தொகுப்புகள்

புதன், 21 ஏப்ரல், 2021

மேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஒன்று - சுப்ரமணியன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


பாதை கொஞ்சம் கடினம் என்றால் பயணம் பாதியில் நின்றுவிடும்! துயரம் கடந்து நீ நடந்தால் சிகரம் அருகில் வந்து விடும்!


******




பயணத் தொடர்கள் எழுதுவதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறது சூழல் - பயணம் போக வாய்ப்பில்லாத போது பயணத் தொடர் எழுதுவதற்கு ஏது வாய்ப்பு? கை கால்களை மட்டுமன்றி மனதையும் கட்டிப் போட்ட மாதிரி இருக்கிறேன். கடந்த சில வருடங்களில் சென்ற பயணங்களை நினைத்து மனதைத் தேற்றிக் கொள்கிறேன். இப்படி இருக்கையில், நண்பர்கள் இரு குழுக்களாக மேகாலயா சென்று திரும்பி இருக்கிறார்கள்.  ஒன்பது பேர் கொண்ட குழு முதலிலும், மூன்று பேர் கொண்ட குழு இரண்டாவதாகவும் சென்று வந்து விட்டார்கள்.  இரண்டாவதாகச் சென்ற குழு தான் முதலில் சென்றிருக்க வேண்டும் - சில சிக்கல்கள் - அது பற்றி அவரே சொல்வார் - காரணமாக இரண்டாவதாகச் சென்று வந்திருக்கிறார்கள்.  முதலில் சென்று வந்தவர்களும் பயணம் குறித்து எழுதுவதாகச் சொல்லி இருந்தாலும், இரண்டாவதாகச் சென்று வந்தவர்கள் பயணம் குறித்து எழுதி அனுப்பி விட்டார்கள் - முதலாவதாக!  எது எப்படியோ, பயணம் குறித்து இங்கே பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு - உங்களுக்கு படிக்க ஒரு வாய்ப்பு!  நண்பர் திரு சுப்ரமணியன் அவர்களின் பயணக் கட்டுரை இன்றிலிருந்து தொடங்குகிறது.  வாருங்கள் பயணக் கட்டுரைக்குள் செல்வோம்! - வெங்கட் நாகராஜ்.


******


மேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணக் கட்டுரை




முகாந்திரம்: கொடிய அரக்கன் கொரோனாவின் கோரத்தாண்டவம் இந்தியாவை கிடுக்கிப்பிடி போட்டு உலுக்கி எடுக்கிறது. அனைவரும் அரசின் அறிவுரைகளை ஏற்று ஒத்துழைத்தால் மட்டுமே பிழைக்க வழி உண்டு. சமீப நாட்களில் உடன் பணிபுரிந்த/நெருங்கிய நண்பர்கள்/அன்பர்கள் குறித்த வேதனைக்குரிய செய்திகள் கேட்டு குலை நடுங்குகிறது. தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்போம்.  வெளியில் சென்றால் காலணிக்கு முன் முகக்கவசம் கட்டாயம் அணிவோம். பாதுகாப்பாய் இருப்போம்.





மேலே உள்ள முகாந்திரத்திற்கும், இந்தப் பயணக் கட்டுரைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.  எனவே ஊருக்கு உபதேசமா? என்கிற தங்களின் மனக்குமுறல் (மைண்ட் வாய்ஸ்) எனக்கு அசரீரியாய் கேட்கிறது! பொறுத்தருள வேண்டும்.


வரும் ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் வயது நிறை பணி மூப்பு (Retirement on attaining age of superannuation) பெறுவதால் அரசு அளிக்கும் அகில இந்திய விடுமுறை பயணப்படி-ஐ (All India LTC) (ஏதாவது ஒரு இடம் தான் செல்ல முடியும்) (நீண்ட தூரம் குறுகிய வழியில்) (farthest distance by shortest route) உபயோகிக்க முடிவு செய்து சென்ற பயணம் இந்த பயணம். பயணம் நிறைவேறுமா என்பது கடைசி மணித் துளி வரை கேள்விக்கணை ஆகவே வதைத்தது. 





ஒரு முறை அனைத்து பயணச் சீட்டுகளும் (விமான வழி) கௌஹாத்தி வரையும்,   கௌஹாத்தி - ஷில்லாங் - சோரா (சிரபுஞ்சி) - டௌகி -  ஷில்லாங் -  கௌஹாத்தி  வரை சாலை பயணம்,  கௌஹாத்தி - சோரா - டௌகியில் தங்கும் இடம் என அனைத்தையும் முன்பதிவு செய்து விட்டோம்.  72 மணி நேரம் முன்  RT PCR எனும் (மூக்கு/வாய்/ தொண்டை) கொரோனா பரிசோதனை செய்து மருதலி முடிவு (negative report) இருந்தால் மட்டுமே பயணம் படலாம் என்ற விதியினால் நாங்களும் பரிசோதனை செய்து கொண்டோம். ஆனால், கடைசிவரை முடிவுகள் வராததால், கடைசி நேரத்தில் பயணம் தவிர்க்கப்பட வேண்டிய சூழல்.





மீண்டும் அனைத்து முன் பதிவுகளும் செய்து, அதன் பிறகு 72 மணிநேர கட்டுப்பாட்டில் மீண்டும் பரிசோதனை செய்து கொண்டு 10 ஏப்ரல் காலை ஏழரை மணிக்கு தில்லி சர்வதேச விமான நிலையத்தில் இருக்க வேண்டிய கட்டாயம்.  எமது குடும்பம் - நான், இல்லாள், மகள் என சிறிய குடும்பம் (சிறிய குடும்பம் தெவிட்டாத இன்பம் - சற்று பெரிய குடும்பத்தினர் பொறுத்தருளவும்). ஒருவரது பரிசோதனை முடிவு 9 ஏப்ரல் மாலை 6:30 க்கும், மற்றொருவரது 9 ஏப்ரல் இரவு 8.30 மணிக்கும் வந்து விட்டது.  மூன்றாவது நபரின் முடிவு இரவு 10 மணி வரை வரவில்லை. சோதனைச்சாலை மூடப்பட, அலைபேசியில் வரும் செல்லுங்கள் என சர்வசாதாரணமாய் கூறிவிட்டனர். தூக்கமும் இல்லை. பயணத்திற்கான ஏற்பாடுகளும் செய்யவில்லை (முன் அனுபவம் காரணமாக). கடைசி இரவு வரை பயணம் செய்வோமோ, இல்லையா என்பதே தெரியாத சூழல்!





ஒருவழியாக இரவு ஒரு மணிக்கு (10 ஏப்ரல்) மூன்றாவது நபருக்கும் தொற்று இல்லை என்று முடிவு வந்ததும், வீடு முழுவதும் உயிர்பெற்றது. அனைத்து அறைகளிலும் விளக்குகள் ஒளிர்ந்தது - சமையலறையிலும் கூட. 11-ஆம் தேதி அமாவாசை ஆதலால் வெளி உணவு உண்ண முடியாத சூழல். எனவே சமையல் வேலையை மனையாள் கையாள, பெட்டிகளுக்குள் துணிமணிகள் மற்ற தேவையான பொருட்கள் ஆகியவை தந்தை-மகள் உறவில் குடி புகுந்தது. சற்றும் தளராமல் பத்தாம் தேதி காலை 6 மணி அளவில், விமான நிலைய மெட்ரோ ரயிலில் பயணித்து, தில்லி விமான நிலையம் சென்று, பயண அமர்வு அத்தாட்சி (boarding pass) பெற்றுக் கொண்டு, பாதுகாப்பு பரிசோதனை முடிந்து கடவு எண் 42C-க்கு நீண்ட பயணம் மேற்கொண்டோம். 42C-க்கு முன் அமர்ந்த பிறகு தான் எங்கள் அனைவருக்கும் சுவாசம் வந்தது! அனுமதி கிடைத்ததும் விமானத்தில் அளிக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து மிகப்பெரும் நிம்மதி பெருமூச்சு எடுத்தோம். அப்பாடா பயணம் ஆரம்பித்து விட்டது என்கிற நிம்மதி பெருமூச்சு அது!  


பயணம் தொடரும்…


ஆர். சுப்ரமணியன் 


******


நண்பர்களே, தில்லி நண்பரின் மேகாலயா பயணத் தொடரின் முதல் பகுதி உங்களுக்கும் பிடித்திருக்கலாம்!  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.  அவர் தொடர்ந்து எழுதுவது உங்கள் ஆதரவில் தான் இருக்கிறது! மீண்டும் நாளை வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


26 கருத்துகள்:

  1. ஆரம்ப மனக்குழப்பங்கள் பயணத்தில் தீர்ந்திருக்கும்.  மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்று நம்புகிறேன்.  தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். பயணம் நன்றாகவே முடிந்து விட்டது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நல்ல தொடக்கம்.
    குழப்பம் அகன்று பயணம் சுவாரசியமாக இருந்திருக்கும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் சிறப்பாக அமைந்தது அரவிந்த். தொடர்ந்து படியுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பயணத்திற்கு முன்னான திக் திக் மணி துளிகள் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத்திற்கு முன்பான திக்திக் மணித்துளிகள் - உண்மை அனு ப்ரேம் ஜி

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    வாசகம் சிறப்பு. தங்கள் நண்பர் எழுதும் பயணக்கட்டுரை சிறப்பாக துவங்கி இருப்பதற்கு வாழ்த்துகள். முதல் பகுதியே ஆங்காங்கே நகைச்சுவை சிதறல்களுடன் படிப்பதற்கு நன்றாக உள்ளது. இனி நானும் தொடர்ந்து பயணிக்க ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      நண்பரின் பயணத் தொடர் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பயணத்தின் தொடக்கமே படிக்க நன்றாக இருக்கிறது அடுத்த நகர்வுகளை காண ஆவலுடன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் பயணத் தொடர் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. நண்பரின் பயணத் தொடர் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தொடக்கம் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா. தொடர்ந்து படித்து விட நண்பரின் சார்பில் வேண்டுகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வெங்கட்ஜி உங்களுக்குப் போட்டியாக !!!! (ஆரோக்கியமான போட்டி!!!) பயணக்கட்டுரை.
    அருமையான எழுத்துநடை! மிகவும் ரசித்தேன். சுப்பிரமணியம் அவர்கள் தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தியிருப்பது அட போட வைத்தது! நான் அவ்வப்போது செய்யும் பணிக்கு எனக்குக் கை கொடுக்கும். எடுத்து வைத்துக் கொண்டேன். அடைப்புக் குறிக்குள் அதற்கான ஆங்கிலச் சொல்லையும் கொடுத்தது வசதியாகிவிட்டது.

    மிகச் சிறப்பாக எழுதுகிறார் உங்கள் நண்பர்.

    ஆவலுடன் தொடர்கிறேன் வெங்கட்ஜி.

    ஆமாம் உங்களுக்குப் பயணம் செய்ய முடியாமல் கஷ்டம்தான். விரைவில் நடக்கும் ஜி.

    இங்கு உள்ளூரில் சென்ற இடங்களைக் கூடப் படம் இருந்தும் பதிவு எழுதவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத் தொடர் எழுதுவதில் ஆரோக்கியமான போட்டி - நல்லது தான் கீதா ஜி. தொடர்ந்து பலரும் எழுதினால் விவரங்கள் அனைவருக்கும் பயனளிக்கும் இல்லையா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. இந்த சமயத்தில் பயணம் செய்வதே பெரிய விஷயம். அதை வெற்றிகரமாக நிறைவேற்றிய ஆசிரியருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் செய்வது இந்தச் சூழலில் கடினம் தான். நீங்கள் படித்து ரசிப்பது அறிந்து மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பயணக்கட்டுரை நன்றாக ஆரம்பித்திருக்கிறது.

    இந்தச் சமயத்தில் அமைந்த பயணம்...எங்களுக்கும் படிக்கப் பகிர்ந்ததற்கு நன்றி.

    //கடவு எண், பயண அமர்வு அத்தாட்சி // - தமிழ் வார்த்தைகளைக் கையாண்டதை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் செய்வது இந்தச் சூழலில் கடினம் தான். நீங்கள் படித்து ரசித்தது அறிந்து மகிழ்ச்சி நெல்லைத்தமிழன். தமிழ் வார்த்தைகள் பயன்பாடு - நண்பருக்கு அது பிடித்த விஷயம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பயணக்கட்டுரை மிகவும் அருமையாக ஆரம்பித்து இருக்கிறது.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணக்கட்டுரை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. இந்தச் சமயத்தில் பயணக்கட்டுரை படித்துத்தான் ஆறுதல் அடையணும் வெளியே போகவே பயமாய் இருக்கிறதே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் செய்வது இந்தச் சூழலில் கடினம் தான். நீங்கள் படித்து ரசித்தது அறிந்து மகிழ்ச்சி எழில் சகோ.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. சுவாரசியமாய்த் தொடங்கி இருக்கார். பயணம் நிறைவாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். தொடரக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணக் கட்டுரையின் தொடக்கம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....