அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட மதுரைக்கு ஒரு பயணம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
நாம் முக்கியம் என நினைப்பவர்கள் நமக்கு முக்கியத்துவம் தருவதில்லை. அதனால் முக்கியத்துவம் முட்டாள்தனம் ஆகிவிடுகிறது.
******
சற்றே இடைவெளிக்குப் பிறகு, பத்மநாபன் அண்ணாச்சி எழுதிய ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. கடிதம் தொலைந்து விட்ட இந்த நாட்களில் கடிதம் குறித்த, அதுவும், காதல் கடிதம் குறித்த ஒரு பதிவு - அண்ணாச்சியின் எழுத்தில்… ரசிக்கலாம் வாருங்கள் - வெங்கட் நாகராஜ், புது தில்லி.
******
காதலித்துப் பார் - பத்மநாபன்'காதலித்துப்பார்! தபால்காரன் தெய்வமாவான்'. நல்ல அனுபவிச்சு காதலிச்சவன் ஒருத்தன்தான் இதை எழுதி இருக்கணும். யாரு, வைரமுத்துவா. இருக்கட்டும்! இருக்கட்டும்! எனக்கும் எங்க ஊர் தபால்காரரை தெய்வமா பார்க்கணும்னுஆசைதான். ஆனா அவருக்கு அந்த கொடுப்பினை இல்லை.
ஆனா எங்க அப்பாவுக்கு இந்த தபால்காரர் எப்போதுமே தெய்வம்தான். ஏனென்றால் நீண்ட தொலைவில் இருக்கும் அவரின் பிள்ளைகள் எங்களைத்தானே அவர் கடைசிவரை காதலித்தார். அவரது அறுபது அறுபத்தந்துவயதில் கடைசி மகளுக்கும் திருமணமாகி சென்னை சென்று விட அம்மாவும் அப்பாவும் மட்டுமே வீட்டில்.
'தங்கம்மா! தண்ணி கொண்டா.' 'தங்கம்மா! வெந்நீர் போடு' என்ற அப்பாவின் குரலும், தண்ணீரைக் கொண்டு கொடுத்துக் கொண்டே 'ஆமா, எனக்கு மட்டும் வயசாகல்லையா. எந்திச்சு போய் ஒரு கப்பு தண்ணியை எடுத்து குடிச்சா குறைஞ்சா போயிருவியோ' என்ற அம்மாவின் எதிர்குரலும் மட்டுமே வீட்டில் கேட்டுக் கொண்டு இருப்பவருக்கு நாங்கள் எழுதும் இன்லேண்ட் லெட்டரை கொடுக்க வரும் தபால்காரர் தெய்வமாவதில் வியப்பில்லை. அப்போது சிவலிங்கம் இருந்தது, ஆனால் இந்த செல்போன் இல்லை என்பதை கருத்தில் கொள்க.
உடனே பதில் கடிதம் எழுதவும் தவறமாட்டார். முன்பெல்லாம் நாங்கள் வீட்டில் இருக்கும்போது யாருக்காவது கடிதம் எழுத வேண்டுமானால் அவர் டிக்டேட் செய்ய எங்களில் யாராவது ஒருவர் எழுதுவோம். இடை இடையே நிற்க என்பார். உடனே எந்திச்சு நின்னுடக் கூடாது. அதாவது கடிதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்கள் எழுதும்போது ஒரு விஷயத்தை ஒரு பத்தியில் எழுதி விட்டு முடிவில் 'நிற்க' என்று எழுதச் சொல்வார். அதாவது ஒரு விஷயம் முடிந்தது, அடுத்த பத்தி அடுத்த விஷயம் ஆரம்பிக்கும். நான்கைந்து விஷயம் என்றால் அத்தனை முறை 'நிற்க' வேண்டும். நாங்கள் வெளியூர்களுக்கு சென்றதும் தானே எழுத ஆரம்பித்தார்.
அவரின் கையெழுத்துக்கும் வயதானதால் கொஞ்சம் நடுங்கி கொண்டே எங்களை வந்தடையும். அந்த 'நிற்க' வும் நடுங்கியபடியே நிற்கும். நிற்க.
வேலை நிமித்தமாகவும் திருமணமாகியும் நாங்கள் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று விட்டதால் எங்களது தபால்களை அடிக்கடி கொண்டு சேர்க்கும் தபால்காரரைக் கண்டதும் அவர் மகிழ்ச்சி அடைவார். அவருக்கு எங்களில் யாராவது ஒருவர் கடிதம் எழுதிக் கொண்டே இருந்ததால் தபால்காரர் எங்கள் அப்பாவின் பெயரைக் கண்டதும் எங்கள் வீட்டில் கொடுத்து விடுவார். சிறு ஊர் என்பதால் பலர் தெரு பெயர் கூட போடுவதில்லை. எங்கள் ஊரில் அப்போது அதே பெயரில் இன்னும் மூன்று நான்கு பேர் இருந்தனர். ஆனாலும் தபால்காரருக்கு அந்த பெயரைக் கண்டதும் கால்கள் எங்கள் வீடு தேடி வந்து விடும்.
இப்படி இருக்கும்போதுதான் ஒருநாள் தபால்காரர் ஒரு கடிதத்தை வழக்கம் போல் கொடுத்து விட்டு சென்று விட்டார். அம்மாவும் வழக்கம் போல ஓடி வந்து 'யாராக்கும் லெட்டர் போட்டுருக்கா' ன்னு கேட்டார்.
'அதுதான் பாக்கேன். யாரு போட்டதுன்னு வெளியில எழுதல்ல பாத்துக்கோ.'
'அப்போ பிரிச்சு படியுங்களேன். நம்ம புள்ளைகள்ள யாராவது எழுதி இருப்பா'
அப்பாவும் கடிதத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார். அன்புள்ள அத்தானுக்கு என்று படிக்க ஆரம்பித்த அப்பா, ஒரு நிமிஷம் குழம்பிப் போனார். பக்கத்தில் கேட்டுக் கொண்டிருந்த எங்க அம்மாவுக்கு ஒரே சிரிப்பு. இப்போ உங்களுக்கு எந்த கொழுந்தியாளாக்கும் லெட்டர் போட்டுருக்கா, என்று கேட்டு விட்டு சிரிக்கத் தொடங்கினார். இந்த இடைவெளியில் கடிதத்தை முழுதும் படித்து முடித்த அப்பா கடுப்பாகி விட்டார். இருபது வயதில் இப்படி ஒரு கடிதம் வந்திருந்தால் எப்படி சந்தோஷப் பட்டிருப்பாரோ அதே அளவு இந்த எழுபது வயதில் கடுகடுவாகி விட்டார்.
ஆமாம். அது ஒரு காதல் கடிதம். என் அப்பாவின் பெயருடைய இளைஞருக்கு அவருடைய காதலி எழுதிய கடிதம். தபால்காரர் புண்ணியத்தில் எங்கள் அப்பாவுக்கு கிடைக்க, அம்மாவும் அவரும் சேர்ந்து துப்பறியும் சாம்புவாக அவதாரம் எடுத்தனர். யாருக்கு வந்த கடிதமாக இருக்கும் என்று ஊகித்தும் விட்டனர். ஆனால் பெண் யாரென்று கண்டு பிடிக்கவில்லை. அப்பாவுக்கோ குழப்பம். கடிதத்தை கிழித்து போடவும் மனது ஒப்பவில்லை. கடிதத்தை அந்த இளைஞரிடம் கொடுத்து காதலுக்கு மரியாதை செய்யவும் ஒப்பவில்லை. கடிதத்தை பிரிக்காத மாதிரியே ஒட்டி அடுத்தநாள் தபால்காரரிடம் தனக்கு வந்ததில்லை என்று திருப்பிக் கொடுத்து விட்டார். அப்பா உள்ளே போனதும் அம்மா தபால்காரரிடம் இது இன்னாருக்கு இருக்குமோ என்று சிறு குறிப்பும் கொடுத்து விட்டார். இப்போது அந்த காதல் ஜோடிகள் காதலில் வெற்றி பெற்று சந்தோஷமாக இருப்பது மிக சந்தோஷமான விஷயம்.
அன்று அந்த இளைஞருக்கு தெய்வமாக தெரிந்திருக்க வேண்டிய தபால்காரர், அந்தக் கடிதத்தை படித்த எங்க அப்பாவுக்கு என்னவாகத் தெரிந்திருப்பார்?
நட்புடன்
பத்மநாபன்
******
பதிவு குறித்த தங்கள் எண்ணங்களையும், பின்னூட்டங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
காதல் என்றால் அந்தக் காதல் இல்லை, இது அப்பா பிள்ளைகள் காதல் என்று சொல்லத்தொடங்கி 'அந்த'க் காதலையும் கடைசியில் இணைத்து, சுவாரஸ்யம்தான். கலக்கிட்டீங்க அண்ணாச்சி.
பதிலளிநீக்குகலக்கல் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். அண்ணாச்சி பதிவு எழுதினாலே கலக்கல் தான்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பத்மநாபன் அண்ணாச்சி எழுத்து சூப்பர்.
பதிலளிநீக்குபல நினைவுகளைக் கொடுக்கும் எழுத்து. எங்க ஊர்க்கார்ர்.
இதாரு? அண்ணாச்சிய எங்க ஊர்க்காரர்னு சொல்லுறது??!!!! நெல்லை மக்கா அவரு எங்க ஊர்க்காரராக்கும்! நாரோயில்...
நீக்குகீதா
எங்க ஊர்க்காரர் - இல்லை இல்லை! உங்கள் இருவருடைய ஊர்க்காரர் இல்லை! தில்லி எனும் எங்கள் ஊர்க்காரர் - ஹாஹா...
நீக்குஎந்த ஊராக இருந்தாலும் அவரது எழுத்து சூப்பர் என்பதில் சந்தேகம் இல்லை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நெல்லையும் இல்லை, நாரோயிலும் இல்லை! அவர் ஊர் தில்லி! ஹாஹா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
காதல் என்ற உணர்வு.... அந்த வயதில் எப்படி வருகிறது.... பின்பு அந்த உணர்வே கரைந்துபோகிறது.... நிறைய வருடங்களுக்குப் பின் பாசமாகப் பரிமளிப்பது... எதையுமே புரிந்துகொள்வது கடினம்.
பதிலளிநீக்குதபால்கார்ர் தெய்வமாகத் தெரிந்தது, என் இன்டர்வியூ கார்ட், வேலைக்கான உத்தரவு கொண்டுத் தந்தபோதுதான். ஹா ஹா
தபால்காரர் தெய்வமாக தெரிவது நிதர்சனம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
ஓ கதை இப்படி போகுது...!
பதிலளிநீக்குஆமாம். கதை அப்படித்தான் போனது தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஒரு நிகழ்வை சுவைபட சொல்வது ஓர்கலை அண்ணாச்சி அதை திறம்பட சொல்லி விட்டார்.
பதிலளிநீக்குநிகழ்வினை சுவைபடச் சொல்வதில் அண்ணாச்சி திறமை மிக்கவர் - அடிக்கடி இப்படி கேட்டிருக்கிறேன் கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆஹா பப்பு அண்ணாச்சி கலக்கிப்புட்டாரு!! ஆமா ஒரு காலத்துல தபால்காரார் தெய்வமாகத் தெரிந்த தருணங்கள் உண்டு.
பதிலளிநீக்குஅண்ணாச்சியின் எழுத்து நடை அட்டகாசம். ரொம்ப ரசித்தேன்.
கீதா
வழக்கம்போல பத்மநாபன் அண்ணாச்சியின் அணுபவங்கள் சிரப்பாக பகிரப்பட்டுள்ளது.
நீக்குஅண்ணாச்சியின் எழுத்து நடை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பத்மநாபன் அண்ணாச்சியின் எழுத்து உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அந்த காலம் கடிதம் எதிர்பார்த்த உள்ளங்கள் எல்லோருக்கும் தபால்காரர் தெய்வம்தான்.
பதிலளிநீக்குமிக அருமையான பதிவு.
//எங்க அம்மாவுக்கு ஒரே சிரிப்பு. இப்போ உங்களுக்கு எந்த கொழுந்தியாளாக்கும் லெட்டர் போட்டுருக்கா//
நானும் மனம் விட்டு சிரித்தேன் வெகு நாட்களுக்கு பின்.
//அம்மா தபால்காரரிடம் இது இன்னாருக்கு இருக்குமோ என்று சிறு குறிப்பும் கொடுத்து விட்டார். இப்போது அந்த காதல் ஜோடிகள் காதலில் வெற்றி பெற்று சந்தோஷமாக இருப்பது மிக சந்தோஷமான விஷயம்.//
அம்மா உதவியது தெரிந்தால் அந்த காதல் ஜோடி அம்மாவை வாழ்த்தி கொண்டே இருக்கும்.
பதிவு உங்களை மனம் விட்டு சிரிக்க வைத்திருக்கிறது - மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது. திரு. பத்மநாபன் அவர்களின் அருமையான எழுத்துக்கு கேட்கவா வேண்டும். இயல்பாக ஒவ்வொரு வரிகளிலும் நகைச்சுவை போட்டி போட்டுக் கொண்டு வருகின்றன. அவர் அனுபவித்து எழுதியது போல் நாங்களும் அனுபவித்து ரசித்துப் படித்தோம். கடைசியில் சுபமாக முடித்தமைக்கு மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குவாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.