சனி, 6 பிப்ரவரி, 2021

காஃபி வித் கிட்டு 97 - கஜூர் கே லட்டு - காந்தி தர்ஷன் - ஐஸ்க்ரீம் - ஏழு சகோதரிகள்அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சினிமா - Gubbaare - நானா படேகர் பதிவினை படித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


”நேரம்” சொன்னது - நான் மீண்டும் வருவதில்லை - நான் வரும்போது உன்னை சிரிக்க வைப்பேனா இல்லை அழ வைப்பேனா என்பது  எனக்கே தெரியாது!  இந்த நொடியில் வாழ்க்கையை வாழ்ந்து விடு.  ஏனெனில் எப்படியும், என்னாலேயே கூட இந்த நொடியை வரும் நொடி வரை நிறுத்தி வைக்க இயலாது!


******இந்த வாரத்தின் உணவு - கஜூர் கே லட்டு

இந்த வாரத்தின் உணவாக நாம் பார்க்கப் போவது கஜூர் கே லட்டு!  கஜூர் என்றால் என்ன தெரியுமா? பேரீச்சம் பழத்தினை தான் கஜூர் என்று சொல்கிறார்கள்.  அஃப்கானி பேரீச்சம் பழமாக இருந்தால் நல்லது!  பேரீச்சம் பழம், உலர் பழங்கள், கோயா, மற்றும் கொப்பரை தேங்காய் துருவல் கொண்டு செய்யப்படும் இந்த லட்டு மிகவும் சத்தானது.  செய்து வைத்தால் ஒரு மாதம் கூட கெட்டுப் போகாது.  எப்படிச் செய்வது என்பதை கீழே உள்ள காணொளி மூலம் தெரிந்து கொள்ளலாம்.  நான் செய்வதில்லை - கடையில் வாங்கி உண்பதுண்டு!

இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு:


இதே நாளில் 2012-ஆம் ஆண்டு வெளியிட்ட பதிவு - “தலைநகரிலிருந்து” தொடரின் 17-ஆம் பகுதி.  அப்பகுதியிலிருந்து சில வரிகள் இங்கேயும்…

தில்லி ராஜ் [G]காட் என்கிற இடத்தில் தான் காந்தி சமாதி இருக்கிறது என்பது தில்லி வந்திருக்காத நபர்களுக்குக் கூட தெரிந்திருக்கும் – அதான் ஒவ்வொரு காந்தி பிறந்த – இறந்த நாட்களிலும், எந்த வெளிநாட்டு தலைவர் வந்தாலும் அந்த இடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவதையும் எல்லாத் தொலைக்காட்சிகளிலும் காட்டுகிறார்களே.  ஆனால் தில்லியில் இருப்பவர்களுக்குக் கூட அந்த ராஜ் [G]காட் எதிரே இருக்கும் “காந்தி [Dha]தர்ஷன்” என்ற இடம் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே…


இது ராஜ் [G]காட் வரும் வாகனங்கள் நிறுத்துமிடத்திற்குப் பக்கத்தில் சுமார் முப்பத்தி ஆறு ஏக்கர் பரப்பளவில் 1969-ஆம் வருடம், அவரது நூற்றாண்டு விழா சமயத்தில் அமைக்கப்பட்டது.  இந்த இடத்தில் ஆறு பார்வை மண்டபங்கள் இருக்கிறது.  இந்த கண்காட்சி அமைக்கப்பட்டதன் நோக்கமே அவருடைய வாழ்க்கையையும் அவர் சொன்ன நற்செய்தியையும் பரப்புவதே என்பது  அங்கே இருக்கும் காந்தியின் பெரிய சிலைக்குக் கீழே எழுதி இருக்கும் வாசகத்திலிருந்தே உங்களுக்குப் புரியும் – அந்த வாசகம் “MY LIFE IS MY MESSAGE”.


ஒரு அரங்கத்தில் திரு நந்த்லால் போஸ் அவர்கள் வரைந்த காந்தியின் பெரிய படம் உங்களை வரவேற்கிறது.  இந்த அரங்கத்தில் காந்தி பிறந்ததிலிருந்து எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள், பத்திரிக்கைச் செய்திகள் என எல்லாவற்றையும் வரிசைக் கிரமமாக வைத்திருக்கிறார்கள்.  மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பவர் ‘மகாத்மா காந்தி’ என்று ஆனது எப்படி என்பது இங்கே பார்த்தால் புரியும்!


முழு பதிவினையும் வாசிக்க சுட்டி கீழே!


தலைநகரிலிருந்து - பகுதி 17


இந்த நாள் இனிய நாள் - 6 ஃபிப்ரவரி:
National Eat Ice Cream for Breakfast Day என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் ஃபிப்ரவரி மாதத்தின் முதலாம் சனிக்கிழமை அன்று கொண்டாடுகிறார்களாம்! இந்த வருடம் இன்று அதாவது 6 ஃபிப்ரவரி அன்று கொண்டாடப்படுகிறது.  இந்தப் பழக்கம் ஆரம்பித்து வைத்தது ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒரு அமெரிக்கப் பெண்மணி - ஆரம்பித்தது 1960-ஆம் ஆண்டு.  இந்த நாள் இப்போது அமெரிக்கா மட்டுமல்லாது வேறு சில நாடுகளிலும் கொண்டாடப்படுகிறதாம்!  அது என்ன ஃபிப்ரவரி முதலாம் சனிக்கிழமை - ”நாங்க என்னிக்கு, எப்பக் கொடுத்தாலும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவோமே” என்று சொல்லும் சிலரை எனக்குத் தெரியும்.  தில்லி வந்த புதிதில் நானும் அப்படித்தான் இருந்தேன்.  இப்போதெல்லாம் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதே இல்லை!  


இந்த வாரத்தின் விளம்பரம் - ப்ரெகா நியூஸ்:

சில விளம்பரங்கள் மனதைத் தொட்டுவிடும் விதத்தில் அமைந்து விடும். ப்ரெகா நியூஸ் விளம்பரங்களும் இந்த வகையைச் சேர்ந்தவை தான்.  இவர்களின் வேறு ஒரு விளம்பரம் முன்னரே பகிர்ந்த நினைவு.  அப்படியான விளம்பரம் ஒன்று - இந்த வாரத்தின் விளம்பரமாக - பார்க்கலாம் வாருங்கள்! - ஹிந்தியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் சப்டைட்டில் உண்டு!  கவலை வேண்டாம்!

இந்த வாரத்தின் மின்னூல் தகவல்:  ஏழு சகோதரிகள் பாகம் 4

எனது பயணம் தொடர்பான மின்னூல்களில் ஒன்றான ஏழு சகோதரிகள் பாகம் நான்கினை இப்போது இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேகாலயா, திரிபுரா மற்றும் கொல்கத்தா நகர் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் இந்த மின்னூலில் உண்டு.  இந்தப் பயண நூலை அமேசான் கிண்டில் தளத்திலிருந்து இப்போது இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.  அதற்கான சுட்டி கீழே…


ஏழு சகோதரிகள் - பாகம் 4


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் - பின்னூட்டமாக!  நாளை வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


18 கருத்துகள்:

 1. இன்றைய பதிவு சிறப்பு.... 2012ம் வருட பதிவைப் படிக்கணும். பேரீச்சை லட்டு, பர்ஃபி சாப்பிட்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிச்சி நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. அனைத்தையும் ரசித்தேன்.

   கண்கலங்க வைத்த அந்த விளம்பரம் ஏற்கெனவே நீங்களே பகிர்ந்த நினைவு. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. கதம்பம் அருமை ஜி

  வாசகம் ஸூப்பர் கஜூர் லட்டு அபுதாபியில் சாப்பிட்டு இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. காந்தி தர்ஷன் நன்றாக இருக்கும் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. காந்தி தர்சன் என்று ஒன்று இருப்பதையே இப்பொழுதுதான் அறிகிறேன் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கு புதியதொரு விஷயத்தினை அறியத் தந்ததில் எனக்கும் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. நல்ல தொகுப்பு. கஜூர் கே லட்டு கடைகளில் பார்த்திருக்கிறேன். வாங்கிப் பார்க்கிறேன்:). ஐஸ்க்ரீம் தினம்.. இப்போதுதான் அறிய வருகிறேன். தொடர்ந்து பயணக்கட்டுரைகள் மின்னூலாக வெளிவருவதில் மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கஜூர் கே லட்டு கிடைத்தால் சாப்பிட்டுப் பாருங்கள் ராமலக்ஷ்மி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. வாசகம் மனதை தொட்டது. எவ்வளவு உண்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி மேடம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. இரண்டு நாட்களாக யாருடைய பக்கத்திலும் யூ ட்யூப் திறப்பதில்லை. இங்கேயும். பின்னர் தான் நினைவிருந்தால் வந்து பார்க்கணும். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யூ ட்யூப் திறப்பதில் பிரச்சனை இருப்பதாகத் தெரியவில்லை. முடிந்த போது பாருங்கள் கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....