாப்பிட வாங்க: முள்ளங்கிக் கீரை சப்ஜி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட லாக்டவுன் ரெசிபீஸ் - விமர்சனம் - புவனா சந்திரசேகரன் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


தேவையற்ற பொருட்களை நீ வாங்கிக் கொண்டே இருந்தால் சீக்கிரத்தில் உனக்கு தேவையான பொருட்களை விற்க வேண்டியிருக்கும் - Warren Buffet.


******

முள்ளங்கி - குளிர் நாட்களில் இங்கே மிகவும் ஃப்ரெஷ்-ஆகக் கிடைக்கும்.  வயலிலிருந்து எடுத்து சுத்தம் செய்து அப்படியே கொண்டு வந்து கடைகளில் விற்பார்கள்.  இங்கே முள்ளங்கி என்றால் வெறும் முள்ளங்கி மட்டும் விற்பதில்லை.  அதன் மேலே கீரையுடனேயே விற்பனை செய்வார்கள். நம் ஊரில் முள்ளங்கியைப் பெரும்பாலும் கீரை இல்லாமல் தானே விற்பனை செய்கிறார்கள்.  பொதுவாக அதனால் நம் ஊரில் முள்ளங்கியின் கீரையைப் பயன்படுத்துவது குறைவு தான்.   ஆனால் இங்கே முள்ளங்கிக் கீரையையும் இவர்கள் பயன்படுத்துவதுண்டு.  முள்ளங்கிக் கீரையில் நிறைய சத்துக்கள் - குறிப்பாக இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது.  அதனால் அதனை உண்பது நல்லது.  பொதுவாகவே குளிர் நாட்களில், முள்ளங்கியை சலாட்-ஆகவே இங்கே சாப்பிடுவதுண்டு - வழக்கம் போல காலா நமக் எனும் உப்புடன்  தான்.  முள்ளங்கியும் கீரையும் சேர்த்து சப்ஜி செய்வார்கள்.  இந்த முள்ளங்கி - கீரை சப்ஜி எப்படிச் செய்வது என்று இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள். 


தேவையான பொருட்கள்:  


முள்ளங்கி அதன் கீரையுடன் - நான்கு

சீரகம் - ஒரு ஸ்பூன்

வெங்காயம் - ஒன்று

தக்காளி - இரண்டு

இஞ்சி - சிறு துண்டு

பூண்டு - ஐந்து அல்லது ஆறு பற்கள்

பச்சை மிளகாய் - 2 

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு


எப்படிச் செய்யணும் மாமு?


பொதுவாகவே கீரை வாங்கினால் அதனை மூன்று நான்கு முறை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்வது நல்லது.  அப்போது தான் அதில் உள்ள அழுக்கு/தூசி போன்றவை அகலும்.  முள்ளங்கிக் கீரையும் அப்படியே - நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.  தண்ணீரை நன்கு வடிகட்டி, கீரையை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் - தண்டு அவசியம் இல்லை.  கீரையை பொடிப்பொடியாக  நறுக்கிக் கொள்ளுங்கள். 


முள்ளங்கியையும் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 


இஞ்சி தோல் நீக்கி, சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.  


பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.  


வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்


பொதுவாக வட இந்தியாவில் கடுகு எண்ணெய் தான் சமையலுக்குப்  பயன்படுத்துவார்கள். முள்ளங்கி கீரை சப்ஜிக்கும் கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் நல்லது.  அதன் வாடை நம்மில் பலருக்கும் பிடிக்காது.  அதனால் நீங்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் பயன்படுத்தினால் போதும். 


வாணலி (இரும்பு வாணலியாக இருந்தால் சுவை கூடும்) அடுப்பில் வைத்து சூடானதும் இரண்டு/மூன்று ஸ்பூன் எண்ணெய் சேர்த்து விடுங்கள்.  எண்ணெய் சூடானதும், சீரகம் சேர்த்து பொரிந்ததும், அதில் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.  சிறிது பொன்னிறமாக ஆனதும், தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.


பிறகு நறுக்கி வைத்திருக்கும் முள்ளங்கி மற்றும் முள்ளங்கிக் கீரையையும் சேர்த்து வதக்கவும்.  


பொதுவாக கீரை எதுவாக இருந்தாலும் குக்கரில் சமைப்பது நல்லதல்ல! வாணலியில் சமைக்கும்போது தட்டு போட்டு முழுவதும் மூடாமல் கொஞ்சம் திறந்த வண்ணமே வைப்பது நல்லது.  


தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். காரம் அதிகம் தேவையெனில் சிறிதளவு மிளகாய்த் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.  அவ்வப்போது கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்.  பத்து பதினைந்து நிமிடங்களில் இந்த முள்ளங்கிக் கீரை சப்ஜி தயாராகி விடும்.  


சப்பாத்தி, பூரி உடன் இந்த சப்ஜி பயன்படுத்தலாம்.  இந்த சப்ஜி செய்யும் நாளில், முள்ளங்கிக் கீரை சப்ஜி உலர் சப்ஜியாக இருப்பதால்,  ஏதாவது ஒரு Dhதால் அல்லது ராய்தா செய்து கொள்வது நலம். 


என்ன நண்பர்களே, முள்ளங்கிக் கீரையுடன் கிடைத்தால் இப்படிச் செய்து பார்த்து விடலாம்  தானே…  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வழி சொல்லுங்கள். நாளை வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


20 கருத்துகள்:

 1. சுவையான குறிப்பு.  நம்மூரில் முள்ளங்கி கீரை கிடைக்காது.  அதனால் என்ன, வேறு ஏதாவது சேர்த்து செய்யலாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்க ஊரில் முள்ளங்கி இலையோடத்தான் கிடைக்கும்

   நீக்கு
  2. ஆமாம் ஸ்ரீராம். நம் ஊரில் விற்பனைக்கு வரும்போதே கீரையை எடுத்து விட்டே கொண்டு வருகிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. உங்கள் ஊரில் இலையுடன் முள்ளங்கி கிடைப்பதால் இந்த முறையில் சப்ஜி செய்து பாருங்கள் மதுரைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. முள்ளங்கி கீரை சப்ஜி.. செய்முறை சுலபம்.. எனக்கு முள்ளங்கி சாம்பார் தவிர எதுவும் பிடிக்காது. இங்கு கீரையோடு முள்ளங்கி கிடைக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முள்ளங்கி சாம்பார் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது! நெல்லைத்தமிழன் :) எப்போதாவது என்றால் ஓகே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. முள்ளங்கி எனக்கென்னவோ ஒரு வயதிலிருந்து விரும்பியதில்லை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிலருக்குப் பிடிப்பதில்லை தான் கில்லர்ஜி. இங்கே அப்படியே சமைக்காமலேயே சாப்பிடுவார்கள் - குளிர்காலத்தில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. முள்ளங்கியின் சுவை பலருக்கும் பிடிப்பதில்லை தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. முள்ளங்கி இங்கேயும்/சென்னையிலும் கீரையோடு கிடைத்திருக்கிறது/கிடைத்தது/கிடைக்கிறது. ஆனால் நான் பெரும்பாலும் கீரையைத் தனியாக, முள்ளங்கியைத் தனியாகச் சமைப்பேன். சேர்த்துச் செய்தால் நிறைய ஆகி விடும்.இந்த சப்ஜியும் செய்திருக்கேன் அடிக்கடி, வழக்கம் போல் பூண்டு இல்லாமல் தான்! இஃகி,இஃகி,இஃகி! கீரையைத் தனியாகப் பாசிப்பருப்புச் சேர்த்துச் சுண்டிக் கொட்டியது உண்டு. பாசிப்பருப்போடு சேர்த்து வேக வைத்துத் தேங்காய், ஜீரகம் அரைத்துவிட்டும் பண்ணியது உண்டு, உசிலியாகவும் பண்ணுவேன். சும்மாத் தக்காளி, வெங்காயம் போட்டும் வதக்குவேன். இப்போத் தான் நோ முள்ளங்கி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வழக்கம் போல பூண்டு இல்லாமல் தான் - தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் - சேர்த்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 6. அன்பு வெங்கட்,
  முள்ளங்கிக்காகவே சாம்பாரை விரும்பிய காலம் உண்டு.
  நீங்கள் சொல்லி இருக்கும் குறிப்பு சுவை கூட்டும்.
  பசங்களுக்குப் பிடித்தால் செய்யலாம்.

  அருமையான செய்முறை. மருமகள் நிறைய செய்வார்.
  ஏதோ பெயரும் சொல்வார். தில்லிப் பெண்.
  நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முள்ளங்கிக்காகவே சாம்பாரை விரும்பிய காலம் - ஆமாம் வல்லிம்மா. நம் ஊரில் பெரும்பாலும் முள்ளங்கி சாம்பாரில் போடும் தானாகவே இருந்திருக்கிறது. இங்கே வந்த பிறகு தான் வேறு முறைகளில் அதன் பயன்பாடுகளைக் கண்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. நல்லதொரு வாசகம்

  மிக அருமையாக இருக்கிறது முள்ளங்கி சப்ஜி,
  செய்முறை குறிப்புகள் மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. முள்ளங்கி கீரை உடன் இங்கு தான் சமைக்க இயலும். தாங்கள் செய்த முறையில் நானும் செய்வது உண்டு. ✔️ சரி என்று தெரிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....