அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
அனுபவங்கள் எவ்வளவு அதிகமாக உள்ளனவோ அவ்வளவு மேலானதாக உங்கள் வாழ்க்கை அமையும்.
******
சற்றே இடைவெளிக்குப் பிறகு தில்லி நண்பர் பத்மநாபன் அவர்களின் ஒரு பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி எனக்கு. அலுவலகப் பணிச் சுமைகளின் காரணமாக அவரால் இப்போதெல்லாம் எழுதவோ, வலைப்பதிவுகளை படித்து கருத்திடவோ நேரம் இல்லாமல் இருக்கிறது. சில முறை கேட்டுக் கொண்ட பிறகு ஒரு நீண்ட பதிவினை எழுதி அனுப்பி இருக்கிறார். ஆகவே சில பகுதிகளாக அவரது பதிவினை வெளியிட இருக்கிறேன். இதோ முதல் பகுதி! படித்து ரசிப்பீர்களாக! - வெங்கட் நாகராஜ், புது தில்லி.
******
யவனராணியைத் தேடி...
அது ஒரு கோடை விடுமுறை காலம். அப்பல்லாம் எனக்கு புத்தகம் வாசிக்கும் நல்ல பழக்கம் உண்டு. அதுக்கு காரணமா இருந்தது எங்க ஊர் வாசிப்பு சாலைதான். எனக்கு முந்தைய தலைமுறை இளைஞர்கள், எனது தந்தை உட்பட சிலர் ஒண்ணு சேர்ந்து ”கிராம முன்னேற்ற சங்கம்” ஒண்ணு ஆரம்பிச்சு ஒரு சின்ன இடத்தையும் தானமாக பெற்று அதுல ஒரு அழகான நூலகத்தையும் கட்டி வச்சுருந்தாங்க. அதை எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலே இருந்து, எனக்கு தாத்தா முறையுள்ள கோலப்ப வாத்தியார்தான் பொக்கிஷமாக பாதுகாத்து வந்தார். அவர் எனக்கு தாத்தா முறைன்னாலும் எங்க அப்பாவை விட வயதில் சிறியவர் என்பது வேற விஷயம்.
அவர் இந்த புத்தக விஷயத்துல கரெக்டா இருப்பார். புத்தகத்தை சரியான நேரத்துக்கு திருப்பிக் கொடுக்கலேன்னாலோ, இல்ல கிழிச்சோ இல்லேன்னா கிறுக்கியோ கொடுத்தாலோ கதை முடிஞ்சுது. திரும்ப புத்தகம் எடுக்கதுக்கு அவரை சமாதானப்படுத்தியாகணும். அது அவ்வளவு லேசுப்பட்ட காரியம் கிடையாது. அவரு அப்படி ஸ்டிரிக்டா இருந்ததனாலதான் அந்த நூலகம் சிறப்பா போய்க்கிட்டு இருந்தது. நல்ல வேளையாக நான் அவரிடம் நல்ல பெயர் வாங்கியிருந்தேன். அதனால எனக்கு புத்தகம் கிடைப்பதுல எந்த சிக்கலும் வந்ததில்லை.
எத்தனை புத்தகங்கள்! கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் இதிலெல்லாம் வந்த தொடர்கதைகளை சேர்த்து வைத்து தைத்த புத்தகங்கள் முதல் அரசாங்கம் வருஷாவருஷம் கொடுக்கும் புத்தம் புதிய புத்தகங்கள் வரை ஏராளமான புத்தகங்கள். இப்போல்லாம் அரசு, கிராமப்புற நூலகங்களுக்கு புத்தகங்கள் கொடுக்கிறாங்களான்னு தெரியல்ல.
ஒரு குறிப்பிட்ட வயசு வரை எனக்கு தமிழ்வாணனின் கதைன்னா போறும். சோறு தண்ணி வேண்டாம். நியூயார்க்கில் சங்கர்லால், பாரிஸில் சங்கர்லால், பெர்லினில் சங்கர்லால், ஹவாயில் தமிழ்வாணன், பேய் பேய் பேய் அப்படின்னு பெயரே கலக்கலா இருக்கும். அதுவும் இந்த சங்கர்லால அறிமுகப்படுத்தும் போது முன் நெற்றியில் வந்து விழும் சுருட்டை முடியும் தளர்த்தி விடப்பட்ட கழுத்துப் பட்டையையும் சொன்னதுமே சங்கர்லால் கண்முன்னே வந்து நிற்பார். நானும் ரொம்ப நாளா சங்கர்லால் உயிரோடு இருக்காருன்னுதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். என்னத்தச் சொல்ல.
அப்புறம் ஒன்பதாம் க்ளாஸ் பத்தாம் க்ளாஸ் படிக்கும்போது சசிகலாதரன்னு ஒரு நண்பன்தான் என்னை புத்தக வாசிப்புல அடுத்த நிலைக்கு கூட்டிக்கிட்டு போனார். அவரு சாண்டில்யனோட பரம விசிறி.
இந்த இடத்துல சாண்டில்யன கொஞ்சம் அந்த செயர்ல உட்கார வச்சுக்கிட்டு, எனக்கு கிடைத்த நண்பர்கள் பற்றி சொல்லியாகணும். சின்ன வயசுல எங்க அப்பா என்னை கொஞ்சம் சுதந்திரமா வெளியே சுற்ற அனுமதித்திருந்தார். காரணம் என் நண்பர்களை பற்றி அவருக்கு தெரியும். ஒரே சமயத்தில் ஊரில் அக்கம் பக்கம் ஒரு நட்பு வட்டம் இருக்கும். அதேபோல பள்ளிக்கூடத்தில் அது வேறு ஒரு நட்பு வட்டம். கல்லூரி காலத்தில் வேறு ஒரு நட்பு வட்டம் இருக்கும். பின்னர் வேலைக்கு சேர்ந்த பின்னர் அது வேறு ஒரு நட்பு வட்டம். அனைத்து நட்பு வட்டங்களுமே நல்ல பழக்கங்களே நிறைந்த நண்பர்கள் என்பது எனக்கு கிடைத்த வரம்தான்.
அதுவும் சில நண்பர்கள் நான் பொறாமைபடும்படி திறமைசாலிகளாவும் இருந்தனர் என்பது இன்னும் சிறப்பு. உதாரணமாக நண்பர் வெங்கட். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலான நட்பு. அவரிடம் நான் வியப்பது அவருடைய பன்மொழியறிவும், செய்வன திருந்தச் செய்வதும்தான். ஏன்னா இந்த ரண்டும் எங்கிட்ட கிடையாது. அதுவும் இந்த மொழி உச்சரிப்புல, அதுவும் இந்த இங்கிலீஸும் சரி. இந்த ஹிந்தியும் சரி. டில்லி வந்து முப்பது வருஷத்துக்கு மேலானாலும் எனக்கு ஹிந்தியும் தமிழும் ஒரே மாதிரிதான். ஒரே 'க' தான் ஒரே 'ச' தான் ஒரே 'ப' தான். ஆனா வெங்கட் உச்சரிப்பில் தெளிவாக இருப்பார். சரியாக ஒலிப்பார். ஹிந்தி மட்டுமல்ல, பஞ்சாபியும் சரி, பெங்காலியும் சரி, தெரிந்ததை கவனமுடன் உச்சரிப்பார். எதுக்காக இவ்வளவு சிரத்தையா பஞ்சாபி படிக்கிறார்னு யோசிச்சேன் - எப்படி என்ன தான் யோசிச்சேன்? அடுத்த பகுதியில் சொல்றேனே!
நட்புடன்
பத்மநாபன்
புது தில்லி.
******
நண்பர்களே, தில்லி நண்பர் பத்மநாபன் அவர்களின் யவனராணியைத் தேடி பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவின் வழி உங்களைச் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
சங்கர்லால், கணேஷ்வ வசந்த் எல்லாம் நிஜமான கேரக்டர்ஸ் என்று நானும் கொஞ்சநாள் நம்பியிருந்தேன்! வெங்கட் பற்றிய விவரங்களுக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குசிறு வயதில் படித்த கதைகளின் கதாபாத்திரங்களை உண்மை என்று நம்பியவர்களில் நானும் உண்டு ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இப்படிப்பட்ட நல்ல நட்புக்கள் அமைவது அதிர்ஶ்டமே.
பதிலளிநீக்குஅத்தகைய நட்புக்களை பேணுவது அவரவர் திறமை, அதை நன்பர் சிறப்பாக செய்து வருகிறார்.
நன்பரின் வாசிப்பு வேட்கையின் அடுத்தடுத்த கட்டங்களை அறிய ஆர்வமுடன் தொடர்கிறோம்.
நல்ல நட்பு அமைவது அதிர்ஷ்டமே - உண்மை தான் அரவிந்த். நட்புகள் மலரட்டும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆஹா முதல் பகுதியே பயங்கர சுவாரஸ்யமாக இருக்கிறது.
பதிலளிநீக்குதொடர்கிறேன்...
வெங்கட்ஜி அவர்களுக்கு பஞ்சாபியும், பெங்காலியும் தெரியும் என்ற விடயம் பொறாமையோடு மகிழ்ச்சி.
பதிவு ஸ்வாரஸ்யமாக இருப்பதாக அறிந்து மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குமொழிகளில் உங்களுக்கு இருக்கும் திறமை சிறப்பானது ஜி. தலைநகரில் பல மாநில மக்களுடன் பழகுவதால், புதிது புதிதாக மொழிகளைக் கேட்கவும், புரிந்து கொள்ளவும், சில வாக்கியங்கள் பேசவும் அறிந்திருக்கிறேன் அவ்வளவு தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சிறந்த வரம்...
பதிலளிநீக்குநட்பு சிறந்த வரம் தான் தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
உண்மைதான் நமக்கு எல்லாம் அந்தக் காலத்தில் புத்தகங்கள்தான் மெயின் பொழுதுபோக்கு அந்தக் காலம் திரும்பி வராதா என்று இருக்கிறது கடைசியில் வைத்த டுவிஸ்ட் நன்றாக இருக்கிறது
பதிலளிநீக்குபுத்தகங்கள் தான் நமக்கு பிரதான பொழுதுபோக்கு - உண்மை அபயா அருணா ஜி. தற்போது கூட வாசிப்பே எனது பிரதான பொழுதுபோக்கு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆரம்பமே கலக்கலா ஆரம்பிச்சுருக்கார்...
பதிலளிநீக்குநானும் சங்கர்லால், துப்பறியும் தமிழ்வாணன், அதில் வரும் கேரக்டர்களெல்லாம் நிஜம் என்று நினைத்துப் படித்திருக்கிறேன் ..... ஆனா பாருங்க... சமீபத்துல அந்தப் புத்தகத்தைப் பிரித்தால்... என்னடா இடியாப்பம் சுத்தியிருக்கார்.. இதைப்போய் ஆ என்று வாயைப் பிளந்தபடி படித்தோமே என்று நினைத்துக்கொண்டேன்.
"கோலப்பன்" - இந்தப் பெயரைக் கேட்டுத்தான் எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது. பாளையங்கோட்டையில் படித்துக்கொண்டிருக்கும்போது, கோலப்பன், நெல்லையப்பன் என்றெல்லாம் பெயருள்ளவர்கள்.. அது ஒரு கனாக்காலம்...1979.
//ஒரே 'க' தான் ஒரே 'ச' தான் ஒரே 'ப' தான்.// - எப்படியோ ஹிந்தில பேசறீங்க இல்லை.. அதுவே பெருசுதான். நான் தேவநாகரி படிக்கும்போது உச்சரிப்பில் கவனம் செலுத்தினால் எங்கேயோ தவறு நிகழ்ந்துகொண்டே இருக்கிறது...என்ன செய்ய?
எதுக்காகத்தான் பஞ்சாபி மொழி கற்றுக்கொண்டிருந்திருப்பார்? ஒருவேளை அவர் பாஸ் பஞ்சாபியோ?
ஆரம்பமே கலக்கல்.... பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.
நீக்குஅண்ணாச்சியின் பதிவுகள் எப்போதுமே ஸ்வாரஸ்யம் தானே!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
உண்மை நட்பைத் தேடிப் பெற வேண்டும் அது கிடைத்தது சிறப்பு. புத்தகங்கள் நல்ல நண்பர்கள். நீங்கள் வாசிப்பின் மூலம் சிறந்த நண்பர்களைப் பெற்றிருக்கின்றீர்கள்
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கௌசி ஜி. நண்பர்கள் மற்றும் புத்தகங்கள் குறித்த கருத்துரை சிறப்பு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் மிக அருமை.
பதிலளிநீக்குதில்லி நண்பர் பத்மநாபன் அவர்கள் எழுத்துக்கு ரசிகை நான்.
மிக அருமையாக மலரும் நினைவுகளை சொல்லி வருகிறார்.
முன்பு சிறு வயதில் தமிழ்வாணன் நம் மனம் கவர்ந்தது உண்மை. இப்போது அந்த கதைகளை மீண்டும் படித்தால் பிடிக்கும் என்று சொல்லமுடியாது.
உங்களைப்பற்றி உங்கள் நண்பர் சொன்னது சரிதான் வெங்கட்.
பாஞ்சாபி மொழி நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் அவர்களுடன் உரையாட பாஞ்சாபி மொழி அவசியம் தான்.
வாசகமும் பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சுவாரசியம்.
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான எழுத்துகளுக்குச் சொந்தம் கொண்டாடப் படுபவர் பத்மநாபன். உங்களைப் பற்றிய விவரம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பதிலளிநீக்குயவனராணி எப்போது வருவாரோ என்று வெயிட்டிங்க். நல்ல நட்பு நீடுழி வாழ வேண்டும்.
பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.