தொகுப்புகள்

செவ்வாய், 23 நவம்பர், 2021

தலைநகரிலிருந்து 23112021 - மட்டர் குல்ச்சா - காஜு ரிம்ஜிம் (B)பால்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கங்கோத்ரி பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


யாருக்கும் உங்களை கணிக்கும் உரிமை கிடையாது… ஏனெனில் அவர்களுக்கு உங்களை பற்றி வதந்திகளே அதிகம் தெரிந்திருக்குமே தவிர, வலிகளை அல்ல.


******


மட்டர் குல்ச்சா




தலைநகர் தில்லி வந்த புதிது..... சைக்கிள், தள்ளு வண்டிகளில் அடுப்பில் ஒரு தவாவை வைத்துக் கொண்டும், பக்கத்தில் இன்னொரு அடுப்பில் பெரிய அலுமினிய பாத்திரத்தில் எதையோ வைத்து கிளறிக் கொண்டும்,  பன்னும் இல்லாமல் ரொட்டியும் இல்லாமல் வட்ட வடிவில் லேசான புளிப்பு வாடையுடன் ஒரு பதார்த்தத்தை வைத்து விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து வியந்ததுண்டு. சாலை ஓரங்களில் இருந்த இது போன்ற தற்காலிக கடைகளில் வாடிக்கையாளர்களும் நிறைய வந்து அந்த உணவை வாங்கி உண்பார்கள்.  அதன் பெயர் குல்ச்சா என்பதனை கேட்டு தெரிந்து கொண்டேன்.


தற்காலிக கடைகள் மட்டுமன்றி பெரிய உணவகங்களில் கூட இந்த குல்ச்சா கிடைத்தாலும் ஏனோ சுவைக்க மனம் வந்ததில்லை.  நண்பர் ஒருவர் என்னிடம் "என்னது நீ இன்னும் குல்ச்சா சாப்பிட்டதே இல்லையா? நல்லா தான் இருக்கும். சாப்பிடு" என என்னையும் அழைத்துக் கொண்டு நடைபாதைக் கடை ஒன்றில் வாங்கிக் கொடுத்தார் இந்த குல்ச்சாவை.  கொஞ்சம் பயந்தபடியே தான் குல்ச்சாவை கொஞ்சமாக எடுத்து தொட்டுக்கையாகக் கொடுத்த மட்டர்-சோலே சப்ஜி (பச்சை பட்டாணி - கொண்டக்கடலை) உடன் சாப்பிட்டு ஒரு பச்சை மிளகாயையும் கடித்துக் கொண்டேன்.

 

நான் பயந்த அளவுக்கு இல்லை என்றாலும் ஏனோ அதன் புளிப்புடன் கூடிய சுவை அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனாலும் நண்பரிடம் அப்படியே சொல்லாமல் ஓகே நல்லாதான் இருக்கு என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு வேறு வழியில்லாமல் சாப்பிட்டதுண்டே தவிர, விரும்பி சாப்பிட்டதில்லை. குல்ச்சா தனியாக தயாரித்து கொண்டு வந்து, சப்ஜியும் வீட்டிலேயே தயாரித்து அவ்வப்போது சூடு செய்து தருவார்கள். அதன் புளித்த சுவை எனக்கு பிடிப்பதில்லை.


சமீபத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அலுவலகத்தில் இருந்து கால தாமதமாக வந்த ஒரு நாளில் வேறு வழியில்லாமல் உணவகம் ஒன்றில் மட்டர் குல்ச்சா மட்டுமே இருக்க அதனை வீட்டுக்கு வாங்கி வந்து சுவைத்தேன். ஆனால் இந்த முறை ஏனோ மிகவும் பிடித்து இருந்தது.... தலைநகர் வந்தால் இந்த மட்டர் குல்ச்சாவை சுவைத்துப் பாருங்களேன்.


******


காஜு ரிம்ஜிம் (B)பால்




தீபாவளி சமயம் என்றாலே தலைநகர் தில்லியின் உணவகங்கள்/இனிப்பகங்களில் விதம் விதமான இனிப்புகள் அணிவகுப்பு இருக்கும்! சாதாரண நாட்களிலேயே அதிகமான இனிப்புகள் கிடைக்கும் என்றாலும் தீபாவளி சமயத்தில் கேட்கவா வேண்டும்.  கூடவே இங்கே தீபாவளி சமயத்தில் நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் உலர் பழங்கள், இனிப்புகள், பரிசுப் பொருட்கள் என பலவும் கொடுப்பதுண்டு என்பதால் கடைகளில் பெரிதும் அதிகமான கூட்டம் இருக்கும்.  உலர் பழங்கள் நான்கு ஐந்து வகைகளில் கிண்ணங்களில் வைத்து கொடுப்பதும் உண்டு.  எல்லா இனிப்புகளைப் பார்த்தாலும் சாப்பிடத் தோன்றினாலும், இரண்டு மூன்று இனிப்புகளைச் சுவைத்த பிறகு திகட்டிவிடும் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.  சில வகை இனிப்புகள் பால் கொண்டு செய்யப்பட்டது என்றால், சில வகை இனிப்புகள் உலர் பழங்கள் கொண்டு செய்தவை - அதிலும் குறிப்பாக காஜு எனப்படும் முந்திரி (Cashew) கொண்டு செய்தவை.  


இந்த வருடம் தீபாவளி சமயத்தில் நிறைய இனிப்புகள் - அலுவலக நண்பர்கள் கொண்டு வந்தது - சாப்பிட வேண்டியிருந்தது.  கூடவே ஒரு நிகழ்விலும் இனிப்புகள் - அதிலும் ஒரு பெட்டியில் சமோசா, பனீர் பகோடா, ஒரு பழரசம் (டெட்ரா பேக்), மற்றும் மூன்று வித இனிப்புகள் என இருந்தது! சமோசா, பனீர் பகோடா இரண்டுமே கொஞ்சம் Heavy! அதனுடன் மூன்று இனிப்பு என்றால் என்னாவது?  ஆனாலும் உணவுப் பொருட்களை வீண் செய்வது எனக்குப் பிடிக்காத விஷயம்.  கொஞ்சம் வைத்திருந்து சுவைத்து விட வேண்டியது தான் என நினைத்தேன். அப்படிச் சுவைத்த இனிப்பில் ஒன்று தான் இந்த காஜு ரிம்ஜிம் (B)பால்! முந்திரியை அரைத்து நெய் சேர்த்து கிளறி மேலே வண்ண வண்ண சர்க்கரை மிட்டாய் சேர்த்து செய்யப் பட்ட இந்த இனிப்பைச் சுவைத்த போது மிகவும் பிடித்திருந்தது.  விலை கேட்டபோது ஒரு முறை சுவைத்ததே போதும் என்று தோன்றிவிட்டது - ஏன் என்று கேட்கிறீர்களா?  இந்த இனிப்பின் ஒரு கிலோவுக்கான விலை ரூபாய் 1350/- மட்டும் - GST வரிகள் இல்லாமல்!


இந்த இனிப்பு தவிர முந்திரி கொண்டு செய்யப்பட்ட விதம் விதமான இனிப்புகள், பிஸ்கெட் போன்றவையும் உண்டு - அனைத்துமே விலை அதிகம் தான் - முந்திரியின் விலையும் அதிகம் தானே! அதிலும் தில்லியில் முந்திரி விலை கிலோ எண்ணூறு ரூபாய்க்கு மேல்!


******


நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம், பயனுள்ளதாகவும் இருக்கலாம்! பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


26 கருத்துகள்:

  1. மட்டர் குல்ச்சா பற்றி பேஸ்புக்கில் படித்தேன்.  காஜூ ரிம்ஜிம் என்பது உணவு என்றாலும் ரிம்ஜிம் என்றதும் அந்த வார்த்தையில் தொடங்கும் சில மனதுக்குப்பிடித்த ஹிந்திப் பாடல்கள் நினைவுக்கு வந்தன!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிம் ஜிம் எனத் தொடங்கும் பாடல்கள் - இனிமையான சில பாடல்கள் எனக்கும் நினைவில் வந்தது ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது. குல்ச்சா பற்றிய விபரங்கள் அருமை. படங்கள் சாப்பிடும் ஆவலை தூண்டும்படி உள்ளது. இங்கு வந்த புதிதில், உணவகங்களில் நானும் இதை சாப்பிட்டுள்ளேன். ஒரு வேளை அது வேறு ரகமோ எனத் தெரியவில்லை. பரோட்டா மாதிரிதான் கெட்டியாக இருக்கும். ஆனால்,புளிப்பு கிடையாது. அதன் தொட்டுகையாக கூட தரும் சீஸ் அதிகம் சேர்த்த சப்ஜிக்காக அதை அடிக்கடி விரும்பி சாப்பிட்டிருக்கிறேன்.

    நீங்கள் அறிமுகப்படுத்திய இனிப்பும் பார்க்க நன்றாக உள்ளது. அதன் விலைதான் பயமாக இருக்கிறது. ஒரு கிலோ என்றால் ஒரு பத்து எண்ணம் இருக்குமா? அதன் அமைப்பை பொறுத்து கூட குறைய இருக்குமென நினைக்கிறேன். ஆனாலும் விலை அதிகந்தான். முந்திரியில் செய்யப்படும் பதார்த்தங்கள் விலை எப்போதுமே கண்ணைக் கட்டுபவைதானே.. நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் பதிவின் வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஏதோ தில்லியில் முந்திரி கிலோ 800க்கும் மேலே என்று சொல்றீங்களே.. 850க்குத்தான் நான் இங்கு பெங்களூரில் வாங்கிவருகிறேன். அதைவிட ஏலக்காய் 5000க்கு மேல்.

    குல்சா என்ற வஸ்துவைச் சாப்பிட்டிருக்கிறேன். புளித்ததா எனத் தெரியலை. நான், நான், குல்ச்சா எல்லாம் ஒரே வெரைட்டி ஷேப்லதான் வித்தியாசம், குல்சாவில் ஏதோ இலை சேர்க்கிறார்கள் என நினைத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறைவான தரம் - விலை அதிகம்! குல்ச்சா நீங்களும் சுவைத்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. புதிய சுவை - உங்களுக்கும் புதிதாக சில விஷயங்களைச் சொல்ல முடிந்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. குல்ச்சா சாப்பிட்டது சநதோஷம் . மறக்காமல் பெரிய பச்சை கொண்டக்கடலை செடியோடு விற்பார்கள் அதையும் சாப்பிடவும் . செம டேஸ்ட்டாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பச்சைக் கொண்டைக்கடலை செடியோடு - நான் சாப்பிட்டதுண்டு அபயா அருணா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. ஒரு முறை வீட்டில் செஞ்சு பாக்கணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது செய்து பாருங்கள் எல்.கே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வாசகம் அருமை.
    குல்ச்சா புளிப்பு இருக்குமா? தோசை மாவு புளித்தால் ஊத்தப்பம் செய்வார்கள் புளிப்ய் தெரியாமல் இருக்க
    வெங்காயம், காய்கறி கலவையில் புளிப்பு தெரியாது.

    வேறு வழி இல்லாத போது அதுமட்டுமே கிடைக்கும் என்றால் சாப்பிட்டுதானே ஆக வேண்டும்.

    காஜு ரிம்ஜிம் (B)பால் மேல் சீரக மிட்டாய் கலவை என்று நினைத்தேன். இனிப்பு மிட்டாய் மட்டும்தானா?

    விலை அதிகம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      குல்ச்சா கொஞ்சம் புளிக்கும் - சில இடங்களில் சரியான அளவில் இருக்கும்.

      விலை - அதிகம் தான் மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அட! குல்சா மட்டர்சோலே படமே ஈர்க்கிறது. குல்ச்சா, நான் எல்லாம் சாப்பிடதுண்டு பிடித்தும் சாப்பிட்டிருக்கிறேன். நான் கூடக் கொஞ்சம் புளிக்கும் சில இடங்களில் அது அதிகமாக ஈஸ்ட் சேர்த்துப் புளிக்க வைத்துவிடுவார்களாக இருக்கும் அல்லது அதிகம் புளித்த தயிர் சேர்த்திருப்பதாலும் இருக்கும். குல்ச்சாவும் கிட்டத்தட்ட அது போலத்தானே...

    ரிம்ஜிம்...நல்லாருக்கு. இனிப்பும் விலையும் விண்டோ ஷாப்பிங்க் செய்யச் சொல்கிறது!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குல்ச்சா - படம் போலவே சுவையும் நன்றாகவே இருந்தது கீதாஜி.

      இனிப்பு - விண்டோ ஷாப்பிங் மட்டுமே செய்ய முடியும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. நாகர்கோவிலில் முந்திரிப்பருப்பு விலை பரவாயில்லை 500லிருந்து 600 க்குள் விலை. நல்லதரம். முழுசு..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெய்வேலியிலும் விலை குறைவாக கிடைக்கும் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. விலையைக் கேட்டாலே எகிறுது.
    எனக்கு ஒரு இனிப்புத்தான் அதற்குமேல் பிடிக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விலை கொஞ்சம் அதிகம் தான் மாதேவி.

      இனிப்பு அதிகம் சாப்பிடாமல் இருப்பதும் நல்லதே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. குல்ச்சா, நானெல்லாம் அவ்வளவாய்ப் பிடிக்கலை. இந்தப் பதிவை முகநூலிலும் படித்தேன். முந்திரி, பிஸ்தா, பாதாமில் செய்யப்பட்ட இனிப்பு வகைகள் எப்போவுமே விலை அதிகம் தான். மும்பையில் எங்க பையர் பிஸ்தா ரோல் வாங்கி வந்தார். கிலோ ஆயிரம் ரூபாய்! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிஸ்தா ரோல் - இங்கேயும் விலை அதிகமே கீதாம்மா.

      குல்ச்சா, நான் - எப்போதாவது சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட முடிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. நாங்க கேரளாவில் ஒருத்தரிடம் ஆன்லைன் மூலம் மிளகு, கிராம்பு, பெரிய ஏலக்காய், முந்திரிப்பருப்பு, ஏலக்காய் போன்றவை வாங்கினோம். நன்றாகவே இருக்கிறது. முந்திரிப்பருப்புத் தான் கொஞ்சம் மெல்லியதாக இருக்கிறது. ஆனால் சுத்தமான சுவையான முந்திரிப்பருப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரளத்திலிருந்து மிளகு, கிராம்பு, ஏலக்காய் - நண்பர் ஒருவர் ஒரு முறை தந்தார் கீதாம்மா. அங்கே சரியான விலையிலும் கிடைத்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. சொல்லவே இல்லையே, விலை அதிகம் இல்லை. வாங்கும்படியானது தான். கேட்டுச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....