செவ்வாய், 2 நவம்பர், 2021

தலைநகரிலிருந்து 02112021 - மாசு - ஏற்பாடுகள் - மாதுளை ஸ்டஃப்ட் குல்ஃபி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட மதுரைக்கு ஒரு பயணம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ஒருவரை பற்றி குறை கூறும் முன் நீங்கள் அவர் சூழ்நிலையை உணர வேண்டும்; அவர் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று யோசிக்க வேண்டும்; அதன் பின் குறை கூற முடிந்தால் கூறுங்கள்.


******மாசு - ஏற்பாடுகள் - RED LIGHT : ON GAADI : OFF...Gகாடி என்கிற ஹிந்தி வார்த்தைக்கு வாகனம் என்று பொருள்.  தலைநகர் தில்லியின் சாலை சந்திப்புகளில்,  சிக்னல்களுக்கு அருகில் பச்சை வண்ணத்தில் இப்படி எழுதி இருக்கும் பதாகைகளை பிடித்துக்கொண்டும், அதே வாசகங்கள் எழுதிய டீ சர்ட் அணிந்து கொண்டும், யுவன்களும் யுவதிகளும் நின்று கொண்டிருப்பதை அவ்வப்போது பார்க்க முடியும்.   ஒவ்வொரு நாளும் இது மட்டுமே இவர்களுக்கு வேலை. சிக்னல் அருகில் இப்படி குறைந்தது 8 மணி நேரமாவது நிற்க வேண்டும். காலையில் ஒரு ஷிப்ட், மாலையில் ஒரு ஷிப்ட் என்று இருக்கலாம். பெரிதாக சம்பளம் கொடுப்பார்களா என்பது தெரியாது. ஆனால் ஒரு வேலை.... அது மட்டுமே இவர்களுக்கு தேவை....


மாசுக்கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும், தில்லியின் வருடாந்திர பிரச்சனையான மாசுத் தொல்லைக்கு ஏதாவது ஒரு தீர்வு வேண்டும் என்று யோசித்து இப்படி ஒரு பணியை அவ்வப்போது செய்து கொண்டிருக்கிறார்கள். சிவப்பு விளக்கு விழுந்தவுடன் வாகனங்களை ஆப் செய்துவிடவும் என்று கேட்டுக் கொள்ளும் தில்லி அரசாங்கம்.....  ஒவ்வொரு நாளும் கால் கடுக்க நின்று இந்த பதாகைகளை பிடித்துக்கொண்டு அப்படியே நின்று கொண்டிருப்பது சுலபமான வேலை அல்ல... சாலையிலிருந்து புறப்படும் அத்தனை தூசுகளும் அவர்கள்மேல் தான்.  இன்னும் எத்தனையோ பிரச்சனைகள் உண்டு. ஆனாலும் நின்று கொண்டுதான் இருக்கிறார்கள் யுவன்களும் யுவதிகளும்....


அதுசரி,  இதனால் ஏதாவது பலன் உண்டா? என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கலாம்.... நான் பார்த்தவரை, ஒரு வாகன ஓட்டி கூட தனது வாகனத்தின் இயக்கத்தினை நிறுத்தவில்லை!  அவர்கள் தகவல் பதாகைகளை பிடித்துக் கொண்டிருக்க,  இவர்கள் ரூம் ரூம் என ஆக்சிலரேட்டரை முறுக்கியபடி,  "எப்போது பச்சை ஆகும், எப்போது சீறிப்பாயலாம்# என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். 


மாசு தொல்லை நீங்குகிறதோ இல்லையோ, இந்த யுவன்கள்/யுவதிகள் வீட்டில் அடுப்பு எரிகிறது.... அதற்காகவேனும் இந்த முயற்சியை பாராட்டலாம்......


******


மாதுளை ஸ்டஃப்ட் குல்ஃபி:தலைநகர் தில்லியில் பழைய தில்லி, புது தில்லி என இரண்டு பகுதிகள். பழைய தில்லியின் சாந்த்னி சௌக், சாவ்டி பஜார் போன்ற பகுதிகளில் மிகவும் பழமையான உணவகங்கள், இனிப்பகங்கள் போன்றவை உண்டு. ஒரு சில கடைகள் ஆரம்பித்து நூறு வருடங்களுக்கும் மேல் ஆகியிருக்கும். இப்படியான கடைகளை தேடிச்சென்று அங்கே கிடைக்கும் உணவு வகைகளை சுவைப்பதற்கு என்றும், காணொளி எடுக்க வேண்டும் என்றும் நிறைய பேர் செல்வது உண்டு.


பழைய தில்லி பகுதிக்கு செல்வது கொஞ்சம் சிரமமானது. சொந்த வாகனத்தில் செல்வது அதைவிட கடினம். குறுகிய சாலைகள்.... அந்த சாலைகளிலும் இருபுறமும்  ரிக்ஷாக்கள், பேட்டரி ரிக்ஷாக்கள், சுமை சுமக்கும் வண்டிகள், மாட்டு வண்டிகள் என மிகவும் நெருக்கமான இடங்கள். நடந்து செல்லும்போது கூட நம் மீது யாரேனும் இடித்து விடாமல் நடப்பது கடினமான விஷயம். கொஞ்சம் ஏமாந்தால் கூட உங்களின் மேல் யாரேனும் மோதிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். மெட்ரோ ரயில் வந்த பிறகு கொஞ்சம் வசதிகள் இருந்தாலும் அங்கே சென்று வருவதற்கு நிறைய யோசிப்பதுண்டு.


பழைய தில்லி பகுதியில் இப்படி இருக்கும் ஒரு பாரம்பரியமான, பழமையான கடை குரேமல் மோகன்லால் குல்ஃபி வாலா கடை. 1906ம் வருடம் ஆரம்பித்த இந்த கடையில் ஸ்பெஷல் என்னவென்றால்  stuffed kulfi. மாதுளை, ஆரஞ்சு, கொய்யா, மாம்பழம் போன்றவற்றை வெளித் தோலை சிதைக்காமல் மேலே நறுக்கி உள்ளே இருக்கும் சதைப்பகுதியை எடுத்து அதனை அரைத்து குல்ஃபிக்குத் தேவையானவற்றை சேர்த்து மீண்டும் அந்த காலியான பழத்திற்குள் வைத்து Deep Freeze செய்து ஸ்டஃப்டு குல்ஃபியாக தருவார்கள். மிகவும் சுவையாக இருக்கும் இந்தக் குல்ஃபிகள்... இதைத் தவிர குல்பி Mould வைத்து செய்யும் குல்ஃபிகளும் இருக்கும். வெற்றிலை குல்ஃபி, கேசர் குல்ஃபி, நாவல் பழம் குல்ஃபி, குல்கந்த்   குல்ஃபி, காஃபி குல்ஃபி என இவர்களிடம் இருக்கும் குல்ஃபி வகைகள் ஏராளம்.


பழைய தில்லி பகுதிக்கு செல்வதில் தயக்கம் இருந்தால் புதுதில்லியில் மண்டி ஹவுஸ் அருகே இருக்கும் பெங்காலி மார்க்கெட் பகுதியில் இவர்களது கிளை இருக்கிறது. அங்கே சென்றாலும் பாரம்பரிய குல்பி வகைகளை சுவைக்கலாம். இங்கே பகிர்ந்து இருப்பது மாதுளை ஸ்டஃப்டு குல்பி. வாய்ப்பிருந்தால் நீங்களும் சுவைக்கலாம்.....  குல்ஃபி விலை அதன் வகையைப் பொறுத்தது. குறைந்தது 80 ரூபாய்.


******


பதிவு குறித்த தங்கள் எண்ணங்களையும், பின்னூட்டங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


24 கருத்துகள்:

 1. ஸ்டஃப்ட் குல்ஃபி... படமே சுவைக்கத் தூண்டுகிறது. மும்பையில்தான் 91ல் முதன்முதலில் குல்பி சுவைத்து அசந்துபோயிருக்கிறேன்.

  அடுத்த வருடம் மார்ச் தில்லியில் அரை நாள் கிடைக்கும். முனிர்க்கா செல்லும் வழியில் இந்தக் கடை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை பங்களூரில் மல்லேஸ்வரத்தில் கிடைக்கும். ஜூஸ் கூட இப்படி விற்கிறார்கள்.

   வீட்டில் நீங்களே சப்போட்டா தோல் குடுவையாக, பப்பாளி, வெள்ளரிக்காயிலும் கூடச் செய்யலாம் பல பழக்கலவை ஸ்டஃப் செய்து. வெள்ளரிக்காயில் செய்வது கூட நன்றாக இருக்கிறது நெல்லை.

   கீதா

   நீக்கு
  2. ஸ்டஃப்ட் குல்ஃபி - வாய்ப்பு கிடைத்தால் சுவைத்துப் பாருங்கள் நெல்லைத் தமிழன்.

   அடுத்த வருடம் மார்ச் தில்லியில் அரை நாள் - எங்கே இருந்து முனீர்கா செல்கிறீர்கள் என்பதைப் பொருத்து தான் சொல்ல முடியும். இரண்டு மூன்று இடங்களில் இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. பெங்களூரிலும் கிடைப்பது குறித்த தகவலுக்கு நன்றி கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. வாசகம் மிக அருமை சார்.
  யுவ யுவதிகளின் பதாதைகள் இப்போது தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம்.
  இருப்பினும் நேற்று உலகளவில் பருவநிலை குறித்து மிகப்பெரிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
  அவற்றின் தாக்கத்தை விரைவில் கான்போம்.
  ஸ்டஃப்ட் குல்ஃபி... விரைவில் சாப்பிட்டுப் பார்க்கனும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

   பதாகைகள் - பலன் அளித்தால் நல்லதே.

   ஸ்டஃப்ட் குல்ஃபி - முடிந்த போது சுவைத்துப் பாருங்கள் அரவிந்த்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. உங்களுக்கும் குல்ஃபி பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. குறைகூறுமுன் சிந்திக்க ஆரம்பித்தால் அப்புறம் ஏன் குறைகூறப்போகிறோம்?!!

  நீங்கள் சொல்லி இருக்கும் யுவன் யுவதிகள் ஒருவகையில் பாவம்தான்.  குடி சமயம் ஏதோ வருமானம். நாக்கு இங்கு நடக்கும் கூத்து ஒன்று நினைவுக்கு வருகிறது.  சென்னையில் மறுபடி சில இடங்களை மெட்ரோ பணி நடந்து வருகிறது.  அங்கெல்லா வடஇந்திய பணியாட்கள்தான்.  தினசரி அதில் சிலரை குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு கொடியுடன் நிற்க வைத்து விடுவார்கள்.  பகல் முழுக்க வெயிலில் நின்று கொண்டிருப்பார்கள்!

  குல்பி புதுமை என்றாலும் எனக்கு குல்பி பிடிப்பதில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் மற்றும் பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. வாசகம் அருமை.

  //மாசு தொல்லை நீங்குகிறதோ இல்லையோ, இந்த யுவன்கள்/யுவதிகள் வீட்டில் அடுப்பு எரிகிறது.... அதற்காகவேனும் இந்த முயற்சியை பாராட்டலாம்.....//

  ஆமாம், முயற்சி சில இடங்களில் பலிக்கலாம், இவர்கள் வீட்டில் அடுப்பு எரிய உதவுகிறது. இதற்காக பாராட்டலாம்.

  மாதுளை ஸ்டஃப்டு குல்பி செய்முறை நன்றாக இருக்கிறது படங்களும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் மற்றும் பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பாவம் ஜி அந்த யுவன் யுவதிகள். நல்ல ஐடியா ஆனால் நம் மக்கள் கண்டிப்பாகக் கேட்க மாட்டார்கள். அந்த மக்களிடம் வீட்டிற்குச் செல்லும் போது சும்மா இந்த டாப்பிக் எடுத்துப் பாருங்கள்...அவர்கள் அப்படி அளப்பார்கள்...ஆமாம் மாசு ரொம்ப அதிகமாகிவிட்டது மக்கள் யாரும் எந்த ரூலையும் பின்பற்ற மாட்டேங்கிறார்கள் என்று. ஆனால் அவர்களே அதைப் பின்பற்ற மாட்டார்கள்.

  பழைய தில்லி நெருக்கடியாக இருந்தாலும் பல கடைகள் எனக்குப் பிடித்திருந்தது. சாந்தினி சௌக்...எல்லாம்..ஒரு வேளை சென்னை ரங்கநாதன் தெரு, பாரீஸ் கார்னர், பங்களூர் சிக்பெட்டை நினைவுபடுத்துவதாலோ என்னவோ...

  குல்ஃபி செமையா இருக்கு...பங்களூரிலும் மல்லேஸ்வரத்தில் இப்படியான குல்ஃபி, ஜூஸ் கிடைக்கிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மக்கள் எந்த வித ரூலையும் பின்பற்ற விரும்புவதில்லை கீதாஜி. நீ சொல்லி நான் என்ன கேட்பது என்பது பலருடைய ரத்தத்தில் ஊறிப்போன விஷயம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. குல்ஃபி புதுமை.

  மாசுக்கட்டுப்பாட்டிற்கு சுய ஓழுக்கம், சுய விழிப்புணர்வு தேவை

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. அன்பின் வெங்கட்,
  இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

  மாதுளை குல்ஃபியும் மற்ற இனிப்புகளும் மஹா ஜோர்.

  என் nieces from Delhi என்னவோ ரோஷன் என்று சொன்னார்கள்.
  அவர்கள் 70 களில் பிறந்தவர்கள்.கரோல் பாக் கடையில் கிடைக்குமாம்.:)

  பச்சை உடை அணிந்தவர்கள் வாழ்வு சிறக்கட்டும். இனிமேல் குளிர் நாட்களாயிற்றே.

  பச்சையில் கம்பளி சட்டை கொடுத்தால் தேவலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் வல்லிம்மா.

   கரோல் பாக் பகுதியில் ரோஷன் தி குல்ஃபி கடை தான் மிகவும் பிரபலம். இப்போது அங்கே உணவகமும் இருக்கிறது என்றாலும் முன்பு போல குல்ஃபியில் சுவை இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. ஸ்டஃப்ட் குல்ஃபி... படமே சுவைக்கத் தூண்டுகிறது. மும்பையில்தான் 91ல் முதன்முதலில் குல்பி சுவைத்து அசந்துபோயிருக்கிறேன். Absolutely right.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுவையும் நன்றாகவே இருக்கிறது வல்லிம்மா. உங்கள் அனுபவத்தினையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது.
  மாசு கட்டுப்பாட்டுக்கு வாசகம் பொறித்த பலகைகளை கையில் ஏந்தியபடி சாலையில் நிற்கும் அந்த இளைஞர்,இளைஞிகள் உண்மையிலேயே பாவந்தான். ஒரு வேளை அந்த வேலைதான்அவர்களுக்கு பிடித்தமானதோ என்னவோ...ஆனாலும் மக்களும் கொஞ்சம் விழிப்புணர்வோடு நடந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

  பழங்களை வைத்து குல்ஃபி செய்முறைகள் நன்றாக உள்ளது. டில்லி (எப்போதோ..) வரும் சமயம் இந்த கடைகளுக்குச் சென்று வாங்கி சாப்பிடலாம். வேறு எவராவது வந்தாலும் அவர்களுக்கு தகவல்கள் தந்து அனுப்பலாம். நீங்கள் தரும் தகவல்களே பயனுள்ளதாகவும்,ருசியாகவும் உள்ளது. இன்று பதிவுகளுக்கு வர கொஞ்சம் தாமதமாகி விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. குல்ஃபி நன்றாக இருக்கிறது .

  மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு. அவர்கள் பணியை வாழ்த்துவோம். மக்கள்தான் விழிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்க்கள் தான் விழிக்க வேண்டும் - உண்மை. அது தான் நடக்கவில்லை மாதேவி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....