ஞாயிறு, 7 நவம்பர், 2021

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - காலை எழுந்தவுடன் தவளை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


“விஷயங்களை முழுமையாக அலசி ஆராயாமல் அவை குறித்து நடவடிக்கை எடுப்பதுதான் பிரச்சனைகளுக்கான முக்கியக் காரணம்.”


******


அன்பின் நண்பர்களுக்கு, இந்த நாளில் நண்பர் அரவிந்த் அவர்களின் வாசிப்பனுபவம் ஒன்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  வாருங்கள் அவரது வாசிப்பனுபவத்தினை வாசிக்கலாம்! - வெங்கட் நாகராஜ், புது தில்லி.


******


காலை எழுந்தவுடன் தவளை: நேரத்தை பொன்னாக்கும் 21 வழிகள் 



நம் அனைவருக்கும் உள்ள பொதுவான சிக்கல், நாம் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்வதற்குப் போதுமான நேரம் ஒருபோதும் இருப்பதில்லை என்பதே.

 

வேலைப் பொறுப்புகள், தனிப்பட்டப் பொறுப்புகள், வற்றாத மின்னஞ்சல்கள், சமூக வலைத்தளங்கள், பணித்திட்டங்கள், படிக்கப்பட வேண்டிய பத்திரிகைகள் மற்றும் நூல்கள் என அனைத்து தரப்பு மக்களுக்குமான தனிப்பட்ட இடர்கள் ஏராளம்.

 

இந்நிலையிலும், தங்கள் அறிவை வளர்த்துக்கொள்வதற்கென ஆண்டில் இரண்டு மாதங்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளும் வாரன் பஃபே, பில்கேட்ஸ், ஜெஃப் பிஸோஸ் போன்ற செல்வந்தர்கள் குறித்து அறிகையில், ”இது எப்படி சாத்தியம்?” என திகைக்கிறோம்.

 

இதற்கு பின்னால் உள்ள 21 எளிய வழிகளை விளக்குவதே உலகப் புகழ்பெற்ற திரு பிரையன் டிரேசி அவர்களின் 'Eat that frog' என்னும் நூல். 


தமிழக அரசால் சிறந்த மொழிப்பெயர்ப்பாளராக கௌரவிக்கப்பட்ட திரு நாகலட்சுமி சண்முகம் அவர்களால் 'காலை எழுந்தவுடன் தவளை' என்ற பெயரில் இந்நூல் அற்புதத் தமிழில் வெளிவந்துள்ளது. 


நேர நிர்வாகம் குறித்த கோடிக்கணக்கான நூல்கள் இருக்க, அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நம் தனித்திறனை உயர்த்துதல், காலம் தாழ்த்துதலை தவிர்த்தல் போன்ற அறிவுறைகள் நடைமுறை சாத்தியமற்றவை என்பதை ஒப்புக்கொண்டதே இந்நூலின் தனிப்பட்ட அம்சம். 


பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டு, ஒரு சரக்குக் கப்பலில் கூலித்தொழிலாளியாக வாழ்வைத் துவக்கிய நூலாசிரியர், எப்படி பல நிறுவனங்களை வெற்றிகரமாக வழிநடத்தி பிரபல பேச்சாளர் ஆனார் என்ற அனுபவத்தோடு கலந்து குறிப்பிடப்பட்டுள்ள 21  நடைமுறை வழிகள், வாசகருக்கு தன்னம்பிக்கையை அளிப்பவை. 


“ஒருவனுக்கு உங்களால் எதையும் கற்றுக் கொடுக்க முடியாது; அவன் தானாகவே தனக்குள் அதைக் கண்டுபிடிக்க அவனுக்கு உங்களால் உதவ மட்டுமே முடியும்," என்ற கலிலியோ அவர்களின் கூற்றிற்கேற்ப, "தவளை" என்ற உருவகத்தால் நம் பொறுப்புகளை நாமே கண்டறிய உதவியிருப்பது  நூலின் தலையாய அம்சம். 


காட்டாறு என நம்மை நோக்கி படையெடுக்கும் வேலைகளையும் எதிர்ப்பார்ப்புகளையும் பிரித்தறிய, நூல் காட்டும் "ஏபிசிடிஇ’ வழிமுறை" சிறந்த தீர்வாகும். 


அவ்வாறு பிரித்தறியப்பட்ட பொறுப்புகளுக்கிடையே, நம் மதிப்பை கூட்டும் வேலைகளை அடையாளம் காண உதவும் நூலின் மூன்று கேள்விகள், "புத்திசாலித்தனமான காலம் தாழ்த்துதல்" என்ற அடிப்படை கலையை பயிலும் எளிய வழி.

 

நாம் விரும்பும் பணிகளை அடையாளம் கண்டபின், அதை மிகச் சிறப்பாகவும் வேகமாகவும் செய்து முடிக்க நூலில் காட்டப்பட்டுள்ள "10/90 விதிமுறை" மற்றும் "பரேட்டோ கொள்கை", நம் மதிப்பை பண்மடங்கு பெருக்கவல்லது. 


மிகச் சிக்கலான இலக்குகளை படிப்படியாக அடைய உதவுவது நூல் குறிப்பிட்டுள்ள "ஒரு நேரத்தில் ஒரு பீப்பாய்" வழிமுறை. 


அலுவலகத்தில் தலைசிறந்த பணியாளராகவும், குடும்பத்துடன் செலவிட அதிக நேரம் கொண்டவராகவும் நம்மை மாற்றவல்லது, நூலில் காட்டப்பட்டுள்ள "மூன்றின் விதி". 


என் சகோதரி பணிபுரியும் ஒரு பிரபல மென்பொறியாளர் நிறுவனம், வாடிக்கையாளர் மின் அஞ்சல்களுக்கு பதிலளிக்க 48 மணி நேர அவகாசத்தை பணியாளர்களுக்கு அணுமதிக்கையில், நாமோ நம் அலைப்பேசியின் ஒவ்வொரு அறிவிக்கையாலும் நம் கவனத்தைச் சிதறடித்துவிடுவது பெரும் விந்தை. 


உலக நடப்புகளை அறிவிப்பதாக தொடங்கி, நம்மை அடிமையாக்கும் சமூக ஊடகத் தொழில்நுட்பத்தை, நம் பணித்திறனை உயர்த்தும் சிறந்த சேவகனாக மாற்ற நூல் குறிப்பிடும் யுக்திகள், இல்லத்தரசிகள் முதல், அறிஞர்கள் வரை எல்லோருக்கும் பயனளிக்கவல்ல வரப்பிரசாதங்களே. 


“வாழ்க்கை என்பது வெறுமனே வேகமாக ஓட்டப்பட வேண்டிய ஒன்றல்ல. அது அதைவிட அதிக அர்த்தம் வாய்ந்தது.” என்றார் மகாத்மா காந்தியடிகள். 


அவர் கூற்றிற்கேற்ப, நம் ஒவ்வொரு நாளையும் அர்த்தமயமாக்குவது, நம் ஆழ் விருப்பத்திற்கேற்ற திறமை வெளிப்படும் சந்தர்ப்பங்களை உருவாக்குவதே. 


அவ்வாறே, சிறந்த நேர நிர்வாகத்தால், நம் தனித்தன்மையை நிறூபிக்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கவும் உபயோகிக்கவும் இன்றியமையானதான 21 வழிகளை அறிந்து மகிழ நூலை பின்வரும் சுட்டியில் வாசிக்கலாம். 


Eat That Frog - Revised 3rd Edition (Tamil Edition) eBook : Brian Tracy


“மிக முக்கியமான விஷயங்கள், முக்கியத்துவமற்ற விஷயங்களின் தயவில் ஒருபோதும் இருக்கக்கூடாது,” என்ற வான் கதேவின் கூற்றிற்கேற்ப, நம் செயல்கள் அனைத்தையும் நம் முக்கியத்துவத்தை உயர்த்தும் கருவிகளாக மாற்றுவோம். 


நட்புடன்,


இரா. அரவிந்த்


******


இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


12 கருத்துகள்:

  1. சில சமயங்களில் இதற்கெல்லாம் நூல் படித்து ஐடியாக்களை வளர்த்துக் கொள்ள வேண்டுமா என்று தோன்றும்.  ஆனால் வெள்ளமென பொங்கிவரும் வேலைகள், எண்ணங்களுக்கு நடுவில் திகைக்கும் வேளைகளில் இது மாதிரி நூல்கள் பயனுள்ளவையாக இருக்கும்.  ஒரு நல்ல நூல் அறிமுகம்.  பிடிஎப்பில் கிடைத்தால் வாசிக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. இக்காலகட்டத்திற்கு வாசிக்கப்படவேண்டிய தேவையான நூல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐய்யா, இக்காலத்திற்கு மிகவும் தேவையானதே.
      தங்களின் பொருமையான வாசிப்பிற்கும் கருத்துறைக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐய்யா.

      நீக்கு
  3. நல்லதொரு நூல் அறிமுகத்துக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விர்க்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐய்யா.

      நீக்கு
  5. நல்ல நூலை அறிமுக படுத்தி இருக்கிறீர்கள் அரவிந்த்

    நன்றாக விமர்சனம் செய்து படிக்கும் ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள்.
    நேரமேலாண்மை கடைபிடிக்க உதவும்.

    //இந்நிலையிலும், தங்கள் அறிவை வளர்த்துக்கொள்வதற்கென ஆண்டில் இரண்டு மாதங்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளும் வாரன் பஃபே, பில்கேட்ஸ், ஜெஃப் பிஸோஸ் போன்ற செல்வந்தர்கள் குறித்து அறிகையில், ”இது எப்படி சாத்தியம்?” என திகைக்கிறோம்.//


    இரண்டு மாத ஓய்வு மேலும் காரியங்களை திறம்பட ஆற்ற உதவும்.

    பதிலளிநீக்கு
  6. நிச்சயம் மேடம்.

    தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விர்க்கும் மிக்க நன்றி கோமதி அரசு மேடம்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....