தொகுப்புகள்

சனி, 10 ஏப்ரல், 2021

காஃபி வித் கிட்டு-106 - நூறாவது நாள் - விட்டு விலகி நிற்பாய் - ஃபிர்ணி - ஷெர்வானி - தீநுண்மி - குல்(dh)தாரா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


LIFE IS VERY SHORT, SO BREAK YOUR SILLY EGOS, FORGIVE QUICKLY, BELIEVE SLOWLY, LOVE TRULY, LAUGH LOUDLY AND NEVER AVOID ANYTHING THAT MAKES YOU SMILE!


******




இந்த வாரத்தின் இந்த நாள் - நூறாவது நாள்





இந்த வருடத்தின் நூறாம் நாள் இன்று! இன்றைக்கு வெளிவரும் இந்த காஃபி வித் கிட்டு பதிவும், இந்த வருடத்தின் நூறாவது பதிவு!  இந்த வருடம், இது வரை, தினமும் ஒரு பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்திருக்கிறது.  வருடம் முழுவதும் இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதிவு வெளியிட முடியுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.  முடிந்த வரை ஒவ்வொரு நாளும் பயனுள்ள தகவல்களையே இங்கே பகிர்ந்து கொள்கிறேன் என்ற எண்ணம் எனக்கு உண்டு (!)  உங்கள் எண்ணம் என்ன என்பதையும் சொல்லுங்களேன் - பின்னூட்டம் வாயிலாக! 


இந்த நாளுக்கு இன்னும் ஒரு சிறப்பும் உண்டு - 10 ஏப்ரல் - வருடா வருடம் World Homeopathy Day-ஆகக் கொண்டாடப்படுகிறது என்ற தகவலையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  உங்களில் சிலருக்கு இத் தகவல் முன்பே தெரிந்திருக்கலாம்!  எனக்கு அவர்கள் கொடுக்கும் சர்க்கரை மிட்டாய் பிடிக்கும் என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன்! :)  


*****


இந்த வாரத்தின் விளம்பரம் - விட்டு விலகி நிற்பாய்:


அலைபேசிகள் வந்தாலும் வந்தது, அதன் பயன்பாடு தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது.  பலரும் அதனை விட்டு விலகுவதே இல்லை - கர்ணனின் கூடப் பிறந்த கவச குண்டலம் போலவே இவர்களுக்கு அலைபேசி இருக்கிறது!  தாய்லாந்து நாட்டின் ஒரு விளம்பரம் இது குறித்துச் சொல்கிறது நமக்கு - வார்த்தைகளே தேவையில்லாமல், சொல்ல வரும் விஷயத்தினை, நமக்குச் சொல்லிவிடும் இந்த விளம்பரம் உங்களுக்கும் பிடிக்கலாம்!  பாருங்களேன்!


*****


இந்த வாரத்தின் உணவு - Phirni (ஃபிர்ணி):





ஃபிர்ணி என்பது அரிசியில் தயாரிக்கப்படும் இனிப்பு ஆகும்.  பாலில் சமைக்கப்பட்டு பாதாம், குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் சேர்த்து செய்யும் இந்த இனிப்பு வட இந்தியாவில் மிகவும் விசேஷமானது.  ஷிகோரா எனப்படும் மண் கிண்ணங்களில் வைத்து, குளிர வைக்கப்பட்டு, சில்லென்று சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.  நம் ஊர் அரிசி பாயசம் மாதிரி என்று சொன்னாலும், எனக்கு இந்தச் சுவை இன்னும் அதிகம் பிடிக்கும், உங்களுக்கும் பிடிக்கலாம்!  


*****


இந்த வாரத்தின் WhatsApp நிலைத்தகவல் - அன்பு:


சென்ற வாரத்தில் பார்த்த ஒரு வாட்ஸ் அப் நிலைத் தகவல் கீழே!  சரியாத்தான் சொல்றாங்க போல! 




*****


இந்த வாரத்தின் எண்ணங்கள் - திருமணமும் உடைகளும்:


அலுவலகத்தில் உடன் பணிபுரியும் இரு இளைஞர்களுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயம் ஆகியிருக்கிறது.  ஒருவருக்கு வரும் மாதம் (மே) திருமணம் என்றால் மற்றவருக்கு நவம்பர் மாதம்!  இருவரின் திருமணமும் உத்திரப் பிரதேசத்தில் - ஒன்று கிராமத்தில் மற்றொன்று நகரத்தில். இருவருமே வந்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் - அவர்களை விட மூத்தவன் என்ற காரணத்தால் அவர்கள் அன்புடன் அழைத்தாலும் இப்போதைய சூழலில் அடுத்த மாத திருமணத்திற்குச் செல்ல முடியும் என்று தோன்றவில்லை.  தீநுண்மி பரவும் வேகத்தினைப் பார்த்தால் வெளியூர் பயணம் - அதுவும் உத்திரப் பிரதேசத்திற்கு, பயணம் சாத்தியமாகத் தெரியவில்லை.  இது வரை இரயில் முன்பதிவு செய்யவில்லை.  கான்பூர் வரை சென்று அங்கேயிருந்து 40 கிலோமீட்டர் தொலைவு கார்/ஜீப்-இல் பயணித்து கிராமத்திற்குச் செல்ல வேண்டும்.  வருவது சந்தேகம் என்றே சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  


இரு இளைஞர்களும் தங்களது திருமணத்திற்காக தயார் ஆவது பார்க்கும் போது, மனதில் ஒரு நினைவு - நாம் என்ன செய்தோம் என்று!  அவர்கள் பரபரப்பாக இயங்குகிறார்கள். உடைகள் வாங்குவது ஷெர்வானி, லெஹங்கா என மேட்சிங் பார்த்து, சின்னச் சின்ன விஷயங்களைக் கூட கவனித்துச் செய்வது எனப் பார்க்கும் போது திருமணத்திற்காக இவ்வளவு மெனக்கெடல்! என்று தோன்றியது.  ஒரே ஒரு நாள் போடப்போகும் ஷெர்வானிக்காக லட்சங்களில் செலவு செய்கிறார்கள்.  குறைந்த பட்சம் என்று பார்த்தாலும் நாற்பது ஐம்பதாயிரம் என்று ஒரே ஒரு உடைக்காக செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள் - ஒரு முறை - அதுவும் சில மணி நேரம் மட்டுமே போட்டுக் கொள்ளப் போகும் உடைக்கு!  மணப்பெண்ணின் உடை - Gகாக்ரா-சோளி, லெஹங்கா போன்றவையும் மிக அதிகம் தான்.  தில்லியின் கடைகளில் தேடித் தேடி வாங்குவதைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.  நான் சொல்லி இருக்கும் விலை நடுத்தரமாக இருப்பவர்கள் வாங்குவது.  பணம் படைத்தவர்கள் கோடிகளில் Designer உடைகளை வாங்குகிறார்கள்.  Manyavar, Dewan Sahib போன்ற கடைகளில் திருமண உடைகளை வாங்க நினைத்தால் நம் சொத்தையே எழுதி வைக்க வேண்டி வரலாம்! ”இருக்கறவன் போடறான், உனக்கேன்யா பொறாமை” என்று, எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்! 


*****


தீநுண்மி இரண்டாம் அலை - இழப்பு:


மேலே சொன்ன திருமண நிச்சயதார்த்தத்திற்குச் சென்று வந்த இளைஞர்களில் ஒருவர் நேற்று வந்ததும் தீநுண்மி குறித்தும், அதன் இரண்டாம் அலை குறித்தும் சொல்லிக் கொண்டிருந்தார்.  அவரது நிச்சயதார்த்தத்திற்கு வந்திருந்த அவரது பெரியப்பா (55 வயது) மற்றும் அவரது பெயர்த்தி (7 வயது) இருவருக்கும் தீநுண்மி தொற்று ஏற்பட்டு, ஒரே நாளில் மூச்சுத் திணறல் அதிகமாகி இருவருமே இறந்து விட்டார்கள் என்று சொல்ல, எங்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.  விழாவில் மொத்தம் 150 பேர் வந்திருந்தார்கள் என்றும் அனைவருக்கும் மருத்துவ சோதனை இன்னும் செய்யவில்லை என்றும் சொல்ல, இளைஞரிடம் உடனே பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று சொல்லி இருக்கிறேன்.  “எனக்கு ஒன்றும் ஆகாது!” என்று சொன்னதோடு, தில்லி திரும்பும்போது இரயில் நிலையத்தில் Rapid Test எடுத்தார்கள், பிரச்சனை இல்லை என்று சிரித்தபடி சொல்கிறார்!  எதற்கும் கவனமாக இருக்கச் சொன்னதோடு அலுவலகத்திலும் மாஸ்க் போடாமல் இருக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன்.   தீநுண்மியின் இரண்டாம் அலை ஆரம்பித்து விட்டது.  எல்லோரும் கவனமாக இருக்க வேண்டுகிறேன். 


*****


இந்த வாரத்தின் தகவல் - புறக்கணிக்கப்பட்ட குல்(dh)தாரா:





ராஜஸ்தான் மாநிலம் - ஜெய்சல்மேர் அருகே இருக்கும் குல்(dh)தாரா என்ற இடமும் அதனை அடுத்த 84 சிறு கிராமங்களும் சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு - பேய் உலவும் இடமாக அறியப்படுகிறது.  குல்(dh)தாரா என்கிற இந்த இடம் தற்போது சுற்றுலாத் தலமாக இருந்தாலும், பெரும்பாலும் இரவில் தங்கும் வசதிகள் இல்லை.  ASI (Archaeological Society of India) பராமரிப்பில் இருக்கும் இந்த இடத்திற்கு சுற்றுலாவாசிகள் வருகிறார்கள் -  Haunted Place என்று சொல்லப்படும் இந்த இடத்தில், சுற்றுலாவாசிகளுக்கான இரவு தங்கும் வசதிகளை ஏற்பாடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.  பல நூறு வருடங்களுக்கு முன்னர் இங்கே தங்கி இருந்த மக்கள் மொத்தமாக ஊரை விட்டு விலகியதோடு, சாபமும் கொடுத்துச் சென்றார்கள் என்ற செவி வழிச் செய்திகள் உண்டு.  இங்கே சென்று வர வேண்டும் என்ற ஆவல் உண்டு - தீநுண்மி தொல்லைகள் முடிந்த பின்னர் தான்! இப்போது இல்லை! 


*****


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


44 கருத்துகள்:

  1. இவ்வருட நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் ஜி

    எனக்கும் இந்த திருமண உடை விசயத்தில் உடன்பாடு இல்லை ஆம் ஒருநாளில் சில மணிநேரம் மட்டுமே இதற்கு இவ்வளவு செலவு தேவையா ? எல்லாம் பணம் படுத்தும்பாடு.

    அலைபேசி இல்லாமல் வாழமுடியாது என்ற நிலையில் நம்மை வைத்துக் கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்திமைக்கு நன்றி கில்லர்ஜி.

      திருமண உடை விசயத்தில் உங்கள் எண்ணமும் என் எண்ணமாகவே இருக்கிறது - மகிழ்ச்சி.

      பதிவின் பகுதிகள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

    நல்லது சொல்லும் காணொளி - ரசித்தேன்.  என் உறவிலேயே இப்படி இருக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நல்லது சொல்லும் காணொளி - ரசித்தமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பிர்ணி  மேல் பெரிய சுவாரஸ்யம் வரவில்லை இப்போது.  சிலகாலம் ஸ்வீட் மேல் ஆசை வருகிறது.  சில நேரம் காரம் சாப்பிட்டால் தேவலை போல இருக்கிறது!  இப்போது காரத்தின் காலம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது காரத்தின் காலம் - ஹாஹா. சுவை மாறிக் கொண்டே தான் இருக்கிறது ஸ்ரீராம். எனக்கு இரண்டுமே ஓகே - ஆனால் அதிக காரமாக இருந்தால் நோ நோ தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வரும் மே மாதம் என் ஒன்று விட்ட சகோதரர் சுகுமாரின் மகன் திருமணம் வருகிறது.  மூன்று நாட்களும் இரவு பாகல் நாங்கள் அங்கிருக்க வேண்டும் என்கிறார் அவர்.  என்ன செய்வது என்று தெரியவில்லை.  பயமாய் இருக்கிறது.  என் அண்ணன் மகனுக்கே நிச்சயமாகிவிடும் நிலையம் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் இல்லத்திலும் நடக்க இருக்கும் திருமணங்கள் - வாழ்த்துகள்! நல்லபடியே நடக்கட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. இரண்டாம் அலை இழப்பு மற்றும் பாதிப்பு சென்னையிலும் அதிகமாகவே இருக்கிறது.  எங்கள் வயர் அலுவலகத்தில் சுமார் ஒன்பது பேர்களுக்கு ஒரே சமயத்தில் கொரோனா...  என் அலுவலகத்தில் மூன்று பேர்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாம் அலையின் பாதிப்பும், இழப்பு பல இடங்களிலும் அதிகமாகவே இருக்கிறது. இதிலும் அரசியல் செய்யப் பார்க்கும் நபர்கள் தொல்லையும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. குல்தாரா  பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கிறேன்.  நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள் என்று நினைவு.  அந்த இடத்திற்கு சென்று பார்க்க எனக்கும் ஆசைதான்!  கூரை ஏறி கோழி பிடிக்காதவன் கதைதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குல்தாரா - நான் எழுதிய நினைவில்லை ஸ்ரீராம்.

      கூரை ஏறி கோழி பிடிக்காதவன் கதை - ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. இந்த குல்தாரா இடத்தில்தான் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் சில காட்சிகள் வந்ததோ என்று சந்தேகம்.

    ஃபிர்ணி - இது இஸ்லாமியர்களின், நம்ம ஊர் பால் ஜீனியில் செய்த அரிசிப் பாயசம் போன்று. படத்தில், யாரேனும் சாப்பிட்டுவிடப் போகிறார்கள் என்ற பயத்தில் ஸ்பூன்களை கயிற்றால் கட்டிவைத்திருக்கிறார்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீரன் அதிகாரம் ஒன்று - இப்படி ஒரு படம் வந்ததே எனக்கு செய்தி - ஹாஹா.

      ஃபிர்ணி - அங்கே இருந்து வந்ததே நெல்லைத் தமிழன்.

      கயிற்றால் கட்டி வைத்திருக்கும் ஸ்பூன்கள் - ஹாஹா... உணவு உண்ண கொஞ்சம் மெனக்கெட வேண்டுமோ - ஒரு அழகுக்காக இப்படி கட்டி வைத்திருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. திருமண உடை - போட்டோவிற்கு 50 ஆயிரம், மண்டபத்திற்கு 5 லட்சம், உணவிற்கு 5 லட்சம் என்றெல்லாம் செலவுகளைப் பார்க்கும்போது உடைக்கு 50 ஆயிரம் ரொம்ப அதிகமில்லையோ?

    எனக்கு, நம்ம ஊர் திருமணங்களுக்குச் செலவழிப்பது ரொம்பவே அநாவசியம் என்று தோன்றும். எளிமையான திருமணம், தேவையில்லாமல் செலவழிப்பதைவிட அவர்களின் வாழ்க்கைக்கு என்று பணமாகக் கொடுப்பது புத்திசாலித்தனமாக இருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமண செலவுகள் - ஆடம்பரம் தான் அதிகமாகிக் கொண்டே போகிறது. பல செலவுகள் அனாவசியம் என்று எனக்கும் தோன்றும் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. இருவரின் இழப்பு மனதை மிகவும் பாதித்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருவரின் இழப்பு - வேதனை தான் தனபாலன். அவரின் வீட்டில் இன்னும் சிலருக்கும் பாதிப்பு இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இவ்வருடத்தில் அதுவும், வருடம் துவங்கிய நூறாவது நாளில் வெளி வந்திருக்கும் தங்களது நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள். நிச்சயமாக இது ஒரு பெரிய சாதனைதான். பாராட்டுக்கள்.

    இனிப்பு உணவு அருமை. நாம் எப்போதும் செய்யும் பாயசம் மாதிரி இருப்பதால், விரும்பி சாப்பிடலாம்.

    மீண்டும் தொற்று வேகமாக பரவுவது உண்மைதான். இறைவன்தான் காக்கவேண்டும்.

    திருமணங்களில் ஆடம்பரச் செலவுகளை குறைத்தால் நல்லதுதான். ஒரு நாள் போடும் துணிகளுக்கு அவ்வளவு தர வேண்டாம். ஆனால் ஈகோ மக்களை அவ்வாறு யோசிக்க வைப்பதில்லை.

    காஃபி வித் கிட்டு பகுதிகள் நன்றாக இருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. ஒருநாள் ஒரு பதிவு என்பது தவம்போல் அதிகம் மெனக்கெடாமல் சாத்தியமே இல்லை..அதுவும் பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும்...சாதனைக்கும் தொடரவும் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகள் மகிழ்ச்சி அளித்தது ரமணி ஜி. முடிந்த வரை எழுதுவோம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. காணொளி அற்புதம்..என் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி. உங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. இழப்பு - வேதனை தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. நூறு நாள் நூறு பதிவுகள்
    அயரா உழைப்பு
    வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. //இந்த வருடத்தின் நூறாவது பதிவு! //

    வாழ்த்துக்கள்.


    வாட்ஸ் அப் தகவல் அருமை.

    தாய்லாந்து நாட்டு விளம்பரம் மிக அருமை.
    Phirni (ஃபிர்ணி) பார்க்கவே அழகு சுவைக்கவும் இனிமையாக இருக்கும்.

    குல்(dh)தாரா ஊரை விரைவில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. // தீநுண்மியின் இரண்டாம் அலை ஆரம்பித்து விட்டது. எல்லோரும் கவனமாக இருக்க வேண்டுகிறேன். //
    ஆமாம், கவனமாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனமாக இருப்பதே அனைவருக்கும் நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  18. நூறு நாட்கள் ஆமாம் நூறு நாட்கள் இப்பொழுதுதான் வருடம் தொடங்கியது போல் இருக்குறது நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது தான் வருடம் தொடங்கியது போல் இருக்கிறது - நாட்கள் வேகமாகவே ஓடுகின்றன vic.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  19. 2021 ஆம் ஆண்டின் நூறாவது பதிவுக்கு மனம் நிறை வாழ்த்துகள். பதிவின் காணொளி எனக்கு வரவில்லை.

    சில நாட்களாக இங்கே வை ஃபை தொந்தரவு இருக்கிறது.
    பிறகு பார்க்க முடியும் என்று நம்புகிறேன்.

    எல்லா ஊரிலும் நடக்கும் நோய்ப் பரப்பு பயமுறுத்துகிறது.

    நீங்கள் கவனமாக இருங்கள் .எங்கும் செல்ல வேண்டாம்.

    திருமண செலவுகள் பார்க்கும்போது மிகப் பிரமிப்பாக இருக்கிறது.
    வட இந்தியாவைப் பார்த்து
    தென் இந்தியர்களும் சூடு போட்டுக் கொள்கிறார்கள்.

    40 வகை உணவு. ஐந்து வகை ஐஸ்க்ரீம்.
    என்று ஏகப்பட்ட செலவுகள்.
    பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை நினைத்து
    வருத்தமாக இருக்கிறது.
    வாழ்க வளமுடன் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு மனம் நிறைந்த நன்றி வல்லிம்மா..

      காணொளி முடிந்த போது பாருங்கள். வரவில்லை எனில் உங்களுக்கு தனியாக அனுப்புகிறேன்.


      தற்போது அலுவலகம், வீடு என செல்வது தவிர வெளியே செல்வதை தவிர்த்தே வருகிறேன்.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  20. பதிவுகள் பத்திரமாய் இருக்கட்டும் என்ற எண்ணத்தையும் சேர்த்து இனி வாரம் ஒரு பதிவு என யோசித்து திரும்ப வந்திருக்கிறேன். நீங்கள் தொடர்ந்து எழுதுவது மகிழ்வு. நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.
    திருமண செலவுகளைக் கொரானா காலத்தில் குறைத்தது போல் குறைத்தால் வாழ்க்கைக்கு நலம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து எழுத இருப்பது அறிந்து மகிழ்ச்சி எழில் சகோ. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  21. திருமணச் செலவுகள் வர வர அதிகம் தான் ஆகின்றன. குறைவதாய்த் தெரியலை. அதிலும் மணப்பெண்ணின் ஒரு நாள்/ஒரு வேளை போட்டுக்கொள்ளப் போகும் டிசைனர் ப்ளவுஸுக்குத் தையற்கூலியோ இரண்டாயிரம் போல் என்கின்றனர். :( ஆனால் நாம் சொல்லி யார் கேட்பார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமணச் செலவுகள் - அதிகமாகவே இருக்கின்றன. மலைப்பாக இருக்கிறது கேட்டால்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  22. இந்த ஃபிர்னி என்னமோ என்னை அதிகம் கவர்ந்தது இல்லை. நூறாவது நாளில் நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள். நண்பரின் உறவுகள் இருவரின் இழப்புக்கு மனம் வருந்தியது. கவனக்குறைவு நம் மக்களுக்கு அதிகம். அதுவும் நமக்கெல்லாம் வராது என்னும் அசட்டு தைரியம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....