தொகுப்புகள்

சனி, 20 நவம்பர், 2021

காஃபி வித் கிட்டு - 135 - ப்ராந்தன் - சிறுகதை - நெய்வேலி - அப்பா - போட்டி - மகிழ்ச்சி - உணவகம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட மதுரை பயணம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ஒருவரையொருவர் அன்பினால் தாங்குங்கள்; கோபம், வெறுப்பு, கௌரவம், போட்டியென இல்லாமல் ஒவ்வொருவரையும் தட்டிக் கொடுத்தும், விட்டுக் கொடுத்தும், வாழ்ந்து பாருங்கள்; வாழ்க்கை சந்தோஷமாகவே இருக்கும் - முயற்சித்துதான் பாருங்களேன்.  


******


இந்த வாரத்தின் தகவல் - ப்ராந்தன்:



படம்: இணையத்திலிருந்து...

மலையாளத்தில் இந்த ப்ராந்தன் வார்த்தை எத்தனை முறை பயன்படுத்துகிறார்கள்.  என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி பயன்படுத்துவார்.  நாம் பைத்தியம் என்று சொல்வதே அங்கே ப்ராந்தன்!  சரி எதற்கு இந்த வார்த்தை இப்போது?  நமக்குத் தெரியாமலேயே இந்த ப்ராந்து நம்மை பிடித்து ஆட்டக்கூடும்!  அவ்வப்போது இது மாறிக் கொண்டே இருக்கும்! ஏதோ ஒன்று மீது ப்ராந்து பிடித்து விடுகிறது.  சில நாட்களாக சுடோக்கு (SUDOKU) மீது அப்படி ஒரு ப்ராந்து! இணையத்தில் அடிக்கடி இதை விளையாடிக் கொண்டிருக்கிறேன்.  பைசாவிற்கு பிரயோஜனம் இல்லை என்று தெரிந்தே இருந்தாலும் இதனை விடமுடியவில்லை! விட்டுவிட வேண்டும்! 


******


இந்த வாரத்தின் ரசித்த சிறுகதை- இருக்கு ஆனா இல்லை:



படம்: மின்கைத்தடி தளத்திலிருந்து...

மின்கைத்தடி தளத்தில் தொடர்கள், சிறுகதைகள், கவிதைகள் என தொடர்ந்து வெளிவருகிறது. இது பற்றி முன்னரும் இங்கே எழுதி இருக்கிறேன்.  அவ்வப்போது அந்த தளத்தில், நரசிம்மா அவர்களின் தொடர்கதை தவிர வேறு சில கதைகள், கவிதைகள் என எதையாவது படிப்பதுண்டு.  அப்படி சமீபத்தில் படித்த ஒரு சிறுகதை - இருக்கு ஆனா இல்லை.  அவசரமாக ஊருக்குச் செல்ல வேண்டிய ஒரு பெண்மணி வேறு வழியின்றி லாரியில் பயணிக்கிறார்.  அப்போது அவருக்குக் கிடைத்த அனுபவம் - பேய் இருக்கா இல்லையா என ஓட்டுனர் கேட்டு, தனது அனுபவத்தினைச் சொல்கிறார்.  கடைசியில் முடிவு எதிர்பாராதது! படித்துப் பாருங்களேன். சிறுகதையை எழுதியவர் உமா அபர்ணா அவர்கள்.


******


பழைய நினைப்புடா பேராண்டி: என் இனிய நெய்வேலி!


2012-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - என் இனிய நெய்வேலி!


பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்! 


நெய்வேலி ஆரம்பித்தது பற்றி  அவ்வூர் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்த ஒருவர் பாடிய பாட்டென என் அம்மா சொன்ன பாடல் கீழே:-


கடலூருக்கு நேர் மேற்கு நெய்வேலிதாங்க!

அங்கே நிலக்கரியின் வேலை ரொம்ப பிரமாதம் தாங்க!

ஆதியிலே ஜெம்புலிங்க முதலியார்தாங்க

அங்கே நிலத்தில் ஒரு கிணறு வெட்ட கரியைக் கண்டாங்க!


முதல் நான்கு அடி மட்டுமே கேட்ட நிலையில் பேருந்து அங்கிருந்து நகர்ந்துவிட அவர் பாடிய முழு பாடலும் கேட்க முடியவில்லையே என்ற வருத்தம் அம்மாவுக்கு இன்னமும் உண்டு – நாற்பது வருடங்கள் கடந்த பின்பும்! அந்த வருத்தம் எனக்கும் – தெரிந்திருந்தால் முழுப் பாடலையும் உங்களுடன் பகிர்ந்திருக்கலாமே என்று... நெய்வேலி மேல் கொண்ட காதலினால் பாடலின் இந்த நான்கு வரிகளும் பசுமரத்தாணி போல இன்னமும் அம்மாவின் நினைவிலிருக்கிறது!


சுத்தமான காற்று, நிறைய மரங்கள் [தானே புயலில் பல மரங்கள் விழுந்தது என்னை மனதளவில் மிகவும் பாதித்தது!], வேலை பார்க்கும் தொழிலாளிகளின் பிள்ளைகள் படிக்க நல்ல பள்ளிகள், மருத்துவமனை, கல்லூரி, எல்லா மதங்கள் சார்ந்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள், பொழுது போக்கிற்கு திரையரங்கம், விளையாட்டு அரங்கம் என்று ஒரு நல்ல ஊர். 


நெய்வேலி குறித்து எழுதிய இந்த பதிவும் வேறு சில பதிவுகளும் தொகுப்பாக, மின்புத்தகமாகவும் வெளியிட்டு இருக்கிறேன். மின்புத்தத்திற்கான சுட்டி கீழே!


என் இனிய நெய்வேலி: மனச் சுரங்கத்திலிருந்து... (Tamil Edition) eBook : Nagaraj, Venkat: Amazon.in: Kindle Store


******


இந்த வாரத்தின் ரசித்த கார்ட்டூன் - அப்பா :




சில கார்ட்டூன்கள்/படங்கள் நம் மனதை அசைத்துப் போட்டு விடும். அப்படியான ஒரு படம் தான் இந்தப் படம்.  பொதுவாக அப்பாவின் அருமையும் உழைப்பும் பல குழந்தைகளுக்கு புரிவதில்லை.  அம்மாவின் உழைப்பும் அப்படியே என்றாலும் அப்பாக்களின் உழைப்பு பல சமயம் அங்கீகரிக்கப்படுவதே இல்லை என்று தோன்றுவதுண்டு.


******


இந்த வாரத்தின் ரசித்த வாசகம் - போட்டி:


யாருடனும் போட்டி போட வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் நீங்களே. நீங்கள் சிறப்பாக செயல்படுகிறீர்கள். உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். 


******


இந்த வாரத்தின் ரசித்த வாட்ஸப் நிலைத்தகவல் - மகிழ்ச்சி :





ஹிந்தியில் எழுதி இருப்பதன் அர்த்தம் - அடுத்தவர்களின் மகிழ்ச்சியில் தனது மகிழ்ச்சியைத் தேடுவது என்பது இது தான்! 


******


இந்த வாரத்தின் அனுபவம் - தில்லி உணவகம் :




சமீபத்தில் கரோல் பாக் பகுதியில் இருக்கும் ஒரு உணவகம் சென்றேன்.  புதிய உணவகமாக தெரிந்தாலும் ஏனோ சென்று சாப்பிடலாம் என்று தோன்றியது. பொதுவாக  தில்லியில் இருக்கும் தென்னிந்திய உணவகம் நமக்கு ஒத்து வராது - தென்னிந்திய உணவின் சுவை குறித்த அனுபவம் இல்லாத தில்லி மக்களுக்கே அது ஒத்து வரும்! ஆனாலும் ஏதோ ஒரு வேகத்தில் உள்ளே சென்று விட்டேன்.  Quick Lunch என்று இருக்க, அதை சொன்னேன்.  சிப்பந்தி முழு உணவு வேண்டுமா என்று கேட்ட போதே சுதாரித்து இருக்க வேண்டும் - ஆனாலும் விடாப்பிடியாக Quick Lunch தான் வேண்டும் என்று சொன்னேன். இரண்டு சப்பாத்தி (நம் ஊர் சப்பாத்தி!), தொட்டுக்கொள்ள உப்பில்லாத குருமா, மூன்று சிறு கிண்ணங்களில் புளியோதரை, எலுமிச்சை சாதம் மற்றும் தயிர் சாதம், அதை விட சிறு கிண்ணத்தில் ரவா கேசரி! அவ்வளவு தான். கிண்ணத்தின் அளவு - நான்கு ஸ்பூன் கொள்ளக் கூடியது மட்டுமே! அதற்கான விலை 160/- ரூபாய். சுவை ஓரளவு இருந்தாலும் உணவின் அளவு மிகக் குறைவு!  உணவகத்தின் பெயர் நெல்லை அன்னபூர்ணா! பசியும் அடங்கவில்லை, மனதும் நிறையவில்லை! காஃபி ஒன்று 40 ரூபாய் கொடுத்து சுவைத்தேன் - மனதைத் தேற்றிக் கொண்டு வெளியே வந்தேன்.


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


26 கருத்துகள்:

  1. உணவுப் பட்டியலில் எல்லாம் விலை ஜாஸ்தியாக இருக்கிறதே... இதுல கேசரியை சூஜி அல்வா, இட்லியை நெல்லை இட்லி என்று நாமகரணம் வாற பண்ணியிருக்காங்க. லஞ்ச் (இரண்டும்) ரொம்ப ஜாஸ்தி விலைனு தோன்றியது.

    ஓவியருக்கு அப்புறம் என்ன ஆனதோ

    முன்பு சுடோக்கோ.. அதற்கு முன்பு 1000-5000 pieces சரியா கோர்த்து ஓவியத்தை அமைப்பது... இந்த இரண்டு ஆர்வமும் மனைவிக்கு இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விலை அதிகம் தான் - பொதுவாகவே தில்லியில் தென்னிந்திய உணவின் விலை அதிகமே நெல்லைத்தமிழன். அதற்கேற்ற சுவை இருக்கவே இருக்காது என்பதும் சொல்ல வேண்டும்.

      உங்கள் இல்லத்தரசிக்கும் சுடோக்கு ஆர்வம் - மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. என்ன பிராந்து பிடித்ததைப் போல இருக்கே, எல்லாம் சரியாகிவிடும் என்று எனக்கு சில சமயங்களில் நம்பிக்கை ஊட்டிய நண்பர் ஒருவர் கோவையில் இருந்தார். கோவையில் பணியாற்றியபோது அவர் எங்கள் அறையில் தங்கியிருந்தார். கேரளாவை சேர்ந்த அவர் பழக இனியவர். பிராந்து..என்னை அந்நாள்களுக்கு அழைத்துச் சென்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே ஒரு வார்த்தை தான் - ஆனாலும் அந்த வார்த்தை உங்கள் நினைவுகளைத் தூண்டியிருக்கிறது முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. கார்ட்டூன், போட்டி, வாசகம்.. அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நல்லதொரு மனநிலையில் சுடோக்கு விளையாட முடியும்... இல்லையெனில் "பிராந்து" தான்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதொரு மனநிலையில் - ஹாஹா... சரிதான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஹாஹா வெங்கட்ஜி எனிக்கும் இப்பிராந்துண்டு கேட்டோ...சுடோக்கு பிராந்து! இப்ப எப்போதேஞ்சும். அது போல குறுக்கெழுத்துப் புதிர் பார்த்தால் போடத் தொடங்கிவிடுவேன். ஒரு கதையும் எழுதி வைத்து திருத்தாமல் அப்படியே இருக்கிறது. திருத்த வேண்டும்.

    மனம் எந்த இலக்கும் இல்லாமல் அலை பாய்ந்து கொண்டிருப்பதால் எதுவும் எழுத முடியாமல் பல சமயங்களில் கான்சென்ட்ரேஷன் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அப்பப்ப என்ன தேவையோ அதை மட்டும் செய்து இடையே வேறு ஒன்றிற்குத் தாவி என்று...

    நீங்கள் சொல்லியிருக்கும் கதை படித்த நினைவு இருக்கு அந்தப் படம் பார்த்ததும் நினைவு வந்தது பேய்க் கதைதானே?

    மின் புத்தகத்திற்கு வாழ்த்துகள் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் அதே ப்ராந்து - ஹாஹா... கதை எழுதி வைத்ததை முடித்து விடுங்கள் கீதாஜி.

      இலக்கில்லாமல் பாயும் மனம் - கடினம் தான்.

      பேய்க் கதை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. விலை அம்மாடியோவ்...

    அது சரி நம்ம நெல்லை நல்லா சமைப்பார் தெரியும்....எப்ப இட்லி சப்ளை செய்ய ஆரம்பித்தார்!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்(க்கா) - இட்லில கூட நெல்லை இட்லி இருக்கு... நாரோயில் இட்லி இல்லை. கவனிச்சீங்களா?

      நீக்கு
    2. அம்மாடியோவ் விலை தான் கீதாஜி. தில்லியில் தென்னிந்திய உணவு விலை எப்போதுமே அதிகம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. நாரோயில் இட்லி - ஹாஹா... பெயர் வைத்து விட்டால் போகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. வாசகம் அருமை.

    சார் எப்போதும் சுடோக்கு விளையாடுவார்கள்.
    அவர்களுக்கு பிடித்த பொழுது போக்கு.

    அப்பாவின் கார்டூன் அருமை.
    மகிழ்ச்சி விபரீதமாக இருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      சுடோக்கு - முதன் முதலாக தெரிந்த போது விளையாடுவேன். பிறகு விட்டுவிட்டேன். இப்போது மறுபடியும்!

      அப்பாவின் கார்ட்டூன் - மகிழ்ச்சி. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. மின் கைத்தடியில் வந்த கதை நன்றாக இருக்கிறது. படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின் கைத்தடியில் வந்த கதை - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. இந்த வாசகம் அருமை. தில்லியில் நாங்க எந்த ஓட்டலுக்கும் போனதில்லை. எல்லாம் தெருவோரக்கடைகளில் தான். கோல் கப்பா போன்றவை! வாங்கிச் சாப்பிட்டிருக்கோம். ப்ரெடில் ஒரு உணவு! அருமையாக இருந்தது, அதே போல் பெண்களூரிலும் ப்ரெடில் விதம் விதமாகச் சமைத்து அசத்துகிறார்கள். நெல்லை கேட்டால்/பார்த்தால் இல்லைனு சொல்லுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தில்லி உணவுகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எதிரே இருக்கும் சங்கீதாவில் ஒரு முறை தயிர்சாதம் வாங்கினோம். சின்ன டப்பா 100 ரூபாய். ஒரே ஒரு கரண்டி/ஸ்பூன் என்றும் சொல்லலாம். அதில் மாதுளை முத்துக்கள் சில, ஒன்றிரண்டு பச்சை திராக்ஷை, ஸ்பூனில் தயிர்சாதம் சாப்பிடும்படி, தொட்டுக்க எதுவுமே இல்லை. அந்த டப்பா மட்டும் ஞாபகார்த்தமாக வைச்சிருக்கேன். அதே ஓட்டல் க்ரீன் பார்க்கில் நாங்க மத்தியானத்துக்கு சாம்பார் சாதம் ஒன்று, தயிர்சாதம் இரண்டு வாங்கிச் சாப்பிட்டோம். நன்றாகவும் இருந்தது. கணிசமாகவும் இருந்தது. ஊறுகாய் நல்ல ருசி. இத்தனைக்கும் வெஜிடபுள் ஊறுகாய் தான். ஆனால் வட இந்திய முறையில் போடாமல் நம்ம பக்கத்து முறையில் போட்டிருந்ததால் தயிர்சாதத்தோடு சுவையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளை இப்பதிவு மீட்க உதவியிருக்கிறது கீதாம்மா. மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. கார்ட்டூன்கள் நன்றாக உள்ளன. மின் கைத்தடிக்கதை பின்னர் படிக்கிறேன். சுடோகு கொஞ்ச நாட்கள் நானும் முயன்று பார்த்துவிட்டுப் பின்னர் விட்டு விட்டேன். ஆனால் குறுக்கெழுத்துப் போட்டி எனில் ரொம்பப் பிடிக்கும். அதிகம் கலந்து கொண்டதில்லை. முன்னாட்களில் இலவசக்கொத்தனார் வாரம் ஒரு குறுக்கெழுத்துப் போட்டி வைப்பார். ஆன்மிகக் குறுக்கெழுத்துப் போட்டி கண்ணபிரான்/மாதவிப் பந்தல் வைப்பார். இரண்டிலும் ஆர்வத்தோடு கலந்துப்பேன். இப்போ இருவருமே அதிகம் தொடர்பில் இல்லை. இ.கொ. முகநூலில் அவ்வப்போது வந்து மிரட்டுவார். அதோடு சரி. :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. நடுங்கிட்டேன் கதை கடைசியில்!:)))) ஒருவேளை இவர் தான் இந்த வார எங்கள் ப்ளாக் கதை எழுதறாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை - ஹாஹா.... எங்கள் பிளாக்-இல் எழுதுபவரா/எழுதியவரா என்பது தெரியாது கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....