புதன், 17 பிப்ரவரி, 2021

ஆதி மஹோத்ஸவ் - தில்லி ஹாட் - கண்காட்சி - ஓவியங்கள்அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


சொன்ன ஒரு சொல், விடுபட்ட அம்பு,  கடந்து போன வாழ்க்கை, நழுவ விட்டு விட்ட சந்தர்ப்பம் - ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது! (அராபிய நாட்டு பழமொழி)


******


நீண்ட இடைவெளிக்குப் பிறகு தலைநகர் தில்லியின் தில்லி  ஹாட் பகுதியில் ஒரு கண்காட்சி நடந்தது - ஃபிப்ரவரி 1 முதல் 15 வரை நடந்த “ஆதி மஹோத்ஸவ்” எனும் கண்காட்சி தான் அது.  தீநுண்மி காரணமாக பல கட்டுப்பாடுகள் இருந்தாலும், கடந்த  வருடத்தில் எந்த வித கண்காட்சியோ, பொருட்காட்சியோ நடக்க வில்லை.  ஒன்றிரண்டு Virtual கண்காட்சிகள் நடந்தாலும் அதனைப் பார்ப்பதில் அத்தனை விருப்பம் இல்லை.  நேரடியாகப்  பார்ப்பதில் இருக்கும் ஆனந்தம் Virtual கண்காட்சிகளில் இல்லை என்றே சொல்ல வேண்டும்.  


இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் பாரம்பரியமான கலைப் பொருட்கள், கலைஞர்கள், உணவுப்பொருட்கள் என ஆதிவாசிகளின் பழக்க வழக்கங்களை எல்லா வருடமும் இப்படி  கண்காட்சியாக நடத்துகிறார்கள். இந்த வருடத்தின் கண்காட்சிக்கு, வழமை போலவே நானும் பத்மநாபன் அண்ணாச்சியும் கடந்த சனிக்கிழமை அன்று மாலையில் சென்று வந்தோம்.  அங்கே சுமார் இரண்டு மணி நேரம் இருந்திருப்போம்.  விதம் விதமான ஓவியங்கள் (பட்ட சித்ரா, Gகோண்ட்), கலைப் பொருட்கள், சிலைகள், கோரைப் புற்களில் செய்யப்பட்ட பெட்டிகள் என பல்வேறு பொருட்களையும் பார்த்து ரசித்தோம்.  ஆங்காங்கே சில படங்களையும் எடுத்துக் கொண்டோம்.  


மாலை வேளையில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.  நாங்கள் சென்ற அன்று ஏதோ இசை நிகழ்ச்சி - ஏதோ பிரமுகர் வர வேண்டும் என்பதால், கலைஞர்களை மேடையில் அமர வைத்தாலும் காத்திருக்க வைத்து விட்டார்கள்.  எப்போதும் போலவே அந்த பிரமுகர் வருவதில் தாமதம் - நாங்கள் அங்கிருந்து புறப்படும் வரை வரவே இல்லை!  கலைஞர்களை மேடையில் உட்கார வைத்து விட்டு, இப்படி காத்திருக்க வைப்பது வேதனை.  


ஒரு இரும்பு வளையத்திற்குள் பேர் ஒவ்வொருவராக உள்ளே நுழைய, ஒரு சமயத்தில் நான்கு பேர் வளையத்திற்குள் இருந்தார்கள் - தப்பட்டைகள் ஒலிக்க அவர்கள் செய்த சாகச நிகழ்ச்சிகள் பலருக்கும் பிடித்திருந்தது.  பலரும் காணொளிகளாக அவர்களது நிகழ்ச்சியை படம்பிடித்துக் கொண்டிருந்தார்கள்.  வழக்கம் போல நடுநடுவே சில மக்கள் குறுக்கே வர, படம் எடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு கோபம் வந்தது - ஒரு பெண் சத்தமாகவே “குறுக்கே வராதீங்க!” என்று கத்தினார்!  இது போன்ற கூட்டமான இடங்களில் படம்/காணொளி எடுப்பது கொஞ்சம் கடினமான வேலை என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். 

தமிழகத்திலிருந்து ஒரு உணவுக் கடை - வழக்கம் போல அங்கே வைத்திருந்தது இட்லி, வடை மற்றும் சிறுதானிய லட்டு!  கூடவே மிக்சர், வாழை சிப்ஸ், முறுக்கு போன்ற தின்பண்டங்கள்.  சிறுதானிய லட்டு ஒன்று ரூபாய் 10 மட்டும்!  நானும் அண்ணாச்சியும் ஆளுக்கொன்று வாங்கி உண்டோம்.  மிதமான இனிப்புடன் நன்றாகவே இருந்தது.  கடை வைத்திருந்த பெண்மணியிடம் லட்டு நன்றாக இருந்தது என்று சொல்லி விட்டு படம் எடுத்துக் கொண்டு அடுத்த உணவுக் கடைகளை கவனித்தோம்.  படம் எடுத்த போது தமிழகப் பெண்மணி கேட்ட கேள்வி - “பத்திரிகையிலிருந்து வரீங்களா?” - அவருக்கு புன்னகையையே பதிலாக  தந்து விட்டு அங்கிருந்து அகன்றேன்.  பெரும்பாலான உணவு வகைகள் அசைவமாகவே இருந்ததால் வேறு எதையும்  சுவைக்கவில்லை. 

பல மாதங்களுக்குப் பிறகு இப்படி ஒரு நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சியை அளித்தது.  தீநுண்மிக்கான பாதுகாப்பு அம்சங்களும் இருந்தன.  வந்திருந்த பெரும்பாலானவர்கள் முகக் கவசம் அணிந்தே வந்திருந்தார்கள்.  போதிய சமூக இடைவெளி என்பது பல இடங்களில் இல்லை என்பதும் உண்மை.  தலைநகர் தில்லியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது.  விரைவில் தீநுண்மி பாதிப்பு அகல வேண்டும் - அகலும்!  இந்தப் பதிவின் வழி எங்களுக்குக் கிடைத்த அனுபவங்களைபகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.  அங்கே எடுத்த படங்களில் ஓவியங்களின் படங்கள் மட்டும் இன்றைய  பதிவில் பகிர்ந்திருக்கிறேன்.  வரும் ஞாயிறில் இன்னும் சில படங்களை ஒரு தொகுப்பாக பகிர்ந்து கொள்கிறேன். 


இந்தப் பதிவில் பகிர்ந்த விஷயங்களும், படங்களும் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


22 கருத்துகள்:

 1. படங்களும் ஓவியங்களும் மிக அழகு... சிறுதானிய லட்டு... பார்க்க அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களும் ஓவியங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   சிறுதானிய லட்டு - சுவைக்கவும் நன்றாகவே இருந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. "ஆதி மஹோத்ஸவ்" அப்படினு தலைப்பை பார்த்ததும், நான் வேற ஏதோ இருக்கும்னு ஓடி வந்தேன் 😄. நல்ல பகிர்வு, வழக்கம் போல் படங்கள் அருமை.இன்னும் இப்படி பொது இடங்களுக்கு செல்ல தயக்கம் விலகவில்லை, விரைவில் நிலமை சீராகும் என நம்புவோம். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் இடுகைக்கு நுழைவதற்கு முன்பு, ஆதி வெங்கட் அவர்கள் எழுதிய பதிவோ என்று நினைத்தேன்.

   நீக்கு
  2. தலைப்பு பார்த்து ஓடோடி வந்தீர்களா? ஹாஹா... ஆதி மஹோத்ஸவ் சில வருடங்களாகவே தில்லியில் நடக்கின்றது! :)

   படங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அப்பாவி தங்கமணி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. ”ஆதி வெங்கட் எழுதிய பதிவோ என்று நினைத்தேன்” - :) கதம்பம் பதிவுகள் எப்போதும் அவர் எழுத்தில் தான்.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 3. வளையத்துக்குள் பலரும் நுழைந்து வருவதை பார்க்கும்போது மனம் பரிதவிக்கும். இவர்களின் வருமானம் சில நூறுகள்கூட கிடையாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வளையத்துக்குள் நுழைந்து வருவது மனம் பரிதவிக்க வைக்கும் நிகழ்ச்சி தான் கில்லர்ஜி. தில்லியில் கொஞ்சம் பரவாயில்லை - இது போன்ற இடங்களில் பணம் தாராளமாக தருவார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. ஒரு வளையத்துக்குள் நாலு பேர்களா?  பாவம்... "வயித்துக்காக மனுஷன் இங்கே கயிற்றில் ஆடுறான் பாரு...  ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம்தாண்டா சோறு.."  வரிகள் நினைவுக்கு வருகின்றன.  ஓவியங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எடுத்துக் காட்டிய பாடல் வரிகள் சிறப்பு.

   ஓவியங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. பதில்கள்
  1. ஓவியங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. கண்காட்சியின் ஓவியங்கள் அனைத்தும் அழகாக உள்ளன.
  அந்த வயதானவரின் உருவமும், பெண்ணின் உருவமும் வரையப்பட்டது தத்ரூபமாக மிக அழகாக இருக்கிறது. ரசித்தேன். அங்கு கைவினைப் பொருட்களும் திறம்பட செய்துள்ளனர். சத்து மாவு உருண்டைகள் பார்க்கவே அழகாக உள்ளது. கண்டிப்பாக சுவையாகத்தான் இருந்திருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகமும் பதிவின் வழி பகிர்ந்த ஓவியங்களும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. பழமொழி நன்றாக இருக்கிறது.

  ஓவியங்கள், கலைப்பொருட்கள் அழகு.
  சிறுதானிய லட்டு பார்த்த போது பொரிவிளங்காய் உருண்டை என்று நினைத்தேன்.

  //விரைவில் தீநுண்மி பாதிப்பு அகல வேண்டும் - அகலும்!//

  அது தான் வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழமொழியும், பதிவின் பகிர்ந்த ஓவியங்கள் மற்றும் கலைப்பொருட்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. ஓவியங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 9. எல்லா ஓவியங்களும் அருமை. நன்றாக உள்ளன. சிறுதானிய லட்டு இங்கே திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள காதி பண்டாரில் (ஃப்ரான்சைஸ்) நிறையக் கிடைக்கும். அங்கே போனால் வாங்கி வருவோம். கடலை மிட்டாயும் அங்கே நன்றாக இருக்கும். புடைவைகள் கூட அங்கே மாடியில் பருத்திச் சேலைகள் நன்றாய்க் கிடைக்கும். ரெடிமேட் ஷர்ட் வகைகள் எல்லாமும் கிடைக்கின்றன. இப்போ அங்கே எல்லாம் போயே 2 வருஷங்கள் ஆகப் போகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓவியங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

   தெப்பக்குளம் அருகே நிறைய காதி ஃப்ரான்சைஸ் இருக்கிறது கீதாம்மா. நானும் ஒன்றிரண்டு முறை சென்றதுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. வழக்கம் போல் எனக்குப் பொருத்தமான பழமொழி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்குப் பொருத்தமான பழமொழி - :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....