புதன், 17 நவம்பர், 2021

மதுரைக்கு ஒரு பயணம் - ஆதி வெங்கட் - பகுதி ஒன்பது


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தலைநகரிலிருந்து பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நாம் முக்கியம் என நினைப்பவர்கள் நமக்கு முக்கியத்துவம் தருவதில்லை. அதனால் முக்கியத்துவம் முட்டாள்தனம் ஆகிவிடுகிறது.


******
மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி ஒன்று 


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி இரண்டு 


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி மூன்று


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி நான்கு


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி ஐந்து


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி ஆறு


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி ஏழு


மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி எட்டு


சென்ற பகுதியில் மதுரையில் இரவு உணவை முடித்துக் கொண்டு அங்கிருந்து சிவகங்கைக்குச் சென்றது வரை எழுதியிருந்தேன். இந்தப் பகுதியில் இன்னும் சில விஷயங்களை பார்க்கலாம்.


நல்லதொரு தூக்கத்தின் பின் விடிந்த காலைப் பொழுதில் புத்துணர்வுடன் மாமா வீட்டில் சூடான பாலுடன் வாசப்படியில் உள்ள படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு பருகினேன். எங்கு சென்றாலும் படிக்கட்டுகள் என்னைக் கவரும்..:)


அங்கிருந்தபடியே என்னவரை அழைத்து முந்தைய நாள் பயண அனுபவங்களை விலாவரியாக பகிர்ந்து கொண்டேன்..:) அவரும் வழக்கம் போல் 'ம்ம்ம்..ம்ம்ம்' என்று மட்டும் சொன்னார்..:) திருமணமான புதிதில் நான் தான் இப்படி இருந்திருக்கிறேன்..:) அவர் அப்போதெல்லாம் பேசிக் கொண்டே இருப்பார்..:) காலத்தின் கோலம் 20 வருட அனுபவங்கள் இருவரையும் தலைகீழாக மாற்றி விட்டது..:) 'கல்லூரி நாட்கள்' தொடரின் இறுதிப் பகுதியில் சொன்னது போல இந்தக் கதைகளையெல்லாம் அடுத்த தொடராக எழுத உத்தேசித்துள்ளேன்!


முதல் நாள் குலதெய்வ வழிபாட்டைப் பற்றி அவரிடம் சொன்ன போது, நம்ம குலதெய்வம் மாதிரியே தான்! இப்படித் தான் அபிஷேகம் எல்லாம் நடந்தது! என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டேன். புகுந்த வீட்டு குலதெய்வமும் சாஸ்தா தான். விழுப்புரம் அருகே 'அய்யூர் அகரம்' என்ற இடத்தில் அருள்பாலிக்கின்றார் சாஸ்தா அபிராமேஸ்வரர்! அங்கு செல்லும் போதெல்லாம் என்னவரே மந்திர உச்சாடனம் செய்து அபிஷேகம் செய்து விடுவார்.


திருச்சியிலிருந்து ஒருநாள் பயணமாக தான் மதுரைக்குச் சென்றோம். அதனால் அதற்கேற்றாற் போல் உடைகளை தான் எடுத்துச் சென்றிருந்தோம். அதை வைத்தே இரண்டு நாட்கள் ஓட்டி விட்டோம்..:) சிவகங்கையில் இருந்த அன்று காலையில் முதல் வேலையாக அன்று அணிய வேண்டிய உடைகளை மட்டும் துவைத்து மாடியில் உலர்த்தி விட்டு வந்தேன்.


அதன் பிறகு மாமி வார்த்து தந்த தோசைகளை ரசித்து சாப்பிட்டு முடித்தேன். சட்னி போட்டுக் கொள்ள அடுக்களைக்குச் சென்றால் கூட 'நீ உக்கார்ந்து சாப்பிடு புவனா! நா வந்து போட மாட்டேனா!' என்றார் மாமி. மனதுக்கு நெகிழ்வாக உணர்ந்த தருணம்.


அதன் பிறகு மாமாவிடம் என் தாத்தா, பாட்டியைப் பற்றியும் அம்மா, அப்பா மற்றும் நான் பார்த்தேயிராத என் மாமா ஒருவரைப் பற்றியும் என நிறைய பேசிக் கொண்டிருந்தேன். திருநெல்வேலி பகுதியை பூர்வீகமாக கொண்ட இவர்கள் சிவகங்கைக்கு இடம்பெயர்ந்தது எப்போது!  என்றும் கேட்டுக் கொண்டிருந்தேன்.


என் கடைசித் தம்பி கிணத்தடியில தான் பொறந்தான்! அப்போ அம்முலு மாமின்னு ஒருத்தர் பக்கத்துல இருந்தா! அவா தான் வந்து இழுத்துப் போட்டா! என்று பல  விஷயங்களை மாமா சொல்லும் போது ஆச்சரியத்துடன்  கேட்டுக் கொண்டிருந்தேன்.


இப்படியே நேரம் போனது தெரியலை. மதியம் அக்கார வடிசலுடன் நல்லதொரு மதிய உணவும், அதன் பிறகான சிறிது நேர ஓய்வும் அன்றைய நாளை இனிமையாக்கியது. மாலை 5 மணிக்கு திருச்சிக்கு ரயில். 


நாங்கள் ரயிலேறி திருச்சிக்கு வந்து சேர்ந்த அனுபவங்களும், இந்தப் பயணத்தால் எனக்கு கிடைத்த மகிழ்வையும் அடுத்த பகுதியில் சொல்கிறேனே! அதுவே இந்த பயணத்தொடரின் இறுதிப் பகுதியாகும்.


******


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்ஆதி வெங்கட்


12 கருத்துகள்:

 1. //அங்கு செல்லும் போதெல்லாம் என்னவரே மந்திர உச்சாடனம் செய்து அபிஷேகம் செய்து விடுவார்.//

  அடடே...

  எங்கள் குலதெய்வம் கோவிலில் நாங்கள் எல்லாம் பக்தர்கள் வரிசையில் நின்றிருப்போம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் கோவிலிலில் நாங்களே அபிஷேகம் செய்ய முடியும் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. அன்பும் கனிவும் நிறைந்த பயணம். பழைய நினைவுகளை மாமா சொல்ல
  நீங்கள் ரசித்ததை நானும் ரசித்தேன்.

  வெங்கட்டே திருமஞ்சனம் செய்வாரா.
  அருமை. !!!

  இந்தப் பதிவின் வாசகம் மிகவும் சிந்திக்க வைக்கிறது.

  அருமையான எழுத்துக்கு நன்றி ஆதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. ஆதி உங்கள் பயணம் மிக நன்றாக அமைந்தது நல்ல விஷயம். உறவுகள் அனைவரையும் சந்தித்து அளவளாவியது எத்தனை மகிழ்வான தருணங்களாக இருந்திருக்கும்.!

  ஆஹா! வெங்கட்ஜி அபிஷேகம் எல்லாம் செய்வாரா! அட!!! சூப்பர்.

  இன்றைய வாசகம் உண்மைதான். ஆனால் முட்டாள்தனமாக ஆனாலும் நம் மனசு முக்கியத்துவம் தராமல் நிராகரிக்க முடிவதில்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் மற்றும் பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. அழகாக இனிமையாக எழுதியிருக்கிறீர்கள் ஆதி! தொடர்ந்து எழுதுங்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. உறவுகளுடன் பழைய கதைகளை பேசி மகிழ்ந்து நினைவுகளில் ஆழ்ந்து போன அனுபவங்களை எழுதியது அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....